கிட்டாத ஜெயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2024
பார்வையிட்டோர்: 127 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பி.ஏ. பரீக்ஷை தேறியாகி விட்டது. காலே ஜில் வாசிக்கும் நாட்களில் ரொம்ப கெட்டிக்காரன் என்று பெயர். பரீட்சைக்குப் போன வருஷமெல்லாம் ராஜ தானியிலேயே முதலாவதாகத் தேறினான் என்பது வாஸ் தவம். ஆனால் இப்போது அந்தப் பெருமைகளால் என்ன பிரயோஜனம்? 

பரீட்சை தேறிய பிறகு எப்படி உத்தியோகத்தைச் சம்பாதிக்கிறது, எந்த உத்தியோகத்தைப் பொறுக்கி எடுக்கிறது? இந்த விஷயங்களைப்பற்றி யெல்லாம் ஒரு புஸ் தகத்திலும் ஒன்றும் எழுதப்பட்டிருக்கவில்லை. காலேஜ் ஆசிரியர்களும் ஒன்றும் சொல்லிக்கொடுக்கவில்லை. இந்த நிலையில் என்ன செய்வது என்பது சோமுவுக்குப் பெரிய பிரச்னையாகிவிட்டது. அன்றிரவே சென்னைக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு ரெயிலேறினான். 

மறுநாள் காலை சென்னை ஹோட்டல் ஒன்றில் ஓர் அறை அமர்த்திக்கொண்டான். அன்றுமுதல் ஒவ்வோர் ஆபீசாக நுழைந்து திரும்பினான். சில ஆபீசுகளிலே இவன் நுழையும்படியான சிரமங்கூட வைக்கவில்லை. லிலேயே, ‘வேலை காலியில்லை’ என்று எழுதி ஒட்டியிருந் தது. சோமுவின் மனத்திலே சோர்வு ஏற்படத்தொடங் கினாலும் நம்பிக்கை போய்விடவில்லை. 

இதற்கிடையிலே ஒட்டலிலே தங்கியிருந்த ஒரு ‘தோழரி’ன் நட்புச் சோமுவுக்கு ஏற்பட்டது. தோழர் ரொம்பத் தீவிரவாதி. ஒவ்வொரு நாள் இரவும் சோமு தோழரைச் சந்திப்பான். தோழர் ரொம்பப் பெரிய விஷயங்களைப் பற்றியெல்லாம் உபதேசம் செய்து காட்டு வார். அபேதவாத தத்துவத்தை அலக்கலக்காகப் பிரித்துக் காட்டுவார். சோமு காலேஜில் வெகுகெட்டிக்கார மாண வன் என்று பெயர்பெற்றிருந்தும், இந்த நவீன யுகத்தின் வேதங்களைப்பற்றியோ புது யுகத்தின் ரிஷிகளான மார்க்ஸ், லெனின் இவர்களைப்பற்றியோ ஏதும் படித்த தில்லை . தோழர் பேச்சிலே ஒரு புதுமையும் தன்னம்பிக்கை யும் தொனிக்கும். பிரசங்கம் முடிந்த பிறகு, “இன்னிக்குச் சமாசாரம் என்ன ?” என்று கேட்பார் தோழர். 

ஆரம்பத்தில் கொஞ்ச நாள் வரையில் தான் போய் வந்த இடங்கள், அங்கே நடந்த விவரங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் சோமு சொல்லி வந்தான். இப்போது அதெல்லாம் சொல்வதில்லை. கேள்வி கேட்டவுடனே உதட்டைப் பிதுக்கி விடுவான். 

இந்தச் சிநேகிதம் ஏற்பட்ட பிறகு சோமு பல அபேதவாதப் புஸ்தகங்களை யெல்லாம் படிக்க ஆரம்பித் தான். அதன் காரணமாக அவன் மனத்தில் புதுப் புது எண்ணங்களெல்லாம் உண்டாகிவிட்டன. இருந்தாலும் வேலை தேடும் காரியத்தை மட்டும் மறந்துவிடவில்லை. 

இப்படியே பின்னும் ஒரு மாதம் ஆயிற்று. வேலை கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரிந்து போய்விட்டது. தன் தோழருடைய பிரசங்கமோ அபேதவாதத்தின் இன்பகரமான கனவுகளோ யாதொன்றும் கவைக்கு உதவ வில்லை. அடுத்த நாள் இரவோடு சாப்பாட்டு டிக்கெட் ஆகி விடும். அதற்கப்புறம்? பணம் கேட்டு வாங்கக்கூடிய நண்பர்களையெல்லாம் கேட்டு வாங்கியாகி விட்டது. தோழரிடம் எதிர்பார்ப்பதில் பயன் ஏற்படாது. பின்னே போகிற வழி? இந்த யோசனைகளில் மனசு செல்லச் செல்லச் சோமுவுக்கு ஒரு திகைப்பு ஏற்பட்டது. இந்தத் திகைப்புக்கிடையில் தன் துயரம் தீர வழி தென்பட்டது. கெட்ட வழி! ஆனால் வாழ்க்கை மட்டும் கெட்ட தாக இல்லாமல், இனிப்பாகவா இருக்கிறது? தவிர இந்த வழியைக் கடைப்பிடித்தால் அரசாங்கத்தார்கூட வேலையில் லாப் பிரச்னையைப்பற்றி உடனே கவனிக்க வேண்டி நேரிட்டுவிடும். அப்போது தன்னைப்போன்ற நிலையிலுள்ள இதர வேலையில்லாதவர்களுக்கும் விமோசனம் ஏற்படும். அபேதவாதமும் ஓரளவுக்கு வெற்றி பெறும் என்றெல் லாம் அவனுக்குத் தோன்றிற்று. இந்த வழி மூளையில் உதயமானவுடன் மனத்திலிருந்த திகைப்பெல்லாம் கரைந்து போய்விட்டது. மறு விநாடி மிக அமைதி யான மனத்தோடு ஹோட்டலுக்கு வரும் ஹிந்துப் பத் திரிகையை எடுத்துப் பிரித்தான். 

ஒரு ரஸமான செய்தி கண்ணில் தட்டுப்பட்டது. வேலூர் ஜெயிலிலே ஒரு விளையாட்டு மைதானம் அமைத் திருக்கிறார்கள் என்று கண்டிருந்தது. இந்தச் செய்தி கூடத் தன்னுடைய தீர்மானத்துக்கு அனுசரணையாக இருந்ததைப் பார்த்ததும் அவனுடைய தீர்மானம் உறுதிப் பட்டதுமல்லாமல் தன்னையும் மீறிய மகிழ்ச்சி ஒன்று மனத்தில் தோன்றிற்று. 

மூன்றாவது நாள் காலை பத்தரை மணி இருக்கும். குல்லாய், நெக்டை, கோட் சகிதம் சோமு சைனா பஜார் தெருவில் ஒரு கடையில் நுழைந்து சோப்புப் பெட்டியும் கழுத்துப் பட்டை ஒரு பெட்டியும் எடுத்துச் சோதித்துக் கொண்டிருந்தான். கிருஸ்துமஸ் காலமானதால் கடையில் கூட்டம் அதிகம். இவர் ஏதோ கழுத்துப்பட்டைகளைப் பார்த்துக்கொண் டிருக்கிறாரே என்று கடை ஆள் வேறு வாடிக்கைக்காரர்களைக் கவனிக்கப் போய்விட்டான். சோமு பாட்டுக்குச் சாமான்களை எடுத்துக்கொண்டு கம்பீரமாகக் கம்பி நீட்டினான். 

ஒரு நிமிஷம் ஆயிற்று. கடைச் செட்டியாரும் கடை ஆளும் பார்த்தார்கள். கழுத்துப் பட்டை ஆசாமியைக் காணவில்லை. செட்டி கடை ஆள் வெளியே வந்து அங்குமிங்கும் பார்த்தான். சோமு யானை மாதிரி கம்பீர மாக அசைந்தாடிக்கொண்டு போனான். ஒரே தாவாகத் தாவி, சோமுவைப் பிடித்துப் போலீஸ்காரனிடம் இழுத் துக்கொண்டு போனான். கோட்டு,கழுத்துப் பட்டை சகிதமுள்ள ஓர் இளைஞனை ஓர் ஆள் இழுத்துக்கொண்டு போவ தென்றால் சென்னை யில் கூட்டம் சேர்வதற்குக் கேட்கவேண் டுமா? கூட்டம் சேர்ந்துவிட்டது. ஆளுக்கு ஒரு விதமாகப் பேசினார்கள். “சட்டைகிட்டை போட்டுக்கினு திருடற பசங்களே ஜாஸ்தியாப்பூட்டானுக” என்பது பலருடைய அபிப்பிராயம்.போலீஸ்காரன் கைக்கு வந்த வுடனே அவன் சோமுவையும் கடை ஆசாமியையும் அழைத்துக்கொண்டு ஹைகோர்ட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய்விட்டான். 

அன்று மாலை சென்னைத் தினசரிப் பத்திரிகைகளெல் லாம் இந்தச் செய்தியைக் கொட்டை எழுத்தில் பிரசுரித் தன. பட்டப்பகலிலே பஜாரிலே பசுப்போன்ற கனவான் ஒருவரால் அல்லவா அந்தக் காரியம் செய்யப்பட்டது! 

பதினைந்து நாள் கழித்து ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டில் கேஸ் விசாரணைக்கு வந்தது. வாதி தரப்புச் சாட்சிகளை எல்லாம் விசாரணை செய்தாகிவிட்டது. கோர்ட் டார் குற்றவாளியைப் பார்த்து, “சாட்சிகள் சொல்வதைக் கேட்டீரே. என்ன சொல்கிறீர்?” என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டார். 

“ஒரு சுருக்கமான வாக்குமூலம் எழுதி வைத்திருக் கிறேன். அதைப் படித்துவிட்டு, தாக்கல் செய்துவிடு கிறேன்; அநுமதி தரவேண்டும்” என்றான் சோமு. 

“சரி” என்றார் மாஜிஸ்திரேட். 

“என்னைப்போன்ற வேலையில்லாத் திண்டாட்டக்காரர் களைப்பற்றி அரசாங்கத்தார் உடனே கவனம் செலுத்தா விட்டால், என்ன நிலைமை ஏற்படக்கூடும் என்ப தக் காட்டுவதன் மூலம் அரசாங்கத்தார் கவனத்தை இழுப்ப தற்காகவே இந்த மாதிரி செய்தேன். குற்றம் என்பது வாஸ்தவம். ஆனால் வேறு வழி இல்லை. எந்தத் தண்டனை விதித்தாலும் சரி. ஒரு வேண்டுகோள்! வேலூர் ஜெயி லுக்கு அனுப்பும்படி சிபார்சு செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று படித்து முடித்தான். 

“வேலூர் ஜெயிலிலே என்ன அவ்வளவு விசேஷம்!” என்றார் மாஜிஸ்திரேட். 

“அங்கே பல வசதிகள் இருக்கின்றன. சாப்பாடு, ரேடியோ, விளையாட்டு மைதானம் இவ்வளவும் இருக் கின்றன. வெளியிலே வெகு பாடுபட்டு அநுபவிக்கக் கூடிய சுகத்தையெல்லாம் சுலபமாக உழைப்பில்லாமல் உள்ளேயிருந்து அநுபவிக்கலாம்.” 

“ஆனால் விளையாட்டு மைதானமெல்லாம் கூடாது என்கிறீரா?” 

“அவசியம் இருக்கவேண்டும். காங்கிரஸ் கவர்ன் மென்டிலே கைதிகளுக்கு நடக்கும் உபசாரத்தைக் கண்டு தான் நான்கூட இந்தக் காரியம் செய்யத் துணிந்தேன்.” 

மாஜிஸ்திரேட்டுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. சோமு ஒரு மாதிரிப் பேர்வழி. புஸ்தகத்தைப் படித்து மூளையைக் குழப்பிக்கொண்ட ஆசாமி என்ற எண்ணமிட்டுக் கொண்டே, ஜட்ஜ்மெண்டு எழுதப் பேனாவைக் கையில் எடுத்துக் கிருகிருவென்று தீர்ப்பு எழுதினார். 

சோமு குற்றவாளிக் கூண்டில் இருந்தபடியே வேலூர் ஜெயிலைப்பற்றிக் கனவு கண்டுகொண் டிருந்தான். ஜெயி லுக்குப்போன ஒரு வாரத்துக்குள் விளையாட்டுக் கோஷ் டிக்குக் காப்டனாய்ப் போகவேண்டும்; அப்படி விளையாட வேண்டும், இப்படி விளையாட வேண்டும் என்றெல்லாம் மனத்துக்குள் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தான். 

முதலிலே யாரோ கனைத்த சத்தம் காதில் விழுந்தது. அடுத்த நிமிஷம் மாஜிஸ்திரேட் இவனைப் பார்த்து, “ஓய்” என்றார். 

சோமு கனவு கலைந்தபோதிலும் இன்பகரமான தீர்ப்பை எதிர்பார்த்து நின்றான். 

“திருடவேண்டுமென்ற எண்ணத்தோடு செய்யப் படாத காரியம் திருட்டாகாது. கடைக்காரனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் உமக்கில்லையென்பது நீர் காரியம் செய்த முறையிலிருந்தே வெளிப்படையாகிறது. அரசாங் கத்தார் கவனத்தை இழுப்பதற்காக இக்காரியம் செய்த தாகத் தெரிவித்திருக்கிறீர். அதை நான் ஏற்றுக்கொள் கிறேன். அதனால் நீர் செய்தது திருடவேண்டுமென்ற நோக்கத்துடன் செய்யப்பட்டதல்ல என்று விசதமாகி விட்டது. ஆகையால் உமக்கு லேசான தண்டனை. கோர்ட்டுக் கலையும் வரையில் இங்கேயே இரும்” என்று தீர்ப்பைப் படித்தார். 

சோமுவின் திகைப்புக்கும் துயரத்துக்கும் எல்லையே இல்லை. கீழே விழுந்துவிடுவானோ என்றுகூடத் தோன் றிற்று. அப்போது மணி 4:45. 

“போகலாம்” என்று மாஜிஸ்திரேட் சாயங்கால மாக ஞாபகமூட்டிய பிறகுதான் சோமு மெதுவாகக் கோர்ட்டை விட்டு வெளியே போனான். 

கோர்ட்டுக்கு வெளியே பத்தடிகூட நடந்து போ யிருக்க மாட்டான். 

“எஜமான் கூப்பிடறாரு’ என்று ஒரு கான்ஸ்டேபிள் வந்து சொன்னான். 

திரும்பவும் ஏதோ நம்பிக்கை எழுந்தது. கான்ஸ் டேபிளுடன் மாஜிஸ்திரேட் அறைக்குப் போனான்.கான்ஸ் டேபிள் மாஜிஸ்திரேட்டுக்குச் சலாம் வைத்துவிட்டு வெளியே போனான். 

“நீர் பி.ஏ.யா?” என்று கேட்டார் மாஜிஸ்திரேட்.

“ஆமாம்.” 

“இந்தமாதிரி முட்டாள் தனமான காரியமெல்லாம் ஏன் செய்தீர்? அபேதவாத நூல்களாமே, அவைகளுள் எதையேனும் படித்தீரா?” 

“அதெல்லாம் இல்லை. மூன்று மாதமாக அலைந்து பார்த்தேன், வேலை கிடைக்கவில்லை. சிவனே என்று வேலூர் ஜெயிலுக்குப் போய்விட்டால், இந்த வயிற்றுப் பிரச்னையை ஒத்திப்போட்டாய் விடுமே என்ற யோசனை.” 

மாஜிஸ்திரேட் முதலில் சிரித்தார்.மறுநிமிஷம், “இந்த மாதிரி யெல்லாம் முட்டாள் தனமான காரியம் செய்யக்கூடாது. ஆனால் எச்சரிக்கை செய்வதற்காக உம்மைக் கூப்பிடவில்லை. யாராவது இரண்டு பேருக்கு டியூஷன் சொல்லித்தருவீரா என்று கேட்கத்தான் கூப் பிட்டேன்” என்றார். 

இந்தக் கேள்வி காதில்பட்டதும் படாததுமாக, “ஓ!” என்றான் சோமு. கடைசியாகச் சோற்றுக்கு வழி பிறந்து விட்டதே என்ற குதூகலம்! 

“சாயங்காலம் முதற்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து பையன்களுக்குச் சொல்லிக்கொடும். இனி அரசாங்கத்தின் கவனத்தைத் திருப்புவதைப்பற்றி யோசிக்க மாட்டீரே?” என்றார் மாஜிஸ்திரேட், 

சோமு சந்தோஷம் தாங்காமல் பல்லை இளித்தான்.

– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *