அன்றைய காலைத் தபாலில் ஒரே ஒரு கடிதந்தான் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். விக்கிரமசிங்க புரத்திலிருந்து வீரராகவன் எழுதியிருந்தான். வழக்கமான குசலப்பிரச்னத்துக்கு அப்புறம் கீழ்க்கண்ட விவரம் அதில் எழுதப்பட்டிருந்தது.
“வருகிற ஆடி அமாவாசைக்குப் பாணதீர்த்தம் போகலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். நீங்களும் அம்மாவை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. கட்டாயம் நாலு நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வாருங்கள்”
“இந்தா… உன்னைத்தானே?… தூக்கமா? உன் பிள்ளையாண்டான் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து கடுதாசி எழுதியிருக்கிறான்.”
அடுக்களைக் காரியத்தை முடித்த அலுப்புடன் ரேழி வாசற்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த அவள் எழுதியிருந்தாள்.
“ஆடி அமாவாசைக்குப் பாணதீர்த்தம் போகிறார்களாம். உன்னையும் என்னையும் புறப்பட்டு வரச்சொல்லி எழுதியிருக்கிறான்.”
“நாம் அவசியம் அங்கே போகணும்!”
“பாணதீர்த்தம் பார்க்க வேண்டியதுதான். அதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இராமேசுவரம், குற்றாலம், கொடைக்கானல், உதகமண்டலம் இந்த மாதிரி வேறு எங்கேயாவது போகலாமே? பாணதீர்த்தத்துக்கு எதற்கு? அங்கே போய்த் திரும்புவது ரொம்பக் கஷ்டம். வேண்டாம்.”
“நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன். நான்கு வருஷங்களாக நீங்கள் இப்படித்தான் தட்டிக் கழிக்கிறீர்கள். பாணதீர்த்தம்’ என்ற பெயரை எடுத்தாலே உங்கள் மனம் சம்மதிக்கிறதில்லை .”
“சரி, சரி, சண்டைக்குக் கிளம்பிவிடாதே, போவதா வேண்டாமா என்று நாளைக்குள்ளே முடிவு செய்யலாம். அப்புறம் வீரராகவனுக்குக் கடிதம் எழுதுவோம்.” சொல்லிவிட்டு என் அறையை நோக்கி நடந்தேன்.
பெட்டிக்குள் நாற்பது வருஷ காலம் நாள் தவறாமல் எழுதிய டைரிகள் குவிந்து கிடந்தன. அவை வெறும் டைரிகளா? அல்ல. எழுபதாவது வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஒரு கிழவன் கடந்த காலத்தில் கண்ட அனுபவங்கள்.
டைரிகள் எல்லாவற்றையும் மேலும் கீழுமாகப் புரட்டிய போது 1929வது வருஷத்து டைரி மேலே வந்தது. உத்தியோக வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவை உண்டாக்கியதும், அந்த முரட்டு உத்தியோகத்தையே விட்டு விடுவதற்குக் காரணமாயிருந்ததும் 1929ம் வருஷம். நினைவுப் புண்ணுக்கு மருந்து ஏது?
ஜனவரி 1929
அம்பாசமுத்திரம் ரூரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகிய புதிது. பழைய சப் இன்ஸ்பெக்டர் அரைகுறையாக வைத்துவிட்டுப் போயிருந்த கேஸ்களின் பைல்களையெல்லாம் புரட்டினேன். தேச சுதந்திரப் போராட்டத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுப் பல குற்றங்கள் செய்தவனும் சர்க்காருக்கு எதிராகப் பல சதிச் செயல்களில் தலைமை தாங்கி நடத்தியவனுமான ஊர்க்காடு ரங்கநாதன் என்னும் இளைஞனைப் பற்றிய ஸ்டேட்மெண்டுகள் அதிகமாக இருந்தன. தலைமறைவாகப் பொதிகைமலைக் காடுகளில் திரிந்து வரும் அந்த ரங்கநாதனை முன்பிருந்த இன்ஸ்பெக்டர் எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரங்கநாதனோடு புரட்சி இயக்கத்தில் சம்பந்தப்பட்டிருந்த பத்துப் பன்னிரண்டு வாலிபர்களின் பெயரும் ‘காத்தியாயினி’ என்ற ஒரு பெண்ணின் பெயரும் ஸ்டேட்மெண்டிலும் பைல்களிலும் இருந்தன.
அப்போது திருநெல்வேலியில் சர்க்கிளாக இருந்தவர் ஒரு ஆங்கிலோ இந்தியர். பாளையங்கோட்டையிலிருந்து என்னை அம்பாசமுத்திரத்துக்கு மாற்றி உத்தரவு போட்டது அவர்தான். நான் மேற்படி ரங்கநாதனையும் அவன் கோஷ்டியைச் சேர்ந்த தேச பக்தர்களையும் சீக்கிரம் எப்படியாவது மடக்கிப் பிடித்துப் போட்டுவிடுவேன் என்று அவருக்கு அளவற்ற நம்பிக்கை.
பிப்ரவரி
மாதம் ஒன்று கழிந்துவிட்டது. இன்னும் உருப்படியாக ஒரு காரியமும் செய்யவில்லை. நாலைந்து நாட்களுக்கு முன் ரங்கநாதன் பிறந்த ஊராகிய ஊர்க்காட்டுக்குப் போய்ச் சில விவரங்களைச் சேகரித்துக்கொண்டு வந்தேன்! ‘காத்தியாயினி’ என்ற பெண்ணைப் பற்றியும் சில முக்கியமான செய்திகள் அங்கே தெரிய வந்தன.
அக்காலத்தில் வண்ணார் பேட்டையில் நாகராஜ சர்மா என்று ஒரு வக்கீல் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு பெண் காத்தியாயினி . தாயில்லாக் குழந்தை பெண்ணுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்து வளர்த்தார். சாதாரணமாக ஹைஸ்கூல் படிப்புக்கே பெண்களை அனுப்புவதற்குத் தயங்கும் காலம் அது, ஆனால் நாகராஜ சர்மாவோ ஹைஸ்கூல் படிப்பு முடிந்ததோடு திருப்தியுறாமல் காத்தியாயினிகைக் காலேஜிலும் சேர்த்துவிட்டார்.
ரங்கநாதனும் காத்தியாயினியும் ஒரே வகுப்பில் ஒரே பிரிவில் படித்து வந்தனர். காத்தியாயினிக்கு அவன் பிரசங்கங்கள் என்றால் உயிர். திலகருடைய கொள்கைகளில் அசைக்க முடியாத ஆர்வம் அவளுக்கு உண்டு
ஊர்க்காட்டில் இருந்த ரங்கநாதனின் தாயார் நிலபுலன்களிலிருந்து வரும் குத்தகை வருமானத்தை மாதம் தவறாமல் ஒரு குறிப்பிட்ட தொகை வீதம் அவனுடைய படிப்புச் செலவுக்கு அனுப்புவாள். ரங்கநாதனின் தகப்பனார் அவன் சிறுவனாக இருந்தபோதே காலமாகிவிட்டார். ‘ரங்கநாதனின் நடவடிக்கைகளால் அவன் படிப்புக் கெட்டுப் போகும்’ என்ற விஷயம் தெரிந்த இரண்டொருவர் அவன் தாயிடம் புகார் செய்தனர். ஆனால் ‘கைக்கு மீறி வளர்ந்துவிட்ட பிள்ளையை எப்படிக் கண்டிப்பது?’ என்று பேசாமல் விட்டுவிட்டாள் அந்த அம்மாள்.
அங்கே நாகராஜ சர்மாவின் நிலையும் அப்படித்தான் இருந்தது. இளமையிலிருந்தே செல்லமாக வளர்ந்த பெண் கண்டிப்புக்கு அடங்கவில்லை. நாலு வார்த்தை இரைந்து பேசினால் கண்ணைக் கசக்கிக் கொண்டு அழ ஆரம்பித்துவிடுகிறாள். வெள்ளை அரசாங்கத்தின் தயவில் நடந்து வந்த கல்லூரியில் எவ்வளவு நாட்கள்தான் இப்படிப்பட்ட மாணவர்களை வைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள் திடீரென்று ரங்கநாதனும் அவனுக்கு ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட ஏழெட்டு மாணவர்களும் காத்தியாயினியும் காலேஜிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதாகப் பிரின்ஸிபல் அறிவித்தார்.
நாகராஜசர்மா வழக்கத்தை மீறிப் பெண்ணைக் கண்டித்தார். அவளை வீட்டை விட்டு வெளியேறாமல் கண்காணிக்கத் தொடங்கினார்.
ரங்கநாதனோ சஸ்பெண்டு ஆனபின்னும் ஊருக்குப் போகவில்லை. அவனும் கோஷ்டியாருமாகச் சேர்ந்து கொண்டு கைலாசபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி அதிலிருந்து இயக்க வேலைகளில் ஈடுபட்டனர்.
ஊர்க்காட்டில் முக்கியமாக நான் விசாரித்தறிந்து கொண்ட விவரங்கள் இவ்வளவுதான்.
மார்ச் – ஏப்ரல் – மே
அப்பப்பா! இந்த மூன்று மாதங்களிலும் நான் அலைந்த அலைச்சல் சொல்லி மாளாது. பாளையங்கோட்டைக்கும் தூத்துக்குடிக்கும் பாபநாசத்துக்கும் அலைந்தேன்.
தன்னைப் பெரிய குற்றவாளியாகச் சர்க்கார் கருதும்படியான வேறோர் காரியத்தையும் ரங்கநாதன் செய்தான். ஒரு விழாவுக்காகத் திருநெல்வேலி கலெக்டர் பாளையங்கோட்டைக்கு விஜயம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. கலெக்டருடைய கார் தாமிரபரணியில் சுலோசனமுதலியார் பாலத்தைக் கடக்கின்ற சமயத்திலே பாலத்தை வெடிகுண்டுகள் மூலம் தகர்க்க ரங்கநாதன் கோஷ்டியார் சதித் திட்டமிட்டிருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் திட்டம் நிறைவேறுவதற்கு முன்பு இரகசியங்கள் வெளியாகிவிட்டன.
திட்டம் வெளியான அன்று ரங்கநாதன் கோஷ்டியார் தலைமறைவாக ஒளிய இடம் தேடித் திருநெல்வேலியிலிருந்து ஓட்டம் பிடித்தனர். அதே தினம் வண்ணார்பேட்டையில் காத்தியாயினி காணாமற் போய்விட்டாள்.
சர்மா பதறிப்போய் ‘பெண்ணைக் காணோம்’ என்று போலீசுக்கு ரிப்போர்ட் செய்தார். ‘ரங்கநாதன் கோஷ்டி ஊர் எல்லையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்’ என்ற செய்தியும் போலீஸாருக்குத் தெரிந்தது. இரண்டையும் சம்பந்தப்படுத்தி யோசித்த போலீஸார் சர்மாவை அழைத்து ‘உம்முடைய பெண்ணுக்கும் ரங்கநாதனுக்கும் தொடர்பு உண்டா?’ என்று விசாரித்தனர். சர்மா காலேஜில் படிக்கும் போது பழக்கம் உண்டு’ என்று கூறவே காத்தியாயினி ரங்கநாதன் கோஷ்டியோடு சென்றிருக்க வேண்டும் என்று அனுமானித்தனர்.
இதன் பிறகு ஆறு மாதங்கள் போலீஸாருக்கு ஒரு தகவலும் தெரியவில்லை . பெண், போய்விட்டாளே என்ற ஏக்கத்தினால் நாகராஜசர்மா மனமுடைந்து உயிரைவிட்டார்.
ஜுன்-ஜுலை
ஜுன் மாதம் மூன்றாந்தேதி தூத்துக்குடியில் சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சப் போவதாகத் துண்டுப் பிரசுரங்கள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டிருந்தன. தகவல் எனக்கு எட்டிவிட்டது.
இரண்டாந்தேதி சாயங்காலமே பாளையங்கோட்டை சென்று சர்க்கிளிடம் கூறினேன். ‘மப்டி’யில் நாலைந்து போலீஸ்காரர்களுடன் என்னையே தூத்துக்குடிக்கு அனுப்பினார்.
தூத்துக்குடிக்கும் மணப்பாட்டுக்கும் நடுவே ஜனநடமாட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் உப்புக் காய்ச்ச ஏற்பாடாகியிருந்தது. நானும் போலீஸ்காரர்களும் அந்த இடத்துக்குப் போனபோது உடைந்த பானைகளும் இடிந்த அடுப்புகளும் தான் எங்களை வரவேற்றன.
விசாரித்ததில் இரண்டாந்தேதி சாயங்காலமே யாரோ பத்துப் பன்னிரண்டு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் வந்து உப்புக் காய்ச்சிவிட்டுப் போய்விட்டதாக அக்கம் பக்கத்துக் கிராமத்தார்கள் கூறினர்.
மேலும் புலன் விசாரித்ததில், திருநெல்வேலியிலிருந்து தப்பி ஓடிய மறுமாதமே காத்தியாயினியும் ரங்கநாதனும் பாபநாசம் சிவன் கோவிலில் கலியாணம் செய்து கொண்டார்கள். அவர்கள் தம்பதிகளாகி ஒன்றே கால் வருஷத்துக்கு மேல் ஆகப் போகிறது. ரங்கநாதன் கோஷ்டியார் பொதிகை மலையில் பாணதீர்த்தத்துக்கு அருகில் ஒரு ஆசிரமம் மாதிரி அமைத்துக் கொண்டு அங்கே அஞ்ஞாத வாசம் செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி மாறுவேடங்களில் ஊருக்குள் வந்து தேசியப் போராட்டங்களுக்கும் பிரசங்கங்களுக்கும் தூண்டுகிறார்கள். தூத்துக்குடியில் உப்புக் காய்ச்சிவிட்டுப் போனது அவர்கள்தான் என்று தெரியவந்தது.
அதோடு, இரண்டு மூன்று மாசமாகக் காத்தியாயினி ஆசிரமத்தை விட்டு வெளியேறுவது இல்லையென்றும் அவள் வயிறும் பிள்ளையுமாக நிறைமாதமாக இருக்கிறாள் என்றும் கூடத் தெரியவந்தன.
போராட்டத்துக்கும் அஞ்ஞாத வாசத்துக்கும் இடையே தாம்பத்திய உறவும் வளர்ந்து கனிந்திருப்பதை எண்ணும் போது எனக்கு வியப்பாக இருந்தது.
“சரி! உங்களுக்குத் தேவையான விவரங்களை எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டாயிற்று. இனிமேல் தேடிப் பிடித்து உள்ளே தள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று எனக்கு உத்தரவிட்டார் சர்க்கிள்.
ஆகஸ்டு – செப்டம்பர்
இந்த இரண்டு மாதங்களில் உத்தியோகக் காரியங்களில் இருந்த கவலையைவிட வீட்டுக்கவலை அதிகமாக இருந்தது. அப்போது என் மனைவிக்குப் பிரசவசமயம். இது அவளுக்கு மூன்றாவது பிரசவம். முதல் இரண்டும் கசப்பு நிறைந்த அனுபவங்களாக முடிந்துவிட்டன. தலைச்சன் குழந்தை வயிற்றிலேயே இறந்து பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறந்த மறுநாள் இறந்தது. இந்த இரு ஏமாற்றங்களால் அதிர்ச்சியும், பயமும் கொண்டிருந்தாள் அவள். அம்பாசமுத்திரம் எங்களுக்குப் புதிய ஊர். என்னையும், அவளையும், வேலைக்காரியாக நியமிக்கப்பட்டிருந்த ஒரு வயதான கிழவியையும் தவிர ஒத்தாசைக்கு வேறு ஆட்கள் இல்லை. நானோ அடிக்கடி வெளியூருக்கும் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தேன். வீட்டில் தங்கி அவள் மனத்தைத் தேற்றவோ ஆறுதல் கூறவோ எனக்கு நேரமில்லை.
“இந்தாருங்கள் ! எவன் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் உப்பையோ புளியையோ காய்ச்சித் தொலைத்துப் போகட்டும். நீங்கள் பேசாமல் மூன்று மாதத்துக்கு லீவு போடுங்கோ. திருநெல்வேலிக்குப் போய்விடலாம். எனக்கென்னமோ மாசம் நெருங்க நெருங்கப் பயமாக இருக்கிறது” என்றாள் அவள். எனக்கு அவள் சொல்வது சரியென்றே தென்பட்டது. இந்த அம்பாசமுத்திரத்தில் நமக்கு வேண்டிய உறவினர்களும் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடலாம் என்றால், பிரசவ ஆஸ்பத்திரியே கிடையாது. பேசாமல் திருநெல்வேலிக்குப்போய்விட்டால் வீட்டில் வைத்துக் கொண்டாலும், ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும், சொந்தக்காரர்கள் ஒத்தாசை கிடைக்கும். முந்தின இரண்டும்தான் அப்படியாகிவிட்டது. இந்தப் பிரசவத்திலேயாவது பெற்றுப் பிழைத்துத் தேற வேண்டுமே என்ற கவலை எனக்கு.
இதையெல்லாம் நினைத்துத்தான் சர்க்கிளிடம் மூன்று மாதங்கள் லீவு கேட்க எண்ணியிருந்தேன். ஆனால் நிலைமை லீவைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவே இடம் கொடுக்கவில்லை. கிடைத்திருந்த செய்திகளால் நான் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். நான் பாளையங்கோட்டையிலிருந்து திரும்பியபோது லீவு பெற்று வந்திருப்பேன் என்று அவள் ஆவலோடு
எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள், “என்ன, லீவு கிடைச்சுதா?” “சும்மா நச்சரிக்காதே. இப்போது லீவு கேட்கவே வழியில்லை. கேட்டாலும் கிடைக்காது. பிரசவத்துக்கு இங்கேதான்!” என்று எரிந்து விழுவது போல் பதில் சொன்னேன்.
அவளுக்கு அழுகை வந்துவிட்டது. விசித்துக்கொண்டே விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள். என் கோபம் மாறியது.
“சே! இதென்ன? அசடு மாதிரி இப்படியா அழுவது? என்ன செய்யலாம்? நமக்கு வாய்த்த உத்தியோகம் அப்படி இருக்கிறதே!” என்று கூறி அவளைச் சமாதானப்படுத்தினேன்.
“இந்தத் தடவையாவது நான் முழுசா உயிரோடு பெத்துப் பிழைக்கணுமே என்று உங்களுக்கு அக்கறை இருந்தால்தானே? அசம்பாவிதமாக ஏதாவது நடந்தால் அப்புறம் நான் பிழைக்க எழுந்திருப்பேன் என்று கனவிலேகூட நினைக்காதீங்கோ – அவன் குரலில் ஒரு அழுத்தம் ஒலித்தது. மேலே வளர்த்தாமல் நான் பேச்சை நிறுத்தினேன்.
அன்று மலைமேல் போய் வருவதற்குத் திட்டமிட்டிருந்தோம். இரண்டு நாட்களாகப் பாபநாசத்தில் முகாம் போட்டிருந்தேன். அக்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் அவுட் ஸ்டேஷனும், அதில் ஒரு ஏட்டும் சில கான்ஸ்டபிள்களுமே உண்டு. அவர்களும் எனக்கு ஒத்தாசையாகப் பாபநாசத்துக்கு வந்திருந்தார்கள். அன்று காலை எல்லோரும் பதினோரு மணி சுமாருக்குக் கலியாண தீர்த்தத்தின் ஓரமாகவே சென்று பாண தீர்த்தத்தை அடைவதென்று தீர்மானம் செய்திருந்தோம்.
பாபநாசத்தில் நாங்கள் தங்கியிருந்த இடம் லோக்கல் பண்டு ஆஸ்பத்திரிக்கு எதிர்த்தாற் போலிருந்தது. பழைய காலத்துப் பாணியில் கட்டப்பட்ட முசாபரி பங்களா அது. பத்தேகால் மணி சுமாருக்கு முசாபரி பங்களாவின் வாசலுக்கு வந்து வெளியே சென்றிருந்த கான்ஸ்டபிள்கள் வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். அப்போது ஒரு ஆள் மீது என் பார்வை நிலைத்தது. உற்றுப் பார்த்தேன். அவனும் என்னைப் பார்த்தான். நான் போலீஸ் உடையிலிருந்தேன்.
அக்டோபர் – நவம்பர்
போலி மீசை ஆளை மாற்றிக் காட்டினாலும் அவன் ரங்கநாதன் தான் என்பதை நான் உடனே தெரிந்து கொண்டு விட்டேன். அவன் கையில் ஏதோ ஒரு மருந்துப்புட்டி வேறு இருந்தது.
உடனே உள்ளே சென்று சாதாரண உடையிலிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களை அனுப்பினேன். ஐந்தே நிமிஷங்களில் கான்ஸ்டபிள்கள் அவனை உள்ளே இழுத்துக்கொண்டு வந்துவிட்டனர். ஏறக்குறைய இரண்டரை வருஷங்களாக அகப்படாத ஆள் அகப்பட்டுவிட்டான்.
“என்னப்பா ரங்கநாதா! உன்னைத் தேடிப் பாணதீர்த்தத்துக்குப் புறப்பட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். நீ என்னடா என்றால் எங்களுக்குக் கொஞ்சம்கூடச் சிரமம் வைக்காமல் இங்கேயே வந்துவிட்டாய்!” என்று நான் எகத்தாளமாகக் கேட்டேன்.
“சார்! உங்கள் காலில் விழுந்து கும்பிடுகிறேன். இன்னும் நாலுமணி நேரம் எனக்கு அவகாசம் கொடுங்கள் சார். இந்த மருந்தைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு நானே உங்களிடம் சரணாகதி அடைந்துவிடுகிறேன். குழந்தையைப் பெற்றுவிட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறாள் சார்! தயவு செய்யுங்கள்…” – அவன் துடித்தான்.
“யார்? உன் மனைவி காத்தியாயினிதானே?”
“ஆமாம், சார் ! கருணை பண்ணுங்கள்!” என்று கதறினான். நான் அவனை ஊடுருவி நோக்கினேன். அது போலி நடிப்பாகத் தோன்றவில்லை. உண்மையிலேயே பாணதீர்த்தக்கரையிலுள்ள ஆசிரமத்தில் காத்தியாயினி பிரசவித்திருக்கிறாள் என்றே தோன்றியது. ஆனால் போலீஸ் ஒழுங்குப்படி கையில் சிக்கிக் கொண்ட அவனை நாலுமணி நேரம் விட்டுப் பிடிக்க எனக்கு உரிமையில்லை.
“ரங்கநாதா! நான் போலீஸ் அதிகாரி. சட்டத்துக்கும் கருணைக்கும் வெகுதூரம். உன்னை விட முடியாது. அந்த மருந்தை என்னிடம் கொடு. நாங்கள் உன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களைப் பிடிப்பதற்காகப் பாணதீர்த்தம் போகிறோம். உன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற நான் முடிந்தவற்றைச் செய்கிறேன்” என்றேன். அவன் வேண்டாவெறுப்புடன் மருந்துப் புட்டியை என்னிடம் கொடுத்தான். உடனே தக்க பாதுகாப்போடு பஸ் ஏற்றி அவனைப் பாளையங்கோட்டை சப் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டேன். மருந்துபுட்டியோடு நானும் மற்றவர்களும் வேகமாகப் பாணதீர்த்தத்துக்கு விரைந்தோம்.
காட்டிலே வழியை அடையாளம் கண்டு கொண்டு ஏற்ற இறக்கமான பாதைகளில் நடந்து பாணதீர்த்தத்தை அடையும் போது மாலை மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி வேறு தேசபக்தர்கள் யாரும் அப்போது அங்கே ஆசிரமத்தில் இல்லை. ஒரு கட்டிலில் பிரசவித்த தாயும் குழந்தையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
மருந்துப் புட்டியோடு அவசரம் அவசரமாகக் கட்டில் அருகே சென்று கையைத் தட்டி ஓசை மூலம் எழுப்ப முயன்றேன். குழந்தை விழித்துக் கொண்டு அழுதது. தங்க விக்கிரகம் போல் அழகான ஆண் குழந்தை, தாய் அசையவே இல்லை. இன்னும் பலமாகக் கையைத் தட்டினேன்.
ஊஹும்! அவள் எழுந்திருக்கவில்லை ! என் மனத்தில் பீதி ஏற்பட்டது. திடுக்கிட்டுப் போய் மூக்கருகில் கை வைத்துப் பார்த்தேன். மூச்சு வரவில்லை. என் கையிலிருந்த மருந்துப் புட்டி கீழே நழுவி விழுந்து உடைந்தது.
ஆம்! பெற்றவனைத் துறந்து, கல்லூரிப் படிப்பைத் துறந்து ஒரு தேசபக்தனோடு காட்டுக்கு ஓடிவந்த அந்தப் புதுயுகச் சீதையான தேசசேவிகை காத்தியாயினி நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருந்தாள். காலன் அவளுடைய உயிரைப் பறித்துக் கொண்டு விட்டான். போலீஸ் வாழ்வில் இரக்கம் என்ற பண்பை அதிகம் பெறாத எனக்கே கண்களில் நீர் துளித்தது. நெஞ்சில் ஏதோ கனமாக அமுக்குவது போலிருந்தது.
அருணோதயத்தில் மலர்ந்த அந்தக் குழந்தை கையையும் காலையும் உதைத்துக் கொண்டு வீறிட்டு அழுதது. பாலுக்காகத் தாயின் நெஞ்சை எட்டித் தடவியது. தாய் பால் கொடுக்கும் நிலையிலா இருந்தாள் ! கட்டிலில் கிடந்த ஒரு துணியோடு குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டேன். கான்ஸ்டபிள்களை அவளை எரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தூண்டினேன்.
அன்று! காலம் காலமாய்ப் பொங்கி விழுந்து கொண்டிருக்கும் பாணதீர்த்த அருவியின் கரையில் ஒரு தாயின் உடல், உடல் என்ற நிலையைக் கடந்து சாம்பலாயிற்று. காத்தியாயினி என்ற தாய்மை, காத்தியாயினி என்ற உண்மை, என்றும் இனி என்றும் தலையெடுக்க முடியாமல் பொதிகை மண்ணில் கலந்துவிட்டது.
குழந்தையோடு நானும் கான்ஸ்டபிள்களும் பழைய பாபநாசத்தை அடைந்தபோது அங்கே எனக்குப் பொறி கலங்கக்கூடிய இன்னொரு பேரிடி காத்திருந்தது.
‘மனைவிக்கு அபாயம், உடனே வரவும்’ என்று அம்பாசமுத்திரத்திலிருந்து தந்தி வந்திருந்தது. உடனே விக்கிரமசிங்கபுரத்திலிருந்த போலீஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். காத்தியாயினியின் குழந்தையை வேறு எங்கும் விட்டுச் செல்ல இயலாததனால் என்னோடு ஊருக்குக் கொண்டு சென்றேன். புறப்படுவதற்கு முன் பாபநாசத்தில் கொஞ்சம் பசும்பால் வாங்கிக் காய்ச்சிப் புகட்டியிருந்ததினால் குழந்தையின் பசி அடங்கியிருந்தது. அம்பாசமுத்திரத்தை அடையும்போது இரவு ஒன்பதரை மணி.
வீட்டில் வேலைக்காரக் கிழவி இருந்தாள். அவள்தான் யாரோ படிக்கத் தெரிந்த ஆளைத் தேடி தந்தி எழுதச் சொல்லி அடித்தாளாம்.
“என்ன? எப்படியாச்சு?”
“அதை என் வாயாலே எப்படிச் சொல்லுவேனுங்க! இப்பத்தான் ஆச்சு! குழந்தை உசிரோட பிறக்கலை. அம்மாவுக்கு இன்னும் தெரியாது. தெரிஞ்சா மனசு விட்டுப் போயிடும்…”
வேலைக்காரி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.
குபீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. “நீ போய் டாக்டரை அழைத்துக் கொண்டு வா!” என்று வேலைக்காரியைத் துரத்திவிட்டுக் காத்தியாயினியின் குழந்தையை ஜீப்பிலிருந்து எடுத்து வந்தேன்.
குழந்தைகள் இடம் மாறின. காத்தியாயினியின் குழந்தை என் மனைவியின் அருகே இடம் பெற்றது. என் மனைவிக்குப் பிறந்த குழந்தை காத்தியாயினியின் இறந்த குழந்தை ‘ போலீஸ் டாக்டரிடம் அனுப்பப்பட்டது. டாக்டர் வந்தார். மனைவிக்கு பிரக்ஞை வரவழைத்தார். அவள் குழந்தையின் முகம் கண்டு மலர்ச்சி பெற்றாள்.
காத்தியாயினியும் குழந்தையும் இறந்துவிட்டதாகப் பாளையங்கோட்டை சப் ஜெயிலில் ரங்கநாதனிடம் நானே நேரில் சென்று கூறிய போது அவன் கதறிக் கதறி அழுதான். அந்த அழுகை என் இதயத்தைக் கலக்கியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு உண்மையை மறைத்துக் கொள்வது எவ்வளவு கஷ்டமான காரியம்!
டிசம்பர்
என் மனைவி உடம்பு தேறி எழுந்துவிட்டாள். தன்னுடைய, அழகான ஆண் குழந்தையைக் கொஞ்சுவதற்கு நேரம் போதவில்லை அவளுக்கு.
“இந்தாங்கோ இதென்ன வேடிக்கை? நீங்கள் அட்டை கரி நிறம், நான் மா நிறம், நமக்கு எப்படி இவ்வளவு சிவப்பாகக் குழந்தை பிறந்தது?” என்று வேடிக்கையாகக் கேட்டாள் ஒரு நாள். என் உடல் அப்போது கிடுகிடுவென நடுங்கியது.
டிசம்பர் கடைசியில் ஒரு நாள் என்னைத் திருச்சிராப்பள்ளிக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பிரமோஷனோடு மாற்றியிருப்பதற்காக என் சம்மத்தைக் கோரி மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது.
அந்த உத்தரவு வந்த அதே சமயத்தில் வேறோர் கடிதத்தை உறைக்குள் இட்டு மேலதிகாரிக்கு அனுப்புவதற்கு விலாசம் எழுதிக் கொண்டிருந்தேன் நான்.
அது என் ராஜினாமாக் கடிதம்! முதலில் மேலதிகாரி என் ராஜினாமாவை ஒப்புக் கொள்ள மறுத்தார். பின் நான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ளச் செய்தேன். என் மனம் நிம்மதி அடைவதற்காக வேலையை உதறித்தள்ளினேன். ஆனால் அதன் பின்பும் நிம்மதி கிடைக்கவில்லை. சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை இரகசியமாக வைத்துக் கொண்டிருப்பவனுக்கு நிம்மதி ஏது
டைரியைப் படித்து முடித்தாயிற்று. எத்தனையோ வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் மூழ்கி எழுந்து கரையேறிவிட்டேன். அதோ அவள் ஐம்பத்தாறு வயதுக் கிழவி. நான் எழுபது வயசுக் கிழவன். வீரராகவனுக்கு இருபத்தொன்பது வயது! மனைவி குழந்தையோடு விக்கிரமசிங்கபுரத்தில் வேலை பார்க்கிறான். அம்மாவையும் அப்பாவையும் பாணதீர்த்தம் பார்க்க வரச்சொல்லி கடிதம் எழுதியிருக்கிறான். யார் அம்மா? யார் அப்பா? அதோ ரேழி வாயில்படியில் தலைவைத்து உறங்குபவள் அவன் தாயாரா? நான் அவன் தகப்பனா? எது உண்மை ?’
உலகம் அப்படிச் சொல்லி உறவு உண்டாக்க வைத்தவன் நான்தானே? நான் சாகிறவரை அந்த ரகசியமும் சாகாது. பாணதீர்த்தம் பார்க்க வேண்டுமாம், பாணதீர்த்தம். அந்த இடத்து மண்ணை இன்னொரு முறை இந்த ஜன்மத்தில் மிதிக்கமாட்டேன்! நல்ல வேளை! காலம் மட்டும் இப்படி மறதியை உண்டாக்காவிட்டால் என் மனமே என்னைக் கொன்றிருக்கும்! மறந்து கொண்டே வாழ்கிறேன்
“காலமே! ஓயாத சக்கரமே! எனக்கு இன்னும் நிறைந்த ஞாபகமறதியைக் கொடுத்தருள். நினைவே வேண்டாம். உனக்கும் உன் சக்திக்கும் ஒரு வணக்கம்.”
(கல்கி , 28.4.1957)