காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 3,705 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

“அருமையாக, ஆசைப்பட்டுப் பிறந்த பெண் குழந்தை, எப்படியும் ஒரு காலத்தில் அடுத்த வீட்டில் வாழப் போகிறவள்., அங்கே எப்படி இருக்குமோ என்னவோ, இங்கே விருப்பம் போல இருக்கட்டும் என்று உனக்குச் செல்லம் கொடுத்தது தப்பாகிப் போயிற்று! சொல்வதைக் கேளாமல், இந்தக் கடைசி நேரத்திலே போய், இப்படி அழிச்சாட்டியம் பண்ணுகிறாயே! இப்போதென்ன, உனக்கு உடனே திருமணம் என்றா, அப்பா முடிவு பண்ணிவிட்டார்? அப்படியில்லையே! முதலில் வருகிறவர் எப்படி இருக்கிறார் என்று, ஆளைப் பார்த்து வைப்போம் ஆனால், நீ சும்மா அவசரப்பட்டு, முதலிலேயே முடிவெடுத்துப் பேச வேண்டாம்.” என்றாள் செந்திரு! 

“நான்தான் இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேனே., அப்புறமும் இந்த முயற்சி செய்வானேன்?” என்றாள் எரிச்சலோடு மகள். 

“ஆமாம் சொன்னாய். அதற்காக, உனக்குத் திருமணமே செய்யாமலா வைத்திருக்க முடியும்? அல்லது, தலை நரைக்கிற வரை காத்திருப்பதா? பெற்றவர்கள், எங்களுக்கும் என்னென்னவோ ஆசைகள் இருக்கும்தானே? அவைகளை நிறைவேற்றும் கடமை உனக்கும் உண்டுதானே? அதுவும், சும்மா ஏப்பை சாப்பையான இடத்திலா கொண்டு தள்ள முயற்சிக்கிறோம்? இதுவரை நீ மறுத்த மாப்பிள்ளைகளாவது, பெரிய வேலை பார்க்கிறவர்கள்தான் என்றாலும், இதை விட்டாலும், இதைப் போலவேயோ, மேலாகவோ இன்னொன்று கிடைக்கும் என்கிற வகை. அதனாலேயே, உனக்குப் பிடிக்காவிட்டால் வேண்டாம் என்று, அப்பாவும் நானும் விட்டுவிட்டோம். ஆனால், இந்த இடம் அப்படி அல்லடாம்மா! ரொம்ப வளமான செல்வ நிலை. பையன் படித்தவன். ஆளும் மிகவும் நன்றாக இருக்கிறார். உன் நிறம் இல்லை என்றாலும், நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நின்றால், ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருக்கும். அதுவும், உன் அழகுக்காக, அவர்களே தேடி வருகிறார்கள். எல்லா வகையிலும் சிறந்த இந்த மாப்பிள்ளையை விடக் கூடாது என்று எண்ணித்தான், அப்பா அவர்களை வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டார்.” என்று கனிவும் கண்டிப்புமாக மகளை ஒத்துக்கொள்ள வைக்க முயன்றாள் தாயார். 

“நீங்கள் என்னதான் சொன்னாலும், அதெப்படிம்மா என்னிடம் கேட்காமல், அவர்களை வரச் சொல்லலாம்? எனக்குப் பிடிக்கவில்லை! அதனால்…”

“சும்மா டேப்பில் பதிய வைத்து ஓட விட்ட மாதிரிச் சொன்னதையே சொல்லக் கூடாது!பெற்றவர்கள் நல்லதற்குத்தான் சொல்வார்கள் என்று புரிந்து, அதை ஏற்கவும் தெரிய வேண்டும்! என்று,இப்போது தாயாராக அதட்டிப் பேசினாள் செந்திரு. 

மகள் முகம் இறுகி நிற்கவும், பெற்றவளின் மனம் இளகத்தான் செய்தது.

ஆனால், கூடவே, சின்ன வயதில் மருந்து குடிக்க மகள் எப்போதும் அடம் பிடிக்கிறவள் என்பதும், அவளுக்கு நினைவு வந்தது. நல்லது என்று தெரியாமல் மறுக்கிற அதே புத்தி, இன்றுமல்லவா இருக்கிறது!

பிடிவாதமாகக் கையைக் காலை மடக்கிப் பிடித்து மருந்தைப் புகட்டிய மாதிரி இப்போது கட்டாயத் திருமணம் செய்து வைக்க முடியாதுதான். ஆனால், அதற்காக, அவளது போக்குப்படி விட்டுக்கொண்டே இருக்கவும் முடியாதே! 

மனதின் கனிவைக் காட்டிக்கொள்ளாமல், சற்று அழுத்தத்துடனேயே பேசினாள், பெற்றவள். ”பார் திலோ, இது ரொம்பப் பெரிய இடம்மா. கட்டுமானத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார்களே, “கனவு இல்லம்” என்று, அங்கங்கே பெரிய பெரிய கட்டிடங்களில், அவர்களது பெயர் இருப்பதை நீயும் பார்த்திருப்பாய். நம்பிக்கையான நிறுவனம் என்கிறார்கள். அதன் உரிமையாளர்கள் என்றால், சற்று நினைத்துப் பார்! தொழிலில் நல்ல பெயரும் இருக்கிறது. கூடவே, பையனைப் பற்றியும் எந்தக் குறையும் சொல்லவே முடியாதபோது, நீ இந்த மாதிரிப் பேசினால் எங்களுக்கும்தான் எப்படி இருக்கும்?” 

திலோத்தமா வழக்கம்போல உடனேயே மறுக்காததே, செந்திருவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. 

ஆனாலும் மகளின் மதிமுகத்தில் இருந்த யோசனையின் முடிவு, நல்லதாக இருக்க வேண்டுமே! மதில் மேல் பூனை, அந்தப் பக்கம் குதித்துவிட்டால்? 

மூச்சைப் பிடித்துக்கொண்டு, பெற்றவள் காத்திருக்க,”எஎன்ன பெயர் சொன்னீர்கள் அம்மா? ம்ம் க. கனவு இல்லமா? அந்த நிறுவனத்துக்கு நல்ல பெயர்தான் என்று நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்…. அதன் உரிமையாளர்கள் என்றால் … நான் யோசிக்க வேண்டும், அம்மா. நான் முதலில் பையனைப் பார்க்க வேண்டும். அதன் பிறகு அப்புறமும் எனக்குப் பிடித்தால்தான், மேலே எந்தப் பேச்சும் கூட!” என்றாள் மகளும், தாயைப் போலவே, சற்று அழுத்தத்துடனேயே. 

இந்த அளவுக்கு மகள் இறங்கி வந்ததே, செந்திருவுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றியது! 

“இந்த முறையும் மறுத்து, திலோ ஏதாவது சொன்னாள் என்றால், நான் பொல்லாதவனாக இருப்பேன்..” என்று குதித்துக் கொண்டிருந்த கணவனிடம் நல்ல பதிலைச் சொல்ல முடிகிறதே! 

இல்லாவிட்டால், கணவனின் தாண்டவத்தையும், அவள்தானே சகித்தாக வேண்டும்? 

“கனவு இல்லம்” நிறுவனத்துடைய உரிமையாளர் என்றதும், நிபந்தனையோடுதான் என்றாலும், ஓரளவு தலையாட்டி வைத்தது தப்போ என்று, அடுத்த இருபத்து நாலு மணி நேரத்தில், திலோத்தமைக்குப் பலமுறை தோன்றிவிட்டது! 

என்னவோ, கிட்டத்தட்டத் திருமணமே நிச்சயமாகிவிட்டது போலப் பெற்றோர் நடந்துகொண்ட விதம், அவளுக்கு வயிற்றில் ஏதோ பிசைந்து, என்னவோ செய்தது! 

மாப்பிள்ளைப் பையனைப் பார்க்க வேண்டும்., அவனோடு பேச வேண்டும் என்று, அவள் ஏதேதோ திட்டம் போட்டால், இந்தப் பெற்றவர்கள்,திருமணத்தையே நடத்தி, முடித்து விடுவார்கள் போலிருக்கிறதே! 

அப்படி நடத்த முடியாதுதான்! ஆனால் பிடிவாதமாக மறுத்தால், குடும்பத்தில் தகராறு நிச்சயம்! 

உள்ளூர நெஞ்சு தடதடக்க, வெளியே சாதாரணம் போலக் காட்டிக்கொண்டு, வீட்டுப் பெரியவர்களின் சொற்படி, வேண்டா வெறுப்பாக, ஆடிக் கொண்டிருந்தாள், திலோத்தமா! 

வேண்டா வெறுப்பாகத்தான்! ஏனெனில், பெற்றோரின் போக்கைப் பார்த்தால், அவள் எண்ணியது நடப்பதற்கு வழியே இல்லாதது போலத்தான் தெரிந்தது! 

ஆனால், முயன்றால், முடியாதது இல்லைதானே? ஏதோ ஒரு வாய்ப்பு கிடைக்காமல் இராது! 

அப்படியே வாய்ப்பு தானாகக் கிடைக்கவில்லை என்றால், அந்த வாய்ப்பை, அவளே உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதான்! 

எப்படியும், உரிமையாளர் என்றால்… பார்க்கலாம். 

ஆனால், பல பணக்காரக் குடும்பங்களில் போல, அப்பன் தேடி வைத்த சொத்து என்ற ஒரே காரணத்தினால், நிறுவனத்துடைய உரிமையாளனாக ஆகியிருந்தால், அத்தோடு முற்றுப்புள்ளிதான். அந்த மாதிரி ஆள், அவளுக்குக் கொஞ்சமும் பயன்பட மாட்டான். 

வீட்டைத் தூசி தட்டுவதும், துடைப்பதும், அழகுபடுத்துவதுமாகப் பெற்றோர் இருவரும் பரபரத்ததைப் பார்க்கையில், திலோத்தமாவுக்கு வேடிக்கையாக இருந்தது! 

ஏதோ ஆளுநர், அமைச்சர் வரப் போகிற மாதிரி, என்ன பெரிய கித்தாய்ப்பு? 

அவளுக்குப் படபடப்போ, பரபரப்போ, எந்த உணர்ச்சியும் உண்டாகவில்லை! வரட்டும் பார்க்கலாம் என்பதுதான்! 

மாலையில் வேண்டுமானால், ஓர் அரை அல்லது ஒரு மணி நேரம் முன்னதாகக் கேட்டுக்கொண்டு வர வேண்டியதுதான் என்று எண்ணியவாறு குளித்துவிட்டு, மறு நாள் அலுவலகத்துக்கு என்று முந்திய நாள் இரவில் எடுத்து வைத்திருந்த ஆடை, அணிமணிகளை அணிந்தவாறு, அவளது அறையை விட்டு வெளியே வந்தால், “எங்கே கிளம்பிவிட்டாய்?” என்று புருவத்தைச் சுளித்து வினவினார், மணிகண்டன். 

என்ன கேள்வி இது? 

“வேலைக்கு அப்பா, வேலைக்கு! எனக்குக் கூட வேலை கொடுத்துச் சம்பளமும் தருகிறார்களே, அந்த அலுவலகத்துக்கேதான்!’ என்று இலகுவான புன்னகை செய்தபடியே தந்தையின் முகத்தைப் பார்த்தால், அதில் சிரிப்பின் சாயல், சிறிதுகூட இல்லை! 

அது மட்டுமல்ல. அவளிடம் பேச வேண்டும் என்பதற்காக, அறை வாயிலிலேயே நடை பயின்றிருப்பார் போல!? 

அப்படித்தான் என்பது போலப் பெற்றவரின் பேச்சு அமைந்தது! “அதெல்லாம் நீ எங்கேயும் போக வேண்டாம். அம்மாவுக்குக் கூடமாட உதவி செய்தபடி, வீட்டிலேயே இரு!” என்று சற்று அழுத்தமான குரலில் கூறினார் அவர். 

ஏறத்தாழ உத்திரவிடுவது போல! 

இதெல்லாம் அவள் வீட்டில் பழக்கம் இல்லையே! 

வருகிறவர்கள், அப்படியென்ன பெரிய கொம்பு முளைத்தவர்கள்?

பணம் என்கிற கொம்பாக இருக்கலாம் என்பதோடு, எப்போதோ நடந்திருக்கக் கூடிய திருமணத்தைப் பலமுறை தட்டிவிட்டவள் அவளேதானே? அந்த அலுப்பும் இருக்கலாம்! இந்த முறை, அதற்கு இடம் கொடுக்காமல் இருக்கிறாராம்! 

அதாவது, அப்படிக் காட்டிக் கொள்கிறார். மற்றபடி, பையனைப் பிடிக்கவே இல்லை என்றால், வற்புறுத்தித் திருமணம் செய்து வைக்கிற வக்கிரம், அவளுடைய அன்பான பெற்றோருக்குக் கிடையாதே! 

அப்படி இருந்திருந்தால்தான், என்றைக்கோ அந்த முயற்சி செய்திருப்பார்கள்! 

ஆனாலும், மாலை வரை மொட்டு மொட்டென்று சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல், “அம்மாவுக்கு நான் என்ன உதவிப்பா, செய்யட்டும்? கேசரிக்கு உப்பு, சமோசாவுக்கு இனிப்பு எல்லாம் சரிபார்த்துச் சொல்லுவதா? பாயசத்தில் கூட, அம்மா போடுகிற காரம், எப்போதுமே சரியாகத்தானே இருக்கும்? இதில் நான் என்ன உதவிப்பா செய்ய முடியும்?” என்று கேலியாக அடுக்கிவிட்டு, “அதைவிட, வேலைக்கே போய், அங்கே கம்ப்யூட்டரில் கொஞ்சம் வீடியோ கேம் விளையாடிவிட்டு வருகிறேனே! “ என்று சலுகைக் குரலில் அனுமதி கேட்டாள், மகள். 

ஆனால், அவள் அவ்வளவு வேடிக்கை பேசியும், தந்தை முகத்தில் புன்னகையைக் காணோம்! “அதெல்லாம் வேண்டாம். வெளியே போய் அலைந்து, சோர்ந்து, முகத்தைக் கெடுத்துக் கொள்ளாமல், சும்மா வீட்டிலேயே இரு.” என்றுவிட்டு, அவளோடு மேலே நின்று பேசப் பயந்தவர் போல, நகர்ந்து முன்னறைக்குப் போய்விட்டார்! 

திலோவுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது! மாலையில், அந்தக் கும்பல் வரும்வரை, சும்மா எப்படி உட்கார்ந்திருப்பது? 

அதுவும், சொன்ன நேரத்துக்கு வருமோ? அல்லது, மாப்பிள்ளை வீட்டார் என்றால், தாமதமாக வந்தால்தான் பெருமை என்று ஆடி அசைந்து, மெள்ளத்தான் வருமோ? 

அன்னையின் மூலமாகத் தந்தையை வளைய வைக்கலாமா என்று திரும்பினால், உள்ளிருந்து செந்திரு தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள். அன்னையும், அப்பாவோடு கூட்டுதான் என்று சொல்லாமல் சொன்னபடி. 

என்ன இது? அவள் அப்படி எங்கே தொலைந்து போய்விடுவாள் என்று இத்தனை காபந்து? 

தாயிடம் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாம். கோபமாகப் பெற்றவளிடம் விரைந்து, எண்ணியதைக் கேட்டாள். 

மீந்த சப்பாத்தி மாவை அலுமினிய “ஃபாயிலா”ல் மூடி வைத்துக் கொண்டிருந்த செந்திரு, கைவேலையை முடித்துவிட்டு, மெல்ல மகளைத் திரும்பிப் பார்த்தாள். 

மகளின் கோப முகம் அவளது சிறு வயதை நினைவூட்டியதோ, என்னவோ? லேசாக முறுவலித்து, “அதில்லை கண்ணு. டீவியில் அப்பா ஒரு படம் பார்த்தாராம். அதில், தன்னைப் பெண் பார்க்க வருவது பிடிக்காமல், கதாநாயகி வேண்டுமென்றே அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்கு வராமல், ஊர் சுற்றிவிட்டு, ரொம்பத் தாமதமாக வந்தாளாம். நீ வேறு, கல்யாணத்தைத் தட்டி விட்டுக்கொண்டே இருக்கிறாயா? அப்படி ஏதும் செய்துவிடுவாயோ என்று, அப்பாவுக்கு ஒரே கவலை. நீ அப்படிச் செய்ய மாட்டாய், எதுவானாலும் வெளிப்படையாகச் சொல்லி விடுவாய் என்றால், அப்பா கேட்க மாட்டேன் என்கிறார். நீ நல்ல பெண்தான் என்றாலும், இந்த வயது கிறுக்குத்தனமானது என்று சரி, அதை விடு. இப்போது, அப்பா சொல்வது போல, வீட்டிலேயேதான் இருந்துவிட்டுப் போயேன்! அப்படி என்ன, அலுவலகத்தில் வெட்டி முறிக்கிற வேலை? அங்கே போய் விளையாடுகிற வீடியோ கேமை, வீட்டிலேயே விளையாடுவது! சரிதானா?” என்றவளிடம் பதிலே சொல்லாமல், திரும்பிப் போய் அறைக்குள் புகுந்தாள் பெண். 

தந்தையிடம் அவள் சொன்னதைக் கேட்டுவிட்டுச் சொல்கிறாள். மற்றபடி, எதைச் செய்தாலும், நூறு சத விகித மன ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்று, வேலையில் சேர்ந்தபோது, மகளுக்கு அறிவுரை சொன்னவள் இதே தாய்தான். 

தாய், தந்தை இருவருமே, செய்கிற எதையுமே அலட்சியமாக எண்ணிச் செய்கிறவர்கள் அல்ல. அதிலும், அடுத்தவரிடம் கை நீட்டி ஊதியம் பெறுகிறபோது, அதற்கான முழு உழைப்பையும் கொடுத்தாக வேண்டும்., இல்லாவிட்டால், அந்தப் பணம் உடம்பில் தங்காது என்பார்கள். 

இள ரத்தம் காரணமாக வேலை பற்றி விளையாட்டு வேடிக்கையாகப் பேசினாலும், அவளுமே,பணியில் அலட்சியமாக இருப்பதில்லை என்பது, அவர்களுக்கும் தெரியும். 

எனவே, திலோத்தமா இப்படிக் கேலி பேசும்போது, கூடச் சேர்ந்து கொஞ்சம் சிரிப்பார்கள் …ஆனால் இன்றைக்கு, முறுவல் மாதிரியாக உதட்டை லேசாக நெளிக்கக் கூடக் காணோம்! 

அவள் பலமுறை மறுத்தது, பெற்றோர் இருவரையுமே பாதித்திருக்கிறது! 

ஆனால் அதற்காக, மனம் ஒப்பாமல் மணந்துகொள்ள முடியுமா, என்று தன் பக்க நியாயத்தைத் திலோத்தமா விடுவதாகவும் இல்லை! 

பிடிக்கவில்லை என்றால், பிடிக்கவில்லைதான்! 

“என்னையெல்லாம், என் பெற்றோர் கேட்கவே இல்லை! இத்தனைக்கும் நான் கல்லூரியில், விடுதியில் தங்கிப் படித்தவள். இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு வந்தால், இரண்டு வாரத்தில் திருமணம் என்றார்கள். நாங்கள் நன்றாக இல்லையா? சும்மா நுணுக்கி நுணுக்கிப் பார்க்கக் கூடாதும்மா! நீ அமோகமாக வாழ வேண்டும் என்றுதானே, நாங்களும் நினைப்போம்?” என்று, கடைசித் தடவை, எந்த விதமான காரணமும் சொல்லாமல், காரணம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லாமலே திலோத்தமா மறுத்தபோது, சற்றே மாறுபட்ட குரலில், செந்திரு கூறியிருக்கிறாள். 

இப்போது தாயார், இன்னும் என்னென்ன சொல்லக் கூடும்? தந்தையைப் பற்றியோ, கேட்கவே வேண்டாம்! அதிகம் பேசுகிறவர் அல்ல என்றாலும், “சாது மிரண்டால் “போல ஆகிவிடக் கூடாதே! 

அதையும், திலோவால் தாங்கிக் கொள்ள முடியாதே! கடவுளே, எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும்! முடியும்! 

கடவுள், இதற்கு மேலும் அவர்களை .. அவளையும்தான், சோதிக்கக் கூடாது என்று மனதார வேண்டிக் கொண்டு, மாலை வேளைக்காகக் காத்திருக்கலானாள் திலோத்தமா! 

வரப் போகிற, “கனவு இல்லம்” உரிமையாளர்களுக்காகவும்! அவர்களாலேனும், அவளது ஆசை நிறைவேறட்டுமே! 

“கனவு இல்லம்’ உரிமையாளர்கள், நேரம் காக்கிறவர்கள் போலும்! 

அதே சமயம், வீட்டினரின் கடைசி நேரத்துப் பரபரப்புகளை உணர்ந்தவர்கள் போலக் “கிளம்பிவிட்டோம். இன்னும் அரைமணி நேரத்தில் உங்கள் வீட்டில் இருப்போம்.” என்று, மணிகண்டன் குடும்பத்துக்கு ஓர் முன்னெச்சரிக்கையும், தயார் நிலையில் இருப்பதற்கு ஓர் அவகாசமும் கொடுத்துவிட்டே வந்தார்கள். 

சொல்லப் போனால், அதுவே திலோத்தமாவை, அவர்களுக்கு ஒரு 

“சபாஷ்!’ போட வைத்தது! 

இந்த மாதிரிப் பண்போடு பழகுகிறவர்களோடு பேசுவதும் எளிதாக இருக்கும்! 

அனாவசியக் கோப தாபங்கள் இல்லாமல், அவளை நல்லபடியாகப் புரிந்து கொள்வார்கள்! 

ரொம்ப முக்கியம், அதுதானே? 

தெளிந்த … லேசாகிவிட்ட மனதோடு, தாயின் விருப்பம்போலத் திலோத்தமா தன்னை அளவோடு அலங்கரித்துக் கொண்டாள். 

அதே போலப் பெண்ணைப் பார்க்கும் சாக்கில், அக்கம் பக்கம் உள்ளவர்கள்., அடுத்தடுத்த உறவினர் என்று கூட்டம் சேர்த்து வராமல், பையன், பையனுடைய தாயார், தந்தையோடு எடுபடி போல ஒருவர் என்று நாலு பேர்மட்டுமே வந்தார்கள். 

வந்தவர்களைக் கூட நின்று வரவேற்றுவிட்டு, மணிகண்டன் அவர்களை முன்னறையில் உட்காரும்படி உபசாரம் செய்து கொண்டிருக்க, செந்திரு வேகமாக மகளிடம் வந்தாள். 

“இதோ, இங்கிருந்து பார்த்தாலே மாப்பிள்ளை தெரிகிறார் பார். நன்றாகப் பார்த்துச் சொல்லு. தேடிப் பார்த்தாலும், குறை காண முடியாதபடி, ஆள் பிரமாதமாகத்தானே, இருக்கிறார்?” என்று கேட்டாள். தனக்குள்ளே ஓர் ஆராய்ச்சிக் கண்ணுடனேயே எட்டிப் பார்த்த திலோத்தமாவின் முகம் வியந்து, பூவாய் மலர்ந்தது! 

கண்கள் பளிச்சிட, முகம் மகிழ்ச்சியில் விகசிக்கத் தாயிடம் திரும்பினாள். “அம்மா, மாப்பிள்ளையை எனக்குப் பிடித்திருக்கிறது! ரொம்ப ரொம்ப!” என்றாள் குதூகலத்துடன். 

அத்தியாயம்-2

செந்திருவுக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. 

அவளுடையது திட்டமிட்ட குடும்பம். ஒரு பெண். ஒரு பிள்ளை! மகள்தான் பெரியவள். அவளை விட, ஐந்து ஆண்டுகள் சின்னவனான நரேந்திரன் கல்லூரிப் படிப்பை முடிக்க, இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். வெளியூரில், கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறவன். 

மூன்று ஆண்டுகளுக்கு முன் திலோத்தமா படித்து முடித்ததுமே, அழகு மகளுக்குத் திருமணம் செய்து பார்த்துவிடும் ஆசை அந்தப் பெற்றவளுக்கு. 

ஆனால், மணிகண்டனுக்கோ மகள் சிறிது காலம் வெளியே வேலை பார்த்து, உலகம் அறிய வேண்டும் என்ற ஆசை! பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டுக் கணவன் வீட்டில் சமாளிக்க முடியாமல் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் உறவுக்காரப் பெண்கள் இருவரை, அவருக்குத் தெரியும். நெருங்கிய உறவுக்காரர்கள் என்பதால், அந்தப் 

பெண்களுடைய பெற்றோரோடு சேர்ந்து, அவருக்கும் மிகுந்த வருத்தம்தான். 

எந்த விதமான சூழலையும் துணிந்து சமாளிக்கும் திடம் வேண்டும் என்பதற்காகவே, கடைசி விடுமுறையைப் பாட்டி வீட்டில் சீராடிக் கழித்துவிட்டு வந்த மகளை வேலைக்கும் அனுப்பி வைத்தார். 

ஆனால், அவர் எண்ணியது போல, நிறுவனத்திலும் நல்ல பேர் எடுத்து திலோத்தமா ஓர் ஆண்டு வேலை செய்து முடித்தபின் திருமணப் பேச்சை எடுத்தால், இல்லாத தடைகள் சொன்னாள். 

நல்ல நல்ல இடங்கள் என்று அவர் கருதிய வரன்களை எல்லாம், உப்புச் சப்பற்ற காரணங்களைச் சொல்லி, திலோ மறுத்தபோது, அவர் சற்றுப் பயந்தே விட்டார் எனலாம். 

தன் ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவரின் நிலை கண்டு, மகள் திருமணத்தையே வெறுத்துவிட்டாளோ, என்ற அச்சம்! 

குழந்தைகள் பிறந்து, அவர்கள் நிலைமை கூட, மெல்லச் சீரடைவதாகத்தானே தெரிகிறது என்று எடுத்துச் சொன்னால், “ஒருவரை நெருப்பு சுட்டுவிட்டது, என்று மற்றவர் சமையலே பண்ணாமலா அப்பா, இருக்கிறார்கள்? ஜீவாக்கா, புண்ணியாவைப் பார்த்து, நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏன், அவர்களே சற்றுத் திடமாக, அவர்களுக்கும் முதுகெலும்பு உண்டு என்று காட்டியிருந்தால், இந்த அளவுக்குப் போயிருக்காது என்பதுதான் என் கருத்து. ஆனால் அதற்கும், என் மறுப்புக்கும் தொடர்பே இல்லை, அப்பா! என்னவோ, இது. இந்த ஆளைப் எனக்குப் பிடிக்கவில்லை! அவ்வளவே!” என்றாள் மகள். 

ஒரு வேளை, பல பெண்களைப் போலக் காதலோ என்று எண்ணி, திலோவுடைய நெருங்கிய தோழிகளிடம், லேசுபாசாக விசாரித்துப் பார்த்ததில், எந்த விவரமும் கிடைக்கவில்லை! 

“திலோ சரியான சாமியார் ஆயிற்றே, அங்கிள்! எப்படித்தான், இந்த அளவுக்கு உத்தம புத்திரியாக ஒரு பெண்ணை வளர்த்தீர்களோ என்று, எங்களுக்கெல்லாம் ஆ..ச்சரியம், அங்கிள்!” என்றாள் ஒரு தோழி! 

இங்கே,பெற்றோருக்கு வேறே மாதிரி உதைத்தது! 

“சாமியார்”, “உத்தமபுத்திரி” என்ற வார்த்தைகள், என்னென்னவோ எண்ண வைத்தன. 

மகளுக்குத் திருமணத்தில் நாட்டம் இல்லை., பெற்றோர் மனதை நோகடிக்காமல், முடிந்தவரை தகராறு இல்லாமல் அந்தப் பேச்சைத் தவிர்க்கிறாள் என்ற ஐயம், இருவருக்கும் உறுதிப்பட்டுக்கொண்டே வந்தது. 

என்ன சொல்லி மறுப்பாளோ என்று அந்த அச்சத்திலேயே இருப்பவரிடம், முதலில் மகளின் சம்மதத்தைக் கூறச் செந்திரு ஓடினாள்.

முக மலர்ச்சியுடன் மனைவி சொல்லியதைக் கேட்டதும், மணிகண்டனுக்குமே ஒரே ஆனந்தம்! மகிழ்ச்சியில், ஒரு சுற்று, பெருத்தே போனார் எனலாம்! 

மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் மகளை அழைத்து, ஓர் இருக்கையைக் காட்டி அமரச் சொன்னார். 

திலோ சற்றுத் தயங்கினாள். 

அந்தப் பெரியவர்கள் மனம் எப்படியோ? ஏதாவது காரணத்தால், இந்தத் திருமணம் நின்றுவிடக் கூடாதே! 

நல்லவேளையாக, ரஞ்சனுடைய தாயாரே அவளை அழைத்து உட்காரச் சொல்லவும், திலோத்தமாவின் பிரச்சினை எளிதாகத் தீர்ந்தது! 

நம் வீட்டு நாற்காலியில் உட்கார இவ்வளவு யோசிக்கிறோமே என்று, உள்ளூரத் தன்னை நினைத்தே, அவளுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது! 

இந்தக் கல்யாணத்துக்கு இவ்வளவு ஆசைப்படுகிறாளா? 

விரும்பி வந்து மணம் பேசுவதாகத் தந்தை சொன்னாரே! அப்படியானால், அவனுக்கும் இந்த ஆசை இருக்கும் என்றுதானே பொருள்? 

ஆவலாகப் பார்த்தால், மணிகண்டன் ஏதோ சொல்ல, ரஞ்சன் அவர் பேச்சில் கவனமாக இருந்தான். 

ஒருவர் பேசுவதைக் கவனிப்பது என்றால், அடுத்தொருவரைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதுதான். ஆனாலும், அவனது “கண்ணோடு கண் நோக்க” முடியாதது, திலோத்தமைக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது! 

ஆனால், அவளுடைய தகப்பனாரின் பேச்சைத்தானே, கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்? அது, வருங்கால மாமனாரிடம் நல்ல பேர் எடுக்கும் முயற்சியாகவே கூட இருக்கலாம்! 

இவ்வளவு யோசித்த பிறகே, தந்தை என்ன சொல்கிறார் என்பதை, அவளும் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினாள். 

எல்லாம் அவளது சின்ன வயதுப் புராணம்தான்! 

மூன்று வயதில் ஏதோ வம்பு செய்தாள் என்று, அவளை 

மிரட்டுவதற்காக, இப்படிச் செய்தால் சாமி கண்ணைக் குத்துவார் என்று சொல்லப் போக, ஒரு கணம் யோசித்துவிட்டு, 

“அவனைத்தான் கண்ணாடி போட்டு அடைத்து வைத்திருக்குதே! அப்புறம் எப்படி, அவனால் கையை நீட்டிக் குத்த முடியும்?” என்று சுவாமி படத்தைக் காட்டிக் கேட்டாளாம்! 

இதற்கு என்ன பதில் சொல்வது? அவளுக்குப் புரியும்படியாக எப்படி விளக்குவது? 

கடைசியாகப் பெற்றவர்கள்தான், அசடு வழியப் பேச்சை மாற்றினார்களாம். 

பொதுவாக, மூத்தது மோழையாக இருக்க, இரண்டாவதுதான் அதிக சூட்டிகையாக இருக்கும் என்பார்கள். ஆனால், அப்போது ஒன்றாக இருந்த பெரிய குடும்பத்தில், நாலைந்து சிறுவர் சிறுமியர்க்கு இடையே பிறந்து, பல ஆண்டுகள் சேர்ந்து வளர்ந்ததாலோ என்னவோ, திலோத்தமையும் படு சுட்டியாக இருந்தாள் என்று, பெற்றவர்கள் இருவருக்கும் ரொம்பப் பெருமை உண்டு. 

எனவே இது போல, அவ்வப்போது, அப்பா, அம்மா பெருமையாக அவிழ்த்து விடுவதுதான். 

ஆனால், இப்போது, இவர்கள் முன்னலையில், அவளையும் வைத்துக்கொண்டே மணிகண்டன் சொல்லவும், மகளுக்கு ஒரு மாதிரிக் கூச்சமாகிப் போயிற்று! 

கன்னக் கதுப்புகளில் இளம் சிவப்புடன், “என்னப்பா, இதையெல்லாம் போய்ச் சொல்லிக்கொண்டு .. ” என்று மென்குரலில் கூறியவாறு ஓரக் கண்ணால், ரஞ்சனைப் பார்த்தாள். 

ஆனால், அவளது பேச்சு, அவன் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை. அவன் தன் போக்கில் கைவிரல் நகங்களைப் பார்த்தவாறு, “ஆக, அப்போதே உங்கள் பெண் ரொம்பக் கெட்டிக்காரிதான் என்று சொல்லுங்கள்!” என்று சிலாகித்துப் பேசினான். 

எல்லோரும் அந்த வார்த்தைகளை ஏற்றுச் சிரிக்கையில், திலோத்தமாவுக்கு மட்டும், அவனது குரலில் ஏதோ உறுத்தியது! என்னவோ, அவன் மனதாரப் பாராட்டாதது போல, அதை விடவும், எதற்காகவோ மட்டம் தட்டுவது போலவும் எண்ணம் போன போக்கில், சட்டென்று அதிர்ந்தாள் திலோ. 

இப்போது, அவன் எதற்காக அவளை மட்டம் தட்ட வேண்டும்? அதுவும், அவளை மணம்புரிந்து, எதிர்காலம் முழுமையையும் அவளோடு பகிர்ந்துகொள்ளவென்று, அவனாகவே விரும்பி வந்துவிட்டு? 

பைத்தியக்காரத்தனமான யோசனை! புத்திசாலித்தனமும் அளவோடுதான் இருக்க வேண்டும்போல! இல்லாவிட்டால், கட்டறுந்த கன்று போல, இப்படிக் கண்டபடி யோசனை ஓடும் என்று, இப்போதல்லவா, தெரிகிறது! 

தன்னைத்தானே கடிந்துகொண்டு, திலோத்தமா அமைதியடைந்தாள். இரவெல்லாம், அவளுக்கு அவனது நினைவாகவே இருந்தது! அவனது முகமும் கண்களும் புன்னகையும், இவ்வளவு தெளிவாகவா நினைவிருக்கும்? 

ஒரு வேளை, காதல் என்றால், இப்படித்தானோ? 

சீக்கிரமே திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று பெரியவர்கள் பேசியது நினைவு வந்தது! 

அப்படியானால், சீக்கிரமே அவள், இங்கிருந்து ரஞ்சன் வீட்டுக்குப் போய் விடுவாள்! 

பிறந்து வளர்ந்த வீட்டை விட்டுப் போவது, அதுவும் பெற்றோரைப் பிரிந்து செல்ல இருப்பது, எதுவும் வருத்தமே தரவில்லையே! 

சரியாகச் சொல்லப் போனால், பரபரவென்று உற்சாகமாகத்தான் இருப்பதை உணர்ந்தபோது, கொஞ்சம் நன்றிகெட்டதனமாகத் தோன்றி, சற்றுக் குன்றலாகக் கூட இருந்தது! 

ஆனால் உடனேயே, கல்யாணம், கல்யாணம் என்று விரட்டியது அவர்களும்தானே? திருமணமானால் பிரிந்து போவாள் என்று தெரியாதா? அது தெரிந்தே திருமணத்துக்கு அவசரப் படுத்தினால், அவர்களுக்கும் அதுவே ஏற்புடையது என்றுதானே அர்த்தம்? என்னென்னவோ எண்ணி, தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டபோதும், திலோ மனதில் குற்ற உணர்வு மறைய மறுத்தது! 

வர இருக்கும் திருமணம் பற்றிய யோசனையும், பேச்சுமாக, அம்மா, அப்பாவுக்கும்கூடத் தூக்கம் வந்திராதுதான். அதைப் பற்றித்தான் பன்னிப் பன்னிப் பேசிக் கொண்டிருப்பார்கள். 

நரேனைக் கல்லூரி விடுதிக்கு அனுப்பிவிட்டு, அன்னையும், தந்தையும், தானும் கூடப் பட்டபாடு நினைவு வந்தது அவளுக்கு. மகளைப் பிரிவது பற்றி, இருவருக்கும் இப்போது யோசனை வந்திருக்குமோ? ஒருவர் கண்ணை ஒருவர் துடைத்துக்கொண்டு .. 

அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல், திலோத்தமா எழுந்துவிட்டாள். 

ஒரு வேளை பெற்றோர் விழித்திருந்து, சற்று வருத்தமாகவும் குரல் கேட்டால், சிறிது நேரம், அவர்களோடு உட்கார்ந்து பேசி, அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு வரவேண்டும் என்று தோன்ற, பெற்றோரின் அறையை நோக்கிச் சென்றாள், மகள். 

அவள் எண்ணியது போலப் பேச்சுக்குரல் கேட்கத்தான் செய்தது! ஆனால் வருத்தம் தெரியவில்லை! தாயின் குரலில் மிகுந்த உற்சாகம்தான்! 

“மண்டபத்தில் பூவால் பெயர் எழுதி முடிக்குமுன் பூக்காரர் திணறப் போகிறார், பாருங்கள்! திலோத்தமா, சித்தரஞ்சன் என்று இருவர் பேர்களுமே, போர்டு நிரம்பிவிடும். இடையில் வேறே பூவேலை செய்ய இடமே இருக்காது! என்னவோ, இதயங்கள் மாதிரி, இரு கைகள் இணைகிற மாதிரி எல்லாம், பூக்களாலேயே செய்வேன் அது, இது என்று, புண்ணியா திருமணத்தின்போது, பெரிதாக அளந்தாரே! இங்கே முழி பிதுங்கிவிடும். அதைவிட, மஞ்சள் நிறத்து செண்டுப்பூ பின்னணியில், இவர்கள் இருவர் பெயர்களையும், வாடாமல்லிப் பூக்களை நெருக்கமாக ஒட்டி எழுத்துக்களை அமைத்தால், பிரமாதமாக இருக்கும்!” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்! 

தந்தையும் கூடச் சேர்ந்து, “நல்ல ஐடியா, திரு! பார்க்க ரொம்பவும் பளிச்சென்று இருக்கும்! அத்தோடு, அலங்கார வேலை எல்லாம் இல்லாமல், திலோத்தமா, சித்தரஞ்சன் என்று இரண்டு பெயர்கள்தானே என்று, கொடுக்கிற காசில் கொஞ்சம் குறைக்கவும் செய்யலாம்!” என்றார் சந்தோஷமாக. 

ஆனந்தமாகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். செய்யட்டும். இதில் குறுக்கிட வேண்டாம் என்று தன் அறையை நோக்கித் திரும்பினாள் திலோத்தமா. 

திலோத்தமா, சித்தரஞ்சன் என்று சொல்லிப் பார்த்தபடியே நடந்தாள். 

சித்தரஞ்சன் என்றால் நன்றாகத்தான் இருக்கிறது! ஆனால், அவளுக்கு மட்டும், அவன் என்றும் ரஞ்சன்தான் என்று எண்ணியவள், “ரஞ்சன் ரஞ்சன்” என்று உள்ளூர உருப்போட்டபடியே, அறையை அடைந்தாள்! 

ஆனாலும், அவளைப் பார்த்து, தனியே ஒரு தரம் முறுவலித்திருக்கலாம்! பெரியவர்கள் யாரும், அதைத் தப்பாகவே நினைத்திருக்க மாட்டார்கள்! அதுவும், இருவருமே பிடித்திருப்பதாகக் கூறிய பிறகும் எதற்கு அந்த அறியாப் பிள்ளை வேஷம்? 

தன்னைப் பார்த்து, சங்கேதமான, சிறு குறிப்பாக ஒரு பார்வைகூட இல்லாமல் போனானே என்று திலோத்தமைக்கு இருந்த குறை, மறு நாள் அவன் நேரிலேயே வந்து, உயரமும் கம்பீரமுமாக நின்றபோது, மாயமாய் மறைந்தது! 

கண் குளிரப் பார்த்துக்கொண்டு அவள் நின்றபோது, “வாருங்கள் வாருங்கள்!” என்று பரபரத்தாள் செந்திரு. 

வருங்கால மருமகன் ஆயிற்றே! இரண்டு கண்களில் ஒன்றான மகளோடு காலமெல்லாம் மனமொத்து வாழ வேண்டியவன். அந்தக் கண் நலமாக இருக்க வேண்டுமானால், அந்தக் கண்ணோடு நல்லுறவு நிலைக்க வேண்டுமானால், இவன் மனதில் சிறு உறுத்தல் கூட இல்லாது காப்பது அவசியம்! 

“உஉட்காருங்கள்! திலோ, அவருக்குக் குஷனை வசதியாக எடுத்துவை.” என்று உபசரித்துவிட்டு, “என்ன சாப்பிடுகிறீர்கள்? காஃபி மாதிரி சூடாகவா அல்லது குளிர்ச்சியாகப் பழச்சாறு கொண்டு வரவா?” என்று கேட்டாள். 

வெண்ணிறப் பல்வரிசை தெரிய முறுவலித்து, “எதுவுமே, இப்போது தேவை இல்லை. ஆனால், எதையாவது கொடுத்தால்தான் உங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்றால், தயாராக இருப்பது எதுவோ, அதைக் கொடுங்கள். ஆனால், அதற்கு முன் ஒரு விஷயம்! நான் வந்த விஷயம் பற்றி, அம்மா உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள்.” என்று செல்லை எடுத்து பட்டன்களைத் தட்டியவாறு கூறினான். 

அழகான புன்னகைதான். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதது! அவளைப் பொறுத்தவரையில், தலை சுற்ற வைப்பதும் கூட! ஆனால், அதை, அவள் பக்கமும் சிந்தலாம் அல்லவா? 

மாமியாரைக் கைக்குள் போடுவதிலேயே முனைப்பாக இருக்கிறானே! மாப்பிள்ளை உபசாரம் ஒரு போதும் குறைந்துவிடக் கூடாது என்றா? போகட்டும்.எப்படிப்பட்ட அருமையான மாமியார் கிடைத்திருக்கிறாள் என்று, போகப் போகத்தானே, இவனுக்குப் புரியும்? 

எப்படிப்பட்ட மாமியார், மாமனார், மைத்துனன்! கூடவே எப்படிப்பட்ட மனைவி! 

எல்லாமே சீக்கிரமே தெரிந்துகொள்வான்! 

இப்போதுதான் என்ன? அவளைப் பார்க்கத்தானே, ஓடி வந்திருக்கிறான்? பிறகு, பாராதது போல என்ன நடிப்பு? 

பெருமிதமாகப் பார்த்தபடி அவள் நிற்க, செந்திரு, சித்தரஞ்சனின் செல்லை வாங்கிப் பேசினாள். 

“நான் செந்திரு பேசுகிறேன் அஅண்ணி!” 

மாமியாரின் முக பாவனையில் சித்தரஞ்சன் கவனமாக இருப்பதைக் கண்டு, திலோத்தமாவும், தாயைப் பார்த்தாள். 

ஸ்பீக்கரை ஆன் செய்து கொடுத்தான் போலும். எதிர்ப்புறம் பேசியதும் தெளிவாகவே கேட்டது. 

“பாருங்கள் அண்ணி, என் பையனைப் பற்றி நன்றாக விசாரித்திருப்பீர்கள். எல்லோரும் சொல்வது போல, அவன் மிக நல்ல பையன்தான். அவனுக்கு, திலோத்தமாவை வெளியே கூட்டிப் போக வேண்டுமாம். அவனை நம்பி அனுப்புவீர்களா என்று திரைந்துகொண்டு வந்தான். அதுதான் நானே பேசுகிறேன் என்றேன். தைரியமாக 

அனுப்புங்கள், அண்ணி. கூட்டிப் போனது போலவே, பத்திரமாகத் திருப்பிக் கொணர்ந்து விட்டுவிடுவான். சரிதானா? வைத்துவிடட்டுமா?” என்று முடித்தாள், சித்தரஞ்னைப் பெற்றவள். 

செந்திருவின் முகத்தில் சற்றுத் திகைப்பு தெரிந்தது! 

திருமணத்துக்கு முன், மாப்பிள்ளைப் பையனோடு அனுப்புவதா? ஊர், உறவில் பார்த்தால், தப்பாக நினைப்பார்களோ? படித்து வேலை பார்க்கிற பெண். வேண்டாம் என்று மறுத்தால், கட்டுப்பெட்டித்தனமாக இருக்குமோ? அதைவிடவும், சும்மா பேருக்கு வேஷம் போடுவதாகத் தோன்றினால்? 

இந்த நேரத்தில் கணவர் இருந்திருந்தால், முடிவு சொல்ல வேண்டிய பொறுப்பு அவளுக்கு இல்லாமல் போயிருக்கும்! 

குழப்பத்துடன் செல்லை உரியவனிடம் நீட்டினாள், செந்திரு.

பெரியவளின் குழப்பத்தைச் சரியாக ஊகித்து, “மாமா ஒத்துக் கொள்வாரா என்று இருக்கிறதா, அத்தை? வேண்டுமானால், அவருக்கே ஃபோன் பண்ணிக் கேட்டு விடுங்களேன்!” என்று மறுபடியும், செல்லை அவளிடமே நீட்டினான் சித்தரஞ்சன். 

அவனது ஊகம் சரிதான். தாயின் குழப்பம் பற்றி மட்டுமல்ல. இந்த “அத்தை”, “மாமா” வுக்குப் பிறகு, அவளைப் பெற்றவள் என்ன சொல்லக் கூடும் என்பதிலும்தான். 

“இல்லை, இல்லை! நீங்கள் திலோவைக் கூட்டிப் போங்கள். கொ கொஞ்சம் சீக்கிரமாகத் திரும்பி வந்துவிடுங்கள். வந்து, இங்கே வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.”என்று அவர்கள் திரும்பி வரும் நேரத்தைத் துரிதப்படுத்த முயன்றாள் செந்திரு. 

“உணவு பற்றி நீங்கள் சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம், அத்தை. எனக்கு ஒரு தொழில் ரீதியான “டின்னர்”, ஏழு மணிக்கு இருக்கிறது. அதற்குள் திலோத்தமாவை இங்கு கூட்டிவந்து விட்டுவிட்டு, வீட்டுக்குப் போய், நான் தயாராகிப் போக வேண்டும்.அதனால், சீக்கிரமே வந்துவிடுவோம்., கவலைப்படாதீர்கள்.” என்று கூறி, வருங்கால மாமியாரின் மனதை அமைதிப்படுத்தினான், மருமகன். 

திலோத்தமா தன்னையே குனிந்து பார்வையிடுகையில், “இந்த உடையே நன்றாகத்தான் இருக்கிறது.” என்றான் சித்தரஞ்சன்.

அதன் பிறகு சற்றும் தயங்காமல், சந்தோஷமாகத் தாயைப் பார்த்துச் சிரித்துவிட்டுக் கைப்பையை எடுத்துக்கொண்டு, திலோத்தமாவும் கிளம்பிவிட்டாள். 

அதற்குப் பிறகே நினைவு வர, “அவர் ஒன்றும் சாப்பிடவில்லையே .. என்று, செந்திரு காற்றைப் பார்த்துதான் சொல்லி முடித்தாள். 

திலோத்தமா எதிர்பார்த்தது போல, சித்தரஞ்சன் அவளை அழைத்துச் சென்ற இடம் நகைக்கடைதான். 

புராதனப் பெருமையை நீர்க்க விடாமல், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் காப்பாற்றிக் கொண்டிருக்கும், தரமான நகைகளுக்குப் பெயர் பெற்ற கடை. தரமான வைரங்கள், அவர்களது தனிப் பெருமை! விலையும் அதற்குச் சரியாக, அதிகமாகவே இருக்கும் என்று, திலோத்தமா கேள்விப் பட்டிருக்கிறாள். 

அதனாலேயே, செந்திருவும், அவளும் அந்தக் கடையைத் தவிர்த்திருக்கிறார்கள். 

கட்டுபடியாகாது என்று. 

இப்போதும், அங்கே செல்ல அவளுக்குத் தயக்கமாகவே இருக்க, இறங்க முயற்சி செய்யாமல், அப்படியே அமர்ந்திருந்தாள்! 

கேள்வியாக நோக்கியவனிடம் அவள் காரணத்தைச் சொல்ல, “பரவாயில்லை, வா. இங்கே உள்ள தரத்துக்குச் சற்று அதிகம் கொடுப்பதில் தப்பு இல்லை என்று அம்மா சொல்லுவார்கள். என்னைக் கேட்டால், பிடித்துப் போனால், தரம் இல்லாதது என்று தெரிந்தாலும், என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதுதான்.” என்றான், சித்தரஞ்சன். 

வியப்புடன் நோக்கி, “அதெப்படி, ரஞ்சன்? என்னதான் பிடித்திருந்தாலும், தரம் குறைவானது என்று தெரிந்த பிறகும், அதிக விலை கொடுப்பது, அசட்டுத்தனம் ஆகாதா?” என்று கேட்டாள் திலோத்தமா. 

“என்ன செய்வது?” என்று தோளைக் குலுக்கினான் சித்தரஞ்சன். தொடர்ந்து, “ஒரு பொருளின் முக்கியத்துவம், அந்தப் பொருளின் தரத்தில் மட்டும் இருப்பதில்லையே! ஒன்று எவ்வளவு உயர்ந்த ரகமாக இருந்தாலும், பிடிக்காத பொருளாக இருந்தால், அதை நாம் வாங்குவது இல்லை! அதே பொருள் பிடித்துப் போய்விட்டால், சரி, ஏதோ தொண்ணூறு சதவீதம் இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கத்தானே, செய்வோம்? எத்தனை தினுசு உயர்வகை ஐஸ்கிரீம் தினுசுகள் வந்துவிட்டபோதும், இன்னமும் வெறும் குச்சி ஐசை விரும்பி வாங்கி ரசித்து உண்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? ” என்று கேட்டான் சித்தரஞ்சன். 

யோசித்துப் பார்த்தாள் அவள். 

அவள் யோசிக்கும்போதே, “நிறமும், டிசைனும் பிடித்துவிட்டால், கொஞ்சம் மட்டமான துணியையும் வாங்குவது இல்லையா?” என்று மீண்டும் வினவினான் அவன். 

என்னவோ பெரிய விஷயத்தைக் காரிய காரணங்களோடு வாதாடி நிலை நிறுத்துவது போல! கனம் கோர்ட்டார் அவர்களே என்று தொடங்கிச் சொல்லவில்லை! அவ்வளவுதான்! அந்த அளவுக்குத் தீவிரமான வாதம்! 

ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்தவளுக்கு மனதில் வேறு ஓடியது. சித்தரஞ்சனது கட்டுமானத் தொழில். இதில், சற்றுத் தரம் தாழ்ந்த பொருள் எதையோ அவசரத் தேவைக்கு வாங்கிவிட்டு, அதை நியாயப்படுத்துவதற்காகச் சப்பைக்கட்டுக் கட்டுகிறானோ? 

தந்தையிடம் வாங்கிக் கட்டிவிட்டு, அதே விவாதங்களை, இப்போது, அவளிடமும் தொடர்கிறான் போலும்! 

ஆனால், கட்டிடத் தொழிலில், தரக்குறைவு மிகவும் ஆபத்தில் கொண்டுபோய் விடக் கூடும் என்பார்களே! தொழிலில் அவனுக்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடக் கூடாதே என்றிருந்தது, அவளுக்கு. இதை, மெல்லச் சொல்ல வேண்டும்! 

ஆனால், தந்தையிடம் ரஞ்சன் திட்டு வாங்கியிருப்பானோ என்ற எண்ணமே வேதனையைத் தர, தலையசைத்து, “ஒரு வேளை, நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்! விடுங்கள். இப்போது விலையைப் பற்றிப் பொருட்படுத்தாமல், இங்கேயே வாங்கலாம் என்பது உங்கள் எண்ணம். சரி வாருங்கள், போவோம்.” என்று, காரை விட்டு இறங்கினாள், திலோத்தமா. 

“அது மட்டுமல்ல …” என்று ஏதோ சொல்லத் தொடங்கிய சித்தரஞ்சன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் பேச்சை நிறுத்திவிட்டுத் தானும் இறங்கி, கார்க் கதவுகளை “ரிமோட்’ மூலம் பூட்ட, இருவரும் சேர்ந்து, கடையை நோக்கிச் சென்றனர். 

அவன் எதைச் சொல்லத் தொடங்கிவிட்டு நிறுத்தினான்? 

அது என்னவென்று அவனிடம் கேட்கும் ஆவலைத் திலோ கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். என்னவோ, அவன் சொல்ல வந்தது, அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது அல்ல என்று, அவளுக்கு வெகு நிச்சயமாகத் தோன்றியது. 

யோசித்து, அவனே நிறுத்திவிட்ட பிறகு, அதைப் போய்க் குடைவானேன்? அதைவிட … 

அதற்குள் உரிமையாளரே முன்வந்து அவர்களை வரவேற்கவும், அது பற்றி அவளால், மேலே யோசிக்க முடியாமல் போயிற்று. 

அந்த உற்சாக வரவேற்பாலும், அதைத் தொடர்ந்து நடந்த பல நிகழ்ச்சிகளாலும்! 

– தொடரும்…

– காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2012, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *