குளிரூட்டப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான அரங்கத்தில் வசீகரமாய்,அங்குள்ள ஒரு சில பெண்களின் மனதை கொள்ளை கொள்ளக்கூடிய தோற்றத்துடன் சுகேஷ்.
பிரிட்டிஷ் காரர்களை தோற்கடிக்கக்கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் சொற் பொழிவாற்றிக்கொண்டிருந்தான்.
நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். தெரியும் கண்டிப்பாய் உங்கள் கைபேசியில் கலர் கலராய் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். தவறாக நினைக்க வேண்டாம். கைபேசியில் ஏதோ ஒரு புத்தகத்தை பிரித்து ஏதோ ஒரு கதையை படித்து விட்டு அதற்கு ஒரு கமெண்ட்ஸ், இல்லை, ஒரு லைக் என்று போட்டு விட்டு அடுத்த கதைக்கு போய் விடுபவர்கள் ஒரு சிலர்.சமூக அவலங்களை கண்டு பொங்கி எழும் ஒருவராய் இருந்தால் அவ்வளவுதான், இந்த சமூகத்தில் நடக்கும் ஏதோ ஒரு நிகழ்வை படம் எடுத்து வாட்ஸ் அப் பில் போட்டு விட்டு அதற்கு நாலு மிளகாய் ஒன்றாய் கடித்து துப்பும் அளவுக்கு கருத்துக்களையும் போட்டு பலருக்கு அனுப்பி வைத்து விட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுவார்கள்.மற்றும் சிலர் தங்கள் நட்பு வட்டாரத்துக்குள் தேவையற்ற படங்களை வெளியிட்டு பார்த்து மகிழ்ந்து கொள்கிறார்கள். .இப்படி பல பல கோணங்களில் பல செயல்களை உங்கள் கையில் இருக்கும் ஒரு கலர் பட்டன் பாக்ஸ் உங்களை வைத்தே செய்து விடுகிறது.
சுகேஷின் சொற்பொழிவை திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் பிரவீணா. எப்படி பேசுகிறான். எந்த விசயமாகட்டும், தங்கு தடையின்றி மேடையில் பேசுகிறான். உண்மையில் பெரிய அறிவாளிதான், மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
சொற்பொழிவு முடிந்து கீழே இறங்கும்போது அனைவரும் கை குலுக்கும் போது பிரவீணாவின் மனது காரணமில்லாமல் துடித்தது. சுகேஷ் எந்த வித உணர்வுமின்றி கை குலுக்கிக்கொண்டிருந்தான். பிரமாதம் சார், கலக்கி விட்டீர்கள்.ஒவ்வொன்றுக்கும் ஒரு புன்சிரிப்பை சிந்த விட்டான்.தேவையற்ற பெண்களின் பேச்சையும் புன்சிரிப்பால் தவிர்த்துக்கொண்டு தாண்டினான். பிரவீணா கை குலுக்கு முன் என்ன சொல்லி அவனை “இம்ப்ரஸ்” செய்வது என யோசித்தாள்.
அவளின் நேரமும் வந்தது, உங்களை பத்தாவது முறையா பக்கத்துல இருந்து இரசிக்கிறேன், கண்கள் சொருக சொல்லி அவன் கையை குலுக்கினாள். ஒரு கணம்
முகத்தில் ஆச்சர்யத்தை காண்பித்த சுகேஷ், மீண்டும் முகத்தை பழைய முறைக்கு கொண்டு வந்தவன், தேங்க் யூ, ஒவ்வொரு முறையும் உங்களை திருப்தி படுத்தியிருக்கிறேனா? இந்த கேள்வி அவனிடமிருந்து வரவும், அவள் யா..ரொம்ப, அது எப்படி வித்தியாசம் வித்தியாசமாய் பேசுகிறீர்கள், பிறர் இரசிக்கும்படி. அவளின் கேள்விக்கு கொஞ்சம் சத்தமாய் சிரிப்பை சிதற விட்டவன், சாரி நான் கொஞ்சம் அவசரமாய் போக வேண்டி இருக்கிறது, உங்களை அடுத்து சந்திக்கிறேன்.
ஓ..ஷ்யூர், அவனை வழி அனுப்புவது போல் கை காட்டினாள்.
காரில் உட்கார்ந்து போய்க்கொண்டிருக்கும்போது சுகேஷின் மனதுக்குள் அவள் கண்கள் சொருக “பத்தாவது முறையா” என்று சொன்னது வந்து போனது. யாரிந்த பெண்? என் பேச்சை கேட்க தொடர்ந்து வருகிறாளா? இல்லை எனக்காகவா? இந்த கேள்வி மனதுக்குள் எழும்ப சட்டென்று ஒரு இன்ப கிளுகிளுப்பு ஏற்படுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
இப்பொழுது சென்னையில் ஒரு குளுமையான அரங்கத்தில் இவன் சொற்பொழிவை நடத்திக்கொண்டிருந்தான். ஆனால் அவன் மனது பத்தாவது முறையாக என்று சொன்ன அந்த பெண்ணை பார்வையாளர்களுக்குள் துழாவிக்கொண்டிருந்தது. சே அந்த பெண்ணிடம் இன்னும் ஐந்து நிமிடம் பேசியிருக்கலாம், அதற்குள் அவசரம் என்று கழண்டு கொண்டுவிட்டோம். அவள் முகம் எப்படி இருந்தது, மனசுக்குள் பேசிக்கொண்டே கண்களை அலைய விட்டான்.
ஆ..அதோ சிக்கி விட்டாள். இந்த கூட்டத்தின் இரண்டாவது வரிசையில் உட்கார்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவ்வளவுதான் இவன் மனம் அவனின் சொற்பொழிவையும் மீறி முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்தது.
தன்னை அடையாளம் கண்டு கொண்டான் என்பதை அவன் முகத்தில் தோன்றிய புன்னகையை கொண்டே அடையாளம் கண்டு கொண்ட பிரவீணாவின் முகத்திலும் மகிழ்ச்சி அரும்பியது.
நிகழ்ச்சி முடிந்து அனைவரின் கை குலுக்கல்களையும் ஏற்றுக்கொண்டாலும், அந்த பெண்ணை கண்கள் தேடியது. அவ்வளவு கூட்டத்திலும் மனதுக்குள் அருகில் யாரோ அருகில் நிற்பது தெரிய திரும்பி பார்த்தவன் பிரவீணாவின் முகம் அருகில் தெரிய மனம் குப்பென்று சந்தோசத்தில் திக்குமுக்காடியதை தவிர்க்க முகத்தை தாழ்த்திக்கொண்டான்.
இப்ப பதினோறாவது முறையா உங்களை பக்கத்துல பாத்து இரசிக்கிறேன். மெதுவாய் அவன் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னாள். இப்படி ஒரு இரசிகையா? அவனையே சுற்றி சுற்றி வந்திருக்கிறாள், இவன் அனைவரிடமும் விடை பெற்று அங்கிருந்து நடந்தாலும் இவள் தன்னை தொடர்ந்து வருகிறாளா என்று ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டான். அவன் நினைவு உண்மைதான் என்பது போல் பிரவீணா அவன் அருகே ஒட்டி வந்து கொண்டிருந்தாள்.
கார் அருகே வந்தவன் சற்று நின்று நீங்கள்…என்று இழுக்க நான் கால் டாக்சியிலதான் வந்தேன், நீங்க போங்க, நான் டாக்சியில போயிடறேன். நோ..நோ..நீங்கள் என் கூடவே வாங்க, உங்களை எங்க இறக்கி விடணுமோ அங்க இறக்கி விட்டுடறேன். அவள் சற்று தயங்கியவள் வேண்டாம் உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்? இழுத்தாள். இதிலென்ன சிரமம், ஏறுங்கள் முன் கதவை திறந்து விட்டான். இவள் ஏறியதும் மறுபுறம் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
நீங்கள் ஊர் ஊராய் சொற்பொழிவுக்கு செல்கிறீர்கள், அங்கெல்லாம் உங்கள் காரை கொண்டு வந்து விடுவீர்களா? ஆமாம், கூடுமானவரை என் காரைத்தான்
எல்லா இடங்களுக்கு எடுத்து செல்வேன். “ஹோட்டல் குரு” மாலை வேலையிலும் நியான் விளக்குகளால் பளிச்சிட ஒரு காப்பி சாபிட்டு விட்டு போகலாமா? அவனின் கேள்வியில் தொற்றி நின்ற ஆர்வம் இவளை பதில் பேச விடாமல் செய்ய வண்டி ஒதுக்குப்புறத்தை தேடி ஓடியது.
பத்து நிமிடத்தில் சாப்பிட்டு வர வேண்டிய காப்பியை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசி பேசி எப்படியோ குடித்து விட்டு வந்தனர். அவர்கள் காப்பி குடித்து முடிப்பதற்குள் இவள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் துணை மேலாளராக பணி புரிவதையும், இன்னும் திருமணம் ஆகாமல் தனித்து வாழ்வதையும், இந்த மாதிரி சொற்பொழிவுகளை எங்கிருந்தாலும் கேட்பதாகவும் சொல்லி முடித்திருந்தாள்.
சுகேஷூம், கோவையில் தான் பிறப்பிலேயே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் என்பதையும், சொற்பொழிவு என்பது ஒரு ஹாபியாக செய்து கொண்டிருப்பதாகவும், அதில் வரும் வருமானத்தை ஏதாவது நல்ல காரியத்துக்கு வழங்கி விடுவதாகவும், சொன்னான். அப்பா, அம்மா இல்லாமல் தனித்து இருப்பதாக தெரிவித்தான்.
பிரவீணா அவனுடன் காரில் ஏறவில்லை. நீங்கள் போங்கள், நான் அவசரமாய் என் பிரண்டை பாக்க போகணும் என்று சொல்ல பிரண்டா? இவனின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே சொன்னாள் கவலைப்படாதீர்கள், அவள் பெயர் யாழினி, இங்கு ஒரு காலேஜில் புரொபசராக இருக்கிறாள். சுகேஷுக்கு வெட்கமாகி விட்டது, மீண்டும் பாக்க முடியுமா? சொற்பொழிவில் வேண்டாம், அடிக்கடி..அவனின் குரலில் ஏக்கம்.
கண்டிப்பாய்..அவள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து பாதையை கடந்து அந்தப்புறம் ஆட்டோ..ஆட்டோ என்று ஒரு ஆட்டோவை விரட்டிக்கொண்டு சென்றாள்.
அவள் செல்வதை இரசித்து பார்த்துக்கொண்டிருந்தவன் மனதுக்குள் இவளை இணைத்து பார்த்தான். வேண்டாம் மனதை அலைய விடக்கூடாது. ஏற்கனவே எனக்கும் பெண்களுக்கும் ஒத்து வர மாட்டேனெங்கிறது. வாழ்க்கை இப்படியே போகட்டும். பழைய வாழ்க்கையை மறந்து இப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம். மீண்டும் ஒரு பெண் வலையில்….வேண்டாம், கண்களை மூடி உட்கார்ந்தாலும் அந்த பெண் மீண்டும் மனதுக்குள் உட்காருவதை ஏதும் செய்ய இயலாதவனாக அமர்ந்திருந்தான்.
பின் புறம் ஹாரன் சத்தம் கேட்கவும் சட்டென விழிப்பு வரப்பெற்றவன், காரை எடுத்து சாலைக்கு கொண்டு வந்து தங்கியிருந்த ஓட்டலுக்கு விரைவு படுத்தினான்.
அடுத்தடுத்து பல ஊர்களுக்கு அழைப்பு வந்து சொற்பொழிவு செய்தாலும் அவன் கண்கள் அந்த கூட்டத்துக்குள் பிரவீணாவை தேடுவதிலேயே இருந்தது.ஆனால் அவளை கண்டு பிடிக்கவே முடியவில்லை. சே என்னவாயிற்று எனக்கு, இனி பெண்களே வேண்டாம் என்று மனசு நினைத்தாலும் இவளை தேடுவதிலேயே மனம் செல்கிறதே? அலைபாயும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவள் கொடுத்திருந்த செல்லில் பல முறை கூப்பிட்டும் வெற்று சத்தம் மட்டுமே கேட்டது. என்னவாயிற்று அவளுக்கு? ஏன் போனை எடுக்க மாட்டெனெங்கிறாள்?
தவித்தான்.
அவனுடைய பேச்சை கேட்பவர்கள் இவன் இப்படி அந்த பெண்ணின் மீது காதலில் உருகிக்கொண்டிருப்பதை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். அப்படி
வெளியில் காண்பித்துக்கொண்டாலும் மனம் என்னவோ பிரவீணா, பிரவீணா என்று அரற்றிக்கொண்டே இருந்தது.
ஏற்கனவே ஒரு பெண்ணால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் அடுத்த பெண்ணிடம் சிக்கிக்கொள்ளும் தன்னுடைய நிலையை நினைத்து அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. என்னை உதறித்தள்ளி சென்ற காயத்ரியின் முகம் இப்பொழுது அவனை பரிகசிப்பது போல தோன்றியது.காயத்ரி கூட இதே போல்தான் தன்னையே சுற்றி சுற்றி வந்தாள். அவளிடம் மனம் சென்ற பின்னால் அவளில்லாமல் தான் இல்லை என்ற நிலையில் இருந்த போது அவள் அவனை எடுதெறிந்து பேசியது ஞாபகம் வந்தது.
அடுத்த மாதம் அமெரிக்காவில் யூனிவர்சிடியில் எம்.பி.ஏ ஜாயின் பண்ணப்போறேன். மெதுவாய் சொன்னவளிடம் இப்ப எதுக்கு திடீருன்னு எம்பிஏ போறேங்கறே?அதுவும் அமெரிக்காவுக்கு? என்னைய விட்டுட்டு.
உங்களை விட்டுட்டா? ஹேய் இது ஏற்கனவே போட்டு வச்ச புரோகிராம்தான்,
அப்ப நம்ம கல்யாணம்?
கல்யாணத்துக்கு என்ன அவசரம்? அதை அப்புறம் பாத்துக்கலாம்.
விட்டேத்தியாய் சொன்னவளை உறுத்து பார்த்தவன்
என்ன விளையாடறியா?
குரல் கோபமாய் கேட்டாலும் அதில் அதிர்ச்சிதான் ஒலித்தது.
அவள் அதை கவனித்ததாக தெரியவில்லை.இல்லை தெரிந்தும் தெரியாதது போல் இருந்தாளா என்றும் புரியவில்லை. சுகேஷ் முதல்ல என் லட்சியம், அமெரிக்காவுல எம்பிஏ முடிக்கணும்கறது, அதுக்கப்புறம்தான் இந்த கல்யாணம், அது இதுவெல்லாம். அவளின் விட்டேற்றியான பேச்சு, இவனுக்கு கடுங்கோபத்தை வரவழைத்தது. இது வரைக்கும் என் கூட பழகிட்டு இருக்கறப்ப நான் அமெரிக்காவுக்கு படிக்க போறேன்னு சொல்லியிருக்கலாமுல்ல, திடீருன்னு வந்து அமெரிக்காவுக்கு போறேன்னு சொல்லிட்டு, கேட்டா லட்சியம், அது இதுன்னு சொல்லிகிட்டு இருக்கறே.
மறுபடி சொல்றேன் நான் அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்புறேன், மத்தது எல்லாம் அப்புறம்தான்.
இவனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்தது என்று தெரியவில்லை. சே..நீ எல்லாம் வார்த்தைகளை சரமாரியாக வெளியிட்டான். முகம் இரத்தமாய் சிவந்து ஆத்திரத்துடன் வந்தவன், அதற்கு பின் அவளை தொடர்பு கொள்ள மனம் எண்ணினாலும், பிடிவாதமாய் மனதை இறுக்கிக்கொண்டான்.
தனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள், படிப்பு இல்லையா?வசதி இல்லையா? அவனிடம் இல்லாதது, பெற்றோர்கள் மட்டுமே. சிறு வயதில் அவர்களை விபத்தில் பலி கொடுத்து தாத்தா பாட்டியிடம் வளர்ந்து அவர்களும் காலமாகி, அம்போவென தனிமையில் இருந்த பொழுதுதான், காயத்ரியின் அறிமுகம் அவனை இன்னொரு உலகத்தை காட்டி வசீகரித்தது. ஆனால் கடைசியில் அவளுக்கும் தான் ஒரு விளையாட்டு பொருளாகிவிட்டிருக்கிறோம். நினைக்க நினைக்க மனசு கொதித்தது. இதிலிருந்து மீளவே அவன் படாதபாடு பட்டான். அதை எல்லாம் மீறி இந்த ஒரு வருடத்துக்குள் அவன் மறுபடி தன்னை நிலை நிறுத்தும்பொழுது மீண்டும் பிரவீணாவின் வடிவில் மாட்டிக்கொண்டான்.
செல்போன் சத்தம் அவன் காதை துளைத்தது. போனை காதில் வைத்தவனுக்கு
அப்படி ஒரு பரபரப்பு ஏற்பட்டது. பிரவீணாவின் குரல்..ஹலோ..குரலில் வருத்தம் இழையோடியதாக புலப்பட்டது.
என்ன ஆச்சு பிரவீணா? உங்கிட்ட இருந்து போனே காணோம், உன்னை மீட்டிங்குலயும் பாக்கவே முடிலை, இவன் குரலில் தென்பட்ட ஆதங்கம், அவளுக்கு புரிய வேண்டும் என்று மனசு பரபரத்தது.
சாரி சுகேஷ், இங்க கொஞ்சம் வேலை ஜாஸ்தி. என்னதான் வேலை ஜாஸ்தினாலும் ஒரு போனாவது பண்ணியிருக்கலாமுல்லை, குரலில் ஆற்றாமை.
சாரி சுகேஷ், நீங்க எங்க வீட்டுக்கு ஒரு முறை வந்துட்டு போக முடியுமா?
கண்டிப்பாய்..அவன் குரல் பரபரத்தது? சென்னையில் தன்னுடைய விலாசத்தை அவனுக்கு தெரிவித்தாள். இவன் யோசிக்கவே இல்லை, இரவே தன்னுடைய காரில் சென்னை கிளம்பி விட்டான்.
விடியற்காலையில் வந்து சேர்ந்த சுகேஷ், தான் வழக்கமாக தங்கும் ஹோட்டலில் அறை எடுத்து தயாராக்கிக்கொண்டான்.அவன் மனம் பிரவீணா எத்றகு வர சொல்லியிருப்பாள்? என்ற எண்ணத்திலேயே சுழன்றது.
பிரவீணா கொடுத்திருந்த முகவரியில் காரை கொண்டு போய் நிறுத்தியவன் வாசலில் பிரவீணா நின்று கொண்டிருப்பதை பார்த்தவன் உள்ளம் மகிழ்ந்தாலும் பிரவீணாவின் முகம் அதை பிரதிபலிக்காததை கண்டு மனம் குழம்பினான்.
வாருங்கள் சுகேஷ் அவள் குரலில் ஒரு மரியாதை தெரிந்தது, உள்ளே அழைத்து சென்றாள். வீடு நல்ல வசதியுடன் இருந்தது.வீட்டுக்குள்ளிருந்த அலங்காரங்களும் அதை நிருபித்தன.
மெளனமாய் உள்ளே நடந்தவர்கள் ஒரு அறை வாசலில் நின்ற பிரவீணா, அவனிடம் நீங்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள், சொல்லி ஒதுங்கி நின்று கொண்டாள்.
சுகேஷ் ஒன்றும் புரியாதவனாய் அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் ஒரு பெண் நோயாளி படுத்திருப்பதை பார்த்தான். அதுவும் போட்டிருந்த நைட்டியை வைத்துத்தான் பெண் என்றே முடிவு செய்ய முடிந்தது. முகம் அடையாளம் காண முடியாத அளவு இருந்தது. ஆனால் இவளை பார்த்திருக்கிறோம் என்று உள்ளுணர்வு சொல்லியது.
என்ன சுகேஷ் அடையாளம் தெரியலையா? பின்னாலிருந்து பிரவீணாவின் குரல் கேட்கவும் எங்கோ பார்த்த அடையாளம் தெரிகிறது, முணங்கினான்.
“காயத்ரி”..மெல்ல நோயாளி அருகில் சென்று பிரவீணா கூப்பிடவும் சுகேஷ் அதிர்ச்சி ஆகி விட்டான். காயத்ரியா? என் காயத்ரியா? அவளா இவ்வளவு மோசமாய் படுத்திருக்கிறாள்?
காயத்ரி கொஞ்சம் கண்ணை திறந்து பார்…முகம் அருகே சென்று பிரவீணா சொல்லிக்கொண்டிருந்தாள். கஷ்டப்பட்டு கண்ணை திறந்து பார்த்த காயத்ரியிடம் சுகேஷை அழைத்து இங்க பாரு உன் சுகேஷை கூட்டிகிட்டு வந்திருக்கே, பாரு..
ஹூஹூம் மெல்ல அவனை பார்த்து மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் காயத்ரி.
கையில் காப்பி கோப்பையுடன் எதிரில் உட்கார்ந்து காயத்ரியை பற்றி சொல்லிக்கொண்டிருந்த பிரவீணாவை பார்த்துக்கொண்டு உறைந்து போய் உட்கார்ந்திருந்தான் சுகேஷ்.
காயத்ரி எனக்கு “கசின்”. அவ உங்களை ரொம்ப விரும்பினா. மூச்சுக்கு முன்னூறு தரம் உங்களை பத்தித்தான் என் கிட்டே போன்ல பேசுவா. இரண்டு வருசமாவே அவளுக்கு புற்று நோய் இருந்திருக்கணும். ஆனா ஒண்ணுமே தெரியாம இருந்துட்டா. திடீருன்னு அவளுக்கு ரொம்ப உடம்பு முடியாம போனப்ப அவளுக்கு இந்த வியாதி இருக்கலாமோங்கற சந்தேகத்துல .மெடிகல் டெஸ்ட் எடுத்து பாத்துருக்காங்க. அப்பத்தான் கூடிய சீக்கிரம் அவ காலம் முடியப்போகுதுன்னு தெரிஞ்சிருக்கு.
அவகிட்டே ஒரு குணம் இருக்கு. பிறர் தன்னை பார்த்து பரிதாபப்படறைதை எந்த காலத்துலயும் விரும்ப மாட்டா, அது நீங்களா இருந்தா கூட. அதனால முதல்ல உங்க வெறுப்பை சம்பாதிச்சா, அது மட்டுமில்லாம உங்க கண் பார்வையை விட்டு நேரா இங்க வந்துட்டா. நான் எவ்வளவோ சொல்லியும் உங்களை மறுபடி சந்திச்சு
தன்னுடைய பரிதாப தோற்றத்தை பாக்கறதை அவ விரும்பலை.ஆனாலும் அவ மனசுக்குள்ள உங்களையே நினைச்சுகிட்டே இருந்தா.
ஒரு கட்டத்துல நான் போகறதுக்குள்ள உங்க முகத்தை பாத்துடணும்னு ஒரு தடவை எங்கிட்டே புலம்பினா. நான் அவளுக்காகத்தான் உங்களோட கவனத்தை ஈர்த்து உங்களை இங்க வர வைச்சேன்.
நீங்க நினைக்கலாம், அதுக்கு காயத்ரியோட நிலைமையை சொல்லி இருக்கலாமில்லை அப்படீன்னு. இல்லே சார்..எனக்கு அவ தன்மானத்தை விட்டுக்கொடுக்க தயாரா இல்லை. இப்பக்கூட நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்து காண்பிச்சது நீங்க அவளை ஒரு துரோகியாகவே நினைச்சுடக்கூடாது அப்படீங்கற எண்ணத்துலதான்.
நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. குளிரூட்டப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தான் சுகேஷ். “காலம் மட்டுமே நம் ஒவ்வொருவரையும் புரிந்து கொண்டிருக்கிறது.நமக்கு எது நடக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை நடத்திக்கொண்டிருக்கிறது. நம்மால்தான் என்று நினைப்பது எதுவுமே நம்மால் அல்ல. காலம் மட்டுமே நம்மை பின்புறத்திலிருந்து தள்ளிக் கொண்டே சென்று இறுதியில் முடித்து உடலையும் அதன் பின் நினைவுகளையும் கரைய வைத்து விடுகிறது.
. “நான்” “என்” என்ற அகங்காரங்களை அர்த்தமில்லாமல் செய்து விடுகிறது.
வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி