வெளிச்சம் வருவதற்கு முன்னே உள்ளுள் ஓர் அழைப்பு மணி எழுப்பி விட்டது.. உள் செயல் பாட்டை கட்டு படுத்த முடியுமா? அது நம்மையும் மீறியல்லவா பயணம் செய்து கொண்டிருக்கிறது… ஏதோ ஒரு துள்ளல், ஒரு தவிப்பு… சிறு வெளிச்சம் வந்தால்கூட போதும்.. எவ்வளவு ஏற்பாடுகள்? ஆயிரமாயிரமாய் உரையாடல்கள், ஒப்பனைகள் என்னேரமும்… காற்று சற்று அதிகமாக எட்டி பார்க்கும் போது, போர்வையை இழுத்து மூடி கொள்ளும் போது எப்படியோ சிலிர்த்து விடுகிறது.. ஆனால் இப்படியே மன உரையாடல் அதிகரித்து போய், சிறிதளவேனும் உற்சாகம் குறைய நேர்ந்தால் நாளை படுக்கை ரணம்… வருபவனின் 72 மணி நேரமும் அழகாக அமைய இவரின் மனதுள் நடந்த உரையாடல்கள் குறைய பட்டு, ஒரு மாற்றத்திற்கேனும் எழுந்து சென்று திரும்பவும் வந்து படுத்த உடன் கொட்டாவிகள் சூழ்ந்து கொண்டன…
கண் முழிக்க, ரவி ஷங்கர் குழைந்து கொண்டிருந்தார்.. இவருக்குள் பகீர்… எழுந்து அந்த எதிர் பாரா துடிப்புடன், அடுத்த அறைக்கு சென்ற போது யெஹூடி மெனுஹீனும், ரவி ஷங்கரும் இவர் கண்களில் பட்டு கொஞ்ச நேரத்தில் அவருக்கு வந்த எதிர் பாராத துடிப்பு அருதியாய் கொஞ்ச நாட்களுக்கு இருக்க போகும் சங்கதி தெரிந்தது… சமையல் கட்டுக்கு சென்று, ‘எப்போ வந்தான்?’ என்று விசாரிக்க, அவர் மனைவியின் முகம் சுருங்கித்தான் போனது… அவள் எதிர் பார்த்த கேள்வி வேறு? எவ்வளவு தான் நிறைய நிறைவான விஷயங்கள் தொலைநோக்கி இருப்பினும் கண்ணுக்கு தெரியும் அந்த தடுப்பை எடுத்து விட தான் மனம் துடிக்கிறது.. ஆனால் அவ்வளவு எளிதில் எடுத்து விட முடிகிறதா என்ன? ‘கார்த்தால தான் வந்தான்’.. ‘ஓ… அவன் எப்போ வர்ரான்?’ ‘சரியா தெரியல.. சாயங்காலம் போல வருவான்னு நினைக்கிறன்..’ ‘அழைக்க யார் போறா?’ ‘அம்பி போறேன்னு சொன்னான்…’
அவர் கண்ணை முழுதாக விரிக்க விடாமல் செய்து கொண்டிருந்த பூஞ்சை ஒவ்வொன்றையும் தலை குனிந்த வாரே மிகவும் சலிப்போடும் கவலையோடும் எடுத்து கொண்டிருந்தார்… ‘இவன் எப்போ போவான்?’… அவளின் ஏறெடுத்த பார்வையிலேயே தெரிந்து விட்டது, பதில் வராத கேள்விகளுள் இதுவும் ஒன்று என்று… ஹாலின் நடுவில் சுல்தான் கானும், ஹுசைனும்… திரும்பி பார்க்காமல் நேரே சென்று விட்டார்… சாரங்கி வீடு முழுக்க ஒலிக்க, பழைய தமிழ் படங்களின் சோக முடிவுகள் தான் இவர் மனதில் ஓடி கொண்டிருந்தது… மிகவும் பொறுமையாக அந்த வேண்டா துடிப்பு அமைதியடைய வெறுப்பு சுய உரையாடல்கள் தொடங்க,அது மேலும் மேலும் எழும்பி அவர் பார்வை ஏதோ ஓரிடத்தில் நிலை குத்தி விட்டது.. அதை கவனித்த அந்த பக்கமாக போன அவர் மனைவி, சட்டென்று ஏதோ ஒரு வஸ்துவை சத்தமாக கீழே போட்டு அவரை நிலைக்கு கொணர செய்தாள்… எல்லாம் முடித்து காப்பி குடிக்க, குனிந்த தலையுடன் மறுபடியும் சமையல் கட்டுக்கு… ‘என்ன எழவு இது, ஒலிஞ்சுண்டு சமையல் கட்டுக்குள்ள… எனக்கென்ன சங்கோஜம்.. இவன் வந்தா என்ன… என் வீடு.. ஒடுக்கிண்டு போக வேண்டியது நானா?..’ தபலாவின் வேகம் கூடும் நேரம் இவருள்ளும் ஏதோ ஒன்று கூடி, ஹாலுக்கு கோபத்தால் எதையோ தாக்க போவது போல் போய் நாற்காலியில் உட்கார்ந்தார்… அவன் எதிரே… அவனாலும் இவர் கண்ணை பார்க்க முடியவில்லை.. இவரும் ஏதோ ஒன்றை அவருள்ளுள் நிரூபிக்க போய் உட்கார்ந்தார்… அவர் எங்கேயோ, அவன் எங்கேயோ பார்வையில்… ‘சாப்பாடு ஆயிடுத்தா?’ ‘ஆயிடுத்து.. வர்றப்பவே… எப்படி இருக்கேள்?’ ‘ஹ்ம்ம்… ஏதோ..’ ஒற்றை கேள்வியை கேட்டு, மற்றொன்றை வாங்கி பதிலளித்து, உள்ளே சென்றார்…
ஒரு முறை, நேற்றிரவு செய்து வைத்த எல்லா வற்றையும் மேற் பார்வை பார்த்து கொண்டிருந்த போது, ‘நல்ல வேல நேத்தே முடிச்சோம், இல்லேனா இவனையும் வெச்சுண்டு இத ரகசியமா எங்கேர்ந்து பண்றது… இவனும் நாலு நாலைக்கு டேரா போட்டுடுவான்… ம்ச்…’ அதை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தலைமாட்டில் இருந்த கல்யாணியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்… தேரை எதிர் பார்க்கும் சிறுமி… இவர் வேரொன்றை எதிர் பாத்து.. எப்படியெல்லாம் தொடர்பு புலன் படுகிறது… அந்த கதையில் தேரை அந்த சிறுமி பார்ப்பாளா? இவர் கதையை முடிக்காமல், மறுபடியும் ஹாலினுள் செல்ல, பாலு கால் நீட்டி அல்குல் தெரியுமாறு கை பின்னங்கழுத்தில் இருக்க, தலை லேசாக ஆடி கொண்டிருந்தது கண்கள் மூடியவாறு.. ‘எவ்வளவு நாள்?’ இவன் சட்டென்று விழித்து,’சனி’ என்றான்… இவர் தோசை சாப்பிட மிகவும் அதிருப்தியுட்டன் போனார்.. ‘இருந்தாலும் என்ன, வருபவனை நாமல்லவா சுமக்க போகிறோம்…’
சாயங்காலம் அவர் தெரு முனையிலேயே வந்து அமர்ந்து விட்டார்… போன முறை கிருஷ்ணன் வந்திருந்த போது, அவனிடம் முழு நேரமும் இருந்த அன்யோன்யம் வேறு எப்போதும் இருந்ததில்லை… வருடத்திற்கு எப்போதோ ஒரு முறை… அதுவும் அம்பி வரும் நேரம் மட்டும்… வருகையில் எவ்வளவு கொண்டாட்டம்! எதற்கு? ஏதோ ஒன்றை இழுத்து செல்ல ஏதோ ஒரு கொண்டாட்ட மன நிலை தேவை படுகிறது.. இந்த முறையும் பை நிறைந்து தளும்ப கொண்டு வருவான்.. ‘இந்த அம்பி தான் அடிக்கடி வந்தால் என்ன… இல்லை இவனே அடிக்கடி வந்தால் என்ன… ஆமாம் இந்த ‘சாட்டியகுடி’யில் பெரிதாக பார்த்து கிழிக்க என்ன இருக்கிறது… இடையில் காலையிலிருந்தே வீட்டை சங்கீத சபாவாக்கி கொண்டிருந்தவன் எதற்கு வந்திருக்கிறான் என்று வேறு தெரியவில்லை…’ ஓயவே ஓயாத ஓட்டங்கள்…
கிருஷ்ணனை நாகையிலிருந்து கூட்டி வரும் போதே, ‘சித்தப்பாவும் ஊர்ல இருக்கா…’ என்று அம்பி சொன்னார்… கிருஷ்ணனுக்கு தாத்தாவுடன் இருக்க போகும் இந்த 3 நாட்கள் முக்கியமாக பட்டது.. போன வருடம் முழு மூன்று நாளும் அடித்த இலக்கிய அரட்டைகள் மறக்க கூடியதா என்ன… ‘வீர பத்ரபிள்ளை அப்படின்னு ஒரு கதாபாத்திரத்த வெச்சு பின்னி எடுத்திருப்பார்…’ ‘என்ன தான் சொல்லு இவர மாதிரி எழுத முடியாது… பல்லுக்கு மேல ஈறு தெரிய சிரிக்கிற ஒருத்திய அழகியால காமிச்சிட்டார்’ ‘உள் மன உளவியல் எழுத்து, இந்த ஆள் சக்க போடு போட்டிருப்பான், என்ன குளிக்க போன எடத்துல அப்படியே போயிட்டான்…’ ‘இவன் எல்லாம் எழுதலென்னு எவன் அழுதான்… எப்போ பாத்தாலும் செக்ஸு, செக்ஸுனு…’ ‘ஆமாம் இவர் ஒருத்தரு ஆரம்பிச்சிடுவாரு, ஒரு மரத்த பாத்துட்டு ‘அதோட எனக்கு ஆயிர கால தொடர்பு’ அப்படி இப்படினு’… ‘அப்படி என்ன தான் இந்த பின் நவீனத்துவமோ… ஏதாவது புரியிற மாதிரி எழுதுனா தான…’ இப்படியான சம்பாஷனைகள் கடந்த சில முறைகள் தான் நடந்திருந்தது இருவருகுள்ளும்…
கிருஷ்ணன் வருவதை தொலைவிலிருந்தே உறுதி செய்து கொண்ட பின் முகத்தில் இருந்த சிடு சிடுப்பு மறைய தொடங்கியது… அலறி அடித்த காற்றினால் முடிகளெல்லாம் கலையபட்டு, கனமான தோல் பையை வண்டியின் முன்னால் இறக்கி வைத்துவிட்டு, பெரிய கை குலுக்கலுடன் 73 வயது இளவயது காரருடன் தெருவில் நடக்க தொடங்கினான்… ‘பிரயாணம்லாம் சௌகரியமா இருந்ததா?’ ‘எப்போ கெளம்புன?’ ‘அதிசயமா ஆஃபீஸ்ல லீவெல்லாம் கொடுக்கராளே.. பரவாயில்ல…’ என்று சம்பிரதாய பேச்செல்லாம் தெருவிற்கும் வீட்டிற்கும் உள்ள தொடர்பு புள்ளியில் முடிந்தது…. திண்ணையில் உட்கார்ந்ததும், இந்த முறையாவது திண்ணையில் படுத்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது கிருஷ்ணனுக்கு…. ‘பொங்கல் நேரமாச்சே… சாட்டியக்குடி ஸ்பெஷல் ஏதாவது?’ ‘அட ஒண்ணும் இல்ல… இங்க என்னத்த ஸ்பெஷல்.. நீ வந்தது தான் ஸ்பெஷல்…’ உள்ளே பாட்டியையும் பார்த்து விட்டு, பின் கட்டுக்கு சென்று தோட்டத்தை பார்க்க போகும் போது, வீ.ஜீ.ஜாக் வயலின் கம்பிகளின் வழியாக கண்ணீரை வர வழைக்கும் அளவுக்கு உருக வைத்து கொண்டிருந்தார்… ‘தாத்தாவின் புதிய பரிணாமம் போல என்று எண்ணினான்’..
‘ஹெல்லோ சார்… எப்படி இருக்க…?’ பின் பக்கமிருந்து சித்தப்பா… சிரித்து கொண்டே,’நன்னாயிருக்கேன் சித்தப்பா, ஷெரின் சித்தி வரல?’ ‘இல்லப்பா, க்ரிஸ்துமஸ் வந்துதோல்லியோ, அப்போ அவ அம்மா ஆத்துக்கு போனா, இந்த மந்தெண்டு தான் வருவா…’ சற்று இடைவெளி, இருவரும் கீழே குனிந்து கொண்டிருக்க, பாலுவே மறுபடியும், ‘நீ எந்த கம்பெனீனு சொன்ன? அப்பா சொன்னா.. பேரு மறந்துடுத்து…’ ‘ம்யூ சிக்மானு ஒரு பிஸினெஸ் சொல்யுஷன் கன்ஸெர்ன்…’ ‘ஓஹோ… சரி…’ அவர் சற்று நகர்ந்ததும் கிருஷ்ணன் அவரையே பார்த்து கொண்டிருந்தான் ‘எவ்வளவு நாட்கள் ஆயிற்று இவரை பார்த்து, ஆள் என்ன இப்படி மாறி போய் விட்டார்..’
பையை பிரித்து, 6 புத்தகங்கள் எடுத்து தாத்தாவின் முன் நீட்டினான், முகத்தின் பல சுருக்க விரிவுகளின் மூலம் ஆச்சரியத்தை காட்டியவாறே, ‘கொற்கையா? சூப்பர்டா…. ஜே.டி.க்ரூஸ்ல?’ ‘ஜே இல்ல, ஜோ’ ‘ஏதோ ஒண்ணு.. வேற என்னென்ன..’ என்று ஒவ்வொரு புத்தகமாக எடுத்து ஒரு சில பக்கங்களை புரட்டி ஆழ்ந்து கொண்டிருந்தார்… ‘போன தடவ அந்த ‘அப்பாவின் வாசம்’ சிறுகதை கேட்டிருந்தேனே…’ ‘அது தெரியில தாத்தா, நானும் நிறைய தேடி பாத்தேன்… யாரு ரைட்டர்னு கர்ரெக்டா சொல்லு பிடிச்சிடலாம்…’ உள்ளிருந்து, ‘இப்போ தான வந்தான் அதுக்குள்ள எதுக்கு அவன பிடிச்சு பிடுங்குறேள்… டே நீ போய் கை கால் எல்லாம் அலம்பிண்டு வா, சாப்டலாம், அம்பியையும் சித்தப்பாவையும் கூப்பிடு, நாழியாரது… மத்தவாளுக்கெல்லாம் வேலை இருக்குறதே தாத்தாக்கு தெரியாது… எப்போ பார்த்தாளும் புக்க வெச்சுண்டு உட்கார்ந்திடுவா…’ அன்றாட சலிப்பு என்றாலும் கோபம் கொஞ்சம் கூடவும், உண்மையும் தான்… ‘எனக்கு கார்த்தாலேயே ஆயுடுத்து…’ நீ போய் சாப்புடு’ என்றதும் அப்பாவுடனும், தாத்தாவுடனும் சாப்பிட உட்கார்ந்தான்… வெத்த குழம்பு, பூண்டு ரசம், அரிசி அப்பளம், சாப்பிட்டு ஓசை வரும் படியாக குறட்டையோடு நித்திரை காண வேண்டும்…
எழுந்ததும் பல் தேய்க்க வேண்டிய கசப்பு வாயில் இருந்தது… ஆனால் சோம்பல் அதையும் தாண்டி ஆக்கிரமித்து கொண்டதால், பக்கத்தில் இருக்கும் குளத்துக்கு ஒரு நடை நடந்தால் கொஞ்சம் விழிப்புணர்ந்து வேறெதாவது செய்யலாம்… தாத்தாவையும் அழைத்து செல்ல ஓரத்தில் ஒரு யோசனை.. அதுவாகாவே இயல்பாக இலக்கிய உரையாடல்கள் தொடங்க வேண்டும்… ஆனால் சில நேரம் பிடுங்கி தான் எடுக்க வேண்டி இருக்கிறது…. அவரிடம் சென்று ‘அந்த லெட்டெர்ஸ்லாம் கொடு’ என்று எவ்வளவோ முறை படித்து பார்த்து நெகிழ்ந்த கடிதங்களை திரும்பவும் கேட்டான்… எழுத்து சித்தர், கடித எழுத்தாளர், கரிசல் எழுத்தாளர், வரலாற்று எழுத்தாளர் என்று பல பேருடைய கடிதங்கள் தாத்தாவுக்கு, அவரவர்கள் கையெழுத்தில்…. இதை எடுத்து காண்பித்ததுமே எப்போதும் போல் அதி உற்சாக மன நிலை காற்றின் வழியே எங்கிருந்தோ வந்து விடும் தாத்தாவுக்கு… முகம் முழுக்க ஒரு வெற்றி களிப்பு… உதடுகள் விரிந்தே இருக்கும்… ‘இது அவருக்கு நான் ஒரு லெட்டெர் போட்டிருந்தேன், அதுக்கு அவர் ரொம்ப சிலாகிச்சு பதில் அனுப்பிச்சது…’ ‘இது… அவர் நம்ப ஆத்துக்கு வந்து தங்க சொகரியபடுமானு கேட்டு அனுப்பிச்சது..’ இப்படி எல்லா கடிதத்துக்கும் ஒரு விளக்கம் கொடுத்து கடைசியில் இப்படி முடியும், ‘எல்லார் கிட்டயும் ஒரு கடித தொடர்பு இருந்தது, அந்த கிழட்டு சிங்கத்த தவிர…’
வாசித்த அனைத்தையும் தெருவுக்கே கேட்பது போல் சொல்லி, விவாதித்து நடந்து போய் கொண்டிருந்தனர்…. எதிரில் வந்த சித்தப்பாவை பார்த்த கிருஷ்ணன், ‘இப்போ தான் வர்றேளா, குளத்துக்கு போயிட்டு…?’ ‘ஆமாமாம், அண்ணாவும் பின்னாடி வர்றா…’ என்றார் பதிலுக்கு… அந்நேரத்தில் தாத்தாவின் முகம் செயற்கையாக ஒரு செடியின் பக்கம் கவனம் திரும்பியது… அதைபறித்து எடுத்து வந்து, வாயில் போட்டு கொள்வது போல் சிறிது கிள்ளி திணித்தவுடன், கோணல்மானலாக சுழிவை கண்டது முகம்… அந்தியில் கதிரவனின் தயவு கடைசி முறையாக முகத்தில் அடித்தது… கிருஷ்ணன் சட்டையை கழட்டியவுடன்,தாத்தாவின் வழக்கமான கேள்விகள் சில, ‘இன்னும் போட்டுக்கலையோ…? உன் அப்பன சொல்லனும்… அததுக்குன்னு ஒரு காலம் இருக்கு… அதுக்குள்ள பன்னனும்..’ இவன் எதுவும் பேசாமல் ஜலத்தில் இறங்கினான்… இருட்ட தொடங்கியதும் லேசான நடுக்கம் உடலில்… துண்டை எடுத்து வரக், வரக்கென்று முதுகை நான்கு சொறி, கழுத்து காது தலை என்று அழுத்தி தேய்த்து கொண்டு எதிரில் இருக்கும் அம்பாள் கோயிலுக்கு நேராக சென்றனர்… இவனுக்கு பெரிதாக மனமில்லாவிட்டாலும், கோயிலின் அந்த இடிந்து போன கட்டிடங்கள், சுற்றி எங்கும் சருகுகள், சுவர்களில் இருக்கும் கறுப்பு கறை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக உள் பிரகாரத்தில் சென்றதும் வரும் வௌவால் வாசனை என்று இவனுக்கும் கோயிலுக்கு போக பல காரணங்கள்… ‘யாரு மூர்த்தியா, அப்பா என்ன பண்றா ஆத்துல, அவர் வரலையா..?’ சிரித்து கொண்டே,’இல்ல மாமா, ஏதோ வேளையா சிக்கல் வரைக்கும் போயிருக்கா.. யாரு பேரனா….? அம்பி அண்ணா வந்திருந்தா பாத்தேன்… சின்ன அண்ணாவும் வந்திருக்கா போலிருக்கு….?’ நல விசாரிப்புகள் எல்லாம் இப்போதெதெற்கு என்பது போல் தாத்தா சட்டென்று பேச்சை மாற்றி,’நேத்து அம்பாளுக்கு சந்தனத்துல கண்ணு வெச்சியே… வெய்யுன் இருந்தது….’ என்றார்…
இரவு மீண்டும் ஷெனாயின் வழியே பிஸ்மில்லா வீட்டின் மூலைகளிலெல்லாம் நிரம்பி கொண்டிருந்தார்…. இவனுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை என்றாலும், சித்தப்பாவின் அறைக்கு சென்று, லேசாக எட்டி பார்த்தபோது, கண்கள் மூடி லயித்து கொண்டிருந்தவர் மௌனம் கலையப்பட்டு, வந்திருந்தவனை உள்ளே வரும்படி சமிக்ஞை செய்தார்… இவரிடம் பேச என்ன இருக்கிறது என்பது போன்ற தயக்கம் இவனுக்கு இருந்தாலும், ஏதாவது பேசலாமே என்ற எண்ணத்துடன் இருந்தான்…. கலைந்த சிகையும், கழுத்தில், கையில் தங்க உடல் ஒட்டிகளும் என்று கொஞ்சம் பார்ப்பவர்களுக்கு மிரட்சியடைய தான் இருந்தார்… ‘என்ன பொழுது போரதா? இல்ல கட்டி இழுக்க வேண்டியிருக்கா? ஏதோ போரது… அதான் தாத்தா இருக்காளே…. எனக்கு தெரிஞ்சத தத்துபித்துனு உளறுவேன்… அவர் சிரிச்சிண்டே என்னையும் ஏதோ ‘நன்னா வாசிச்சிருக்க’னு ஏதோ சொல்லுவார்…’ சுற்றியிருந்த சீடிக்கள் மீது கண்களை மேய விட்டு விட்டு,’எப்படி இதுல இண்டெரெஸ்ட்?’ ‘ஏதோ கேட்க ஆரம்பிச்சேன்… அப்படியே வளர்ந்து டெய்லீ கேக்குற மாதிரி பழக்கமாயிடுத்து….’ ஷெனாய் சற்று இடைவெளி விட சுற்றிலும் இருந்த நிசப்தம் ஊசி போல் காதில் நுழைய எத்தனித்து… ‘தாத்தாவுக்கு நிறைய புக்ஸ் கொடுத்திருக்க போல…. நிறைய படிப்பியோ?’ ‘அப்படி எல்லாம் இல்ல… தாத்தாவுக்கு பேரன்னு கொஞ்சமாவது நிரூபிக்கனும்ல… அப்பாவும் படிப்பா… ஆனா டிஸ்கஸ் செய்றது தாத்தாவோட தான்… நீங்க வாசிப்பேளா?’ ‘அய்யோ நமக்கு வாசிக்கிறது கஷாயம் சாப்பிடுற மாதிரி…’ மேலும் பேச என்ன இருக்கின்றது போன்ற மௌனம் அங்கே சூழ்ந்து இவனது உடலை நெளிய செய்தது… ‘கொற்கைனு ஏதோ தலகாணி சைஸ்ல ஒரு புக் கொண்டு வந்தியே… ஏதாவது ஹிஸ்டரி புக் ஆ?’ ‘கிட்டதட்ட அப்படினு வெச்சுக்கலாம்… நான் இன்னும் படிக்கல… பரதவர்கள் சமுதாயத்த பத்தி ஒரு வரலாற்று நாவல்னு…. ‘சரி சரி… நான் நிறைய ஆடியோ, ஸ்பீச் அது இதுனு கேட்பேன்……’ என்று ஆரம்பித்து கொற்கை பற்றி அவருக்கு தெரிந்தது சொல்ல ஒரு நிமிடம் இவனுக்குள் சற்று அதிர்ந்து விட்டது… சங்க காலம் தொடங்கி முக்கியமான வாணிப இடங்களை குறிப்பிட்டு, அங்கே புகழ் பெற்றிருந்த ஏற்றுமதி பொருட்கள் என சிறிதாக ஆரம்பித்து சாண் சாணாக பேச்சு வளர்ந்து, பல்லவர், சோழ காலங்களுக்கு சென்று, விஜய நகர தலை நகருக்கு திரும்பி ஹம்பியில் முதல் பாக உரையாடல் முடிந்தது…. ‘நீ பெங்கலூர் தானே, ஹம்பி போனதில்லையா?’ ‘இல்லையே, ஹளேபீடு, பேலூர் போயிருந்தேன்… ஹம்பி…. இனிமே தான்…’ ‘அந்த ரெண்டு இடத்துக்கு நானும் போயிருக்கேன்… யப்பப்பா… செதுக்கிருப்பான்… ஒரு நகத்த கூட விடாம பிடிச்சிருப்பான்…. அவ்ளோ அழகா, காம்பேக்டா, எவ்ளோ டென்ஸா இருக்கும், ஒரு அஞ்சு, ஆறு தடவ போயிட்டு வந்திருப்பன்…. பக்கத்துல தலக்காடு… போயிருக்கனும??… பத்தஞ்சத தோண்டி எடுத்தானுங்களே…’ இவன் அங்கேயும் போனதில்லை என்றுதலை ஆட்டி அவர் இன்னும் நிறைய நிறைய பேச காத்திருந்தான்… எதையோ தேடி வந்து வேறெதுவோ கிட்ட போகும் அனுபவங்கள்…
திப்பு சுல்தானை முற்றிலுமாக கிழித்து முடித்த பின், ‘ஹீ வாஸ் எகைன்ஸ்ட் ப்ரிடீஷ் பட் வெறியன், அவன போய் தலையில தூக்கி வெச்சுண்டு எல்லாரும் ஆட்ரா…’ சம்பாஷனைகள் அப்படியே கிருணனுக்கு மிக மிக குறைவான ஞானமுள்ள அறிவியக்கம் பக்கம் தாவின… ‘அதுல என்னாச்சுனா எல்லாம் ஈஸியா போய் எல்லாருக்கும் போய் சேரனும்னு ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு பேர் கொடுத்து நம்ம தலையில கட்டுனான்…. அத பிடிச்சிண்டு எல்லாரும் தாம் தீம்னு அலையரா…’ இப்படியே இரவு இரண்டானது…. இவன் வெறும் கவனிப்பாளன் தான் முக்கால்வாசி நேரங்களில்… வந்து தலையணையில் கழுத்து சாயும் போது ஏகப்பட்ட சொற்கள், வாதங்கள், விஷயங்கள், புரிந்து சில, புரியாமல் பல…
காலையில் சீக்கிரம் விழித்த உடன், தாத்தாவுக்காக காத்திருந்த சமயம், சித்தாப்பா துண்டை கொடியில் இருந்து இழுக்க கொடி ஆடி நின்று முடிப்பதற்கும் இவன் சித்தப்பாவிடம் போய்,’நானும் குளத்துக்கு தான் போறேன்… போலாமா வர்றேளா..?’ ‘தாத்தாவோட வரலையா?’ ‘தெரியல பின்னாடி தோட்டத்துல இருக்கா..’ ‘சரி.. சரி… அப்போ கெளம்பலாம்’ முதலில் அறைக்குள் சென்ற கூச்சம் இப்பொது சிறிதளவு கூட இந்த காலை பொழுதில் இல்லை… பேச்சை ஆரம்பித்து விட்டால் இருக்கும் சிரிதளவு கூச்சமும் கரப்பான், வீட்டின் மூலையில் சட்டென்று ஒளிவது போல் ஓடிவிடும்.. ‘சந்தை பொருளாதாரம்னு சொல்லுவா தெரியுமா உனக்கு…’ அவரே பேச்சை ஆரம்பித்தார்… இவன் திருதிருவென முழித்து, அப்படின்னா? என்று கேட்டால் அசிங்கமாகிவிடுமே என்று ‘ஏதோ தெரியும்… முழுசா தெரியாது…’ என்ற உடன் 1776 இல் அதன் தோற்றத்தை மையங்கொண்டு, முன் பின் நிகழ்ந்த பல் வேறு சங்கதிகளையும் சொல்லி இன்று இவன் பெங்கலூரில் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சென்று முடித்தார்… வெவ்வேறு புள்ளிகளை தொட்டு தொட்டு இணைத்து இவனிடம் வந்து முடித்தவுடன் இவனுக்குள் ஒரு நிமிடம் சிலிர்த்ததை தடுக்க முடியவில்லை… தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு முன், கதிரவன் கை வீசி வீசி அளித்த வெளிச்சத்தை உள் வாங்கி கொண்டு ஒரு முறை சூரியனை பார்த்து இரு கரங்களையும் கை கூப்பி சேர்த்து சேவித்து விட்டு மூழ்கினார்….
தாத்தா தலையில் முண்டாசு போல் கட்டிய துண்டை எடுத்த உடன், காலையிலேயே பேரனை கவனிக்க சென்றார்… கசங்கிய படுக்கை மட்டும் சாப்பிட்ட பழ தோல் போன்றிருக்க, சமையல் கட்டுக்கு சென்றார்,’எப்போ எழுந்திருச்சான்…?’ ‘சித்தப்பாவோட ஆத்துக்கு போயிருக்கார் மஹாராஜா… ரெண்டு பேரும் சேர்ந்து நைட்டு முழுக்க கொட்ட கொட்ட முழிச்சு… ரெண்டு மூணு ஆயிடுத்துனு சொன்னான் சின்னவன்…’ கேட்டு கொண்டிருக்கும் போதே புருவங்கள் இரண்டும் கீழ் நோக்கி ஒன்றை ஒன்று முட்டி கொள்ளும் தோரணையில் இருந்தன… நெற்றியில் அவருக்கு அவ்வளவு சுருக்கங்கள் வரும் என்று அப்போது அவர் கண்ணாடி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்… கையில் பிடித்த துண்டை லேசாக ஆட்டியவாறு, கீழ் நோக்கிய பார்வையோடு மிகவும் மெதுவாக ஹாலுக்கு சென்றார்… தனது ஆஸ்தான இருக்கையில் அமர்கையில் உடல் ஏனோ வெந்து தொலைத்தது…. ‘கரண்ட் இல்லையா எழவு?… வேர்த்து தொலையரது…. ஆ ஊ ன்னா புடிங்கிருவானுங்க.. ச்சை…’ எரிச்சல் பட்ட தொணி சற்று வித்தியாசமாக பட்டது அவர் மணைவிக்கு…. உள்ளிருந்து ஏதோ ஒரு குமுறல் போன்றிருந்தது… ‘ரெண்டு மணி நேரம் ஆகும்…. என்னாச்சு என்னமோ புதுசா போற மாதிரி அலுத்துக்குறேள்… தினமும் தான் இந்த சனியம் புடிச்சவன் கட் பண்ணி தொலையிறான்… ஏதாவது புக் எடுத்து விசிறிக்கோங்கோளேன்…’
சாப்பிடும் முன் கிருஷ்ணன் தாத்தாவிடம் கொஞ்சம் பேச்சு கொடுப்பதற்காக அருகில் சென்று உட்கார்ந்தான்… அவர் மிகவும் மும்முரமாக காலத்தில் சுவடு பதித்த பத்திரிக்கையில் தலையை விட்டு கொண்டிருந்தார்… ‘இந்த மாசம் யார் சிறுகதை?’ ‘தெரியலேயே, நீயே படிக்கிறப்ப பாத்துக்கோ..’ புத்தகத்திலிருந்து வைத்த கண் வாங்கமால் பதிலளித்தது அவருக்கே சற்று வரம்பு மீறி வெளி வந்து விட்டதோ என்று தோன்றி விட்டது… ‘ச்ச.. என்னது எதுக்கு இப்படி வெடுக்குனு ஒரு வார்த்தை’ சற்று தடுமாற்றம் தாத்தாவின் கைகளில்.. இவன் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் உண்டு, உண்ட மயக்கம் வேளை காண்பிக்க உடலை சாய்த்தான்… வேண்டுமென்றே ஒரு பேச்சை எடுத்தான்… ‘ஏன் தாத்தா, யாரோ ஒரு திருவாருர் எழுத்தாளருக்கு லெட்டெர் போட்டு, அவரும் பெருசா ஏதோ எழுதுனாருனு சொன்னியே… அது எங்க இருக்கு…’ வெளியே சூரியன் லேசாக தணிந்தது போல் பட்டது… காற்றும் மிகையில்லாமல் அலைந்து, இருக்கும் மண்ணை எழுப்பி அந்தர நடனம் புரிய செய்தது… ‘அந்த அலமாரில இருக்கு’ வெளியே நிழல் பரவி கொண்டிருந்ன்தது… சற்று நேரம் கழித்து அவரே, ‘கலாப்ரியா கவிதை…………………………………………, யார்னு சொல்லு’ என்று ஒரு பெருமிதத்தோடு புருவம் ஏற்றி சிரிக்கும் பாவனையுடன் கேட்டார்… இப்படியாக தூரம் குறைந்தது ஒரு வழியாக… ஒரு மணி நேரத்திற்கு பின் எழுத்து சித்தரின் நட்பு வட்டத்தையும் அவரின் எழுத்தின் வலிமையையும், அவரிடமிருந்த நட்பையும் எத்தனை முறை என்று கணக்கில்லாமல் சொல்லி கொண்டிருந்தார்… இவனுக்கும் அலுக்கவே அலுக்காத அதை கேட்டு கொண்டும் தாத்தாவும் அவரும் சேர்ந்த புகைப்படத்தை பார்த்து கொண்டு இருந்தான்… ‘கார்த்தால சொல்லாம குளிக்க போயிட்டையோ?’ ‘சித்தப்பா போனா அப்படியே கிளம்பிட்டேன்…’
மதிய சூன்யத்திற்கு பின் ஓரளவுக்கு ஆள் நடமாட்டம் தெருக்களில் வந்த பிறகு இவனுக்கு விழிப்பு தட்டியதும், எப்போதும் போல் சித்தப்பாவின் அறையிலிருந்து வழிந்துகொண்டிருந்தது, இந்த முறை குழலோசை… சௌராசியா… இவனுக்கும் வர வர அப்படியே லயித்து போய் கேட்டு கொண்டிருக்கும் பழக்கம் தொத்திக்கொண்டது… ஒரு பக்கமாக கையை மடக்கி தலையணைக்கு பதில் வைத்து படுத்திருந்ததில், கையை எடுக்கும் போது எலும்பு இடம் மாறும் நேரத்தில் ‘டொக்’கென்ற சத்தம் தாத்தாவின் காதில் விழாமல் மெதுவாக நடந்து சௌராசியா மயக்கி கொண்டிருந்த அறைக்கு போனான்… காற்றிலேயே கைகளை ஏதோ போன்று ஆட்டியவாறு தலையும் இசைந்து கொண்டிருந்தது பாலு சித்தப்பாவிற்கு… ‘எனக்கும் இது தொத்திக்கும் போல்ருக்கு..’ சிரிப்புடன் எழுந்து உகார்ந்து, ‘அப்புறம்.. காப்பி ஆயிடுத்தா…?’ ‘பாட்டி இன்னும் தூங்கிண்டு தான் இருக்கா…’ ‘சரி… சரி..!
. நாம போடுவோம்’ என்று ஏதோ ஒரு உற்சாகத்தில் எழுந்து சமையல் கட்டுக்கு சென்றனர்… ‘அண்ணா முழிச்சிண்ட்டாளா? அவருக்கும் சேத்து கலந்திடலாம்…’ ‘இல்ல அப்பாவும் இன்னும் ஃப்ளாட் தான்…’ தாத்தா, எழுந்த வுடன் கேட்ட பேச்சரவம் ஏதோ செய்தது…. துயில் கலைந்து ஏற்படும் எரிச்சல், அதுவும் எரிச்சலோடு சேரும் இன்னொரு எரிச்சல் என அவர் காதை பொத்தி கொண்டு கண்களை அடைத்து கொண்டார்…. விடாப்படியாக இரண்டாம் முறை தூக்கம்
தெருவில் நடமாட்டம் அதிகமாகவும், எழுந்து பின் கட்டுக்க்கு சென்று, மூஞ்சலம்பி, ஹாலுக்கு வந்து காப்பிக்கு ஒரு குரல் கொடுத்து விட்டு உட்காரும் போது தான் கவனித்தார்.. வண்டி வாசலில் இல்லை… அம்பி வீட்டில் இருக்கும் போது… ‘வண்டி எங்க…?’ அவா ரெண்டு பேரும் சிக்கல் வரைக்கும் போயிருக்கா… பாலுவோட ஃப்ரெண்டு இருக்கானோல்யோ… அவன பாக்க… இவனும் கூட போயிருக்கான்… போரடிக்குதுனு….’ தலையை இடது புறம் திருப்பி தெருவை பார்த்து கொண்டே கன்னத்தில் கை தடவிய படியே, ‘போரடிக்குதாமா…. சரி சரி…’ லேசாக கனைத்த உள்ளிருந்து வெளியில் தள்ளபட்ட சிரிப்பு… ‘காப்பி… வந்து எடுத்துக்குறேளா..?’ என்று அவர் மனைவி தெருவில் போகிற வருபவர்கள் கேட்கும் அளவுக்கு கத்தியும் இவர் உடல் அசையாதிருந்தது… பின்பு சமையல் கட்டிலிருந்து காப்பியை எடுத்து கொண்டு வைத்து விட்டு, ‘எப்படி தான் இப்படி ஒன்னுமே காதுலயே விளங்காத மாதிரி யோசிக்க முடியுதோ….’ கை லேசாக டம்ளரில் பட்டு கீழே விழுந்தது…. அதையும் தாத்தா பெரிதாக எடுத்து கொள்ளாமல் தெருவையே வெறித்து பார்க்க தொடங்கினார் மீண்டும்…. அவர் மனைவிக்கு தான் கோபம் தலைக்கு மேல் ஏறியது… ‘கொஞ்சம் பாத்து எடுத்து குடிச்சா தான் என்னவாம்… ஏதாவது பெருசா சிந்தன பண்ணின்டே இருக்கனும்…’ தாத்தாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை மாறாக ஒரு வினா அம்பியிடம், ‘அவா ரெண்டு பேரும் எத்தன மணிக்கு வருவா… வர்ற நேரத்துக்கு இருட்டிடுமே….?’
அவர் ஏனோ அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை… கையிலும் எந்த புத்தகமும் இல்லை… ஒரு கை மற்ற கையின் நகத்தை பிய்த்து எடுக்க தொடங்கியது… லேசாக ரத்தம் எட்டி பார்க்க தொடங்கியது வலுகட்டாயமாக பிடுங்கபட்ட நகத்திலிருந்து… ரொம்ப நேரம் கழித்து அம்பியுடன் சாப்பிட உட்கார்ந்தார்… ‘நான் போய் படுத்துக்குறேன்… அவன் கிட்ட இன்னும் நிறைய பேசலாம்னு நினச்சேன்.. என்னிக்கு கெளம்புறான்..?’ கடைசி வரிகளில் மட்டும் கொஞ்சம் கூட அழுத்தம்… ‘நாளைக்கு சாயங்காலம் போல…’ ‘சரி… ஹும்ம்ம்ம்ம்ம்….’ பெரிய மூச்சாக வெளிவந்தது….
நடு சாமத்தில் சட்டென்று விழிப்பு தட்ட இவர் எழுந்து ஒண்ணுக்கு சென்று வரும் போதும் மெல்லிய ஒலியில் உரையாடல்… ‘பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோயிலுக்கு போய் ஒரு விளக்கு ஏத்தி வெச்சதில்ல… எங்கேயோ இருக்குற திருப்பதிக்கு போய் கோடி கோடியா கொட்டுவானுங்க…’ ‘எவன் பிராமணன், யாசகம் வாங்கி சாப்பிடனும், பொய் சொல்ல கூடாது, இதோ இப்போ நான் போட்டுன்றுக்கேனே கழுத்துல, கையில இதெல்லாம் அறவே கூடாது… ஏதோ தோணித்து ஒரு கட்டத்துல… பூணுல கெழட்டி வெச்சுட்டேன்…’ இரண்டு மூன்று நிமிடங்கள் சற்று தயங்கியவாறு அங்கே நின்ற பிறகு, ரவி ஷங்கர் அதி வேகமாக சிதாரை இயக்க தொடங்கிய பின் உரையாடல்கள் வேறு சில பக்கங்களுக்கு சிதறிய பின், இவர் பொறுமையாக படுக்கையில் அமர்ந்த நிலையில் இருந்தார்… சற்று நேரம் கண் அப்படியே மூடியிருந்தது…. ‘சனியன் இவனால் எனக்கு எப்போதுமே நிம்மதியில்ல…’ என்று ஆரம்பித்த உள் மன உரையாடல்கள் தொடர கையை தலை மேலே வைத்து கண்கள் வெறுமனே மூடியிருக்க படுத்து கொண்டார்…. ஒரு மிக பெரிய சுவரின் மீது அலையலையாய் மோதி மோதி மோதி அடங்க மறுக்கும் எதிர் சக்தி அவர் தூக்கத்தை காவு வாங்கியது…
அடுத்த நாள் கிருஷ்ணன் காலையில் சீக்கிரம் எழுந்து குளம், கோவில் என்று சுற்றி விட்டு, வீட்டுக்கு வருகையில் தாத்தாவுக்கு உடல் நலம் சரியில்லை என்பது போல் இவனுக்கு தோன்ற தலையில் கை வைத்து பார்த்தான்… ‘ஏன் தாத்தா என்னாச்சு… ஒரு மாதிரி இருக்கு முகம்…’ சிரித்து கொண்டே,’ஒன்னுமில்லையே… அப்படியா இருக்கு.. முகம் ஷவரம் பண்ணணும் இன்னிக்கு…’ கொஞ்ச நேரம் கழித்து… ‘இன்னிக்கு சாயங்காலமா?’ ‘ஆமா’ ‘எங்கேருந்து… பஸ்ஸு?’ ‘நாகபட்டினத்திலேர்ந்து..’ சரி.. சரி… நானும் வரேன்…’ ‘அப்ப சாயங்காலம் இங்கேர்ந்து பஸ்லயே போயிடலாம்… ஆனா அம்மா தனியா இருப்பாலே…’ இது அம்பி…. யார் யார் கூட போகிறார்கள் என்று விளக்கிய பின்… ‘ஆமாம் பா, சரி நீங்க போயிட்டு வாங்கோ…’
கிளம்பும் முன் ஆசீர்வாதம் வாங்க காலில் விழுந்து எழுந்தவுடன், ஸ்வாமி படத்துக்கு முன் வைத்திருந்த விபூதி பொட்டலம் கைக்கு மாறி அதில் கொஞ்சம் கிருஷ்ணன் நெற்றியில் தீட்டபட்டது… அவன் வருவதற்கு முன்பே கலர் கலர் அட்டைகளால் போடப்பட்டிருந்த புத்தகங்கள், மற்றும் சிறு பத்திரிக்கைகள் என இரண்டு மஞ்சள் பைகள் நிரம்பி தளும்பும் அளவுக்கு புத்தகங்கள்… கிருஷ்ணனுக்கு உள்ளிருந்த புத்தகங்களை விடவும் அட்டை போடப்பட்டிருந்த விதமும் அதற்காக பொறுமையோடு செய்ய பட்ட வேளைப்பாடும் தான் நெகிழ செய்தது… இது போல் எப்போது வந்தாலும் அசரடித்து விடுவது தாத்தாவின் பாணி… இந்த முறை இவையெல்லாம் கொடுக்கும் போது, ‘அறிவ வளர்த்திக்குறது நல்லது தான்.. ஆனா ரசனை, படைப்பு மனம் இதெல்லாம் எல்லாருக்கும் கிட்டாது… வேலையிலயும் கவனமா இருந்து வாசிக்கிறதையும் விட்டுடாத… இந்த தடவ ரொம்ப பேச முடிய ல’… தெரு விளக்குகள் மிகுந்த இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்க, கையில் டார்ச்சுடன் மூவரும் தெருமுனைக்கு போவதை தாத்தா பார்த்து கொண்டிருக்க, குட்டி ஆடுகள் விளையாடி கொண்டிருக்க அதன் தாய் ஓரமாக அமர்ந்து கவனிப்பாரற்று அசை போட்டு கொண்டிருந்தது..
– கணையாழி வெளிவந்தது.