காலத்தால் அழியாத கல்யாணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 12,612 
 

இரண்டு மணித்தியாலங்களாய் துலா மிதித்துக் கொண்டிருந்தார் சுந்தரம். இவ்வளவு நேரமும் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.. பட்டையால் தண்ணீர் அள்ளி இறைத்துக் கொண்டிருந்த, பரமானந்தத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்ன மச்சான் சுந்தரம்?

மற்ற நாளிலையெண்டால் இத்தறுதிக்கு, துலா மிதிச்சபடி எத்தினை பாட்டுப் பாடுவியள்.. எத்தினை புதினம் சொல்லுவியள். இண்டைக்கென்ன மெளன விரதமே?

“இறைப்பு முடியட்டும் துலாவிலையிருந்து, இறங்கி வந்து சொல்லுறன்”. சுந்தரம் சொல்லி முடித்த போது கடைசிப் பாத்திக்குத் தண்ணீரைத் திருப்பி விட்டு இவர்களை நோக்கி வந்தான் தீபன்.

“எல்லப் பாத்திக்கும் தண்ணி பாஞ்சிட்டுது”

பரமானந்தம் இறைப்பதை நிறுத்தி விட்டுத் துலாக்கொடியில் இருந்து பட்டையை அவிழ்த்து வைக்கச்., சுந்தரம் துலாவில் இருந்து இறங்கி வந்து வரம்பில் உட்கார்ந்தார்.

“ராத்திரி வீட்டிலை ஒரு பிரச்சனை எல்லாம் நீரஜாவின் கல்யாண விஷயமாய்த்தான்.

எனக்கும் நல்லது கெட்டது தெரியும்தானே. அதின்படி நான் பார்த்திருக்கிற மாப்பிள்ளையைத்தான் அவள் கல்யாணம் செய்ய வேணுமென்று சொல்லிப் போட்டன். அவவின்ரை எண்ணப்படி மாப்பிள்ளை தேடிக் குடுக்க நான் சம்மதிக்க மாட்டன்” சுந்தரத்தின் வார்த்தைகளைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தார் பரமானந்தம்.

“மச்சான்! நீரஜா உங்க\ளுக்கு ஒரே ஒரு பிள்ளை எல்லா விஷயங்களிலையும் அவளின்ரை போக்குப்படி விட்டுச் செல்லப்பிள்ளையாய் வளத்திட்டுக் கல்யாண விஷயத்திலை மட்டும் அவளின்ரை விருப்பத்தை மீறி நடக்கலாமே? யோசிச்சுச் செய்யுங்கோ.” பரமானந்தம் போய் விட்டார்.. தீபனும் புறப்பட்டான்.. சுந்தரம் பட்டையைத் தூக்கித் தோளில் கொழுவிக் கொண்டு, சோர்வோடு நடக்கத் தொடங்கினார் மற்ற நாட்களிலென்றால் இப்படித் தன் தோட்டத்திற்கு நீரிறைத்து விட்டுப் போகும் போது. அவரது மனதில் குதூகலம் நிறைந்திருக்கும். முகத்தில் பெருமிதம் தவழும்.

பயிர்களுக்கு மோட்டர் மூலம் நீரிறைக்க மின்சாரமில்லாமலும் மெசினால் இறைப்பதற்கு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட, இறைப்பின்றி வாடி வதங்கும் பயிர்களைப் பார்த்து, விவசாயிகள் வயிறெரிந்து நின்ற போது , துலா மிதித்துப் பட்டையால் அள்ளி இறைக்கும் பழைய முறையை அவ்வூரில் புதிதாக அறிமுகப்படுத்தியவர் சுந்தரம் தான். அதற்கு ஆட்கள் தேவையாக இருந்தது.. தன் மைத்துனர் பரமானந்தத்தை துணை சேர்த்துக் கொண்டார்.. பரமானந்தத்தின் மகன் தீபன்.

பாத்திகளுக்குத் தண்ணீர் திருப்பி விடச் சம்மதித்தான் .சுந்தரத்தின் தோட்டம் பட்டை இறைப்பால் பச்சைப் பசேல் எனச் செழிக்க மற்ற விவசாயிகளும் இந்த முறையைப் பயன்படுத்தி, பயிர்களுக்கு நீர் இறைத்தனர்.. இதனால் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை வளர்ந்தது.

“பழைய காலத்துப் பட்டை இறைப்பை,இப்ப நான்தான் செயற்படுத்திக் காட்டியிருக்கிறன்” என்றொரு பெருமிதம் சுந்தரத்திடம் குடிகொண்டிருந்தது./ அந்தப் பெருமிதத்தில் தெருவில் போவோர் வருவோரை வலிய வழிமறித்துப் பேசுவார்,ஆனால் அன்றைக்கு யாரையும் கண்டு கொள்ளாமல், யோசனையோடு போய்க் கொண்டிருந்தார்.

“சுந்தரமண்ணை! என்ரை கத்தரிக்கண்டெல்லாம் இறைப்பில்லாமல் வாடிப் போச்சு.. உங்கடை பட்டையைத் தாங்கோ இறைச்சுப் போட்டுத் தாறன்” குரல் கேட்ட பிறகுதான் யாரென்று கவனித்தார் சுந்தரம். எதிரில் நின்ற மனோகரனைக் கண்ட போது. அவருக்குத் தன் சொந்தக் கவலையை மறந்து, ஒரு சந்தோஷம் ஏற்பட்டது.

“இந்தப் பெடியன் உத்தியோக மோகம் இல்லாமல் கமம் செய்கிறான்., இவனை ஊக்கப்படுத்த வேணும் என்று நினைத்தவர்,” தம்பி எப்ப தேவையென்றாலும் என்ரை

பட்டையைக் கொண்டு போய் இறை.. ஆனால் இறைச்ச உடனே பட்டையைக் காய்ச்ச வேணு”ம் “என்றார்.”

“என்னண்ணை பட்டையைக் காய்ச்ச வேணுமோ?”சிரித்தபடி கேட்டான் மனோகரன் “ இந்தக் காலத்துப் பெடியளுக்கு உதெல்லாம் எப்பிடித் தெரியப் போகுது. கேள் தம்பி சொல்லுறன் பட்டையாலை தண்ணி அள்ளி அள்ளி இறைக்கப் பட்டை நல்லாய் நனைஞ்சு ஈரம் ஊறியிருக்கும் அப்படியே பட்டையை வைச்சால் நாலு நாளிலைம் பட்டை உக்கிப் போயிடும். ஒரு சின்னக் கிடங்குக்கை நெருப்பு மூட்டி பட்டையை அதுக்கு மேலை கவிழ்த்து விட்டால் ஈரம் காஞ்சிடும்..பட்டை உக்காது. ஈரம் காஞ்ச உடனே பட்டையை எடடுத்திட வேணும். இப்ப விளங்குதே தம்பி”

“ஓம் அண்ணா நீங்கள் சொன்னபடியே செய்யிறன்.” என்றவனிடம் தோளில் கொழுவியிருந்த பட்டையை எடுத்துச் சந்தோஷமாய்க் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

சுந்ரத்தைக் கண்டதும், முற்றத்தில் நின்ற நீரஜா முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே ஓடினாள் அருமை மகள் இப்படிக் கோபம் காட்டி ஓடியது, அவரால் தாங்கிக் கொள்ள முடியாத விஷயமாயிருந்தது.. சோர்வோடு கை கால் கழுவி விட்டுச் சமையல் அறைக்குப் போனார்.

“என்ன இண்டைக்குத் தோட்டத்திலையிருந்து காய் பிஞ்சுகளொன்றும் கொண்டு வரேலையோ? கேட்டவாறு அவரது மனைவி தேனீர்க் கோப்பையை நீட்டினாள்.

“நீரஜா தேத்தண்ணி குடிச்சிட்டாளே?” சுந்தரம் கேட்டார்.

“இல்லை அவள் முகம் கழுவவுமில்லை. தேத்தண்ணி குடிக்கவுமில்லை. அவள் தன்ரை பிடிவாதம் நீங்கள் உங்கடை பிடிவாதம். நான் நடுவிலை நிண்டு திண்டாடுறன்”

மனைவியின் குற்றச்சாட்டு அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

“ஓ! ஆருடைய பிடிவாதம் வெல்லப்போகுதெண்டு பாப்பம்”

தேனீரைக் குடிக்காமலே சமையலறை மேசையில் வைத்து விட்டுக் குழப்பத்துடன் வெளியில் வந்தார்.

இது நாள் வரை அந்த வீட்டில் நீரஜாவின் பிடிவாதங்கள் தான் ஜெயித்திருக்கின்றன. அவளுடைய விருப்பங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

“அப்பா நான் சைக்கிள் ஓட்டப் பழகிட்டன் புதுச் சைக்கிள் வாங்கித் தாங்கோ” மகள் சைக்கிள் ஓடுவது அவருக்கு அவ்வளவு விருப்பமில்லாவிட்டாலும், அவளது பிடிவாதம் தெரிந்து அடுத்த நாளே புதுச் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.. பள்ளிப் படிப்பு முடிந்ததும் ரைப்பிங் பழகப் போகிறன் “ என்றாள்.” நீ ரைப்பிங் பழகி வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லையே. ஏதோ பொழுது போக்குக்காகப் போய்ப் படி” என்று அனுமதித்தார்.

அவர்களது வீட்டிற்குப் பக்கத்தில் ஐசிங் கிளாஸ் ஆரம்பமான போது நீரஜா அதில் சேர ஆசைப்பட்டாள் “எங்கள் வீட்டுச் சமையலை ஒழுங்காய்ச் செய்யத் தெரிந்தால் போதும் ஐசிங் எல்லாம் எங்களுக்கேன்” என்று கிண்டல் செய்தார். ஆயினும் அவள் ஆசைப்படுகிறாளே என்பதற்காக அந்த வகுப்புக்கும் அவளைப் போக விட்டார்.

டேப்றைக்கோடரிலை . பாட்டுக் கேட்கலாமென்றால் கறண்டுமில்லை.. பற்றறியுமில்லை டல்லாயிருக்கு “ என்று அவள் சலித்துக் கொண்ட போது “ இப்ப எல்லோரும் சைக்கிள் சில்லைச் சுத்திச் சுத்தி டைனமோ சக்தியிலையல்லொ றேடியோ போடினம்” என்றவர் மறுநாளே டைனமோவும் சில்லும் வாங்கி வந்து அவள் ரேப்றைக்கோடரிலை பாட்டுக் கேட்க வைத்தார்.

இப்படி நீரஜாவின் விருப்பங்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி , வைத்தவர், அவளுடைய கல்யாண விஷயத்தில் மட்டும் தன் விருப்பத்திற்கு முதலிடம் கொடுக்க நினைத்தார்.

சுந்தரத்திற்கு நீரஜா மீது எவ்வளவு பிரியம் இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தான் செய்யும் தொழில் மீதும், பற்று இருக்கிறது. தனக்குச் சொந்தமாயிருக்கிற பத்தாயிராம் கன்று தோட்டம் வரண்டு வீண் பூமியாகாமல் எப்போதும் பச்சைப் பசேலென்று பூத்துக் காய்த்துக் குலுங்க வேண்டுமென்பது அவ்ரது தணியாத ஆசை. நீரஜா ஒரே மகளாயிருப்பதால் சீதனமாகவோ எப்படியோ அவரது தோட்டம் அவளுக்குத் தான் சேரப் போகிறது ஆகவே தன்னைப் போல் அவளுக்கு விவசாயம் செய்கிற மாப்பிள்ளை வந்து விட்டால். தன்னால் முடியாத காலத்திலும் தன் தோட்டம் பராமரிகப்படும் தன் ஆசை நிறைவேறும் என்பது, அவரது மனதிற்குள் மறைந்திருக்கும் எண்ணம். ஆனால் அதை அவர் வெளிக்யே சொல்லத் துணியவில்லை அவர் அதை வெளியிட்டால் முதலில் அவரது மகளே போர்க்கொடி தூக்குவாள்.

“பெரிய வீடு வளவு தோட்டமும் இருக்குது. வெங்காயம் புகையிலை விற்ற காசெல்லாம் பாங்கிலை போட்டு வைச்சிருக்கிறியள். நகை நட்டுகளும் செய்து வைச்சுக் கிடக்கு இவ்வளவு சீதனம் குடுக்கப் போறம்.. பிள்ளைக்குப் பெரிய உத்தியோகம் பார்க்கிற மாப்பிள்ளையைப் பாருங்கோ” என்று சுந்தரத்தின் மனைவி ஏற்கெனவே சொல்லி விட்டாள். சுந்தரம் தன் வாக்குச் சாதுர்யத்தால் மனைவியைச் சமாளித்துக் கொள்வார்.. ஆனால் நீரஜா கடைசி வரைக்கும் சம்மதிக்க மாட்டாள் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

“ போயும் போயும் தோட்டக்காரனையே நான் கல்யாணம் செய்யிறது. என்னாலை முடியாது” என்று வெட்டொன்று துண்டு இரண்டாகச் சொல்லக் கூடியவள் அவள் ஆகவே அவர் தன் மனதில் எழுந்த ஆசையை, முனையிலேயே கிள்ளி விட்டார்.. தன் மனதை இப்படிச் சமாதானப்படுத்திக் கொண்டார்.” உத்தியோகம் பார்க்கிற மாப்பிள்ளை என்றாலும் ஊரோடு இருக்கிறவனாய் வந்திட்டால் கொஞ்சம் கொஞ்சமாய் அவனைக் கமத்தில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். நீரஜாவுக்குக் கல்யானம் பேசி வந்த ஓரிடம் அவரின் எதிபார்ப்புக்கு ஏற்றதாய் அமைந்திருந்தது. மாப்பிள்ளை அந்த ஊர்ப்பையன் தான் பொறியியல் துறையில் படித்தவன் சீமெந்துத் தொழிற்சாலையில் உத்தியோகம் பார்க்கிறான் .தற்போது தொழிற்சாலை இயங்காததால் வேலைக்குப் போவதில்லை. ஆயினும் அரைவாசிச் சம்பளம் கிடைக்கிறது. வேலையற்றிருக்கிற பொழுதை வீணாக்காமல் குத்தகைக்குத் தோட்டமெடுத்து மிளகாய்க் கன்று நட்டிருக்கிறான்.

அவன் மீது சுந்தரத்துக்கு முழு நாட்டம் ஏற்பட்டது.” நீரஜாவின் நாகரீகப் போக்குக்கும் அவன் தோதாயிருப்பான்.” என்ப்று தீர்மானித்துக் கொண்டார்.

அவனை மணம் செய்ய அவள் சம்மதிப்பாள் என்பதில் அவருக்கு ந்ம்பிக்கை இருந்தது, ஆகவே அவளுக்குப் பேசிக் கல்யாணம் நிச்சயிக்கப் போவதாக, இரவு சாப்பிடும் போது மனைவியிடம் கூறினார்.. அவர் கூறியது கதைப் புத்தகம் வாசித்து கொண்டிருந்த, அவள் காதுகளில் விழுந்து விட்டது வேகமாய்ச் சமையல் அறைக்குள் வந்தாள். தயங்காமல் பதில் சொன்னாள்

“அப்பா நீங்கள் சொல்லுற ஆள் இப்ப முழுத் தோட்டக்காரன். மண்வெட்டிஒயோடை தோட்ட்த்துக்குப் போனதை நேற்றும் கண்டனான்”

“ பிள்ளை நானும் தோட்டக்காரன் தானே உனக்கும் அம்மாவுக்கும் என்ன குறை விட்டிருக்கிறன் சொல்லு தோட்டக்கரன் இல்லாட்டில் பயித்தங்காய்ப் பிரட்டலும் கத்தரிக்காய்ப் பொரியலும் வாயூறி வாயூறிச் சாப்பிட முடியுமே?”

“ எனக்குத் தோட்டக்காரன் வேண்டாமப்பா”

“ அவன் வெறும் தோட்டக்காரனில்லை ரெக்னிக்கல் கொலிச்சிலை படிச்சவன் பக்ரறியிலை பெரிய உத்தியோகம் நிலைமை சீரானால் திரும்பவும் வேலைக்குப் போவான். எங்கையும் அவனுக்கு உத்தியோகம் கிடைக்கும்”

நீரஜா பதில் சொல்வதற்குள் தாய் முந்திக் கொண்டாள்

“அருமையாய் ஒரு பிள்ளை எங்களுக்கு வாதாடுறதை விட்டிட்டு அவளின்ரை விருப்பப்படி செய்யுங்கோ”

பிள்ளைக்குப் புத்தி சொல்லுறதை விட்டிட்டு, இவ அவளுக்குப் பக்கப் பாட்டுப் பாடுறாளே” என்று சுந்தரத்துக்கு மனைவி மீது சரியான கோபம் ஏற்பட்டது.” பிள்ளையின்ரை கல்யாண விஷயத்திலை நான் நினைச்சபடிதான் நடக்கும்.” ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுப் படுக்கைகுப் போனார்.

தோட்டப் பயிருக்கு இறைக்க வேண்டிய முறையாதலால், விடிய மகள் எழும்புவதற்கு முன் எழுந்து தோட்டத்திற்குப் போனவர், ,இறைப்பு முடிந்து திரும்பி வந்த போது. நீரஜாவும் தன் மீது கோபித்துக் கொண்டிருபதைக் கண்டு கொண்டார். மகளது மனஸ்தாபத்தை அவரால் தாங்க முடியவில்லை.. தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கவும் விருப்ப,மில்லை. மிகவும் தர்மசங்கடமான நிலையில் அவர் மனம் தத்தளித்தது. “ நாலைஞ்சு நாள் போகட்டும் நயமாய்ப் புத்தி சொல்லிப் பாப்பம்” என்று மனதைத் தேற்றிக் காத்திருந்தார்.

அந்த நாலைந்து நாட்களுக்குள் சுந்தரத்தின் அண்ணன் நீரஜாவுக்காக வேறொரு புறொப்போசல் கொண்டு வந்தார்/

“தம்பி! என்ரை மகளுக்கு ஒரு நல்ல இடத்திலையிருந்து கல்யாணப் பேச்சு வந்தது.. சாதகம் பொருந்தேலை நீரஜாவின்ரை சாதகக் குறிப்பைக் கொண்டா . பொருந்தினால் அவளுக்குச் செய்யலாம்.”

“ ஆர் மாப்பிள்ளை?” சுந்தரத்தின் கேள்வி இது

“ சாதகக் குறிப்பைப் பாப்பம் . பொருந்தினால் பிறகு சொல்லுறன்”

சுந்தரத்தின் அண்ணன் நறுக்காகப் பேசுபவர். சுந்தரமும் தமையனுக்குப் பணிந்து பழகியவர். மறு பேச்சின்றி நீரஜாவின் சாதகக் குறிப்பைத் தமையனிடம் கொடுத்தார்.

“ நீரஜா அதிர்ஷடக்காரிதான்” சாதகங்கள் நல்ல பொருத்தம் “ என்றபடி மறு நாள் சுந்தரத்தின் அண்ணன் வந்தார்.” பொடியன் கனடாவிலை . சீதனம் அதிகம் கேட்கேலை பொம்பிளையைக் கனடாவுக்குக் கூப்பிடுகிற பொறுப்பு செலவு எல்லாம் மாப்பிளையின்ரை”

“ அண்ணை!” பரிதாபமாய் விழித்தார் சுந்தரம்” நான் நீரஜாவை அடுத்த ஊருக்கே அனுப்ப விரும்பாமல் ஊருக்கை மாப்பிள்ளைபார்க்கிறன் . நீங்கள் அவளைக் கனடாவுக்கு அனுப்பப் பார்க்கிறியள்”

“தம்பி உனக்கு உலகம் புரியேலை என்ரை மகளுக்கு உந்தச் சாதகம் பொருந்தி , உப்பிடி அதிஷ்டம் கிடைச்சால் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பன் நீரஜாவுக்கு அதிஷ்டம் தேடி வருகுது தடுக்காதை தம்பி

“பெரியப்பா ! அப்பாவுக்கு உதெல்லாம் விளங்காது நல்லாய் வீளங்கப்படுத்துங்கோ” நீரஜாவின் வார்த்தைகள் சுந்தரத்தை மேலும் திகைப்பிலாழ்த்தின.

“இவள் தோட்டம் செய்கிறவனை விரும்பாவிட்டாலும் உத்தியோகம் பார்க்கிறவனைக் கல்யாணம் செய்து பெற்றோருடன் இருக்கத்தான் விரும்புவாள் ” என்று தான் சுந்தரம் நினைத்திருந்தார். ஆனால் அவள் தான் வெளிநாட்டுக்குப் போகவும் தயார் என்பதைக் காட்டி விட்டாள்/ பதில் சொல்ல முடியாமல் திக்குத் திணறிக் கொண்டிருந்தார் சுந்தரம்/

“தம்பி! உனக்குக் கால தேச வர்த்தமானங்கள் தெரியாது.. அது தான் தடுமாறுகிறாய். நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. நீரஜாவுக்கும் நல்ல விருப்பமாய்க் கிடக்கு நான் நாளைக்கு மாப்பிள்ளையின்ரை ஆக்களைக் கூட்டிக் கொண்டு வாறன் “முடிவாய்ச் சொல்லி விட்டுப் போய் விட்டார்.

“நல்ல வேளை. பெரியப்பா வந்து தலையிட்டிருக்கிறார் இல்லாட்டி அப்பா என்னைத் தோட்டக்காரன்ரை தலையிலைதான் கட்டியிருப்பார்”

“ தோட்டக்காரனை உனக்குப் பிடிக்காட்டி விடு. கேலி பண்ணாதை. தோட்டக்காரன் இல்லாட்டி நேரத்துக்கு நேரம் சாப்பிடேலாது. வயிறு காயும்”

தந்தையின் மனதைப் புண்படுத்தி விட்டதை உணர்ந்த நீரஜா சமாதானப்படுத்துவது போல் தணிவாகச் சொன்னாள்

“ அப்பா! என்னோடை படிச்ச சுபா இங்கிலண்டிலை மாப்பிள்ளைஎன்று போயிட்டாள். கவிதாவுக்குச் சுவிஸிலை மாப்பிள்ளை எனக்கும் அப்பிடி ஆசை இருக்காதே?

ஓ! இப்பிடியெல்லாம் பேசத் தெரிந்தவள், இந்தக் கல்யாணத்தைக் குழப்பி விட்டால் வாழ்நாளெல்லாம் என்னைப் பழி சொல்லுவாள். தெய்வசித்தப்படி நடக்கட்டும் என்று விட்டு விட்டார். நீரஜாவைப் பார்த்த உடனே மாப்பிள்ளையின் பெற்றோருக்குப் பிடித்து விட்டது. இவளுக்கு மாப்பிKள்ளையின் போட்டோவும், மாப்பிள்ளைக்கு இவளின் போட்டோவும் பிடித்து விட்டது.. நல்ல நாள் பார்த்து இரு வீடுகளிலும் விருந்து வைத்து உறவினரெல்லாம் சேர்ந்து நின்று ஜெனரேற்றரில் வீடியோ எடுத்துக் காலத்தின் கோலத்திற்கேற்பக் கொண்டாடினர்.. பின் மாப்பிள்ளையின் பெற்றோரும் நீரஜாவின் பெற்றோரும் அவளை மாப்பிளையிடம் அனுப்புவதற்காகக் கொழும்புக்கு அழைத்துச் சென்றனர். உயர்தர வகுப்பு வரை படித்து விட்டு வெளிநாட்டுக்குப் போக முயற்சிகள் செய்து கொண்டிருந்த தீபனும் அவர்களோடு போனான்.

சுந்தரத்தின் மனதில் உற்$சாகமில்லை .நீரஜா மிக உற்சாகமாயிருந்தாள். பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றது உண்மைதான் எனச் சுந்தரம் நினைத்துக் கொண்டார். மாப்பிள்ளையின் நண்பன் கனடாவிலிருந்து வந்திருந்தான். அவன்போகும் போது நீரஜாவையும் கனடாவுக்குக் கூட்டிக் கொண்டு செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நண்பன் இவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சந்தித்தான்

“புதன்கிழமை பிளைற் றெடியாய் இருங்கோ” என்றான்.

“பிள்ளைக்கு இன்னும் பாஸ்போட் வரேலை என்னெண்டு போறது?” திகைப்போடு கேட்டார் சுந்தரம்.

“இங்கை இருக்குது பாஸ்போட்” அவன் தன் கைப்பையிலிருந்து ஒரு பாஸ்போட்டை எடுத்துக் காட்டினான்.

“ இது ஆருடைய பாஸ்போட்? எனக்கொண்டும் விளங்கேலை”

அந்தக் கெட்டித்தனத்தை அவருக்கு விளக்க வேண்டுமென்று அவனுக்கும் ஆர்வமேற்பட்டது.” இது என்ரை மனைவியின்ரை பாஸ்போட்” என்றவன் அதிலிருந்த மனைவியின் படத்தைக் கிழித்தான். நீரஜாவின் படத்தை வாங்கி அந்த இடத்தில் ஒட்டினான்”” இப்ப பாருங்கோ இது உங்கடை மகளின்ரை பாஸ்போட் ஆயிட்டுது”

“பேர் ஊர் எல்லாம் வித்தியாசப்படுமே?”

“ஓ!கனடாவுக்குப் போய்ச் சேருமட்டும் தான் நீரஜா என்றதை இவ மறந்திட வேணும். மிஸிஸ் தாரணி சபேஸ் என்ற என் மனைவியின் பெயரைப் பயன்படுத்த வேணும் அதாவது என் மனைவியாய் நடிக்க வேணும்” அவன் கள்ளமில்லாமல் கூறி விட்டுச் சிரித்தான் சுந்தரம் இரண்டு நிமிடங்கள் வாய் திறக்கவில்லை.

அவரது மனதில் சிந்தனை இப்படி ஓடியது

“ஒரு பெண்ணை எவ்வளவு பவித்தி.ரமாய் வளர்த்து, திருமணம் என்ற புனிதச் சடங்கோடு ஒருத்தனுடைய கையில் ஒப்படைக்கிறோம் ஆனால் இப்ப ஓர் அந்நியனுடைய மனைவி என்ற பெயரோடு பயணம் செய்து , தன்னை மணக்கப் போகும் நாயகனிடம் போய்ச் சேர்கிற அசிங்கமான நிலை என் மகளுக்கு ஏற்பட்டிருகிறதே, பெண்ணானவள் படித்துப் பட்டம் பெற்றுப் பதவியெல்லாம் வகிக்கலாம். இப்படி ஒரு அருவருப்பான நேர்மையற்ற நிலைக்கு ஆளாக வேண்டாம்”

பழமையான பண்பாட்டில் ஊறி வளர்ந்த சுந்தரத்துக்கு இந்த விஷயம் ஜீரணிக்க முடியாத ஒன்றாயிருந்தது அவரது கண்களில் செம்மை படர்ந்தது, முகம் இறுகிச் சிவந்தது. அவர் கோபத்தின் எல்லையில் இருந்தார். ஆயினும் நிதானமிழக்கவில்லை.” என்ரை மகளின்ரை படத்தைத் தந்திட்டு இந்த இடத்தை விட்டுப் போயிடு” ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் தொனிக்கக் கூறினார்.

அவன் திகைத்தாலும் சமாளித்துப் பதில் கூறினான்

“இந்தப் பெண்ணைக் கனடாவுக்குக் கூட்டிக் கொண்டு போவதற்காக இரண்டரை லட்சம் ரூபா மாப்பிள்ளையிட்டை வாங்கிப் போட்டன். எப்பிடியும் இவளை நான் கனடாவிலை சேர்க்க வேணும்”

“உந்தச் சுத்து மாத்தெல்லாம் எனக்குப் பிடிக்காது என்ரை மகளை நான் விடமாட்டன்” அவரது குரலிலும் முகத்திலும் தெரிந்த கடுமையைக் கண்டு, அவன் பயந்து விட்டான். இவர் தன்னைப் பிடித்துக் கொடுத்தாலும் கொடுப்பார்.”என்று பயந்தவன் , தாமதிக்காமல் நீரஜாவின் படத்தை உரித்துக் கொடுத்து விட்டு வெளியேறினான்.. சுந்தரதின் நியாயமான கோபத்தின் முன்னால் அவரது மனைவிக்கோ மாப்பிள்ளையின் பெற்றோருக்கோ வாய் திறக்கத் துணிவு வரவில்லை. நீரஜாவே அடிபட்ட புறாபோல் மூலையில் ஒதுங்கி நின்றாள். தந்தையிடம் இப்படியொரு கோபத்தை இதுவரை கண்டதில்லை அவர்களது பிரச்சனையில் தலையிட விரும்பாத தீபன் வெளியே வந்து நின்றான்

இங்கை வா தீபன்” சுந்தரம் கூப்பிட்டார் தீபன் அவரிடம் வந்தான்

“ தீபன் நீரஜாவுக்கு முன்னாலை வைச்சு உன்னை ஒன்று கேட்கப் போறன் பயப்பிடாமல் மறுமொழி சொல்ல வேணும்”

“சரி மாமா”

“நீரஜாவைக் கல்யாணம் செய்ய உனக்கு விருப்பமே? அவன் எதிர்பார்க்கவில்லை அதிர்ந்து போனான். அவனையறியாமலே மனதில் குபுக்கென்று சந்தோஷம் பரவியது.

அவன் அவளுக்கு மச்சான் முறை இருவருக்கும் சம வயது. படிப்பு ரியூஷன் என்று சின்னப் பையன் போல் திரிந்ததில் அவனுக்கும் நீரஜாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாமென்று இது வரை யாரும் கனவிலும் நினைத்ததில்லை.

“அட பயப்பிடாமல் சொல்லடா சுந்தரம் அன்போடு அதட்டினார்.

“எனக்கு விருப்பம் தான் மாமா.” பதில் சொல்லி விட்டு நீரஜாவைக் கவனித்தான் தீபன். அவளிடமிருந்து மறுப்பாய் ஒரு வார்த்தையும் வரவில்லை.

“ ஆனால் ஒரு நிபந்தனை போடப் போறன். நீ வெளிநாட்டுக்குப் போகவோ வேலை தேடவோ வேண்டாம். இப்ப எங்களோடை ஊருக்கு வந்து நான் சொல்லுறபடி செய்ய வேணும் ”என்றார் சுந்தரம்.

அவர் வெளிப்படையாய் சொல்லாவிட்டாலும் தீபனை அவர் விவசாயத்தில் ஈடுபடுத்தப் போகிறார் என்பது தீபனுக்கும் நீரஜாவுக்கும் நன்றாய்ப்புரிந்தது

“மாமன் என்ன சொன்னாலும் செய்யத் தயார்” என்பது போல் தலையாட்டினான் தீபன்.

“வெளிநாட்டுக்குப் போக ஆசைப்பட்fட தீபன் இப்ப என்னைக் கல்யாணம் செய்யிறதுக்காக திரும்ப ஊருக்கு வந்து அப்பா சொல்லுறபடி செய்யத் தயாராயிருக்கிறானே” இவன் தனக்காக என்ன செய்யவும் ஆயித்தமாய் இருக்கிறான்” என்பதை உணர்ந்த போது மனதில் மகிழ்ச்சி ஏற்பட முகம் மலர்ந்தாள் நீரஜா.

– வீரகேசரி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *