கானல் நீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 8,795 
 
 

சுரேஷ் கூடத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். அவன் கைகள் வாரப் பத்திரிக்கையுடைய முன்னட்டையின் ஓரத்தை சுருட்டி விரித்தபடி இருந்தன. கூடத்து மின்விசிறி கடகட வென்று சத்தம் எழுப்பியபடி ஓடிக் கொண்டிருந்தது. செல்வியக்கா கல்யாணத்திற்கு முன்பு செய்த சம்க்கி குத்திய பந்தும், மணி பொம்மைகளும் அழுக்காய் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தன.

மேலே ஓடும் மின்விசிறியையும் அதற்கும் மேலாக உத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பல்லியையும் சற்று நேரம் வெறித்தான். மின்விசிறியின் ஓரத்தில் அழுக்கு பிரிபிரியாய் பார்டர் கட்டியது போல ஒட்டிக் கொண்டிருந்தது. பல்லி டியூப்லைட்டின் மீது வைக்கப் பட்டிருந்த முட்டையைத் கடந்து சற்று தயங்கி, தற்காலிகமாய் நின்றுக் கொண்டிருந்த பூச்சியை நோக்கி மெல்ல நகர்ந்தது. அந்த பல்லியை சற்று நேரம் பார்வையால் பின்தொடர்ந்தான்.

வெப்பம் மேல்தளத்திலிருந்து சூடாய் இறங்கியதில் கழுத்துப்பகுதி வியர்த்தது. கைகளால் அதை வழித்துவிட்டு தரையை நோக்கி பார்வையைத் தழைத்தான். அஜய் கிறுக்கிய கோணல்மாணலான சாக்பீஸ் கோடுகளும், வட்டங்களும் பெஞ்சிற்கு கீழாக இருந்த தரைப் பகுதியை நிறைத்திருந்தன. அந்தக் கோடுகள் போன தீபாவளிக்கு அம்மா சுட்ட முறுக்கை நினைவு படுத்தின. அம்மாவிற்கு பாட்டியைப் போல அடுக்காய் முறுக்கு சுற்ற வந்ததில்லை. சுத்தமாய், நேரத்திற்கு வேலைகளை முடித்துவிட்டாலும் அம்மாவால் தன் வேலைகளை ரசிக்க முடிந்ததில்லை என்றே அவனுக்கு தோன்றியது.

தெருவை அடைத்து தாமரைப் பூ அல்லது மீன் கோலம் போடும் சித்தியைப் போல அவள் என்றும் போட்டதில்லை. ஐந்து புள்ளிகளில் ஒரு கோலம், நட்சத்திரம், ஒன்றிரண்டு கம்பிக் கோலங்கள் என்று நான்கைந்து வகைகளில் அடங்கிவிடும் அவர்கள் வீட்டுக் கோலம், சித்தி வந்தால் மட்டுமே தன் எல்லையைக் கடந்து விரியும். மார்கழி மாதங்களில் செம்மண் காவியும், சாணியில் வைத்த பூசணிப்பூவும் மட்டுமே அதிகப்படி. ஆனாலும் பசுஞ் சாணி பின்னணியில் பளிச்சென்ற கோலம் கண்ணைப் பறிக்கும்.
வாசற்கதவைத் தாண்டி தெரிந்த தெருவை வெயில் உக்கிரமாய் தாக்கிக் கொண்டிருந்தது. காலையில் சாப்பிட்ட இட்டிலி ஜீரணமாகி வயிறு ‘கர்ர்ர்’ என்றது. தெருவில் மீனு மீனோய். . . வாளமீனு, வ்வ்வால் மினு, வஞ்சரம், கெளுத்தி, சங்கரா, மீனு மீனோ. . . என்றபடி சைக்கிளைத் தள்ளிக் கொண்டிருந்தான் மீன்காரன். எதிர் வீட்டு சியாமளா அக்கா ஒரு கிண்ணத்தில் வாங்கிய மீனுடன் உள்ளே சென்றுக் கொண்டிருந்தாள்.
சுரேஷ் இந்த வருடம் ஏழாவது முடித்து, முழு ஆண்டு விடுமுறைக்காக, முதல் முறையாக அம்மாவை விட்டு பிரிந்து செங்கத்திலிருந்து சென்னை வந்திருந்தான். பொதுவாய் அவனுக்கு மெட்ராஸ் மாமாவை மிகவும் பிடிக்கும். ஊருக்கு வரும் போதெல்லாம் கலர்கலரான கேக்குகளையும், இனிப்புகளையும் வாங்கி வருவார். வயது வித்தியாசம் பார்க்காமல் இவனுக்கு இணையாய் கிரிக்கெட் விளையாடுவார். கில்லியடிப்பார், பட்டாம்பூச்சி பிடிப்பார். அவர் அங்கு வரும் போது கொல்லி, கழனிகளில் இருவரும் சுதந்திரமாய் சுற்றித் திரிவார்கள். பறித்த மாம்பிஞ்சுகளும் கோவைப் பழங்களும் சுரேஷின் ட்ரௌசர் பையை நிறைத்திருக்கும். மாமாவுடன் நடப்பது இவனுக்கு பெருமையாயிருக்கும்.

‘என்னடா!, நீயும் சின்னப் புள்ள போல இவங்கூட சேர்ந்துகிட்டு. . .’ என்பார் அப்பா. மாமா பதில் சொல்லாமல் சிரிப்பார்.

அவனுக்கு பட்டணத்தின் மீது எப்போதும் ஒரு பிடிப்பு இருந்தது. சினிமாவில் பார்க்கும் கடைவீதிகளும், ஹீரோ வண்ண உடையணிந்து ஆடிப் பாடும் கடற்கரையும் அவனுள் ஆசையை ஏற்படுத்தியிருந்தன. பட்டணத்திலிருந்து ஒவ்வொரு விடுமுறைக்கும் தங்கள் ஊருக்கு வரும் பரத் போல நவீனமாய் உடுத்திக் கொள்ளவும், சுதந்திரமாய் மிதிவண்டியில் சுற்றித் திரியவும் ஆசை. ஆனால் தன் தெருவிலிருக்கும் இரண்டு கடைகளுக்கும், பக்கத்து தெருவிலிருக்கும் பள்ளிக் கூடத்திற்கும் மட்டுமே தனியே போயிருக்கிறான். வீட்டில் விளக்கு வைத்த பிறகு தனியே வெளியில் போவதை அம்மாவோ பாட்டியோ அனுமதித்ததில்லை.
ஊருக்கு செல்வதெல்லாம் குடும்பத்தோடு தான். சென்ற விடுமுறைக்கு சித்தி வீட்டிற்கும், அதற்கு முன் ஆண்டு வந்த பெரிய விடுமுறைக்கு கோபால் சித்தப்பா வீட்டிற்கும், அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் போயிருந்தான். மாடு கன்னைப் பார்க்கணும் என்று பாட்டி நின்றுவிட்டிருந்தாள். நான்காம் வகுப்பு படிக்கும் போது செல்வியக்காவின் திருமணத்திற்காக ஒருமுறை சென்னை வந்திருக்கிறான் சுரேஷ்.
இந்த விடுமுறையின் போது பாட்டிக்கு உடம்பு சரியில்லாததால் அம்மாவும் அப்பாவும் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஊருக்கு வந்திருந்த மெட்ராஸ் மாமா, அவனை மட்டுமாவது தன்னுடன் ஊருக்கு வரும்படி அழைத்தார்.

‘இவனை அங்க கூட்டிட்டுப் போய் ஒரு மாசம் எப்படிடா மேய்ப்ப?’ என்றதைத் தவிர அப்பா பெரியதாய் மறுப்பு தெரிவிக்கவில்லை. தனியாய் அனுப்புவதை நினைத்து அம்மா தான் கொஞ்சம் கலங்கினாள். அவளுடைய கலக்கம் தன்னுடைய பயணத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை எண்ணி பயந்தான் சுரேஷ். எப்படியும் இந்த முறை மாமாவுடன் ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என்று அழுத்தமாய் நினைத்துக் கொண்டான்

“போம்மா! நான் என்ன அங்கேயேவா இருக்கப் போறேன். ஒரு மாசத்துல திரும்பி வரப் போறேன். இதுக்குப் போயி. . .” பெரிய மனுசத்தனமாய் சமாதானப் படுத்தினான்.

“அப்பா, அப்பா, நான் மாமா கூட போயிட்டு வரேன்ப்பா!”

“செல்வி வேற ஊரிலிருந்து வந்திருக்கா! எப்படிண்ணா சமாளிப்பீங்க?” என்றாள் அம்மா

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ அனுப்பும்மா!” என்றார் மாமா.

அப்பா கைச் செலவிற்காக இருபது ரூபாய் கொடுத்தார். தங்கை சுரேஷை அதிசயமாய்ப் பார்த்தாள். இருபத்தி ஆறாம் தேதி சென்னையில் வேலையிருப்பதாகவும், அப்போது அவனை திரும்ப அழைத்து வருவதாகவும் சொன்னார், அப்பா. அவனுக்கு பெருமையாய் இருந்தது. ஒரே நாளில் தான் பெரியவனாகிவிட்டதாய் உணர்ந்தான்.

மாமா வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் தூரத்தில் கடல் தெரியும். இவனுக்கு கடல் மிகப் பெரிய ஆச்சரியம். சென்ற முறை வந்த போது ஒருநாள் மாலை கடற்கரைக்குச் சென்றிருந்தார்கள். பெரிய அலைகள் கால்களில் வந்து மோதும் போது திகிலாகவும் அதே சமயம் ஆனந்தமாகவும் இருந்தது. அப்போது மாமாவின் கைகளை கெட்டியாய் பிடித்துக் கொண்டிருந்தான். பெரிய அலைகள் வந்த போது மாமா அவனை தூக்கிப் பிடித்துக் கொண்டார். அப்போது ஏற்பட்ட பயத்தை நினைத்த போது வெட்கம் வந்தது.

பேருந்தில் வந்த போது குஷியாய் இருந்தது. பேருந்து நின்ற இடங்களில் மாமா வெள்ளரிக்காயும், பலாப்பழமும் வாங்கிக் கொடுத்தார். தன் துணிகள் நிறந்த பள்ளிப் பையை தூக்கிக் கொண்டு மாமாவைப் பின்தொடர்ந்தான். நடக்க இடமின்றி சாலை முழுக்க வண்டிகள் புகையையும் தூசியையும் கிளப்பிவிட்ட படி சென்றுக் கொண்டிருந்தன.

இன்னொரு பேருந்து பிடித்து வீட்டிற்கு வந்த போது வீட்டில் அத்தையும், செல்வியக்காவும், அஜய்யும் இருந்தனர். செல்வியக்காவை அவளுடைய திருமணத்தின் போது கடைசியாய் பார்த்திருந்தான் சுரேஷ். இப்போது குண்டாகியிருந்தாள்.

‘வாடா சுரேஷீ!’ என்று வாஞ்சையுடன் வரவேற்றாள் அத்தை.சாப்பிட்டு விட்டு மாடிக்குச் சென்று கடல் இருந்த திசையைப் பார்த்தான். அலைஓசை லேசாய் கேட்டது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.
அஜய் துறுதுறுவென்று எதையாவது கிளறிக் கொண்டே இருந்தான். சேர்களைக் கவிழ்த்துப் போட்டு ‘ட்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டியோட்டினான். ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை நடு கூடத்தில் இறைத்து கடை விளையாட்டு விளையாடினான். சமையல் பாத்திரங்கள் எல்லாம் அவனது விளையாட்டு பொருட்களாக மாறி இருந்தன. அதிலும் அவனுக்கு மிகவும் பிடித்த பொருள் இட்லி தட்டாக இருந்தது. அதை வைத்து தரையில் தட்டும் போது எழுந்த ‘தட் தட்’ என்ற ஒலி அவனுக்கு சந்தோஷமாய் இருந்திருக்க வேண்டும், சுரேஷிற்கு எரிச்சலைக் கிளப்பியது.

அஜய் இவனுடைய பையையும் விட்டுவைக்கவில்லை. ஜியாமென்டரி பாக்ஸில் இவன் கொண்டு வந்திருந்த பென்சில், ரப்பர்களையும், விஜய் படங்களையும் தோண்டியெடுத்தான். இவனுக்கு கோபமாய் வந்தது. ஆனால் அத்தை அஜயினுடைய சுறுசுறுப்பையும் எங்கே ஒளித்து வைத்தாலும் திறமையாய் கண்டுபிடித்துவிடும் புத்திசாலிதனத்தைப் பற்றியும் பெருமையாய் பேசினாள். ‘மாம்பழமாம் மாம்பழம்…’ என்று டி.வியில் விஜய் பாடும் போது அஜய் குதித்ததை அத்தை ‘பாரேன்! என்ன அழகாய் ஆடறான்’ என்றாள். இவனுக்கு காரணமில்லமல் விஜய் மேல் கோபம் வந்தது.

மாமா வேலைக்குப் போய் வந்து வீட்டிலிருக்கும் நேரத்திலெல்லாம் அஜய்யுடனேயே இருந்தார். குழந்தை என்றால் அதனைக் கொஞ்சிக் கொண்டே வேண்டும் என்ற விதியை யார் ஏற்படுத்தினார்கள் என்று கோபம் வந்தது சுரேஷீக்கு. கடற்கரைக்கு போகலாம் என்று சுரேஷ் கேட்ட போது, அஜய்க்கு சளிபிடித்துக் கொள்ளும் என்றார் மாமா.

சென்னையில் மாமா முற்றிலும் புதிய மனிதராய் இருந்தார். கிரிக்கெட் விளையாட கூப்பிட்டால் அஜய்யுடன் ஒளிந்துபிடித்து விளையாடச் சொன்னார். வெளியே அழைத்துப் போகச் சொன்னால், அஜய்க்கு கஷ்டமாயிருக்கும், நாம் இங்கேயே காற்றோட்டமாய் மொட்டை மாடியில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கலாம் என்றார். இவனுக்கு அஜய்யை ஏனோ பிடிக்கவில்லை. அவன் பேசும் மழலையும் அவனுடைய சிரிப்பும் கோபத்தை ஏற்படுத்தியது. யாரும் பார்க்காத போது அஜய்யைக் கிள்ளிவிட வேண்டும் போல இருந்தது.

மாலையில் கடலைப் பார்த்தபடி மொட்டை மாடியில் நின்றிருந்தான். நீல நிற கோடாய் தூரத்தில் தெரிந்தது. மிக லேசாய் அலைச் சத்தம் கேட்டது. அழைத்துப் போகும் படி மாமாவை அவன் கேட்கவில்லை.
கண்களை மூடி படுத்திருக்கும் போது, மழை அதிகம் பெய்து ஏற்பட்ட வெள்ளத்தில் அஜய் மூழ்கிவிடுவதாகவும், இவன் அவனை நீந்தி காப்பாற்றுவதாகவும், மாமாவும் அத்தையும் சந்தோஷத்தில் இவனை கட்டியணைத்து புகழ்வதாகவும், இனிப்புகள் நிறைய வாங்கிக் கொடுத்து ஊரைச் சுற்றிக் காட்டுவதாகவும் கற்பனை செய்துக் கொண்டான். சந்தோஷமாய் இருந்தது.

“டேய் சுரேஷ், ஓடிப் போய் நாடார் கடையில அஜய்க்கு ரெண்டு முட்டை வாங்கிட்டு வாடா!” என்றாள் செல்வியக்கா. கையில் சில்லறையை வாங்கிக் கொண்டான்.

“ஒரு ரூபாய்க்கு நீ ஏதாவது வாங்கிக்கோ” என்றாள். வீட்டை விட்டு வெளியே வந்த போது வெயில் சுள்ளென்று உறைத்தது.

“முட்டைய உடைச்சுடாம பத்திரமா கொண்டு வாடா. . .”

தெருவில் ஒன்றிரண்டு மோட்டார் சைக்கிள்களையும், மிதிவண்டிகளையும் தவிர வேறு நடமாட்டம் எதுவும் இல்லை. தெருவோர மரங்கள் ஒன்றிரண்டு வெட்டப்பட்டு அடிமரங்கள் மட்டுமே நின்றுக் கொண்டிருந்தன. வெட்டப் பட்ட பகுதியைத் தொட்டுப் பார்க்க ‘சொர சொர’வென்றிருந்தது.

மஞ்சள் பெயிண்ட் அடித்திருந்த வீட்டின் வெளியே இருந்த கோணியை இழுத்துவிளையாடிக் கொண்டுருந்த நாய் ஒன்று இவனையே முறைத்தபடி ‘வ்ழ்ழ்ழ்ழ்ர்ர்ர்ர்’ என்றது. அதைக் கண்டுகொள்ளாமல் இவன் நகர, கோணியை விட்டுவிட்டு இவன் பக்கமாய் நகர்ந்தது அது. இவன் சற்று நிதானித்தான். வேகமாய் ஒடினால் கண்டிப்பாய் துரத்தும் என்று தோன்றியது. “கடவுளே, கடவுளே காப்பாத்து!” என்றபடி விறைப்பாய் நடந்து அதைக் கடந்த போது அவனுக்கே அவனுடைய தைரியம் மிகவும் பிடித்திருந்தது.

சற்று தூரம் சென்ற பின் மெதுவாக பின்னால் திரும்பி அதனைப் பார்த்தான். நாய் இப்பொது கோணியையும், அவனையும் மறந்துவிட்டு வாலை ஆட்டிய படி நிழலுக்காய் சென்றுக் கொண்டிருந்தது. அவனுடைய நடையில் துள்ளல் கூடியது.

நாடார் கடையில் நான்கைந்து பெண்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். கடையிலிருந்து மிளகாய், தனியா, அரிசி மற்றும் ஈரக் காய்கறிகளின் நெடி கலவையாய் வந்தது. நாடாரின் சைக்கிள் கடைக்கு வெளியே இருந்த பந்தகாலில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. நாய் ஒன்று தரையை முகர்ந்து பார்த்தபடி கடையைச் சுற்றிக் கொண்டிருந்தது.

“அண்ணே! ரெண்டு முட்ட கொடுங்கண்ணே” என்றான்.

அண்ணாச்சி ஒரு பொட்டலத்தை நூலால் சுற்றிக் கொண்டிருந்தார். இழுவைக்கேற்ப நூல் கண்டு சுழன்றவாரே கணம் குறைந்துக் கொண்டிருந்தது. அவருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே தடுப்பாய் போடப்பட்டிருந்த நீள மேஜையில் காய்கறிகள் வைக்கப்பட்டிருந்தன. பெரிய கண்ணாடி பாட்டில்களில் முறுக்கு, ஆரஞ்சு மிட்டாய் மற்றும் பிஸ்கட்டுகள் இருந்தன.

“ஏம்மா, வெண்டிக்காய ஒடிக்காத!”

தட்டி ஓரமாய் படுத்திருந்த மற்றொரு நாயின் காலில் அடிபட்டிருந்தது. அந்த காயத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

“அண்ணே, ரெண்டு முட்டை!”

மண் தரையை கோழிகள் கிளறிக் கொண்டிருந்தன. தரையெங்கும் தண்ணீர் கொட்டி சத சத வென்று இருந்தது.

“தம்பி! கட்ட மேல சாயாத! கீழ விழுந்துடும். . .”

“ஒரு கிலோ பொன்னி அரிசி, கால் கிலோ துவரம் பருப்பு, அப்புறம் என்னம்மா. . .”

கால் வலிப்பது போல இருந்தது. சட்டைக்குள் வியர்வை பிசுபிசுத்தது. தண்ணீர் தாகம் எடுத்தது.

“அண்ணே எனக்கு முட்ட கொடுத்திடுங்கண்ணே”

“தேங்காய் பத்தையெல்லாம் கிடையாதும்மா. அர மூடி வேணுமா?”

“தேங்காய் தண்ணிய கீழே ஊத்திடாதீங்க. கொட்டாங்குச்சியில கொடுங்க”

“ ஏம்பா! சைக்கிள்ள கைய வக்காத! கீழ விழுந்திடும்.”

“ஏந்தம்பி உனக்கென்ன? ரெண்டு முட்டையா!”

“அப்படியே ஒரு முறுக்கு கொடுத்திடுங்க!”

நள்ளிரவு அவசரமாய் சிறுநீர் முட்டிக் கொண்டு வந்ததில் கண்விழித்தான். அறைக்குள் மெல்லிய வெளிச்சம் ஜன்னல் வழியாக பரவிக் கொண்டிருந்தது. மின்விசிறி மிக வேகமாய் சுழன்றுக் கொண்டிருந்தது.

கொசுவர்த்திச் சுருளின் வாடை அறை முழுவதும் பரவியிருந்தது. அதன் தீக்கங்கு பளிச்சென்று தெரிந்தது. இவனுக்கு சற்றுத் தள்ளி அத்தை படுத்துக் கொண்டிருந்தாள். மாமா கட்டிலின் மீது தூங்கிக் கொண்டிருந்தார். பாயிலிருந்து எழுந்தான். ஜன்னலுக்கு வெளியே பார்க்க பயமாய் இருந்தது. தூங்குபவர்களை எழுப்ப யோசனையாகவும் இருந்தது.

இருட்டில் மெல்ல நடந்து கதவிடம் சென்று கீழ் தாழ்பாளை திறந்த போது தான் மேல் தாழ்பாளும் போடப்பட்டிருந்ததை உணர்ந்தான். கால்களை இடுக்கியபடி சிறுநீரை அடக்கிக் கொண்டு, சத்தமில்லாமல் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டான். மெல்ல கதவைத் திறந்தான். வீட்டை விட்டு தள்ளி இருந்த கழிவறைக்கு வேகமாய் ஓடினான். அப்படியும் காற்சட்டை லேசாய் நனைந்துவிட்டது.

கழிவறையின் கதவு கிரீச் என்று சத்தமிட்டது, அந்த நள்ளிரவில் பயத்தை ஏற்படுத்தியது. அதை முழுக்க மூட தைரியமின்றி பாதி திறந்தே வைத்தபடியே சிறுநீர் கழித்தான். காற்சட்டையின் நனைந்த பகுதியை லேசாய் தண்ணீர் விட்டு கையால் துடைத்தான்.

போகும் போது இல்லாத பயம் திரும்பும் போது வந்தது. கழிவறையைச் சுற்றி இருந்த செடிகளும், உள்ளிருந்து குரல் கொடுத்த ராப்பூச்சிகளும் பயத்தை ஏற்படுத்தின. இருள் தன் ஆயிரம் கரங்களை விரித்தபடி அவனை விழுங்கக் காத்திருந்தது போல தோன்றியது. சென்ற மாதம் தற்கொலை செய்துக் கொண்டு செத்துப் போன செல்லம்மா பாட்டி நினைவிற்கு வந்தார். அதே நேரம் செங்கத்தில் செத்துப் போன பாட்டி இங்கே வருவாளா என்ற ஐயமும் தோன்றியது. யாரோ தொடர்வது போல பிரமை ஏற்பட்டு உடல் சிலிர்த்தது. சுற்றும் முற்றும் பார்க்கக் கூட பயமாய் இருந்தது.

“யாராவது என்கிட்ட வந்தா அவ்வளவு தான், சொல்லிட்டேன்” என்று சத்தமாய் சொன்னபடி சுற்றும் முற்றும் பார்க்காமல் வேகமாய் ஓடி வந்து, கீழ் தாழ்ப்பாளை மட்டும் போட்டுவிட்டு படுத்துக் கொண்டான். மூச்சு வேகமாய் உள்வந்து வெளியேறியது. பயமாயிருந்தது. போர்வையை முகம் வரை இழுத்து போர்த்திக் கொண்டான். ஈரமான காற்சட்டை கசகசத்தது. உடனே அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அதற்கு இன்னும் பதிமூன்று நாட்கள் இருந்தன.

– 28 அக்டோபர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *