காத்திருக்கிறாள் அம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 5,394 
 
 

காற்றில் மரம் அசைந்து காய்ந்த இலைகளை விழச்செய்தது. முருங்கைப் பூக்கள் உதிர்ந்தது. போராடும் சக்தி இல்லாத பூக்கள் உதிர்ந்து கிடந்தது…மீதிப் பூக்கள் காயாக மாறிக் கொண்டிருந்தது.

இரண்டொரு தென்னை மட்டைகள் விழுந்தது. இயற்கையின் விநோதத்தை பாருங்கள். வெளியே இருந்து வரும் எதிர் விசையை எதிர்க்க சக்தி இல்லாத இளம் பூக்களும் உதிர்கின்றன. முதிர்ந்த சருகும்

உதிர்கிறது. இதனால் அறியப்படுவது யாதெனில் , எதிர்த்துப் போரிட முடியாத எதுவொன்றும் ,முதிர்ந்த சருகுக்கு ஒப்பானதே.

மதிய வேளை என்பதால் தெருவில் யாரும் இல்லை…. ஜன்னல் வழியாக தேவகி அம்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

தேவகி அம்மாவால் முன்னைப்போல அதிகமாக தோட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போதெல்லாம் வீட்டைவிட்டு இறங்குவதே இல்லை. மூட்டுவலி வேறு, கூட்டிப்பெருக்க லட்சுமி வாரம் ஒரு முறை வருவாள்.

கொய்யா மரத்திற்கு மருந்தடிக்கச் சொல்லனும்.இலைகளில் ஏதோ பூச்சி போலத் தெரிகிறது. தண்ணீ தொட்டியை கழுவச்சொல்லனும். தேவகி அம்மா மனதிற்குள் லட்சுமியின் வேலையை வரிசைப் படுத்திக்கொட்டார்.

இருமல் சத்தம் சிந்தனையை மாற்றியது. கணவர் சேகரின் குரல் கேட்டது.

இனி அவருக்கு டீ போட்டுவிட்டு வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்கும்.

பால் பாக்கெட் கொடுக்கும் பையன் பாக்கெட்டை கதவில் உள்ள கூடையில் போட்டு விட்டு போனான். சேகர் மதியம் மட்டுமே பால்பாக்கெட் போடச் சொல்லி இருக்கார். காலையில் யாரும் தூக்கத்தைக் கெடுக்க கூடாது என்பது அவர் எண்ணம்.

சேகர் டீ குடித்துவிட்டு வாக்கிங் செல்ல தயாரானார்.

என்னங்க வரும் போது கீரையை மறந்துடாதீங்க…

உம் சரி சரி…வேற என்ன வேணும் …

வேற ஒன்னும் வேண்டாம்….

சேகர் வாக்கிங் சூ , ட்ரக் பேன்ட்- டீ சர்ட் என்று காலேஜ் பையனைப் போல கிளம்பிப் போனார்.

இட்லி மாவை பிரிட்ஜ் ல இருந்து வெளியே எடுத்து வைத்தவாறு, தேவகி வாய்க்குள் புலம்பினாள்.

புலம்பல் என்ன வென்று சேகருக்கு தெரிந்தால் அவ்வளவு தான். இருவரும் சண்டைக் கோழி தம்பதிகள்.

சேகர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தவர். தற்போது ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆயிற்று, இருந்தாலும் இன்னும் நாற்பது வயதிற்கு மேல் மதிப்பிட முடியாது.

தலைமுடிக்கு டை, உடம்பு ஆரோக்கியத்திற்கு வாக்கிங் என்று பட்டையை கிளப்பும் இன்றைய அப்பா.

தேவகி பாவம் இவரை விட எட்டு வயது சின்னவர். தலைமுடி இடுப்பிற்கு கீழே இருந்தாலும் டை அடிப்பதில் ஆர்வம் இல்லை. மெலிந்த உடல்வாகு. ஆனால் தோற்றம் அவர் வயதிற்கு ஏற்றார் போல் இருந்தது.

ஒரு மகன் ஒரு மகள் இருவரும் திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டனர்.

மகள் கீதா பெங்களூரில் இருக்கிறாள். இரண்டு பிரசவம் வரை நெருக்கமாக இருந்த உறவு அதன் பின் கால ஓட்டத்தில் சற்றே விலகி இருந்தது.

மாதம் ஒரு முறை போனில் பேசுவாள் கூடவே பேரன்கள் பேசுவார்கள். அதோடு சரி, இப்போதெல்லாம் இங்கு வருவதும் குறைந்து விட்டது. பேரன்கள் இருவரும் கராத்தே கிளாஸ், பாட்டு கிளாஸ் என்று எப்பவும் பிஸி, அதனால் தேவகி அவர்களை கட்டாயப்படுத்துவதில்லை.

அடுத்து மகன் ராஜா தங்கையின் திருமணச் சுமை காரணமாக சீக்கிரமே வெளிநாடு சென்றவன். பாவம் மத்த பசங்க மாதிரி என்ஜாய் பண்ணாத நல்ல ஜீவன்.

இன்று வரை தேவகியின் நம்பிக்கை நட்சத்திரம், நல்ல நண்பன். மருமகள் படித்தவள், ,அழகான பேத்தி. இதுவரை குறை சொல்ல ஏதும் இல்லை.

மகன் சனி, ஞாயிறு இரண்டு நாளும் அம்மாவோடு பேசுவான். அவள் குறை எல்லாம் கேட்டு சமாதானம் செய்யும் ஜீவன்.

தேவகி அந்த நாளுக்காக வாரம் முழுவதும் காத்திருப்பாள்.

சேகர் ஆரம்பம் முதலே அதிக குடும்ப பற்று இல்லாதவர். நேரில் பார்த்தால் பாசத்திற்கு குறைவில்லை. நண்பர்கள் வட்டம் எப்போதும் அதிகம். குடும்பத் தோடு அதிக நேரம் செலவிட்டதே கிடையாது.

தேவகிக்கு ஆரம்பித்தில் வேதனையாக இருந்தாலும் பழகிப்போனது. பிள்ளைகளின் திருமணத்திற்கு பின் தனியா கஷ்டப்பட்டார்.

மகன் , மகளின் போனை எதிர்பார்த்து காத்திருந்தார். அவருக்கு வேறு உலகம் கிடையாது. அவ்வப்போது உறவுகள் வந்து சென்றனர். விசேசங்களுக்கு அழைப்பிதழ் வந்தது… சேகர் தனியாகவே சென்று வந்தார்.

தேவகியின் உடல்நிலை அவருக்கு சாதகமாக அமைந்தது. மகன் வாங்கிக் கொடுத்த காரில் மைனரைப் போல சென்று வருவார். தேவகியும் எந்த எதிர்ப்பும் காட்ட மாட்டார்.

இட்லியை சுட்டு வைத்துவிட்டு ,டிவியில் மூழ்கிப் போனார். தேவகிக்கு அந்த சீரியல் கதை அப்படியே இவர் வாழ்க்கையை சொல்வது போல் இருந்தது. இடையில் சாமிக்கு விளக்கேற்றி வைத்தார்.

டிபனை தயார் செய்து டைனிங் டேபிள் மீது வைத்தார்.

மணி ஏழு சேகர் கீரையோடு வந்தார்.

தேவகி மெல்ல அதை சுத்தம் செய்து பிரிட்ஜ் ல் வைத்து விட்டு இருவரும் இரவு உணவை முடித்தனர். இனி பதினோரு மணி வரை சேகரின் கையில் தான் ரிமோட்.

தேவகி திரும்ப பெட்ரூமும் ஜன்னல் அருகில் வந்து அமர்ந்தார். இரவில் மளிகைக் கடை தெளிவாக தெரிந்தது. ஒரு இளம்பெண் மாவு பாக்கெட் வாங்கிக் கொண்டு வேகமாக வண்டி ஓட்டிச் சென்றாள்.

இரண்டொரு வயதான பெண்கள் வாக்கிங் என்ற பெயரில் மெல்ல நடந்து கொண்டு இருந்தார்கள். தேவகிக்கு பையன் இந்த முறை வரும்போது மூட்டுவலிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும என்று தோன்றியது். மற்றவர்கள் இப்படி உலாத்துவதைப் பார்த்தால் தேவகிக்கு தானும் அவர்களோடு நடக்க ஆசைவரும்.

மளிகைக் கடை மூடும் நேரம் வந்து விட்டது. அப்போது பைக்கில் வந்த ஒரு இளம்ஜோடி இறங்கி ஏதோ வாங்கினார்கள். அவர்கள் கையில் சின்ன குழந்தை இருந்தது. அண்ணாச்சி ஏதோ சத்தம் போட்டு கொண்டே சாமான்களை கொடுத்து அனுப்பினார்.

தேவகிக்கு எண்ணம் தன் மகனிடம் சென்றது. தன் மகனும் இப்படித்தான் வெளிநாட்டில் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி தான் சமாளித்தானோ என்று மனம் கலங்கியது.

தன்னால் முடிந்த வரை மகனிடம் எதுவும் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்துக்கொண்டாள். மளிகைக் கடையையும் மூடி விட்டார்கள்.

தேவகி அம்மாவிற்கு இனி வேடிக்கைப் பார்க்கவும் எதுவும் இல்லை. படுக்கையில் படுத்தார். உறக்கம் வரவில்லை. எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றது.

இந்த வீட்டுக்கு முதன்முதலில் வந்தது.

முதலிரவு , முதல் விருந்து முதல் சண்டை என்று எல்லாம் நினைவிற்கு வந்தது.

குழந்தைகளின் மீது தேவையில்லாமல் காட்டிய கோபம், அடித்த அடி பின்பு கோபம் தீர்ந்த பின் அவர்களை கட்டிப்பிடித்து அழுதது. இன்று ஏனோ தேவகி அம்மாவிற்கு குழந்தைகளின் ஞாபகம் அதிகமாக வாட்டியது.

மறுநாள் காலை ….

கோமதி அம்மா எட்டு மணி ஆகியும் எந்திரிக்கவில்லை. சேகர் கோவமாக

“கோமதி என்ன இன்னும் தூக்கம். வீட்டில் வேலை அதிகமோ ” கிண்டல் செய்யும் குரலில் எழுப்பினார்.

பதில் கூறாமல் மெல்லமாக எழுந்து பாத்ரூமுக்கு சென்றார். வெளியே வரும்போது கண்கள் நனைந்திருந்தது.

அதை கவனிக்க சேகரு நேரமில்லை.

தேவகி கொடுத்த டிபனும் டீ யை குடித்துவிட்டு நண்பர்களை பார்க்க கிளம்பி விட்டார். ”மதிய சாப்பாட்டிற்கு வரமாட்டேன். வெயிட் பண்ண வேண்டாம். நம்ம குமார சாமி, இடம் பாக்க போகனும்னு சொன்னார். சாயங்காலம் தான் வருவேன்”

சரி என்று தலை ஆட்டினார் கோமதி.

ஆமா எப்பப்பாரு ஒரு சோகம் மூஞ்சில – மனதிற்குள் சேகர் நினைத்துக் கொண்டே காரை எடுத்துக்கொண்டு கிளப்பினார்.

கோமதி க்கு சாப்பிட தோன்றவில்லை. மகன் ,இந்த வாரம் வேலை விசயமாக வெளியூர் செல்வதால் அடுத்த வாரம் தான் பேசுவதாகச் சொல்லி இருக்கிறான். ஆகவே இந்த வாரம் அவன் குரலை கேட்க வில்லை. மனம் வெறுத்துப் போனது. மகள் நாம கூப்பிட்டா கோவப்படுவா….ஏம்மா நானே உன்னை கூப்பிடலான்னு இருந்தேன்..அதுக்குள்ள எதுக்கு கூப்பிட்ட ….என்று சமாளிப்பாள்.

கோமதியின் தனிமையைப் போக்க லட்சுமி வந்தாள்.

“அம்மா அம்மா”

குரல் கேட்டதும் கோமதி அம்மா ஓட்டமும் நடையுமாக கதவைத் திறந்தார்.

வா லட்சுமி ….வா நாளைக்கு தான வர்ரேன்னு சொன்ன ???

ஆமாம்மா …..இன்னிக்கு வேற எங்கேயும் வேலை இல்ல …சரி உங்கள பாக்கணும் போல இருந்தது. அதாம்மா !!…

பேசிக்கொண்டே வீட்டைப் பெருக்கி துடைத்தாள் லட்சுமி.

கோமதி அம்மாவிற்கு மனதிற்குள் தன் மகள் வந்தது போல இருந்தது. மனதிற்குள் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

ஏம்மா …சொன்ன கோவப்படாதீங்க. தம்பி அமெரிக்காவில இருந்து வந்து தான் நீங்க ஆஸ்பத்திரிக்கு போகணு மா ?? உங்க வயசு பொம்பளைங்கள பாருங்க எப்படி இருக்காங்கன்னு…உங்க உடம்ப சரியா பாக்காம கிழவி மாதிரி ஆயிட்டீங்க…சார் பாருங்க எப்படி அவரு உடம்ப பாத்துக்கராரு…..

போடி உனக்கு என்ன தெரியும். ஐந்து வருடங்களுக்கு முன்னாடி தான் என்னோட மாமியார் இறந்து போனாங்க…அதுவரைக்கும் நான்.. பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். ஒரு பூ வெச்சா பிடிக்காது. அவர் கூட பேசினா பிடிக்காது. கடவுளே படுத்த படுக்கையாக இருந்தப்ப கூட என்ன நிம்மதியா விடல. அவங்க போன பின்னால தான். அவர்கிட்ட தைரியம சண்டையே போட்டேன் தெரியுமா ??

லட்சுமி க்கு பார்க்க பாவமா இருந்தது.

“அம்மா சார கூப்புட்டு ஆஸ்பத்திரிக்கு போங்க….

இல்லை, லட்சுமி அவருக்கு பொறுமை இருக்காது. எம் பையனா இருந்ததா என் கூட பொறுமைய வருவான் …கோபப்பட மாட்டான்…

அம்மா !! நீங்க சார ஆரம்பத்திலேயே விட்டுடீங்க…

அத விடு லட்சுமி …எம் பேத்தி எப்படி வளந்துட்துட்டா தெரியுமா ?? இந்த தடவை இங்க வந்துட்டு போன பின்னாடி அவள ஸ்கூல் ல சேக்கப் போறாங்களாம்…

அப்படியாம்மா…

அவ இப்ப நல்லா தழிழ் பேசறா தெரியுமா ?

தம்பி இந்த தடவை வரும் போது அவங்கூட போகலான்னு இருக்கேன் லட்சுமி…

சந்தோஷம்மா….போயிட்டு வாங்க அப்ப தான் சாருக்கு உங்க அருமை தெரியும். கூடவே இருக்கும் போது புரியாது…

அருமை தெரியுதோ இல்லையோ….நான் எம் பையங்கூட சந்தோஷம இருப்பேன்..

மதியம் உணவுக்குப் பின் லட்சுமி கிளப்பினாள்.

அம்மா உடம்ப பாத்துக்கோங்க… நான் அடுத்த வாரம் வர்றேம்மா..

கதவை சாத்தி விட்டு சோபாவில் அமர்ந்தார். சாதாரணமாக தேவகி அம்மாவிற்கு ஸ்மார்ட் போனை உபயோகிக்க தெரியாது. இன்று ஏனோ அதை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்.

மகள் ஆன்லைனில் இருப்பதைப் பார்த்தார். தனக்கு ஏதாவது மெசேஜ் அனுப்புவாளா என்று சில நிமிடங்கள் காத்திருந்தார். ஏமாற்றத்தோடு தன் மகன் அனுப்பிய வீடியோ, போட்டோக்களைப் பார்த்தார்.

எத்தனை முறை பார்த்தாலும் கோமதிக்கு ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு புதிய விசயம் கிடைக்கும்.

மகனிடம் போசத் தோன்றியது.

உன்னை எத்தனை முறை அடித்து இருப்பேன். ஒரு முறை கூட என்னிடம் உனக்கு கோபம் வரவில்லையா ??உன்னை நான் என் சொல்வேன் மகனே…

தந்தை என்று சொல்ல மாட்டேன்..அவர் என்னை பல முறை திட்டி இருக்கிறார். தாய் என்று சொல்ல மாட்டேன் …அவர் என்னை பத்து மாதம் மட்டுமே சுமந்தார். நீ எனக்கு என்னவென்று சொல்வேன் மகனே !!

உன்னை நான் பத்து மாதங்கள் மட்டுமே சுமந்தேன்…நீ என்னையும் என் கடமையையும் சேர்த்து அல்லவா சுமக்கிறாய்!! உன்னை வரவேற்க அம்மா எப்பவும் காத்துக்கொண்டே இருப்பேன்…!!

நீ என் வயிற்றில் உதித்த நண்பன் !!

தன் டைரியில் எழுதி வைத்தார். மனம் நிம்மதியாக இருந்தது.மகனிடம் பேசிய திருப்தி கிடைத்தது. மெல்ல படி இறங்கி தோட்டத்தில் செடிகளை பார்வையிட்டார்.

இந்த கொய்யா மரம் மகன் பத்தாவது படிக்கும் போது வைத்தது. இந்த ரோஜா செடி மகள் காலேஜ் டூர் போயிட்டு வரும் போது வாங்கி வந்தது.

தென்னை மரங்கள் இவர் வரும் முன்பே இருந்தது. இன்று தோட்டம் சுத்தமாக இருந்தது.எல்லாம் லட்சுமி கைவண்ணம்.

இன்று பூத்த சில மல்லிகை பூக்களை தலையில் சொருகிக் கொண்டார்.தலையில் பூ வைத்ததும் வயது குறைந்தது போல இருந்தது.

இருள் ஆரம்பித்தது. திரும்ப வீட்டிற்குள் வந்து அமர்ந்தார். இரவு உணவிற்கு சேகர் வந்து சேர்ந்தார்.

இன்னைக்கு லட்சுமி வந்துச்சா.??

உம் …

அதான் வீடு சுத்தமா இருக்கு…

எப்போதும் போல சேகர் நியூஸ் சேனலில் பிஸி ஆனார். கோமதி படுத்துக் கொண்டே இன்னும் நான்கு நாட்கள் காத்திருக்கனும் மகனோடு பேச என்று எண்ணிக் கொண்டே கண்களை இருக்க மூடி தூங்க முயற்சி செய்தார்.

அடுத்த நாள் காலை….

இன்றும் சேகர் காலையில் நேரத்தில் எழுந்தார். கோமதி தூங்கிக்கொண்டு இருந்தைப் பார்த்து

என்ன கோமதி வர வர நீ ரொம்ப லேட்டா எந்திரிக்கிற…உடம்பு ஏதாவது சரிஇல்லையா ???

சேகர் எப்போதும் இந்த மாதிரி மனைவியை கேட்டதில்லை. அவருக்கு அவங்க அம்மா அதை சொல்லித் தரவில்லை. எப்போதும் கடுகடு வென்று பேசுவதே அவரின் இயல்பு.ஒரு வேளை அவர் இப்படி பேசிதை கோமதி எதிர் பார்க்க வில்லை போலும்…அவரிடம் இருந்து பதில் இல்லை.

என்னம்மா ரொம்ப உடம்பு முடியலியா ?

கொஞ்சம் பெட்சீட்டை விளக்கி விட்டு தொட்டுப் பார்த்தார்.

கோமதி……..கோமதி…..

சேகருக்கு சற்று நேரம் ஒன்றுபுரியவில்லை.

நிதானித்துக் கொண்டு ஆம்புலன்ஸை வரவழைத்தார்.

வந்த மருத்துவர் கோமதி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்து விட்டு சென்றார்.

அதற்குள் அக்கம் பக்கம் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள்.கூட்டம் அதிகமானது. மகனுக்கும் மகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

கண்ணாடிப் பெட்டியில் அம்மா பூமாலைகளோடு தான் பெற்ற செல்வங்களுக்காக எப்பவும் போல காத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *