(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுவர்களில் ஆங்காங்கு தெய்வ உருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்த அந்த அறையில் பல்வேறு கோணங்களாக வளைந்து வளைந்து கூரையைத் தொட்டுக் கொண்டிருந்த ஊதுபத்திகளின் புகையோடு, தூபக்காலிலிருந்து எழுந்த பால் சாம்பிராணிப் புகையும் இரண்டறக் கலந்து அங்கு ஓர் அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
அந்தக் காலனித்துவ பாணி இரண்டு மாடிக்கட்டடத்தின் மேல்மாடியில் புறாக்கூடுகளைப்போல் அமைந்திருந்த பல அறைகளுள் கடைசியில் ஒதுங்கிப் போயிருந்த அந்த அறைக்கு வெளியில் தங்கள் தலையெழுத்தை அறிந்து கொள்ளக் கணிசமான கூட்டம் கூடியிருந்தது.
“இந்த நவம்பர் மாசம் வரைக்கும் கொஞ்சம் கஷ்ட திசையா இருக்கும். நவம்பர் முடிஞ்சிட்டா அப்புறம் கவலையில்லே. வாரவாரம் கோயிலுக்குப் போயி அர்ச்சனை செய்திடுங்க!”
சந்தன வண்ண ஜிப்பா, பச்சைக்கரைப் பட்டுவேட்டி, நெற்றியை முழுதும் அடைத்தவாறு பூசப்பட்ட வெண்ணீறு, அதன் மேல் சந்தனப்பொட்டு, அதற்குள் கச்சிதமாக அடங்கும் வகையில் இடம்பெற்றிருந்த குங்குமப் பொட்டு இத்யாதி இத்யாதிகளுடன் எக்சிகியூட்டிவ் நாற் காலியில் சாய்ந்தவாறு தமக்கு எதிரே மிகவும் கருத்தூன்றிக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவருக்குக் காலக்கணக் கைத் துல்லிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் சோதிட மாமணி, சுந்தரலிங்கம். அவர் சோதிடம் பார்க்கத் தொடங்கிய அந்தக் காலத்தில் அட்டணைக்கால் போட்டு வட்டிக்கடை பாணி மேசைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு சோதிடம் சொன்னவர். தொழில் வளர்ச்சி, இப்போது அவரை எக்சிகியூட்டிவ் நாற்காலிக்கு உயர்த்தி விட்டது.
“சும்மா சொல்லப்படாது. அவரு சொல்றதெல்லாம் அப்படியே பலிக்குதே!”
“அதனாலேதானே இவருக்கு இவ்வளவு கூட்டம் கூடுது. மற்ற இனத்தவங்ககூட இங்கே வர்றாங்களே.”
“சொன்னா நீங்க நம்பமாட்டீங்க. போன வருஷம் எனக்கு இன்னன்ன நாள்லே இன்னன்ன நடக்குமுன்னு பிச்சிப்பிச்சிச் சொன்னாரு. அதே மாதிரி எல்லாம் நடந்துச்சின்னா பாத்துக்குங்களே!”
“அப்படியே கிரகக்கோளாறு எதுவும் இருந்தா அதுக்கு என்ன செய்யணுமுன்னும் சொல்லிடுறாரே.”
சோதிடர் சுந்தரலிங்கத்தின் அசாதாரணமான கணிப்புத்திறனுக்குச் சிலர் வெளியிலிருந்து நற்சான்று வழங்கிக்கொண்டிருந்ததை மனத்துக்குள்ளேயே ஆமோ தித்துக் கொண்டார் சதாசிவம்.
சோதிடரைப் பார்க்கப் போவதைத் தம் மகளிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் காலை எட்டு மணிக்கு முன்பே வந்துவிட்டார். ஆனால் அவர் வருவதற்குமுன்பே ‘நாலு நம்பர்’ வாங்குவதற்குப் படையெடுத்து நிற்கும் கூட்டத்தைப்போல, பெருங்கூட்டம் அந்தச் சிறிய இடத்தை அடைத்துக்கொண்டிருந்தது.
சதாசிவம் எண்ணமெல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம் மனைவி அமிர்தத்தின் மீதே இருந்தது.
‘இந்தக் கூட்டமெல்லாம் எப்ப முடியிறது; நான் எப்ப ஆஸ்பத்திரிக்குப் போயி அமிர்தத்தைப் பார்க்கிறது?’
அமிர்தத்திற்குச் சற்றுக் கடுமையான நோய்தான். நெஞ்சுவலி; கூடவே சிறுநீரக இயக்கத்திலும் கோளாறு.
ஏழெட்டு மாதங்களுக்குமுன் ஒருநாள் மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்தவுடன் ‘நெஞ்சு வலிக்கிறது’ என்று மூச்சுத்திணறலோடு அமிர்தம் நாற்காலியில் சாய்ந்த போது, அவருக்கு இதயமே நின்று விட்டது போன்றிருந்தது. கிளினிக் அளவில் நின்றுகொண்டிருந்த அவள் நெஞ்சு வலி, பெரிய மருத்துவமனைக்குப் போகும் அளவுக்கு முன்னேறிவிட்டது!
“நெஞ்சுவலி ரொம்ப ஆபத்தாச்சே. ரெண்டு பொண்ணுங்களுக்கு எப்படியோ கல்யாணம் முடிஞ்சிபோச்சி. இன்னும் ஒரு பொண்ணு இருக்கே. அதுக்குக் கல்யாணம் நடக்கிறதுக்குள்ளே, அமிர்தத்துக்கு ஏதாவது ஆயிட்டா?” என்று எண்ணி அயர்ந்து போய்விட்டார்.
மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக மாற்றி மாற்றிப் போய் வந்துகொண்டிருந்த அமிர்தம் கடைசியில் மருத்துவ மனையிலேயே படுத்துவிட்டாள். கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தபோது, அது திடீரென்று அடைபட்டுவிட்டது போல் இருந்தது அவருக்கு.
‘ஓடியாடி வேலை செய்துகிட்டிருந்த ஒருத்திக்குத் திடீரென்று இந்த நிலை வந்தா, அதுக்குக் கிரகக் கோளாறுதான் காரணமா இருக்கணும்’ என்று அவர் உறுதியாக நம்பினார்.
கிரகக்கோளாறு என்றால் அதைச் சரிப்படுத்தக் கூடியவர் சோதிடர் சுந்தரலிங்கம்தான். அதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. சதாசிவம் வாழ்க்கையில் ஏற்பட்ட எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வு சொன்ன சோதிடர், இதற்கும் ஒருவழி சொல்லாமலா போய் விடுவார்?
நான்கு ஆண்டுகளுக்கு முன் சோதிடம் பற்றியெல்லாம் நாட்டம் ஏதுமின்றி – சுதந்திரச் சிந்தனையாளராக இருந்தவர் சதாசிவம். நாட்டம் இல்லையென்றால் சோதிடம் பிடிக்காது என்பதல்ல; சோதிடம் பார்த்துக் கொள்வதில், ‘நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்’ என்னும் எண்ணமே அவர் உள்ளத்தில் வியாபித்திருந்தது. ‘நல்லது’ என்றால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த அவர் மனம், ‘கெட்டது’ எதுவும் இருந்துவிட்டால், அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பிடிக்காததைக் கேட்டுவிட்டு எதற்காகப் பித்துப் பிடித்துத் திரியவேண்டும்?
ஆனால் தர்க்கரீதியான இந்தக் கருத்துகளையெல்லாம் அவர் பெண்களுடைய கல்யாண விஷயம் மாற்றிவிட்டது.
அவர் பெண்கள் மூவரில் மூத்த இருவருக்கும் நெடு நாளாகத் திருமணமே ஆகவில்லை. முதல் பெண்னாக்கு இருபத்தேழு வயதாகிவிட்டது. அடுத்த பெண்ணுக்கு ஒரு வயது தான் குறைவு. மூன்றாவது பெண் பரவாயில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகலாம். அதற்கும் இப்போது இருபத்திரண்டு வயதாகி விட்டது. மூன்றும் பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியதில்லை. ஓர் ஆணாவது பிறந்திருக்கலாம். அவன் கலியாணம் செய்து கொண்டாலும் கடைசிக்காலத்தில் அவன் ஊற்றும் கஞ்சியைச்சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் பெண்கள் கல்யாணமாகிப் போய்விட்டால், அவர்கள் வீட்டில் போய் எப்படி உட்கார்ந்து கொண்டிருப்பது?
ஆனால் அந்தப் பெண்கள் கணவன்மார் வீட்டுக்குப் போவதென்றால் அவர்களுக்கு இன்னும் திருமணமே ஆகாமல் இருக்கிறதே!…அவர்களுக்கு இத்தனை வயதாகி விட்டதே…இப்போதெல்லாம் பெண் கேட்டு வந்து எங்கே கல்யாணம் நடக்கிறது?
தம் பெண்கள் கலியாண விஷயமே சதாசிவத்தின் இதயத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது. இதற்கு என்ன தான் முடிவு?
“எதுக்கும் காலம் வந்தாத்தான் முடியும் போலிருக்கு…” என்று அவர் பலமுறை தம் மனத்திற்குப் பல வந்தமாகச் சமாதானம் கூறிக்கொண்டதைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியவில்லை.
ஆனால் அவர் கூறிக் கொண்டிருந்த அந்தக் ‘காலம்’ ஒருநாள் சாமிநாதன் உருவில் வரத்தான் செய்தது. சதாசிவமும் சாமிநாதனும் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.
பிறகு வேறோர் இடம் கொஞ்சம் கூடுதல் ‘பச்சை’ யாகத் தோன்றவே சாமிநாதன் அங்குப் போய்விட்டார். அதன்பின்னர் இருவர்க்கிடையிலும் எப்படியோதொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவர் சதாசிவத்தை பார்த் ததுமே, ”என்ன பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆச்சா? இப்ப அதுங்களுக்கு இருபத்தஞ்சைத்தாண்டியிருக்கணுமே!” என்றுதான் கேள்வியைத் தொடங்கினார்.
“அவங்களுக்கு இன்னம் கல்யாணம் ஆகலே…. எல்லாம் நம்ம கையிலேயா இருக்கு?”
தம் இயலாமையைக் கண்டு சாமிநாதன் எங்கே இகழ் வாக எண்ணி விடுவாரோ என்னும் எண்ணத்தில் தயங்கித் தயங்கிச் சொன்னார்.
சாமிநாதனுக்கு உள்ளூர வருத்தந்தான். “என்ன செய்யிறது சதாசிவம்? எத்தனையோ பொண் ணுங்க இப்படி வயசு ஏறியும் கல்யாணம் ஆகாமே இருக் கிறாங்க. இதெல்லாம் இந்தக் கிரகங்கள் சுத்திவிடுற வேலை. நீங்க மனசைத் தளரவிடாதீங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல ஜோசியர் இருக்காரு…ரொம்பக் கெட்டிக்காரரு…நீங்க உங்க பொண்ணுங்களோட ஜாதகங்களை எடுத்துக்கிட்டு அவரைப் போய்ப்பாருங்க. தோஷம் கீஷம் இருந்தா அதையெல்லாம் நல்லாப்பாத்துச் சில சாங்கியமெல்லாம் செய்யச்சொல்வாரு…நீங்க அதுமாதிரி செய்தா உங்க பொண்ணுகளுக்குக் கண்டிப்பா கல்யாணம் நடந்தே ஆகும்” என்று சோதிடர் திறனுக்குப் பெரிய ‘ஜேக்’ வைத்துவிட்டு அவர் முகவரியையும் கொடுத்தார் .
சோதிடரைப் பார்க்கப் போவதற்குச் சதாசிவத்திற்கு முதலில் தயக்கந்தான். “இருந்தாலும் சாமிநாதன் சொன் னதுபோல தோஷம் எதுவும் இருந்தாலும் இருக்கலாம். அதையும் தான் போயிப் பார்த்துட்டு வருவோமே” என்று முடிவு செய்து கொண்டு புறப்பட்டார்.
சோதிடர் சுந்தரலிங்கம், ஜாதகங்களையெல்லாம் நன்கு கணித்துப் பார்த்துவிட்டு, ‘உங்க பொண்ணுங் களுக்குக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும். அவுங்களுக்குக் கல்யாண பிராப்தம் இருக்குது. சில தோஷங்கள் இருக்கிற தாலேதான் இவ்வளவு காலமும் தடையாகிப் போச்சி. இந்த நிலைமை இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நீடிக்க லாம். ஆனால்…ரெண்டு வருஷத்துக்குள்ளே நிச்சயமா நடக்கும். இந்தத் தோஷங்களைக் கழிக்கிறதுக்குக் கொஞ்சம் செலவாகலாம்’ என்று தாம் போட்ட சிக்கலான கணக்குகளையெல்லாம் விளக்கினார்.
“இன்னம் ரெண்டு வருஷமா? ரெண்டு வருஷத்துலே நடக்குமா?”
ஏற்கனவே கவலைச் சுமையால் அழுந்திப்போயிருந்த அவர் நெஞ்சம், இன்னும் நைந்துவிட்டது. இருந்தாலும் அவருக்கு வேறு வழியில்லை. தோஷம் கழிய சோதிடர் என்னவெல்லாம் செய்யச் சொன்னாரோ, அவற்றையெல் லாம் செய்தார்.
பிறகு எதிர்பாராதவகையில் அந்த நல்ல காரியம் நடந்தேவிட்டது. ஓராண்டில் அவர் மூத்த மகளுக்குத் திருமணம் நடந்தது. அடுத்த ஆறு மாதத்தில் அவர் இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடந்துவிட்டது.
இப்படியும் நடக்கும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை. இது அவர் வாழ்க்கையில் பிரமிக்கத் தக்க மாறுதலை ஏற்படுத்திவிட்டது. சோதிடம் இப் போது அவர் வாழ்க்கையில் பிரிக்க முடியாத சக்தியாக வியாபித்து நின்றது.
இதன் பின்னர் வெவ்வேறு சமயங்களில் சோதிடர் சுந்தரலிங்கம் கூறிய பலன்கள் மிகவும் அசாதாரண முறை யில் பலித்துக்கொண்டே வந்தன.
ஒருமுறை சோதிடர் அவர் கைரேகைகளைப் பார்த்து விட்டு, “இந்த ஆயுள் ரேகைக்குப் பக்கத்துலே இப்படி நேரா மேலே போகுதே, இதுதான் அதிர்ஷ்ட ரேகை. இது மட்டும் இந்தச் சூரியமேட்டைத் தொட்டிருந்தா உங் களைக் கையிலே பிடிக்க முடியாது. அவ்வளவு பெரிய பணக்காரரா இருப்பீங்க. எதுக்கும் மாதம் மாதம் ஒரு ‘பிக்ஸ்வீப்’ எடுத்துக்கிட்டு வாங்க!” என்று சொல்லி வைத்தார்.
அதிர்ஷ்டரேகை நினைவு வரும் போதெல்லாம் அவர் தம் கைரேகைகளை நீண்டநேரம் உறுத்துப் பார்த்துக் கொள்வார் :
“இந்த ரேகை மட்டும் இப்படி இன்னும் கொஞ்சம் மேலே போயிருந்தா?” என்று அவர் தமக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும்போது, எதையோ பறிகொடுத்து விட்ட உணர்வு அவருக்கு ஏற்படுவதுண்டு.
தமது பெயரைச் சொல்லிக் கூப்பிடக் கேட்டதும், அதிர்ஷ்டரேகை நினைவைச் சற்று மறந்து, மெதுவாகச் சோதிடர் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். அறைக்குள் நுழையும்போது, “சோதிடர் என்ன சொல்வாரோ?’ ‘ என்னும் எண்ணம் அவர் உடலை இறுகவைப்பது போன்றிருந்தது.
சதாசிவத்தைக் கண்டதும் சோதிடர் சுந்தரலிங்கம், “உட்காருங்க…என்ன உங்களைக் கொஞ்ச நாளா இந்தப் பக்கமே பார்க்க முடியலையே!” என்று தம் வாடிக்கையாளரின் மாமூல் வருகை நின்றுவிட்டதன் காரணத்தை அறிந்துகொள்ள விரும்பினார்.
“ஒண்ணுமில்லே…வேலை கொஞ்சம் அதிகமாயிடுச்சி..”
அந்தச்சமயத்தில் அந்தக் காரணத்தைத்தான் அவரால் சொல்ல முடிந்தது. பிரச்சினை இல்லாவிட்டால் பெரும் பாலும் யாரும் சோதிடம் பார்த்துக்கொள்ள வருவ தில்லை என்பது அந்த முப்பதாண்டு சோதிட அனுபவக் காரருக்குத் தெரியாதா?
எப்படி விஷயத்தைத் தொடங்குவது என்று சதாசிவம் தயங்கிக் கொண்டிருந்தபோதே சோதிடர் தம் ஜிப்பாவில் குறுக்கு வாட்டத்தில் செருகப்பட்டிருந்த பால்பாய்ன்ட் பேனாவை இழுத்து – அதன் தலையைப் பெருவிரலால் அழுத்திவிட்டு, கோடுபோட்ட ஒரு ஃபுல்ஸ்கேப் தாளில் சில கட்டங்களைப் போட்டுவிட்டு சதாசிவத்தை நிமிர்ந்து நோக்கினார்:
என்ன, உங்க கடைசிப் பொண்ணுக்குக் கலியாணம் எதுவும் வருதா? அதுக்குத் தனுசு ராசியில்லையா?”
சதாசிவம் குடும்பத்தினர் ராசியெல்லாம் அவருக்கு மனப்பாடம்.
“இல்லைங்க ஜோசியரே… நான் வேறே ஒரு காரியத் துக்காக வந்திருக்கிறேன். என் சம்சாரத்துக்குக் கொஞ்ச நாளா ஒடம்புக்குச் சரியில்லே. அடிக்கடி ஆஸ்பத்திரியும் வீடுமா இருக்குது. இப்ப ரெண்டு வாரமா ஆஸ்பத்திரி லேயேதான் இருக்குது. மொதல்லே நெஞ்சுக்கோளாறுன்னு சொன்னாங்க… அப்புறம் கிட்னியிலேயும் கோளாறு இருக் குன்னு சொல்றாங்க. அதுக்குத் தேவலையாயிடுமான்னு தெரிஞ்சிக்கிட்டுப் போக வந்தேன்…”
அவர் சொற்களைத் தெளிவாகச் சொல்ல முடியாமல் திணறினார். சோதிடத்தால் தாம் அறிந்து கொள்ளப் போகும் பலனில்தான் தம் மனைவியின் உயிரே அடங்கி யிருக்கிறது என்னும் தோரணையில் பேசியபோது அவர் குரல் கம்மியது.
சோதிடர் தாம் முன்னேற்பாடாகப் போட்டு வைத்த கட்டங்களில் ஒன்பது கிரகங்களையும் நுழைத்து, அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்த சில கோடுகளைப் போட்டுக் கொண்டிருந்தார்.
சதாசிவத்தின் எண்ணமெல்லாம் மருத்துவமனையிலேயே இருந்தது.
“சதாசிவம், உங்க மனைவிக்கு மகரராசி இல்லையா? பொதுவா இந்த ராசிக்காரங்களுக்கே இந்த வருஷம் பூரா சுகாதார நிலமை அவ்வளவு சாதகமா இருக்காது. இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லே…ரெண்டு மூணு வாரம் இப்படித்தான் இருக்கும். அப்புறம் பரிபூரண குணமாகிடும். ஒரு வேண்டுதல்பண்ணிக்குங்க. தினமும் கோயிலுக்குப் போயி உங்க மனைவி பேருக்கு அர்ச்சனை பண்ணிடுங்க. இந்தக்குறிப்பை வச்சிக்குங்க…கவலைப்படாமே போயிட்டு வாங்க..” என்று கூறிவிட்டுத் தாம் எழுதிய குறிப்புத்தாளைச் சதாசிவத்திடம் நீட்டினார்.
சோதிடருக்குச் சேரவேண்டியதைக் கொடுத்துவிட்டு, அறையிலிருந்து வெளியில் வந்தபோது சதாசிவத்திற்கு நெஞ்சுப் பளு இறங்கியதைப் போலிருந்தது.
மத்தியானம் ஆஸ்பத்திரிக்குப் போகும்போது “அமிர்தத்துக்கிட்டே இந்த நல்ல விஷயத்தைச் சொல்லணும்,” என்று எண்ணியதுடன், “அமிர்தத்துக்குக் கொஞ்சம் பழங்களும் பூவும் வாங்கிக்கிட்டுப் போகணும்” என்றும் நினைத்துக்கொண்டு புதுத் தெம்புடன் நடந்தார்.
பஸ்ஸை விட்டிறங்கியதும், சோதிடர் கொடுத்த குறிப்பைத் தம் கடைசி மகளிடம் காட்டி அவளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அந்தத் தாளைக் கையில் பிடித்தபடி தம் வீட்டை நெருங்கினார்.
அங்கே என்ன கூட்டம்?
அவர் மூத்த பெண்கள் கூட அங்கே நிற்கிறார்கள் போலிருக்கிறதே!
அவர்கள் எல்லாம் அழுகிறார்களா? ‘அப்படின்னா…அப்படின்னா…’ அவருக்கு உடலெல்லாம் இற்று விழுவது போலிருந்தது.
அவரைக் கண்டதும் அவர் கடைசி மகள், “கால யிலேயே நீங்க எங்கே போனீங்கப்பா?…அம்மா போயிட்டாங்க அப்பா!” என்று அலறினாள்.
அவர் உடல் எல்லாம் ஆடியது சோதிடர் கொடுத்த தாள் அவர் கையிலிருந்து நழுவி விழுந்து காற்றிலே பட படத்துக் கொண்டிருந்தது.
– சிங்கப்பூர் வானொலி, 1975, புதுமைதாசன் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்டு 1993, ஒக்கிட் பதிப்பகம், சிங்கப்பூர்