கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2024
பார்வையிட்டோர்: 7,013 
 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

அதிகாலை வாடைக் காற்று… திறந்திருந்த ஜன்னல் வழியே சிலிர்ப்புடன் நுழைந்தது. மீனாவின் கைகள் தன்னிச்சையாக விலகியிருந்த போர்வையை இழுத்து கழுத்து வரைப் போர்த்திக் கொண்டது. 

பத்தடிக்குப் பத்தடி அகலமுள்ள அந்த அறையிலிருந்த மின் விசிறி நோஞ்சான் கிழவனாய் மெல்ல சுற்றிக் கொண்டிருந்தது. 

கார் வேகமாக.. மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. எதிர்பட்ட வாகனங்கள் மின்னல் வேகத்தில் காணாமல் போக… அதிக வேகத்தில் அடி வயிற்றில் ஜிவ்வென்ற உணர்வு எழ… பயத்தில் கண்களை இறுக மூடி அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். 

“வேணாம்… வேணாம்… வேணாம்.. ப்ளீஸ்… நிறுத்திடுங்க…” கோழிக் குஞ்சாய் உடல் வெட வெடக்க… பயத்தில் அலறினாள். 

அவனோ அவள் அலறலை ரசித்தபடி ரோஸ் நிற ஈறுகள் தெரிய கவர்ச்சியாய் சிரித்தான். இடது கையை அவள் தோளில் போட்டு அணைத்துக் கொண்டு வாய் விட்டு சிரித்தான். 

“நிறுத்துங்க… ப்ளீஸ்… நிறுத்துங்க…!”. 

“நோ… நோ… டோண்ட் ஃபியர் மைடியர்!” அவளை சிரித்தபடி ஆறுதல் படுத்தினானே ஒழிய காரை நிறுத்தவில்லை. மாறாக, வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான். 

அவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வர… உடலெங்கும் குப்பென்று வியர்த்தது. 

“நோ…” என்றலறியபடி மயங்கி அவன் மீதே சரிந்தாள். 

“லொக்… லொக்…” என்ற இருமல் சத்தம் விடாமல் கேட்க புரண்டு படுத்தாள் மீனா. 

“மீனா… மீனா.” மூச்சு வாங்க… நடுநடுவே இருமல் தொந்தரவு செய்ய.. அதே அறையில் ஒரு பக்கமாய் படுத்திருந்த கிருஷ்ணசாமி மகளை அழைத்தார். 

முகமெங்கும். வாடைக் குளிரிலும் பொட்டு பொட்டாய் வியர்த்திருக்க… கை கால்களை கட்டிப் போட்ட அவஸ்தையில் அவளால் உடம்பை  அசைக்க முடியவில்லை. 

அப்பாவின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போலிருந்தது. எழ முயன்றாலும் அவளால் முடியவில்லை. 

அடுத்த முறை கிருஷ்ணசாமி அவள் பெயரை உச்சரிக்கும் முன் பெரிதாய் இருமல் வந்து சொல்ல விடாமல் தடுத்தது. 

இந்த முறை வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தாள். ஒரு கணம் சூழ்நிலையின் வித்தியாசத்தில் திணறியவள்… மெல்ல உண்மை புரிந்தபோது.. தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். 

“ச்சே… அத்தனையும் கனவு! நானாவது, காரில் போவதாவது? அதுவும் அசுர வேகமாக?” அண்ணாந்து பார்த்தாள். ஒரு நிமிடத்தில் அறுபது முறை சுற்றும் சோம்பேறி மின்விசிறி இருக்கும் வீட்டில் இருந்துக் கொண்டு கனவில் காரில் பறக்கிறேனா? ரொம்பத்தான் லொள்ளு இந்த கனவிற்கு! அதுவும் என் பக்கத்தில் ஒரு அழகிய ஆண் வேறு! எவ்வளவு தைரியமிருந்தால் என் தோளில் கை போட்டுக் கொண்டு… சே… நானும் எப்படி அவனோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன்?” கனவு என்பதையும் மீறி அவள் தன் செய்கைக்காக வெட்கப்பட… 

“மீனா…” என்றார் அப்பா மூச்சு வாங்க. திடுக்கிட்டு திரும்பினாள். 

மூச்சு விட சிரமப்பட்டு வாயை ஆவென திறந்து மூச்சை புஸ் புஸ்ஸென்று வெளிவிட்டுக் கொண்டிருந்தார் கிருஷ்ணசாமி. 

அடுத்த கணம் கண்ட கனவெல்லாம் கரைந்தோடி மறைந்து விட… வந்தாள். “அப்பா… என்னப்பா ஆச்சு?” என்று பதறியபடி எழுந்து அப்பாவிடம் வந்தாள்.

“மூச்சு விட முடியலேம்மா!” சைகையில் சொன்னார். 

“என்னை எழுப்பக் கூடாதாப்பா?” அவர் நெஞ்சை நீவி விட்டபடி.

“கொஞ்சம்… சூடா.. தண்ணி.. ” அதை சொல்லக் கூட சிரமமாய் இருந்தது. மூச்சை ஆயாசத்துடன் இழுத்து விட்டார். 

அந்த மூச்சில் முந்தின நாள் குடித்த பிராந்தி வாசம் கலந்திருந்தது.

மீனா முகம் சுளித்தாள். மனசு கனத்துப் போனது. 

ஒன்றும் பேசாமல் சமையலறைக்குச் சென்று பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்து வெந்நீர் வைத்தாள். 

சற்று நேரத்தில் சூடு பொறுக்கும் விதமாக பதமாக ஆற்றி, வீஸிங் ப்ராப்ளத்திற்காக டாக்டர் தந்த மாத்திரைகளில் இரண்டை எடுத்துக் கொண்டு அப்பாவின் அருகில் வந்தமர்ந்தாள். 

தானே அவருக்கு மாத்திரைப் போட்டாள். 

“கொஞ்ச நேரம் உட்கார்ந்திருங்க… அஞ்சு நிமிஷம் கழிச்சு படுத்துக்கலாம்!” 

“ம்….” சுவற்றில் சாய்ந்துக் கொண்டார். 

பத்து நிமிடம் சென்ற பிறகு… சீரான மூச்சு வர… கிருஷ்ணசாமி மகளை கனிவுடன் பார்த்தார். 

“நீ போய் படுத்துக்கம்மா!” 

“இனிமேல் போய் படுக்கறதா? விடிய ஆரம்பிச்சிடுச்சுப்பா… இப்ப விருந்தே வேலைய ஆரம்பிச்சிட்டா… சரியா இருக்கும்!” 

“என்னாலதானேம்மா உனக்கு இவ்வளவு கஷ்டமும்?” குரல் அமுங்கி வந்தது. 

“எனக்கு இதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லேப்பா! நீங்க.. நாள் தவறாம குடிச்சிட்டு வர்றீங்களே! இதுதான்பா.. கஷ்டமாயிருக்கு! ஏற்கெனவே வீஸிங் ப்ராப்ளம் இருக்கு. இப்ப குடிச்சி, குடிச்சி இருமலும் சேர்ந்து போச்சு! கழுத்தெலும்பெல்லாம் வெளியே தெரியுதுப்பா… உங்க உடம்பு வரவர மோசமாயிகிட்டே வருது. அதுக்காகவாவது இந்த குடியை விடக் கூடாதா?” 

“நான் வேணுமின்னே குடிக்கலே மீனா! உன்னை நினைச்சிதான் குடிக்கிறேன். என் பொண்ணுக்காக பத்து பைசாக் கூட சேர்க்க முடியலியே. அதை நினைச்சா… வேதனை தாங்கலே. அதை மறக்கத்தான் குடிக்கிறேன்!” 

“ஏம்ப்பா பொய் சொல்றீங்க? குடிக்கிறவங்க அத்தனை பேரும் ஏன் நீங்களா ஒரு காரணத்தை உருவாக்கி அதுமேலே பழியைப் போடறீங்க? எனக்கு பத்த பைசாக் கூட சேர்க்க முடியலியேன்னு தினமும் முப்பது ரூபா செலவு பண்ணிக் குடிக்கிறீங்க? இது என்னப்பா நியாயம்? நிஜமாகவே என் மேலே அக்கறை இருந்தா.. குடிக்கிறதுக்காக செலவு பண்ற பணத்தை எனக்காக சேர்த்து வைப்பீங்க? எங்கேப்பா… உங்களுக்கு என்மேல இருக்கிற அக்கறையை விட… ஒயின் ஷாப் வச்சிருக்கிறவன் நல்லா பொழைக்கணும்னு அவன் மேல அக்கறை வச்சிருக்கீங்க!” 

“மீ….னா..!” 

“நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேம்ப்பா..! அது உங்க இஷ்டம். ஆனா, இப்ப இந்த உலகத்திலே எனக்கு உங்களை விட்டா வேற் யாருப்பா இருக்கா? அதை நினைச்சிப் பார்த்தீங்கன்னா… உங்க உடம்பை இப்படி பாழாக்கிக்க மாட்டீங்க! உங்களுக்கு ஏதாவதொண்ணு ஆகிப் போச்சின்னா.. அப்புறம் என் கதி? அதை நினைச்சிப் பாருங்கப்பா…!” கொஞ்சம் விட்டால் அழுது விடுவாள் போலிருந்தாள் மீனா. 

சொல்லி முடித்து விட்டு அங்கிருந்து எழுந்துக் கொண்டாள். 

“மீனா….” 

“தூங்குங்க… வெளியே பனி கொட்டுது!” என்றபடி அவர் தோளைப் பற்றி படுக்க வைத்து… போர்வையை நன்றாகப் போர்த்தி விட்டாள்.

கிருஷ்ணசாமி மகளையே மனம் கனக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தன் செய்கையால் காயப்பட்ட வேதனை மகன் முகத்தில் கண்ட போது… நத்தையைப் போல் இதயம் சுருங்கிக் கொண்டது. 

அவரால் சற்று முன்னதாகவே உறக்கம் கலைந்த மீனா பரபரவென செயல்பட்டாள். 

தன் படுக்கையை சுருட்டி வைத்தாள். 

வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளித்து, கோலம் போட்டாள்… தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்க… இரண்டு குடத்தை எடுத்துக் கொண்டு ஓடினாள் மீனா. 

மகள் படும் சிரமங்களைக் கண்டு… கண்களோரம் கண்ணீர் . துளிர்த்தது கிருஷ்ணசாமிக்கு! 

அத்தியாயம்2

கிருஷ்ணசாமிக்கு அதற்கு மேல் உறக்கம் வரவில்லை. படுக்கையை விட்டு எழுந்தமர்ந்து கொண்டார். 

மீனா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும், மீண்டும் காதில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.

நிஜம்தானே? திடீரென்று எனக்கு ஏதாவதொன்று ஆகி விட்டால் மீனாவின் கதி?

நினைக்கும்போதே.. நெஞ்சு கப்பென்று அடைத்துக் கொண்டது.

கிருஷ்ணசாமி எழுந்து நின்றார். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய போட்டோவின் முன் வந்து நின்று கொண்டார்.. 

ஏழு பேர் அடங்கிய குடும்ப போட்டோ… கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்த பழைய போட்டோ. அதில் இளம் வயது கிருஷ்ணசாமி யும் அவர் மனைவி சகுந்தலாவும் அமர்ந்திருக்க… அவர்களுக்குப் பின்னால் ஒரே சாயலில் நான்கு பெண்கள் வசந்தி, பிரேமா, மாலினி, சாந்தி ஆகியோர் நின்றிருக்க… அம்மாவின் மடியில் இரண்டு வயது மீனா… பொம்மை போன்று மிக அழகாக… மற்றவர்களை விட வசீகரமாக இருந்தாள். 

ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும். ஆண்டியாவான்! அப்படித்தான் ஆகிவிட்டார் கிருஷ்ணசாமி. அப்படியொன்றும் வசதியானவர் இல்லை. நடுத்தர வர்க்கம். ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டு வரிசையாய் ஐந்தும் பெண்ணாய் பிறந்து விட்டது. கிருஷ்ணசாமிக்கு தபால் அலுவலகத்தில் துணை அதிகாரி பணி! நல்ல சம்பளம்தான். ஐந்து பெண்ணாயிற்றே. எங்கிருந்து போதும்? யானை பசிக்கு சோளப் பொறிதான். சகுந்தலா அப்படி, இப்படி என்று மிச்சம் பிடித்து பெண்களுக்காக ஓரளவு சேர்த்தாள். இரண்டு பெண்களை தகுதிக்கேற்று இடத்தில் கட்டிக் கொடுத்தாள். அதை பார்த்த சந்தோஷமே போதும் என்று நினைத்தாளோ, என்னவோ, பத்து நாள் டைபாய்டு காய்ச்சலில் பொசுக்கென்று கண்ணை மூடி விட்டாள். 

இடிந்து போய் விட்டார் கிருஷ்ணசாமி. மனைவி இருந்தவரை குடும்ப பாரம் தெரியவில்லை. இப்போது பெரும் சுமையாகி விட்டது. மூன்று பொட்டை பிள்ளைங்களை வைத்துக் கொண்டு எப்படிக் கட்டிக் காப்பாற்றுவது… என்ற பயமே அவரை சிறிது சிறிதாக அரித்தது. மனைவியைப் போல் மிச்சம் பிடித்து சேமித்து வைக்க… அந்த நெளிவு சுளிவு தெரியவில்லை. அதிலும் வீட்டுப் பொறுப்பை சுமந்துக் கொண்டிருந்த மாலினி ஆடம்பரப் பிரியை. குடும்ப செலவுகளுக்காக அப்பா தந்த பணத்தின் பெரும் பகுதி… ஃபேன்ஸி ஸ்டோருக்குத்தான் போனது. 

ஒரு நாள் மாலினி ஒரு பணக்கார வாலிபனோடு ஓடிப் போன போதுதான் அவள் காதல் விவகாரமே தெரிய வந்தது. குடும்பம் மொத்தமும் துடித்துப் போக.. நல்லவேளை மாதவன் நிஜமாகவே மாலினியை நேசித்திருந்த காரணத்தால்… அவன் தன் வீட்டில் பிடிவாதமாய் போராட்டம் நடத்தி காதல் மனைவி மாலினியை மருமகளாக்கி விட்டான். 

நிம்மதியாய் மூச்சு விட்டார் கிருஷ்ணசாமி. அவர் எந்த பெண்ணையும் அதிகமாய் படிக்க வைக்கவில்லை. பண வசதியின்மையே காரணம். அது மட்டுமல்ல.. மீனாவைத் தவிர மற்ற பெண்களுக்கு படிப்பில் நாட்டமும் இல்லை. 

மாலினி ஓடிப் போன காரணம் காட்டி அடுத்தவள் சாந்திக்கு எந்த வரனும் குதிராமல் இழுத்துக் கொண்டே போக… பயந்துவிட்டார் கிருஷ்ணசாமி, 

ஒரே ஒரு வரன் தகையற மாதிரி வந்தது. இந்த இடத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று எண்ணினார். அவர் எண்ணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட மாப்பிள்ளை வீட்டார், தங்கள் தகுதிக்கும் மீறி, கிருஷ்ணசாமியின் நிலையைப் பற்றியும் யோசிக்காமல் கையில் நாற்பதாயிரம் ரொக்கம், பைக், சீர் செனத்தி என்று பெரிய லிஸ்டே எழுதிக் கொடுத்துவிட… திகைத்துப் போனார் கிருஷ்ணசாமி. 

தரகர் இரு வீட்டாரிடமும் ஏற்றி இறக்கி, கூட்டி குறைத்து சம்மதிக்க வைத்தார். வேறு வழியின்றி… கிருஷ்ணசாமி இருக்கிற லொட்டு லொசுக்கு லோனுக்கெல்லாம் அப்ளை பண்ணி, துடைத்தெடுத்து நான்காவது பெண்ணின் கண்ணீரை துடைத்து அனுப்பி வைத்த போது மீனா ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணசாமிக்கோ ரிடையராக நாலைந்து மாதங்களே இருந்தன. 

நல்ல மதிப்பெண்களோடு பாஸ் பண்ணிய மீனா மேற்கொண்டு டிகிரி படிக்க ஆசைப்பட்டாள். ஆனால் கிருஷ்ணசாமியால் அவள் படிப்புக்காக பத்து ரூபாய் கூட செலவு பண்ண முடியாத நிலைமை. ரிடையராகி விட்டிருந்தார். வருகின்ற சொற்ப பென்ஷன் பணம் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டிற்குமே போதாத நிலை. எல்லா லோன்களும் எடுத்திருந்ததால்… ரிடையராகும்போது வந்த அம்பதாயிரத்தைக் கூட வாங்கிய கடனை அடைக்கத்தான் உதவியது. 

செய்யாமல் விட்ட ஒவ்வொரு கடமையும் ஏழேழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து வரும். நான்கு பேரின் கடமையை முடித்து விட்டவரால் மீனாவுக்கு தான் என்ன செய்யப் போகிறோம் என்று கைகளைப் பிசைந்தார். 

துளி தங்கம் கூட சேர்த்து வைக்கவில்லை. இந்த குழந்தையை எப்படி கரையேற்றப் போகிறோம் என்ற கவலையில் குடிக்க ஆரம்பித்தார். நாளாக ஆக… அந்த குடியின்றி அவரால் இருக்க முடியாத நிலைக்கு மாற… குடிப்பதற்கு பணம் வேண்டுமே! அதற்காக ஒரு சேட்டுக் கடையில் கணக்கெழுதும் வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணசாமியிடம் இருந்த நல்ல பழக்கம் வேலை நேரத்தில் குடியை வாயில் வைக்க மாட்டார். 

மீனா தன் எதிர்காலம் பற்றி நன்றாகத் தெரிந்துக் கொண்டாள். தன் கையே தனக்குதவி! வேலைக்குச் சென்று சம்பாதித்துதான் தனக்கென்று நான்கு காசு சேர்க்க முடியும் என்கிற நிலை. ஆனால், நல்ல வேலை கிடைக்க வேண்டுமானால் இந்தக் காலத்தில் அட்லீஸ்ட் ஒரு டிகிரியோ, கம்ப்யூட்டர் கோர்ஸோ படித்திருக்க வேண்டும். எப்படியாவது படித்தே தீர வேண்டும் என்கிற பேராவலில் தன் ப்ளஸ் டூ படிப்பிற்கேற்ற வேலையைத் தேடினாள். கடைசியில் எப்படியோ ஒரு ஜெராக்ஸ் கம்பெனி யில் வேலை கிடைத்தது. அதிலேயே டிராவல்ஸும், பொது தொலைபேசி யும் இயங்கியதால்… அத்தனையும் பொறுப்பாக கவனித்துக் கொண்ட மீனாவுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அந்த நிலையில் அவளுக்கு அந்தப் பணம் வெல்லமாயிற்றே! 

தபாலில் மேற்கொண்டு படிக்கவும், வீட்டிற்கு செலவு செய்யவும் அந்தப் பணம் சரியாக இருந்தது. கிருஷ்ணசாமியும் மகள் வேலைக்கு செல்வதை தடுக்கவில்லை. 

அதிகாலையில் எழுந்து விடுவாள் மீனா. வீட்டு வேலைகளை முடித்து விட்டு சமைத்து, அப்பாவுக்கும், தனக்குமாய் டிபனில் அடைத்து வேலைக்குச். செல்ல இவள் தயாராவாள். கிருஷ்ணசாமி பணிபுரியும் இடம் சற்று தொலைவு என்பதால் அவளுக்கு முன்பே அவர் கிளம்பி விடுவார். மீனா வேலை செய்யுமிடம் நடந்து போகும் தூரம்தான். 

அப்படி இப்படியென்று இதோ…. மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆறேழு மாதத்தில் படிப்பு முடிந்து விடும். அடுத்து கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும். முடித்து விட்டால்… நிம்மதி. இதைவிட நல்ல வேலையைத் தேடிக் கொள்ளலாம். கை நிறைய சம்பளம் கிடைக்கும். பாவம்.. அப்பா மிகவும் சிரமப்படுகிறார். அவரை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும்! இப்படியெல்லாம் திட்டம் போாட்டுக் கொண்டிருந்தாள் மீனா. 

“என்னப்பா தூங்கலே?” இடுப்பில் தண்ணீர் குடத்துடன் உள்ளே நுழைந்த மீனா, அப்பாவைப் பார்த்து ஆச்சரியமாய் கேட்டாள். 

“இல்லேம்மா… தூக்கம் வரலே!” என்றவர் மகளை மனம் கனக்கப் பார்த்தார். 

‘பாவம் மீனா! மற்ற பெண்களையாவது கரையேற்ற என்னிடம் ஓரளவு பணம் இருந்தது. ஆனால், இவளுக்கு செலவழிக்க என்னிடம் சல்லிக்காசுக் கூட இல்லையே! என்னப் பண்ணப் போகிறேன்? எனக்கு மகளாய் பிறந்த பாவத்துக்கு இவள் கடைசி வரை கஷ்டப்பட வேண்டுமா? இல்லை… என் மகளை அந்தளவிற்கு விடமாட்டேன். நான் பெற்றவன். என் கடைசி சொட்டு ரத்தத்தை விற்றாவது என் மகளை நல்லவன் ஒருவன் கையில் ஒப்படைத்தே தீருவேன்? 

அவள் சொன்னதுபோல் என் இன்பத்துக்காக நான் குடிக்கிறேன். அதை மறைக்க அவளை காரணம் காட்டுகிறேன். எப்பேர்ப்பட்ட சுயநலக்காரன் நான்? எப்படி மாறிப் போனேன் இப்படி? சம்பாதிக்கிறதைக் கூட என் மகளுக்காக சேமிக்கத் தோன்றாமல் குடிப்பதற்கு செலவழித்த நான்’ எவ்வளவு பெரிய அயோக்கியன்? 

என் குழந்தை அப்படியிருந்தும் கூட என்னை எப்படி மனம் கோணாமல் கவனித்துக் கொள்கிறாள்? சின்ன குழந்தையைப் போல் எவ்வளவு அன்பாய் பார்த்துக் கொள்கிறாள்? நாளெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து, வீட்டையும் பராமரித்து, படிப்பையும் பார்த்துக் கொண்டு.. போதாதற்கு நான் குடித்து விட்டு வந்தால் முகம் சுருங்காமல் சுத்தப்படுத்துவதும், நோயில் வாடினால் தாயாய் மாறி பேணுவதும்… என் குழந்தை எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாள்? 

இதற்கு மேலும் திருந்தாவிட்டால் நான் மனுஷனே இல்லை!. கிருஷ்ணசாமியின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது. 

– தொடரும்…

காதல் தர வந்தேன்…! (நாவல்), ஏப்ரல் 2001, ரமணிசந்திரன் மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *