காதலினால் அல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,239 
 

ராம்பகதூர் வேலைக்குச் சேர்ந்த முதல் தினமே அவனது தைரியத்திற்குச் சவால் வந்தது.

ராம்பகதூருக்குக் கூர்க்கா உத்தியோகம். ஐந்தரை மணிக்கு உடம்பில் ஒரு விரைப்பு பரவ வாசற்கதைவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.

வரிசையாய் சைக்கிள்கள் வந்தன. அவற்றை நிறுத்திச் சோதனையைத் துவங்கினான். சோற்றுப் பெட்டிகள் திறக்கப்பட்டன. கையை வீசி மார்பைத் தடவினான். இடுப்பைத் துழாவினான். பின்பக்கத்தைத் தட்டிப் பார்த்தான். ‘ ஜாவ் ! ’ என்றான்.

நாலைந்து பேர் போயாயிற்று. மாணிக்கத்தின் முறை வந்தது. மாணிக்கம் மீன ராசி. எப்போதும் ‘ தண்ணீர் ’ லேயே மிதக்கும் ஜீவன். வேலை முடித்து உடுப்பு மாற்றும்போதுதான் ஒரு குவார்ட்டர் போட்டிருந்தான். காலை அகட்டி ‘ கெத்தாக ’ நடந்து வந்தான் மாணிக்கம். வேட்டி தொடை வரை சுருண்டு ஏறியிருந்தது.

பகதூர், மார்பில் கை வைத்தபோது ‘ ஏய் ’ என்றான் மிரட்டலாக. லட்சியமே பண்ணாமல் பகதூர் சோதனையைத் தொடர்ந்தான். பிடித்துண்டு, சில்லரைக்காக, பஸ் டிக்கெட் என்று வழக்கமான அயிட்டங்கள் தட்டுப்பட்டன. கை கீழே இறங்கி இடுப்பைத் துழாவிற்று.

அண்டர்வேர் பையில் எதோ நெருடிற்று. பகதூர் கையை விருட்டென்று வெளியே எடுத்தான். முழ நீளத்திற்குச் செப்புக் கம்பி. எந்திரங்களுக்கு ‘ எர்த் ’ போடப் பயன்படுத்தப்படும் கம்பி. காயலான் கடையில் போட்டான் ஒரு பாட்டில் சாராயம் வாங்கலாம்.

கம்பியைத் தொட்ட மாத்திரத்தில் மாணிக்கம் உறுமினான். அது பகதூர் கையில் சிக்கி, அவன் தனிமைப்படுத்தப்பட்டதும் அவமானத்தில் பொங்கினான். எங்கிருந்து எடுத்தானோ தெரியாது. விநாடி நேரத்தில் விரித்துப் பிடித்த கத்தியோடு பகதூர் மீது பாய்ந்தான்.

அரை விநாடி அயர்ந்து போனான் பகதூர். என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், இடது கையை நீட்டி கத்தியைப் பிடித்தான். வலக்கையால் மாணிக்கத்தின் மணிக்கட்டைப் பிடிக்க முயன்றான். பிடிபடாமல் தப்ப மாணிக்கம் உதற, இடது உள்ளங்கை கிழிப்பட்டு பகதூரின் ரத்தம் தெறித்தது.

கேட் அருகே கூட்டம் திரண்டது. வீட்டிற்குக் கிளம்பியவர்கள் கூட அரை வட்டமடித்து சைக்கிளைத் திருப்பினார்கள். நடவில் புகுந்து விலக்கி விட முயன்றவர்கள் மாணிக்கத்தைப் பிடித்து ஒரு புறம் இழுத்தார்கள். பகதூர் மறுபுறம் இழுபட்டான். கைக்காயம் பெரிதாயிற்று. ரத்தம் முழங்கை வழி கோடாய் ஓடி தொடையருகே பேண்ட்டில் சிந்திற்று.

கூட்டம் கண்ட மாணிக்கம் கூசாமல் பொய் சொன்னான். அண்டர்வேர் பையில் கைவிட்ட பகதூர் அவனது அந்தரங்க உறுப்பைப் பிடித்துத் தடவியதாக.

ரத்தம் ஒழுகும் கை. சிநேகிதர் இல்லாத முதல் நாள். பாஷை தெரியாத பரிதாபம். என்றாலும் பகதூர், மாணிக்கம் சொல்வது என்னவென்று புரிந்துகொண்டு வெகுண்டான். மாணிக்கத்தின் தாயை ஹிந்தியில் புணர்ந்தான்.

ஒரு சிறிய கூட்டம் பகதூரை பேக்டரி கட்டடத்துள் செலுத்தியது. ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸைத் தேடி ஓடினான் ஒருவன். அது பத்திரமாக அலமாரியில் பூட்டப்பட்டிருந்தது.

வேலை முடிந்து பேக்டரியைப் பெருக்க வந்த ஜெயா கூட்டம் கண்டு திரும்பினாள். ரத்தம் கண்டு பதறினாள். ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸை உடைப்பதா திறப்பதா என்ற பட்டிமன்றத்தில் அக்கரையற்று, புடவைத் தலைப்பை ‘ விருட் ’ டென்று கிழித்தாள். வாளித் தண்ணீரில் நனைத்துக் கையில் சுற்றினாள். அது அவனது தைரியத்திற்கு அவள் போட்ட பூமாலை.

சென்னை நகரச் சேரியில் பிறந்து சேட்டு பங்களாவில் வளர்ந்த ஏழைப் பெண் ஜெயா. சேட்டுக் குழந்தையைக் கவனித்துக் கொள்கிற செவிலிப் பெண்ணாக எட்டு வயதில் பங்களாவில் நுழைந்தாள். வளர்கிற வயதில் வயிறு நிறையச் சாப்பாடு, வண்ண டெலிவிஷன். அவ்வப்போது கார் சவாரி, ஆண்டுக்கு இரண்டு துணி. பசியறியாமல் பொத பொத வென்று வளர்ந்த உடம்பு. பதிமூன்று வயதில் பருவம். பதினாறில் கல்யாணம். பதினெட்டில் கைகுழந்தை.

கல்யாணம் அவளைச் சேரிக்குத் திருப்பி அனுப்பியது. கணவன் காஷுவல் லேபர். வேலைக்குப் போனால் சம்பளம். பணம் வந்தால் விருந்து. கடன் கிடைத்தால் கஞ்சி. இல்லையென்றால் பட்டினி.

பசியறியாமல் வளர்ந்த பெண்ணை, அடுத்த வேளைச் சாப்பாடு நிச்சயமில்லை என்ற நிலை பயமுறுத்தியது. பசி வந்தால் அடிதடி. பயம் எடுத்தால் சச்சரவு. வேலையும் இல்லாமல், வீட்டிற்குத் திரும்ப மனமும் இல்லாதிருந்த கணவனை அரசியல் அழைத்தது. கையில் இருந்த காசைக் கேட்டது. கஞ்சிக்குக் குருணை வாங்க அவள் காசு தேடி அலைந்து கொண்டிருந்தபோது, அவன் கட்சித் தலைவருக்குச் சால்வை வாங்கிக் கொண்டிருந்தான்.

விஷயம் தெரிந்ததும் ஜெயா வெகுண்டெழுந்தாள். விடுவிடுவென்று அவன் கட்சிக் கொடி பறந்து கொண்டிருந்த படிப்பகத்திற்கு போனாள். குத்துக் காலிட்டு அரசியல் பத்திரிகைப் படித்துக் கொண்டிருந்த அவனை துண்டைப் பற்றி எழுப்பினாள்.

‘ ஒம் மனசில இன்னாதான்யா நினைச்சுகிட்டுக்கிறே ? ” அவள் கேள்வி அவன் முகத்தில் அறைந்தது. நண்பர்கள் மத்தியில் மானம் போவது தாளாமல், அவன்,

“ இன்னாம்மே ” என்றான் ரோஷமாக! வைத்த கண் மாறாமல் அவனையே பார்த்தாள் ஜெயா. ‘ தமில் இன மானத்தைக் காக்கப் புறப்பட்டிருக்கிறானாம். இவன் என்னைக் காப்பாற்றுவானா ? என் பிள்ளையைக் காப்பாற்றுவானா ? ”

நெஞ்சில் திரண்ட கசப்பைக் காறி அவன் கொடிக் கம்பத்தின் மீது உமிழ்ந்தாள். வெடுக்கென்று அவன் துண்டை உதறி விட்டு, குடிசைக்குத் திரும்பவே இல்லை.

பகதூர் கையில் எட்டுத் தையல். மேலே தங்க வண்ண மருந்துப் பஞ்சு. அதற்கும் மேலே பஞ்சைப் பரப்பி கட்டுக் கட்டினார்கள். பத்து நாளைக்குத் தண்ணிபடக் கூடாது. பத்திரம் பத்திரம் என்று எச்சரித்து அனுப்பினார்கள்.

ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டும் என்றால் சாப்பாட்டிற்கு விடைகொடுக்க வேண்டும் பகதூர். நேப்பாளத்தில் இருந்து வந்த நாளாய் சொந்தச் சமையல். இன்றைக்குத் தீக்குச்சி கூட உதவியில்லாமல் கிழிக்க முடியவில்லை.

இரண்டு நாளைக்கு டீக் கடையில் தின்றான். கோதுமையைத் தின்று பழகிய வாய்க்குக் கொட்டை கொட்டையாய் புழுங்கல் அரிசி வழங்கவில்லை. ஒரு மைல் தள்ளி நடந்தால் இன்னொரு கூர்க்கா. அங்கே காசு கொடுத்தால் சப்பாத்தி கிடைக்கும். பகதூர் சாப்பாட்டிற்கு அலைவதை நாலாம் நாள் பார்த்தாள் ஜெயா. சுறுசுறுவென்று ஒரு சுண்டல் குழம்பு வைத்தாள். உள்ளங்கையில் தட்டித்தட்டி துணி அலசுவதுபோல் விசிறி விசிறி நாலு சப்பாத்தி சுட்டாள்.

அந்தச் சாப்பாடு அவனுக்கு அமிர்தமாக இருந்தது. அடுத்த வேளைக்கு கால் அங்கே நகர்ந்தது. ஒரு வாரம் கழித்து அவளின் குடிசைக்கே போனான் பகதூர்.

“ நான் அவனுக்குக் காவற்காரன் ! ” என்று பகதூர் சொன்னபோது அவள் சிரித்தாள்.

“ சரி, நான் உனக்குச் சமையற்காரி. ”

அவர்கள் ஒரு தம்பதியைப் போன்றே வாழ்ந்தார்கள். அடுத்த தெருவிற்கு மீன் வாங்கக் கூடச் சேர்ந்தே போனார்கள். அவனது உடுப்புகளை அவள் தோய்ந்து இஸ்திரி போட்டாள். அவளுக்குப் பதிலாக அவன் அவ்வப்போது பேக்டரியைப் பெருக்கினான். கையில் காசிருக்கும்போது அவனோடு சேர்ந்து அவளும் குடித்தாள். அவளது அரிசிச் சோற்றைத் திண்பதற்கு அவனும் கற்றான்.

அவர்கள் அவ்வப்போது அடித்துக் கொள்ளவும் செய்தார்கள். ஊரில் இருக்கும் தன் மனைவிக்கு அவன் பணம் அனுப்பியபோது அவள் இரைந்தாள். அவளுடைய பையனின் படிப்புச் செலவு அவன் கையை கடித்தபோது அவன் அறைந்தான்.

நேபாளத்தில் இருந்து கடிதம் வந்தது. பகதூரின் மனைவி படுத்த படுக்கையாய் இருப்பதாகப் பதறிக் கொண்டு புறப்பட்டான் பகதூர்.

“ நானும் வர்றேன் ” என்றாள் ஜெயா.

“ சீ ! சும்மாக்கிட ! ” என்று சீறினான் பகதூர்.

“ ஏன் ! நான் வந்தா என் சக்காளத்தி கீசிப்புடுவாளோ ? ”

சக்காளத்தி என்று முறை வைத்த அழைப்பு பகதூரை உசுப்பியது. கண்ணை அகல விரித்து “ ஏய் ! ” என்று உறுமினான்.

“ என்னய்யா ! துட்டுக்கு யோசிக்கிறியா? இந்தா ! ” விறுவிறுவென்று மூக்குத்தியைக் கழற்றினாள் ஜெயா. விருட்டென்று இறங்கிய பகதூரின் புறங்கை அதை விசிறியடித்தது.

‘ சுப்கரோ ! ” என்று அடிவயிற்றில் இருந்து குரல் எழுந்தது.

ஒரு மைல் தள்ளி இருந்த இன்னொரு கூர்காவிடம் கடன் கேட்கக் கால்கள் நகர்ந்தன.

அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் அது காதலினால் அல்ல.

அவனுக்குச் சோறும் அவளுக்குத் துணையும் இருவருக்கும் உடம்பும் தேவைப்பட்டதனால் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

அவர்களைப் போல எத்தனையோ ஜோடிகள் இப்படித்தான் இங்கே வாழ்கிறார்கள், கல்யாணம் என்ற பெயரில்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *