காதலான ஆழம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 11,283 
 
 

இந்த செய்தி வந்ததில் இருந்து – அப்பா எத்தனை விடயங்களை சாதித்திருக்கிறார் என்று எனக்குள் ஒரே ஆச்சரியம். “எனக்கு படிக்க பணம் தந்தவர் , எனக்கு திருமணம்பேசி செய்து வைத்தவர் , நான் அவரது வளர்ப்புப் பிள்ளை , எப்ப வந்தால் பார்க்கலாம் ?” என அழைப்பின் மேல் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. நேற்றில் இருந்து தொலை பேசி அலறிக்கொண்டு இருகிறது. சில தசாப்த பிரிவின் முடிவில் அப்பாவை பார்க்கப்போகிறோம் என்ற செய்தியால் . என்னுள் அவர் இப்போது எப்படி இருப்பார் என்ற கற்பனை மேலும் மேலும் வியாபித்தது. அதனூடே அவர் எங்களை பிரிந்து வெளிநாடு போன நினைவு என் கண்முன்னே நிணலாட்டியது .

“ இது என்ர வீடு … என்ர அம்மா எனக்காக – முன்பணம் கட்டி பதிவு செய்து தனக்குப்பக்கத்தில இருக்க வேண்டும் எண்டு எடுத்த அறை – இதிலதான் நான் இருப்பன் நீர் வெளியில போகலாம் ” இது அம்மா.

அப்பாவின் குரல் எனக்கு கேட்கவில்லை. ஆனால் அதற்கு அவசியம் இல்லை. அம்மாவின் குரல்தான் அந்த விடுதியின் மூன்றாவது மாடியில் இருக்கும் இருபது அறையில் உள்ளவர்களின் செவிப்பறையிலும் அறைவதுபோல் கேட்கிறதே ? அப்பாவின் என்ன கேள்விக்கு அம்மாவிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று பக்கத்து அறையில் இருக்கும் என்னால் இலகுவில் அனுமானிக்க முடியும் . ஆனாலும் எந்த கோள்வி அம்மாவின் – இந்த பதிலுக்கு பொருந்தும் என சற்று குழப்பமாகவே இருந்தது.

அப்பாவுக்கு சண்டை பிடிக்கத் தொரியாது .தான் பேசுவது தொடர்புடைய நபருக்கு மட்டும் கேட்டால் போதும் என நினைப்பவர். தேவைக்கு அதிகமாக சொற்களையோ சக்தியையோ செலவு செய்ய விரும்பாதவர் ஆனால் தர்க்க ரீதியாகவும் நியாயத்தின் பாலும் நின்று பேசுவார். ஆனால் அம்மா உரக்க பேசி – அப்பாவின் பலவீனம் என அவர் நினைக்கும் அமைதியான சுபாவத்தின் மூலமோ , அல்லது அழுது அலறி அயலவரின் அனுதாபத்தை தேடுவதன் மூலமோ குள்ளத்தனமாக காரியத்தை சாதித்து விடுவார். ‘வெளிய போ ..’ என பேசிய பிறகு அப்பா உள்ளே இருப்பார் என நான் நினைக்க வில்லை ஆனால் அதற்குப் பிறகு அவரும் வர வில்லை , அம்மாவின் சத்தமும் வரவில்லை .

அப்பா உலக நடை அறிந்து ஒழுகுபவர், மென்மையான சுபாவமும், எதையும் முன்கூட்டியே ஆராய்ந்து பார்க்கும் ஒரு பக்குவமும் , பேதம் பாராமல் எல்லோக்கும் உதவி செய்யும் ஆழமான அன்புமுடையவர். இதை அவரை பார்த்த மறு கணமே யாரும் சொல்லிவிடுவார்கள்.

அந்த சாமத்தில வெளியில போ என்றால் எங்கே போவார் ?. அது கொழும்பு தலைநகரம் , இன பிரச்சனை அதிகரித்து இருக்கும் காலம் , பதட்டமான நேரம் . பகலில் போகும் போதே என்னையும் கூட்டிக் கொண்டு போவார் ; அப்போதுதான் நிச்சயமாக வீடு திரும்பலாம். இப்படி இரவில் தனியே எங்கு போவார்?. பொழும்பு எங்கே எங்களின் ஊர் மன்னார் எங்கே..?

இது ஒரு புறம் இருக்க ; அந்த நாகரீக விடுதியில் வெளிநாட்டுக்கு போக என பலர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்தார்கள். அனேகமானவர்கள் பெண்கள் ; மணப்பெண்கள் , தாய்மார்கள் . அப்பாவின் வயதை ஒத்த இளைஞர்கள் என நிறைந்திருந்தார்கள். அந்த விடுதியில் எங்காவது ஒரு அறையில் எதாவது வாக்குவாதம் நடந்தால் ஏறக்குறைய மூன்று மடியிலும் உள்ள 58 அறைகளில் உள்ள அனைவரும் அந்த அறையின் முன்னால் கூடிவிடுவார்கள் . யாருக்கும் அங்கே வேறு வேலை இல்லை . வெளி நாட்டு காசை எடுத்து சாப்பிட்டுவிட்டு கூடிக் கூடி கதை அளப்பதே வேலை . விடுதி உரிமையாளர் உட்பட. இந்த சண்டை ஒருவேளை பகலில் நடந்திருந்தால் சாப்பாடு எடுக்க போன வகையால் சிலர் சந்தர்ப்பத்தை தவற விட்டிருப்பார்கள் . இதுதான் இரவாச்சே யாருக்கும் குறை இல்லை . ஆறே வயதான எனக்கே அம்மாவின் கூச்சலின் பின் அறைக்கு வெளிய பார்க்க வெக்கமாக இருந்தத?!
?? . அப்பா எப்படி இவர்களை எதிர் கொள்ளப் போகிறார் , முகம் கொடுத்து பேசப்போகிறார். இது பற்றி அம்மாவோ அம்மம்மாவோ சிந்தித்த மாதிரி எனக்கு தோன்ற வில்லை .

அம்மம்மாவை குறை செல்ல முடியாது முன்பொருநாள் இப்படி சண்டையின் நடுவே புகுந்து அம்மாவை தாறு மாறாக பேசினார். – அதற்கு அம்மா “ நான் மாட்டன் எண்டு சொல்லச் சொல்ல நீதானே கட்டி வைவச்சனி ” என்று பதில் இறுத்தார். – அன்றில் இருந்து அம்மம்மா வாய் திறக்காத அதே வேளை அப்பாவும் மனமுடைந்து போனார். – இதற்காக யாரும் எங்கள் பெற்றோரின் திருமணம் – பேசி முடித்த திருமணம் என்று எண்ணி விடக்கூடாது . ‘ காதலிக்கும் போது தான் பத்து பன்னிரண்டு கடிதம் போட்டபின்பு தான் அப்பா ஒரு பதில் எழுதுவாராம்’ – என அம்மாவே கூறுவார் .

ஏழாம் இலக்க அறையில் எனக்கு அருகில் அம்மம்மா மண்ணெண்ணை அடுப்பில் எதோ வேக வைத்துக் கொண்டு இருந்தார். ‘ எட்டாம் அறையில் சண்டை முடிந்து விட்டது இனி படுக்கலாம் தானே ‘ என்பதை சொல்லாமல் சொல்லுவதாக அம்மம்மா என்னிடம் ‘பசிக்குதா ?’ என கேட்டார் . நான் இல்லை என தலையை ஆட்டி விட்டு முழங்கால் இரண்டுக்கும் இடையில் தலையை வைத்தபடி கல்லுப்போன்ற வைரமான சீமெந்து தளத்தை பார்த்த படி இருந்தேன் .ஓர் எறும்பு சோறு ஒன்றை தூக்கிக்கொண்டு ஈரமான காட்டில் உள்ள தனது நிலத்தடிப் புற்றை தேடி மூன்றாவது மாடி முழுக்க மூசி மூசி சுற்றி வந்தது

என் மண்டைக்குள் அம்மாவின் அந்த பதிலுக்கான கேள்வி இன்னமும் ஓடிக் கொண்டிருந்தது.
அப்பாவை வெளிநாடு அனுப்ப என்று நாங்கள் கொழும்பு வந்திருக்கிறோம். ஆனால் அந்த பயணம் ஏதோ காரணத்தால் பின் போடப்பட்டுக் கொண்டே போனது . ஒரு வேளை அப்பா ‘ பயணம் சரி வரும் வரை ஏன் காசை கரியாக்கி பிள்ளைகளின் படிப்பையும் குழப்பி வெளிய போய்வரவும் பயந்து கொண்டு ஏன் இந்த கொழும்பில் இருக்க வேண்டும் ? மன்னாருக்கே போய்விடலாம் . எல்லாம் சரி வந்ததும் வரலாம் தானே..? என கேட்டிருக்கலாம் . அதற்கு அம்மா இப்படி எகிறிக் குதித்து இருக்கலாம். ஆனாலும் அதற்காக வெளிய போ என்று சொல்ல வேண்டியதில்லை . ஏன் இந்த அப்பா இப்படி வம்பை விலைக்குவாங்கிறார் ‘ புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா ? என்று – விட்டு விட்டு கும்பல்ல கோவிந்தா போட வேண்டியது தானே’ எனக்கு ஒன்றும் புரியவில்லை.

தொடர்ந்து அம்மாவின் சண்டை உக்கிரமடைந்தது. அப்பா வர வர ஒழுங்காக சாப்பிடுவதில்லை , முடி வெட்டுவதில்லை , தாடி மளித்து மாதக் கணக்காகிறது . கண்ணையும் மூக்கையும் வைத்தே எங்கள் அப்பா என அடையாளம் காணும் அளவுக்கு முகம் மாறிப்போனது. அதற்காகவும் சண்டைகள் வந்து போனது . அவர் பக்க நியாயத்தை கேட்க இங்கே யாரும் இல்லை. அப்பாவுக்கு சாப்பாடு நான் -அக்கா – தம்பி மூவரும் தான் பரிமாறுவேம். எங்கள் முகத்திற்காகவே சாப்பிடுவார். எங்களின் முக வாட்டம் அவரை மேலும் வேதனைப்படுத்தி இருக்கவேண்டும்.

இரண்டு மாத பிரசவ கூச்சலின் பின் ஒரு தீர்வு பிறந்தது . இல்லை ஒரு பந்தம் இறந்தது.
அதாவது அம்மாவின் ‘ விவாகரத்து கோரிக்கை’ க்கு அப்பா சம்மதம் தெரிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சனைக்கு மூல காரணமே அம்மம்மாதான். அம்மம்மா , அம்மா இருவரும் பிரச்சனையை அறிவு ரீதியாக அணுக தெரியாது . தாங்கள் வாய் தவறி ஒன்றை செல்லிவிட்டால் கூட எந்த விலை கொடுத்தும் அதை நிரூபிக்க முனைவார்கள் .

எங்கள் பெற்றோரின் காதல் விவகாரம் அம்மம்மாவிக்கு தெரிய வந்த போது ‘ அப்பா தான் தன் மகளுக்கு மாப்பிள்ளை ‘ என அம்மம்மா தீர்மானித்து விட்டார். அனால் ஏதோ காரணத்தால் திடீரென அம்மா அப்பாவை நிராகரித்து விட்டார். இந்நிலையில் அம்மம்மா தான் நினைத்ததை செய்தே தீருவேன் என்று பிடிவாதமாய் நின்று – அம்மாவுக்கு தும்புக்கட்டை அடி போட்டு காரியத்தை சாதித்து விட்டார். இதற்கு அம்மாவின் பண ஆசையும் ஒரு காரணம் . எங்கே அம்மம்மா தன்னை தெரவில் விட்டுவிடுவாரோ என்றபயம். அனால் இது எதுவும் அப்பாவிக்கு தெரியாமல் போய்விட்டது . தாயும் மகளுமாய் மூடி மறைத்து விட்டார்கள்.

அம்மம்மாவின் மகள் தானே அம்மா இப்போது
அம்மாவின் முறை ஆரம்பித்து விட்டது. தான் சொன்னதை கேட்காமல் போன அம்மம்மாவை மூன்று பிள்ளைகளுக்கு தாயான பின்னும் பழிக்குப் பழி தீர்த்து விட்டார். இதில் ஒன்றும் அறியாத அப்பா பலிக்கடாவாக நடுவில் நிக்கிறார் ; எங்கள் மூவரின் வாழ்க்கை பற்றி அப்பாவை தவிர இங்கே யாரும் கரிசனை கொள்வதாக இல்லை.

அம்மா வெற்றிக் களிப்பில் இருந்தார். அம்மம்மா தோற்கடிக்கப்பட்டார். அப்பா பாதிக்கப்பட்டார் . நாங்கள் பக்கவிளைவுகளானோம். அமைதி .., அமைதி .., அமைதி .., மயான அமைதி . அந்த விடுதியே விறைத்துப் போய் நின்றது .

வெளியிலும் ஒரு மழை பெய்து ஓய்ந்திருக்க வேண்டும். கட்டிடங்களில் நீர் நனைந்து தொங்கிக் கொண்டு இருந்தது. மெல்ல மெல்ல தூறலாக ஆரம்பித்து ஏங்கி நின்கும் பூவுலகத்திற்கு பாலூட்டிப் போகும் வானாமிர்தமான ஒரு சிறு மழை பெய்து ஓய்ந்திருந்தது . ஆனால் அது எதற்கும் பலனின்றி வந்த தடம் தெரியாமல் வடிந்து சாலை சாக்கடையில் விழுந்து உவரிக்கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது .

இப்போதெல்லாம் அப்பா எங்கே செல்கிறார் எங்கே சாப்பிடுகிறார். எதுவும் எங்களுக்கு தெரியாது . நான் அப்பாவை நினைக்காத வேளை இல்லை. இதனால் நானும் அம்மாவிடம் பேச்சு வாங்க ஆரம்பித்தேன். என்னை விவாகரத்து செய்ய அம்மாவிடம் சட்டம் ஏதும் இல்லை . நான் சாப்பிடும் போதும் , கணகணப்பாக போர்வைக்குள் சுகமாக தூங்கும் போதும் அப்பாவின் நிலை பற்றிய எண்ணம் என்னை துன்புறுத்தும் .

இந்த விவாகரத்திலும் அம்மா ஒரு விவகாரம் வைத்திருந்தார். எக்காரணம் கொண்டும் அப்பாவை அம்மம்மா வெளிநாடு அனுப்பும் வரை இது பற்றி அம்மம்மாவுக்கு தெரியப்படுத்தக்கூடாது என்பதே அது. விவாகரத்தன் முடிவிலும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு அம்மாவுக்கு அப்பாமேல் நம்பிக்கை இருந்திருக்கிறது .

அப்பா அவ்வப்போது எங்களை மட்டும் வந்து பார்த்து விட்டுப் போவார். அவர் வரும் போது நான் நிறைய சாப்பாடு போட்டுக்கொண்டு போய் கொடுப்பேன். என்னையே சில நொடிகள் பார்ப்பார். அந்தப்பார்வை ‘ கடலில் இருந்து உயிர் தோன்றி.. , பின் கரையேறி…, பின் மரமேறி.., வாலறுந்து.., பின் முடித்தோல் இழந்து.., இந்த வாழ்வை அடைந்த.. இக் கணம் வரையான ; உயிர் தோன்றிய முழு பரிணாமத்தையும் என்னுள் கடத்தும். அவரை முற்றும் அறிந்த ; இன்னும் நானே அவராகி விட்ட ஒரு அந்தரங்க உணர்வு என்னுள் பிரவாகம் எடுக்கும் . ‘எல்லாம் தெரியும் அப்பா..’ என்பது போல் கண் மடல் அசைத்து சாப்பிடச் சொல்வேன். என் மகிழ்ச்சிக்காகவே சாப்பிடுவார். வாடியே கூடி நின்று வேடிக்ககை பார்க்கும். எதையும் கணக்கெடுக்காமல் என்னாலே சாப்பிடுவார்.

அம்மம்மா எரிந்து விழுவார் ‘ வெளிநாட்டுக்குத்தான் போகப்போகிறார் தனிய இருக்கலாம் இப்பவுமா மகளை விட்டுப்பிரிந்து இருக்கவோண்டும்’ என சாடை மாடையாக சொல்லிக்கொள்வார். அம்மாவும் அப்பாவை சலித்துக்கொள்வதுபோல் பெருமூச்சு விடுவார். இது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு எங்களுக்காகவே அந்த உள்ளம் உயிர் தாங்கி உலாவியது.

அக்கா பொது விதி ஒன்றை கண்டுபிடித்தவள் போல் அப்பாவிடம்.

“ அப்பா… அம்மாவுக்கு விவாகரத்து கொடுத்தால் எங்களையும் பிரிந்து இருக்க வேண்டுமா.. ?” என்று
கேட்டாள்.

எந்த மனிதமும் இன்னொரு மனிதத்தை பார்த்து சொல்ல கூடாத ஒரு பேச்சை அம்மா சொல்லியிருந்தார் . அதை வேறு வழி இன்றி அப்பா சொன்னார். ‘ அம்மாவுக்கு என்னை பார்க்க பிடிக்கவில்லையாம் செத்தாலும் பறவாய் இல்லை முகத்தில முளிக்க வேண்டாமாம்’ என்று தலையை கீழே போட்ட படி சொல்லி முடித்தார். அதை கேட்டதில் இருந்து அக்காவும் அம்மாபோல் ஆகிவிட்டாள். அம்மா பழம் – என்றால் இவள் காய் என்பாள். காய் என்றால் இலை என்பாள். ஆனால் அம்மா அக்காமேல் பாசமாய் பொழிந்தார்.

அப்பாவை – பார்த்து, பேசி , அவர் தோளில் ஏறி காதை திருகி , பின் மடியில் விழுந்து ,எழும்பி முத்தமிட்டு , விளையாடி இரண்டு மாதமாகி விட்டது . இப்போதெல்லாம் எங்களை வீதியில் நின்று பார்த்து விட்டுப் போய்விடுகிறார் . ஏன் என்று ஆராய்ந்ததில் – அன்று அக்கா அப்பாவுடன் பேசிவிட்டு அடுத்தநாள் அம்மாவை எதிர்த்தப் பேசியதும் . அம்மா அந்த விடுதி உரிமையாளரிடம் அப்பாவை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கூறியதாக உரிமையாளர் பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழுந்தது.

இப்போது அம்மாவே விரும்பினாலும் அப்பாவை பார்க்க முடியாது. இந்த நாட்டிலேயே அவர் இல்லை . ஆரம்பத்தில் அது நல்லதாகவே பட்டது பெரும் குறையாக எங்களுக்கு இருக்கவில்லை . நாங்களும் மன்னார் வந்துவிட்டோம் . ஆனால் காலம் போகப் போக அப்பா மட்டும் இருந்தாலே போதும் என்று ஆகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அம்மாவின் இரண்டாவது கணவரே முதல் காரணமாக இருந்தார்.

அம்மா அவரையே அப்பா என கூப்பிடும்படி சொன்னதும். அவர் எங்கள் அப்பாவை அவ்வப்போது குறை கூறுவதும். ஒரு நரக வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளிவிட்டது.

அப்பாவிடம் இருந்து பணம் மனம் போல் வந்து கொண்டே இருந்தது . அது ஒன்றைத்தான் பிள்ளைகள் பொருட்டு செய்ய முடியும் என்பதால் அவர் தாராளமாகவே செய்தார். அம்மாவின் திட்டம் அமோக வெற்றி அடைந்தது . அப்பாவை அம்மா பூரணமாக தெரிந்து வைத்திருந்தமையே இந்த வெற்றிக்கு ஒரு காரணம். அதனால் விரட்டி அடிக்கப்பட ஒரு கணவரின் உழைப்பிலும் , இன்னொரு கணவரின் அரவணைப்பிலும் அவர் வாழ்க்கை பொங்கி வழிந்தது . அவ்வப்போது இரண்டாவது கணவருடனும் வாக்குவாதம் நடக்கும் ஆனால் அடுத்த கணம் ஒற்றுமையாகி விடுவார்கள். இதை அம்மா – அவர் தன்மேல் அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறார்- என பீற்றிக்கொள்வார். ஆனால் அவரோ தான் வயிறு வளர்ப்பதோடு அவரது முதல் மனைவியையும் வெற்றிகரமாக பேணிக்காக்க அப்பாவின் காசை அம்மா உடாக அம்மாவுக்கு தெரியாமல் இறைத்துக்கொண்டு இருந்தார் . “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வ!
ளியோடி புல்லுக்கும் பொசிவது போல்” .
அப்பா எங்கள் மூவரின் கைத்தொலைபேசிகளுக்கு அழைப்பார் மணிக்கணக்கில் பேசுவோம் .

அம்மா பற்றிய எனது அபிப்பிராய பேதத்தை அப்பாவிடம் சொன்ன போது அவரின் பதில் என்னை கட்டிப்போட்டு விட்டது . ‘என்ன நடந்தாலும் அவர் உங்கள் தாய். நானே அவரை மன்னித்து விட்டபின் நீங்கள் அம்மாவுடன் எந்த விவாதத்திற்கும் செல்லக்கூடாது. அவர் விருப்பப்படி அவரை வாழ விடுங்கள். எந்த தொந்தரவும் கொடுக்க வேண்டாம். இந்த வாழ்க்கைகாக அவர் நிறைய போராடி இருக்கிறார்’ என்று உறுதியாக கேட்டுக்கொண்டார்.

இதை அக்கா செவி மடுக்க வில்லை. பதிலுக்கு பதில் கேட்டு விடுவாள். தம்பி அம்மாவின் செல்லப் பிள்ளை அவனுக்கு அப்பாவை நேரில் பார்த்தது பற்றி ஞாபகம் இல்லை. இது அவர் மேல் பாரிய ஈடுபாட்டை அவனுக்கு ஏற்படுத்த வில்லை. இவரையே அப்பா என அவ்வப்போது கூப்பிடவும் செய்தான். என்னால் அப்பாவின் சொல்லை மீற முடியவில்லை . அப்பாவிற்கு அருகில் இருந்து தவிச்ச விடாய்க்கு ஒரு செம்பு தண்ணி எடுத்துக் கொடுக்க முடியவில்லை . அவர் கேட்டு எதை செய்து கொடுத்து விட்டேன் . இதை இறுதி வரை நிறைவேற்றினேன். என்ற பெயரையாவது அவரிடம் பெற்று விட வேண்டும் என்ற விருப்பில் அம்மாவின் பேச்சுக்கெல்லாம் தலை ஆட்டினேன். இப்படியே காலம் ஓடியது.

சிறிது காலம் அப்பா மகிழ்ச்சியாக இருக்க உதவியவர் என்ற ஒரு காரணத்தை விட எனக்கு அம்மா மேல் எந்த அபிமானமும் இல்லை இதை அவரும் அறிவார் . அதனாலேயே பல தருணங்களில் ‘நீங்கள் என்னை அல்ல – அப்பாவையே முன்மாதிரியாக கொள்ள வேண்டும் ‘ என கூறிக்கொள்வார்.

அம்மாவோடு அப்பா வாழ்ந்த அந்த காலத்தை அப்பா இப்போது எப்டிப்பார்க்கிறார் என்று தெரியவில்லை . அனால் அவர் உண்மையான அன்புடனே இருந்தார் . அவர் இந்த இருபது வருடமாக அம்மாவுடன் பேசாது இருந்தாலும் அக்கறை இல்லாமல் இருக்கவில்லை . அது எங்களுக்காகவும் இருக்கலாம் அல்லது அப்பழுக்கு இல்லாத ஒரு தெளிந்த மனித நேயமாகக் கூட இருக்கலாம்.

அக்கா ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அந்த திருமணத்தில் அம்மாவால் ஒரு ரகளையே உருவாக்கி விட்டது . பெண்வீட்டாருக்கு தந்தை வெளிநாட்டில் என்றும் , மாப்பிள்ளை வீட்டாருக்கு தனது தற்கால கணவரையே தந்தை என்றும் கூறி விட்டர் . ஒரு கட்டத்தில் குட்டு உடையவே பெரும் குழப்பமாகி விட்டது . காதல் திருமணம் என்பதால் மாப்பிள்ளை அக்காவின் கழுத்திலேயே தாலி கட்டினார் .

தம்பிக்கும் அப்பாவின் உறவுக்காற பெண்ணை பேசி திருமணம் முடிந்து வைத்தார் அப்பா . எனக்கு இப்போது வேண்டாம் என்று செல்லி விட்டேன்.

இப்போது வீட்டில் நானும் அம்மாவும் தான். புதிய கணவர் – மறைத்து வைத்த அந்த முதல் மனைவி பற்றிய சமாச்சாரம் அம்மாவுக்கு தெரிய வந்ததும் பிரிந்து போய் விட்டார். திரும்பியும் வந்தார் ஆனால் அம்மா திருப்பி அனுப்பி விட்டார்.

இப்போது அம்மாவுக்கு பக்தி முத்தி பரவசமடைந்து காணாத பாம்புகளுக்கும் , கண்ட கண்ட பாறாங்கல்லுக்கும் பாலாய் வார்க்கிறார்.

முன் நெற்றியில் ஒரு நரைமுடியை கண்டதில் இருந்து இந்த பாலாபிசேகம் ஆரம்பித்திருக்கிறது. அவ்வப்போது கண்ணாடி முன் நின்று அந்த முடியை மணிக்கணக்கில் பார்க்கிறார். ஒருவேளை பாலூற்றினால் பழைய முடி திரும்ப கிடைத்து விடும் என்று குருவி யோசியம் சொன்னதோ என்னவோ ? .

விதரங்களை வலை வீசி பிடித்து அனுட்டிக்கிறார். அய்யர் வேசத்தில் வரும் ஆண்டிகளின் கால்களிலும் விழுந்து எழும்புகிறார்.

நான் அப்பாவோடு மனம் விட்டு விடயங்களை கிலாகிப்பது போல் அம்மாவுடன் பேசுவதில்லை. ” ஆம்…”, “இல்லை ” . அதற்கு மேல் இல்லை .

நான் திருமண வயதை தாண்டியும் இப்படி தனியே இருப்பதை நினைத்து – இப்படி கோயில் கோயிலாக வேண்டுதல் வைத்து ஏறி இறங்குவதாக மற்றவர்களிடம் பேசிக்கொள்கிறார். – திருமணம் முடித்தும் அப்பாவை பிரமச்சாரியாக ஆக்கிய இவருக்கு திருமண பந்தம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன்.

என்னை கடையில் சாப்பிடச்சொல்லிவிட்டு இல்லாத கோயில்கள் தேடி அலைகிறார். எனக்கு உள்ளூர சிரிப்பு . அப்பாவின் அருமையும் தன் தவறும் தெரிந்து இப்படி பாவ மன்னிப்பு கேட்டு அலைகிறார்..? ஏழு யென்மத்திற்கு போதுமான பாவம் செய்து விட்டார் . இந்த வாழ்க்கையில் இவர் எதையும் இழக்கவில்லை . அதனால் இவர் மேல் எனக்கு எந்தவித அனுதாபமும் இருந்ததில்லை . ஆனால் அன்று இருந்த அதே அப்பாதான் இன்றும். யாரிடமும் அதை அவர் அடைவு வைக்கவில்லை என்பதில் இருந்து அவர் அவ்வளவு ஆழமாக எங்களை நேசித்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.
வெறும் சதை பிண்டங்களுக்கு ஆசைப்பட்டு காதலையும் அதன்பால் விழையும் வாழ்வையும் புத்திர பாசத்தையும் அவர் கலப்படம் செய்யவில்லை. நம்பிக்கை என்பது கனவாய் போக கற்பனையே வாழ்க்கை என வாழ்பவர்.

நான் நாள் முளுக்க இப்படி அப்பாவின் ஞாபகத்திலேயே கரைகிறேனே. நேற்று இந்த செய்தி வந்ததில் இருந்து . என்னால் அப்பாவை நினைப்பதை விட வேறு எதுவும் நினைக்கத்தோன்ற வில்லை. அக்கா அத்தான் , பிள்ளையுடன் வந்திருந்தார். தம்பியும் , மனைவியும் வந்து விட்டார்கள். இதை விட அப்பா உதவி செய்தசெய்தவர்கள் ஒவ்வெரு உதவியை பிரேரித்துக் கொண்டு அவரின் முகம் தெரியாதவர்கள் கூட ஒரு முறை நேரில் பார்த்து விட வேண்டும் என வந்திருந்தார்கள். அவர்களுக்கு அப்பா அனுப்பிய படங்களை காட்டினேன். அகல விழித்துப் பார்த்தார்கள். அப்பாவைப்பற்றி என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். எனக்கோ – அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிய வில்லை . இனம் புரியாத பாரம் ஒன்று இதயத்தை அழுத்தியது . இமைகளால் சரி செய்தேன் கண்ணீர் அரும்பியது .

“ என் தெய்வத்தின் பிரேதத்தைக்கூட பார்க்க முடியாத பாவியாகி விட்டேன்” என்று சவுதியில் கட்டுமான பணியின் போது விபத்திற்க்கு உள்ளாகி சிதைந்த அப்பாவின் பிரேதப் பெட்டியை கட்டிக்கொண்டு கதறி அழுதார் அம்மா.

Print Friendly, PDF & Email

1 thought on “காதலான ஆழம்

  1. பிள்ளைகளுக்காக வாழும் தமிழ் கலாச்சார அம்மா ,அப்பா இன்னும் குடும்பமாகவே ஆனால் அதற்கு அப்பால் வாழும் பல தற்கால பெற்றோரின் ஒரு குறுக்குவெட்டு முகமே இக் கதை . பிரசுரித்தமைக்கு நன்றி . பசுந்திரா – சசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *