கிரஹப்ரவேசம்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 9,142 
 
 

தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க மெல்ல எழுந்த ஜி.பி.கே… இன்று என்ன புதிய தகவல் என்றபடி, விரைந்து தன் காதுடன் பொறுத்தி “”ஹலோ… நான் ஜி.பி.கே. பேசறேன்” என்றாள் என்று செய்தியை அனுப்பினாள்.

“”சீதா பேசறேன்… ஜி.பி.கே. எப்படி இருக்க?”

“”ஹாய்… சீதாவா எத்தனை நாளாச்சு உன்னோட பேசி… சொல்லு சொல்லு… என்ன விசேஷம்? ராம், சிந்து, மாதவ், பாஸ் எல்லாரும் எப்படி இருக்கா?”

“”வாயேன்… உன்னை பார்க்கணும் போல இருக்குடா…” நெகிழ்ந்தது வார்த்தைகள்.

கிரஹப்ரவேசம்

“”ஏய்! என்ன இப்படி உடைஞ்சு போற… ஒரு நல்ல சமாசாரம்தான். வர 23ஆம்தேதி நாள் நன்னா இருக்கு… புது இடத்துல… பால் காய்ச்சப் போறேன். சிம்பிளா கிரஹப்ரவேசம்… கட்டாயம் வந்துடு… டிபன் ஏற்பாடு பண்ணிட்டேன். நிதானமா பேசி சிரிச்சு… ரொம்ப ஆவலா எதிர்பார்க்கறேன்டா. சூடா, விஜி, பாலாவுக்கெல்லாம் இனிமேல்தான் பேசணும். உனக்குத்தான் முதல் கால். மிஸ் பண்ணிடாதே – நீங்க ஒண்ணா பேசி ப்ளான் பண்ணிண்டு வந்துடுங்கோ. அட்ரûஸ நோட் பண்ணிக்கோ… ஓகே… சரியா…பை…”

சீதா போனை அதன் இடத்தில் பொருத்தினாள்.

வரிசையா… சூடா, விஜி, பாலா என்று சிநேகிதிகளை தொடர்புகொண்டு விலாசத்தை விளக்கமாக சொல்லி கட்டாயமாக அவர்களை வரச்சொல்லி அழைப்புவிடுத்து முடித்தபோது மணி 10- ஐ கடந்துவிட்டது.

கிரஹப்ரவேசம். 23ஆம் தேதி.. வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி.. முகூர்த்தநாள். நல்ல நாள்… அவர் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமும் இல்லை.

சாஸ்திரி இல்லை…

ஹோமம் இல்லை.

ரொம்ப எளிமையான க்ரஹப்ரவேசம்.

நாலு சிநேகிதிகளுக்கும்… நித்யபடி கட்டிக்க சௌகர்யமாக ஜரிகை கனம் இல்லாம சுங்குடி காட்டன் புடவை எடுத்திருந்தாள்.

லெஸ் லக்கேஜ்… மோர் கம்ஃபர்ட்…

எல்லாமே… இரண்டு சூட்கேஸ். இரண்டு அட்டை டப்பாவில் அடங்கிவிட்டது.

சாமான் வாங்கி, டாப்பாக்களில் அடைத்து… சமைத்து. கறிகாய் வாங்கி, ஈ.பி.கட்டி வீடு மெயின்டெயின் பண்ற கஷ்டம் இனிமே இல்லவே இல்லை.

சிரமம் இல்லாத வாழ்க்கை.

லேசாக… பாரம் இழக்காமல் நிம்மதியா இருக்கப் போற வாழ்க்கை. மனசு லேசாகிப்போனது. சிநேகிதிகளை பார்க்கப்போகும் சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. பதினெட்டு வயதில் அலுவலகத்தில் கிளார்க்காக நுழைந்து… 58 வயதில் ஏ.ஓவாக ரிட்டையர் ஆகி வரும் வரையில் எத்தனை வருட நட்பின் பயணம்?

சாப்பாட்டுடன் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்ட உணவு இடைவேளை.

சங்கடங்கள் கொட்டப்பட்டு இலேசாகி வெளிவந்த பாத்ரூம் பகிர்தல்கள். திட்டங்கள் போட்டு திடமாக முடிவெடுத்த டீ டைம்.

தோள் கொடுத்து துணை நின்று உறவாகி பதிந்து போன சரித்திரமாகிவிட்ட நினைவுகள் ஆர்ப்பரித்து வர கலைந்து போனாள் சீதா.

“”அம்மா…”

“”வா சிந்து… சேகர் ஆபிஸ் போயிட்டாரா? மாமி உடம்பு எப்படி இருக்கு? சாப்பிட்டாச்சா?”

என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

“”எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் என்ன சொல்லுவேன் என்று உனக்கே தெரியும். அதெல்லாம் கிடக்கட்டும். அம்மா… மறுபடியும் யோசனை பண்ணினயா?”

“”எதுக்கு…?”

“”இந்த கிரஹப்ரவேசம் தேவையா அம்மா? இரண்டு பெண்கள். இரண்டு பிள்ளைகள். பேரன் பேத்திகள்… நல்லபடியா… எல்லாரும் செட்டில் ஆகி… அவளுக்கென்ன? என்று மற்றவர்கள் பொறைமைப்படும் அளவுக்கு… வாழ்க்கையின் உயரம் தொட்டவள் நீ. அப்படிப்பட்டவளுக்கு… வயசான நாளில் இப்படி ஒரு திருப்பமான முடிவு தேவையா? எதுக்கும்மா?”

“”இப்படிப்பட்ட முடிவை நான் எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு… ரேகாவின் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுத்து. பேத்தி கல்யாணத்தை பார்த்துவிட்டேன். உனக்குன்னு குடும்பம் இருக்கு…. எத்தனையோ பொறுப்புகள் பண்ண வேண்டியது வரிசையா வரும், எனக்காக நீ சிரமப்படக் கூடாது. ஒண்டிக்காரி நீ உள்ளுர்ல இருக்கேங்கறதுக்காக, நாங்க உன் தலைல ஏறி உட்கார்ந்துக்கறது நியாயம் இல்லை. நானும் நாலு பெத்தவதான். பெற்றோரை காப்பாத்தும் பொறுப்பு எல்லாருக்கும் உண்டு. சொத்துல சம உரிமைங்கறப்ப சுமையை தூக்கறதுலேயும் சம உரிமை உண்டுதான். குழந்தைகள் நன்னா படிச்சா. ஆனா வெளிநாட்டுல வேலை கிடைச்சு செட்டிலாகும்படியாயிடுத்து. அது… அவா கொடுப்பினை. எங்களுக்கு செய்யறதுக்காக அவளை இங்க வந்துடுங்கோன்னு சொல்றது தப்பு. அவாவ குடும்பம்னு ஆயிடுத்து. அதன் பொறுப்பு, ஆசாபாசங்கள் அவர்களை இழுக்க அடிக்கறது. அதனால் யார்கிட்டயும் எதையும் எதிர்பார்க்க முடியாத சூழ்நிலை… வந்துடுத்து. இட் இஸ் ஒகே. வயசானதுல குடும்பம் மெயின்டனன்ஸ் இதெல்லாம் முடியலை. இதுதான் சௌகர்யமா தோணறது – நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும். மருத்துவ வசதி இருக்கு. வேலைக்கு ஆள் வந்து செய்து கொடுத்துடுவா. வேலை பண்ணி தோள்பட்ட வலிக்கறது. இடுப்பு, முதுகு… கெஞ்சறதுல அழுத்தி படுத்துக்கணும் போல இருக்கு.

வேலை ஜாஸ்தியாகி பண்ணமுடியாம போனா. கோபத்துல வார்த்தை தடிச்சிண்டு வரது. இதெல்லாம் தேவையா? பகவான் புண்ணியத்துல கை நிறைய பென்ஷன் வரது… சொல்லு சிந்து… இன்னும் எவ்வளவு வருஷம் போட்டிருக்கோ… தெரியலையே…” சீதா… தெளிவாக பேசினாள்.

“”அ..ம்மா…”

“”என்னடி… அம்மா அம்மான்னு…”

“”மாதவனும் பரத்தும் இடக்கு வடக்கா பேசுவாளே… இந்த முடிவு அவாளை ரொம்ப பாதிக்குமே… அவாளை கேட்டுண்டு செய்ய வேண்டாமா… எனக்கு பயமா இருக்கு…ம்மா -” சிந்துவின் குரலில் நிஜமான பயம் தெரிந்தது…

“”பைத்தியக்காரி… அவாள்ட்ட சொல்லாம இருப்பேனா… என்னால முடியலை… இதுதான் சௌகர்யம்னு… மெதுவா… புரியும்படியா சொல்லிட்டேன். அவாளுக்கும் சரின்னு பட்டுடுத்து. ஒண்ணு புரிஞ்சுக்கோ சிந்து! புள்ளைகள்… அப்பாம்மா… எனக்கு வேண்டாம் உனக்கு வேண்டாம்னு கசந்துபோய். தன் செயலுக்கு தானே ஆயிரம் நியாயம் கற்பித்து முதியோர் இல்லத்துல கொண்டுவிட்டா பெத்தவாளுக்கு காலமெல்லாம் நெஞ்சுல வலி… சமூகத்துல அவாளுக்கும் மாறாத பழி… இப்ப பாரு! அப்படி இல்லை. நாங்களே விரும்பி இந்த வாழ்க்கையை தேடி, விரும்பி போறப்ப… அவாளுக்கும் நிம்மதி… நமக்கும் திருப்தி..

இத்தனை நாளா எனக்கு இந்த எண்ணம் இல்லை.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போனப்ப ஆஸ்பத்திரியில்ல சேர்த்து, அவதிபட்டப்ப… ஒருத்தனாவது வந்து பார்த்தானா.. நீ இருக்கே… பார்த்துப்பேன்னு சமாதானம் பேசினா… உன் தங்கை தீபாகிட்ட நீ எப்ப போகப்போற..ன்னு கேட்டு துளைக்கறாங்க… அவ… அம்மா என்கூட வந்துடுன்னு புலம்பற. கேக்கறதுக்கு சமாதானமா இருக்கு… ப்ராக்டிகலா எப்படி முடியும்? மாப்பிள்ளை… நல்லவர்தான்.. பக்கத்துல போனா.. எப்படியோ… அந்த தேசம்.. குளிரு… இதெல்லாம் சௌகர்யமா படலை… வரவேண்டாம்.. அப்பா எப்படி இருக்கா… அப்பாவை பாத்துக்கோம்மா.. உன்னைவிட வயசானவாள்ளாம் எப்படி திடமா… பலமா இருக்கா… ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் புலம்பாதம்மாங்கறா… இதெல்லாம் என்ன வியாதியா என்ன? ஏதோ கீழே விழுந்ததால… மைல்ட் ஏர் லைன் க்ராக்னு சமாதானம் சொல்றா…

ஒரு பேச்சுக்கு …அ..ம் மா… ஆபரேஷன் செலவு… ரொம்ப ஓடிடுத்தான்னு கரிசனமா கேட்டா.. என்ன தலையா வெடிச்சுடும்.. இல்லை… பொய் கணக்கு சொல்லி… பறிச்சுக்கப் போறேனா… சென்சிடிவ் சப்ஜக்ட் பேசினா… மாட்டிப்போமோன்னு. பயம்.. ஏதோ நியூஸ் படிக்கறாப்பல பேசிட்டு போறாங்க.. தாய் தகப்பனுக்கு செய்ய கணக்கு பார்க்கறவாகிட்ட.. எதுக்கு எதிர்பார்த்துண்டு நிக்கணும்.. இனிமே… எனக்கு நம்பிக்கையே இல்லாம போயிடுத்து.. வேண்டாம்டி… வேண்டாம். அதுக்காக அவாள்ட்ட எனக்கு வெறுப்பு இல்லை. அவாளும் இத்தனை வருஷமா சாப்பாட்டுக்கு குடுத்துண்டுதான் இருந்தா. அவாளுக்கும் பல சௌகர்யங்களை செஞ்சுக்கணும். குடும்பம் பெரிசாக பெரிசாக கமிட்மென்ட்டும் ஜாஸ்தியாகுமே…”

“”அம்மா… எனக்கு கவலையாகவும்… குற்ற உணர்ச்சியாகவும் இருக்கு. நான் அவர்ட்ட பேசி பாக்கட்டுமா..”

