(1928ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-10 | அத்தியாயம் 11-14
7 – இயற்கையன்னையின் இன்பவிளையாடல்.
முந்திய அத்தியாயத்திற் கூறப்பட்ட முடிசூட்டு வைபவம் நிகழ்ந்த மறுநாள் இரவு மணி ஒன்பதிருக்கலாம், மாயாபுரியின் அரசவீதியிலுள்ள அழகியதோர் மாளிகையின் அறையொன்றில் எறக்குறைய 19 – ஆண்டே நிரம்பிய எழில்மிகு யுவதியொருத்தி, சார்மணைக்கட்டிலொன்றில் சாய்ந்தவண்ணம் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் தன் மனம் முற்றையுஞ் செலுத்தியபடி உடகார்ந்திருந்தார்கள். அவள் கையில் ஏதோ ஓர் நாவல்புத்தகம் இருந்ததெனினும் அவள் அதை படித்ததாக தெரியவில்லை அவ்வமயம் அறைக்கதவைத் திறந்து கொண்டு மற்றோர் பெண்மணி உள் நுழைந்தாள்.
வந்தவள் தன்னை சிறிதும் கவனியாமல் வீற்றிருக்கும் பெண்மணியருகிற் சென்னு தலைவணங்கினாள். அப்போதுதான் அவள் ஏறிவிட்டு நோக்கினாள். வந்தவள் மிகவும் பணிவாக, “தங்களின் சிந்தனைக்கு என்னால் எதும் இடையூறு ஏற்பட்டதாயின் மன்னிக்கமாறு பிரார்த்திக்கின்றேன்” என்றாள்.
“அப்படியொன்றுமில்லை. நான் இப்போது யோசித்துக்கொண்டிருந்தது நமது அரசரைப்பற்றியே. ஏற்கெனவே அவர்மாட்டு எனக்குச் சிறிதுகூட அன்பில்லையென்பதை நீ நன்றாயறிவாய். ஆனால் நேற்றுமுதல் எனக்கு அவரிடத்து என்னையறியாமலே அன்பு ஊறுகின்றது. அதற்குக்காரணம் எனக்கே தெரியவில்லை. எத்தனையோ முறை, முன்னமே அவர் வேண்டிக்கொண்ட பொழுதெல்லாம் இன்னஞ் சிறிதுநாள் போகட்டுமென்றே கூறிவந்தேன். ஆனால் நேற்றுமுதல் என் மனநிலையே வேறாக மாறிவிட்டது. கிரீடம் அவர்க்குத் தனியழகைத் தரவில்லையா? என்றாள் யுவதி.
வந்தவள் மிக்க மரியாதையோடு, “ஆம், பொருமாட்டியே,நேற்றுமுதல் அவர் புதிய அழகோடுதான் விளங்குகின்றார். கிராமக்காற்று அரசர் பெருமானுக்கு நலத்தையளித்தது போலும்” என்றாள்.
“இருக்கலாம் அவரது குணம், செய்கை முதலியனவும் மாறுபட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதுவன்றி அவர் முந்தியைவிட இளமையுடையார்போன்று தோன்றுகின்றார்” என்றாள் பெருமாட்டி.
“உண்மையே நான் கூற எண்ணியதையே தாங்களுங் கூறினீர்கள். அவர்தங் குரலுங்கூட முந்தியைவிட காதுக்கினிமையைத் தருகின்றது” என்றாள் வந்தவள்.
“வனஜா, நீயும் நன்கு கவனித்திருக்கின்றாய். சரி,நேரமாகிறது. நேற்று அரசர் என்னிடங்கேட்டுக்கொண்ட படி அவரது அரண்மனைக்கு நாம் செல்ல வேண்டும். வண்டி தயாராகிவிட்டதா என்று பார்த்துக்கொண்டு சீக்கிரம் உடையுடுத்திக்கொண்டு வா. அதற்கிடையில் நானும் தயாராயிருக்கிறேன்” என்று பெருமாட்டி கூற, அக்கட்டளையைப்பெற்ற அவளது தோழி வனஜா, அதை விரைவில் முடிப்பாள் வேண்டி அவ்விடத்தைவிட்டும் சடுதியில் சென்றாள்.
இவர்கள் நமது இளவரசி விஜயசுந்தரியும் அவள் தன் தோழியுமென்பது நாம் கூறாதே யமையும்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவளது தோழி களிரிருவரும் பின்தொடர்ந்தனர். மூவரும் வண்டியேறி, அவ்வழகிய வீதியின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அரண்மனைக்குச் சென்றனர். அங்கு கமலாகரர் முதலியோர் எதிர் வந்தழைத்துச்சென்று, ஓர் விசாலமான அறையுள் விடுத்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் சுரேந்திரன் ஆங்குதோன்றி இளவரசியை அன்போடு வரவேற்றான், இருவர் கண்களும் ஒன்றையொன்று நோக்கின.கண்ணோடு கண் நோக்கின் வாய் சொற்களால் ஏதும் பயனிலவன்றே? சுரேந்திரன் மிக்க அன்போடு “இளவரசி! யான் இதுவரையிலும் உம்மைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேனென்று கூறின். நீர் வியப்படைய மாட்டீரென்று நம்புகிறேன்.தாம் இத்துணை தாமதமாக வந்ததற்கு எது காரணமோ”என்றான்.
அதற்கு விடையாக, “அரசர் பெரும! உண்மையைக் கூறப்புகின் நேற்று முதல் என்மனம் ஒருநிலையிலில்லை அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். வேறு விசேஷ மொன்றுமில்லை” என்றாள் இளவரசி.
சுரேந்திரன் எந்த பெண்மணிகளோடும் நெருங்கிப் பழகியவனல்லன். ஒரு பெண் பிள்ளையிடத்து அவனுக்கு அன்புண்டு என்று கூறினால் அவள் அவனது அண்ணியாகவே யிருக்கலாம். ஆனால், இப்போது விஜய சந்தரியைக் கண்டது முதல், எப்பெண்களிடத்தும் தோன்றாத அன்பு அவள் மாட்டு தனக்குண்டாவதாய் எண்ணினான். ஆயினும், அரசர் பிரதாபனுக்கு உரியளாய்க் கருதப்பட்ட விஜயாளோடு நெருங்கிப்பழக அவனது தூய்மையான மனசாட்சி இடங்கொடுக்கவில்லை. எனினும், கமலாகரர், சுரேந்திரன் விஜயாளோடு நெருங்கிப்பழகாவிடின் அவள் ஐயுற நேருமென்றும், ஏற்கனவே பிரதாபை வெறுப்போடு நோக்கி வந்தவளான இளவரசி, தானே நெருங்கிப் பழக வரும்போது, சுரேந்திரன் அதற்கிடங்கொடாவிடின் ஆழ்ந்த அறிவுள்ளவளான விஜயாள், ஒருகால் உண்மையை உணர்ந்துகொள்ளக் கூடுமென்றும் எச்சரித்தார். தர்ம சங்கடமான காரியத்தில் தான் நன்றாய் அகப்பட்டுப்கொண்டதாய் நினைந்த சுரேந்திரன், இன்னும் ஒரு நாள் எவ்வாறு கழியுமோவென்று ஏங்கி, இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான்.
விஜயாளின் மறுமொழியைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாயிருந்த சுரேந்திரன், மீண்டும் அவளோடு உரையாடத் தொடங்கி, பெருமாட்டி! நேற்று முதல் உமது மாசற்ற மனத்திற்கு தொந்தரையைத்தரும் மாற்றத்தை நானறிந்துகொள்ளலாமா? என்னால் கூடுமாயின் உமக்கு மன அமைதி ஏற்படும்படி செய்வேன்” என்றான்.
சுரேந்திரனது மொழிகள் விஜயாளது உள்ளத்திற்கு பெரிதும் மகிழ்வையளித்தன. அவர் சுரேந்திரனை தனது அன்பு வழியுங் கண்களால் அமைதியோடு நோக்கி “அத்தான்! தாங்கள் கிராமத்திற்குப் போகுமுன்னிருந்ததை விட, இப்போது எவ்வளவோ மாறுதல் அடைந்திருக்கின்றீர்கள் அல்லவா?” என்றாள்.
அவள் தன் உள்ள கருத்தை ஒருவாறுணர்ந்து கொண்ட சுரேந்திரன், அவளை நோக்கி, “இருக்கலாம், நேரமாகிறது, ஏதாவது சாப்பிடவேண்டாமா?” எனக் கூறி பேச்சைமாற்றி வேறோர் அறைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு மேசையொன்றில், மடைத்தொழில்வழுவாத வாழ்க்கையரான் சமைக்கப்பெற்ற அமுதினன்ன அடிசிலும் நெய்யாலாக்கிய சிற்றுண்டிகளும் வெள்ளித் தட்டுகளில் அழகுபெற பரத்திவைக்கப்பட்டிருந்தன. கண்ணாடி எனங்களில் பலவகையான பழவகைகள் கண்ணுக் கினிமையாய்த் தோன்றும்படி போடப்பட்டு மேஜையின் மற்றொரு புறத்தே வைக்கப்பட்டிருந்தன.
அங்கு அழைத்துச்செல்லப்பட்ட இளவரசியும் அவளது தோழிகளிருவரும், இன்னும் இரண்டொரு பிரபுக்களும், சேனைத்தலைவர் கமலாகரரும், சுரேந்திரனும் மிக்க மகிழ்ச்சியோடு உரையாடிக்கொண்டே உணவருந்த ஆரம்பித்தனர். உணருவருந்தியபின், விஜயாளின் விருப்பத்திற்கிணங்கி சுரேந்திரன் அவளோடு தோட்டத்தில் உலாவச் சென்றான்.
இருவரும் ஏதோ அரசியல் விஷயமாய்த் தோட்டத்தில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சுரேந்திரன் எத்துணைதான் சேனைத்தலைவர்கூறி யாங்கு விழிப்போடு நடந்துகொண்டபோதினும், சிற்சில விஷயங்களில் தவறியே நடந்துவந்ததை மிக நுணுக்கமாய் விஜயசுந்தரி கவனித்து வந்தாள். நிற்க, தோட்டத்தில் நெடுநேரமாகி விட்டதால் இருவரும் அவ்விடத்தை விட்டும் அரண்மனைக்கு வந்து அவரவர்தம் படுக்கையறையுட்சென்று படுத்துக்கொண்டனர்,
சுரேந்திரன் படுக்கையிற் படுத்துக்கொண்ட போதினும் அன்றிரவு தூக்கமே யில்லாதொழிந்தது. விஜயாளின் இனிய மொழிகளும், சிறந்த குணங்களும், எழிலே ஒருக்கொண்டற் போன்ற அவளது தோற்றமும், தன்னிடத்து அவள்காட்டும் உண்மையான அன்பும் அவனது ஐம்புலன்களையும் ஒருங்கே மயக்கி ஆனந்தமுறச் செய்தன. ஆனால், அவனது மனசாட்சி இடைக்கிடையே அவள் பிறனொருவன் பொருளன்றோ’ என ஞாபகமூட்டி அவனைக் கலக்கமுறச் செய்தது. இங்ஙனம் பற்பல எண்ணங்களான் குழப்பப்பட்ட மனத்தோடு சுரேந்திரன் ஒருவாறு அவ்விரவை யோட்டி காலையில் எழுந்தான். தனக்கு முன்னதாகவே விஜயாள் எழுந்து தனக்காகக்காத்திருக்கிறா ளென்பதை பணிமகன் மூலமாய் அறிந்த நமது சுரேந்திரன் உடனே எழுந்து காலைக்கடன் கழித்து இளவரசி யிருக்குமிடத்திற்குச் சென்றனன்.
அவனை கண்டதும் மலர்ந்த முகத்தோடு விஜயம் அவனை வரவேற்றாள். பிறகு அவனைப் பார்த்து “என் அரசே ! ஏன் தங்கள் அழகிய கண்கள் சிவந்திருக்கின்றன. இன்றிரவு தாங்கள் நன்றாய் அயர்ந்து தூங்கவில்லையோ?” என்றாள்.
பெருமாட்டியோ! நீர் கூறியது உண்மையே. இன்றிரவு எனக்கு நன்றாய்த் தூக்கம் வரவில்லை தான்” எனக் கூறிவிட்டு காலையாகாரம் அருந்தும் பொருட்டு அவளையும் அழைத்துச் சென்றான்.
காலை மணி 10 இருக்கலாம். அரண்மனையின் கண்ணுள்ள விசாலமான அறையொன்றில் நமது கதாநாயகன் சுரேந்திரனும், கதாநாயகி விஜயாலும் மெத்தை தைக்கப் பெற்ற நாற்காலிகளில் அமர்ந்தவண்ணம் மிக்க உல்லாசமாய்ப் பேசிக்கொண்டிருந்தனர். சுரேந்திரன் மகிழ்ச்சியே மயமாய்ப் பேசிக்கொண்டிருந்தபோதினும் அவனது மனம் சஞ்சல மடைந்தபடியே யிருந்தது. ‘இன்று பகல் மட்டுந் தானே இவளோடிருப்போம்’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாக அவன் மனம் சொல்லொணாத் துயரடைந்து ‘படபட’ வென்றடித்துக்கொண்டது.
அந்நிலையில் காவலன் வந்து தலைவணங்கினான். ‘மாட்சிமைதங்கிய மன்னர் பெருமானே! தங்களைக் காணும்பொருட்டு இராகுலப்பிரபு வந்திருக்கின்றார்” என நவின்றான் அக்காவலன்.
“அங்ஙனமாயின் நான் உடனே வருகின்றேன்” என்று சுரேந்திரன் கூறி விடை கேட்கும் பாவனையாக இளவரசியின் முகத்தை நோக்கினான்.
அவனது விபரீதப் போக்கு இளவரசியால் சிறிதும் விளங்கிக்கொள்ளக் கூடாததாகவே இருந்தது. “என் அரசே! தாங்கள் இவ்வூரைப் புரக்கம்புரவலன் என்பதை மறந்துவிட்டீர்களா? அரசரைப் பார்க்கவருவோர் அரசர் இருக்குமிடத்திற்கு வருவரா? அன்றி அரசர் அவர் இருக்கு மிடத்திற்குச் செல்லுவரா?” என்று சற்று சினத்துடன் கூறினாள் இளவரசி.
அரசர் நடந்துக்கொள்ளக்கூடிய பழக்கவழக்கங்களைச் சிறிதும் அறிந்துக்கொள்ளாத சுரேந்திரன், விஜயாள் கூறிய வார்த்தைகளால் விழிப்படைந்தான். அவள் கையைமிக்க ஆர்வத்தோடுபற்றி, பெருமாட்டி, ஆம் நான் அரசனென்பதை உமதருகிலிருக்குங்காலை மறந்து விடுகின்றேன்.” எனக்கூறி காவலனை விளித்து, “இராகுலப்பிரபு பிரபுவை உடனே இங்கு வரும்படி சொல்” என்ன, காவலனும் உடனே அங்கிருந்தும் வெளியே சென்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் இராகுலப்பிரபு ஆங்கு தோன்றினார். முடிசூட்டி வைபவத்தின்போது பொறாமையோடு அரசனை உற்றுநோக்கிய அதே கண்கள், மீண்டும் பொறாமையோடு கூர்ந்து நோக்கின. உடனே எரிமலையின் அகட்டுத் தீமூண்டெழுந்தாற்போல, இராகுலனது முகத்தில் ஒருவகைத் தீயொளி பரவியது. ஆனால் மறுவினாடியே அது மறைந்துவிட்டது.
சுரேந்திரன் பிறன் என யாரும் சிறிதும் ஐயுறாதிருந்துங் கூட, மிகக் கூறிய கண்களையுடைய இராகுலன் இப்போது அரசனாய் விளங்கும் சுரேந்திரன் அரசன் பிரதாபனல்லனென்று தெற்றென விளங்கிக்கொண்டான். அங்ஙனமாயின், அரசனாய் நடிக்கும் இவன் யார்? என்ற எண்ணம் அவன் மனத்தைக் கலக்கியது.
சுரேந்திரனோடு சுற்றுநேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு இராகுலன் அவ்விடத்தைவிட்டும் அகன்றான். பின்னர் இளவரசியும், சுரேந்திரனும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தனர்.
செல்வி விஜயாள் இம்மூன்றுநாட்களாய் அரசனிடங் காட்டிய பேரன்பு, எல்லாரையும் வியப்புக் கடலுள் மூழ்கும்படி செய்தது. இனி வெகுசீக்கிரம் இளவரசியை அரசியாகக் கண்டுகளிக்குந் தருணம் கிட்டும் என்று மக்கள் ஆனந்த மெய்தினர்.
இவ்வாறு பகற்பொழுது கழிய சூரியன் அஸ்தமித்தது: முல்லை மலர்ந்தது; தாமரைகள் குவிந்தன. மணி ஆறடித்தது. இளவரசி தன் மாளிகைக்குச் செல்ல சுரேந்திரனிடம் உத்தரவு கேட்டாள். இதுவே அவளது கடைசி சந்திப்பாயிருக்குமென்றண்ண அவனது கண்கள் கலங்கின. நீண்ட பெருமூச்சோடு அவட்கு விடையளித்தான்.
நேரம் சென்றுகொண்டே யிருந்தது. அன்றிரவு அரண்மணை மணி 11 அடித்தது. எங்குபார்க்கினும் பேரிருள் சூழ்ந்திருந்தது. அப்போது கமலாகரரும் இரண்டு வீரர்களும் சுரேந்திரனிடத்து வந்தனர். அவ்வீரர்களிடத்து கமலாகரர், சுரேந்திரனது படுக்கையறைவாயிலே மிக்க எச்சரிக்கையோடு காவல் புரியும்படி, தாம் இங்குவரும் வரையிலும் மந்திரியே ஏதும் அரசியல் விஷயமாய் அரசரைப் பார்க்க விரும்பிய போதிலும் உள்ளே விட வேண்டா மென்றும் மிகக் கண்டிப்பான உத்தரவிட்டார், அப்பால் இருவரும் பாராவண்ணம் மறைந்ததுமறைந்து, அழகிய-ஆனால் வேகமாய் ஓடக்கூடிய குதிரைகளில் அமர்ந்தவண்ணம் இராகுலனது வன மாளிகையை நோக்கிச் சென்றனர்.
இராகுலப் பிரபுவின் வனமாளிகையின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த மணி யறிவிக்குங் கருவி ‘டாங் டாங்’ கென மூன்றடித்தது. ஆடவிரிருவர் அம்மாளிகையினுட் சென்றனர். எங்கு நோக்கினும் மனித ரிருப்பதின் அடையாளமே காணப்படவில்லை. அவ்விடத்துச் சென்ற ஆடவரிருவரும் முன்னர் கூறப்பட்ட நிலவறையின் வழியாய் விரைவாக மர்ம அறைக்குச் சென்றனர். அவ்வறையினருகிற் சென்றதுமே இருவர் தம் மனமும் ‘ படக் படக்’ கென அடித்துக்கொண்டது, ஏன்? அங்கு காவலிருந்த வீரரிருவரையுங் காணோம். ஒருவாறு மனத்தை திடப்படுத்திக்கொண்டு உள்ளே சென்று பார்க்க, அங்கு படுக்கையிற் படுக்கவைக்கப்பட்டிருந்த அரசன் பிரதாபனைக் காணவில்லை, வேறு அங்கு என்ன கண்டனர்? அரசன் பிரதாபனது இரத்தம் படிந்த ஆடைகளையே! பேரிடியே தலையில் விழுந்தாற் போன்று இருவரும் அசைவற்று நின்றுவிட்டனர்.
இவ்வாண் மக்களிருவரும் நமது கதாநாயகன் சுரேந்திரனும், சேனைத் தலைவர் கமலாகரருமே யாவர் என்பது யாம் கூறாமலே வாசகர் கட்கு இனிது விளங்கும்.
8 – திடுக்கிடும் செய்தியும் தியங்கிய மனமும்
கமலாகரரும் சுரேந்திரனும் சிறிதுநேரம் வரையிலும் ஒருவரோடொருவர் ஏதும் பேசவில்லை பிறகு சுரேந்திரன் சேனைத் தலைவரை விளித்து, “அரசரைத் தான் காணோமென்றால் நாம் காவல் வைத்துச் சென்ற வீரர்கள் எங்கு போயினர்? ஏதுங் கைக்கூலி பெற்று காட்டிக் கொடுத்துவிட்டனரா?” என்றான்.
“ஒருக்காலும் அப்படிச் செய்திரார். மிக்க நம்பிக்கையுள்ளவர்கள். மேலும் அரசரிடத்து ஆழ்ந்த அன்புடையவர்கள் ” என்றார் சேனைத் தலைவர்.
“அங்ஙனமாயின், அவர்கள் எங்கு சென்றிருப்பர் ” என்றான் சுரேந்திரன்.
சேனைத் தலைவர் ஏதும் பதில் மொழிந்தாரில்லை. ஆழ்ந்த சிந்தனையோடும் அளப்பரிய துயரத்தோடும் செய்வதியாதெனத் தெரியாது ஒய்ந்து உட்கார்ந்துவிட்டார், சுரேந்திரன் மட்டும் கையில் விளக்கேந்திய வண்ணம் மாளிகை முழுதுஞ் சுற்றிவந்தவன், ஓரிடத்தில் நின்று வீரிட்டலறினான். அங்ஙனம் அவன் அலறிய இடத்தை நோக்கி சேனாதிபதி விரைந்துசென்றார், ஆங்கு அவர்கள் கண்ட காட்சி, அவர்கள் மனத்தைத் திடுக்கிடும்படி செய்தது. அரசன் பிரதாபை காவல் புரியும்படி சேனாபதியினால் வைத்துச் சென்ற வீரர்களிருவரும் கை கால் முதலியன பிணிக்கப்பட்டு கீழே கிடைத்தி வைக்கப் பட்டிருந்தனர்.
உடனே கட்டுகள் நீக்கப்பட்டன. ஆயினும், அவ்வீரரிருவரும் சோர்ந்து உணர்வற்றிருந்தனர். அவர்கள் முகத்தில் மெல்ல விசிறி தண்ணீர் அருந்தும்படி செய்த பின்னர், அவ்வீரர்கள் இழந்த உணர்வை மீண்டும் பெற்றனர். அவர்கள் உணர்வடையப்பெற்றதும் கமலாகரர் அரசனைப்பற்றி உடனே மிகக் கண்டிப்பான குரலில் வினாவினார்.
அவர்களிருவரும் தங்கள் கையினால் முகத்தை மூடிய வண்ணம் தேம்பித் தேம்பி அழுதனர், இங்ஙனம் அவர்கள் அழுவதைப் பார்த்து பிரதாபனுக்கு ஏதோ ஒரு துன்பம் வந்துவிட்டதென்று நிச்சயித்து அறிவு மயங்கி சோர்ந்து விட்டனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சுரேந்திரனும் கமலாகரரும் செய்வதியாதெனத் தெரியாது அறிவு மயங்கி நின்றுகொண்டிருந்தனர்.
“வீரர்களே, நேரமோ போய்க்கொண்டிருக்கின்றது. தாமதிக்காமல் உண்மையான விவரங்களைக் கூறினால். மேலே நடக்கவேண்டிய விஷயங்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம் ” என்றார் கமலாகரர்
“சேனாதிபதியவர்களே, உண்மையான விவரங்களைக் கூற எங்கள் நா எழவில்லை. தாங்கள் பணித்தவாறே அன்றுமுதல் இன்றிரவு மணி 11 வரையிலும் மிக்க விழிப்போடு அரசரைக் காவல்புரிந்து வந்தோம். திடீரென முகமூடி யணிந்த அறுவர், எங்களை எதிர்த்தமையானும், அவர்கள் அறுவரா யிருந்தமையானும் எங்களால் ஒன்றுங் செய்ய முடியவில்லை. ஆயினும், எங்கள் உயிரைக் கொடுத்தோனும் அரசரைக் காக்கமுயன்றோம். அவர்களில் ஒருவன் கூட எங்கள் வாட்கிரை யாயினன்- என்று முதற் காவலன் கூறி வரும்போது சேனாதிபதி அவனை இடைமறுத்து.
“மற்றவர் அரசரைத் தூக்கிச் சென்றனரோ?” என்ன, அவ்வறுவரில் ஒருவரேனும் உங்கட்கத் தெரிந்தவர்களாயில்லையோ? அவர்களது தோற்றம் எப்படிப்பட்டதென்பதை யாயினும் நீங்கள் கவனித்திருப்பீர்களல்லவா?” என்று கமலாகரர் அவர்களிடம் மீண்டும் வினாவினார்.
“இல்லை, அவர்கள் முன்னெச்சரிக்கையோடு தங்கள் உடம்பு முழுதும் மறைக்கும் நீண்ட அங்கியணிந்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் தலைவனாய்த்தோன்றியவரது குரல், எத்துனை மாற்றிப்பேசிய போதிலும் இராகுலனுடையதைப் போன்றே காணப்பட்டது” என்றான் காவலன்.
சற்று நேரம் ஏதோ சிந்தித்திருந்த கமலாகரர் சரேந்திரனை நோக்கி “சரி. இனி அதிக விவரஞ் சொல்லவேண்டியதில்லை. நேரமாகிறது. சுரேந்திர! இராகுலானே அரசரைத் தூக்கிச் சென்றிருக்க வேண்டும். ஒருக்காலும் அவன் அரசரைக் கொலைசெய்ய முயலான். அங்ஙனம் அவன் அரசரைக் கொலை செய்துவிட்டால் தனது நிலைமை இன்னம் மோசமாகிவிடுமென்பதை மதியூகியான இராகுலன் நன்கு உணர்ந்திருக்கலாம். ஆகவே, அரசர் கொல்லப்பட்டுப் போகவில்லையென்பது நிட்சயம். உயிரோடு கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் அரசர் கொலை செய்யப்பட்டுப் போனதாய், நினைத்து அரசரைத்தேடும் முயற்சியில் இறங்காமலிருக்க வேண்டுமென்னங்கருத்தோடுதான், பிரதாபனது ஆடைகள் இரத்தத்தில் தோய்க்கப்பட் டிருக்கின்றன. அன்பான சுரேந்திர, இப்பொழுது உண்மை உனக்குந் தௌ-வாய்ப் புலப்பட்டிருக்கும். அதிகநேரம் யோசிக்க வியலாது. நீ இந்த மூன்று நாட்களாய் எங்கட்கு செய்திருக்கும் உதவி என்றென்றும் மறத்தந்கியலா. அரசரை மறைமுகமாகவே நாம் தேடி கண்டுபிடிக்கும் வரையிலும் நீயே பிரதாபன் அகப்படாமலே போய்விடின், அல்லது கொல்லப்பட்டு போய்விடின் எப்பொழுதும் நீயோ மாயாபுரியின் மணிமுடி புனைந்து, மன்னனாகத் திகழலாம். கோமகள் விஜயாளும் உன்னை விரும்பி மணந்துகொள்ளுவாள்.கைம்மாறு கருதாது மழையை சொரியும் கார்முகிலேபோல, நீ எங்கட்குச் செய்யும் இப்பேருதவி எங்களால் ஞான்றும் – மறத்தற்கியலா” என்று மிக்க உருக்கமாய்ப்பேசினார்.
சுரேந்திரன் ஏதோ பேச வாயெடுத்தான். ஆனால், சேனைத்தலைவர் அதற்கு இடமளித்தாரில்லை. அதுவன்றி, இளவரசி விஜயாளும் உன்னை விரும்பி மணந்து கொள்ளுவாள்” என்று கூறிய கமலாகரரின் மொழிகள், சுரேந்திரனை ஆனந்தக்கடலில் ஆழ்த்தின. அவ்வாறான பாக்கியமும் தனக்கு கிட்டுமோ என்றேங்கினான். கிரீடம் தனக்குக் கிடைப்பதைப்பற்றி அவன் மனம் ஆனந்தமுறவில்லை. இளவரசி தனக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற விஷயமே அவனை பெரிதும் மகிழ்வித்தது. ஆயினும், உடனே பிரதாபனின் பரிதாபகரமான வதனம் அவன் அகக் கண்கட்கு புலனாயிற்று. அவனது பொருளான விஜயாளை தான் விழைவது பெரிதும் தவறென நினைத்தான். எங்ஙனமாயினும் அரசர் பிரதாபனைக் கண்டு பிடித்து அரசுரிமையை அவரிடம் ஒப்பித்துவிடுவதே சாலச்சிறந்த தென்று எண்ணினான். தான் பிரதாபனுக்கு பதிலாக அரசுரிமை ஏற்று, அரசனாய்த் திகழ்ந்தால் இளவரசி விஜயாளின் விலக்க முடியா நேசத்திலிருந்து தன்னை எங்ஙனம் காப்பாற்றிக்கொள்ள இயலுமென்பதே அவனது முக்கிய பிரச்சனையாய் இருந்தது. அன்றியும் ஒரு நாட்டைப் புரக்கும் புரவலனாக விருக்கத்தக்க யோக்கியதையும் ஆண்மையும் எனக்கு உண்டா? என்பதை முகற்கண் நான் பரிசீலனைசெய்து பார்க்கவேண்டும். காவலன் தொழில் இலேசானதல்ல. வரியை வசூலிப்பதும், வசூலித்த வரிப்பணத்தைவிருப்பப்படி செய்து இறுமாந்திருப்பதும் அரசனுடைய இலக்கணங்களல்ல. அரசருடைய பொறுப்புக்கள் அளவிளடங்காதன’ என்று சுரேந்திரன் பலவாறு சிந்தித்தான். சிந்தித்து, செய்வதியாதெனத் தோன்றாது கவலை கொண்டவதனத்தோடு ஏதுமே பேசாது நின்று கொண்டிருந்தான்.
நுண்ணிய அறிவுடைய சேனைத்தலைவர் அவனது உள்ளப்பான்மையை ஒருவாறு ஊகித்துணர்ந்து கொண்டார். ஆயினும் ஒன்றுங் கூறாமல் சுரேந்திரனது கையினைப் பற்றினார். சுரேந்திரனும் ஏதும் பதில்மொழிந்தானில்லை வாய் பேசாது கமலாகரரைப் பின் தொடர்ந்தான். கமலாகரர் வீரரிருவரையும் காலையில் வருமாறு பணித்து, சுரேந்திரனோடு வெளியே வந்து, பரிமாயூர்ந்து தலைநகரை நோக்கிக் கடுகிச் சென்றனர்.
9 – அன்புள்ள அரசன் அதிசயக் கடிதம்
முந்திய அத்தியாயத்திற் கூறப்பட்ட திடுக்கிடும் நிகழ்ச்சி நிகழ்ந்து மூன்று மாதங்கள் கடந்தன. அரசர் பிரதாபனை எத்துணையோ ஆட்களை விட்டு பிறர் அறியா வண்ணம் மர்மமாய்த் தேடிய போதிலும் எதும் பயனளிக்க வில்லை. ஆயினும், கமலாகரரும் சுரேந்திரனும் ஊக்கத்தோடு தேடுவதை விட்டுவிடவில்லை. பின்னும் பின்னும் முயற்சி செய்வாராயின். அரசர் பிரதாபன் அகப்படுதற்குரிய சிறுதடயமுங் கிடைக்கவில்லை. நமது கதாநாயகனும் கமலாகரரும் என்ன செய்வதெனத் தோன்றாது மிகவும் கவலையோடு காலங் கடத்தினர்.
இதற்கிடையில், அரசிளங்குமரி விஜயம் சுரேந்திரனிடத்து நாளுக்கு நாள் அளப்பரிய அன்பு பாராட்டி வந்தாள். தந்நலங்கருதாது பிறர் நலத்தையே கருதும் இயல்பினனான சுரேந்திரன், தன்னடக்கத்துடன் சற்று விலகியே நடந்து கொண்டபோதினும் அவளது ஒப்பற்ற அன்பை அவனால் முற்றும் புறக்கணித்துவிட முடியவில்லை, அவனும் அவளை முழுமனத்தோடு நேசித்தான். ஆயினும். இளவரசியிடம் அவன் தன் மனத்தை வெளிப்படையாய்த் திறந்து காட்டவில்லை.
சுரேந்திரன் செங்கோலைக் கைக்கொண்டு ஒருமாதம் வரையிலும் அரசியலை நிர்வகிக்கக்கூடிய போதிய திறன் உண்டாகவில்லை. எனினும் பிறகு, மாயாபுரி மக்களின்முன்னேற்றத்திற்கான பல காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டான், 18 வயதிற்குமேல் 45 வயதிற்குள்ளடங்கிய ஒவ்வொரு ஆண்மகனுக்கும் புத்தப் பயிற்சி அளித்தான். மக்கட்கு கல்வியில் ஆர்வத்தை யூட்டினான். வைத்திய வசதிகளையும், பயிர்த்தொழில். குடிசைக் கைத்தொழில் முதலியவற்றில் விருத்தியையும் அவன் பெருக்கினான். சுரேந்திரன் தன்னுடைய முழு கவனத்தையும் தங்கள் முன்னேற்றத்தில் ஈடுபடுத்தியதைக் கண்ட நாட்டுமக்கள், அவனை அன்போடு நேசித்து வந்தனர்.
பெண்ணினத்திடத்து அவனுக்குள்ள அளவுகடந்த அபிமானத்தினால் பெண்களின் விடுதலைக்கென உழைத்தான். பெண்மணிகளின் விடுதலையின் மூலமாகவே, நாட்டின்முன்னேற்றமும் சித்திபெறுமென்பது அவனது திடமான நம்பிக்கை. எந்த சமுகம் பெண்மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றதோ, அந்த சமூகம் ஒருகாலத்தும் தலைநிமிர்ந்து நிற்கமுடியாதென்பது அவனது கொள்கை, ‘ஒரு சமூகத்தின் வாழ்வும், தாழ்வும், உயர்வும், வீழ்ச்சியும் அதனுடைய பெண்களைப் பொறத்தவைகளாயிருக்கின்றன வென்பது மறுக்க முடியாத உண்மை. ஏன்? பெண்ணினம் சாதாரணமானதல்ல. அவர்கள் எதிர்கால மக்களின் தாய்மார்கள். சமூகத்தின் அபிவிர்த்தி அவர்கடம் கைவசமிருக்கின்றது’ என்றெல்லாம் அவன் அடிக்கடி எண்ணுவான். ஆகவே, அவன் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தீவிரமாக உழைத்தான்.
சுரேந்திரனால் பல பெண் பள்ளிக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன. பெண் மக்களின் உயர்தரப் படிப்பின் பொருட்டு பல கல்லூரிகளும், அனாதையாச்சிர மங்கள், பெண்மக்கட்கென தனியே மருத்துவச் சாலைகள் முதலியனவும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி கற்க சக்தியற்ற ஏழை மாணவர்கம்கென பல கல்விச் சாலைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன. கழகங்களென பெயரளவிற் கூறிக் கொண்டு திங்கள்தோறும் முறைபோட்டு சோறாக்கி பணக்காரரெனப் படுவோரெல்லாம் ஒன்றுகூடி உண்டுகளிக்கும் வழக்கங்கள் நீக்கப்பட்டு உண்மையும் தூய்மையுங் கொண்ட உறுப்பினரையுடையவைகளாக மன்றங்கள் மிளிர்ந்தன.
சுருங்கக் கூறுமிடத்து. மாயாபுரிமக்கள் இதுவரை கண்டிராதவாறு சுரேந்திரன் செங்கோல் செலுத்தி வந்தான். குடிமக்கள் அரசனை வாழ்த்தினர். மந்திரி பிரதானிகள் போற்றிப் புகழ்ந்தனர், மாற்றார் வெருவினர் நாட்டில் அமைதி நிலவியது.
இந்நிலையில், குடிமக்களும் மந்திரிப் பிரதானிகளும் உற்றார் உறவினரும் செல்வி விஜயாளை மணந்துகொள்ளாது அதிக நாட்கள் தாமதிக்கக் கூடாதென சுரேந்திரனிடம் பெரிதும் வேண்டிக்கொண்டனர். அதற்குக் காரணம் அவள் அரசர்க்கருகே அரசியாக அரியனையில் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழும் பொருட்டே.
இந்நெருக்கடியான நிலைமையை சமாளிக்க முடியாமல், கடமையே தங்கள் வாழ்க்கையின்பமெனக்கொண்ட செம்மல் சுரேந்திரனும், சேனாதிபதி கமலாகரரும் திணறிப்போயினார். எங்கு தேடியும் ‘பிரதாபனின் விஷயம் ஒன்றுமே புலப்படவில்லை. இவ்வமயம் இளவரசி விஜயாளும் தன்மணவினையைப்பற்றி குறிப்பாக சுரேந்திரனிடம் தெரிவித்தாள். ஆனால் சுரேந்திரனோ அவள் குறிப்பை உணராதவனே போலிருந்துவிட்டான்.
ஒருநாள் இவ்விஷயங்களைப்பற்றி மிக்க மர்மமாய் சுரேந்திரனும் கமலாகரரும் உரையாடிக் கொண்டிருந்தனர். சுரேந்திரன் சேனாதிபதியை விளித்து.
“சேனாபதியவர்களே, தாங்கள் என்னைப் பெரிய தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டுவிட்டீர்கள். எனக்கு என்ன செய்வதென்பதே தெரியவில்லை. ஒருபுறம் குடிமக்களும் ஏனையோரும் விஜயாளை அரசியாகக் காண பெரிதும் விரும்புகின்றனர். மற்றொரு புறம் இளவரசி விஜயாள் அளப்பரிய அன்போடு நேசிக்கின்றாள்; அவளுக்கு நான் ஏதும் தகுந்த மறுமொழியளியாமையான், என்பேரில் வருத்தத்தோடிருக்கின்றாள். இவைகட்கெல்லாம் தாங்கள் தான் ஒரு தகுந்த யோசனை கூறவேண்டும்” என்று வருத்தத்தோடு கூறினான்.
“தன்னலங்கருதா பிறர்க்குரியாள! நின்னைப்போன்றே யானும் ஏதுமறியாது தயங்குகின்றேன். ஆயினும் இதற்கு முடிவாய் ஓர் யோசனைக் கூறுகின்றேன். இன்னும் மூன்று மாதங்கள் வரையிலும் நம்மால் இயன்ற அளவு முயன்று அரசர்பிரதாபனைத்
தேடிப்பார்ப்போம். அங்ஙனம் நாம் முயன்று அவர் அகப்படாவிடின், இளவரசியை நீ மணந்துகொள்ளலாம். ஏனென்றால், அதற்குமேல் நம்மால் நிலைமையை சமாளிக்க இயலாது. நாம் கடமைத் தவறிவிட்டதாக நம் மனசாட்சியும் இடித்துரைக்காது” என்று அளப்பரிய துயரத்தோடு கூறினார் சேனைத் தலைவர்.
“அரசர் பிறகு அகப்பட்டுக்கொள்ளுவாராயின் என் செய்வது! அங்ஙனமாயின் வருந்தத்தக்க செயலன்றோ?” என்று துயரத்தோடு கூறினான் சுரேந்திரன்.
“உண்மையே. வெறென் செய்வது ! நிலைமை நெருக்கடியாயிருக்கிறது இவைகளையெல்லாம் நன்கு சிந்திக்காமல் நான் கூறுவதாய் எண்ணவேண்டாம். நான் கூறுவதைப்போல். நீ மூன்று திங்கள் கடந்தும் இளவரசியை மணந்துகொள்ளாயாயின், எல்லார்க்கும் உன்னைப்பற்றி ஐயந் தோன்றுவதியல்பே. இப்போது அமைதியாயிருக்கும் நாட்டில் கலகம் ஏற்படும், அன்றியும், இளவரசிக்கும் தகுந்த சமாதானம் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்” என்றார் சேனைத்தலைவர்.
சுரேந்திரன் ஏதும் பதில்மொழிந்தானில்லை, சேனாதிபதியும் அவனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
அன்று மாலை மணி ஆறிருக்கலாம், மழைச் சிறிது தூரிக்கொண்டிருந்தது. சில்லென்று எங்கும் காற்று வீசிக்கொண்டிருந்தது. சுரேந்திரநாதன் ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்தவனாக அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தான். கோமகள் விஜயாளைத் தான் எங்ஙனம் சமாதானப்படுத்துவது என்ற யோசனையிலேயே அவன் மனம் முற்றும் சென்றிருந்தது, அவளது மாசுமறுவற்ற அன்பும், தூய்மையான காதலும் அவனை அவளுக்கு அடிமைப்படுத்தின. ‘என்ன அழகு ! என்ன அன்பு! சந்தர்ப்பங்கள் ஒத்திருக்கும்போது நான் ஏன் அவளை மணந்துக்கொள்ளக்கூடாது’ என்று ஒரு வினாடி எண்ணினான். ஆனால் அடுத்த நிமிடமே அரசர் பிரதாபன், மிக்க துன்பகரமான நிலைமையிலிருந்துகொண்டு, பரிதாபகரமாய்த் தன்னைப்பார்த்து கெஞ்சுவதாய் சுரேந்திரனுக்குத் தோன்றியது. திடுக்கிட்டான்,. அவனது தூய்மையான மனம், தீயவழியை எண்ண இடமளிக்கவில்லை ஒருபுறம் காதல், மற்றொருபுறம் கடமை. என் செய்வான்! காதல் பெரிதா? கடமை பெரிதா? என்ற வினாவுக்கு விடைக்கண்டுபிடிக்க பெரிதும் முயன்றான். அவன் மனங் கலங்கியது. இங்ஙனம் பல்வேறுபட்ட எண்ணங்களும் மனத்தைக் குழப்ப அவ்வறையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தான்.
மெதுவாக பணியாள் ஒருவன் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தான். அவன் சுரேந்திரனை அண்மி, வெள்ளித் தாட்டொன்றை வணக்கத்தோடு நீட்டினான். அத்தட்டில் கடித மொன்று இருந்ததைக் கண்ட சுரேந்திரன், அக்கடிதத்தை விரைந்தெடுத்துக் கொண்டு பணிமகனை பார்த்து, “இக்கடிதத்தை உன்னிடம் யார் கொடுத்தது” என்றான்.
மாட்சிமை மிக்க மன்னர் பெருமானே ! யாரோ ஒரு நீண்ட மனிதன் இக்கடிதத்தை என்னிடங் கொடுத்து உடனே இதை அரசரிடம் சேர்ப்பித்து விடு’ என்று கூறிவிட்டு எங்கும் நிற்காமல் சரெலென சென்று விட்டான்” என்றான் பணிமகன்.
அப்பணிமகன் வெளியே சென்றதும் கடிதத்தை உற்று நோக்கினான். தனக்கு முன்பின் பழக்கமில்லாத யாரோ ஒரு பெண் பிள்ளையினால் அக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறதென்பதைத் தெற்றென உணர்ந்து கொண்டான். ஒவ்வொரெழுத்தும் மிக்க அழகாயும் முத்து முத்தாயும் இருந்தது. உடனே பிரித்து ஆவலே வடிவாய் படிக்கலானான். கடிதம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
“இப்போது மாயாபுரியை ஆட்சி புரியும் மாண்புடையோய்! இவ்வூருக்கு வட கிழக்கேயுள்ள வெட்ட வெளியில் ஓர் தனி மாளிகை யொன்றுண்டு. அம்மாளிகைக்கு இன்றைக்கு நாலாம் நாளிரவு மணி 8-க்கு தன்னந் தனியே மெய் காப்பாளர் எவருமின்றிவரின், உண்மையான பட்டத்திற்குரிய அரசர் பிரதாபனின் இருப்பிடம் அறிவிக்கப்படும்”. உண்மை உணர்ந்தேன்.
இக்கடிதத்தைப் படித்தபோது சுரேந்திரனக்குண்டான ஆச்சரியமும் ஆனந்தமும் அளவிட்டுரைக்க வியலாது. ஆயினும். இக்கடிதத்தில் எழுதப்பட்டிருப்பவை உண்மையா யிருக்குமாவென்ற ஐயமும், தான் தனியே செல்லின் யாது தீங்கு நேருமோவென்ற அச்சமும் ஒருங்கே கூடி சுரேந்திரனை வதைத்தது. எனினும், கடமையின் பொருட்டு அவன் எத்தகைய தியாகமுஞ் செய்ய தயாரயிருந்தான். எதற்கும் கமலாகரரைக் கலந்து ஆலோசிக்க எண்ணி, பணிமகனொருவனை யழைத்து, சேனாபதியை உடனழைத்து வருமாறு கட்டளையிட்டான். அக்கட்டளையைப் பெற்றுக்கொண்ட பணிமகன் அங்கிருந்தும் விரைந்து சென்றான்.
10 விருந்து
முந்திய அத்தியாயத்திற் கூறப்பட்ட சம்பவம் நிகழ்ந்த மறுநாள் இரவு மணி ஒன்பதிருக்கும். அரண்மனை முழுவதும் கண் கூசும்படி பல விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வீசியது. உயர்ந்த ஆடையணிகள் பூண்ட பெருமான்களும் பெருமாட்டிகளும் எங்கணும் நிறைந்து அரண்மனையை அழகுபடுத்தினர். அரண்மனையின் முன்வாயிலில் கீழே வெண்மணல் பரப்பிய பூப்பந்தரிடப்பட்டிருந்தது; தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன; முழுவும் பிற வாத்தியங்களும் முழங்கின; முரசங்கள் சிலைத்தன; சங்கங்கள் ஒலித்தன; சிறு கொடிகளும் பெருங்கொடிகளும் உயர்ந்து அசைந்து விளங்கின; தரையில் கண்ணுக்கினியவும் விலையுயர்ந்தனமான இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன.
இங்ஙனம் பெருஞ்சிறப்புற்று அவ்வரண்மனை அன்று விளங்கியதற்குக் காரணம் விஜயசுந்தரி சுரேந்திரனிடத்து சினமிக்கிருந்தமையான், அவளது, சினத்தைக் தணிக்கும் பொருட்டும், அவளோடு தனியே உரையாடி அவள்மாட்டு அவனுக்கிருக்கும் உள்ளன்பை வெளிப்படையாய்த் தெரிவிக்குமாறும் சிறந்த விருந்தொன்று செய்விக்கும்படி சேனைத்தலைவர் சுரேந்திரனுக்குக் கற்பித்திருந்ததே இங்ஙனம் இளவரசியை கௌரவிக்கும் பொருட்டு சுரேந்திரன் விருந்தொன்று செய்வித்தால், கூடிய சீக்கிரம் இருவரும் மணந்து கொள்ளுவரென்னும் வதந்தி மக்களிடையே பரவக்கூடுமென அரச தந்திரியன கமலாகரர் எதிர்பார்த்தார். அங்ஙனம் அவர் எதிர்பார்த்து ஏமார்ந்துவிடவில்லை. ‘அரசர் இளவரசிக்கு விருந்து செய்யப்போகிறார்’ என்ற செய்தி எட்டியதும் மாந்தரிடையே ஒர் பரபரப்பு ஏற்பட்டது. கூடிய சீக்கிரம் விஜயாளை அரசியாகக் கண்டு கண்கள் பெற்ற பயனை தாங்கள் அடையக்கூடுமேன ஒருவருக்கொருவர் மகிழ்வோடு பேசிக் கொள்ளுவாராயினர்.
அன்று அவ்வரண்மனை முழுதும் மகிழ்ச்சியே மயமாய்க்காணப்படா நின்றது. ஒவ்வொருவரும் உல்லாச மாய்ப்பேசிக்கொண்டிருந்தனர். உயர் குலப் பிரபுக்களும் உத்தியோகஸ்தர்களும் ஒருபுறத்தே கூடிக் கம்பீரமாய் வீற்றிருந்தனர். தேவமாதர் இவர் தாமோ என்று ஐயுறக்கூடிய வனப்புவாய்ந்த உயர்குலப் பெருமாட்டிகள் பலர், புன்னகை தவழ்ந்த வதனத்தை யுடையராய், மற்றொருபுறத்தே சிறகுவிரித்தாடா மயிற்குலம்போல அமர்ந்திருந்தனர். இவர்கள் குழலில் முடித்த புதுமலரின் மணமும், வந்தார்க்கும் வருவார்க்கும் வழங்கப்படும் சந்தனத்தின் நறுமணமும், தௌ-க்கப்படும் பனிநீரின் இன்மணமும் ஒன்றுகூடி பெருமணம் வீசி ஒவ்வொருவரையும் ஆனந்தக் கடலில் ஆழ்த்தின.
இங்ஙனம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியமாய் இருக்கும் அந்நேரத்தில், அரண்மனையின் மற்றொரு புறத்தே நன்றாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அறையொன்றில் சுரேந்திரன் துயரமே வடிவாய் நாற்கலியொன்றில் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் சேனைத்தலைவர் அமர்ந்து, அவன் இளவரசியிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையைப் பற்றி தெரிவித்துக்கொண்டிருந்தார். அவனும் அவர் கூறுவனவற்றை மிக்க கவனத்தோடு கேட்டு, அங்ஙனமே நடந்து கொள்வதாய் உறுதி கூறிக்கொண்டிருந்தான்.
கடிகாரம் ஒன்பது முறை அடித்தது. அப்பொழுது ‘அதோ, அதோ! இளவரசி வருகின்றார்’ என்ற சத்தம் பலவிடங்களில் எழுந்தது. உடனே எல்லோர் பார்வையும் வாயிற்புறம் சென்றது. ஆம்! அப்பொழுதுதான் இளவரசி விஜயசுந்தரி இருமருங்கும் தாதியர் சூழ்ந்துவர அரண்மனையுட் புகுந்தாள். சுரேந்திரன், இளவரசியை மிகவும் மரியாதையோடும், அன்போடும் எதிர்கொண்டு வரவேற்றான், அப்பொழுது வாத்தியங்கள் கடல்போல் முழங்கின; வாழ்த்தொலி அரண்மனை முழுதுங் கேட்டது; எல்லா பிரபுக்களும் பெருமாட்டிகளும் இளவரசிக்கு தலைவணக்கஞ் செய்தனர்.
விஜயாளின் வதனம் மலர்ந்து புன்னகை பூத்திருந்த போதிலும், வெளுத்திருந்தது. ஆங்கு குழுமியிருந்த சீமாட்டிகளிடையே அவள் போய் நின்றது, ஆயிரக்கணக்கான விண்மீன்களிடையே தோன்றிய திங்களைப்போன்றிருந்தது. அவள் தனது தௌ-வான இன்குரலால், சுரேந்திரனுக்கும் மற்றும் ஏனையோர்க்கும் அவர்கள் தனக்குச்செய்த கௌரவத்தையும் உபசரணையையுங் குறித்து வந்தனமளித்தாள்.
அப்பால்பெரு விருந்தொன்று நடந்தது. அரண்மனை முழுவதும் இளவரசிக்கும் அரசர்க்கும் ஆக்கம் பெருக எனும் வாழ்த்துரைகள் தொனித்தன தேயமக்கள் அரசிளஞ் செல்வி விஜயத்தை எத்துணை தூரம் நேசிக்கின்றன ரென்பதைப்பற்றி சுரேந்திரன் வியப்போடு கவனித்து வந்தான். அன்றிரவு வெகுநேரம் வரையில் விருந்தினர் கேளிக்கையும், ஆரவாரமும் ஓயவில்லை.
சுரேந்திரன் விஜயாள் அருகே அமர்ந்து வெகு இனிமையாய்ப் பேசி, அவளது சினத்தை மாற்ற முயன்று கொண்டிருந்தான். அவளும் அவனோடு இனிமையாய்ப் பேசிக்கொண்டிருந்தாளாயினும், அவள் வதனம் உள்ளடக்கிய துயரத்தைக் காட்டியது.
சிறிது நேரத்திற்கு பிறகு சேனாதிபதி காட்டிய குறிப்பை உணர்ந்த சுரேந்திரன், இளவரசியை அரண்மனையைச் சார்ந்த பூஞ்சோலைக்கு வருமாறு அழைத்தான். நுண்ணிய அறிவும், செவ்விய உள்ளமும் தந்த பேரொளி விளங்கிப்பொலியும் திருமுகத்தோடு கூடிய அம்மங்கை நல்லாள் நயனங்கள், சுரேந்திரனை உற்றுநோக்கின. ஏன்? சுரேந்திரன் தன்னை உள்ளன்போடு நேசிக்கவில்லையென விஜயாள் எண்ணினாள். அணிமுடியண்ணல் சிறிதுநேரம் திகைத்து நின்றான். பிறகு அச் சுந்தரவடி வரசியை நோக்கி, இனிமையும், பணிவும் இணைந்த குரலில் “விஜயா! என் கண்ணனைய விஜயா! சிறிது நேரமாயினும் பூஞ்சோலைக்கு வரமாட்டாயா?” என்றான்.
‘ஆ! அவ்வார்த்தைகள் என் கண்ணனைய விஜயா என்ற அவ்வார்த்தைகள் – அவள் இதயத்தில் எங்ஙனம் பாய்ந்தன! திடீரென்று நேர்ந்து ஒரு பெருந்துயரம் போலக் கொடிதாக அல்ல – மிகுந்த இன்பம் பயப்பதான மயக்கத்தை உண்டு பண்ணின, அம்மயக்கத்தால் தள்ளாடிக் கீழ் விழுந்து விடாதபடி அவள் அருகேயிருந்த சுவரின் மீது சாய்ந்தாள். அவள் கண்கள் மீண்டும் நமது கதாநாயகன் முகத்தை நோக்கின. ஆனால், அதே சமயத்தில் அவள் முகம் தன் இயற்கை நிறம் மாறி வெளிறிற்று. ஏனெனில் சுரேந்திரன் உண்மையில் தன்னைக் காதலிக்கவில்லை என்ற எண்ணம் அவள் ஞாபத்திற்கு மீண்டும் வந்தது,
சுரேந்திரன் மறுபடியும் விஜயாளை நோக்கி, “நல்லாய்! என்னோடு தனியே பூஞ்சோலைக்கு வர விரும்பவில்லையா? என்ன நினைக்கின்றாய்?” என்று வினாவினான்.
உடனே விஜயாள் சிறிது தடுமாற்றமுற்ற மெல்லிய இனிய குரலில், “தங்களோடு யான் வருதற்கு விரும்பாமலல்ல. தங்கள் விருப்பம் போலவே வருகிறேன். வாருங்கள். பூஞ்சோலைக்குப் போவோம்” என்று கூற இருவரும் அவ்விடத்தை விட்டுப் பூஞ்சோலையை நோக்கிச் சென்றனர்.
– தொடரும்…
– முதற் பதிப்பு: பெப்ரவரி 1928, மின்னூல் வெளியீடு – http://FreeTamilEbooks.com
2003 ல் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் மின்னூலாக்கப் பட்டு இங்கு: http://www.tamilheritage.org/old/text/etext/sidi/sidistor.html வெளியிடப்பட்டது.