கதவை திறந்து வெளியே வந்தார் கற்பகத்தம்மாள்.. ஆள் நடமாட்டமில்லாத அதிகாலை நேரம். மரத்தில் ஒட்டிய பூச்சிகளின் கீச்சு சத்தம் நிக்காமல் இருந்தது. நேற்று மாலையே எடுத்து வைத்திருந்த சாணத்தை வாளியில் இட்டு கரைத்து …..ச்சட… ச்சட…. என்ற சத்தத்துடன் தெளித்து முடித்தார்.
“இந்த காலத்துல எந்த பொம்பள எந்திரிச்சு வாச தெளிக்கிறா…… கேட்டா….. “வாசலே இல்ல, வாச எங்க தெளிக்கிறது”ன்னு வக்கனையா எகத்தாளத்தோட கேக்கறாளுங்க…… ம்ம்……..என்ன ..செய்யறது…”
என்று தனக்கு தானே புலம்பியவாறே முந்தானை மரைப்பை எடுத்து முகத்தை துடத்துகொண்டு உள்ளே சென்றார்…
காலைல கூடமாட ஒத்தாசைக்கு ஒரு ஆள் இருக்கா..?? …….எல்லாத்தையும் நானே செய்யணும்….
இந்த வீட்டுல பொறந்த ரெண்டு பயலும் வாக்கப்பட்டு போய் மாமனார் ஊட்டுல குடுத்தனம் பண்ணுறானுங்க.
இந்த மனிசன் ஒழுங்கா இருந்தா இதெல்லாம் நடக்குமா…? தெனம் தெனம் குடிச்சிட்டு வந்து ஊட்டுல சத்தம் போட்டுக்கிட்டு கெடந்தா, எந்த மருமவ பொறுத்துகிட்டு இருப்பா ….
என்று சொல்லும் கற்பகத்தம்மாளின் புலம்பல் வலையில் சிக்காமல் இருக்கவே அக்கம்பக்கத்தினர் யாரும் வீட்டுப்பக்கம் வருவதில்ல!! வீடென்னவோ பழைய மாடல் ஓட்டு வீடுதான் !! .சதா……….. புலம்பினாலும் ….வீட்டை அழகுற நிர்வகிப்பதில்… அவருக்கு நிகர் அவரே…..!!.
வீட்டில் சாய்த்து வைத்திருந்த விளக்கமாரை எடுத்து தரையை பெருக்க துவங்கினார். அந்த தரை சுண்ணாம்பு காரை கொண்டு வழவழப்பாக பூசபட்டிருந்து தரையை பெருக்கியவாறே, கற்பகத்தம்மாள் மீண்டும் புலம்ப ஆரம்பித்தார்.
“இந்த மனுஷனுக்கு வரவர புத்தி மழுங்கிகிட்டே போகுது…”. …”விடியற நேரமாச்சே கொஞ்சமாவுது எழுந்திருக்கனுன்னு தோணுதா”…? என்று சொல்லிக்கொண்டே
“ஏய்யா………….எழுந்திரிய்யா ……நேரமாச்சில்ல…”
என்று ஒரு முறை உரக்க சொல்லி விட்டு, மீண்டும் தன் வேலையை பார்க்க துவங்கினார் கற்பகத்தம்மாள். அடுப்படிக்குள் நுழைந்து சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தார். அவரது கணவர் கண்ணுசாமி தரவுக்காரர் பசி தாங்கமாட்டார். அதனால் அவர்களுக்கு டீ காப்பியெல்லாம் கிடையாது…!! பல் துலக்கி முடித்தவுடன் சுடச்சுட ….காலை உணவுதான்.
சமையலறை அடுப்படி ஓரத்தில் இருந்து அலமாரி அது அடுப்பு புகையால் தானாகவே கருப்பு நிறம் பூசிக்கொண்டு இருந்தது. அதன் கீழடுக்கில் இருந்தது காய் கூடை. அந்த மூங்கில் கூடையில் இருந்த காய்களை எடுத்து தோல் சீவி நறுக்கிகொண்டே……………..
“பாக்கறது நெல் தரவு வேல…….. தரவு முடிஞ்சு… ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சாலும்,.. இந்த சேத்தாலிங்க அவர விடறதில்ல..
மேலக்கர சுப்பையா மேஸ்திரியும், அவரு சகல பெரியசாயும்தான் அவர கெடுக்கறது.
“யோவ்…..தரவுக்காரரே…… ஒன் ரெண்டு பயலுகளுக்கும் கல்யாணம் பண்ணி, கர சேத்தாச்சு….. இனிமே…. சம்பாதிச்சத செலவு செஞ்சு, நிம்மதியா இருக்கணும்யா……ன்னு சொல்லி சொல்லியே ஆள கெடுத்துட்டாங்க …
இந்த மனிசனும் புத்தியில்லாம அந்த பேச்ச கேட்டுகிட்டு, ..பொழுதா பொழுதுக்கும் அலஞ்சி திரிஞ்சி தரவு முடிச்சி சம்பாதிச்சத,…. இவங்களோட சேந்து உட்டுபுட்டு, வெறும் ஆளா ஊட்டுபக்கம் வர்றது… வரும்போதே……………..
“ஏ…கற்பகம் ஏ…..கற்பகம்” ன்னு சத்தம் போட்டுகிட்டே வர்றது.
ஏன்யா இப்புடி பண்றன்னு கேட்டா…!
“நான் சம்பாதிக்கறேன் நான் குடிக்கறேன்….. நீ எதுக்கிடி கேக்குற…. ஒன்னால என்னடி பண்ணமுடியும்” ..ன்னு ராமாயணம் அளக்கறது..
அப்பப்பா…. இதெல்லாம் கேட்டுகிட்டு இந்த மனிசன் கூட பொழப்ப நடத்தனுன்னு என் தலையெழுத்து …!! என்று மனக்குமுறலை கொட்டியவாறே …… காய்களையும் வெட்டி முடித்திருந்தார் .கற்பகத்தம்மாள் …!!
அடுப்பு பக்கத்தில் போட்டு வைத்திருந்த தென்னங்கீற்றை எடுத்த கற்பகத்தம்மாள்,
“ஏய்யா………….எழுந்திரிய்யா ……நேரமாச்சில்ல..”
என்று மீண்டும் ஒருமுறை சொல்லி விட்டு ….தென்னங்கீற்றை இரண்டாக மடக்கி அடுப்பில் வைத்து, அதனுடன் ஐந்தாறு வேப்ப மர குச்சிகளையும் வைத்தார். அடுப்பு பக்கத்தில் கண்ணாடி பாட்டிலில் தயார் செய்த மண்ணெண்ணெய் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கு ஜூவாலையில் படும்படி மீண்டும் ஒரு தென்னங்கீற்றை மடக்கி பிடித்தார்.
கீற்று கடுகு பொறியும் சத்தத்துடன் பற்றிக்கொள்ள ஜுவாலை நன்றாக கீற்றுக்கு பரவியதும் அதை அடுப்பில் மடக்கி வைத்திருந்த கீற்றுக்கருகில் வைத்தார். அந்த ஜுவாலையில் அடுப்பு நன்றாக பற்றி வெண்ணிற புகையை கிளப்பியவாறே மஞ்சள் நிறத்தில் ஜுவாலை அடுப்பை விட மேலெழுந்தது.
அலமாரியின் இரண்டாம் அடுக்கில், ஈய பாத்திரம் கழுவி கவிழ்த்து வைக்கபட்டிருந்தது. அது தன் பாதி நிறத்தை அடுப்பிடம் பறிகொடுத்து கீழ் பாதி கருப்பும் மேல் பாதி வெண்ணிறமாகவும் இருந்தது. அந்த பாத்திரத்தில் பாதியளவுக்கும் குறைவாக நீர் ஊற்றி அடுப்பில் வைத்தார். சுவற்று மூலையில் மூன்று மண் பானைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்க பட்டிருந்தது.
அதில் உள்ள மேல் பானையை கீழே இறக்கி வைத்து விட்டு நடுப்பானையில் உள்ள அரிசியை பானைக்குள்ளேயே கிடந்த படியில் அளந்து ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் கொட்டினார். இறக்கி வைத்த மேல் பானையை எடுத்து மீண்டும் நடுபானையின் மேல் வைத்துவிட்டு, பாத்திரத்தில் இருந்த அரிசியில் நீர் ஊற்றி கிளறி கலநீர் பிடித்துக்கொண்ருந்த கற்பகத்தம்மாள்…….
ஏய்யா……
என்று சத்தம் போட்டவர் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லாமல் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்
“இந்த மனிசன பக்கத்தில போய்தான் எழுப்ப முடியுதா” ….?
என கேட்க்கும் கற்பகத்தம்மாளுக்கு எழுப்பினால் என்ன நடக்கும் என்று நன்றாக தெரிந்திருந்தது .ஒருமுறை பக்கத்தில் போய்
“ஏய்யா………….எழுந்திரிய்யா”…..
என்று எழுப்பிய கற்பகத்தம்மாளின் இரண்டு கன்னத்தையும் நன்றாக வீக்கத்துடன் சிவக்கவைத்திருந்தார் கண்ணுசாமி தரவுக்காரர். இந்த சம்பவம் என்னவோ இருபது வருடங்களுக்கு முன் நடந்திருந்தாலும் அதன் தாக்கத்தை இன்றுவரை அந்தம்மாவிடம் காணமுடிந்தது.
அடுப்பில் உலை நன்றாக கொதித்து கொண்டு இருந்ததை கண்ட கற்பகத்தம்மாள் சில்வர் பாத்திரத்தில் இருந்த அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் ஈய பாத்திரத்திற்கு மாற்றினார். அரிசி முழுவதையும் கொதிக்கின்ற உலையில் கொட்டிய பிறகு அடுப்பிற்கு வெளியே இருந்த விறகுகளை அடுப்பிற்குள் சற்று தள்ளினார் .
விறகை தள்ளியவுடன் அடுப்பு தன் சுவாலையை குறைத்துக்கொண்டது. அருகில் கிடந்த இரும்பால் ஆன ஊதாங்குலளால் ஊதி சுவாலையை பழைய நிலைக்கு கொண்டுவந்தார்.. அவர் ஊதும்போழுது வாயிலிருந்து வெளிப்பட்ட காற்று இரும்பு குழாயில் பட்டு இசையை எழுப்பிக்கொண்டே தீ ஜுவாளையையும் அதிகபடுத்தியது.
பிறகு பக்கத்தில் இருந்த முக்காலியில் அமர்ந்து இரு கால்களையும் நீட்டிகொண்டார் கற்பகத்தம்மாள். தன் நெற்றியில் லேசாக வேர்த்திருந்த வியர்வைத்துளிகளை சேலையை எடுத்து துடைத்து கொண்டவர்……..
“எங்க வீட்டுல இருந்து உதவி செய்யலேனா…….. என் ரெண்டு பயலுங்களையும் படிக்கவச்சு கர சேர்த்துருக்க முடியுமா…? அத கேட்டா… இந்த மனிசனுக்கு ரோசம் பொத்திகிட்டு வந்திரும்.
“புள்ளைங்கள வளர்க்கத் துப்பில்ல”…. ன்னு சொல்லி சின்னவன எங்க அப்பா வீட்டுலையே வெச்சு வளத்துகிட்டாங்க. பெரியவன் மட்டும் இங்க இருந்தான். ரெண்டு பயலுக படிப்பு செலவையும் எங்க அண்ணன்மாருங்களே பாத்துகிட்டாங்க….
என்னத்த…. இந்த மனிசன் எங்களுக்கு செஞ்சுபுட்டாறு……
ஒரு நாளான நாளுள்ள, பயலுங்க படிப்பு செலவுக்கு ஒத்த ரூவா கொடுத்ததுண்டா….?
இல்ல……..
ஒரு நாளும் கிழமைக்கு துணிமணிதான் எடுத்து கொடுத்ததுண்டா……..?
என்று சொன்ன கற்பகத்தம்மாளின் துயர நினைவுகள் அவரது நெஞ்சில் வழியாய் வழித்து, சற்று மேல் எழும்பி தொண்டையில் துக்கமென அடைத்து இன்னும் மேலே போய் இரு கண்களிலும் நீராக கோர்த்து அது வழியாமல் தேங்கி நின்றது.
முக்காலியை விட்டு சட்டென எழுந்து சமையலறையை விட்டு ஆவேசமாய் வெளியே வந்த கற்பகத்தம்மாள் கட்டில் இருக்கும் இடம் பார்த்து
ஏய்யா…….இப்ப எந்திரிக்கிரியா……….? இல்லையா……?
என்று ஆக்ரோசமாய் கத்தினார்… இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்த கணவர் கண்ணுசாமி தரவுக்காரர் மீண்டும் உறக்கம் முடித்து எழுவார் என்கிற நம்பிக்கையிலும், தன் உள்ளத்து வலியை மிஞ்சிய பாசத்திலும் …….
– ஈகரை தளம்(15/02/2016)