கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 3,872 
 
 

துருத்திக்கொண்டு வெளியே தள்ளும் நாக்கு,தெறித்து விழும் கண்கள், கோரமான இறுகிய முகத்துடன் தூக்கில் தொங்கிய அவள் என் கனவில் வர அரண்டுபோய் எழுந்து உட்கார்ந்தேன். அவ்வளவுதான் தூக்கம் கலைந்து போனது. ஏ.சி.யின் சில்லீட்டில் என் உடல் வேர்த்துக் கொட்டியது. அப்படி பயங்கரக் கனவில் வந்தவள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்திதான்!

வசந்தி வேறு யாருமல்ல. என் ஆஃபிஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தவள். படிப்பு முடிந்த கையோடு வேலை கிடைத்தது அவளின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் என் செக்ஷ்னிலேயே போஸ்டிங். வேலை யில் கெட்டிக்காரி.

அவள் கம்ப்யூட்டரில் டைப் அடிக்கும்போது ஒரு எழுத்துக்கூட தப்பாக இருக்காது. அவ்வளவு கச்சிதமாக இருக்கும். டைப் செய்ததை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்கும் போது கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும். ஆறுமாத உழைப்பில் அவள் மேலதிகாரிகளிடம் எடுத்த நல்லபெயர்கள் கணக்கிலடங்கா! பூஞ்சை மனத்துடன் பயந்து சுபாவம் கொண்டவள்! அவளின் இந்த சுபாவத்தை ஒரு தடவை வசந்தியின் மாமாவே கூறியிருக்கிறார்.

இருபத்து நாலு வயதாகும் அவள் குள்ளமாக இருந்தாலும் பார்க்க பாந்தமாக இருப்பாள். பெற்றோர் இல்லாததால் தாய்மாமன், மாமி ஆதரவில் வளர்ந்தவள். பெற்றோர் இல்லாத குறை தெரியாவண்ணம் வசந்தியை கண்ணுக்கு கண்ணாக வளர்த்தனர் மாமாவும் மாமியும். இதை வசந்தியே அடிக்கடி சொல்லி சிலாகித்திருக்கிறாள்.

கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டியவள் வாழ்வில் திடீரென்று சோகம் கவ்வ ஆரம்பித்தது. அவளுக்கு ஒருநாள் வயிற்று வலி கண்டது. சாதாரண வலியாக இருக்கும் என நம்பி பொறுத்துக்கொண்டாள். டாக்டரிடம் காட்டி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டும் வலி குறையவில்லை.

நாள் செல்லச் செல்ல வலி குறையாமல் பொறுக்க முடியாத அளவுக்கு இன்னும் கடுமையானது. கம்ப்யூட்டரில் டைப் செய்யும் போதும் வலி தாளாமல் உதட்டைக் கடித்தபடி துடித்துப் போவாள். லஞ்சின்போது ஒரே ஒரு கவளம் தான் தொண்டையில் இறங்கும். வயிற்றில் ஆகாரம் இறங்கியவுடன் வலி ஏற்படும். அப்படியே முடியாமல் தலை கவிழ்ந்து மேஜை மீது சாய்ந்து விடுவாள்.

தினமும் இப்படியே நடக்கும். திருப்தியாக சாப்பிட முடியாத போது சம்பாதித்து என்ன பயன்? என்று அவள் மீது பரிவும் பச்சாத்தாபமும் தோன்றும் எனக்கு. தன் தேக ஆரோக்கியத்தில் அவளின் கவனம் போதாது என்ற கவலையும் ஏற்பட்டது. அதனால் வயிற்றை ஸ்கேன் எடுத்துப் பார்க்கும்படி வசந்திக்கு அறிவுரை வழங்கினேன். அதில் என்ன பிரச்சினை என்று தெரியவரும் பட்சத்தில் மேற்கொண்டு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்!

இதையே மற்றவர்களும் கூறினார்கள். சரியென ஒத்துக் கொண்டாள். ஆனாலும் ஸ்கேன் ரிப்போர்ட் ஒருவேளை புற்று நோய் இருப்பதாக உறுதி செய்தால் என்ன செய்வது என அநாவசியமாக பயந்தாள், அவளின் மாமா, மாமி கூட வயிற்றை ஸ்கேன் எடுக்கச் சொல்லி தலையால் முட்டிக்கொண்டனர். அரை மனதுடன் ஒத்துக்கொண்டாள் வசந்தி.

ஆப்டிமிஸ்ட்டாக இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்ற நேர்மறை எண்ணம் கொண்டு செயல்படலாம். வசந்தியும் அப்படி செய்வாள் என்று எதிர்பார்தேன். காரணம், ட்ரீட்மெண்ட்டுக்காக விடுமுறை எடுத்துக் கொண்டவள், குணமாகி நல்லபடியாக தேறி வேலைக்கு வருவாள் என நம்பியிருந்தேன். ஸ்கேன் எடுக்கப்பட்டது. ரிசல்ட் தெரியும் முன்பே பயத்துடன் வீடு திரும்பியவள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

ஆனால் ரிசல்ட் சாதாரண கட்டிதான் என்று உறுதி செய்தது. பைத்தியக்காரி! இப்படி பெஸ்ஸிமிஸ்டாக இருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. அவசரப் பட்டுவிட்டாள்.

பயந்த சுபாவம் கொண்டவள், எப்படி பயமில்லாமல் தற்கொலை செய்து கொண்டாள் என்று வியப்பு ஏற்பட்டது.

செய்தி கேள்விப்பட்டு, யமுனாவிடம் சொல்லிக்கொண்டு, ஒரு வித பட படப் போடு அவள் வீட்டை நோக்கி ஓடினேன். ஏற்கெனவே என் அலுவலக நண்பர்கள் விஷயம் அறிந்து வசந்தி வீட்டில் கூடியிருந்தனர். வசந்தியின் செயலை எண்ணி எண்ணி வேதனை கலந்த கவலையுடன் பேசிக்கொண்டிருந்தனர். போலீஸூக்கு அறிவித்தாகிவிட்டது. அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல்!

நண்பர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, பதை பதைக்கும் நெஞ்சுடன் உள்ளே நுழைந்து பார்த்தேன். ஃபேனில் தொங்கிக் கொண்டிருந்த வசந்தியின் உடல் கண்ணில் பட வயிற்றை புரட்டியது எனக்கு.

கதைகளில்தான் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வார்கள் என்று படித்திருந்த எனக்கு நேரிலேயே பார்த்துவிட்டது நெஞ்சைப் பிசைந்தது. சில வினாடிகள்கூட அங்கிருக்கப் பிடிக்காமல் உடனே அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

அறைக்குள் முகத்தை தொங்கப் போட்டபடி கண்ணீருடன் அமர்ந்திருந்த வசந்தி மாமா, மற்றும் மாமியின் அருகில் சென்றேன். பார்க்கச் சகிக்கவில்லை. வசந்தியின் மரணம் நன்றாகவே அவர்களை பாதித்து விட்டது தெரிந்தது.

சம்பிரதாயமாக விசாரித்து, அவர்களை தேற்றிவிட்டு, அப்படியே கனத்த இதயத்துடன் வெளியேறினேன். நல்ல வேளையாக தான் தற்கொலை செய்துகொண்டதுக்கான காரணத்தை விலாவாரியாக ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்துப் போட்டிருந்தாள் வசந்தி என பிறகு கேள்விப் பட்டேன்.

ஒரு வழியாக போலீஸ் விசாரணை முடிந்தது. வசந்தி தற்கொலை செய்து கொள்வதற்கான அவளின் கையெழுத்து இடப்பட்ட கடிதம் எவிடன்ஸாக எடுத்துக் கொள்ளப்பட்டது. போஸ்ட்மார்டமும் அவளின் தற்கொலையை உறுதி செய்ததால் கேஸ் முடிவுக்கு வந்தது. வசந்தி மண்ணுக்குள் புதைக்கப்பட்டாள்.

சம்பவம் நடந்த அன்று அப்படி ஒரு கனவு வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இன்றுதான் வந்தது! நேரில் பார்த்து பயந்ததைவிட கனவில் வந்த காட்சி இன்னும் பயங்கரமாக இருந்தது.

“இந்த நடு ராத்ரியில தூங்காமல் அப்படியென்ன யோசனை?” மனைவியின் குரல் கேட்டுத் திரும்பினேன். புரண்டு படுத்த யமுனா எதேச்சைமாக நான் தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு கேட்டிருக்கிறாள்.

“ஒரு கெட்ட கனவு…அதனால் தூக்கம் போயிடிச்சு.. “ என்று பெருமூச்சு விட்டேன்.

தூக்கில் தொங்கிய வசந்தி தான் கனவில் வந்தாள் என்று சொல்ல வில்லை. சொன்னால், கேட்டு நடுங்கிவிடுவாள். தூங்காமல் மிச்சப்பொழுதைப் போக்குவதோடு மட்டும் இல்லாமல், தொண தொணவென்று அதைப் பற்றி பேசியே கழுத்தறுப்பாள்.

ஏற்கனவே கனவால் தூக்கத்தைத் தொலைத்து விட்டேன் நான். பாவம் இவளாவது சற்று நிம்மதியாக இருக்கட்டுமே என்கிற கரிசனம் வேறு வந்தது.

என்னை கூர்ந்து பார்த்தவள் சடாரென்று எழுந்து வந்து விளக்கை ஆன் செய்த பிறகு என் எதிரில் வந்து நின்றாள்.

“ஏன் இப்படி வேர்க்கிறது ? கனவுல அப்படி என்ன பார்த்தேள்?” இடுப்பில் கை வைத்தபடி கேட்ட அவள் கேள்வி யில் அக்கறையும் கவலையும் தெரிந்தன.

“அதுதான் கெட்ட கனவுன்னு சொன்னேனே. திருப்பித் திருப்பி எதுக்கு இப்படி கேட்குறே?” என்றேன் எரிச்சலுடன்.

“எப்படி வேர்த்துக் கொட்டறது? ரொம்ப சர்வ சாதாரணமா கெட்ட கனவுன்னு சொல்றேள்…நல்லாவே பயந்து போயிருக்கேள்.” என்றவள் தொடர்ந்தாள். “எனக்குக் கூடத்தான் கனவுகள் வர்றது. ஒருநாளும் நான் பயந்துபோய் இப்படி நடுங்கினது கிடையாது. உங்களைப் போல் எனக்கு வேர்த்துக் கொட்டியதுமில்லை…” என்று ஒரு மாதிரியாக கிண்டலாகச் சொல்ல, கனவின் தாக்கத்தால் ஏற்கனவே அரண்டு போயிருந்த நான் கடுப்பாகிப் போனேன்.

“யமுனா, ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் இருக்கணும்னு சட்டம் கிடையாது. அந்த வகையில் பார்க்குறபோது என்னைக் காட் டிலும் நீ தைரியசாலிதான் ஒத்துக்கறேன்.” சற்று காட்டமாக நான் சொன்னது யமுனாவுக்கு என்னவோப்போல இருந்திருக்க வேண்டும் . இடுப்பில் வைத்திருந்த கையை தொங்கப் போட்டவள் என்னைப் பரிவோடு பார்த்தாள்.

“கோபிக்காதீங்க. உங்களை இந்த மாதிரி இருந்து நான் பார்த்ததில்ல. அதனால மனசு கேட்காமல் ஒரு உணர்ச்சி வேகத்துல அப்படி பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க!” என்றவள், “சரி, இப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருங்க, இதோ வரேன்.” என கூறிவிட்டு வெளியேறினாள்.

என்னை உட்காரச் சொல்லிவிட்டு எங்கு போகிறாள், என்ன செய்யப் போகிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை தன் தந்தையிடம் சொல்லி ஏதாவது ஐடியா கேட்பாளோ? இல்லை, தாயிடம் இருந்து யோசனை கேட்க முயல்வாளோ?

எதற்கு இந்த அர்த்த ராத்திரியில் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டும் என கோபமும் குழப்பமும் கொண்டிருந்த எனக்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் விடை கிடைத்தது,

ஏதோ ஒரு நாணயத்தை ஒரு மஞ்சள் துணியின் நடுவில் வைத்து கட்டி முடி போட்டவள் என் எதிரில் வந்து நின்றாள்.

என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள். பிறகு என் வலது கையைப் பிடித்து, மணிக்கட்டில் அந்த மஞ்சள் துணியை நன்றாகச் சுற்றி கட்டி முடிச்சு போட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மந்திரித்து காப்பு கட்டுகிறமாதிரி இருந்தது. என்ன ஏதென்று நான் கேட்கும் முன்னால் அவளாகவே சொன்னாள்.

“இந்த மஞ்சள் துணியில் இருக்கிறது பத்து ரூபா காயின். போன மாசம் எங்க வீட்டுல சுதர்ஸன ஹோமம் நடந்தது இல்லையா! அந்த ஹோமத்தில போட்ட காயின். மந்திரத்தால ஜபிச்சது. சக்தி வாய்ந்தது. எங்கப்பா ஆளுக்கொண்ணுன்னு கொடுத்தார். பத்திரமாக பூஜை யறையில் வெச்சிருந்தேன். அதைத்தான் உங்கக் கையில் கட்டியிருக்கேன். கொஞ்ச நேரத்தில் உங்க மனசில் இருக்கற பயம் போயிடும்.” என்று விளக்கம் தந்தாள்.

பயந்த குழந்தைகளை தர்காவிற்கு கூட்டிச் சென்று மந்திரிப்பார்கள்; அதைப் போல தேள் கொட்டிய இடத்தில் ஒரு குச்சியால் மந்திரம் சொல்லி தடவியும், பேய் பிடித்தவர்களை வேப்பிலையால் முகத்தில் அடித்து மந்திரிப்பதும் உண்டு. இவைகள் மாதிரி இதுவும் ஒரு மந்திரிப்பு சமாசாரம் என எண்ணிக்கொண்டேன்.

“சரி, சீக்கிரமே சரியாகிடும் பேசாமல் படுங்க.” என்றாள்.

“யமுனா, ஒரு சேஞ்சுக்கு கொஞ்ச நேரம் ஹால்ல இருந்துட்டு வரேனே!” என்றேன் அசட்டு சிரிப்போடு.

“சரி, லேட் பண்ணாதீங்க. இப்பவே மணி பனிரெண்டரை ஆயிடிச்சு, சீக்கிரம் வந்துடுங்க!”

தலையாட்டிவிட்டு எழுந்து ஹாலுக்குள் பிரவேசித்தேன். இரவு விளக்கு ஒளியில் ஹால் ரம்மியமாக இருந்தது. ஃபேனை ஆன் செய்துவிட்டு கீழே சாய்வு நாற்காலியைப் போட்டு சாய்ந்து கொண்டேன்.

உண்மையில் காப்பு கட்டிக்கொண்ட பிறகு என்னிடம் இருந்த அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தான் செய்தது. மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த காப்பில் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருக்கிறது. அதில் இருந்த சுதர்ஸன ஹோமத்தில் போட்டிருத்த பத்து ரூபாய் நாணயத்தின் மகிமைதான், என எண்ணிக் கொண்டு, காப்பை அடிக்கடி தொட்டுப் பார்த்து சிலிர்த்துக் கொண்டேன். சிறிது நேரம் கழித்து என்னையும் அறியாமல் உறங்கி விட்டேன்.

திடீரென விழிப்பு தட்டியது. கண்களைக் கசக்கியபடி தலை நிமிர்ந்து பார்த்த பொழுது ஹாலில் இருந்த கடிகாரம் மணி ஐந்து என காட்டியது. நாலரை மணிநேர உறக்கம். அதுவும் கனவு எதுவும் இல்லாமல் நிம்மதியான உறக்கம்! பரவாயில்லை காப்பு நன்றாகவே வேலை செய்கிறது என திருப்தியடைந்தபடி அனிச்சையாக வலது கை மணிக் கட்டைத் தொட்டுப் பார்த்தேன். சுரீர்ரென்றது எனக்கு.

கட்டடப்பட்டிருந்த காப்பைக் காணவில்லை. எழுந்து விளக்கைப் போட்டு சுற்றிலும் தேடினேன். ம்ஹூம்! எங்கேயும் காணோம். சே! பாவம் யமுனா! ஆத்மார்த்தமான நம்பிக்கையோடு காப்பைக் கட்டினாள்.இப்பொழுது தொலைந்து போய்விட்டது. எப்படி மாயமாக மறைந்தது என ஆச்சரியமாக இருந்தது. காப்பு தொலைந்து போனது தெரிந்தால் துடித்துப் போவாள்.

காலை நாலரை மணிக்கு எழுந்து கொள்பவள் அன்று ஐந்து மணி ஆகியும் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பது ஆச்சரியத்தைத் தந்தது . அவளை எழுப்பி, இந்த விஷயத்தை கூறவேண்டும் என்று மனதில் வருத்தத்துடன் விரைவாக அறைக்குள் நுழைந்தேன்.

யமுனா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. கள்ளம் கபடம் இல்லாத அப்பழுக்கற்ற முகம்! நள்ளிரவில் எனக்காக தன் உறக்கத்தை கொஞ்ச நேரம் துறந்தவள் … பாவம், உறங்கட்டும் என எண்ணி அந்த முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நான் சட்டென பார்வையை விலக்கினேன்.

இப்பொழுது என் பார்வையில் சிக்கிய அந்தக் காட்சி….. இரவு விளக்கு வெளிச்சத்தில் யமுனா வலது கை மணிக்கட்டில் கட்டியிருந்த அதே காப்பு பளிச்சென்று தெரிந்தது!

Print Friendly, PDF & Email

3 thoughts on “காப்பு!

 1. தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி !

 2. இந்தக் கதை, சக பணியாளர் ஒருவரின் உடல்நிலை பாதிப்பு மற்றும் அதன் பயத்தால் அவருக்கு ஏற்படும் மரணம் குறித்தும், ஒரு குடும்பத்தின் ஆழ்மன நம்பிக்கைக் குறித்தும் பேசுகிறது.

  என் கருத்துரை:

  குடும்பத்தில் கணவன்-மனைவி மத்தியில் நடக்கும் பல சம்பவங்கள் மற்றும் உரையாடல்களில் சமூக அழுத்தங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

  இந்தக் கதையில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு வேலையிட பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு இருந்ததா அல்லது இல்லையா? அதனால் மன அழுத்தம் ஏற்பட்டதா என்பதைக் குறித்தும் சில வரிகளைக் குறிப்பிட்டிருக்கலாம்.

  மருத்துவத் துறை மீது அவநம்பிக்கைகள் அதிகரிப்பதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருக்கலாம்.

  உறவினர்களின் ஒத்துழைப்பும் கூட அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான காரணங்களைக் கதையில் குறிப்பிடுவதற்கும் இடமிருந்தது. கதாசிரியர் நிறைய வாய்ப்புகளைத் தவற விட்டுள்ளார்.

  அதற்குக் காரணம், இன்றைய பெரும்பாலான குடும்பக் கதைகளில் இத்தகைய சமூக காரணிகள் கையாளப்படுவதில்லை என்று நினைக்கிறேன்.

 3. இந்தக் கதை, சக பணியாளர் ஒருவரின் உடல்நிலை பாதிப்பு மற்றும் அதன் பயத்தால் அவருக்கு ஏற்படும் மரணம் குறித்தும், ஒரு குடும்பத்தின் ஆழ்மன நம்பிக்கைக் குறித்தும் பேசுகிறது.

  குடும்பத்தில் கணவன்-மனைவி மத்தியில் நடக்கும் பல சம்பவங்கள் மற்றும் உரையாடல்களில் சமூக அழுத்தங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

  இந்தக் கதையில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு வேலையிட பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு இருந்ததா அல்லது இல்லையா? அதனால் மன அழுத்தம் ஏற்பட்டதா என்பதைக் குறித்தும் சில வரிகளைக் குறிப்பிட்டிருக்கலாம்.

  மருத்துவத் துறை மீது அவநம்பிக்கைகள் அதிகரிப்பதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருக்கலாம்.

  உறவினர்களின் ஒத்துழைப்பும் கூட அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான காரணங்களைக் கதையில் குறிப்பிடுவதற்கும் இடமிருந்தது. கதாசிரியர் நிறைய வாய்ப்புகளைத் தவற விட்டுள்ளார்.

  அதற்குக் காரணம், இன்றைய எழுத்தாளர்களின் பெரும்பாலான குடும்பக் கதைகளில் இத்தகைய சமூக காரணிகளைக் கையாள்வதில்லை என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *