(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம்-3
சித்தரஞ்சனுடைய தாயார், மகன், மகனுடைய வருங்கால மனைவியின் வரவு பற்றி, நகைக்கடை உரிமையாளருக்கு ஃபோன் பண்ணிச் சொல்லியிருந்தாள்.
எனவே அறிமுகங்கள் முடிந்ததும், “அம்மா சொன்னார்கள் சார். சில அருமையான செட்டுகள் எடுத்து வைத்திருக்கிறேன். உள்ளே, நம் அறைக்கு வந்து பாருங்கள். வாருங்கள்!” என்று கடையின் பின்புறமாக இருந்த, அவரது தனியிடத்தைச் சைகையால் காட்டி அழைத்தார், கடைக்காரர்.
கடை உரிமையாளரே வந்து வரவேற்ற விதமும், அவரது “அருமையான செட்டுகளும்”, திலோத்தமாவுக்குக் கொஞ்சம் சங்கடமான உணர்வை அளித்தது.
அவர்கள் இருவர் வீட்டிலும், ஒப்புதல்தான். இவர்கள் இருவரைப் பற்றியோ, கேட்கவே வேண்டாம்!
ஆனாலும், ரொம்பப் பெரிய அளவில் அவனிடம் பரிசு பெறுவதற்கு, அவளுக்கு ஒரு மாதிரித் தயக்கமாக இருந்தது!
எனவே, கடைக்காரரின் அழைப்பை ஏற்றுத் திரும்பியவனின் சட்டையை லேசாகப் பற்றி நிறுத்தி, “இங்கே, வெளியேயே அழகாக நிறைய இருக்கிறதே! முமுதலில் இதிலேயே பார்ப்போமே.” என்று கூறினாள்.
“இதெல்லாம் என்னம்மா, சாதாரண நகைகள்! பானுமதி அம்மா மருமகளுக்கு ஏற்றதாகப் பார்க்க வேணும் என்றால் ….”
“இல்லை. அதை அப்புறமாக அஅத்தையோடு வந்தே பார்த்துக் கொள்ளுகிறேன். இப்போது, இதையே பார்க்கிறேன். ” என்று முடித்துவிட்டு, அருகில் இருந்த “கவுன்டரி”ல் உள்ளவற்றை ஆராயலானாள் திலோ.
கேட்பதை எடுத்துக் காட்டுமாறு, கடைச் சிப்பந்திகளைக் கடைக்காரர் விரட்டிக் கொண்டிருக்கையில், “பணத்தைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை, தெரியுமல்லவா?” என்று, அவளது காதோரமாய்க் குனிந்து கிசுகிசுத்தான் சித்தரஞ்சன்.
பணத்தைப் பற்றி யோசிக்காமல்தான், ஊர் ஊராக அலைந்து, தொழிலை வளர்த்துக் கொண்டிருக்கிறானாக்கும்? சம்பாதித்தது போதும் என்று, சும்மா வீட்டில் இருக்கவில்லையே!
ஆனால், அவனோடு மீண்டும் ஒரு வாக்குவாதத்தைத் தொடங்க மனமற்று, “இங்கே இருப்பவைகளே எனக்குப் பிடித்திருக்கும்போது, வேறு எதற்கு?” என்றதோடு நிறுத்திக் கொண்டாள் திலோ.
திலோத்தமா பொதுவாகக் கையில் இருக்கும் பணத்துக்குச் சரியாகப் பெரிய, விலை உயர்ந்த நகையாகப் பார்த்து வாங்குவதைவிடத் தனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதையே தேர்ந்தெடுப்பது வழக்கம்.
நகை வாங்கக் கொண்டு வந்த பணத்தில் மீதி இருந்தால், அதைத் தங்கக் காசாகவோ, அல்லது வெள்ளிச் சாமான்களாகவோ, செந்திரு வாங்கிவிடுவாள்.
பணமாகத் திருப்பிக் கொண்டுபோனால், விருதாவாகச் செலவாகி விடுமாம். அதைவிட, எந்த நேரமும் பணமாக்கக் கூடிய பொருளாக இருந்தால் சமயத்துக்கு உதவும் என்பாள்.
ஆனால் வேலைக்குச் செல்லும்போதோ, நட்பு வட்டாரத்தில் ஏதாவது விழாவுக்குச் சொல்லும்போதோ அணியக் கூடியதாக அவள் வழக்கமாக வாங்கும் நகைகளை இப்போது தேர்ந்தெடுக்க முடியாது என்பது, சித்தரஞ்சனின் குறுகுறு பார்வையில், அவளுக்கு உடனே புரிந்தது!
ஓரளவு சின்னதாக இருந்தாலே, பேராசைக்காரி இல்லை என்று காட்டுவதற்காக, அதிகப்படியாக நடிப்பது போலாகி விடக் கூடும்!
அது மட்டுமின்றி, தகுதிக்கு ஏற்ப நடக்கத் தெரியாத முட்டாளாகவும் தோற்றலாம்.
எந்த வகையிலும், ரஞ்சன் அவளை மட்டமாக எண்ணும்படி, விட்டுவிடக் கூடாது! ஏனெனில், அவளைப் பற்றி முழுசாக அவனுக்கு என்ன தெரியும்?
எனவே, சற்று யோசித்துவிட்டு, சற்றுப் பெரியதாக ஒரு பதக்கத்தையும், பொருத்தமான காதணிகளையும், திலோத்தமா தேர்ந்தெடுத்தாள்.
“பெரிய செட்” நகைகளைப் பார்க்கவே வரவில்லை என்றதும் முகம் இறுக நின்ற கடை உரிமையாளரின் முகம் இன்னமும் பெரிதாக மலர்ந்து விடவில்லைதான். ஆனால், இயல்புக்குத் திரும்பி வந்தது! அந்த அளவுக்கு, பட்டுச் சேலைகளோடும் அணியக் கூடியதாக, அதே சமயம் மிகவும் பெரிதாக இல்லாமலும் பார்த்து, யோசித்துச் செய்த அவளது தேர்வு சரியானதுதான் என்று நிம்மதியோடு உணர்ந்தாள் அவள்.
ஒன்றும் சொல்லாமல், பில்லுக்குப் பணம் கொடுக்கத் தாயாரானான் சித்தரஞ்சன்.
“ஒரு நிமிஷம்!” என்று கழுத்தில் பதக்கத்தை வைத்து, அவனிடம் காட்டினாள் அவள். “நன்றாக இருக்கிறதா?”
ஒரு வினாடி, ரஞ்சனின் கண்களில் தோன்றி ஒளி, அவளுக்கு உரிய பதிலைத் தந்துவிட, கடைச் சிப்பந்தியிடம் திரும்பி, “பில் போடுங்கள்!” என்றாள், கம்பீரமாக!
பணத்தைக் கொடுத்துவிட்டு, பதக்கத்துக்கு ஏற்றதான ஒரு தங்கச் சங்கிலியில் அதைக் கோர்த்து வைக்கும்படியும், மறுநாள் வந்து, எல்லாவற்றையும் சேர்த்து வாங்கிப் போவதாகவும் சொல்லி, இருவரும் கிளம்பினார்கள்.
இதுவா, அதுவா என்று தாயமாடித் தாமதம் ஆக்காததால், வந்த வேலை சீக்கிரமே முடிந்துவிட்டது. அவளை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, சித்தரஞ்சன் வெகு நிதானமாகவே கிளம்ப முடியும்!
சாலைப் போக்குவரத்தினுள் நுழைந்து காரைச் செலுத்தத் தொடங்கியதும், “ரொம்பத் தாங்க்ஸ்!” என்றான் சித்தரஞ்சன்.
வாங்கிக் கொடுத்தது அவன்! நன்றி, அவளல்லவா சொல்ல வேண்டும்? கடையில் இருந்து வெளிவரும்போதே அதை, அவள் சொல்லியும் ஆயிற்று!
அவளது பார்வையில் கேள்வியை உணர்ந்து, “இவ்வளவு விரைவாகத் தேர்வு செய்ததற்காக! என் நண்பன் ஒருவன்
சொல்லுவான்., அவனுடைய மனைவியை நகை, துணிக் கடைகளுக்குக் கூட்டிப் போவதானால், கையோடு ஒரு புதுப் புத்தகத்தையும் எடுத்துப் போவானாம். அனேகமாக, அந்தப் புத்தகத்தைப் படித்து
முடித்துவிடுவேன் என்பான்! நல்லவேளை! அப்படிப் புத்தகம் படிக்கும் தேவை எனக்கு இராது என்று தெரிகிறது!” என்று புன்னகையோடு கூறினான் சித்தரஞ்சன்.
பாராட்டுகிறானாம்! ஆனால், இதை நேரடியாகவே சொல்லலாமே! யாரோ ஒரு பெண்ணை எதற்காக மட்டம் தட்டுவது?
லேசாகச் சிரித்து, “பரவாயில்லை. தலையைச் சுற்றி, மூக்கைத் தொட்டுவிட்டீர்கள். பாராட்டுக்காக, இன்னொரு நன்றி. ஆனால், உங்கள் நண்பர், அவருக்காக “ஷாப்பிங்” செய்யும்போது, அவருடைய மனைவி, என்னென்ன வேலைகளைச் செய்து முடிப்பாளோ? அது விவரம் தெரியவில்லையே!” என்றுரைத்து, ஓரக் கண்ணால் கணவனைப் பார்த்தாள் திலோ.
நண்பனைச் சொன்னதற்காகக் கோபப் படுவானோ என்று எண்ணியதற்கு மாறாக, அவனது உதட்டோரம் சிரிப்பில்தான் துடித்தது!
“அது பற்றிய எந்த விவரமும் இப்போதைக்குத் தெரியவில்லைதான். ஆனால், சீக்கிரமே நீ நேரிலேயே அதை அறிந்து கொள்வாய்தானே?” என்று சிரிப்புக் குரலிலேயே ரஞ்சன் கூற, அவனது வார்த்தைகள் தோற்றுவித்த கற்பனைக் காட்சிகளில், திலோத்தமா உள்ளம் குளிர்ந்து போனாள்.
நேரிலேயே அறிந்து கொள்வது என்றால், திருமணமன பிறகு என்றுதானே, அர்த்தம்? அதாவது, மணமாகி, அவனுடைய நட்பு வட்டாரத்துடன் அவள் நன்றாகப் பழகும்போது!
மணமான குடும்பஸ்தனான சினேகிதன்! இப்படி எத்தனை பேர் உண்டு?
“உங்கள் நண்பர்களில், திருமணமானவர்கள் நிறையப் பேரா? மணமாகாதவர்கள் அதிகமா?” என்று விசாரித்தாள் அவள்.
முன்னே சற்று மெதுவாகச் சென்ற காரை ஒதுக்கி, அதைத் தாண்டிச் செல்ல முயன்று கொண்டிருந்தான் சித்தரஞ்சன்.
“பரவாயில்லை. சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே திருப்பிக் கூட்டி வந்துவிட்டீர்கள் என்று அம்மா சந்தோஷப்படப் போகிறார்கள்!” என்று, அவன் சற்று வேகம் எடுத்து ஓட்டி, முதல் காரை முந்தியதும் சொன்னாள் அவள்.
“இல்லை. நாம் இன்னோர் இடத்துக்கும் போக வேண்டும்.” என்றான் அவன்.
சற்று மரத்த குரலில் அவன் சொன்ன விதத்தில், எங்கே என்று திலோத்தமாவால் இயல்பாகக் கேட்க முடியாது போயிற்று! ஆனால், அப்படி எங்கே கூட்டிப் போய்விடப் போகிறான்? நகைக் கடைக்கு அடுத்து, துணிக்கடையாக இருக்கும்! அவ்வளவுதானே? இதற்கு, எதற்கு இந்தக் குரல்? நேரமாகிவிடும்., வேண்டாம் என்று மறுப்பாள் என்று கருதினானா?
அப்படி மறுப்பவள், எந்தக் கேள்வியும் இல்லாமல், திடுமெனப் பார்த்தவுடனேயே மணக்கச் சம்மதிப்பாளா என்று யோசிக்க வேண்டாமா?
அதெல்லாம் இராது. காரை ஓட்டுவதில் கவனமாக இருக்கிறான் அவ்வளவே!
சித்தரஞ்சனின் அருகாமையே சுகமும் இதமுமாக இருக்க, சந்தோஷமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், அவன் காரை நிறுத்திய இடத்தைக் கண்டதும் திகைத்துப் போனாள்.
இங்கே எதற்கு என்று புரிந்துகொள்ள முடியாமல் சில வினாடி திணறியவளின் முகம் சட்டெனக் கன்றிச் சிவந்தது!
என்ன கீழ்த்தரமான புத்தி!
அவளை என்னவென்று நினைத்துக்கொண்டான், இந்த ரஞ்சன்?
இப்படியெல்லாம் சந்தேகிப்பவன், எப்படி மணந்துகொள்ள முன்வந்தான்?
தீ விழிகளில் கனல் பறக்க, அவனை முறைத்துப் பார்த்து, இந்தக் கேள்விகளை அடுக்க அவள் வாயைத் திறக்கையில், அவன் கை உயர்த்தி அவளை அடக்கிப் பேசினான்.
“அவசரப்பட்டு எந்த வார்த்தைகளையும் கொட்டிவிட வேண்டாம், திலோத்தமா. நீ நினைப்பது போன்ற எந்தக் காரணத்துக்காகவும், நான், உன்னை இங்கே அழைத்து வரவில்லை. “ என்றான் அவளை முந்திக்கொண்டு.
பின்னே?
பெரிய எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்த, “தாய் சேய் நல மருத்துவமனை” என்ற பெயரை, மறுபடி ஒரு தரம் குறிப்பாகப் பார்த்துவிட்டு, அவனை மீண்டும் நேராக நோக்கினான் திலோத்தமா.
“சரியான விவரம் தெரியாமல் முடிவெடுப்பதும், அதன் அடிப்படையில் பேசுவதும் சரியல்ல, திலோத்தமா. அது பழகிவிடவும் கூடாது. முதலில், இதைத் தெரிந்துகொள். நாம் இங்கே வந்திருப்பது, உன் கன்னிமையைப் பரிசோதிப்பதற்காக அல்ல! உன் நடத்தையில் சந்தேகப்படும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது! ” என்றான் அவன். “அப்படி நான் சந்தேகப் பட்டு, நிரூபணத்துக்காக, உன்னை இங்கே அழைத்து வரக் கூடும் என்று நீ நினைத்தாய் என்றால், அது உன்னை உயர்த்திக் காட்டுவது அல்ல!” என்று கண்டனக் குரலில் முடித்தான்.
அந்தக் குரல் சுட, “நேற்று நம் திருமணம் பேச்சளவில் உறுதி செய்யப்பட்டது. இன்று, இந்த மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்! நான் என்னவென்று நினைப்பது?” என்று, தன்னை நியாயப்படுத்திக்கொள்ள திலோத்தமை முயன்றாள்.
“எத்தனையோ நினைக்கலாம். ஆனால் எதுவானாலும், கேட்டால் தெரிந்துவிட்டுப் போகும்தானே?” என்றான் அவன் அமர்த்தலாக.
தான் எண்ணியது போல இல்லை என்று ஆனதுமே, தப்பு செய்த உணர்வில், உள்ளம் குன்றிப் போய்விட, “இப்போது கேட்கிறேன், சொல்லுங்கள்.” என்றாள் அவள் கம்மிய குரலில்.
சுட்டு விரலால் “ஸ்டியரிங் வீலி”ன் வடிவை அளந்தபடி, சில வினாடிகள் சித்தரஞ்சன் பேசாதிருந்தான்.
அவன் சொல்ல வந்த விஷயமும், அப்படி ஒன்றும் இலகுவானதாகத் தெரியவில்லையே!
ஆனால், அவசரப்பட்டு எதையும் சொல்லி மாட்டிக்கொள்ள மனமின்றி, திலோ பொறுமையாகக் காத்திருந்தாள்.
லேசாகத் தலையைத் திருப்பி, “பொதுவாகப் பெண்களின் இயல்பு இது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் .. நமக்குத் திருமணம் என்று உறுதியானதும், அடுத்த படியாகக் குழந்தைகள் பற்றிய கற்பனையில், நீ ஆழ்ந்து விடவில்லையே?” என்று வினவினான் அவன்.
குழந்தையா? அதிலும் பன்மையிலா?
குழந்தைகள் பற்றி நினைக்க, அவளுக்கு நேரம் எங்கே இருந்தது?
மறுப்பாகத் தவையசைத்துவிட்டு, “எத்தனையோ காலமாகக் காத்துக் கிடந்தது, நடக்கப் போகிறது என்று, அது தவிர, வேறு எதுவுமே பெரிதாக மனதில் பதியவில்லை. ஏனென்றால் …” என்ற அவளது பேச்சில், அவசரமாகக் குறுக்கிட்டான், சித்தரஞ்சன்.
“டாக்டரிடம் நான் முன் பதிவு செய்திருந்த நேரம் நெருங்கிவிட்டது. அவர்களைச் சந்திக்கச் செல்லு முன், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுகிறேன். என்னைப் பொறுத்த வரையில், நமக்குக் குழந்தைகள் இப்போது வேண்டாம் என்பது, என் முடிவு. காலப் போக்கில், அது பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போதைக்கு வேண்டாம் என்பதை, ஒழுங்கான மருத்துவ ஆலோசனையுடன் நடத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அது பற்றி மருத்துவரிடம் கேட்கத்தான், இப்போது, இங்கே வந்திருக்கிறோம். என் கருத்து, உனக்கும் ஒப்புதல் என்றால், டாக்டரைப் பார்ப்போம். இல்லை என்றால், இந்தத் திருமணம் பற்றியே, நான் யோசிக்க வேண்டியிருக்கும்!” என்று கடைசி வாக்கியத்தில் ஒரு குண்டையும் தூக்கிப் போட்டான்.
திகைத்துப் போனாள் திலோத்தமை!
பிள்ளை என்று, அவளும் பெரிதாகக் கற்பனை செய்து விடவில்லைதான்!
ஆனால், குழந்தை வேண்டும் என்று அவள் சொன்னால், திருமணத்தையே நிறுத்துவேன் என்கிறானே!
அப்படி நிறுத்தி விடுவானா? அல்லது, சும்மா மிரட்டிப் பார்க்கிறானா?
நேராய் வெறித்த அவனது பக்கவாட்டுத் தோற்றததில் செதுக்கிய சிலையின் கடினம் தவிர, இளக்கம் சிறிதும் இல்லை!
“ஆனால் ரஞ்சன் .. .” என்று திலோ ஏதோ சொல்ல முயன்றபோது, மறுபடியும் அவன் குறுக்கிட்டான்.
“ப்ளீஸ் …, ப்ளீஸ் திலோ! தயவுபண்ணி வாதப் பிரதிவாதங்கள் எதுவும் வேண்டாம். நான் மிகவும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்தேன். நீ உட்பட யார், என்ன சொன்னாலும், இந்த முடிவை நான் மாற்றிக்கொள்ளப் போவதாக இல்லை! அதனால், அனாவசியமாக முயற்சிக்க வேண்டாம். “ என்று அழுத்தமான குரலில் அவன் அறிவித்தான்.
அவன் உண்மையாகவே, இதில் .. குழந்தை இப்போது வேண்டாம் என்பதில் உறுதியாகத்தான் இருக்கிறான்!
அதற்காக, என்னவிலை கொடுக்கவும், அவன் தயார்!
ஆனால், அவள் எப்படி?
அவளுக்குக் குழந்தை முக்கியமா? அவனா? அதாவது, அவன் மட்டுமேயா?
முகம் தெரியாத இளம் பிஞ்சுக் குழந்தை ஒன்றைப் பற்றி, திலோத்தமா அவ்வளவாக யோசித்துப் பார்த்தது இல்லை! ஊர் உலகம் போல, என்றைக்கோ, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கும் என்கிற வரையும்தான்.
மற்றபடி, அது யாரைப் போல இருக்கும், எப்படிச் சிரிக்கும், எப்படி அழும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க, அவளுக்கு அவகாசமும் இருந்தது இல்லை!
இப்போது, முகமறியாத அந்தக் குழந்தைக்காக, இதோ அருகில் வலிவும் வனப்புமாக உட்கார்ந்திருக்கும் இவனை விட்டுக் கொடுப்பதா?
ஆனால், இவனைப் போல ஒரு பிள்ளை பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கும்போதே, அவளது உடலில், ஒரு பரவசம் பரவி, அவளைச் சிலிர்க்க வைத்தது!
இதை எப்படித் துறப்பது என்று யோசிக்கும்போதே, அவளது எண்ணப் போக்கில் இருந்த ஒரு முரண்பாடு, அவளுக்குப் புரிந்தது.
இவனே இல்லாமல், அப்படியொரு பிள்ளை எங்கிருந்து கிடைக்கும்?
திலோத்தமா உடனே முடிவு செய்துவிட்டாள்.
ஆனாலும், அவனது காலில் விழுவது போல ஒத்துக்கொள்ள மனமின்றி, “நமக்கு ஒரு பிள்ளை பிறந்தால், அதை உங்கள் “இனிஷியலை” வைத்துதான் அழைப்பார்கள். மாஸ்டர் சித்தரஞ்சன் என்று! உங்களுக்கே அதில் விருப்பம் இல்லை என்றால், எனக்கென்ன வந்தது?” என்று, சற்று அலட்சியம் போலத் தோளைக் குலுக்கினாள்.
“நல்ல முயற்சிதான். ” என்றான் அவன் பாராட்டுவது போல!
அவள் லேசாக முகம் கன்றுகையில், “ஆனால், என் நிபந்தனையை நீ ஒத்துக் கொள்வதால்,வா, உள்ளே போய் டாக்டரைப் பார்க்கலாம்!” என்று காரை விட்டு இறங்கினான் சித்தரஞ்சன்.
திலோத்தமையைச் சற்று விசித்திரமாகப் பார்த்தார் அந்தப் பெண் மருத்துவர்.
சொல்லப் போனால், இருவரையுமே!
“முதல் குழந்தையை இயற்கையின் வழியில் வருகிறபோது பெற்றுக்கொண்டு, அடுத்ததைத் தள்ளிப் போட்டுக்கொள்வது, பொதுவாக நல்லது. நீங்களும், அப்படி ஒன்றும் பதினெட்டும் இருபதுமான சின்னப் பிள்ளைகள் இல்லை. ஆனால் …நீங்கள் இருவரும் மணந்துகொள்ளப் போகிறவர்கள்தானே? அல்லது, இப்போது வேகமாகப் பரவி வருகிற கலாச்சாரம் போல, விரும்புகிறவரை சேர்ந்து வாழ்ந்துவிட்டு, ஆசையும் மோகமும் தீர்ந்ததும் பிரிவதாக எண்ணியிருக்கிறீர்களா?”
“டாக்டர்!” என்ற கூக்குரல், தன்னையறியாமல் திலோவின் தொண்டையைப் பிளந்துகொண்டு வந்தது!
பிரிவதா? இவனையா? அது கூடாது என்பதற்காகத்தானே, இந்தக் கண்ணராவி நிபந்தனைக்கு, திலோத்தமா சம்மதித்ததே!
அவளைப் போலக் கத்தாவிட்டாலும், சித்தரஞ்சனும், சிறு கடுப்புடனேயே பேசினான். “சட்டத்துக்கோ, சமுதாயத்துக்கோ ஒவ்வாத எந்த உறவையும் நாங்கள் வாழப் போவதில்லை, டாக்டர்.முக்கியமான பிரச்சினைகள் எல்லாம், சீர் செய்யப்பட்டு விட்டதால், அனேகமாக ஒரு மாதத்துக்கும் உள்ளாகவே எங்கள் திருமணம் நடக்கும்., உங்களுக்கும் அழைப்புத் தருவேன். எந்த விதமான சாக்குப் போக்கும் சொல்லாமல், நீங்கள் கட்டாயாக வரவந்தாக வேண்டும். நீங்கள் கற்றுக் கொடுக்கும் குரு அல்லவா?”
பளீரென்ற புன்னகையோடு, அவன் முடித்தபோது, பதிலுக்கு லேசாக முறுவலித்தபோதும், அவளிடம் திரும்பிய டாக்டரின் முகத்தில் யோசனை இருந்தது.
“என்னம்மா, உன் கருத்தும் அப்படித்தானா?” என்று விசாரித்தார். பதில் சொல்ல முடியாமல், தொண்டை அடைத்தது அவளுக்கு! அந்த வினாடியில், இன்னும் கற்பனையில்கூட முழுதாக உருவம் பெற்றிராத, அவர்களது குழந்தைக்காகத் தன் மனம் ஏங்கத் தொடங்கிவிட்டதைத் திலோத்தமா வருத்தத்துடன் உணர்ந்தாள். ஆனால் உணர்ந்தது வருத்தமேதான் என்று புரிந்ததுமே உடனே திகைத்தும் போனாள்.
இது என்ன மனோபாவம்? அவள் ஒன்றும், திருமணத்தின் வெற்றியே, மணமான பத்தாம் மாதமே ஒரு பிள்ளையைப் பெற்றுக் காட்டுவதுதான், என்று எண்ணுகிறவள் அல்லவே!
ஒருவேள, அவன் வேண்டாம் என்றதால் வந்த விருப்பமா? ஒரு பொருள் கிடைக்காது என்று என்கிறபோதுதான் அதன் அருமை தெரியும் என்பது, இதைத்தானோ?
எப்படியோ திருமணத்துக்கு முன்னராகவே, குழந்தை ஆசை, திலோவினுள் துளிர்த்துவிட்டது மட்டும் நிஜம்!
அத்தியாயம்-4
ஆனால், என்ன ஆசை எப்படித் துளிர்த்தாலும், அதனால் எந்தவிதமான பயனும் இல்லை என்பதும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தே இருந்தது!
இது விஷயத்தில், ரஞ்சன் ஒரே பிடிவாதமாக இருந்தான்! மறுத்தால், திருமணத்தையே நிறுத்துகிற அளவுக்குப் பிடிவாதம்!
அவனது உறுதி புரிந்து, அவள் தலையாட்டியும் ஆயிற்று!
அங்கே காரில் சித்தரஞ்சனிடம் ஒத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டு, இப்போது பின்னடிக்க முடியாது! அத்தோடு, பின்வாங்கிப் பயன்தான் என்ன?
எப்போது அவனை இழக்க முடியாது என்று ஆகிவிட்டதோ, அப்புறம், அத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், இது சின்ன விஷயமே!
தலையை இழப்பதை விட, கையோ, காலோ ஓர் உறுப்பை இழப்பது போல என்று எண்ணினாலும், அப்போதும் மனதுக்குக் கஷ்டமாகவே இருந்தது!
எப்படியும், அப்போதைக்கு வேண்டாம் என்றுதானே சொல்கிறான். பிறகு, அவனே மாறுவான் என்று மனதைத் தேற்றிக்கொண்டாலும், ஆமாம் என்று டாக்டரிடம் ஒரேயடியாக ஒத்தக்கொள்ளத் திலோத்தமாவுக்கு மனம் வரவில்லை.
எனவே, “ஒத்த கருத்து இல்லாமல் கூட வருவேனா, டாக்டர்?” என்று பதிலை, இன்னொரு கேள்வியாக உரு மாற்றினாள் அவள்.
ஒரு சில கணங்களே என்றாலும், சங்கடமான ஒரு சிறு அமைதி அங்கே நிலவியது.
அமைதியைக் கலைத்து, சற்று முன்னே சாய்ந்து, சித்தரஞ்சன் பேசத் தொடங்கவும், டாக்டரின் பார்வை, திலோவிடமிருந்து, அவன் முகத்திற்குத் தாவியது.
“போதும்தானே, டாக்டர். திலோவின் விருப்பமும், இப்போது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டதுதானே? இனிமேல், சொல்வீர்கள்தானே? இதுவே, ஒரு மருந்தக்கடையில் கேட்டால்கூட, இதற்கான மாத்திரைகளை வாங்க முடியும், டாக்டர். என்றாலும், திலோவின் உடல்வாகுக்கு ஏற்றது எது என்று சரியாகச் சொல்ல, உங்களைப் போன்ற மருத்துவர்களால் மட்டுமே முடியும். சரிவரத் தெரியாமல் எதையாவது உட்கொண்டு, திலோவுக்கு ஆரோக்கியம் கெட்டுவிடக் கூடாதே என்றுதான், நாங்கள், உங்களைத் தேடி வந்ததே! சரியான மருந்து, பயன்படுத்தும் முறை எல்லாம் சொல்லுங்கள், டாக்டர்!” என்றான் அவன்.
“நீங்கள் சொல்வது சரிதான் மிஸ்டர் சித்தரஞ்சன். இந்தக் கருத்தடை மாத்திரைகளில் சில வகை ஒல்லியானவர்களுக்கும், சிலது பருமனாக இருப்பவர்களுக்கும் பிரச்சினை இல்லாமல் பொருந்துகிறவை. திலோத்தமா போன்ற உடல் வாகு உள்ளவர்களுக்கு, ஓரளவு எல்லாமே பொருந்தும். ஆனால், பொதுவாக இந்த மாத்திரைகள் எல்லாமே, “ஹார்மோன்” சுரப்பிகளோடு சம்பந்தப் பட்டவை என்பதால், கொஞ்சம் தலைசுற்று, வாந்தி போன்ற சில பிரச்சினைகள் சில மாதங்கள் இருக்கக் கூடும். மற்றபடி உடலில் பிரச்சனை இராது…”
“அடடா!” என்று சித்தரஞ்சன் குறுக்கிடவும், இரு பெண்களும் அவன் முகத்தைப் பார்த்தனர்.
டாக்டர் கேள்வியாகவும், திலோத்தமை யோசனையாகவும்.
“தலைசுற்று, வாந்தி எல்லாம் உடம்பைக் கஷ்டப்படுத்துவதுதானே, டாக்டர்? இதையெல்லாம் உடனே குணமாக்கிவிட, முடிந்தவரை சீக்கிரமாகக் குணப்படுத்த மருந்துகள் இருந்தால், அதையும் கூடவே தந்துவிடுங்கள், டாக்டர்.” என்றான் அவன்.
அவள் கஷ்டப்படுவாளே என்ற கரிசனம் இருக்கிறது! கரிசனம், அன்பு இருந்தால்தானே வரும்? ஆனால், அவனது பிடிவாதத்தை விடக் காணோமே என்று நினைத்தாள் திலோத்தமா.
ஒருவேளை, அது கூட, அவளுக்குத் துன்பம் நேரக் கூடாது என்பதாக இருக்குமோ?
இப்படி நினைத்துப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஒரேயடியாக அதை ஒப்பவும் முடியாமல் எங்கேயோ உதைத்தது!
“இந்தச் சில்லறைத் தொந்திரவுகள், எல்லோருக்குமே ஏற்படும் என்று சொல்ல முடியாது! அப்படியே ஏற்பட்டாலும், சீக்கிரமே, தானாகவே சரியாகிவிடும். சரியாகாவிட்டால், அப்போது வாருங்கள் அதற்கு மருந்து தருகிறேன். இப்போது நீங்கள் கேட்ட மாத்திரை விஷயம் …” என்று எழுதிக் கொடுத்துவிட்டு, “எழுதியிருக்கிறபடி, இதைத் தினமும் தவறாமல் சாப்பிட வேண்டும், திலோத்தமா. அது முக்கியம். இடையிடையே விட்டுவிட்டால், விளைவு வேறாகிவிடும். ஜாக்கிரதை!” என்று எச்சரித்துவிட்டு, ஒரு தலையசைப்புடன், அடுத்த நோயாளியின் வருகைக்காக மணியடிக்கக் கையை நீட்டினார், மருத்துவர்.
“ஒரு நிமிஷம், டாக்டர்.” என்று சித்தரஞ்சன் எழுந்தான். “எவ்வளவு, டாக்டர்?” என்றவாறு, பர்சை எடுத்தான்.
மௌனமாகத் திலோத்தமா, தானும் எழுந்து நின்றாள்
அவளது முகத்தை ஒரு தரம் பார்த்துவிட்டு, “பர்சை உள்ளே வையுங்கள், மிஸ்டர் சித்தரஞ்சன்.” என்றார் மருத்துவர்.
“ஆனால்…”
“இப்போது ஃபீஸ் வேண்டாம், சித்தரஞ்சன். வெளியே என் பெயரைப் பார்த்திருப்பீர்கள். அனுசூயா! மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கிச் சீராட்டியவள் பெயர். அழிப்பதற்கு நான் ஒருபோதும் உதவியது இல்லை. இப்போது. இது அழிப்பது இல்லை என்றாலும், ஓரளவு நல்லதே என்றாலும், ஏதோ ஒரு வகையில் எனக்கு லேசாக உறுத்துகிறது. உங்கள் முதல் குழந்தை உருவானதும் என்னிடம் வாருங்கள் அப்போது, உரிய பணம் வாங்கிக் கொள்கிறேன். இப்போது, போய் வாருங்கள்!” என்றார் மருத்துவர்.
கடவுளே, இந்த டாக்டர் சொன்னது போலச் சீக்கிரமே, ரஞ்சனின் மனம் மாறி, இதே டாக்டரிடமே, குழந்தை என்று, அந்தச் சோதனைகளுக்காக வருமாறு நேர வேண்டும் என்று உள்ளூர வேண்டிக்கொண்டாள் திலோத்தமா!
மருத்துவமனையை விட்டுக் கிளம்புகையில், ரஞ்சனுக்கு, அவளது இன்னோர் உறுதிமொழியும் தேவைப்பட்டது!
“இது விஷயம், இப்போதைக்கு நமக்குள்ளேயே இருக்கட்டும்.” என்றான்.
இல்லாவிட்டாலும், இது என்ன, எல்லோரிடமும் முரசு கொட்டி அறிவிக்கும் சந்தோஷச் செய்தியா?
ஆனாலும், அவள் சம்மதமாகத் தலையாட்டும்வரை காத்திருந்து, அதன் பிறகே காரை எடுத்தான் அவன்.
டாக்டர் அனுசூயாவிடம் போய் வந்ததிலிருந்து, சித்தரஞ்சன் உற்சாகமே உருவாகிப் போனான்.
வீட்டில் அவளுடைய தந்தை, அலுவல் முடிந்து திரும்பி வந்திருந்தார்.
“அத்தை, சொன்ன நேரத்துக்கு, உங்கள் மகளைக் கூட்டிவந்து, உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் பாருங்கள். உங்கள் மருமகன் சத்தியசந்தன் என்று எல்லோரிடமும் நீங்கள் பெருமையடித்துக் கொள்ளலாம்! “ என்று அவன் லகுவாகக் கூறியது, பெற்றவர்களுக்குப் பிடித்தபோதும், திலோவுக்குத்தான் ரசிக்கவில்லை.
என்ன பெரிய சத்தியசந்தன்? எங்கெல்லாம் போய்விட்டு வந்தீர்கள் என்று அவளுடைய பெற்றோர் கேட்டால், இவன் முழு உண்மையையும் சொல்லிவிடுவானா, என்ன?
ஆனால், பெற்றோரின் மலர்ந்த முகங்களைப் பார்க்கையில், அவளுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது!
எப்படியும், சீக்கிரமே இந்த ரஞ்சன் அவளுடையவன் ஆகப் போகிறானே! இருவரும், ஒருவருக்கொருவர் என்று ஆகப் போகிறார்கள்! அது, எல்லாவற்றையும் விட, முக்கியம் அல்லவா?
முகம் தானாக மலர, பெற்றோருடன் சித்தரஞ்சன் பேசிச் சிரிப்பதை, ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா! மறுநாள் கடைக்குப் போய் நகையை வாங்கிக்கொண்டு, சித்தரஞ்சனுடைய பெற்றோரைப் பார்க்கப் போனார்கள்.
நகையைப் பார்த்த பானுமதி, அது அழகாக இருப்பதாக ஒத்துக் கொண்டாலும், பெரிதாக, முழு மாலையாகவே வாங்கியிருக்கலாமே என்று, மகனைக் கடிந்துகொண்டாள்.
“நான் என்ன செய்யட்டும், அம்மா? என்னுடைய வாங்கும் திறன் பற்றித் திலோ பயந்துவிட்டாளோ, என்னவோ? கொடுக்கப் பணம் இல்லாமல், சட்டையைக் கழற்றிக் கொடுக்கச் சொன்னால் என்ன செய்வது என்று.
“அதெல்லாம் இல்லை, அத்தை!” என்றாள் திலோ அவசரமாக.
அதே சமயத்திலேயே, “சும்மாக் கதை விடாதேடா!” என்றாள் பானுமதி. “உன் முதல் பரிசு! திலோவின் மனதில், அப்படியே பதிந்திருக்க வேண்டாமா? இன்னும் கொஞ்சம் பெரிதாக…”
“இதுவே, எனக்கு மிகவும் பிடித்துதான் இருக்கிறது, ஆன்ட்டி! சொல்லப் போனால், இதுதான் மிகவும் பிடித்துப் போயிற்று. ” என்று, வருங்கால மாமியாரின் பேச்சில் குறுக்கிட்டுச் சொன்னாள் திலோத்தமா.
“கடைக்காரரின் உள் அறைக்குப் போய்ப் பெரிதாக ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்றுதான் ரஞ்சனும் சொன்னார். ஆனால், இந்த டிசைன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால், கடைசியாக இதையே எடுத்துக்கொள்ளச் சொன்னார்! அதனால், அவர் மேல் தப்பில்லை, ஆன்ட்டி!” என்று விளக்கினாள்.
“அடேயப்பா!” என்று வியந்துவிட்டு, “பரவாயில்லையே! மருமகள் இப்போதே உனக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறாளே! திருமணம் முடிந்த பிறகு, இன்னும் எப்படியாகுமோ? நம் பிள்ளைதானே என்று உன்னை அதட்டி ஒரு வார்த்தை சொல்ல முடியாது போல இருக்கிறதே!” என்று, பானுமதி புருவம் உயர்த்திக் கேட்க, சித்தரஞ்சன் பெருமையாகக் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள, மூவருமே இணைந்து நகைத்தனர்.
சிரித்து முடித்த பிறகு, “இப்போது, கடையில் நடந்ததைச் சொன்னேனே தவிர, உங்களை மீறி, நான் இல்லை, ஆன்ட்டி!” என்று பதவிசாக திலோத்தமா கூற, “அருமையான மருமகள்! நீ எப்போது வீட்டுக்கு வருவாய் என்று இருக்கிறது! கல்யாணத் தேதியைச் சீக்கிரமாகப் பார்க்கச் சொல்லு, சித்து!” என்றாள், அவளுடைய வருங்கால மாமியார், சந்தோஷமாக!
செந்திருவுக்கும் நகை மிகவும் பிடித்துப் போய்விட, மிகவும் சந்தோஷப்பட்டாள். எடுத்த எடுப்பிலேயே, மாப்பிள்ளை, வைரத்துக்குப் போய்விட்டாரே! மகளுக்கு, ஒரு போதும், பணப்பிரச்சினை இராது என்று, அவளுக்குச் சந்தோஷம்! மக்களின் படிப்புக்கும், திருமணத்துக்கும் என்று, பிள்ளைகள் பிறந்ததில் இருந்து, கணக்கிட்டுச் சிக்கனமாக இருந்து சேமித்தவள் அவள் அல்லவா?
இன்றைக்கு இலகுவாகச் செலவு செய்ய முடிகிறது என்றால், காரணம், அவளது திட்டமிட்ட சேமிப்புதானே?
இரு வீட்டாருக்குமே, திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு மனமில்லாது போக, விரைவிலேயே திருமணத்தை முடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்!
பட்டும் ஜரிகையுமாகச் சேலைகள் வாங்கினார்கள். மாப்பிள்ளைக்கு சூட்!
சூட் அணிந்து, ரஞ்சன் அருகில் நிற்பதைக் கற்பனை செய்து பார்த்தவளுக்கு, உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது!
திருமணத்துக்கு, இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கின்றனவே என்று வருத்தப்பட்டாள். பதினைந்து நாட்கள்! ஆனால், அந்தப் பதினைந்து நாட்களும் இறக்கை கட்டிக்கொண்டு பறந்து போகும் என்று, திலோத்தமா எதிர்பார்க்கவே இல்லை!
ஆனால், திடுமெனப் பார்த்தால், நாளை மறுநாள் திருமணம் என்கிற அளவுக்கு மணநாள் நெருங்கி வந்துவிட, அவளது திருமணச் சேலைக்கான சட்டை தைத்து வரவில்லை என்று அவளுடைய தம்பி நரேந்திரன், தையற்காரம்மா வீட்டுக்கு மூன்றாவது முறையாகப் போயிருந்தான்! இரண்டாவது தடவை சென்றபோது, இன்னமும் ஹூக் தைக்க வேண்டும் என்றார்களாம்!
செந்திருவுக்கு ஒரே பயம். சட்டையை ஏதேனும் பாழ் பண்ணிவிட்டு, அதைக் காமா சோமா என்று எப்படியோ சரிக்கட்டி, அரை குறையாகத் தைத்துத் திருமண நேரத்தில் கொண்டு வந்து கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, இருந்து, சட்டையை வாங்கிக் கொண்டுதான் வர வேண்டும் என்று, மகனிடம் சொல்லி அனுப்பியிருந்தாள்.
பெரிய தப்பாக இருந்து, துணியே பாழ்பட்டிருந்தாலும், புதிதாகத் துணி வாங்கித் தைக்க அவகாசம் வேண்டுமே!
திலோத்தமைக்குமே, உள்ளூர உதைப்புதான். அவளது நிறத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று, அவளுடைய ரஞ்சனே தேர்ந்தெடுத்தது! அதை அணிந்துகொண்டு மோகினியாக அவள் வரும்போது, யார் என்ன கேலி செய்தாலும் பரவாயில்லை என்று, கண் கொட்டாமல் அவளையே பார்க்கப் போவதாகச் சொல்லியிருந்தான்.
சட்டை சரியாகத் தைக்கவில்லை என்றால், அது கண்ணை உறுத்தாதா? அதுவும், அவனது கண்களை!
ஒரு வழியாக நரேந்திரன் சட்டையோடு வந்து, அதை அணிந்து, சரிபார்த்த பிறகே, திலோவால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது!
நல்லவேளையாக ரஞ்சனின் கண்ணுக்கு எந்த உறுத்தலுமின்றி, அவள் எழில் மோகினியாவே இருப்பாள்! அது போதும்!
அழகு, அழகு என்று ரஞ்சன் பேசுவதைப் பார்த்தால், அவனுக்காகவே, அழகை ரொம்பவும் பராமரிக்க வேண்டும்போல இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டாள் திலோத்தமா. பூரிப்புடன்தான்!
வாழ்க்கைத் துணைவன் தன் அழகை ரசிக்கிறான் என்றால், பெண்ணுக்கு ஆனந்தம்தானே? உலகத்திலேயே பேரழகி என் மனைவி என்றானாம் ஒருத்தன். மனைவியிடம் அழகைக் காணும்போது, அந்தக் கண்களில் அன்பு இருப்பதும் உறுதியல்லவா?
இதற்கு மேல், அவளுக்கு என்ன வேண்டும் என்று பூரணத் திருப்தியோடு திலோத்தமா எண்ணமிட்டபோது, சுருக்கென எங்கோ குத்தியது.
ரஞ்சனின் கண்களில் அன்பு மட்டும் இருந்தால், குழந்தை வேண்டாம் என்று சொல்லத் தோன்றுமா? அதுவும், அவ்வளவு கண்டிப்பாக! திருமணத்தையே மறுக்கும் அளவுக்கு உறுதியாக!
இன்றைய அழகான உடல் பீப்பாய் போல மாறினாலும், அதுவும் அன்புக் கண்ணுக்கு அழகாகத்தானே, தெரியவேண்டும்?
பின்னே எதற்கு இந்தப் பிடிவாதம்? அவளறியாத வேறு என்னவோ, இதிலே இருக்கிறதா?
சற்று முன் மகிழ்ச்சி இருந்த இடத்தில், இப்போது குழப்பம் தலை தூக்கலாயிற்று.
ஆனால், அது பற்றி அவள் யோசிக்க முயலும்போதே, தலையணையை ஒட்டி வைத்திருந்த அவளது செல் இனிமையாக அழைத்தது.
ரஞ்சன்தான்!
“ஹல்லோ!” எனுமுன் அவளது குரல் குழைந்தது.
“என் மோகினிக்கும் தூக்கம் வரவில்லையா?” என்று கொஞ்சியது அவனது குரல்.
“ம்ம்ம் .. .நல்ல தூக்கத்தையும் கலைத்துவிட்டு, இப்படியொரு கேள்வியையும் கேட்பதாக்கும்? இதற்கு, உங்களை என்ன பண்ணலாம்?” என்று செல்லமாகச் சீண்டினாள் திலோத்தமை! “நல்ல தூக்கமா? அந்த நினைப்பே கிடையாது என்று குரல் சத்தியம் செய்கிறது! தூக்கத்தைக் கலைத்ததாகக் குற்றச்சாட்டு வேறா? “என்று சிரித்தான் சித்தரஞ்சன். “எனக்கும் தூக்கமே வரவில்லை, திலோ! நாளை மறுநாள் இந்த நேரம் என்று நினைத்தேனா? உன் குரலையாவது கேட்டே தீர வேண்டும்போல இருந்தது! ஆனால், இதற்கு மேலும் விழித்திராமல் தூங்கும்மா.” என்று கரிசனமாகக் கூறியவன் உடனேயே, “பெரிதாக வேறொன்றுமில்லை, திலோ! நாளை மாலையே நலுங்கு, அது இதென்று திருமணத் தொடர்பான சடங்குகள் தொடங்கிவிடும். இரவு எப்போது முடியுமோ? தொடர்ந்து தூக்கமில்லாது போனால், திருமணத்தின்போது தூங்கி மடியில் விழுந்து விடுவாயோ என்ற பயம்தான்! மடியில் விழுவதுகூடப் பரவாயில்லை! சந்தோஷம்தான். ஆனால், தூக்கி வைத்துத் தாலி கட்டச் சிரமமாக இருக்கும், பார்! அதற்காகச் சொன்னேன். ” என்று அவன் சாதுவாக நீள விளக்கம் தர, அவளுக்குச் சிரிப்பு பொங்கியது!
அடக்கிக்கொண்டு, “எதற்கும், நீங்களும் உடனேயே தூங்கிவிடுங்கள், ரஞ்சன். இல்லையானால், நீங்களும் தூக்கக் கலக்கத்தில், எனக்குப் பதிலாகப் பக்கத்தில் யார் கழுத்திலாவது தாலியைக் கட்டிவிட்டால் ஆபத்து அல்லவா? அதனால் சொன்னேன்!” என்றாள் அவளும், அவனது அப்பாவிக் குரலிலிலேயே எடுத்துரைத்தாள்.
அவனது குரலிலும் நகை இலங்கியபோதும், உறுதியான பதில் உடனே வந்தது.”உன்னையன்றி, இன்னொரு கழுத்திலா? வாய்ப்பே கிடையாதும்மா! கண்ணையே திறக்க முடியாத மயக்க நிலையே என்றாலும், என் உடம்பின் ஒவ்வோர் அணுவுக்கும் உன்னைத் தெரியும் என்பதால், வேறொரு கழுத்தில் என்கைத் தாலி ஏறவே ஏறாது! இது நிச்சயம்!”
அவனை நினைத்தவாறே, அமைதிப் புன்னகையோடு தூங்கிப் போனாள் திலோத்தமா!
மறுநாள், மண்டபத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களைச் சரிபார்த்து எடுத்துக்கொண்டு கிளம்பிச் செல்வதிலும், தொடர்ந்து நலுங்கு முதலான சடங்குகளிலும் பொழுது பரபரப்பாகக் கழிந்துவிட, மறுநாள் திருமணமும் அதே வேகத்துடன் நிறைவேறி, கழுத்தில் தாலியோடு மனைவி என்று ரஞ்சனின் அருகே தான் நிற்பதை ஆச்சரியத்தடன் உணர்ந்தாள் திலோத்தமா!
அவள் மாங்கல்யத்தைத் தொட்டுப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “மாற்றி யார் கழுத்திலும் கட்டி விடவில்லை, பார்த்தாயா?” என்று காதோரம் கிசுகிசுத்தான் சித்தரஞ்சன்.
“நானும்தான் தூங்கி உங்கள் மடியில் விழுந்து விடவில்லை! ” என்றாள் அவள் பதிலுக்கு.
தாடையைத் தடவியபடி, “ம்ம்ம் … அதுதானே கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது! குறைந்த பட்சமாகத் தாலி கட்டிய பிறகாவது மடியில் விழுந்திருந்தால், எழுப்புகிறேன் பேர்வழி என்று எப்படி எப்படியோ ‘ என்று அவன் லேசாகக் கண் சிமிட்ட, முகம் சிவப்பதைக் கட்டுப்படுத்த முயன்றபடி,”ஷ், ரஞ்சன்!” என்றாள் அவள்.
ரசனையுடன் சிரித்தவாறே, பரிசு கொடுக்க வந்தவர்கள் பக்கம் திரும்பினான் அவள் கணவன்.
கட்டுப்படுத்த முடியாத எத்தனையோ கற்பனைகள்!
அத்தனையுமே, அதற்கும் மேலாகவே அவர்களது ஒரு வாரத் தேனிலவில் பலிக்க, பூரிப்பே உருவாகிப் போனாள் திலோத்தமா.
கண்களும் கன்னங்களும் பளபளக்கத் திரும்பி வந்த மகளைப் பார்த்து, செந்திருவும் மணிகண்டனும் சந்தோஷப்பட்டனர்.
மறு விருந்து, மற்றும் ஆவன செய்து, முறைப்படி திலோத்தமாவை கணவன் வீட்டுக்குப் பெற்றோர் அனுப்பி வைத்தார்கள்.
சம்பந்தி வீட்டுக்கு ஏற்ற வகையில் சீர் செனத்தி செய்யவில்லை என்கிற கவலை செந்திருவுக்கு இருந்தது. ஆனால், இரண்டு பிள்ளைகள் எனும்போது, மகனை வஞ்சித்து, ஒரேயடியாக மகளுக்குச் செய்யவும், நியாயவாதிகளான அந்தப் பெற்றோருக்கு மனம் வரவில்லை.
இதை லேசுபாசாக அவள் குறிப்பிட்டபோது, “அத்தை, உங்கள் மகளுக்கு, நீங்கள் பொருளாக எதைச் செய்யவும், இப்போது அவசியமே கிடையாது. ஆனால், எதுவுமே வேண்டாம் என்று மறுத்தால், நீங்கள் வருத்தப்படக் கூடும்., அதனால், அதிகப்படியாகச் செலவு செய்யாமல் பார்த்துக்கொள் என்றுதான் அம்மாவும் என்னிடம் சொன்னார்கள். திலோவுக்காக நீங்கள் என்ன கொடுத்தாலும், உங்கள் அன்பும் பாசமும் அதோடு சேர்ந்து வரும் என்பதும், வாழ்க்கைக்கு அவைதான் முக்கியம் என்பதும் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தெரியும். அதனால், அனாவசியமாக மனதில் சஞ்சலப் படாதீர்கள்.” என்று சித்தரஞ்சன் கூறவே, அவனுடைய மனைவி திலோத்தமா உச்சி குளிர்ந்து போனாள்.
செந்திருவைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.
ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “எங்கள் திலோ அதிருஷ்டக்காரி என்று என் தாயார் எப்போதுமே சொல்லுவார்கள்! ஆனால் இவ்வளவு என்று தெரியாது. சின்ன வயதில் ஒரு தரம் …’ என்று செந்திரு ஏதோ சொல்ல முனைகையில், அவளது பேச்சில் குறுக்கிட்டு, “அதெல்லாம் இருக்கட்டும், அத்தை. இப்போது உங்கள் கையால், ஒரு காஃபி கிடைக்குமா? அன்று நீங்கள் கொடுத்த காஃபி மிகவும் ருசி என்று அம்மா சொன்னார்கள். அதே காஃபி போடும் முறையை, உங்கள் பெண்ணுக்கும் நன்றாகக் கற்றுக் கொடுங்கள். சமயத்தில் பயன்படும். “ என்று சித்தரஞ்சன் கூற, விழுந்தடித்துக்கொண்டு, “வா கண்ணு, நீயும் நன்றாகப் பார்த்துக்கொள்” என்று மகளையும் அழைத்துக்கொண்டு காஃபி போடப் போனாள் செந்திரு.
கணவன் வீடு, திலோத்தமாவுக்குச் சொர்க்கமாகவே இருந்தது.
திருமணத்துக்காக வந்த ஒரே நாத்தனார், தாய் தந்தையுடன் ஒரு வாரம் தங்கிச் சீராடிவிட்டு, திலோத்தமா தேனிலவு முடிந்து திரும்பி வந்த மறுநாளே, பாரீசில் இருந்த தன் குடும்பம் நோக்கிப் பறந்துவிட்டாள்.
அங்கே சொந்தத் தொழில். கணவனும் மனைவியுமாகவே கவனித்துக் கொள்கிறார்களாம். பிள்ளைகளுக்குப் பள்ளி. அங்கே சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு ஏழு மொழிகள் கற்றுக் கொடுப்பார்கள் என்று கேட்டு, திலோ “எப்படிப் படிப்பார்கள்” என்று ஆச்சரியப்பட்டாள். சின்ன வயது என்பதால்தான் இலகுவாகப் பிடித்துக் கொள்கிறார்கள் என்றாள்.
திலோத்தமாவுக்கு வீட்டின் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டு, பானுமதியும் மகள் வீட்டுக்குச் சென்று சில மாதங்கள் தங்குவதாக இருந்ததால், மகளைப் பிரியும் வாட்டம், அவளது முகத்தில் அவ்வளவாகத் தெரியவில்லை!
மகளை வழியனுப்பிவிட்டு வந்த பானுமதி, மருமகளையும், மகளாகவே நடத்தினாள் எனலாம்.
வீட்டிலுமே, பெரிய கடமைகள், வேலைகள் என்று திலோத்தமாவுக்கு எதுவும் இல்லை. அந்தந்த வேலைக்கு, அததில் திறமை உள்ள பணியாட்கள் இருந்தனர். அவர்களை மேற்பார்வை பார்க்கவும் தேவை இருக்கவில்லை.
காலையில் குளித்துக் கிளம்பி, தந்தையும் மகனும் அலுவலைப் பார்க்கச் சென்றார்கள் என்றால், மாலையில் இருவரும் திரும்பி வருவது, அவரவர் பொறுப்புகள் முடிவதைப் பொறுத்ததாக இருந்தது.
அதிலும், புதிதாக மணமானவர்கள் என்பதால், நடேசனே மகன் சீக்கிரமாக வீடு திரும்புவதற்கு, வழி வகை செய்து கொடுத்தார். மாலை, முன்னிரவு நேரங்களில் நடக்கக் கூடிய, தொழில் தொடர்பான பேச்சு வார்த்தைகளை அவரே கவனித்துக்கொண்டு, மகனை வீட்டுக்கு அனுப்பினார்.
“மாமா பெரியவர். அவருக்கு அதிக வேலைதானே?” என்று திலோத்தமா சிறு கவலையுடன் கேட்டபோது, “நல்லது என்று நான் நினைக்கிறேன், திலோ.” என்றாள் பானுமதி.
“முன்பானால், இது போன்றவைகளைச் சித்துவைக் கவனிக்கச் சொல்லிவிட்டு, உன் மாமா அவரது நண்பர்களோடு “கிளப்”புக்குப் போய்விடுவார். அவர்களது அரட்டை எப்போது முடியும் என்றே சொல்ல முடியாது. ஓரொரு நண்பர்கள் சீட்டாட்டம், மது என்று இழுப்பார்கள். அதையும் மறுக்க முடியாது. உன் மாமா அளவு மீறுவது இல்லை என்றாலும், அவர் வரும்வரை, எனக்குக் கவலைதான். நண்பர்களோடு போனால், திரும்பி வர எப்படியும் நள்ளிரவு வரை ஆகிவிடும். இப்போது பார்! மிஞ்சி, மிஞ்சி பத்தரை! நிம்மதியாக இருக்கிறது! எங்களைப் பற்றிய எண்ணம் இல்லாமல், நீயும் மகிழ்ச்சியோடு இரு.” என்றாள் மாமியார்.
திலோத்தமாவுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
மாமியார், மாமனாரின் பரிவு, பிரியம் ஒரு புறம் என்றால், கணவனின் ஆசையும் நேசமும், அவளுக்கு இந்த உலகத்தையே மறக்கடித்தன.
சித்தரஞ்சன் இல்லாமல், இந்த இருபத்து மூன்று ஆண்டுகளை எப்படித்தான் கழித்தாளோ, என்பது, அவளுக்கே புதிராக இருந்தது!
அதிலும் கடைசி இரண்டு ஆண்டுகள்!
இந்த வயதில், எல்லாப் பெண்களுக்குமே இப்படித்தான் கலக்கமும், குழப்பமுமாக இருக்குமோ, என்னவோ? அலைந்து திரிந்து, ஆய்ந்து ஓய்ந்து வீடு வந்துவிட்ட உணர்வு!
சும்மாவே இப்படி என்றால், சித்தரஞ்சன் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டால், வேறு நினைக்கவே அவளுக்கு அவகாசம் இராது!
வீட்டில் இருக்கையில், புதுக் கணவனின் வேகம்!
அதன்றி, அடிக்கடி வெளியேயும் அவளை அழைத்துச் சென்றான். நாடகம், சினிமா மட்டுமின்றி, பல்வேறு கலைக் கண்காட்சிகள், மாஜீக் ஷோ, போன்ற பலவற்றையும் பார்த்து ரசித்தார்கள்.
இவை மட்டுமின்றி, நகைகள், துணிமணிகள் வேறு வாங்கிக் குவித்தான். எங்காவது “ஷோ கேசி”ல் அழகாக எதையாவது பார்த்தால், அதை வாங்கிவிட்டுத்தான், வேறே எங்கே செல்வது என்றாலும்!
அப்புறம், அதை அணியச் சொல்லிப் பார்ப்பது., பார்த்து ரசிப்பது! “பிடித்திருக்கிறதா? திருப்தியாக இருக்கிறதா? என்று பலமுறை கேட்பான்.
ஒரு மாதம் எப்படிப் போனதென்றே தெரியாமல் பறந்துவிட, பானுமதி மகள் வீட்டுக்குக் கிளம்பி, வெளிநாடு சென்றாள்.
மாமியார் விடைபெறும்போது சொன்ன வார்த்தைகளால், அவள் அறியாமலே, அவளுடைய மருமகள் திலோத்தமாவின் நெஞ்சில் ஓர் அம்பு, வலிக்கத் தைத்தது!
– தொடரும்…
– காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2012, அருணோதயம் பதிப்பகம், சென்னை.