(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பொழுது போகாவிட்டால் நான் பொய்கைக்குப் போவது வழக்கம். ஏனென்றால் குளத்தங்கரையில் பொழுது என்பதே இருப்பதில்லை. அங்கே உட்கார்ந்து விட்டால் ஒரு மணியா, இரண்டு மணியா, ஒரு நாளா, ஒரு வருடமா என்று கூடத் தெரியாது. அவ்வளவு சுகம், அங்கே கொட்டிக் கிடக்கிறது. கடவுளில் லயித்தல் பக்தி; உயிரில் லயித்தல் இன்பம்.
இங்கு காற்று முதற்கொண்டு குளிக்க மட்டும் வருவது இல்லை. கலவி செய்ய வருகிறது. அகத்துறையில் மூழ்கிய வர்கள், “அவளுடைய கண் இமையாக இருக்கக் கூடாதா? கழுத்துச் சங்கிலியாக இருக்கலாகாதா? உடலை வலம் வரும் சேலையாக இருக்கலாகாதா?” என்று பிதற்றுவார்களாமே! காற்றாக இருந்து பார்ப்போம் என நினைத்தே அப்பித்தர்களைப் போல் காற்று வருகிறது.
“இதென்ன போக்கிரித்தனம்!” என்கிறார்கள் பெண்கள்.”
“நான் உங்களிடம் மட்டும் வரவில்லை” என்று காற்று சொன்னால் கூட நம்புவதில்லை.
கண்ணால் பார்த்த பிறகாவது நம்புகிறார்களா? அதுவும் இல்லை. காற்றடிக்கிறது. மரம் முதலிய எதிர்ப்புத் தோன்றும் இடங்களில் அந்த வலிமைக்குத் தக்கவாறு மிரட்டியோ, ஓலமிட்டோ, வீரம் காட்டிக் கூவியோ, வெறியாட்டு ஆடியோ பின்னும் காற்று அடிக்கிறது. குளத்தங்கரை அரச மரத்தினிடம் வரும்பொழுது தன்மை மாறிவிடுகிறது. வீரத்துக்குப் பின் சிருங்காரமல்லவா? காதலின் தலை வாச லில் அகங்காரத்தின் நிழல்கூடத் தெரியலாமா? அரசமரத்தில் காற்றடிக்கும் பொழுது லேசாகவும் இனிமையாக இருக்கிறது.
மரத்தைத் தாண்டிக் குளத்து நீருடன் காற்று கல செய்கிறது. அக் கலவி இன்பமே அலை அலையாய் குளத்தில் பரவுகிறது. அந்தப் பகிரங்க லீலையையே கடைசி கரையோரம் வந்து படிக்கட்டினிடம் குசுகுசுக்கிறது.
குளிக்கும் பெண்கள் இக் குசுகுசுப்பைக் கவனித்தா காற்றைப் போக்கிரி என்றா சொல்வார்கள்?
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.