காயும் கனியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 1,034 
 
 

(1937 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வான வெளியில் மூளி நிலா பல்லில்லாத கிழட்டு வாய்போல் அசிங்கமாகத் தோற்றமளித்தது. இதே நிலா இன்னும் சிலநாட்களில் முழு மதியாக மாறும். அப்போது, கண்டோர் வியப்புறும் வண்ணம் அழகுப் பிம்பமாகக் காட்சி தரும். கடலலைகளைத் தழுவி வரும் காற்று இன்னும் நன்றாக வீசத் தொடங்கவில்லை. சற்று நேரம்கழிந்தால், அது உடலையும் உள்ளத்தையும் குளிர்விக்கும்.

அந்தக் கடற்கரையில் நானும் என் மனைவி மக்களும் உல்லாசமாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந் தோம். “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்” நவ நாகரிகப் போக்குப்படி, “உல்லாசமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம்” என்று கௌரவமாகக் கூறிவிட்டேன். உண்மையில் நானும் என் மனைவியும் அந்த மாதக் குடும்ப வரவு செலவுக் கணக்கை நேர் செய்வதில், அதாவது வீட்டுப் பட்ஜெட்டைத் தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம்.

குதூகலமாக கும்மாளமடித்து விளையாடிக்கொண் டிருந்தவர்கள் என் பிள்ளைகள்தாம். என் மூத்த மகள் சினிமா பாட்டுகளை அரைகுறையாகப் பாடிக்கொண்டிருந்தாள். அந்தப் பாட்டுகளுடன் அவளுக்குத் தெரிந்த பாரதியார் பாட்டொன்றையும் பாடினாள் அவளுக்குத் தெரிந்த அந்தப் பாட்டின் இரண்டடியை மட்டும் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டிருந்தாள்:-

“காயிலே புளிப்பதென்னே? கண்ணபெருமானே! நீ கனியிலே இனிப்பதென்னே? கண்ணபெருமானே?” என்ற அடிகள்தான் அவை.

இந்தச்சமயத்தில் என்னைப்போலக் “காற்று வாங்க” என் நண்பர் சுவாமிக்கண்ணு அங்கு வந்து சேர்ந்தார்.

“பேஷ்! பேஷ்! உங்கள் மகள் நன்றாய்ப் பாடுதே” என்ற பாராட்டுடன் அவளை அழைத்து, அந்தப் பாட் டைப் பாடும்படிக் கேட்டார். அவளுக்குத் தெரிந்த அதே இரண்டடியைத்தான், காயிலே புளிப்பதையும் கனியிலே இனிப்பதையும் திரும்பத் திரும்பப் பாடினாள். கிளிப்பிள்ளைபோல் அவள் அதையே ஒப்பிப்பதைக் கேட்க எனக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. ஆனால், நண்பரோ அப்பாட்டில் “லயித்து”ப் போயிருந்தார்.

பிறகு, அவர் அவளை அனுப்பிவிட்டு, “சார்! இப் பாட்டில் பொதிந்துள்ள பொருட்செறிவை என்னென்று எடுத்துரைப்பேன்? காயிலே புளிப்பது, ஏன் கனியிலே இனிக்கிறது? இயற்கையின் இரகசியங்களிலே இதுவும் ஒன்றல்லவா? ஆகா! நமது மனோநிலைமைக்கும் இக் கருத்து எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது! நல்லது. என் அநுபவத்தையே சொல்கிறேன், கேட்கிறீர்களா?” என்று ஆரம்பித்தார், ஓர் அபூர்வ கதைக்கு விஷயம் அகப்பட்டது என்ற ஆவலில் அதைக் கேட்கச் சித்தமானேன். நண்பர் சொல்லலுற்றார்:-

இதேபோல் பட்டப்பகல்போல் எரித்த நிலா வெளிச் சத்திலேதான் நான் என் கிராமத்தில் என் இளம்பிராயத் தோழர்களுடனும் தோழிகளுடனும் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு பன்னிரண்டு வயது செல்லத் துக்கு எட்டு வயது இருக்கும். செல்லம் வேறு யாருமில்லை என் தாய்மாமன் மகள்தான்.

என்கூட விளையாடவேண்டுமென்று அவள் எத்தனையோ விதமாக அன்றும் முயன்று பார்த்தாள். எப்போதும்போலவே அது அன்றும் பலிக்கவில்லை. அவளைச் சேர்த்துக்கொள்ள பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.

காரணம். எனக்கு அவளை அப்போது பிடிக்காதது தான். அவளைப் பார்க்கவே எனக்குப் பிடிக்காது. அப்படியிருக்க, அவளை எப்படிச் சேர்த்துக்கொண்டு விளையாடுவது? அழுக்குப்படிந்த சொக்காய்; பரட்டைத்தலை; சளி ஒழுகும் மூக்கு; அடம் பிடிக்கும் குணம். இவைதான் அவள்மீது எனக்குள்ள வெறுப்புக்குக் காரணம்.

ஆனால், அவளோ; நான் என்னதான் அவளை அடித்தாலும், வைதாலும், “அத்தான்! அத்தான்!” என்று வளைய வந்துகொண்டிருப்பாள்.

தாய் தந்தையரற்ற என்னை பணக்காரரான என் மாமாதான் ஆதரித்துவந்தார். செல்லத்தை தவிர அவருக்கு வேறு பிள்ளைகளில்லையாதலால், என்னையே தன் சொந்த மகன்போல் பாவித்து வருவதாகக் கூறிக் கொண்டதோடு, பிற்காலத்தில் செல்லத்தை எனக்கே மணமுடித்து தமக்கு ஆண் குழந்தை இல்லாத குறையைப் போக்கிக்கொள்ளப் போவதாகவும் தம் நண்பர்களிடமும் சுற்றத்தாரிடமும் கூறிவந்தார்.

எந்தப் பயனையும் எதிர்பாராது அவர் மகனாக இருக்க நான் தயார். ஆனால், செல்லத்தை எனக்கு மண முடிக்கும் அவர் உத்தேசந்தான் எனக்கு வேம்பாகக் கசந்தது. மூக்குச்சளி ஒழுகும் இந்தப் பரட்டைத்தலை பெண்ணோடு நான் எப்படிக் குடித்தனம் பண்ணுவேன்? என்று அந்தச் சிறு பிராயத்திலேயே ஏங்கத் தொடங்கினேன்.

நாளாக ஆக திருமணப் பேச்சும் வலுவடைந்து வந்தது. என் அச்சமும் திகிலும் கூடவே வளரத் தொடங்கியது. இனி சகிக்கமுடியாது என்ற நிலை ஏற் பட்டதும், ஒருநாள் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

இதன் பிறகு கழிந்த பதினைந்து ஆண்டு நான் வாழ்க்கையில் அடிபட்டு, அநுபவம் பெற்ற காலமென்று சொல்லலாம். வங்குசாக்கடை சிற்றாளாக இருந்து, கணக்குப் பிள்ளையாகி, கூட்டு முதலாளியாக மாறி, சொந்தக்கடை முதலாளியாகவும் ஆனேன். என் வியா பாரம் செழிப்பாக நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் பாழும் யுத்தம் வந்து சேர்ந்தது. ஜப்பானியத் துருப்புகள் மலாயாவில் இறங்கிவிட்டனவென்று கேள்வி யுற்றதும், நான் இந்தியாவுக்குக் கப்பலேறிச் சென்று, சென்னையில் என் வியாபாரத்தைத் தொடங்கி, நடத்தினேன்.

சில மாதங்களுக்குள்ளே அங்கு எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது!

சென்னையில் அறிமுகமான என் நண்பன் ஒருவன் தன் தாய் தந்தையர் தனக்கு ஒரு பெண் பார்த்திருப்பதாகவும், அப்பெண்ணும் அவளின் பெற்றோர்களும் சிங்கப்பூரிலிருந்து என்னைப்போல யுத்தத்தை முன்னிட்டு சமீபத்தில் சென்னை வந்திருப்பதாகவும் அக்குடும்பம் எனக்குத் தெரிந்ததாயிருந்தால், அதைப்பற்றிய தகவலை தனக்கும் தன் பெற்றோருக்கும் அறிவிக்க நான் உதவியாய் இருக்கக்கூடுமென்றும், ஆதலால் தன்னுடன் நானும் வரவேண்டுமென்றும் என்னை அழைத்தான். நானும் அதற்கு உடன்பட்டு, அவனுடன் அவன் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றேன்.

என்னையறியாமல் என் மனத்தின் ஒருமூலையில் ஐயமும் அச்சமும் ஏற்பட்டதால், முன் ஜாக்கிரதையாக என் உருவத்தைக் கூடுமானவரை மறைத்துக் கொண்டுதான் சென்றேன்.

நான் எதிர்பார்த்தபடியே இருந்தது! என் மாமன் மகள் செல்லத்தைத்தான் இவனுக்கு மணமுடித்து வைக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

ஆம். முயன்றுகொண்டுதான் இருந்தார்கள். செல்லம் ஒரே பிடிவாதமாக அப்போதும் என்னையே மணந்துகொள்வது, அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் கன்னியாகவே இருந்துவிடுவது என்ற முடிவுடனேயே இருந்தாள். இத்தனைக்கும் என்னைப் பற்றிய தகவல் கடந்த 15-ஆண்டுகளாக அவளுக்கோ அவளுடைய பெற்றோர்களுக்கோ கடுகளவும் தெரியாது.

பெண் பிடித்திருந்தால் அன்றே மணநாளை உறுதி செய்யும் நோக்கத்தோடுதான் நாங்கள் சென்றிருந்தோம். ஆனால், நடந்தது என்ன?

உள்ளே ஏதோ கலவரம் நடப்பதுபோல், “கச-முச” வென்று ஒலி கேட்டது. தொடர்ந்து அழும் குரல்;

அதட்டல், பின்னர், செல்லம் கையில் தாம்பூலத் தட்டுடன் அழுகையும் ஆத்திரமும் பொங்க, எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

“மாப்பிள்ளை! பெண்ணை நல்லா பாத்துக்கிடுங்க!” ஓர் உறவினர்.

நானும்தான் நன்றாய்ப் பார்த்தேன். அட, கடவுளே! நான் காண்பது:கனவா, நனவா? பரட்டைத் தலையும், சளி ஒழுகும் மூக்கும் கொண்ட செல்லமா இப்படி சௌந்தர்ய தேவதைபோல் காட்சியளிக்கிறாள்! இத்தகைய அழகியும் இருக்கமுடியுமாவென்று அவளையே வைத்தகண் வாங்காமல் ‘தேன் குடித்த நரிபோல்’ பார்த்தபடி இருந்தேன்.

வெற்றிலைத் தட்டுடன் தயங்கித் தயங்கி எங்களருகே வந்த செல்லம் என்னைப் பார்த்துவிட்டாள். மறு விநாடி, “ஆ! அத்தான்! அத்தான்!” என்று அலறிக் கொண்டு என் காலடியிலேயே அல்லிக் கொடிபோல் துவண்டு விழுந்துவிட்டாள்.

பிறகு, கேட்பானேன்? புது மாப்பிள்ளையும் அவர் பெற்றோரும் உறவினரும் பெண் வீட்டார் தங்களை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்கள். அன்றே எனக்கும் செல்லத்திற்கும் மணநாள் உறுதி செய்யப்பட்டது.

மண மேடையில் நான் அவளருகில் அமர்ந்திருக்கையில், அவள் தளிர் உடல் என்மேல் மெதுவாக உராயும் போது எங்கோ வானவெளியில் தண்ணென்ற மென் காற்றில் மிதந்து செல்வது போன்ற உணர்வே நிறைந்து வழிந்தது.

இவ்வாறு தம் வரலாற்றைக் கூறிமுடித்த நண்பர் சுவாமிக்கண்ணு, “பார்த்தீரா? சிறுவயதில் காய் போல் புளித்த செல்லம் பருவ மங்கையானதும் கனிபோல் இனித்த கதையை.” என்று கூறிச் சிரித்தார்.

– 1937, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *