காரை வீட்டு கவிஞர் எழிலனுக்கு……

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 9,283 
 
 

அன்புள்ள அப்பாவிற்கு,

உங்களை மாமா என்று இதுகாரும் அழைத்ததில்லை. என் அம்மாவின் தம்பி என்று ஊரார் சொல்லித்தான் தெரியும்.எனக்கு நினைவு தெரிவதற்கு முன்பே இருவரும் இறந்துவிட்டபடியால் நீங்கள்தான் எனக்கு எல்லாமும். முதல் முறையாய் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். நான் எழுதும் முதல் கடிதம் கூட இதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால் ஓர் வருத்தம் இந்தியாவின் கடைசிக் கடிதம் கூட இதுவாகத்தான் இருக்கமுடியும். இன்று நாலு மணிவரை தபால் பெட்டிக்கு வரும் கடிதங்கள் பெருநரை சென்றடையும் என்ற அறிவிப்போடு இந்தியாவின் நாடி நரம்பாய் இருந்த தபால் சேவை நிறுத்தப்படுகிறது.

இந்தச் செய்தி படித்ததும் என் நினைவில் வந்தது நீங்கள்தான்..! மஞ்சள் மஞ்சளாய் கோணிப் பையில் கட்டி நிரப்பி வைத்திருந்த தபால் அட்டையை எனக்கு காட்டியது நீங்கள்தான். வானத்து நீல கலரில் பிரிக்கப்படாத பிரித்தும் இன்னும் படிக்காத பல இன்லேன்ட் லெட்டர்களை காட்டியதும் நீங்கள்தான்.

வாழ்வின் பாதியை கடிதங்களுக்கு செலவிட்ட தாங்கள் எப்படி என் நினைவில் வராமல் போவீர்கள் .

உங்களுக்கு வரும் கடிதத்தை வாங்கி வைத்திருக்கிறேன். நீங்கள் படிக்கச் சொன்னால் மட்டுமே படித்திருக்கிறேன்..! யாருக்கும் கடிதம் எழுதியதில்லை எனக்கு முதல் முறையும் இந்தியாவின் கடைசி முறையும் இதுதான். கடிதம் கிடைத்ததும் பதில் அனுப்பவும் என்கிற வழமையான வார்த்தையை எழுதவே எத்தனிக்கிறேன். இப்படியும் நினைக்கிறேன் ஒருவேளை நீங்கள் கூட கடைசிக் கடிதம் எழுதுவீர்களோ என்று… யாருக்கு..? என்ன..? எழுதுவீர்கள் என்ற என் யூகம் என்னை நச்சரிக்கிறது.

ஆனால் மாமா நீங்கள் அந்த லெட்டரை எனக்கு படித்தும் காட்டவில்லை படிக்கவும் விடவில்லை. ரேவதி அக்காவைப் பற்றி சித்தி சொல்லியிருக்கிறாள். திருப்பூர் பனியன் கம்பெனில ஒண்ணா வேல பாத்தீங்களாமே..! இருந்துவிட்டுப் போகட்டும் ரேவதி அக்கா என்னை நலம் விசாரித்ததை கூட சொல்ல மனம் வரவில்லை கல்நெஞ்சக் கவிஞருக்கு….

வியக்க வேண்டாம் இவனுக்கு எப்படி தெரியுமென .. நீங்கள் மாட்டுச் சந்தைக்கு போகும் நேரம் உங்கள் கடிதங்களே என் நேரம் தின்னும்.

அது யாரு மாமா பார்த்தசாரதி உங்களை அப்படி நெக்குருகி எழுதியிருந்தார். அப்பவே கேட்க வேண்டும்போல் இருந்தது. கேட்டுவிட்டால் மற்றொரு மாட்டுச் சந்தையில் என் நேரம் வீணாய்க் கழிந்து விடுமே..! நீங்கள் இன்னமும் காரைக்கால் வானொலிக்கு நேயர் கடிதம் அனுப்புகிறீர்களா…? உங்கள் வாசகர் கடிதம் மட்டுமே வரும் நம்மூர் மாத இதழ் இன்னும் வருகிறதா.?

எனக்கு சிரிப்பாய் வருகிறது மாமா .. நீங்கள் பலமுறை கவிதை அனுப்பி பிரசுரிக்காமல் இருந்ததை நினைத்து கோவமாய் எழுதிய கவிதையை பிரசுரித்தார்களே..! கொஞ்சமாய் ஞாபகம் இருக்கிறது.

“தடை செய்யப்பட்ட வானொலியின்

தொகுப்பாளனாய் இருந்திருக்கிறேன்.

விற்பனைக்குறைவால் நிறுத்தப்பட்ட

இலக்கிய இதழின் ஆசிரியனாய் இருந்திருக்கிறேன்.

பலமுறை கவிதை போட்டியில் தோற்கும்

கவிதையின் கவிஞனாய் இருந்திருக்கிறேன்.

மேற்சொன்னவை விரக்தி மனநிலை அடையாளர்கள்.

கண நேரத்தில் இவை அனைத்துமாகக் கூட

நான் ஆகலாம்..!

இது கவிதை இல்லை என நிராகரிக்கும்போது.

சரியா மாமா … சிரிக்காதீங்க …

நீங்கள் தினம் டீ வாங்கித் தரும் மகாலிங்கம் தாத்தா இருக்கிறாரா..?

நம்மூர் கருவாட்டு ஓடை சுயமிழந்துவிட்டதா..?

காலையில் தோப்புக்கு சென்று திரும்பும் போது பேசி அங்கலாய்ப்போமே ‘கோழிக்கொண்டான் ‘ குளம் இன்னுமிருக்கிறதா..? முன்பே இந்திய வரைபடம்போல் தெரியுமே? இப்போதெப்படி தமிழ்நாடு தனியாய் அதுவும் தண்ணி சூழ்ந்து..! தெரிகிறதா..?

ஏதேதோ எழுத நினைக்கிறேன் மாமா ஆனால் உங்களவுக்கு முடியல.

விஜியை காதலித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்களிடம் சொல்லாமல் வந்தது என் தப்புதான் . முழுதாய் பன்னண்டு வருடம் ஆகிவிட்டது உங்கள் தொடர்பறுந்து.. விஜிதான் ஊருக்கெல்லாம் போகவேண்டாம் என சொல்லிவிட்டாள். நன்றாக இருக்கிறோம் மாமா ..

என் வாழ்வில் பல அர்த்தங்களை விளக்கியவர் நீங்கள் ..

என்னை வளர்த்து ஆளாக்கியவர் நீங்கள்…

உங்களிடம் பேசுவது போன்ற உணர்வு இந்தக் கடிதம் எழுதுகையில்..

காரை வீட்டுத் தாத்தா நாராயணன்

*தங்கலார் பெரியப்பா காசிநாதன்

வண்ணாத்தி மொவன் மாயவன்

எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க உயிரோட இருந்தால்…

அவ்ளோதான் மாமா கவிஞன் வளர்த்த இந்த பிள்ளையால் எழுத முடிந்தது. மீண்டும் அதையே எழுத எத்தனிக்கிறேன்.. கடிதம் கிடைத்ததும் என்று…

நேரில் வர முயல்கிறேன்.

என்றும் உங்கள் பிள்ளை

செம்பியன்

(நீங்கள் வைத்த பெயர் இன்னும் மாற்றவில்லை)

பெறுநர்:

கவிஞர். காரை எழிலன்

நெம்பர் : 1/ஏழு

காரை வீடு

மேற்கு திண்ணை

கீழக்குடியிருப்பு.

டேய்… அப்பாவோட உழவர் அட்டைய தேடச் சொன்னேன் தேடுனியா …

அம்மா தங்கச்சிக்கு ஏம்மா ரேவதின்னு பேரு வச்ச..?

நான் வக்கலப்பா அப்பாதான் வச்சாரு..

கருப்பு, வெள்ளை புகைப்படத்தில் காரை எழிலன் சிரிப்பதுபோல் இருந்தது. காய்ந்த பூச்சரம் ஒவ்வொன்னாய் விழத் தொடங்கிற்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *