காவேரியும் கிருஷ்ணரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 2,425 
 
 

வாசலில் காவேரி கோலத்தை முடிக்கவும், “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வ சந்தியா பிரவர்த்ததே”, பெருமாள் கோவிலில் சுப்ரபாதம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.சமையல் அறையில் விளக்கைப் போட்டு விட்டு, பில்டரில் காப்பிப் பொடியைப் போட்டு, வெந்நீர்க்காக பாத்திரத்தில் தண்ணீரை விட்டு ஒரு அடுப்பிலும்,பாலை ஒரு அடுப்பிலும், வைத்து சுப்ரபாதம் சொல்லிக் கொண்டே அன்றைய வேலையை தொடங்க ஆரம்பித்தாள்.

சுந்தரராமன், காலைக் கடன்களை முடித்து விட்டு, ஷர்டைப் போட்டுக் கொண்டு, ஈஸிச் சேரில் வந்து உட்கார்ந்து கொண்டார். முதல் டிகாஷனில், இரண்டு டவரா டம்பளாரில் காபியை கலந்து கொண்டு, சுந்தரராமன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் காவேரி. காஃபியை ஆற்றிக் கொண்டு இருந்த சுந்தரராமனிடம், “என்ன சொல்ல வரேன்னா, நீங்க ஸ்டேஷனுக்கு போகனும்னு இல்ல, கோபியே, கார் எடுத்துண்டு வந்துடுவான்,” என்றாள், காவேரி.

“அப்படி இல்லை காவேரி, நாம போகும் போது குழந்தைகள் வந்து கூட்டிண்டுப் போறதில்லையா? அவாளுக்கும் ஒரு ஆசை இருக்கும் இல்லையா?” என்றார் சுந்தரராமன். “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, உங்க வக்கில் கோட்டைப் போட்டுண்டு வெளியில் போக ஒரு சான்ஸ்” என்று கிண்டல் அடித்தாள் காவேரி. முறைத்துப் பார்த்தார் சுந்தராமன். “நீங்க கிளம்பறதுக்கு முன்னாடி நான் குளிச்சிட்டு வந்துடறேன், இரண்டாம் காப்பிக் குடிச்சிட்டு நீங்க கிளம்புங்கோ” என்றாள் காவேரி சுந்தரராமன், பூக்கூடையை எடுத்துச் செல்ல, காவேரியும் குளிக்க கிளம்பினாள்.


சென்னையில், சுந்தர்ராமன், ஹை கோர்ட்டில், வக்கீலாக வேலை செய்த காலத்தில், வக்கீல் சுந்தர்ராமன் வீடு என்றால் எல்லோருக்கும் தெரியும். வேலையில் அவ்வளுவு கருத்தும், உண்மையும், போவோர் வருவோர், கேஸ்கள்,என பம்பர பிஸியாக இருந்தார். காவேரியும், பெரியவர்கள், மைத்துனர், நாத்தனார்கள், என குடும்ப சூழலில் ஈடுகட்டி, குழந்தைகள்,கோபி,மஹதி இருவரின் படிப்பு, பழக்க வழக்கங்கள் என எல்லாற்றிலும் தன்னை ஈடுபட்டுத்திக் கொண்டு வந்தாள். பெரியவர்களுக்கு பின், யாவரும் எதையும் சுந்தர்ராம,காவேரியிடம் கேட்டு விட்டு, சொல்லிவிட்டுத் தான் செய்வார்கள். மரியாதையும், அன்பும் அவர்களிடத்தில் அதிகமாகவே காட்டினார்கள். குழந்தைகள், படிப்பு முடிந்து வேலைப் பார்க்க ஆரம்பிக்க, வயதிற்கேட்ப்ப வரன் தேட ஆரம்பித்தனர்.

காவேரிக்கும், கிருஷ்ண பகவானிடம் ஒரு தனிப் பக்தி என்றுமே இருந்தது. எத்தனை வேலையிலும், கிருஷ்ண பகவானுக்கு, இரண்டு சப்பாத்தி தன் கையால் செய்த பின்னரே சாப்பிடுவாள்.அவளின் பக்தியை மெச்சி,சுந்தரராமனின் அப்பாவும் காவேரிக்கு, கிருஷ்ண விக்ரகம் ஒன்றை பரிசாக அளித்த போது, அவர் கால்களை, கண்ணீரால் நமஸ்கரித்து எழுந்தாள்.

காவேரிக்கு, தன்பெண் மஹதி, அப்பாவைப் போல் வக்கீல் ஆவாள் என எண்ணினாள். ஆனால்,அவள் சார்டாட் அக்கவுண்ஸ் பாஸ் செய்து நல்ல கம்பெனியில் வேலையில் சேர்ந்தாள். வரன் தேட தனியார் கம்பெனியில் வேலை செய்யும் ராகவன் மாப்பிளையானான். பிள்ளை கோபியும், சாப்ட்வேர் என்ஜினீயராக, அவன் படிப்புக்கு ஏற்றார் போல் ராகினியும் வந்து சேர்ந்தாள் இரண்டு குடும்பங்களும் சந்தோஷமாய் இணைந்தது. வேலையில் ஓய்வு பெற்ற பின்னர் காவேரியின் அசைப் படி இருவரும் ஊர் பக்கம் வீடு எடுத்துக் கொண்டு வந்தனர்.


குளித்து விட்டு, துணிகளை கொடியில் போட்டு விட்டு,ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே, சமையல் அறையில் நுழைந்தாள். பம்பரமாய் சமையலை முடித்த காவேரி, வேலைக்காரி வரும் முன் பாத்திரங்களை, ஒன்றுக்குள் ஒன்றாக போட்டு,எல்லா இடத்தையும் துடைத்துவிட்டு சுவாமி ரூம் பக்கம்சென்றாள்.

சுவாமி இடத்தில் கோலம் போட்டு, விளக்கேற்றி, பால் வைத்து “கிருஷ்ணா, இன்று நல்ல பொழுதாக விடியட்டும்,என் வயிற்றில் பால் வர்த்துப்பா” என வேண்டிக் கொண்டாள். சுந்தரராமன் கொண்டு வந்த பூக்களை சுவாமிக்கு எல்லாம் வைத்து ,மாமனார் கொடுத்த கிருஷ்ணன் வி்க்கிரமுக்கு, அவருக்கு(கிருஷ்ணனுக்கு) என்று வைத்த சின்ன வேஷ்டியை மாற்றி, சந்தனமும், குங்குமமும் இட்டு பூவையும் வைத்து வணங்கினாள். இதில் தினமும் காவேரியின் புடவையின் கலரும் கிருஷ்ணரின் வேஷ்டியின் கலரும் ஒன்றாக இருக்கும்.

என்ன காவேரி, சமையல் அயிடுத்தா?பயங்கரமா வாசனை அடிக்கறதே? சோமுவை எட்டு மணிக்கு வர சொல்லி இருக்கேன் என்றார்.”

புரியறது, இதோ காஃபி கொண்டு வரேன்” என்றாள் .தனக்கும் சுந்தர்ராமனுக்கும், காஃபி போடும் போது வேலைக்காரி வள்ளி வர அவளுக்கும் காஃபி போட்டு கொடுத்தாள்.

“ஏம்மா, சிந்துஜா பொண்ணுக்கு நாலு வயசு ஆயிடுச்சா?”வள்ளிக் கேட்டாள்.

சிந்துஜா,கோபி ,ராகிணியின் ஒரே பெண். மிகவும் துறு துறு என்று இருப்பாள்.ஊருக்கு வந்தால் பாட்டி இருந்தால் போதும்,பின்னாடி ஏதாவது கேட்டுக் கொண்டே போய் கொண்டே இருப்பாள்.

“ம், வள்ளி, ரொம்ப நல்லா பேசறா, அவ கேட்கற கேள்விக்கு பதில் சொல்லி முடியாது. வராளே, நீயே பார்”. என சொல்லி விட்டு சுந்தர்ராமனை வழி அனுப்பி விட்டு வந்தாள்.

பாத்திரம் தேய்த்து கொண்டு வந்து வைத்து விட்ட வள்ளி, வீட்டை பெருக்க ஆரம்பித்தாள்.காவேரி மறுபடியும் ஃபில்டரில் பொடியைப் போட்டு வெண்ணிரை விட்டவள், சப்பாத்திக்கு, மாவை பிசைந்து வைத்தாள்.

ஊருக்குவந்த ஒரு மாதத்தில், தினமும் காலையிலும், மாலையிலும், கண்டிப்பாக பெருமாளை தரிசித்து விட்டு வருவாள். பாட்டு கிளாஸ், கோவிலில் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்பது என தன்னை மாற்றிக்

கொண்டாள்.இப்பொழுது எல்லாம் ஊரில் காவேரி மாமி வீடு என்றால் தான் தெரியும். கார் சத்தம் கேட்க காவேரி வெளியில் செல்ல,வள்ளியும் பின் தொடர்ந்தாள்.

“வாப்பா, கோபி, வாம்மா ராகிணி,வா,வா என் சின்ன குட்டி சிந்து”என கையை நீட்டி கூப்பிட, தாவி விட்டாள் சிந்து.

“பார்த்தியா, கோபி உன்பெண்ணை, நான் கூப்பிட்டா வரலை, அம்மாகிட்டே உடனே போயிட்டா, எல்லாருக்கும் காவேரி தான் “. என்று அலுத்துக் கொள்ள, எல்லோரும் சிரித்தனர்.


கோபிக்கும், ராகிணிக்கும், காபியை கொடுத்து விட்டு, சிந்துவிற்கு பாலை கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.காவேரி சப்பாத்தி பண்ண எழுந்தாள்.

“என்னம்மா, மணி ஒன்பது ஆயிடுத்தா? கிருஷ்ணன் வந்துடுவானா?” என கோபி கேட்டுக் கொண்டு இருக்கும் போதே சிந்துஜா, குளித்து, பாவாடையும்,சட்டையும் போட்டுக் கொண்டு, காவேரி கொடுத்த கொலுசை காலில் போட்டுக் கொண்டு சல் சல் என சமையல் அறையில் நுழைந்தாள்.

“பாட்டி, நீ, என்ன பண்ண போறே?” மழலை ததும்ப கேட்டாள்.

“கிருஷ்ணனுக்கு சப்பாத்தி ராஜா,” என சொன்னவளிடம், “எனக்கும் வேணும் பாட்டி” என்றாள்.

“உனக்கும் தான் ராஜாத்தி” என்றவள், இரண்டு கூடவே அவளுக்கும் செய்து விட்டு, இரண்டு சப்பாத்தியை தட்டில் எடுத்து கொண்டு சுவாமி அறையை நோக்கிச் சென்றாள். காவேரி.பின்னாடியே தன் குஞ்சு கால்களை பதித்து சென்றாள் சிந்து. கற்பூரம் காட்டி, நைவேத்தியம் செய்து மணி அடிக்க,வாசலில் “அம்மா, அம்மா”, என கத்திக் கொண்டே வந்தான் அந்த கிருஷ்ணன் (பசு மாடு).

காவேரிக்கும், மாட்டிற்க்கும் ஒரு ஸ்நேகிதம், ஊருக்கு வந்த மறு நாளில் இருந்து, அவள் நைவைத்தியம் செய்து மணி ஓசை செய்யவும், அதே சமயம் கிருஷ்ணன் தினமும் வருவதும் எல்லோருக்கும் ஆச்சிரியமே! பெருமாளை தரிசிக்க, வருபவர்கள் இந்த காட்சியையும் பார்த்துவிட்டுதான் போவாரகள். காவேரி, சப்பாத்தியைப்பிய்த்துக் கொடுக்க, கிருஷ்ணன் சாப்பிட்டு விட்டு தலையை ஆட்டு விட்டு செல்வான். சாயங்காலம், வாழைப் பழம், பிரசாதம் சாப்பிட வருவான். ஐந்து வருடமாய் நடக்கும் கதை இது.யார் கூப்பிட்டாலும், எந்த ஊருக்கும் காவேரி செல்ல மாட்டாள். “யார் கிருஷ்ணனை பார்த்துப்பா? அவனுக்கு யார் சாப்பிட தருவா?” என்பாள். இரண்டு வருடம் முன்னால் எல்லோரும் ஒன்றாக வந்த போது, எல்லோரும் இருவரையும் கோபித்துக் கொண்டனர். “என்னம்மா இது, எல்லோரும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போறா நீங்க, சென்னை, பெங்களூர் கூட வரமாட்டேன்னு சொன்னா எப்படி?”. பெண் மஹதி கோபித்துக் கொண்டாள்.

“என்னம்மா, உங்கனாலே, அப்பாவும் எங்கும் வர முடியவில்லை”, கோபியும் தன் பங்குக்கு கோபித்துக் கொண்டான்.

“மன்னி நீங்களும், அண்ணாவும், எங்களோட வந்து இருக்க முடியவில்லை என்றால் எப்படி? எப்பவும் நாங்களே வந்தா நன்னவா இருக்கு?”. நாத்தனர்களும் மச்சினரும் கோபித்துக் கொள்ள, எல்லோரும் எடுத்த முடிவின்படி இரண்டு வருடமாய், கிருஷ்ணனை, பார்த்துக் கொள்ள யாராவது ஊருக்கு வந்தால், காவேரியும், சுந்தர்ராமனும், மற்றவர்கள் வீட்டுக்கு சென்று வந்தனர்.


இரண்டு வருடமாய், கிருஷ்ணனும் அவர்கள் வீட்டிற்க்கு வெளியிலேயே, இருக்கும், மரத்திற்கு கீழேயே, இருப்பிடம் கொண்டான். ஊருக்கு வந்து சுந்தர்ராமனும், காவேரியும், பதினைந்து ஆண்டுகள் ஓடி போனதே, தெரியவில்லை. காவேரியும், கிருஷ்ணனும், இணைபிரியா நண்பர் ஆனர்கள் என்று சொல்ல வேண்டும்.

இரண்டு நாட்களாய், நல்ல மழை.காவேரி காலையில், எழுந்து கொள்ள முடியாமல் ஜுரம் அடித்தது. சுந்தர்ராமனுக்கு, கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. எல்லோருக்கும் போன் செய்து கூப்பிட்டு விட்டார். எல்லோரும் வந்து இறங்கினார்கள். நினைவு வரும்போதெல்லாம், “கிருஷ்ணன் சாப்பிட்டானா?” என்று மட்டும் கேட்பாள்.

கிருஷ்ணனும் முதல் நாள், சாப்பிட்டானே தவிர, பிறகு தலையை தூக்கி பார்த்து விட்டு படுத்துக் கொள்வான். மறு நாள் வைகுண்ட ஏகாதசி,காவேரியின் உடல்நிலை மிகவும் மோசமாக போயிற்று. அவளுக்கு, சுப்ரபாதம், கிருஷ்ணனின் அம்மாகுரல் தவிர வேறு எதுவும் காதில் விழவில்லை. காலையில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டது. சுந்தர்ரராமன், கோவிலுக்குச் சென்று, பிரசாதம் கொண்டு வந்தார். வாயில் பிரசாத்தை சுந்தர்ராமன் சிறிது கொடுக்கவும், சிறிது நேரத்தில், காவேரியின் உடல் மோசமாக, காவேரிக்கு துணையாக, கிருஷ்ணனும் இணைபிரியாது வைகுண்டம் போனார்கள் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *