வீட்டு முற்றத்து மாமரத்து நிழலில் கதிரை போட்டு உட்கார்ந்து இயற்கையின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள். குளிர்மையான சூழ்நிலை உடலுக்கு இதமாக இருந்தாலும், மனதிலோ ஆயிரம் எண்ண அலைகள் அலைபாய்ந்த வண்ணமிருந்தன. பக்கத்து வீட்டு வானொலியில் இன்றைய காலப் பாடல்கள் காதடைக்குமாறு மிகவும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த இடத்தில் எவ்வளவு நேரம்தான் அமர்ந்திருந்தாளோ? நேரம் சென்றதே தெரிய வில்லை. பகல் உணவை உண்டு முடித்ததிலிருந்து இவ் இடத்தில் தான் இருந்தாள். வீட்டில் உள்ள அனைவரும் பக்கத்து வீட்டு திருமண அழைப்பை ஏற்று திருமண வைபவத்திற்குச் சென்றுள்ளார்கள். இவளை தனியே விட்டுச் செல்ல அவளது தாய்க்கு மனசு வரவில்லைதான்.
இவள்தான் பிடிவாதமாக தன் தாயை அனுப்பி வைத்தாள். அவளது தாய், சகோதரிகள் அவர்களது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து தான் திருமணத்திற்குச் சென்றுள்ளார்கள். பெற்ற தாய் உள்ளம் மகளின் எதிர்கால வாழ்வைப் பற்றி எப்பொழுதும் சிந்திக்கதான் செய்யும். திருமண அழைப்பிதழ்கள் கையில் கிடைக்கும் போதெல்லாம் மகளின் வாழ்வை நினைத்து கண்கலங்கிப் போவாள் அவளது தாய். இன்றும் அப்படித்தான் போக மறுத்த தாயை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தாள் அவள்.
“உம்மா சுலைஹா ஆண்டி ட மூத்த பேத்தி கல்யாணம் அவங்க நமக்காக எவ்வளவு உதவி செய்திருக்காங்க .போகாம இருப்பது சரில்ல.நீங்க கட்டாயம் போகனும். எனக்காக யோசிக்க வேணாம். அல்லாஹ் எனக்கும் ஒரு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு . நீங்க போங்க உம்மா”என்று நம்பிக்கையான வார்த்தைகளை கூறி தாயை அனுப்பி வைத்தாள். மகளின் மனஉறுதி தாய்க்குப் பெருமிதமாக இருந்தது.
என்னதான் ஒவ்வொரு தடவையும் தாயை ஆறுதல் படுத்தினாலும், அவளுக்குள்ளும் எதிர்பார்ப்புக்களும், சொல்ல முடியாத வலிகளும் இருக்கத்தான் செய்கிறது. அவளுக்கும் திருமண வீடுகளுக்குச் செல்ல ஆசைதான். ஆரம்பத்தில் அவளும் சென்று வந்து கொண்டுதானிருந்தாள். இவளை கானும் நிறையப் பேர் அவளது தாயிடம் “ஹஸனியா உங்க மகளுக்கு இன்னும் சரி வரவில்லையா?” அல்லது “உங்க மக கல்யாணம் எப்ப?” இது போன்றகேள்விகளை கேட்பார்கள். அது மனித இயல்புதான். அவளது உம்மா தவிப்போடுதான் பதில் கூறுவாள். அப்போது தாய் பல முறை கலங்கி நின்றதை அவள் அவதானித்திருக்கிறாள். இதனாலேயே அவள் திருமண சம்மந்தப்பட்ட எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை.
அவளுக்கும் திருமண வயது தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. முப்பத்தெட்டு வயதை பூரணப்படுத்திய நிலையில் இருந்தாள். இளமை கழிந்து கொண்டிருந்தது. அவளுக்கு முன்னால் ஒரு சகோதரனும், மூன்று சகோதரிகளும் உள்ளார்கள். அவர்கள் உரிய வயதில் திருமணமானவர்கள். பெரிய பிள்ளைகளும் உண்டு. வாப்பா இவளின் சிறுவயதில் மொவ்தாகிவிட்டார். அவளது தாய் தனியாக இருந்து இவர்களையெல்லாம் கரை சேர்த்தாள். கடைசி மகளின் நிலை துடுப்பு இல்லாத தோணி போல் கரைசேர்க்க வழியில்லாதிருந்தது.
அவள் பொது நிறம்தான். பார்த்த உடனே பிடித்துப் போகும் அழகில்லை தான். என்றாலும் குறை கூறமுடியாதுதான். சுமாராக இருந்தாள். ஓரளவு படித்திருந்தாள். பண்பு நிறைந்தவளாக, மார்க்கமுள்ளவளாக இருந்தாள். அவளை நிறையப் பேர்கள் பெண் பார்த்து விட்டு போனார்கள். ஒவ்வொரு காரணங்களை சுட்டிக் காட்டி தட்டிக் கழித்தார்கள். என்றாலும் அவளது குடும்பம் தளர்ந்து விடவில்லை. தேடினார்கள்… தேடினார்கள்.. தேடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இன்று வரை, அவளும் கடையில் வைக்கும் காட்சி பொம்மையைப் போல் தன்னை அலங்காரப் படுத்தியிருக்கிறாள் எத்தனையோ முறை. அவளது வயதையொத்த தோழிகள் எல்லாம் சிறிய வயதிலே மணமாகி பெரிய பெரிய பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் கவலைப்பட்டாலும், அவளுக்குள் இருக்கும் ரணம் அவளுக்குத்தான் தெரியும்.
“ங்கா ங்கா “என்று குழந்தையின் வீறிட்ட அழுகைச் சத்தம் அவளை சுயநினைவுக்கு கொண்டுவந்தன. அது அவளுக்கு முன்னாலுள்ள சகோதரியின் குழந்தையின் அழுகுரல், ஆறுமாதக் குழந்தை என்பதால் இவளுக்கு பார்த்துக் கொள்ளும்படி பொறுப்பு சாட்டிவிட்டுச் சென்றார்கள். குழந்தையை தொட்டிலில் தூங்கப் போட்டு விட்டு சற்று நேரம் காற்றாடலாம் என்று தான் வெளியே வந்தாள். ஓடிச் சென்று குழந்தையை கையில் எடுக்கவும் வீட்டு ஹாலிங் மணிச் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. கையில் குழந்தையோடு போய் கதவை திறந்தாள். திருமண வீடு சென்றவர்கள்தான் வந்திருந்தார்கள். வந்தவர்களின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. உம்மா அவள் கையில் இருந்த குழந்தையை எடுத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள் “மக ஜெஸ்மின் அவசரமாக போய் முகத்தை கழுவிக் கொண்டு ரெடியாங்க. நல்ல சல்வார் ஒன்ற போட்டுக் கொங்க..அவசரம்… அவசரம்” என்று அவளை அவசரப்படுத்தினாள். அவளுக்கு ஒன்றும் புரியாது பெற்றவளை நோக்கினாள். தாய் பேசினாள் “சுலைஹாட பேத்திட மாப்பிள்ளை வீட்டார் எனது பாடசாலைத் தோழியின் உறவினர்கள். அவளும் தூரத்தில் இருந்து வந்திருந்தாள். நீண்ட நாளுக்குப் பிறகுதான் காணக் கிடைச்ச அவளோட குடும்பமே வந்திருக்கு. மகள்கள் ஐந்து பேரும் முடித்தவர்கள். பிள்ளைங்களோடு வந்திருக்காங்க. ஒரே மகன் இன்னும் கல்யாணம் ஆகல்ல, ஆரம்பத்தில் கஷ்டப்பட்ட குடும்பம். இப்ப பெரிய பணக்காரங்க. மகனின் கடினமான உழைப்பு முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. தனது ஐந்து தங்கைகளையும் கரைசேர்த்ததும் அவர்தானாம். இதனால் தானோ என்னவோ! வயதும் முப்பத்தொண்பது ஆகிவிட்டது. படித்தவர், பண்புள்ளவர், மார்க்கம் தெரிந்தவர். அழகை விட மார்க்கமுள்ள பணிவான பெண்பிள்ளையை தேடுகிறார்கள். உன்னைப் பற்றி கேள்விப்பட்டு விருப்பப் பட்டுதான் என்னிடம் விசாரித்தார்கள். நானும் சம்மதிக்கவே அவர்களும் இப்பவே உன்னையும் பார்த்து முடிவு பண்ண வாராங்க.. இன்ஷா அல்லாஹ் இந்த விசயம் ஹைராகும்” பெருமூச்சு விட்டபடி கூறிமுடித்தாள் அவள் அன்புத்தாய். அத்தனை மகிழ்ச்சியை தாயின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் கண்டாள் ஜெஸ்மின்.
“போமா ஜெஸ்மின் மாப்பிள்ளை வாராம் உன்னைப் பார்க்க போ போ ரெடியாகு சீக்கிரம் “என்று அவளை கேலி செய்தனர் அவளது அருமைச்சகோதரிகள். வெட்கம் மேலிட்டவளாக நாணத்தோடு தலையைக் குனித்தவாறு உள்ளே சென்றாள் அவள். முதல் வேலையாக வுழூ செய்து, படைத்த ரப்புக்காக இரண்டு ரகாத் தொழுது விட்டு நன்றி செலுத்தியவள் தனது எதிர்கால வாழ்க்கை பற்றிய கனவுகளோடு கண்ணாடி முன்னே போய் நின்றாள் தன்னை அலங்காரம் செய்துகொள்ள.