காதல் தர வந்தேன்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2024
பார்வையிட்டோர்: 4,481 
 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13

அத்தியாயம்-9

“சு… பா…!” என்றான் மீனாவைப் பார்த்த அதிர்ச்சியில் தினகர். 

“சார்..இவங்க பேர் மீனா!” என்ற புனிதா, “மீனா இங்கே வா… இவர்தான் எம்.டி. தினகர்!” என்றாள் அருகில் அழைத்து கிசுகிசுப்பாக. 

சகலமும் பதறியது மீனாவுக்கு. அவனைப் பார்த்த பிரம்மிப்பும், பதற்றமும் சேர்ந்து கொண்டு, “வ… வணக்கம் சார்!” என்றாள் கை கூப்பி. 

அவன் முகத்தில் கடுமையா, கோபமா? என்று இனம் பிரித்துப் பார்க்க முடியாத ஏதோவொன்று தினகர் முகத்தில் படர்ந்திருந்தது. அவன் மீனாவைப் பார்த்த பார்வையில் வெறுப்பு மேலோங்கியிருந்தது. 

மீனாவுக்கு அவனைப் பார்க்க பார்க்க… ஆச்சரியமும், அதிர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே சென்றது. 

அவன்தான்… அவனேதான்! என் கனவில் அடிக்கடி வருபவன். வேகமாய் காரை ஓட்டி எனக்கு பீதியேற்படுத்தி அதைப் பார்த்து சந்தோஷப்படுபவன். கனவில் வந்தவன் எப்படி நிஜத்தில்? இது கனவா? நனவா? இவன்தான் சேச்சே… என்ன பெண் நான்? மரியாதையில்லாமல் அவன் இவன் என்கிறேன்? இவர்தான் இந்த எஸ்டேட் முதலாளியா?’

“யார் நீ, எங்கேர்ந்து வர்றே?” என்றான். 

அந்த கேள்வியில் திணறிய மீனா எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள்.

“என் பேர் மீனா! சென்னையிலேர்ந்து வர்றேன்!” 

“பொய் சொல்லாதே. நீ மீனா இல்லே… சுபா! சுபாதானே?” 

மீனா ஆச்சரியமாய் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, “இல்லே சார். நான் மீனாதான்.. என் பேர் சுபாயில்லே?” 

“பேரை மாத்தி வச்சுக்கிட்டா… தெரியாமப் போயிடுமா என்ன? அமெரிக்காவுலேர்ந்து எப்ப வந்தே?” 

“அமெரிக்காவா? நான் சென்னையிலேர்ந்து வர்றேன் சார்!” புனிதா தினகரை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சார்… இவங்க பேரு மீனாதான். சென்னைதான் பூர்வீகம்.. இவங்க சர்ட்டிபிகேட்ஸ் என்கிட்டேதான் இருக்கு… இவங்க ஒரு விடோ சார்!” 

“ஓஹோ… விக்னேஷ் பின்னாடி நாய் மாதிரி அமெரிக்காவுக்குப் போனியே… என்னாச்சுப் பார்த்தியா? உன்னை விட்டுட்டு மேலோகம் போயிட்டான். ஆமா… இங்கே வந்து ஆயா வேலை பார்க்கிற அளவுக்கு ஏழையாயிட்டியா? கோடிக்கணக்கிலே சொத்து இருந்ததே… அதெல்லாம் என்னம்மா ஆச்சு? இங்கே பார்… ஏதோ திட்டம் போட்டுக்கிட்டு என் வீட்டுக்கு வந்திருக்கே… ஆம் ஐ கரெக்ட்? உன்னோட எந்த திட்டமும் இங்கே வொர்க் அவுட் ஆகாது. மரியாதையா வெளியே போயிடு!” 

மீனா சிலையாகி விட்டாள். 

‘என்ன சொல்கிறான் இவன்? யார் அந்த சுபா? என்னைப் போலவே இருப்பாள் போலும். அவள்தான் நானென்று இவன் தவறாக எண்ணி விட்டிருக்கிறான்.’ 

“சார்… நீங்க நினைக்கிற மாதிரி நான் சுபாயில்லே. நான் மீனா சார்! யாருமில்லாத அனாதை.” 

“ஆமா சார்… இவங்க மீனாதான்!” என்றாள் புனிதா.

“ஹலோ மேடம். எதை வச்சு இது மீனாதான்னு அடிச்சு சொல்றீங்க? சுபாவைத் தெரியுமா உங்களுக்கு? தெரியாம பேசக்கூடாது. இவதான் சுபா. எனக்கு நல்லாத் தெரியும். ஏய்… உன்னோட நடிப்பு என்கிட்டே எடுபடாது. மரியாதையா வெளியே போயிடு.” 

“சா….ர்…” என்றாள் கண்ணீர் மல்க. 

“சும்மா கண்ணீர் விட்டா மயங்கிடுவேன்னு நினைச்சுக்காதே. அதெல்லாம் ஒரு காலம். மரியாதையா போயிடு. ” 

அவள் கழுத்தில் கையை வைத்து தள்ளினாள். 

குணவதி நடப்பவை அனைத்தையும் பார்த்து பதறினாள். 

‘அவளை வெளியே அனுப்பாதே தினகா’ என்று எழுந்தோடி வந்து தடுக்க நினைத்தாலும் உடல் அசைய மறுக்கிறதே, வாய் பேச மறுக்கிறதே!

“ம்…ம்…” என்று முனகினாள். 

தினகர் அம்மாவைப் பார்த்தான். 

குணவதி சிரமப்பட்டு தலையை ஆட்டி, ‘அவளை அனுப்பிடாதே’ என்று மறுத்தாள். 

அதை புரிந்து கொண்ட தினகர் அம்மாவிடம் வந்தான். 

“அம்மா… இவ நல்லவ இல்லேம்மா! உன் பிள்ளையோட வாழ்க்கையை கெடுத்தவ…” 

“சார்… நீங்க என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. நீங்க நினைக்கிறா மாதிரி நான் சுபா இல்லே சார். நான் சென்னையை தாண்டி இதுவரைக்கும் எங்குமே போனதில்லே. வேற போக்கிடம் இல்லாம, ஒரு வேலையைத் தேடி இப்பதான் முதன்முதலா சொந்த மண்ணை விட்டு இந்த ஊருக்கு வந்திருக்கேன். ஒருவேளை நீங்க சொல்ற சுபா என்னை மாதிரி இருப்பாங்களோ என்னவோ? தயவு செய்து நான் சொல்றதை நம்புங்க சார்!” என்றாள் மீனா. 

‘அவள் சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும். அவளை நம்புடா’ என்றது அம்மாவின் பார்வை. 

இப்போது தினகருக்கும் குழப்பம் எட்டிப் பார்த்தது. 

‘இவள் சொல்வது நிஜமாய் இருக்குமோ?’ அவளை கூர்ந்து கவனித்தான். 

அதே முகம். அதே நிறம். கண், மூக்கு, உதடு எல்லாமே அதேதான். ஆனால் சுபாவுக்கு மூக்கு பக்கத்தில் வலது புறம் ஒரு மச்சம் இருக்கும். இவளிடம் இல்லையே! இல்லாத மச்சத்தையாவது ஒட்ட வைத்து ஏமாற்றலாம். இருக்கிற மச்சத்தை மறைக்க முடியாதே..ச்சே… நான் தான் அவசரப்பட்டு விட்டேனோ?’ தினகருக்கு தன் தவறு புரிந்தது. 

என்றாலும் அவளிடம் தவறை ஒப்புக் கொள்ள ஈகோ தடுத்தது.

“சரி… சரி… போ!” என்று கூறிவிட்டு சரேலென வெளியேறினான்.

மழை பெய்ந்து ஓய்ந்தாற்போலிருந்தது. 

குணவதி மீனாவை கண்களால் அருகே வரும்படி அழைத்தாள்.

‘அவன் பேசிய எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதேம்மா’ என்றது அவள் பார்வை. 

மீனா அந்தம்மாளின் தலையை ஆதுரமாய் தடவிக்கொடுத்தாள்.

“சந்தர்ப்பமும், சூழ்நிலையும், என் தோற்றமும் எனக்கு எதிராக இருக்கும்போது சாரை எப்படி குறை கூற முடியும்? நான் எதையும் மனசில வச்சுக்கலேம்மா? ஆனா, என்னைப் போலவே வேறொருத்தி இந்த உலகத்திலே இருக்காங்க என்பதை நினைக்கிறபோது ஆச்சரியமாகவும், இருக்குது. அந்த சுபாவை பார்க்கணும் போலவும் இருக்குது” என்றாள். 

“சுபாவை நீ மட்டுமில்லே… இந்த பங்களாவிலே யாருமே பார்க்காம இருக்கிறதுதான் ரொம்ப நல்லது. சார் கூட ஒரு முறை அந்த சுபாவைப் பார்த்திருக்கேன். அவர் உன்னைப் பார்த்து கோபப்பட்டதுல தப்பே இல்லே. நான் கூட உன்னை முதன் முதலா பார்த்தப்ப… எனக்கே ஷாக்தான். ஆனா அவ அல்ட்ரா மாடர்ன் கேர்ள். அவளோட நடை உடை பாவனை வேற. நீ சுபா இல்லேன்னு புரிஞ்சுக்கிட்டேன். இப்பதான் சார் புரிஞ்சுக்கிட்டாரே, இனி எந்த பிரச்னையும் இல்லை. சரி. நேரமாகுது…நீ வேலைய கவனி மீனா…” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டாள் புனிதா.

மீனா குணவதியருகே வந்தமர்ந்தாள். அவளை படுக்கையிலிருந்து மெல்ல தூக்கி முதுகில் இரண்டு தலையணைகளை வைத்து சாய்ந்தவாக்கில் அமர வைத்தாள். அவளுக்கு வாகாக உடம்பை குணவதியால் ஓரளவு அசைக்க முடிந்தது. ஒத்துழைப்பு கொடுக்க முடிந்தது. கூடிய விரைவில் முன்பு போல் தன்னால் எழுந்து நடமாட, பேச முடியும் என்ற நம்பிக்கை குணவதியின் மனசில் அழுத்தமாய் எழுந்திருந்தது.. 

மீனா கவனமாய் அவளுக்கு மதிய உணவை ஊட்டினாள். முன்பு போல் குணவதி வேண்டாம் என்று அடம் பிடிப்பதில்லை. அமைதியாய் மீனாவின் முகத்தையே பார்த்தபடி சாப்பிட்டாள். அவளின் அழகான, அமைதியான முகம் அந்தம்மாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. 

‘இந்தப் பெண் எந்தக் குறையும் வராமல் நன்றாயிருக்க வேண்டும்’ என்று அவள் மனசு மனப்பூர்வமாய் வாழ்த்தியது. 


இரவெல்லாம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள் மீனா.

காலையில் நடந்த சம்பவம்தான் மறுபடி மறுபடி கண்முன் விரிந்தது.

யாரந்த சுபா? இவர் அவளை காதலித்திருப்பார் போலும். அவளால் வெகுவாய் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் என்னைப் பார்த்ததும் அவ்வளவு கோபப்பட்டிருக்கிறார். 

என்னைப் போல் உள்ள ஒருத்தியைத்தான் அவர் காதலித்திருக்கிறார். ‘அந்த எண்ணமே அவளுக்கு வெகுவான சந்தோஷத்தை தந்தது.

முட்டாள் பெண்ணே! உன்னைப் போல் உள்ள ஒருத்தியைத்தான் அவன் இப்போது வெறுக்கிறான். அதைப் புரிந்து கொள். 

என்ன… அவன் மீது கண்டதும் காதலா? கனவில் அடிக்கடி வந்தவனை நேரில் பார்த்ததும் கற்பனை கரை புரண்டு ஓடுகிறதா?. 

இந்த கற்பனையை இதோடு நிறுத்திக் கொள்! தினகர் யார்? உனக்கு சம்பளம் தரும் முதலாளி. நாலைந்து எஸ்டேட்களுக்கு சொந்தக்காரன். உடைக்கேற்ற நிறத்தில் காரில் போகிற பணக்காரன். ஆயிரம் குடும்பங்கள் அவனால் வாழ்கின்றன. 

நீ யார்? அவனிடம் கை நீட்டி சம்பளம் வாங்கும் வேலைக்காரி. அதுவும் ஆயா வேலை பார்ப்பவள். வயிற்றுப்பாட்டிற்காகவும், உன் கற்பை பாதுகாத்துக் கொள்ளவும் விதவை என வேஷம் போட்டிருப்பவள். உறவினர்கள் இருந்தும் அனாதையானவள். கூடப் பிறந்த சகோதரிகள் உனனை தங்களுடன் வைத்திருக்க பயந்து உன்னை பந்தாடியதை மறந்திருந்தால்… ஒதுங்க இடம் தேடி, அலைந்ததை நீ மறந்திருந்தால்… மறுபடி ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொள்! காதலாவது கத்தரிக் காயாவது? தராதரம் என்று ஒன்று இல்லையா? கனவில் வருகிறவனை யெல்லாம் காதலிக்க நினைத்தால் நாடு தாங்குமா? புத்தியை அலைய விடாமல் ஒழுங்காய் இரு!’

மனசாட்சி அவளை கண்டித்து அடக்கியது. 

அத்தியாயம்-10 

தினகரின் முன்னே சின்ன மர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய டீப்பாய் இருந்தது. அதன் மீது அயல்நாட்டு மதுபானங்கள் அவன் தொட காத்திருந்தன. ஒரு பீங்கான் தட்டில் சிக்கன் இருந்தது. 

தினகர் எட்டாவது சிகரெட்டை உதட்டிற்கு கொடுத்தான். லைட்டரால் அதன் முனையை சிவப்பாக்கியவன் எழுந்து பால்கனிக்கு வந்தான். 

மாலை ஆறு மணிக்குள் வெகுவாய் இருட்டி விட்டிருந்தது. மார்கழி மாதம் என்பதால் பனியின் ஆதிக்கம் அதிகமாய் இருந்தது. தோட்டத்தில் சர்வ சாதாரணமாய் வேலையாட்கள் இங்குமங்கும் அலைந்துக் கொண்டிருக்க… அது யார்… பவள மல்லி மரத்தருகே? 

தினகர் கூர்ந்து பார்த்தான். 

தோட்டத்து விளக்குகள் வெளிச்சத்தை துப்பிக் கொண்டிருந்ததால்… அவளை கண்டுபிடிக்க சிரமம் ஏற்படவில்லை. 

மீனாதான்! பூக்களை பறித்துக் கொண்டிருந்தாள். 

தினகரின் கண்களில் சிவப்பேறியது. 

அவள் சுபா இல்லை. அது தினகருக்கே புரிந்தது. என்றாலும் மீனாவைப் பார்க்கும்போதெல்லாம் தலையில் கொதித்தது. அவளை அடித்து துவைத்து சின்னாபின்னப் படுத்தவேண்டும் போலிருந்தது. 

தினகர் இரு கைகளை தட்டி ஓசையெழுப்பினான். கைதட்டும் சப்தம் கேட்டு சுற்றுமுற்றும் பார்த்த மீனா, முதலாளிதான் அழைக்கிறார் என்பதை அறிந்து அட்டென்ஷனில் நின்றாள். 

“என்ன பார்த்துக்கிட்டே நிக்கிறே? மேலே வா!” என்றான் அலட்சியமாய். 

என்னவோ, ஏதோ என்று பயந்தபடி மூச்சிரைக்க ஓடி வந்தாள் மீனா.

“சார்!” என்று பவ்யமாய் அவன் முன் நின்றாள். 

அவளை ஏற இறங்க ஒருமுறை பார்த்த தினகர், “உனக்கென்ன வயசு?” என்றான். 

“இ…..இருபது…”

“அறிவிருக்கா?” 

“…”

“இருபது வயசாகுதே… கொஞ்சமாவது அறிவிருக்கான்னு கேட்டேன்!” எதற்காக திடீரென்று கூப்பிட்டு வைத்து இப்படி கேள்வி கேட்கிறார்? அவராகவே பேசட்டும். நாம் வாயே திறக்கக் கூடாது என்று மௌனமாய் நின்றிருந்தாள். 

“அம்மாவை பார்த்துக்கச் சொன்னா. கார்டன்ல உனக்கென்ன வேலை?”

“அம்மா தூங்கறாங்கய்யா! அதனாலதான் தோட்டத்துக்கு வந்து பூப்பறிச்சிட்டிருந்தேன்.”

“அதுக்குத்தான் அறிவிருக்கான்னு கேட்டேன். விளக்கு வெச்சிட்ட பிறகு பூப்பறிப்பாங்களா?” 

“எ…. எனக்கு தெரியாது சார். இனிமே இப்படியெல்லாம் நடக்காது.”

“ம்… சரி.. சரி… என்னோட பெட்ரூம்ல பெட் கவரெல்லாம் மாத்தணும். போய் மாத்து. இங்க பார் அம்மாவை பார்த்துக்கறது மட்டுமில்லே… அம்மா தூங்களற நேரத்திலே வீட்டு வேலையும் செய்யணும். நான் எந்த வேலை சொன்னாலும் செய்யணும். இதுக்கெல்லாம் விருப்பம்னா இங்கே இருக்கலாம். இல்லேன்னா இப்பவே இடத்தை காலி பண்ணலாம்.” 

“இல்லே சார்… எந்த வேலைன்னாலும் நான் செய்வேன் சார்!”

“ஓஹோ… எல்லாத்துக்கும் தயாராதான் இருக்கே… அப்படித்தானே?” என்றான் அர்த்தமான சிரிப்பொன்றை வீசி! 

மீனா வாயே திறக்கவில்லை. 

பேசட்டும். அவன் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.

“சரி… சரி.. போ!” 

நகர்ந்தாள். 

“கொஞ்சம் நில்லு! எனக்கு ஐஸ் க்யூப் வேணும்..”

“இதோ வந்திட்டேன்.. சார்!” என்றவள் ஃப்ரிட்ஜைத் திறந்து ஐஸ் க்யூபை எடுத்துக் கொண்டு வந்து டீப்பாய் மேல் வைத்தாள்.

“ம்.. யு மே கோ நவ்!” என்றவன் அவள் வெளியேறியதும் பளாரென கதவை அறைந்து சாத்தினான். 

தினகர் கப்போர்டை திறந்து ஒரு ஆல்பத்தை எடுத்தான்.

ஒவ்வொன்றாய் பிரித்துக் கொண்டே வந்தவன் அந்த போட்டோவைப் பார்த்ததும் வெறித்துப் பார்த்தான். 

அவன் முகத்தோடு முகம் ஒட்டி தோளில் கை போட்டு இறுக்கிக் கொண்டு பளீரென்று சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தாள் சுபா. 

மீனாவின் ஜெராக்ஸ் பிரதி. 

“சுபா.. சுபா… என்னை ஏமாத்திட்டியே! நான் உனக்கு எதுல குறை வச்சேன்? என் அந்தஸ்துல கால் தூசுக் கூட எட்ட முடியாத தூரத்தில் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காம… உன் மேல உயிரையே வச்சிருந்தேனே! அதையாவது நினைச்சிப் பார்த்தியா? கல்யாணம் பண்ணினா உன்னைதான் பண்ணுவேன்னு அம்மாகிட்டே உறுதியா சொல்லியிருந்தேன். அம்மாவுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் என் சந்தோஷத்துக்காக ஒத்துக்கிட்டாங்களே!” 

‘ஆனா…..ஆனா… அதற்கு மேல் அவனால் யோசிக்க முடியவில்லை. பாட்டிலை திறந்து அப்படியே தொண்டைக்குள் சரித்துக் கொண்டான்.

தினகரின் நண்பன் -விக்னேஷ் மூலமாக அறிமுகமானவள்தான் சுபா. அழகென்றால்… அப்படியொரு அழகு! தொடை தெரிய அவள் அணியும் ஆடை.. அவளின் அதீத கவர்ச்சியை பளீரென்று காட்டும். 

ஒரு பார்ட்டியில்தான் அவளை சந்தித்தான் தினகர். அந்த சந்திப்பு தொடர்கதையானது. சுபாவுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஒரேயொரு மாமா மட்டுமே! அவர்தான் அவளை படிக்க வைத்து, பராமரிப்பதெல்லாம். நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவள். அவள் குறிக்கோ ளெல்லாம் அமெரிக்காவில் ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும் என்பதுதான். 

தினகர் சுபாவின் அறிமுகம் தொடர்கதையானது. எதையாவது காரணம் சொல்லி அவளை அவனும், அவனை அவளும் பார்க்க வந்தனர். 

அவன்தான் முதலில் தன் மனதை வெளிப்படுத்தினான். சுபாவுக்கு வானத்தையே தொட்டுவிட்ட உற்சாகம். 

இருக்காதா பின்னே? கோடீஸ்வர இளைஞன். அழகன். அப்படிப்பட் டவன் வலிய வந்து ஐ லவ் யூ சொல்கிறான் என்றால் சாதாரணமான விஷயமா? இருவரும் கரம் கோர்த்து சிறகடித்துப் பறந்தனர். அவ்வளவு ஏன்? ஒரு முறை தினகரின் பிறந்த நாள் வந்தபோது, “உங்களுக்குக் கொடுக்க என்னிடம் இதைவிட வேறெந்த உயர்வானப் பொருளும் இல்லை’ என்று தன்னையே தந்தாள். 

இவளுக்கு தன் மீது இவ்வளவு அன்பா? என்று நெக்குருகிப் போனான் தினகர். 

மகன யாரோ ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுகிறான் என்று கேள்விப்பட்டு குணவதி வேதனையுற்றாள். 

பெண் ஏழையாய் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் குடும்பத்திற்கேற்ற பெண்ணாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால், சுபாவைப் பற்றி அவள் காதிற்கு எட்டிய செய்தி நல்லவிதமாய் இல்லை என்பதால் வருத்தப்பட்டாள். 

தினகர் அவளிடம் சுபாவைப் பற்றி கூறியபோது மறுத்தாள். ‘அந்தப் பெண் வேண்டாம் தினகர்’ என்று கெஞ்சினாள். தினகர் விடாப்பிடியாய், இருந்ததால் ‘அவளை வீட்டிற்கு அழைத்து வா’ என்றாள். 

இந்த அளவிற்கு அம்மா இறங்கி வந்ததே பெரிய விஷயம். தரையில் கால் படவில்லை அவனுக்கு. 

‘முதன் முதலில் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறோம். அம்மாவுக்கு மாடர்ன் டிரெஸ் என்றால் பிடிக்காது. சேலை கட்டிக் கொண்டு வரச் சொல்லலாம்’ ஆவலாய் சுபாவின் வீட்டிற்கு சென்றான். வாசலில் விக்னேஷின் கார் இருந்தது. 

‘அட பயலும் இங்கேதான் இருக்கிறான் போலுள்ளது’ என்று நினைத்தபடி தாழிடாமல் வெறுமனே சார்த்தி இருந்த கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற தினகர்.. தன் வாழ் நாளிலேயே அப்படியொரு அதிர்ச்சியை சந்தித்திருக்க மாட்டான். அப்படிப்பட்ட அதிர்ச்சியை கண்டான். 

படுக்கையறையில் சுபாவும், விக்னேஷும் பார்க்கக் கூடாத கோலத்தில். இவன் மட்டுமல்ல… அவர்களும் இவனைக் கண்டு திகைத்துப் போய் விட்டனர். 

ஒரு வார்த்தைகூட பேசாமல் திரும்பி விட்டான் தினகர். வானமே இடிந்து தலைமேல் விழுந்து விட்ட அதிர்ச்சியில் அகப்பட் டிருந்தான். 

‘சுபாவா? சுபாவா இப்படி? எப்படி மனசு வந்தது? என்னிடம் கொடுத்த அதே உடம்பை விக்னேஷிற்கும் தர எப்படி முடிந்தது அவளால்? உடம்பும், மனசும் கூசாதா? விக்னேஷிடம் இந்தளவு பழகுபவள் எதற்காக என்னை காதலிக்க வேண்டும்? அத்தனையும் நடிப்பா?’

ஒரு சந்தர்ப்பத்தில் அவளிடம் கேட்டே விட்டான். அதற்கு அவளிடமிருந்து அலட்சியமாகத்தான் பதில் வந்தது. 

“இப்ப என்ன? எதுக்காக கத்தி ஆர்ப்பாட்டம் பண்றே? எனக்கு என் சந்தோஷம் முக்கியம். என் லட்சியம் முக்கியம். விக்னேஷ் அமெரிக்காவில போய் செட்டிலாகப் போகிறார். எனக்கும் அங்கே ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். அதுமட்டுமில்லே… அவரும் என்னை லவ் பண்றார். உன்னை காதலிச்சது தெரிஞ்சிருந்தும் என்னை ஏத்துக்கறதுக்கும் ஒரு மனசு வேணும். அது விக்னேஷ்கிட்டே இருக்கு. நிச்சயமா உன்கிட்டே இல்லை. எனக்கு எல்லாவிதத்திலேயும் விக்னேஷ்தான் பொருத்தமானவர்னு புரிஞ்சுக்கிட்டேன். என் விருப்பப்படி முடிவெடுக்க எனக்கு உரிமையிருக்கு. அடுத்த வாரம் விக்னேஷ் கூட அமெரிக்கா கிளம்பறேன். நாம நல்ல நண்பர்களா பிரியணும்னு ஆசைப்படறேன். தினகர்! பழசையெல்லாம் மறந்திடு. எங்களை வழியனுப்ப நீ அவசியம் ஏர்போர்ட் வரணும். ஓக்கே!” என்று கைகுலுக்க கையை நீட்டினாள். தினகர் அவளை அருவருப்பாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் கோபத்தையெல்லாம் காலில் கொண்டு வந்து… பாதையில் கிடந்த கல்லை எட்டி தள்ளிவிட்டு, காரில் ஏறி அமர்ந்து திரும்பி கூட பார்க்காமல் வந்து விட்டான். 

சரிவர சாப்பிடாமல், பிஸினஸை கவனிக்காமல், தாடி வளர்த்துக் கொண்டு அறையிலேயே முடங்கிக் கிடந்த மகனைப் பார்க்கும்போது அடி வயிறு கலங்கியது குணவதிக்கு. 

லேசுபாசாய் சுபாவின் அதிரடி முடிவு பற்றி அவளும் அறிந்திருந்தாள். காலைச் சுற்றிய பாம்பு விடுபட்டதே என்று சந்தோஷப்பட்டாலும் மகனின் வேதனையை தான். அந்த தாயால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கணவரின் பிரிவிற்கு பிறகு மகனின் முகம் பார்த்துதான் தன்னை தேற்றிக் கொண்டிருந்தாள். இப்போதோ.. மகனின் முகம் பார்த்து துடித்துக் கொண்டி ருக்கிறாள். 

அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்ற… அவனிடம் பேச்சுக் கொடுத்தார். 

கல்யாணம் என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே கருந்தேள் கொட்டி விட்டது போல் எகிறினான். 

“இனி… என் வாழ்க்கையில் கல்யாணம் என்ற பேச்சிற்கே இடமில்லை. என் வாழ்க்கையில் எந்த பெண்ணிற்கும் இடமில்லை. வெறுக்கிறேன். எல்லா பெண்களையும் வெறுக்கிறேன். இந்த தலைமுறை பெண்கள் எல்லோரும் கெட்டவர்களம்மா! யாரையும் நம்பக் கூடாது. யாரும் சுத்தமாயில்லேம்மா! இனி இந்த பேச்சே எடுக்காதே! எடுத்தால்… என்னை ‘உயிரோடவே பார்க்க மாட்டேம்மா!” என்று பெரிய குண்டாய் தூக்கிப் போட… அந்த கவலையில் படுத்தவள்தான் குணவதி. 

எந்திரிக்க முடியாமல் பராலிசிஸ் அட்டாக் ஆகி விட்டது. 

நடந்து மூன்று வருடம் ஓடிப்போனாலும் சுபாவினால் ஏற்பட்ட பாதிப்பு தினகரின் அடி மனசு வரை பாய்ந்திருந்தது. 

சாதாரணமாய் எல்லா பெண்களையும் வெறுத்தவன் சுபாவின் மறு பிரதியாய் வந்து நின்ற மீனாவை மட்டும் கொஞ்சுவானா என்ன? அவளை மேலும் மேலும் துன்புறுத்தி பார்க்க ஆசை ஏற்பட்டது அவனுக்கு. 

– தொடரும்…

– காதல் தர வந்தேன்…! (நாவல்), ஏப்ரல் 2001, ரமணிசந்திரன் மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *