அவள் கார்த்திகை விளக்கீடன்று, நினைவு மறந்து போன எப்பொழுதோ ஒரு நாளில் பந்தம் சுற்றி விளக்கெரித்து மகிழ்ச்சி கொண்டாடிய பழைய சந்தியாவல்ல அந்தக் கவலைகள் ஏதுமற்ற சிறு பிராயத்து நினைகள் கூட வெறும் கனவு தான். நனவுப் பிர்க்ஞையாய் வருகிற இன்றைய வாழ்க்கையில், ஒளிச் சுவடே கண்டறியாத, அப்படிக் கண்டாலும் மனம் வெறுக்கிற, ஒரு துருவ நிலை தான் அவளுடையது
அவளது கல்யாண விதியின் பாவக் கணக்காகவே வந்து சேர்ந்த கறையின் துருப்பிடித்த வெறும் கண் துடைப்பு நாடகமாகவே அது அவளின் கல்யாணம் அரங்கேற நேர்ந்த கொப்டுமையினால் தினமும் அவள் தீக்குளித்தே, சாக வேண்டியிருந்தது.. உணர்வுகள் முழுவதுமே பஸ்பமாகிப் போன இத்தீக்குளித்தல் நடுவே, புறப் பிரக்ஞையாய் வருகிற, எந்த ஒளியுமே அவள் பார்வைக்கு எட்டுவதில்லை.
வெறுமனே பார்க்க முடிந்தாலும், ஒளியின் ஞாபகமே இல்லாத, உணர்வு மரத்த வெறிச்சோடிய மனதையே கொண்டிருப்பதால், கார்த்திகை தீபமென்ன , வீட்டில் எரிகிற சாதாரண விளக்கே அவள் கண்களை விட்டொழிந்து போகிற வெறும் நிழல் தான்
விளக்கீடு வந்தாலே முன்பொரு சமயம் அம்மா சொன்ன கதை ஒன்று மட்டும் தான், சிரஞ்சீவியான ஒரு சோக காவியமாக அவளின் ஞாபகத்திற்கு வரும். . அன்று கூட அப்படித் தான் சொக்கப் பானை விழா பார்ப்பதற்காகப் பிள்ளைகள் மூவரும் கோவிலுக்குப் போயிருந்தனர். .பாபு அவளைப் பொருட்படுத்தாமல் அறைக்குள் இருந்தவாறே ஏதோ வாசித்துக் கொண்டிருந்தான்.. அவனிடம் வாசிக்கும் பழக்கம் நிறையவே இருந்தாலும், தெளிந்த சிந்தனையற்ற அன்பு வரண்ட கடும் போக்கு அவனுடையது… அவளை உணர்ச்சியுள்ள ஒரு பெண்ணாகவே அவன் மதிப்பதில்லை. அவனுடன் ஒன்றுபட்டு வாழ முடியாமல் போன, மிகப் பெரிய சோகம் அவளுடையது
அன்று கூடத் தீபத் திருநாள் தான். பாபுவை மண முடித்த பிறகு, அப்படியான நாளில் ஒரு சம்பிரதாயத்திற்குக் கூட அவள் தீபம் ஏற்றி அறியாள். விதைத்த பாவங்களை அறுவடை செய்வதிலேயே பொழுதுபட்டுப் போகும் இதில் தீபம் ஏற்றி வழிபட எப்படி மனம் வரும்?உணர்வுகள் மரத்த சமாதி நிலையில் சுகமாகவே தூங்கி வழிகிற பாவனை அவளுக்கு .இதில் இன்ப துன்பம் இல்லை. இருளும் ஒளியும் கூடத் தான் இல்லை. .இருள் கனத்த அல்லது அதுவும் இல்லாதொழிந்த பட்ட மரம் தானே அவள்.
வெள்ளவத்தை முழுவதும், ஒளி வெள்ளம் தான்.. சூரியன் உதிக்காத அந்த நிலாக் காலம்.. சுற்றிலும் தமிழர் வீடுகளே என்பதால்,கார்த்திகை தீபமன்று கண் நிறைந்த ஒளி தான். கண்கவர் காட்சி வெள்ளம் தான். மாடி வீட்டு பல்கனி சுவர் மீதும், மதில் படிகை மீதும், ஆயிரமாயிரம் சிட்டி விளக்குகள் ஒரே ஒளிப் பிழம்பாய் தகதகத்து மின்னும் போது, அவள் மனதில் மட்டும் ஏன் இந்த இருள் விழுக்காடு? படுத்தாலும் உறக்கம் வராது. தூங்கி எழவும் விழிப்புத் தட்டாது.. வீடிருந்தாலும் ஒளியில்லை. பாபுவிற்கு இந்தச் சம்பிதாயமெல்லாம் பிடிக்காது.. அந்த வழி தவறிய ஒரு வரட்டுப் போக்கு.அவனிடம், அவளின் ரசனைகள் கூட அவனுக்குப் பிடிப்பதில்லை. அவளை மனம் குளிரச் சிரிக்க வைப்பதற்குப் பதிலாக அவளை அழ வைத்து வேடிக்கை பார்த்து ரசனை கொண்டாடுகிற வக்கிர புத்தி அவனுக்கு. அதற்கு ஈடு கொடுத்தே மனம் ஒழிந்துபோன வெறுமை அவளுக்கு. சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அவனுடன் வாழ்ந்ததே ஒரு கெட்ட கனவு மாதிரி.. ஏதோ தாலி கட்டின பாவத்திற்காக அவன் அவளோடு இருக்கிறான். எனினும் இந்த இருப்பு மெய்யில்லை வழி தவறிய வழிப்போக்கன் போன்றதே அவர்கள் நிலையும். இதிலிருந்து விடுபடுவதும் கஷ்டம். ஒற்றை வழியில் இருளின் ஊனம் விழுந்த சரிவுகள் அவளுக்கு மட்டும் தான்.. உணர்வுபூர்வமாக அது அவனைப் பாதிக்கவில்லை என்பதே அதை விடப் பெரிய கொடுமை
அப்போது கல்யாண எழுத்து நடந்து கொஞ்ச நாட்களேயாகியிருந்தது. அது விமரிசையாக நடந்தேறிய போது பாபு கொழும்பில் வேலையாக இருந்தான். எழுத்து நடந்த அன்றைக்குப் பட்டு வேஷ்டி அலங்காரங்களுடன் அவனொரு தேவ களை மிளிரும் கம்பீர புருஷனாய் சுற்றம் புடை சூழ காரை விட்டிறங்கி வாசலில் நடை பவனி வரும்போது அறை ஜன்னல் திரை மறைவில் ஒளிந்து நின்று பார்த்த, அவளுக்கு அந்த ஒரு கணத்தில் உலகமே அடியோடு மறந்து போயிற்று. அவள் மனம் முழுவதும் அவனே வியாபித்து, அவளை முழுவதுமாக ஆட் கொண்ட நேரம் அவளின் மனமறியத் தவறிய அவன் மீது அப்பாவித்தனமாய் அவள் கொள்ள நேர்ந்த இந்த ஒரு தலைப்பட்சமான காதல் அடி சறுக்கல் வாழ்க்கையை ஒரு வேத பாடமாக அவள் கற்றுத் தேறி முழுவதுமாக ஞானக் கண் திறந்து அவள் முக்தி பெறுவதற்கு இது ஒரு நல்ல படிப்பினை பரஸ்பர அன்பென்பது தானாகவே கனிய வேண்டும். வற்புறுத்தியோ வன்மம் சாதித்தோ இதைப் பெறவும் முடியாது. அவனோடு அவள் மனதாலும் உணர்வுகளாலும், ஒன்றுபட்டு அவனே எல்லாம் என்று வாழ்ந்த போதிலும் இதையெல்லாம் புறக்கணித்து, அவளை ஒரு மூன்றாம் மனுஷியாகவே மனம் கொண்டு வாழும் பட்சத்தில் அவனுக்கு அவள் மீது நிறைவான அன்பு எப்படி வர முடியும்? நான் வேறு நீ வேறு என்று இருக்கும் வரை தளும்பலற்ற அன்பு கூடச் சாத்தியமில்லை. எல்லா உயிர்களும் ஒன்று தானென்ற பேதம் மறந்து போன ஆன்மீக விழிப்பு நிலையிலேயே அதுவும் சாத்தியமாகும்
பாபு போன்ற சராசரி மனிதனிடத்தில் அதை எதிர்பார்ப்பது கூட மடமை.. அன்பு இல்லாமல் போனாலும் வஞ்சம் தீர்ப்பதையே, மூச்சாகக் கொண்டு எதிர் மறையான குணங்களோடு அவன் இருப்பது தான் அன்பு கிடைக்காமல் போன பெரும் ஏமாற்றத்தை விடச் சந்தியாவைப் பெரிதும் பாதித்தது.
இது தான் வாழ்க்கை.. கல்யாணமென்ற சம்பிரதாய வாழ்க்கையின் திரிந்து போன நிழற் கோலம்.. சந்தியாவின் வாழ்வும் அப்படித்தானாகுமென்று அம்மா அறியாமல் போனதன் விளைவே, அன்று அவள் சொன்ன கதையும் கூட. சின்ன வயதில் முரண்டு பிடிக்காமல் அவளைச் சாப்பிட வைப்பதற்காக அம்மா எவ்வளவு கதைகள் சொல்லியிருப்பாள் அவையெல்லாம் விளையாட்டாகச் சொன்னவை அப்படியல்ல அன்று அவள் சொன்ன கதை. சந்தியா ஒரு மனக் குறையுமில்லாமல் நன்றாக வாழ்வாள் என்று நம்பியே அவள் அப்படியொரு கதையைச் சொல்லியிருக்கக் கூடும்.. இதில் ஏமாந்தது சந்தியா மட்டுமல்ல. அவளும் தான் நன்றாக ஏமாந்து போனாள்,
அன்று அவள் பாபுவின் தம்பி முகுந்தனிடம், கூறிய கதையே அதற்கு முன்னுதாரணமாக இருந்த.து.. ஒரு சமயம் பாபு லீவில் வந்திருந்த போது அவளைக் காண்பதற்காகத் தேரேறி வந்திருந்தான். அவன் வந்தது சைக்கிளாக இருந்தாலும் அதைத் தேராக உணர்கிற காட்சி மயக்கம் அப்போது அவளுக்கு அவனைக் கண்டதில் தலை கால் புரியாத மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி அவள் இருக்கையில் அவனுக்கு முத்தெடுக்கிற அவசரம்
அது தான் எழுத்து முடிந்த நிலையில் அதற்கான உரிமை அங்கீகாரம் இப்போது அவன் கையில். இனியென்ன மூடிய அறைக்குள் அவளை இழுத்து வைத்துச் சரச லீலை அவன் செய்கிற போது வெளியே அடுக்களை வாசலில் அம்மா முகுந்தனோடு பேசுகிற சப்தம் கனதியாய் வந்து அவளை உலுப்பிற்று பாபுவிற்குத் துணையாகக் கூடவே முகுந்தனும் வந்திருந்தான். அவர்களின் உடலோடு உறவாடும் உச்சக் கட்டக் களிப்பினிடையே கூட அம்மா பேசுவது அவளுக்கு நன்றாகக் கேட்டது
“தம்பி உங்கடை வீட்டிலை தான் நெய் நிறைய இருக்கல்லே”
“அதெப்படி உங்களுக்குத் தெரியு,ம்?
“உங்கடை வீட்டுக்குப் பலகாரம் கொண்டு வந்த போது பார்த்தனே அடுப்புக்குப் பின்னாலை பெரிய நெய் போத்தல் இருந்தது உன்ரை மச்சாள் நல்லாய் மாவிளக்குப் போடுவா”
“அதற்கு அப்பாவித்தனமாய் அவன் கேட்டான்
“மாவிளக்கென்றால் என்ன மாமி?”
“மா விளக்கு நீ பார்த்ததில்லை முருகனுக்குப் போடுற மாவிளக்கு சாமி மாவும் தேனும் கொஞ்சம் சக்கரையும் சேர்த்துச் செய்வது தான் மாவிளக்கு அழகான சிறிய விளக்குகளாய் செய்து அதில் திரி போட்டு நெய் விட்டு எரிக்கிறது தான் மாவிளக்கு “
“ மாமி எனக்கு இப்ப அதைச் செய்து தாறியளே?
“” இதெல்லாம் சாமிக்குத் தான் போட வேணும் கொண்ணைக்குக் கல்யானம் முடிஞ்ச பிறகு நல்லூர் முருகனுக்கு மச்சாள் வந்து போட்டுத் தருவா”
பிறகு மாவிளக்கை யார் கண்டார்கள் இப்போது வெறும் மண் விளக்குக் கூடச் சந்தியாவின் கையில் இல்லை விளக்காய் எரிகிற ஒளியும் பிடிக்கவில்லை. கார்த்திகை தீபமும் கண்ணில் நிற்க மறுத்தது. மிஞ்சியது இருள் மூடிய வாழ்க்கை மட்டும் தான் இந்நிலையில் கண் திறந்தாலும் ஒளி நிற்கவில்லை. அந்த முகம் மறைந்து போன குரூர இருட்டினிடையே மீண்டும் அம்மாவே வந்து நிற்பது போல விழிப்புத் தட்டிற்று பாவம் அம்மா. பாவுக்கு அவளைக் கண்டால் முகத்தில் நெருப்பு எரியும் அவள் ஒரு சூனியக்காரி என்று அவன் நினைப்பு இதெல்லாம் தானாக வந்ததில்லை அவன் வீடு அவனுக்குக் கற்றுக் கொடுத்த மோசமான பின் விளைவுகளைக் கொண்ட தவறான பாடம் அதிலேயே நச்சு மனம் கொண்டு அவன் விசுபரூபமெடுத்து நிற்கும் போது, எல்லாம் எரிந்து போகும். அவர்கள் எந்த மூலைக்கு ?அம்மா மரண தறுவாயில் இருந்த போது கோமா நிலையில் அவனைக் கண்டு கேட்ட கேள்வியின் ரண களம் இன்னும் கூட ஆறவில்லை அப்போது அவள் கேட்டாளாம்
“உவர் என்னவாம்?”
அவள் யாரிடமும் பகை நெருப்புச் சாதித்ததில்லை அவளுக்குப் பளிங்கு முகம் மட்டுமல்ல மனம் கூடப் பால் வெள்ளை நல்ல சிவந்த நிறம் அவள் சந்தியாவுக்கு ஒரு பெரிய மனக் குறை அம்மா போல நிறமோ அழகோ தன்னிடம் இல்லாமல் போன குறையே இவர் தன்னை மட்டுமல்ல அம்மாவையும் பகை கொண்டு தாக்குவதற்கு, இது ஒரு பெரிய காரணம். ஆனால் வெறும் உடல் அழகையே நொடியில் அழிந்து போகும் மாயத் தோற்றம் என்று நம்புகிற விசாலமான அறிவு கொண்ட அவளுக்கு இப்படியொரு புருஷன் “
எல்லாம் விதியின் பாவக் கணக்கு அவள் விதி முடிகிற வரை இப்படித் தான் வாழ்க்கை இருக்கும் முழுவதுமான இருளுக்குள் இப்படி அவள் இருக்கிற போது ஒளி விகசித்துக் கொண்டு எதிரில் அம்மா வந்து நின்றது ஒரு கனவு மயக்கமாய் அவளுக்குப் பட்டது எனினும் அதில் உயிர் இருப்பதாக நம்பி அவள் விழித்துப் பார்க்கிற போது முகம் சிரித்தபடி அம்மா நிற்பது தெரிந்தது.
“சந்தியா……………………”
“என்னம்மா? இந்த நேரத்திலை புதிசாய் இன்னும் ஒரு கதையே? நீ கதை சொன்ன காலம் முடிஞ்சு வந்திட்டுது அப்படி அதை நான் கேக்கிறதாயிருந்தால் நான் மறுபடி உன்ரை வயித்திலை தான் பிறக்க வேணும் போதும் ஒரு முறை பிறந்து களைச்சது இப்ப உன்னிடம் கதை கேக்கிற நிலைமையா எனக்கு”
“ என்ன பிள்ளை விரக்தியாய் கதைக்கிறாய்?”
“ ஒன்றுமில்லை எல்லாம் நல்லபடி தான் நடக்குது’
இதற்கு மேல் அம்மாவால் எதையும் கேட்டறிந்து கொள்ள முடியவில்லை. அவள் போய் விட்டாள். சந்தியா சிலுவையில் தொங்க நேர்ந்த கொடுமை அவளுக்குப் பிடிபடாத செய்தியாகவே இருந்து விட்டுப் போகட்டும். இதை உள்ளபடி அவள் அறிய நேர்ந்தால் அவள் மனதிலும் உதிரம் கொட்டும் இது கருதியே அவளின் உயிர் உறைந்த இந்த மெளன கவசம் அதற்கு ஈடு கொடுத்து நிற்க வழியின்றி அம்மா போய் விட்டாள்.இப்போது உருவம் மறைந்து போன அவளின் நிழல் மட்டும் தான் மிஞ்சியிருந்தது.
ஒரு காலத்தில் உயிர் மனிதனாக உலாவியவள் தான் அவளும் அப்படி அவள் வாழ்ந்ததையே நம்ப முடியாமல் இன்று அவள் நிழலாகிப் போனது போலவே, நாளை எனது நிலையும். நான் வாழ்ந்து கெட்ட சுவடே அறியாமல் நிழல் வந்து கவ்விக் கொள்ளும்.
இந்த மேலான தத்துவத்தை உணரத் தவறியதாலேயே வாழ்க்கையென்ற ஒளியும் இருளும் சூழ்ந்த சலனப் பொறிக்குள் சிக்கி மீண்டு வர முடியாத நிலையில் நான் சாக வேண்டியிருக்கு என்று அவளுக்கு உறைத்தது.. அந்த உணர்வின் தாக்கத்தில் இருளும் ஒளியும் பிடிபடாத உச்சக் கட்ட விழிப்பில் சம நிலை கண்டு தேறியவளாய், அமைதியாக எழுந்து போனாள் புறப் பிரக்ஞையாய் வருகிற இருளை விரட்ட.
– வீரகேசரி 2010