ரயில்பூச்சி ஊர்வது போலத்தான் அவள் அங்கும் இங்குமாக ஊரிக்கொண்டே இருப்பாள். அவளுக்குப் பின்னால் அவளைவிடப் பத்து வயது குறைந்த சிறுமியர் கூட்டம் ரயில்பெட்டிகள் போலச் சென்று கொண்டிருக்கும். சிரிப்பும் கூத்துமாகத்தான் அவர்களின் கூட்டம் அலைந்து கொண்டிருக்கும்.
‘அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்?’ என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்றால் நீங்களும் அந்தப் பெட்டிகளுள் ஒன்றாக மாறி, அவர்களின் பின்னே செல்ல வேண்டும். அப்படி நீங்கள் மாறாவிட்டால் அந்தக் கூட்டத்தை நீங்கள் லூசுகளின் கூட்டம் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்குப் புரியவில்லை, தெரியவில்லை என்பதாலேயே ஒருவிஷயம் பொருளற்றதாக ஆகிவிடுமா, என்ன?
‘நீலாக்கா’ என்றால், அந்தப் பகுதியில் அத்தனை பேருக்குமே தெரியும். அவளை அனைத்துச் சிறுமியர்களும் ‘நீலாக்கா! நீலாக்கா!’ என்றே அழைப்பதால், அவளுக்கு ‘நீலாக்கா’ என்றே அனைவரும் பெயர் வைத்துவிட்டனர். பெரியவர்கள் அவள் பெயர் நீலதர்ஷினி. 21 வயது. மாநிறம். இன்னமும் அவள் தாவணி அணியவில்லை. அதை அணியும் வாய்ப்பு இனி அவளுக்குக் கிடைக்குமா என்பதும் அவளின் பெற்றோருக்குத் தெரியவில்லை.
அவள் வயதை ஒத்த எத்தனையோ பெண்கள் 13 வயதில் தாவணி அணிந்து, அரசு விதியை மீற முடியாததால் தமது 18 வயது வரை காத்திருந்து, திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளைப் பெற்றுவிட்டனர். நீலதர்ஷினி இவற்றைப் பற்றியெல்லாம் எந்தச் சிந்தனையும் இல்லாமல், தன்னைவிட மிகவும் வயது குறைந்த, அதுவும் தாவணி அணியாத சிறுமியரை மட்டும் அழைத்துக் கொண்டு, கிராமத்துக்குள் வலம்வந்து கொண்டிருக்கிறாள்.
நீலதர்ஷினியினின் தாய்-தந்தையர் தறிப்பட்டறையில் வேலைபார்க்கின்றனர். தாய்க்குப் பகல்நேரப் பணி. தந்தைக்கு இரவு நேரப் பணி. அதனால், யாராவது ஒருவர் வீட்டிலிருந்து நீலதர்ஷினியைப் பார்த்துக்கொண்டனர். பொதுவாகவே நீலதர்ஷினி வீட்டுவேலைகள் எதையுமே செய்ய மாட்டாள். அவளுக்குச் செய்யவும் தெரியாது. வயிறு நிறைய உணவு. உடல் அலுப்பு நீங்கும் வரை தூக்கம். விழித்திருக்கும் பொழுதெல்லாம் சிரிப்பும் விளையாட்டும். இதுதான் நீலதர்ஷினியின் வாழ்க்கை.
எப்போதும் அவள் பாவாடை சட்டையைத்தான் அணிவாள். ஏதாவது விசேஷ வீடுகளுக்குச் செல்வதென்றால் மட்டுமே சேலையை உடுத்திக் கொள்வாள். அந்தச் சேலையும் அவளின் அம்மாவின் சேலையாகத்தான் இருக்கும். இவளுக்கென இன்னும் தனியாகச் சேலை வாங்கவே இல்லை.
இவள் பத்தாவது வரை படித்தாள். தேர்ச்சி பெறவில்லை. அதனால் பதினொன்றாம் வகுப்புக்குச் செல்லவில்லை. பத்தாம் வகுப்புக்கு மறுதேர்வும் எழுதவில்லை. வழக்கமாகச் சிறுமியர்கள் பள்ளிக்குச் செல்லும் வரையிலும் இவளின் பின்னால்தான் சுற்றிக்கொண்டிருப்பர். மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பியதும் இவளின் பின்னால்தான் சுற்றுவர். பள்ளி விடுமுறை நாட்களில் முழுநேரமும் இவளின் பின்னால்தான் சுற்றித் திரிவர்.
நீலதர்ஷினி எப்போதும் செல்வது ஓடைக்கரையின் அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குத்தான். பிள்ளையாரைப் பார்ப்பதற்கு முன்பாகவே ‘அன்றைய தினம் என்ன விளையாடுவது’ என்பதை அவள் தீர்மானித்து விடுவாள். பின்னர் அனைவரும் சென்று பிள்ளையாரை வணங்கிவிட்டு, அன்றைய விளையாட்டை இனிதே தொடங்குவர்.
காலையில் நீலதர்ஷினி தெருவுக்கு வந்துவிட்டால், சிறுமியர் கூட்டமும் வந்து அவளின் பின்னால் சேர்ந்து கொள்ளும். அவள் அவர்களை அழைத்துக்கொண்டு, ஓடைக்கரையின் அருகில் இருக்கும் அரசமரத்தடிக்குச் செல்வாள். அங்கு அவள் எல்லோரையும் அமர வைத்துவிட்டு, தான் மட்டும் நிற்பாள். ‘இன்றைய விளையாட்டு என்ன?’ என்பதை மற்றவர்களுக்குக் கூறுவாள்.
அவள் எந்த விளையாட்டைக் கூறினாலும் அதற்கு அத்தனை சிறுமியர்களும் ஒப்புக்கொள்வர். நீலாக்காவோடு விளையாடுவது அவர்களுக்கு என்றும் மகிழ்வைத் தருவதால், அவர்கள் நீலதர்ஷினி கூறும் எந்த விளையாட்டையும் விளையாட விருப்பமாகவே இருந்தனர்.
இன்றைய விளையாட்டை நீலதர்ஷினி மற்றவர்களுக்குக் கூறினாள். எல்லாப் பெண்களும் துள்ளிக் குதித்தனர். ‘மணப்பெண் அலங்காரம்’ இதுதான் இன்றைய அவர்களின் விளையாட்டு.
நீலதர்ஷினி அனைவரையும் எழச்செய்து, சா பூ திரி போட்டு, திலகேஸ்வரியைத் தேர்ந்தெடுத்தாள். இன்றைய மணப்பெண் அலங்கார விளையாட்டில் மணப்பெண் திலகேஸ்வரிதான். நீலதர்ஷினி எல்லோரையும அழைத்துக்கொண்டு, பிள்ளையார்கோவிலுக்குச் சென்றாள். பிள்ளையாரை வணங்கிவிட்டு, மீண்டும் அரசமரத்துக்கு வந்தனர்.
அலங்காரத்துக்கு உரிய அனைத்துப் பொருட்களையும் பட்டியலிட்டு, ஆளுக்கு இரண்டு பொருட்கள் வீதம் கொண்டுவருமாறு அவரவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் நீலதர்ஷினி. அரைமணிநேரத்தில் அனைவருமே பொருட்களுடன் வந்தனர்.
திலகேஸ்வரியை அலங்கரிக்கத் தொடங்கினர். அலங்காரம் முடிந்ததும் நீலதர்ஷினி ஓடிச்சென்று, பிள்ளையாரின் காலடியிலிருந்த கரும்பொட்டைத் தொட்டெடுத்துவந்து, திலகேஸ்வரியின் இடது கண்ணத்தில் சிறு புள்ளியாக வைத்து, திருஷ்டிகழித்தாள்.
பின்னர் அனைவரும் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு, கேலியும் கிண்டலுமாக மெல்ல மெல்ல நடந்து பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். திலகேஸ்வரி வெட்கத்தால் நெளிந்து கொண்டிருந்தாள். அவளைப் பிள்ளையார் முன்பாக நிறுத்திவிட்டு, அனைவரும் பிள்ளையாரை வணங்கினர்.
பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிவிட்டதால், அனைவரும் தங்களின் வீட்டை நோக்கி விரைந்தனர். திலகேஸ்வரி வேகமாக நடந்துகொண்டே, திரும்பிப் பார்த்து, வெட்கப்பட்டுக்கொண்டே உரத்த குரலில், ‘தேங்க்ஸ் நீலாக்கா’ என்று கூறினாள். வெட்கப்பட்டுக்கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினாள்.
நீலதர்ஷினி மட்டும் பிள்ளையாரின் அருகில் நின்றிருந்தாள். அவளுக்கும் தன்னை மணப்பெண் போல அலங்கரித்துக்கொள்ள ஆசைதான். இந்தத் திலகேஸ்வரியைப் போல வெட்கப்படவும் விருப்பம்தான். ஓடைக்கரையின் மீது அமர்ந்துகொண்டாள்.
திலகேஸ்வரி வீட்டுக்கு வந்ததும் அவளிடம், “என்னடி இது அலங்காரம்? யார் பண்ணிவிட்டா?” என்று கேட்டார் திலகேஸ்வரியின் தாய்.
“அது வந்து… வந்து… நீலாக்கா” என்றாள் திலகேஸ்வரி.
“சரி போ. ஸ்கூலுக்கு நேரமாச்சில்ல?” என்று அதட்டினார்.
திலகேஸ்வரி பள்ளிக்குச் சென்றாள். மதியவேளைக்கு முன்பே ஆசிரியை ஒருவருடன் திலகேஸ்வரி தன் வீட்டுக்கு வந்தாள். திலகேஸ்வரியின் அம்மா அருகில் இருந்த தறிப்பட்டறையில் பணிபுரிந்துகொண்டிருந்ததால், அந்த ஆசிரியைத் திலகேஸ்வரியை வீட்டின் வாசலில் அமர வைத்துவிட்டு, திலகேஸ்வரியின் தாயைப் பார்த்துத் தகவலைக் கூறினார். அன்று மதியமே திலகேஸ்வரியின் தாய்மாமனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாலையில் திலகேஸ்வரிக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றினர். அந்த நிகழ்ச்சிக்கு அவளின் தோழிகள் அனைவரும் தங்களின் தாய்மாரோடு சென்றிருந்தனர். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு வருமாறு யாரும் நீலதர்ஷினியை அழைக்கவில்லை. அவளும் செல்லவில்லை. அந்த நிகழ்ச்சியில் தாய்மார்கள் ஒருவருக்கொருவர் ஒரு விஷயத்தைப் பற்றியே திரும்ப திரும்ப வியந்து பேசிக்கொண்டனர்.
அந்த விஷயம் காற்றில் பறந்து, பல்வேறு செவிகளில் நுழைந்து, வாய்களின் வழியாகப் பெரிய உருவெடுத்து நீலதர்ஷினியின் தாயாரின் செவிகளில் விழுந்தது.
அன்று இரவு, நீலதர்ஷினியின் தந்தை வேலைக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் போது தாய் அவரிடம், “ஏங்க, நம்ம மவளுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிப் பார்ப்பமா?” என்று கேட்டார்.
அது அவருக்குப் புரியவில்லை. ஆனால், நீலதர்ஷினிக்குப் புரிந்துவிட்டது. அவள் தன் வாழ்வின் முதன்முறையாக வெட்கப்பட்டாள்.
– – –
அருமை