“எங்கடை அப்பா அம்மாவை நல்லாய்த்தான் வைச்சிருந்தவர்… அவர் பொலிசிலை இருந்தவர், நல்ல வாட்டசாட்டமான ஒரு வடிவான ஆள்… அதோடை இப்பவும் அவவை நாங்க நல்லாய்த்தான் வைச்சிருக்கிறம், நீங்க இப்பிடி இனிக் கோல்பண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை…”
‘சியாமுக்குப் பால்சொதி எண்டால் காணும், மூச்சுப்பேச்சில்லாமல் நாலைஞ்சு இடியப்பம் சாப்பிடுவான்,’ தனக்குள் பேசியபடி கொதித்தெழும்பிய சொதிக்குள் கொஞ்சம் பாலைக் கலந்துகொண்டிருந்த பார்வதியின் காதுக்குள்ளும் நிரோவின் எரிச்சல் கலந்திருந்த அந்தக் குரல் விழத் தவறவில்லை. சொதி திரைந்து போகாமலிருக்க அதனை மெதுவாகக் கலக்கியபடி மின்னடுப்பை அவள் ஓவ் பண்ணினாள்.
“பசிக்குது” என்றபடி இறங்கிவந்த சியாம், “ஆர் அம்மா போன் பண்ணினது, ஏன் நீங்க இப்பிடிப் போனோடை கோவிக்கிறியள்?” எனச் சிரித்தான்.
“அந்த டொக்டர்தான். அந்த மனிசனுக்கு ஒரு வேலையுமில்லைப் போலை. சும்மா அலுப்புக்குடுக்குது.”
“எழுவது வயசிலும் அவருக்கு மோகம் தீரேல்லை …”
“மோகம் – எங்கையடா அந்தச் சொல்லைக் கேள்விப்பட்டனி?”
தகப்பனுக்கு மகனின் சொல்லாட்சியில் பெருமையாகவிருந்தது.
“கண்டகிண்ட தமிழ்ப் படங்களை எல்லாம் அவனை வைச்சுக்கொண்டு பாக்கிறது. பிறகு புதிசாய் — எனக்கு வாற கோவத்துக்கு …” நிரோ அவளின் கணவரிலும் தன் சிடுசிடுப்பைக் கொட்டினாள்.
அவர்களின் அந்த உரையாடல்களுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல, “வாங்கோ, சாப்பிட,” என்று பார்வதி அவர்களைக் கூப்பிட்டாள்.
அந்தத் தொலைபேசி அழைப்புப் பற்றிப் பார்வதிக்குச் சொல்வது தேவையற்ற ஒரு விடயமென்பதுபோல சாப்பாட்டு நேரம் வெவ்வேறு கதைகளும் சிரிப்புமாய் முடிந்தது.
“அம்மா, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு, பாத்திரங்களை டிஸ்வாசருக்குள்ளை போட்டுவிடுங்கோ.”
மின்சாரக் கட்டணச் சீட்டு வரும்போது, அதைப் பார்த்துக் கவலைப்படுவது நிரோவின் வழக்கமென்பது பார்வதிக்குத் தெரியுமென்பதால், தானே கழுவிவிடுவோம் என அவள் நினைத்தாள். அப்படிக் கழுவ ஆரம்பித்ததும் முதுகு தான் இருக்கிறேன் என்பதை அவளுக்கு ஞாபகப்படுத்தியது. அவளின் இரண்டு பக்கத் தோள் மூட்டுக்களுக்குக் கீழும் ஒரே எரிவாக இருந்தது.
“பாத்திரங்களைக் கழுவேக்கே ஒரு காலைக் கொஞ்சம் மேலை தூக்கிவைச்சுக் கொண்டு கழுவினியள் எண்டால் முதுகுக்குக் கொஞ்சம் சுகமா இருக்கும்,” – சந்திரன் சொன்னது ஞாபகத்துக்குவர இடது காலைத் தூக்கித் தண்ணித்தொட்டிக்குக் கீழிருந்த தட்டில் வைத்திருந்தபடி பாத்திரங்களை ஒருவாறு அவள் கழுவிமுடித்தாள்.
பின்னர் கொதித்துக்கொண்டிருந்த முதுகுக்கு ஒத்தடம் கொடுப்பதற்காக, ஒத்தடம் கொடுக்கும் பொதியைச் மைக்குரோவேவுக்குள் இரண்டு நிமிடம் போட்டுவிட்டு நின்றபோது, குசினி யன்னலுக்கருகில் இருந்த மல்லிகை பூக்களின் வாசம் அவளின் மனதை வருடியது. மென்மையாக முகர்ந்து நாசிக்கூடாக அந்தச் சுகந்தத்தை உள்ளே இழுத்துக்கொண்டாள். இப்படிச் செய்யும் ஒவ்வொரு தடவையும் அவளின் வீட்டிலிருந்த மல்லிகைப் பந்தலை அது அவளுக்கு நினைவுபடுத்தத் தவறுவதில்லை. ஆனால் இப்போதெல்லாம் அந்த மல்லிகைப் பந்தலுடன் சேர்ந்து சந்திரனின் சிரித்த முகமும் தெரிவது அவளுக்கு ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது.
எட்டாம் வகுப்பில்தான் பார்வதி அந்தப் பாடசாலைக்குப்போய் சேர்ந்திருந்தாள். உயரமாக இருந்ததால் உயரத்தின்படி மூன்றாவது வாங்கில்தான் அவளுக்கு இடம் கிடைத்திருந்தது. அதுதான் பொம்பிளைப் பிள்ளைகள் இருந்த கடைசி வாங்கு. அதற்குப் பின்னால் இருந்த ஆம்பிளைப் பிள்ளைகளின் வாங்கில்தான் சந்திரன் இருந்திருந்தான். அந்தக் காலத்திலை அவளுக்கு நல்ல சுருட்டை மயிர். இரட்டைப் பின்னல் பின்னி அதில் ஒன்றில் மல்லிகைப் பூவொன்றைச் செருகியபடிதான் அவள் பள்ளிக்கூடம் போவது வழக்கம்.
அன்று இடைவேளை மணி அடித்ததும் ஆசிரியரைத் தொடர்ந்து, மாணவர்களும் வெளியே போவதற்காக எழும்பியபோது, “கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடி மல்லிகைப்பூ, கேக்காத கேள்வியெல்லாம் கேட்குதடி உன் அழகே …” பின்னால் இருந்து பாட்டுக் கேட்டது. அவளையும் அறியாமல் அவள் திரும்பிப் பார்த்தாள். ஒரு கணம்தான், மீளவும் முகத்தைத் திருப்புவதற்கிடையில் கெக்கட்டம் போட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி பெரிதாக ஒலித்தது. அவளுக்கு வந்தது கோபமா, சங்கடமா அல்லது வெட்கமா, இல்லை சந்தோஷமா என்பது அவளுக்குப் புரியவில்லை. அவளின் கண் கலங்கிவிட்டது.
“இவங்க இப்பிடித்தான். தாங்கள் பெரிய பாட்டுக்காறர் எண்ட நினைப்பு,” அவளுக்குப் பின்னால் நின்றிருந்த சரோ அவளிடம் முணுமுணுத்தாள்.
அதன்பிறகு மல்லிகைப் பூவைப் பார்க்கும்போதெல்லாம் சந்திரன் அவளின் மனதுக்கு மிக நெருக்கமாக வந்துநின்று புன்னகைப்பான். வாயின் இடது பக்கத்தில் ஒரு தெத்திப் பல் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்க, நகைச்சுவையும் அவனுடன் கூடப் பிறந்ததுபோல எப்போதும் அவன் சிரித்துக்கொண்டிருப்பான். அவன் சிரிக்கும்போது அவனின் இடது கன்னத்தில் விழும் குழியும் அவனுடன் சேர்ந்து அழகாகச் சிரிக்கும். அது அவளைக் கிறங்கவைக்கும்.
அதேபோல அவனின் பரந்த நெற்றியில் அடிக்கடி விழுந்துகொண்டிருக்கும் மயிர்கற்றை ஒன்றை அவன் மேலே தள்ளுவதும் அது கீழே வருவதுமாக இருக்கும் அந்த ஊசலாட்டத்தைப் பார்ப்பதும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒன்பதாம், பத்தாம் வகுப்புக்கள் ஆண், பெண் மாணவர்களுக்கெனத் தனித்தனி வகுப்புக்களாக இருந்தன. பாடசாலையில் இருந்த நடராஜர் கோவிலில் பூசை செய்துதான் பாடசாலை ஆரம்பமாவது வழக்கம். பூசையில் நிற்கும்போது அவனை அவளின் கண்கள் தேடிப்பார்க்கும். காணாவிட்டால் அன்று அவளுக்கு எதுவும் ஓடாது. மதியவுணவு நேர இடைவேளையின்போது அவனை ஒரு தடவையாவது காணமாட்டோமா என்ற ஏக்கத்துடன் பாடசாலையின் நடுவிலிருந்த மைதானத்தைப் பலதடவைகள் மனம்படபடக்க அவள் வலம்வருவாள்.
பதினொராம் வகுப்பு ஆரம்பித்தபோது மீளவும் இருவரும் உயிரியல் விஞ்ஞான வகுப்பில் இணைந்தனர். அதே சிரிப்பும் கும்மாளமுமாக அவன் இருந்தான். “விளையாடி விளையாடி அவன் பாஸ் பண்ணியிடுவான். பாடத்தைக் கவனியாமல் அவன்ரை கதையிலை மட்டும் லயிச்சிருக்கிறாக்கள் பிறகு கவலைப்படப் போறியள்.” பத்மா ரீச்சர் அடிக்கடி ஏசுவா.
ஏலெவல் சோசலுக்கு அவளும் அவனும் அருகருகே இருந்தபோது அவனுக்கே கேட்குமளவுக்கு அவளின் இதயம் ஒலி எழுப்பியது. எதுவுமே சாப்பிட முடியவில்லை. “என்ன மனம் நிறைஞ்சிட்டுதோ?” என அவன் கேட்டபோது அவளின் கைகள் முள்ளுக்கரண்டியையும் கரண்டியையும் இணைத்து வெவ்வேறு கோலங்களைப் போட்டுக் கொண்டிருந்தன.
டொக்டரா வருவான் என எல்லோரும் எதிர்பார்த்தபடி மருத்துவ பீடத்துக்கான அனுமதி கிடைத்து சந்திரன் பேராதனைக்குச் சென்றான். அவன் சென்ற ஓரிரு மாதங்களில் அவளும் திருமணமாகி மட்டக்களப்புக்கு இடம்மாறிவிட்டாள்.
ஏழைக் கமக்காரரான தந்தையின் பொறுப்பை தலையிலெடுக்க விரும்பியோ என்னவோ நல்ல சீதனம் வாங்கித் திருமணம் செய்து தன் தங்கையரையும் வசதியாக அவன் வாழவைத்திருப்பதாக அவள் பின்னர் அறிந்தாள்.
நினைவுகளுக்குள் மூழ்கியபடி அவள் அப்படியே நித்திரையாகிவிட்டாள். கனவிலும் சந்திரன் வந்தான். அவனுடன் விமானத்தில் பறப்பது போலவும், நீர்நிலைகளும் மலைகளும் சூழ்ந்திருந்த ஒரு இடத்தில் மனம் விட்டுக் கதைத்தபடி காலாற நடப்பது போலவும் கனவு வந்தது.
“முதியோர் சங்கத்துக்கு இனிப் போகமாட்டியள்தானே!” வேலைக்குப் போகமுன் பார்வதியிடம் நிரோ உறுதிப்படுத்திக்கொண்டாள்.
“அம்மா நாள்முழுக்க வீட்டிலை தனிய இருக்காமல் முதியோர் சங்கத்திலை போய்ச்சேருங்கோ. வருத்தங்கள் வராமல் தடுக்கிறதைப் பற்றி, உடல்பயிற்சி செய்யிறதைப் பற்றி, என்ன சாப்பாடு சாப்பிடுறது நல்லதெண்டதைப் பற்றியெல்லாம் அங்கை சொல்லிக்கொடுக்கினமாம். லஜியின்ரை அம்மா போறாவாம், உங்களையும் வந்துகூட்டிக்கொண்டு போவா.”
இப்படித்தான் ஆறு மாசத்துக்கு முன் பார்வதியை நிரோ அங்கு அனுப்பிவைத்தாள். ஒத்த வயதினருடன் சுக துக்கங்களைப் பற்றி, நாட்டு நடப்பைப் பற்றிக் கதைப்பது அவளுக்கும் பிடித்திருந்தது. ஒவ்வொரு கிழமையும் யோகா சொல்லிக்கொடுத்தார்கள். அழைக்கப்படும் பேச்சாளர் ஒருவரின் பேச்சு இருந்தது, முடிவில் நல்ல சாப்பாடு சுடச் சுடக் கிடைத்தது, வாரம் தப்பாமல் அவளும் போய்வந்தாள். பிறகு மாதத்துக்கு ஒரு முறை அவர்களுடன் பேச ஒரு டொக்டர் வருகிறார் என அறிந்தபோது, தங்களுடைய உபாதைகள் பற்றிக் கதைக்கலாம் என எல்லாருக்கும் பெரிய சந்தோஷமாக இருந்தது. அப்படித்தான் சந்திரன் அங்கு வந்திருந்தான். சந்திரன் ரொறன்ரோவில் இருக்கிறான் எனப் பார்வதி கேள்விப்பட்டிருந்தாலும்கூட அவனை ஒரு நாளும் அவள் கண்டதில்லை. அவன் அவளை இனம் கண்டுகொண்டான்.
“இவவை இளமையிலை பாக்கவேணும். இரட்டைப் பின்னலும் ஆளும் அந்தமாதிரி, அதுக்காண்டி இப்ப வடிவில்லை எண்டு சொல்லேல்லை,” எனப் பகிடிவிட்டான். அவளைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரித்தான்
அந்த அக்கறையும் அவனின் புன்முறுவல்களும், பேச்சுக்களும் அவளைச் சற்று அசெளகரியப்படுத்தின, என்னவென்று இனம்காணமுடியாத உணர்வுகள் அவளுக்குள் கிளர்ந்தன. “ரொறன்ரோவுக்கு வந்து 30 வருஷமாயிட்டுது. வந்த 10 வருஷத்திலேயே மனுசியைக் கான்சருக்குப் பலிகுடுத்திட்டன். ரண்டு ஆம்பிளைப் பிள்ளையள். அவை தங்கடை பாட்டிலை இருக்கினம், நான் இப்பத் தனியத்தான். காலையில நடப்பன், பிறகு சமைப்பன், கொஞ்சம் தன்னார்வத்தொண்டு செய்வன். பின்னேரம் கொஞ்சம் வாசிப்பன் அல்லது ரிவீ பாப்பன், பிறகென்ன நித்திரைதான்… எங்கடை நாட்டிலை இருந்தால் அப்படியிருந்திருக்கும், இப்படியிருக்குமெண்டு ஆதங்கப்படுறதை விட்டிட்டு வசதியான நாட்டிலை வாழுறம் எண்டு சந்தோஷப்பட வேணும். என்னைப் பாத்தால் 70 வயசெண்டு தெரியுதே, ஊரிலை எண்டால் பொல்லுப் பிடிச்சிருப்பம்,” எனக் கலகலவெனச் சிரித்தான். மிக இயல்பாக, அர்த்தத்துடன் பேசினான். போகும்போது, போன் பண்ணிக் கதைக்கலாமோ என அவளின் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டான். வீட்டு நம்பரைத்தான் அவள் கொடுத்திருந்தாள். அது ஏனென அவளுக்கே தெரியவில்லை.
அப்படியே அடுத்த நாள் மாலை அவன் அழைத்தான். இருவரும் சாவாகசமாகக் கடந்த காலங்களைப் பற்றிப் பேசிக்கொண்டனர். அவனின் நகைச்சுவையான பேச்சு அவளின் மனசை இலேசாக்கியது, வாய்விட்டுப் பல தடவைகள் சிரித்தாள். நிரோ வேலையால் வந்து தானே தேநீர் போட்டுக் குடித்துக் கொண்டாள்.
முடிவில் போனை வைத்தவள், “அது டொக்டர் சந்திரன், எங்கடை ஊர்க்காரன், நாங்க ரண்டுபேரும் ஒருமிக்கப் படிச்சனாங்கள். 50 வருஷத்துக்குப் பிறகு அண்டைக்கு முதியோர் சங்கத்திலை சந்திச்சனான். ஆள் அதே பகிடியோடை அப்படியே இருக்கு ….” நிரோவிடம் தன் மகிழ்ச்சியை அவள் பகிர்ந்துகொண்டாள்.
ஐந்தாம் தடவையாக அவன் அழைத்திருந்தபோது நிரோதான் முதலில் பதிலளித்தாள். பின்னர் வேண்டாவெறுப்பாகப் பார்வதியிடம் போனைக் கொடுத்தாள். “நீர் அந்தக் காலத்திலை நல்ல வடிவு, எனக்கும் உம்மிலை ஒரு கண் இருந்ததெண்டு உம்மடை மகளுக்குச் சொன்னனான்,” சந்திரன் சிரித்தான்.
அன்றிரவு, “நீங்க இனி அந்த முதியோர் சங்கத்துக்குப் போகவேண்டாம் அம்மா,” என்றாள் நிரோ.
இப்படியே அடுத்த மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அவளின் கணவன் குணத்தின் திவசம் வந்திருந்தது. இம்முறை நிரோ தன் அப்பா பற்றி மிக அதிகமாகவே பேசினாள்.
“நிரோவுக்கு அப்பாவைப் பற்றின நல்ல நினைவுகள்தான் இருக்கு, அதுவும் நல்லதுதான்,” என்றாள் திவசத்துக்கு வந்திருந்த மூத்த மகள் நிரு.
பதிலுக்கு என்ன சொல்வதென அவளுக்குத் தெரியவில்லை. குணம் இறந்தபோது, நிரோவுக்கு ஐந்து வயது, ஆனால் நிருவுக்கு ஏழு வயது. அதனால் நிருவுக்கு அவள் பட்டபாடுகள் நினைவிருந்திருக்கலாம் என அவள் நினைத்தாலும் அந்தக் காயங்களைக் கிளற வேண்டாமே எனப் பார்வதி நிருவுடன் எதுவும் பேசவில்லை.
குணத்துடன் வாழ்ந்திருந்த அந்தப் பத்து வருட வாழ்க்கையில் அவள் கண்ட மிச்சம் இரண்டு பிள்ளைகள் மட்டும்தான். பார்வதியை அவன் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்திருந்தான். முதல் தாரம் சன்னி வந்து இறந்ததாக அவள் கேள்விப்பட்டிருந்தாள். அவனின் அழகுக்கும் கம்பீரத்துக்கும் சீதனமில்லாமல் அவளைக் கட்டுவது அவளின் அதிஷ்டமென ஊரே பொச்சுக்கொட்டியது.
திருமணமாகி அவனுடன் வாழப்போன அடுத்த வாரமே அவனின் சுயம் அவளுக்குப் புரிந்தது. பொலிஸ் வேலையில் மனவழுத்தம் அதிகமென்பதைச் சாட்டாக்கி தினமும் அவன் குடித்தான். குடித்துவிட்டு அவளுடன் உறுமுவதும், அவள் ஏதாவது சொல்லப்போனால் அடிப்பதும் உதைப்பதும் என அவளின் வாழ்க்கை நரகமானது.
வேலையால் வரும்போது பிள்ளைகளுக்கென ஏதாவது கொண்டுவருவான். வந்தவுடன் சற்றுநேரம் அவர்களுடன் விளையாடுவான். பின்னர் குடிக்கத் தொடங்கினால் அவன் அவனாக இருக்கமாட்டான். முடிவில், இரண்டு சிறிய பிள்ளைகளுடன் அவளை விட்டுவிட்டு அல்சர் வந்து அவன் இறந்துபோனான். அது மதுபானப் பிரியத்துக்கு அவன் கொடுத்த விலையோ என்னவோ, அவனின் மதுபானப் பிரியத்துக்கு அவள் கொடுத்த விலை அதிகம். தனித்து நின்று வாழக் கஷ்டப்பட்ட அந்தக் காலங்களில் அவள் பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காது.
நிருவைத் திருமணம் செய்யவிரும்பிய மது அவளையும் நிரோவையும் கனடாவுக்குக் கூப்பிடும் ஒழுங்குகளைச் செய்திருந்தான். நிரோவுக்குத் திருமணம் பேசி ஒழுங்கு செய்திருந்ததும் மதுதான். பின்னர் நிரோ பார்வதியைக் கனடாவுக்கு அழைத்திருந்தாள். அவளுக்குக் கிடைத்த வாழ்க்கை போலல்லாமல் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பதில் பார்வதிக்கு மனமார்ந்த மகிழ்ச்சியும் திருப்தியும் இருந்தது. அவள் அனுபவித்திருந்த வேதனைகள் எல்லாவற்றுக்கும் ஒத்தடமாய் இப்போது எல்லாம் நல்லாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்றுதான் அவள் இதுவரை நினைத்திருந்தாள்.
ஆனால், சந்திரனின் பிரசன்னம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிது. பிள்ளைகளை மிகுந்த நம்பிக்கையுடன் அவள் வளர்த்திருந்தாள். அவர்களின் அந்தரங்கம் பற்றி அவள் வினவியதில்லை, அதுக்கு அவள் மதிப்புக் கொடுத்திருந்தாள். பதின்மவயதைத் தாண்டிய பின்னர் அவர்களை அவள் கட்டுப்படுத்தியதும் கிடையாது.
நிரோ என்னைக் கட்டுப்படுத்துகிறாளா? என் அந்தரங்கம் பற்றி அலசுகிறாளா என நினைத்தபோது பார்வதிக்கு மிகுந்த ஆதங்கமாக இருந்தது, யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போலிருந்தது.
வெளியே மழை கொட்டப்போவதை அறிவிப்பதுபோல வானம் இருண்டு போயிருந்தது. வீட்டில் யாருமிருக்கவில்லை. பல்கனியில் போய் அங்கிருந்த கதிரையில் அவள் அமர்ந்துகொண்டாள். வாகனங்கள் இரைச்சலுடன் விரைந்து கொண்டிருந்தன.
மழை பெய்வதைப் பார்ப்பதும், அதன் ஓசையை இரசிப்பதும் அவளுக்கு நன்கு பிடிக்கும். சற்றுநேரத்தில் மின்னலும் இடியுமாக பலத்த இரைச்சலுடன் மழை கொட்டியது. வீசியடித்த காற்றுத் தூவிய தூவானத்தில் நனைவது அவளுக்கு இதமாக இருந்தது.
மிகுந்த ஆரவரத்துடன் கொட்டிய மழை முடிவில் நின்றுபோக, மேகங்களும் கலைந்து சூரிய வெளிச்சம் வானத்தை முழுமையாக நிறைத்தது.
உடுப்பை மாற்றிக்கொண்டு வீட்டுக்கருகில் இருந்த பூங்காவை நோக்கி நடந்தாள். இவ்வளவு மழை கொட்டிய இடமா இது என வியக்கும் வண்ணம் எங்கும் சூரியக் கதிர்களின் வெப்பம் நிரவியிருந்தது. பூங்காவில் இருந்த மரங்கள் எல்லாம் மழையில் நனைந்து சிலிர்த்துப் போயிருந்தன. ரோஜா மலர்களில் இருந்த நீர்த்திவலைகள் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதுபோல தனித்துத் தெரிந்தன. திடீரென, எங்கிருந்தோ வந்த செம்மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சி ஒன்று அந்த மலர்களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஆனால், எதையும் மனம் ஒன்றி ரசிக்கமுடியாமல், அவளின் மனம் எங்கெல்லாமோ தன் விருப்பப்படி உலாவிக்கொண்டிருந்தது.
‘இந்த வயதில்கூட எனக்குக் கட்டுப்பாடுகளா? எனக்குப் பிடித்தவர்களுடன் நான் கதைக்கமுடியாதா? நான் விரும்பிய இடத்துக்குச் செல்லமுடியாதா? மகளின் கட்டுப்பாட்டுக்குள், அவள் விரும்பியபடிதான் நான் வாழவேண்டுமா?’ திரும்பத்திரும்ப அவள் யோசித்தாள்.
‘நான் ஏன் தனிய வாழக்கூடாது? இந்த நாட்டில் எல்லாத்துக்கும் வசதி இருக்கும்போது எனக்குப் பிடித்ததை நான் ஏன் செய்யக்கூடாது? சியாம் வளர்ந்திட்டான், சமூகத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நான் இதுவரை வாழ்ந்தது போதும்!’
அப்படி நினைக்க, நினைக்க அவளின் மனம் இலேசானது.
ஆனால், நிரோவுடன் எதையும் மனம்விட்டுக் கதைக்கப் பார்வதியால் முடியவில்லை, அடுத்த இரண்டு கிழமை இரண்டு யுகமாகக் கழிந்தது.
ஜூன் முதலாம் திகதி, அன்று அவளின் 70வது பிறந்தநாள். நிரோ கேக் செய்தாள். ‘அம்மம்மா கேக் வெட்டுங்கோ, மேக் எ விஸ்’ என்றெல்லாம் சியாம் மிகவும் ஆரவாரப்பட்டான். அப்படியே அவள் செய்தாள்.
அடுத்த நாள் காலை, ‘உன்னுடன் கதைக்கவேணும்,’ எனப் பார்வதி நிரோவைத் தனது அறைக்குக் கூப்பிட்டாள்.
“நிரோ, எனக்கென்ன பிடிக்கும், எனக்கு என்ன வேணும் எண்டெல்லாம் அம்மாவை நீ எப்பவும் கேட்பாய், நேற்றுக்கூடக் கேட்டாய், நான் ஒண்டையும் உன்னட்டைக் கேட்டதில்லை. இப்ப எனக்கு ஒண்டு வேணும் போலையிருக்கு… என்ரை மிச்ச வாழ்க்கையை எனக்குப் பிடிச்சமாரி வாழோணும் எண்டு நான் நினைக்கிறன்… பக்கத்திலை ஒரு அறை வாடகைக்கு எடுத்திருக்கிறன் … நீயும் எனக்கு உதவியா இருக்கலாம். நானும் உனக்கு உதவியா இருப்பன்…”
சொல்லியவள் நிரோவை இறுக்கி அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். சியாமையும் கூப்பிட்டு அவனை உச்சிமோந்தாள். பின்னர் ஏற்கனவே தயார்செய்து வைத்திருந்த சூட்கேசை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அங்கு என்ன நிகழ்கிறது என்பது விளங்காமல் சியாம் விழித்தான். எதுவுமே சொல்லத் தோன்றாமல் நிரோ விறைத்துப் போய்நின்றாள்.
நன்றி: இலக்கிய வெளி – ஜூலை, ஊடறு, ஒக்ரோபர் 2021