“”வேண்டாம்… வேண்டாம். அந்தத் தப்பை மட்டும் பண்ணிடாதே. என் புருஷன் உதவாக்கரையா போயிட்டதால வாயைத் திறக்க வழியே இல்லை. பிசினஸ் பண்றேன் பேர்வழின்னு வாயைத் திறந்தா பொய்… ரேஸ்… வேண்டாத நட்புன்னு போனதை பெத்தவா புரிஞ்சிண்டதாலத்தான்… புள்ளையை கழட்டி விட்டா… அப்பாம்மா. கூடப்பிறந்தவனை நல்வழிப்படுத்தணும்னு சகோதரிகளுக்கும் அக்கறை இல்லை. புள்ளைகள்.. இப்ப என்ன பண்ணும். கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கினது என் கடமை…. அதை எப்பப் பாரு தலைப்பு செய்தியா வாசிச்சிண்டே இருக்க முடியுமா!

அந்த பகவான் போட்ட பிச்சை இந்த கவர்ன்மென்ட் உத்யோகம். ரிடையர் ஆன பின்னால்கூட பென்ஷனை கொடுத்து நான் காப்பாத்தறேன்னு தெய்வம் வழி காண்பிச்சுதே…. அந்த கருணையை நினைச்சு பாரு -” சீதா பேசிக்கொண்டே போனாள்.

மறுபடியும் விட்ட இடத்துக்கே வந்து நின்றாள் சிந்து…

“”அம்மா!”

“”எ..ன்..னடி கண்ணம்மா!”

“”அப்பா வருத்தப்பட மாட்டாளா… அவர்ட்ட கன்ஸல்ட் பண்ணினாயா”

“”அதெல்லாம் வருத்தப்படலை… அவர் சௌகர்யம் பாதிக்கப்படாதுன்னு நன்னாவே தெரியும் அவருக்கு. என் பக்கமும் நிறைய தப்பு இருக்கு. அவர் மதிப்பை காப்பாத்த நானே பூசி மெழுகி பேசி அவர் மதிப்பை காப்பாத்தி இருக்கேன். அவர் திருந்திடுவார்ன்னு திமிர்த்தனமா இருந்துட்டேன். இவரைத் திருத்தறது என்னோட வேலை இல்லைன்னு பொறுப்பை தட்டி கழிச்சுட்டேன். இட் இஸ் டூ லேட். அவரை நான் கைவிடவே மாட்டேன். குழந்தைகள் வாரா

வாரம் போன் பேசனா, அது ஒரு திருப்திக்குத்தான். ஏதாவது ஒரு பிரச்னையை டீல் பண்ணும்படியாயிடப் போறதேன்னு பயம்தான் அத்தனைக்கும் காரணம். அவா என்ன பண்ணுவா? படிப்பை பணம் பண்ண போனவா… அந்த காசை தக்க வச்சுக்க பாடுபடறா. உன்னை பெத்து வளத்தேன்… நீ எங்களை காப்பாத்துங்கறது சரியான வியாபாரத்தனம். எது நடந்ததோ… அது நல்லதுக்குத்தான்.

எது நடக்கப்போறதோ அதுவும் நல்லதுக்குத்தான்.

ஒரு காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை.

கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே…

நான் சொல்லலை. அந்த பார்த்தசாரதி சொன்னதுதான் அத்தனையும்.

பெண்ணுக்கு மட்டும் புருஷன்ங்கற உறவு நீர்த்து போயிடவே கூடாது. அப்படி போச்சுன்னா அதைவிட கொடுமை வேறில்லை..

கவலைப்படாதே சிந்து… எதுவுமே பிரச்னை இல்லை.

என் குழந்தைகள் நீங்க.. எனக்கு ஒரே ஒரு சந்தோஷம்தான் வேணும்.

என் காலத்துக்கு பிறகும் நீங்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பு இல்லாம ஒத்துமையா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்.

நீ என்னோட பொண்ணு… என் மனசு உனக்கு புரியும்..

நான் எங்கே போயிட்டேன்… ஜஸ்ட் இரண்டு மணி நேர பயணம். பாங்குல பணம் இருக்கு. நினைச்சா பேச செல் இருக்கு… என்ன வேணும்? வீடு வாசல்னு கும்மி கொட்டி வயசான நாள்ல மளிகை வாங்கி சமைச்சு சாப்பிட்டாத்தானா… இங்கே சமைக்காமல் சாப்பாடா வந்துடறது. எல்லாத்துக்கும் பணம்தானே வேணும்? இனிமே மூலைக்கொரு ஆஸ்பத்ரி திறக்கறாப்பல… இந்த மாதிரி ஹோம்ஸýம் நிறைய முளைக்கப் போறது. இதுதான் எல்லாருக்கும் கடைசி காலத்துல வொர்க் அவுட் ஆகும்போல.

அப்பாட்ட போய் கொஞ்ச நேரம் பேசிக்கோ… மோட்டு வளையை பார்த்துண்டு பிஸினஸ் பண்ணிண்டிருப்பார். நீ முதல்ல எனக்காக கவலைப்படறத நிறுத்து. இரண்டு பேரா இருக்கற வரை பிரச்னை இல்லை… ஒண்ணுன்னு தங்கிப்போன பின்னாலதான் பிரச்னை. அப்ப பாத்துக்கலாம். ஏண்டா அப்பாம்மாவுக்கு பண்ண வேண்டியது புள்ளைகள் கடமை இல்லையான்னு நான் கேட்டதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? அப்பா பாட்டி தாத்தாவுக்கு என்ன பண்ணினா? அத்தைகள்தானே அவாளை பார்த்துண்டான்னான்…

எனக்கு மானம் போச்சு.. வாஸ்தவம்தான்.. அப்பா எதுவும் பண்ணல. சத்தியமான உண்மைதான். ஆனால்… ஒண்ணு புரிஞ்சுக்கலை அவன். அவருக்கே உத்யோகம் இல்லை. 1ஆம் தேதியானா சம்பளம் இல்லை. பொண்டாட்டி பிள்ளை

களை காப்பாத்தவே அவரால முடியலை. இந்த குடும்பத்துக்கு செய்யவே என் சம்பளம் இடித்தது. ஆனால் அத்தைகள் நல்ல வேலைல இருந்தா… கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு உறுதியா இருந்தா. காசும் பணமும் இருந்ததால. அவா சௌகர்யமா பாரன்ட்ûஸ வச்சிண்டா. இவாளுக்கும் அங்கதான் சௌகர்யமா இருந்தது. எப்படி அவா என்னோட வந்து இருப்பா என்னை கண்டாலே ஆரம்பத்துலேந்து பிடிக்கலை. அது அவா. இஷ்டம். அவா என்னா வீட்டைவிட்டு போன்னு சொன்னதால் தானே… நான் தனியா வந்தேன். இதெல்லாம் மாதவனுக்கு தெரியாதா… இருந்தாலும் சொன்னான். பரவாயில்லை… அவன் சொன்னதுதான் என்னை சிந்திக்க வைத்து இந்த முடிவை எடுக்க வைத்தது.

யாரையும் கஷ்டப்படுத்தாம சௌகர்யமா இருக்க வழி இருக்குன்னு புரிஞ்சிண்டப்ப… மாத்து வழியை எதுக்கு ஏத்துக்கணும். அதுக்காக ஏங்கணும்?

விரும்பியோ… விரும்பாமலோ… தாயின் கர்பத்தில் க்ரஹப்ரவேசம். காலம் முடிஞ்ச பிறகு புண்ணிய பாவத்திற்கு ஏற்ப சொர்க்கமோ… இல்லை நரகமோ… ஒரு க்ரஹப்ரவேசம்.

இடைப்பட்ட நாள்ல… சரீரம் சௌக்கியமா இருக்க வீடு வாசல் வாங்கறோம். சந்தோஷமா குதிக்கறோம். கொண்டாடுறோம். திமிர்ங்கற சிம்மாசனத்துல ஒக்காந்து ஆடறோம். எல்லாம் மாயைன்னு உணர்ந்த மனசு. ஒரு நிலைல உட்கார்ரதே… இது ஒரு கொடுப்பினை.

இந்த புரிதல் வந்ததால எனக்கு மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு. கண்ணம்மா… கவலையைவிடு… அப்பாட்ட பேசிட்டு கிளம்பு பாவம் அவர்…”

“அ…ம்…மா’ விஸ்வரூபமாக தெரிந்தாள் சீதா.

அம்மா அம்மாதான்.. அவளுக்கு நிகர் யாருமில்லை.

சிந்து… “”அப்பா” என்றபடியே திரும்ப…

கோவிந்தன் நிஜமாகவே மோட்டுவலையை பார்த்து பிசினஸ் பண்ணிக் கொண்டிருந்தார்…

– அனாமிகா (நவம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *