கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2023
பார்வையிட்டோர்: 4,444 
 
 

(1928ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்) 

மதிப்புரை 

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலா நிதி டாக்டர் உ,வே, சாமிநாதையர் அவர்கள் அன்புடன் அளித்த மதிப்புரை: 

இப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண் பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு. 

சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய “காதலா கடமையா” என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஓவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய ‘நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. பொது மக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன். 

ஆங்காங்குச் சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் உள்ளன. அவை அடுத்த பதிப்பில் நீக்கப்படுமென்று நம்புகிறேன். 

இங்ஙனம்
வே. சாமிநாதையர். 

முகவுரை 

புதுக்கதைக்கு முகவுரை எழுதுவது பொதுமக்கட்கு சற்றுவியப்பை உண்டு பண்ணலாம். ஏனெனில், அம்முகவுரைகள் பெரும்பாலும் வாசகர்கட்கு குறிப்பிட்ட புத்தகத்தை ஆதரிக்கும்படி விண்ணப்பஞ் செய்து கொள்ளும் நோக்கத்தோடு எழுதப்படுபவை. புதுக்கதைக்கு (Novel) முகவுரை அவசியமில்லையென்பது உண்மையேயாயினும், அப்புத்தகம் எழுதும் ஆசிரியரின் நோக்கத்தை ஒரு சிறு அளவு அப்புத்தகத்தை வாசிக்கும் முன்பு, வாசகர்கள் அறிந்துகொள்ளுமாறு தெரியப்படுத்துவது இன்றியமையாததென்று இம்முகவுரையை வரையலானேன். சிறந்த அறிஞர் பலரால் எழுதப்படும் புத்தகங்கள், நாடோறும் பெருகிவரும் இந்நாளில், உயர்ந்த கல்வியைக் கற்காத மிகச் சிறிய அறிவையுடைய சிறுமியாகிய யான் புத்தகம் எழுதத் துணிவது பண்டித சகோதர சகோதரிகளிற் பலர்க்கு, எதிர்பாராத வியப்பினையும் திகைப்பினையும் உண்டுபண்ணலாம். ஆயினும் அப்பெரியார் இச்சிறு புத்தகம் எழுதும் நோக்கத்தை சிறிது ஆராய்ந்து, இதன்கண்ணுள்ள குற்றங்களைப் பொறுத்தாதரிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். 

பழம்பெருமை வாய்ந்த நமது இந்தியநாடு, சரித்திர ஆரம்பகாலத்து, மிகவுயர்ந்த நாகரிகத்தின் உச்சியை அடைந்த திராவிடமக்களால் நம்மிந்திய நாடுமுற்றும் பரவியிருந்தது. ஆரியர்கள், இந்தியாவின் பெரும்பாகத்தைக் கைப்பற்றிய காலத்தும் திராவிட நாகரிகம் அழிக்கப்படவில்லை. அழகிற் சிறந்த ஆரியர்கள், திராவிடரின் நாகரிகத்தை கையாண்டு, அதை மென்மேலும் பெருகச் செய்தனர். நாகரிகத்திற்கு அதன் மொழியே சிறந்த வாகனமாதலின், பெரும்பாலும் அம்மொழியின் வளர்ச்சியினாலேயே, அந்நாகரிகத்தின் உயர்வைப்பற்றி சரித்திர அசிரியர்கள் அறிந்துகொள்ளுகின்றனர். எடுத்துக்காட்டாக உரோமநாட்டின் உயர்ந்த நாகரிகத்தின் பெருமையை லத்தீன்மொழி தௌ-வாக வெளிப்படுத்துகின்றது. பழைய கிரேக்க நாகரிகத்தின் பெருமையை, மகாகவியாகிய ஹோமரின் (Homer) என்றும் அழிவில்லா காவியங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகின்றோம். அஃதேபோல், எமது தமிழ் நாட்டிலும் திருக்குறள், நாலடியார் முதலியவைகளிலிருந்து தமிழரின் தத்துவ ஞானத்தைப் பற்றியும் நல்லொழுக்கத்தைப் பற்றியும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவைகளிலிருந்து தமிழரின் நாகரிகத்தைப் பற்றியும் ஒருவாறு நாம் தெரிந்துகொள்ளுகின்றோம். ஆகவே, ஒரு மொழியை வளர்ப்பது, அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களின் கடமைகளில் ஒன்றாம். பண்டைக்காலத்து மொழிவளர்ச்சியானது மிகக் கற்றுணர்ந்த புலவர் பெருமக்களாற் செய்யப்பட்டுவந்தது. அரசர்களும், செல்வந்தர்களும் அக்கவிகளை ஆதரித்து ஊக்கமளித்து வந்தனர். அதனாலேயே தற்காலத்திலும் மிக உயர்ந்த நூற்களாய்ப் புகழ்தேத்தும் பல தமிழ்க் காவியங்களும் வெளியாயின. தமிழ் நாட்டின் தலை நகராய் ஒரு காலத்திற் சிறப்புற்றோங்கிய மதுரையும் பதியில், மூன்று காலங்களில் இருந்ததாகக் கூறப்படும் தமிழ்ச் சங்கத்தாலும் பல அறிவு நூல்கள் வெளியிடப்பட்டுவந்தன. அவையும் இலக்கண இலக்கியப் பயிற்சி உடையார்க்கே இனிது விளங்குந் தன்மையன. ஆதலின், யாவர்க்கும் எளிதில் விளங்கும்படி, தற்கால தமிழ்ப் பெரியார் பலர், தமது விடா முயற்சியினால் பல அறிவு நூல்களும், பொழுது போக்கிற்காக படிக்கக்கூடிய பல புதுக்கதைகளும் வெளியிட்டுள்ளனர், அப்பெரியார் தம் உயர்ந்த நூற்கள் சிலவற்றை யான் படித்தபொழுது, உரைநடையில், ஒரு சிறு புதுக்கதை எழுதவேண்டுமென்னும் விருப்பம் என்னை வெகு நாட்களாய்த் தூண்டியது. யான் பத்திரிகைகட்கு கட்டுரைகள் அடிக்கடி வரைந்தனுப்பியதைக் கண்ட என் உற்றார் உறவினரும், என் சினேகிதிகளும் அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டுமென்று பெரிதும் விரும்பினார், அன்னார் தம் விருப்பத்தையும், எனது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டியே இச்சிறு புத்தகத்தை வெளியிடுகின்றேன். எங்கள் விருப்பம் ஈடேறுமாறு அருள்பாலித்த எல்லாம் வல்ல இறைவனைத் துதிக்கின்றேன். 

இக்கதையில், தலைமகனாய்வரும் சுரேந்திரன் என்பான், கடமையின் பொருட்டு தன் வாழ்க்கையின்பத்தையே தியாகஞ் செய்கின்றான். கதா நாயகியாகிய விஜய சுந்தரி என்னும் மின்னாள். தங்கடமையினின்றும் வழுவிவிட எண்ணுங்காலை, உலகினில் உயிர்வாழ்வான் ஒவ்வொருவனும், எல்லாவற்றிலும் கடமையையே தன் வாழ்க்கையிற் பிரதானமாய்க் கொள்ளவேண்டுமெனச் சுரேந்திரன் எடுத்துக்காட்டுகின்றான். இக்கதையில் இன்னும் பல சிறந்த நீதிகளும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன, பொது மக்கள் இப்புத்தகத்தை ஆதரித்து, எனக்கு மேன் மேலும் ஊக்கத்து அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். 

இப்புத்தகத்தை அச்சிடுமாறு என்னைப் பலமுறையும் தூண்டிய என் உற்றார் உறவினர்கட்கும், தாய் நாட்டின் விடுதலைப் போரிற்கலந்து, சிறை சென்ற தேசபக்தரும், தற்போது தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக இருந்துவரும், எனது பாட்டனார் மு.யூ, நவாபு சாகிபு மரைக்காயர் அவர்கட்கும், நாகூர் வாசியும், பெரும்பாலும் சிங்கையில் வதிந்து பல பொதுத்தொண்டுகளில் ஈடுபட்டிருப்பவரும், பெண் மக்களின் முன்னேற்றத்திலும் தேனினுமினிய தமிழ் மொழியின் அபிவிருத்தியிலும் மிக்க ஆர்வமும். விடாமுயற்சியுமுள்ள சகோதரர் S. செய்யது அஹமது அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி என்றும் உரித்தாகுக. 

நச்சுடை சில நாகங்களைத் தனக்குக் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர் தம் தூற்றுதலுக் கஞ்சி, பத்திரிகைகட்கு பெயர் போடாது கட்டுரைகள் வரைந்தனுப்புமாறு அன்று என்னைத் தூண்டியவரும், இன்று தமது பச்சிளங்குழவிகளை பரிதவிக்கவிட்டு பரமனடி எய்தியவருமான எனது அரும்பெருஞ் சிற்றன்னையார் ஹதீஜா நாச்சியார்க்கு இப்புத்தகத்தை என் மனமார்ந்த பிரீதியுடனும் அனுதாபத்துடனும் அர்ப்பணஞ் செய்கின்றேன். அம்மாதரசியின் ஆத்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல இறைவனடி தொழுது வேண்டுகின்றேன். 

நாகூர்
2-2-28 
சித்திஜுனைதா பேகம். 

காதலா? கடமையா? 

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

1 – ஒரு சிறு குடும்பம் 

பாண்டிய நாட்டின் தலைநகராய் ஒரு காலத்தில் சிறப்புற்றோங்கிய மதுரையம்பதியில், ஒரு பகுதியின்கண், ஒரு சிறு குடும்பத்தார் நமது கதை நிகழுங்காலையில் வசித்து வந்தனர். விமலநாதன் என்பாரே இக்குடும்பத்தலைவர். சுரேந்திரநாதன் என்னும் அவர்தம் இளஞ்சகோதரனொருவனும். அவர் மனைவியொருத்தியுமே இக்குடும்பத்திலுள்ளவர்கள். இவர்கள் மாயாபுரியின் அரசகுடும்பத்தை சார்ந்தவர்களென்றும். பல்லாண்டுகட்கு முன்னரே இவர்கடம் முன்னோர் இவ்வூரில் குடியேறினரென்றும் கூறப்பட்டது. மாயாபுரியின் அரசவம்ச சாடை பெரும்பாலும் இவர்கட்கிருப்பதாயும் ஓர் வதந்தியுண்டு. 

விமலநாதன் தனது உழைப்பினால் கொண்டு வரும் பணத்தைக் கொண்டே மூவரும் மிகச் சிக்கனமாய் வாழ்க்கை நடத்தினர். சுரேந்திரன் பல உயரிய குணங்கள் இயற்கையிலேயே அமையப் பெற்றவனாயினும் கவலையின்றி ஊர் சுற்றி அலைவதையே தொழிலாய்க் கொண்டிருந்தான். விமலநாதன், தன் தம்பியின் மாட்டு கொண்டுள்ள அளப்பரிய அன்பால் அவனை கடிந்து ஏதுங் கூறுவதில்லை. ஆனால், அவர்தம் மனைவியோ, தங்கணவனின் தம்பியை தன் சொந்த சகோதரனைப் போன்றே எண்ணி நேசித்தாளாதலின், அடிக்கடி சுரேந்திரனிடம் இங்ஙனம் ஊர் சுற்றித் திரிய வேண்டாமென்றும் ஏதேனும் ஓர் வேலையில் அமர்ந்து, ஓழுங்காய் நடந்து கொள்ளும்படியும் அன்பாய் கடிந்து புத்தி புகட்டுவாள். இங்ஙனம் தன் அண்ணியார் அடிக்கடி கூறிவந்தது சுரேந்திரனது மனத்தை உறுத்தியது. அன்றியும், மாயாபுரிக்கும், மற்றும் பிற ஊர்கட்குஞ் சென்று பார்த்து வரவேண்டுமென்னும் மனோவெழுச்சி உண்டாயது. ஆகவே, தமயனும் தமயன் மனைவியும், அறிந்தால் தன்னைப்போக விடா ரென்றெண்ணி, ஒருநாளிரவு ஒருவருமறியாவண்ணம் தான் சேர்த்து வைத்திருந்த 25 ரூபாயை எடுத்துக்கொண்டு மாயாபுரியை நோக்கிப் பிரயாண மாயினான். காலையில் விழித்தெழுந்த விமலநாதன் மனைவி சுரேந்திரனைப் படுக்கையிற் காணாமையான் வெளியிற்சென்றிருக்கக் கூடுமென்றெண்ணி வாளாயிருந்து விட்டாள். ஆனால் பொழுதேற அவள் மனத்தில் விவரிக்க வொண்ணா அச்சம் பூண்டு வதைத்தது. ‘வருவான் வருவான்’ என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள். இதற்குமேல் உண்மையை உரைக்காதிருத்தல் கூடாதென்றெண்ணி, தங் கணவர் வந்ததும் சுரேந்திரன் காலையிலிருந்து காணப்படவில்லை யென்னும் உண்மையை உரைத்தனள். திடுக்கிட்டுப்போன விமலநாதன் பல ஆட்களைக் கொண்டு எங்குந்தேடியும் அவன் அகப்பட்டானில்லை. பல ஊர்கட்கும் ஆளனுப்பியதன்றி. ஊர்க்காவற்சாவடியிலும் எழுதி வைத்தார். ஒன்றும் பயனளிக்கவில்லை. இதே கவலையால் ஏக்கம் பிடித்த இருவரும் செய்வதியாதெனத் தெரியாமல் கலங்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இவர்கடம் நிலைமை இங்ஙனமிருக்க, மாயாபுரியினை நோக்கிச் சென்று நமது இளவலை கவனிப்போம். பல ஊர்களையுஞ் சுற்றிக்கொண்டு. வருவோர் போவோரிடங் கேட்டு மாயாபுரியின் எல்லையைக் குறுகினான். கையிற் பணமில்லை என்ன செய்வதெனத் தெரியாது சற்று தயங்கினன். மீண்டும் அவனுக்கு இயல்பாய தைரியம் திரும்பி வந்தது. நேரமோ கழிந்து கொண்டே சென்றது. அன்று பொழுது போவதற்கு முன் 

மாயாபுரியின் எல்லைக்குள் சென்று விட்டதற்கடையாளமாய் அவ்வெல்லையின் ஆரம்பத்தில் அழகியதோர் சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. 

சுரேந்திரனுக்கு பசியோ மிகவும் அதிகமாயிருந்தது. அன்றியும் வழிப் பிரயாணத்தினாலும் மிகவுங் களைப்படைந்திருந்தான். மழைத்துளிகள் சிறு சிறு துளிகளாய் விழுந்து கொண்டிருந்தன. அச்சிற்றுண்டிச் சாலையின் கதவு மூடிவைக்கப் பட்டிருந்தது. சுரேந்திரன் மெதுவாய்ச் சென்று கதவைத்தட்டினான். சிற்றுண்டடிச் சாலையின் சொந்தக்காரனது இளம் மகளொருத்தி கதவை திறந்தாள். கதவினைத் திறந்து விட்ட அவ்விளம் பெண் சுரேந்திரனைக் கண்டதும் வியப்போடு ஊற்று நோக்கி தலைவணக்கஞ் செய்தாள். அவட்கு சிறிது நேரம் பேச வாயெழவில்லை. பிறகு அவள் சுரேந்திரனை நோக்கி, “மாட்சிமை தாங்கிய பெருமானே, வருக! எங்கள் மனைக் கெழுந்தருளி எங்களைக் கௌரவித்த கோமானே வருக!” எனக் கூறிவிட்டு, தன் தாய் தந்தையரை அழைக்கும் பொருட்டு உள்ளே ஓடிச் சென்றாள். அவள் செய்த தலைவணக்கமும், தோற்றுவித்த வியப்புக்குறியும் சுரேந்திரனை, திப்பிரமை அடையும்படி செய்துவிட்டன. எதற்காக தனக்கு அவள் இத்துணை கௌரவங் கொடுக்க வேண்டுமென எண்ணி வியப்புக்கடலுள் ஆழந்திருக்கும் சுரேந்திரனை, அவள் கூறிய மொழிகள் பின்னும் ஆச்சரியத்தில் அவனை ஆழ்ந்துபோமாறு செய்து விட்டன. அவன் ஒன்றுந் தோன்றாமல், வியப்பே வடிவாய் பேசா ஊமை போன்று நின்று கொண்டிருந்தான். 

2 – வனமாளிகை 

இச் சிற்றூண்டிச் சாலைக்கு ஏறக்குறைய ஒரு மைல் தூரத்தில் அழகிற் சிறந்த வனமாளிகை யொன்றுண்டு. அதைச் சுற்றிலும் விசாலமான எழில் நிறைந்த சிங்காரவன மொன்றிருந்தது. சில தென்னை மரங்கள், ஒன்றிரண்டு மாமரங்கள் தவிர அத்தோட்டத்தில் இருந்தவை பூத் தொட்டிகளும். ‘குரோடன்’ வரிசைகளும் கொடிப் பந்தல்களுந்தான். அவ் வனமாளிகைக் கெதிரில் ஒரு கொடிப் பந்தரின் மறைவில் அழகியதோர் ஊற்றுக் குழாய் நடுவில் அமைக்கப்பட்ட வட்டம் ஒன்றிருந்தது. இந்த வட்டத்தில் பன்னீர் தௌ-ப்பதேபோன்று, சுழல் குழாய் நீரைத் தௌ-த்தபோது சூரிய கிரணங்கள் நீர்த்துளிகளில் பட்டு. இடைவிடாமல் வானவில் நிறங்கலை மிக்க அழகாய்த் தோன்றச் செய்த காட்சி, காண்போர் கண்ணையுங் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. இங்ஙனமே பல சிறு குழாய்கள் ஆங்காங்கு கொடிகட்கும் நீரூட்டின. 

இங்ஙனம் மிக்க வனப்போடு விளங்கிய அவ்வனமாளிகையின் உட்புறத்தில், ஒரு விசாலமான அறையில் நான்கு ஆடவர் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர் மேசையின்பேரில் பல உயர்ந்த மதுபான வகைகளும், தட்டுகளில் பலவிதமான தின் பண்டங்களும் வைக்கப் பட்டிருந்தன. ஒரு பணிமகன் மிக்க அடக்க ஒடுக்கத்தோடு வாயிலில் நின்று கொண்டிருந்தான். 

அவ்வாறு சீட்டாடிக் கொண்டிருந்த நால்வரின் தோற்றமும், பிறப்பாலும், செல்வத்தாலும் உயர்ந்த கண்ணியமான பெரிய மனிதர்களுடையதாய்த் தோன்றியது. ஒருவர்க்கு ஏறத்தாழ 25 வயதிருக்கலாம். இயற்கையில் மிக்க அழகுடையராயினும், உடம்பு சரியான நிலைமையிலில்லாமையாலோ, துர்ச்செயல் காரணமாயோ வதனஞ்சுருங்கி, கன்னங் குழி விழுந்து மிக்க மெலிந்த தோற்ற முடையராய்க் காணப்பட்டார். அவர்க்கு மற்ற மூவரும் மிக்க பணிவோடும், மரியாதையோடும் நடந்து கொண்டனர். மற்றும் அவர்க்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்த இன்னொருவர்க்கு 50 வயதிருக்கலாம். பரந்த முகமும், விசாலநுதலும், கம்பீர தோற்றமும் உடையராய்த் தோன்றினார்.மற்று மிருந்த இரண்டு பேர்க்கும் நடுத்தர வயதிருக்கலாம். அவர்களும் உயர்வகுப்பைச் சேர்ந்த பிரபுக்களைப் போன்றே காணப்பட்டனர், 

அப்போது இரவு மணி எட்டியிருக்கலாம். ஆட்டத்திலேயே முற்றும் மனத்தை செலுத்தி, தம்மையும் உலகையும் மறந்திருந்த மூவரையும், 50 ஆண்டெய்திய முற்கூறிய பெரியார் நோக்கி மிக்க வினயமாய், “நேரமாகி விட்டது, இதோடு ஆட்டத்தை நிறுத்திவிடுவோம்” என்றார். ஆனால். அவர்க் கூறியதை ஒருவரும் செவிமடுத்ததாய்த் தோன்றவில்லை. சிறிது நேரம் ஏதோ சிந்தித்திருந்த பெரியவர், மீண்டும் 25 ஆண்டுடைய யௌவன வாலிபனை விளித்து, ‘இளவரசரே ! தாங்கள் இச் சூதாட்டத்தில் இத்துணை ஆர்வங் காட்டலாமா? பொதுமக்கள் தங்களைப்பற்றி பலவாறாய்ப் பேசிக்கொள்ளுவதாய் வதந்தி. இராகுலப் பிரபு தங்களைப் பற்றி பொதுமக்கள் கெட்ட அபிப்பிராயங் கொள்ளும்படி தந்திரமாய்ப் பல சூழ்ச்சிகள் செய்வதாயுங் கேள்வியுற்றேன். ஆதலின், முடிசூட்டும் வரையிலாயினும் தாங்கள் இம்மாதிரி காரியங்களை நிறுத்தி வைத்தலே நலமென எண்ணுகின்றேன்” என்று பணிவுடன் மொழிந்தார். 

அங்கிருந்த மற்றவர், “ஆம், இளவரசே! சேனைத் தலைவர் கூறுவது முற்றிலும் உண்மையே. இராகுலாப்பிரபு இவ்வன மாளிகைக்கு தங்களை வரவழைத்தது கூட ஏதும் சூழ்ச்சியா யிருக்குமென்றே எண்ணவேண்டி யிருக்கின்றது. பொது மக்களிடை தங்களைப்பற்றி கெட்ட அபிப்பிராயத்தைப் பரப்பிவிட்டால். அஃது இராகுலனுக் கநுகூலமானதன்றோ?” என்றார். 

இன்னொருவர், “ஆம் ஒரு சாரார் இராகுலனுக்காக உழைத்து வருவதாய்த் தெரிகின்றது. தங்களின் நடத்தை கெட்டதென நிரூபிக்கப்படுமாயின், அதை இராகுலப்பிரபுக் கநுகூலமாய் உபயோகித்துக்கொள்ளவும், அவர்கள் விருப்புகின்றனர்-” என்று கூறி வரும்பொழுது, இளவரசர் அவரை அடை மறித்து, 

“ஆம், நண்பர்களே! நீங்கள் இப்போது கூறியவையெல்லாம் உண்மையே. இராகுலனது சூழ்ச்சிகளை அறியாமல் நாம் இங்கு வரவில்லை. அவன் செய்வனவற்றை நாம் அறிந்து கொள்ளாதது போன்றே நடிக்கவேண்டும். என்பேரில் குடி மக்களிடையே கெட்ட அபிப்பிராயம் பரப்பப்படுமாயின். இராகுலனையே தமக்கரசனாய்த் தேரந்தெடுப்பார்களென்று அவன் நம்பியிருக்கிறான்” என்றார். 

“அங்ஙனம் அவர் எண்ணுவது இயல்புதானே? தாங்கள் அரசராய் வராவிடின். தங்கட்கடுத்தபடி அரசுரிமைக்குரியார் இராகுலப் பிரபுவன்றோ? அதுவன்றி பிரபு இராகுலன். இளவரசி விஜயாளை மணக்க பெரிதும் விரும்புவதாய்த் தெரிகின்றது. இன்னொரு விஷயத்தையும் நாம் முக்கியமாய் கவனிக்கவேண்டும். பொதுமக்களின் விருப்பம், விஜயசுந்தரி தங்கட்கரசியாக வேண்டுமென்பதே” என்றார் சேனாதிபதி கமலாகரர். 

“ஆம், கமலாகரரே! நீர் கூறுவது உண்மையே. ஆனால் அரசிளங்குமரி விஜயம் என்னை நேசிக்கின்றாளா? என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவளிடத்து என் மனத்தை எத்துணை வெளிப்படையாய்த் திறந்து காட்டியபோதினும் அவள் தன் உள்ளக்கருத்தை ஒருவராலும் அறிந்துகொள்வதற் கியலவில்லை” என்று ஒருவாறு வருத்தத்தோடு கூறினார் இளவரசர். 

“ஆயினும், அவள் கடமைத் தவறாதவன். பொது மக்கள் தன்னை அரசியாக கண்டு களிக்க விரும்புவதை அவள் நன்கறிவாள். குடி மக்களின் விழைவையும், இறந்துபோன தன் தந்தையாரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதே தங்கடனென எண்ணுவாளேயன்றி, அதற்கு மாற்றமாய் நடக்கச் சிறிதும் துணியாள்” என்றார் கமலாகரர். 

அத்துடன் அவர்கடம் பேச்சு முடிவுற்றது. அதற்குமேல் ஆட்டத்தை நிறுத்தி விட்டு. ஆகாரம் அருந்துதற்கு சமையல் கட்டிற்குச் சென்றனர்.

– தொடரும்…

– முதற் பதிப்பு: பெப்ரவரி 1928, மின்னூல் வெளியீடு – http://FreeTamilEbooks.com 

2003 ல் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் மின்னூலாக்கப் பட்டு இங்கு: http://www.tamilheritage.org/old/text/etext/sidi/sidistor.html வெளியிடப்பட்டது. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *