காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 5,423 
 

“இந்த ஃபேனக் கொஞ்சம் குறைச்சிடுங்க! குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு! “

“ஏன்! ஜென்னி! ஜுரம் இருக்கா! எதுக்கும் டெம்பரேச்சர் பாக்கட்டுமா ??”

“அதெல்லாம் இல்லை ராஜ்! உடம்புக்கு ஒண்ணுமில்லை! ”

ராஜன் கெட்டியான போர்வையை எடுத்து போர்த்தி விட்டார்!

“சரி! ரொம்ப நேரம் முழிக்காம நேரத்தில தூங்குங்க! நீங்களும் நேத்தெல்லாம் இருமிட்டுதான் இருந்தீங்க!

நேத்து ஏன் ஷீலா ஃபோன் பண்ணல! வர வர முன்ன மாதிரி கூப்பிட மாட்டேங்குது! அவள நெனச்சா கவலையா இருக்கு!!!”

“ஜென்னி! பொறுமையா இரு… நீ தினம் ராத்திரி கவலப்பட
புதுசு புதுசா எதையாவது கற்பனை பண்ணி வச்சிருப்ப!!

பேசாம தூங்கு! சர்ஜரி பண்ணி முழுசா ஒரு வாரம் கூட ஆகல!!!”

“கற்பனையெல்லாம் ஒண்ணுமில்லை!

போன தடவை நாம போயிருந்தபோது அவ குரு கிட்ட நடந்துகிட்டவிதம் எனக்கு பிடிக்கவேயில்லை!”

“எனக்கு ஒண்ணும் தெரியலையே! “

“குரு என்ன கேட்டாலும் அலட்சியமா பதில் சொல்றா!”

“வேல வேலன்னு பாதிநாள் டூர்! குழந்தையும் இல்லை! குட்டியும் இல்லை!”

“என்ன ஜென்னி! இதெல்லாம் ஒரு தப்பா ? இந்த காலத்தில எல்லா பசங்களும் இப்படித்தானே இருக்காங்க!

குழந்தை பத்தி நாம கவலைப்பட்டு என்னாகப்போகுது ?

இந்தகாலப் பெண்கள் இன்னும் தைரியமா இருக்காங்க! மனசில பட்டதை உடனே சொல்லிடறாங்க!

ஆமா! நீயா கேக்கற! நாம் போடாத சண்டையா! கல்யாணம் ஆகி ஆறு மாசத்தில நீ எங்க அக்காவோட போட்டியே ஒரு சண்டை!”

ஜென்னிக்கும் நன்றாய் நினைவு இருக்கிறது!! எப்படி மறக்க முடியும்? ராஜூடன் போட்ட முதல் சண்டையாச்சே!

***

ஜென்னிக்கும் ராஜனுக்கும் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகியிருந்தது!!

தனிக்குடித்தனம்! இருபது வருஷ பழக்கமில்லையா!

காதலர்களாயிருந்தவர்கள் தம்பதிகளாய் மாறிய போது வாழ்க்கையே வசந்தமாய் மணம் வீசியது!

ஜென்னிக்கு ராஜனின் பழக்க வழக்கங்கள் எல்லாமே அத்துப்படி!

எத்தனை தடவை லஷ்மி மாமியின் கையால் சாப்பிட்டிருப்பாள்! மாமியின் வத்தக்குழம்பு இன்னும் நாக்கில்!

ராஜனுக்கும் ஜென்னியின் விருப்பு வெறுப்பு நன்றாகவே தெரியும்!!!

ஜென்னிக்கு மீன் என்றால் உயிர்! அவளால் மீன் இல்லாமல் இருக்க முடியாது!!!!! வாரம் ஒரு நாள் அவள் விருப்பப்படி சமையல்!

இருவருக்கும் மட்டுமான சொர்க்கலோகம்!

சர்ச், கோவில் என்று மாறி மாறி போவார்கள்! வீட்டிற்குள் ஜாதியோ மதமோ நுழைந்ததில்லை!

ராஜனின் அக்கா லலிதா நுழையும் வரை!!

ராஜனும் ஜென்னிஃபரும் குழந்தைப்பருவத்திலிருந்தே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள்!

ராஜனின் அப்பா மாகாதேவன் S.S.L.C எழுதினவுடன் அவருடைய அப்பா தவறிவிட்டார்!

ஏற்கனவே அப்பா, அம்மாவை விட்டுப் பிரிந்து ஐந்து வருஷம் ஆகியிருந்தது! அப்பாவின் பிரிவு அவரை பாதிக்கவேயில்லை!

ஆனால் அம்மாவை நினைத்து அழாத நாளில்லை!

மேலே ரயில்வே பரீட்சை எழுதி தன் உழைப்பை மட்டுமே நம்பி ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கு வந்தவர்!

அதிலிருந்து மிடில் மேனேஜ்மென்ட் லெவலுக்கு உயர்ந்தவர்! கடைசி வரை அம்மாவை ஒரு சொட்டு கண்ணீர் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்!

அம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டார்!!

மூத்தவள் லலிதாவும் இளையவன் ராஜனும் அப்பாவுக்கு ஒரு கஷ்டமும் தரவில்லை!

ரயில்வே பள்ளியில் மிகச்சிறந்த மாணவர்கள் என்று பெயர் வாங்கியிருந்தார்கள்!

ராஜன் மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதுதான் ஜென்னி அவன் பள்ளியில் நர்சரி வகுப்பில் சேர்ந்தாள்!

அவளுடைய தந்தை ரிச்சர்ட் உயர்ந்த பதவி வகிக்கும் ஆஃபீஸர்..! ஆங்கிலோ இந்திய வகுப்பைச் சேர்ந்தவர்!

ஜென்னிக்கு தமிழ் சரியாக வராததால் கூடப் படிக்கும் மாணவர்களுடன் பேச பயப்பட்டாள்!

எல்லா மாணவர்களைக்காட்டிலும் ராஜன் அருமையாக ஆங்கிலம் பேசியதால் ஜென்னியின் அம்மா ஸில்வியா அவனை ஜென்னியைப் பார்த்துக்கொள்ள கேட்டுக் கொண்டாள்!

சீக்கிரமே இரண்டு பேரும் இணைபிரியா நண்பார்களாகிவிட்டார்கள்!

ஜென்னியின் ஃப்ரெஞ்ச் கட் பண்ணிய முடியும் , , பள பள என்று மின்னும் காலணிகளும் , , சதா சிரிக்கும் கண்களும் , நுனிநாக்கு ஆங்கிலமும் , மழலைத்தமிழும் அவனுக்கு அவள்மீது சொல்லத் தெரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது!

ஸில்வியாவும் ரயில்வேயில் ஒரு ‌ தலைமை நர்ஸ் என்பதால் பாதிப்பொழுது ஜென்னி ராஜன் வீட்டில்தான் இருப்பாள்!

ராஜனின் அம்மா லஷ்மிக்கு ஜென்னியென்றால் உயிர்!

எப்படி சமத்தாய் வளர்த்திருக்கிறார்கள் பார் என்று ஆச்சரியப்படுவாள்!

ஃபோர்க்கில் இட்லியை விண்டு சட்னியில் தோய்த்து சாப்பிடும் அழகைப் பார்த்து எல்லோரும் வைத்த கண் வாங்காமல் பார்த்து மகிழ்ந்து போவார்கள்!

லலிதாவைத்தவிர!

ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு ஜென்னியை அவ்வளவாய் பிடிக்கவில்லை!

அம்மாவும் தம்பியும் ஏன் அவளை இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் என்று அவளுக்கு பொறாமையாய்க்கூட இருக்கும்!

அவளை சீண்டிக் கொண்டே இருப்பாள்!!

***

திருமணமாகி ஆறு மாசம் வரை ஒரு ஈ காக்கா வீட்டில் எட்டிப் பார்க்கவில்லை!

அப்பாவின் விருப்பத்தை மீறி நடந்த திருமணமானாலும் அவர்களுக்கு தெரிந்து நடந்த ஒன்றுதான்!

ராஜனும் ஜென்னிக்கும் பெரிதாய் வருத்தம் ஒன்றும் இல்லை!!

ஒரு சனிக்கிழமை காலை! புயல் போல உள்ளே நுழைந்தாள் லலிதா!!

“எனக்கு உள்ளே வர அனுமதி உண்டா.. ?? “

ராஜனுக்கு சொல்ல முடியாத சந்தோஷம்!

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் வீட்டிற்கு வரும் முதல் உறவினரை யாராலும் மறக்க முடியாது!!!

“அக்கா! வாங்க… வாங்க.. நீங்க வந்தது ஒரு பெரிய ஆச்சரியம்!! ‘

ஜென்னிக்கும் நிஜமாகவே ரொம்ப சந்தோஷம்!

“நீங்கதான் எங்களுடைய முதல் விருந்தாளி!!”

“அழையாத விருந்தாளி!!!இல்லையா ??’

இதற்கு பதில் சொல்ல இரண்டு பேருமே விரும்பவில்லை!!

அன்று விடுமுறையானதால் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக ஆக இருந்தார்கள்!!

“என்ன ராஜ்! தனிக்குடித்தனம் எப்படி ?? ஜென்னியிடம் சுத்தமா சரண்டர் ஆய்ட்ட போல இருக்கே!!!”

“எத வச்சு சொல்ற???”

“வாசல்ல நுழையும்போதே மீன் நாத்தம் ஊரைக் கூட்றதே ?’

அன்று சனிக்கிழமை என்பதால் ஜென்னிக்குப் பிடித்த அயிர மீன் வாங்கிக் கொண்டு கொடுத்தான் ராஜன்!

அத்தோடு அவன் வேலை முடிந்தது! அன்று சமையலறை பக்கமே அவனை அண்ட விடமாட்டாள் ஜென்னி!

“ராஜ்! உனக்கு மீன் வாசனை எவ்வளவு அலர்ஜின்னு தெரியும்!! நீ வாங்கிட்டு வந்ததே போதும்!! இதுக்குமேல நான் உங்கிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்..!!

உனக்குப் பிடித்த மோர்க்குழம்பும் , சேப்பங்கிழங்கு ரோஸ்ட்டும் பண்ணியிருக்கேன்!

போ… உன் வேலயப் பாரு..! மீன் குழம்பு ரெடியானதும் சாப்பிடலாம்!!”

அந்த சமயம்தான் நுழைந்தாள் லலிதா!!

“நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்! இதோ ஒரு நிமிஷம்….!!”

ஜென்னி உள்ளே போனாள்!

“லலிதா! அப்பா எப்படி இருக்கார்….. ? அம்மா ??”

“அப்பா உன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை! அம்மாதான் பாவம்! ஒழுங்கா சாப்பிட்டு மாசக்கணக்காச்சு!

ஆனாலும் உனக்கு ரொம்ப நெஞ்சழுத்தம்! அப்பாவை விடு! அம்மா நிலமையை யோசிச்சு பாத்தியா ??”

ஒரு தட்டில் பிஸ்கெட், ஒரு கப் தேனீருடன் வந்தாள் ஜென்னி!!

வேறு எதுவும் சாப்பிட மாட்டாளே!!!!

“ஜென்னி! உனக்கு அப்பாவைப் பத்தி நல்லா தெரியுமே! அவனுக்கு புத்தி சொல்லாம நீயும் சேந்து ….. உங்கிட்டேயிருந்து இத நான் எதிர்பார்க்கல…!!!”

ராஜன் ஏதாவது சொல்வான் என்று நிதானித்தாள் ஜென்னி!

அவன் மௌனம் அவளுக்கு எரிச்சலாயிருந்தது!

ஆச்சரியமாகக்கூட இருந்தது!

“இனிமே உன்ன பாக்கவே முடியாதோன்னு அம்மாவுக்கு பயம் வந்துடுத்து ராஜா!!!”

ஜென்னிக்குப் பொறுக்கவில்லை!!!!

“அக்கா! அம்மா அப்பாவுக்கு எங்கள் விவகாரம் ஒண்ணும் தெரியாமல் இல்லை!

அப்பா மனசு ஏத்துக்க முடியாததால் தெரியாத மாதிரி இன்னமும் நடிச்சிட்டு இருக்கார்!!

இப்பகூட அவங்க கூப்பிட்டா உடனடியாக வர நாங்கள் தயார்!

அப்பா அம்மாவுக்கு இந்த கதவு எப்பவுமே திறந்துதான் இருக்கும்!

அம்மா என் மேல் உயிரையே வச்சிருக்காங்க! பின்ன எதுக்கு இந்த நாடகமெல்லாம்… ?”

“ஜென்னி! அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்! ஒத்துக்கறேன்!ஆனால் அப்பா உன்னை ஏத்துக்கவேயில்லையே. …..!!!!அம்மாவும் அப்பாவும் பேசிக்கறதே இல்லை தெரியுமா ???”

“அக்கா! போதும்.. இந்த அவமரியாதை…! எங்களோட நலத்தில் அக்கறையுள்ளவரா நீங்க எப்போ வந்தாலும் எங்க வீடு திறந்திருக்கும்…இப்படித்தான் உங்களால் பேச முடியும்னா …. சாரி……”

“வெளியே போ..!!!!!! அதானே நீ சொல்ல வந்த!!”

விருட்டென்று வெளியேறினாள் லலிதா!!

அவள் போனதுக்கப்புறம் கூட ஜென்னிக்கு ஆத்திரம் அடங்கவில்லை!

“ராஜ்! நீ அவ்வளவு தூரம் லலிதாவை பேசவிட்டிருக்கக் கூடாது!!

கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் கழிச்சு நடந்ததைப் பத்தி போஸ்ட்மார்ட்டம் பண்ணி என்னை குத்தம் சொல்ல இந்த வருகை தேவையா ??”

“ஜென்னி! அவள் நமக்காக வரலை! அவளோட கோபத்துக்கு ஒரு வடிகாலாக உன்னை யூஸ் பண்ணிட்டு போயிருக்கா! அவளோட விமரிசனத்தை ஒரு பொருட்டாவே மதிக்காத….!”

“என்ன ரொம்பவே காயப்படுத்திட்டா ராஜ்…!!!அப்போ என் உணர்ச்சிகளுக்கு என்ன மதிப்பு ? “

அன்றைக்கு ராஜன் முடிவு செய்தான்! யாருக்காகவும் , எதற்காகவும் தன்னை நம்பி வந்த ஜென்னியை விட்டுத்தருவதில்லை என்று!!!

இந்த ஐம்பது வருட வாழ்க்கையில் ஒரு முறை கூட அந்த முடிவில் ஒரு சின்ன மாற்றம் இல்லை!!!

***

“ஜென்னி! எழுந்திரு…!

இன்னையிலிருந்து நீ வாக் பண்ணனும்னு டாக்டர் சொன்னது ஞாபகம் இல்லியா ???”

ஜென்னிக்கு ஹெர்னியா ஆபரேஷன் முடிந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது!!

அன்றைக்கு ஷீலாவிடமிருந்து ஒரு ஃபோன்!

“அம்மா….அடுத்த வாரம் நான் இந்தியா வரேன்! ஒரு மாச லீவில்!

அவள் வரும் சேதி ஏனோ ஜென்னிக்கு சந்தோஷத்தை தரவில்லை! அதற்கு பதிலாய் இனம்புரியாத ஒரு பயம்!

“ராஜ்! ஒரு மாச லீவில் ஏன் குருவை விட்டு விட்டு அவள் மட்டும் தனியாய்! …..”

“எனக்கும் அதுதான் கவலையாயிருக்கு!! பாக்கலாம்..! ”

அவர்கள் நினைத்து சரிதான்! ஷீலா குருவை விட்டுப் பிரிய தீர்மானம் செய்து விட்டாளாம்!!

ஒரு வாரமாச்சு மூன்று பேரும் சரியாகத் தூங்கி!!

***

கல்லுரி படிப்பை முடித்ததுமே ராஜனுக்கு நல்ல வேலை கிடைத்து விட்டது!

அப்பா அம்மாவிடம் தங்கள் திருமணத்தைப் பற்றி பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது!!!

ரிச்சர்டும் , சில்வியாவும் ஆர்வமாய் எதிர் பார்த்த ஒன்று!

அவர்கள் வாயால் கேட்டதும் மகிழ்ச்சி இரட்டிப்பானது!

“ஜென்னி! ராஜனை விட உனக்கு பொருத்தமான ஒருத்தன் கிடைப்பானா தெரியவில்லை!

இந்த செய்திக்காகத்தான் நான் இத்தன நாள் காத்திருந்தேன்..!காட் ப்ளெஸ் யூ மை சைல்ட்…!!!”

ரிச்சர்ட் உண்மையாகவே நெகிழ்ந்து போனார்!!”

ஸில்வியாவோ கேட்கவே வேண்டாம்!

ஒரு நர்ஸ் என்கிற முறையில் சாவின் விளிம்பைத் தொட்ட எத்தனையோ மனிதர்களை அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்பவள்!

ஜாதி மதம் கடந்த சேவை!

வேற்று ஜாதி மனிதர்களிடமிருந்து ஒரு வாய் தண்ணீர் வாங்கி குடிக்க மறுக்கும் நோயாளிகள் கூட இறக்கும் தருவாயில்…..

“சிஸ்டர்….! உங்க கையால ஒரு வாய் ஜலம் குடிச்சாத்தான் என் ஆத்மா சாந்தி அடையும்!!! “என்று கேட்ட சம்பவம் எத்தனை எத்தனையோ!!

அவளுக்கு ஜாதியோ மதமோ ஒரு பொருட்டேயில்லை!!

“பெஸ்ட் சாய்ஸ் ஜென்னி… வாழ்த்துக்கள்…!!”

ஆனால் ராஜாவின் வீட்டிலோ….

“ராஜா! என்னோடே சம்மதத்தோடதான் ஜென்னிய கல்யாணம் பண்ணிப்பான்னா அது இந்த ஜென்மத்தில் இல்ல!

தயவுசெய்து என்னை கன்வின்ஸ் பண்ண உன் நேரத்தை வேஸ்ட் பண்ணாத!

இரண்டு பேரும் நம்பளோட முடிவில உறுதியாக இருக்கும் போது திருப்பி திருப்பி இதப் பத்தி பேசாம இருக்கிறதுதான் இரண்டு பேருக்குமே நல்லது….!!”

மகாதேவன் சொன்னால் சொன்னதுதான்!!!

“ஜென்னியை நான் நம்ப வீட்டுப் பொண்ணா என்னிக்கோ ஏத்துண்டுட்டேன் ராஜா!! அவள் கண் கலங்க விடாதே!!

இது போதுமே!! அம்மாவின் இயலாமை ராஜனுக்கு புரியாதா!!

***

ஷீலாவிடம் பேச்சை ஆரம்பிக்க ஜென்னிக்கு உண்மையிலேயே கொஞ்சம் பயமாயிருந்தது!!

ஷீலா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும் என்று விட்டுவிட்டாள்!

அன்றைக்கு ஷீலாவாகத்தான் ஆரம்பித்தாள்!

இரவு உணவு முடித்து மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள்!!

“நான் ரொம்பவே குழம்பியிருக்கேன்!

குருவும் நானும் சேர்ந்து வாழ முடியும்னு தோணல!!”

“இது உன்னுடைய முடிவா ? இல்லைனா இரண்டு பேரும் ….?

“முழுக்க முழுக்க என்னுதுதான்! ஆனா.. அவனும் என்ன முழுசா புரிஞ்சுகிட்டான்..!!

“So mutual separation ஆக இருக்கும்!!!”

“இது உனக்கே வேடிக்கையா இல்லை ??

‘அவன் என்ன புரிஞ்சுகிட்டான்’ னு சொல்றியே….

அப்படின்னா அவன் உன்னை, உன் உணர்ச்சிகள ,மதிக்கிறான் என்று தானே அர்த்தம்!!

ஷீலா! நீ அவனை காதலிச்சு தானே கல்யாணம் பண்ணிட்ட ?? அவனிடம் ஏதோ ஒண்ணு உனக்கு பிடித்திருந்திருக்கணும் இல்லையா ??…”

“ஆமா..டாடி…!!

அவனுடைய எளிமை , ஸின்சியாரிட்டி , ஹ்யூமர் சென்ஸ் , எல்லாமே பிடித்திருந்தது ….!”

“இப்போ அதெல்லாம் இல்லையா ??..”

“இப்பவும் அதே குருதான்! ஆனால் எதோ ஒரு இடத்தில, காதல் அப்படியே உறைந்து போய் , மறந்து போன மாதிரி.!! மறைந்து போன மாதிரி……

… முன்னால போகவிடாமல்…!!!”

“குருவோட அம்மா அப்பாவோட உனக்கு நல்ல பழக்கம் உண்டா ?? “

“அம்மா! உண்மைய சொல்லட்டா.!எனக்கு அவங்களோட பழக நேரமில்லை! பொறுமையுமில்லை!!”

ஆனா , குரு அடிக்கடி பேசிட்டுதான் இருக்கான்….!!!”

“சரி! குருவுக்கு ஒரு தம்பி இருக்கானே! அவன் என்ன பண்றான்னு தெரியுமா ??!

“சரியா தெரியாததும்மா! அமெரிக்காவுலதான்…பாஸ்டனோ , எங்கியோ ..வேல பாக்குறான்னு நினைக்கிறேன்….!”

சரி! விடு! உன்னோட கூடப் பொறந்த ஜோ எப்படி இருக்கான்னு விசாரிப்பியா ??…..

“அம்மா. … எப்போ கூப்பிட்டாலும் ஃபோன் வாய்ஸ் மெயில்லதான்..!இல்லாட்டி ‘ பிஸி..அவன்பின்னாடி என்னால தொரத்திகிட்டே இருக்க முடியாது!!

“இதுதான் உங்களோட பிரச்சனையே…! …

ஆஃபீஸ் தவிர வேற எதுவுமே முக்கியமில்லை!

ஆஃபீசில கூட உன்னுடைய பாஸ் கிட்ட மட்டும் ரிப்போர்ட் பண்ணினா போறுமா ?

உன்னோட டீம் , கீழ் வேலை செய்யுறவங்க , கிளயன்ட்ஸ், எல்லாரோடயும் நல்ல புரிதல் இல்லைன்னா நீ ஒரு வெற்றிகரமான மேனேஜராக இருக்க முடியுமா ??

நீ குருவைப் பார்த்த போது இருபது வயது இளைஞன் குருதான் உன்னோட கண்ணில பட்டிருப்பான்!

இருபது குருவை உருவாக்கிய அவன் குடும்பத்தை , நண்பர்களை , அவன் பிறந்த மண்ணை , அந்த ஊரை, தெரிஞ்சிக்க ஆசைப்படவேயில்லையே!

அதெல்லாம் சேர்ந்த குருவை உன்னால் தனியா பிரிச்செடுக்க முடியுமா!!

அதேமாதிரிதான் நீயும்!!!

அவனோட நீ இங்க அடிக்கடி வந்து எல்லோரையும் சந்திக்கணும்!நீ எப்படி வளந்தேன்னு அவன் பாக்கணும்!! இதெல்லாம் முக்கியம்னு உனக்கு தோணவேயில்லையா..??

“அம்மா..நீ சொன்னதில கூட நிறைய உண்மை இருக்குன்னு இப்ப தோணுது..!!

ஆனா நடைமுறையில எவ்வளவு தூரம் சாத்தியம்னு பாக்கணும்! “

**************************************

“ஷீலா! உனக்கு அப்போ மூணு வயசு இருக்கும்!! சின்ன குழந்தை.!

உன் தாத்தா , எங்கப்பா , ICU வில ஸ்ட்ரோக் வந்து அட்மிட் ஆகி இருந்த சமயம்!

அவர் உன்னைப் பார்த்தது கூட இல்லை! அம்மா மட்டும் நீ பிறந்த போது ஆஸ்பத்திரியில வந்து பார்த்தாங்க!

ஜென்னி ஒரே பிடிவாதமா அப்பாவைப் பார்த்தே ஆகணம்னு சொல்லிட்டா!

அப்பா அறைக்கு ஷிஃப்ட் ஆனதும் ஜோவையும் உன்னையும் கூட்டிட்டு போனோம்!

அப்பாவுக்கு ஜென்னியை அடையாளம் தெரியல! ஆனா உன்னை அப்படியே கட்டிபிடிச்சு

“ஜென்னி! ஜென்னின்னு அழறாரு!! அவர் கண்ணுக்கு ஜென்னி இன்னும் குழந்ததான்!! நீதான் ஜென்னி!!

ஜென்னி பேர சொல்லிட்டேதான் கடைசி மூச்சை விட்டாரு!!!”

அப்பா என்னேட செலவிட்ட நேரத்தவிட ஜென்னியோட செலவழித்த நேரம்தான் அதிகம்!

அம்மாவைப் பத்தி எனக்குத் தெரியாத எத்தனையோ விஷயம் ஜென்னிக்குத் தெரியும்!!!!

ரிச்சர்ட் அங்கிளும் , நானும் , நானும் மணிக்கணக்காக பேசமுடியும்!

இவங்களெல்லாம் இல்லைனா ஜென்னியும் நானும் ஒருத்தர ஒருத்தர் இவ்வளவு நல்லா புரிஞ்சிட்டிருப்போமா சந்தேகம்தான்!

லலிதாக்கா அப்பப்போ குத்திக்காட்டினாலும் அடிக்கடி வந்து போன ஒரே உறவினர் அவள்தான்!

அவள்தான் இரண்டு குடும்பத்துக்கும் பாலமா இருந்தாள்!!

அந்த நூல்….மெலிதாக இருந்தாலும் அறுந்து விடக் கூடாது..!!! ”

***

அடுத்த இரண்டு நாளும் ஷீலா அதிகம் பேசவில்லை!!

ஆனால் குருவிடம் இரவு தொலைபேசியில் பேசுவது கேட்டது!!

“நான் நல்லா இருக்கேன் குரு….! அப்பா.. அம்மாவோட கொஞ்ச நாள் சேந்து இருப்பது சந்தோஷமா இருக்கு ….!!!

உன் தம்பி ஜீவா நல்லா இருக்கானா… ?

அவன் இன்னமும் பாஸ்டன்ல தானே இருக்கான்…??? ?

நீ முடிந்தால் ஒரு வாரம் லீவு போட்டு வரியா! அம்மா ஹெர்னியா ஆபரேஷன் முடிஞ்சு,இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா சரியாய்ட்டு வராங்க…

அப்படியே பெங்களூர் போய் உங்க அப்பா அம்மவையும் பார்த்து………”

***

ஜென்னியும் ராஜனும் ஒருத்தரையொருத்தர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்!!

பரவாயில்லையே….!!!!

அவளும் முயற்சி செய்கிறாள் …!!

திருமண பந்தம்…!!!!

அத்தனை சீக்கிரம் முறியும் உறவா என்ன….???

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *