காணிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2024
பார்வையிட்டோர்: 138 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சதங்கை ஓசையுடன் வண்டி வாசலில் நின்றதுதான் தாமதம், உள்ளேயிருந்து குழந்தைகள் திண்ணைக்கு வந்து வெறிபிடித்தவர்கள் போல் குதித்துக் கூச்சலிட் டார்கள். 

தகப்பனார் டவுனுக்குப் போய்த் திரும்பினார் என்றால், ஏழைக் குழந்தைகளுக்குப் பட்டாணிக் கடலை, வாழைப்பழம் என்று பொருள். பணக்காரக் குழந்தை களுக்குப் பீஸ் பீஸாகச் சட்டைத் துணி, டஜன் கணக்கில் பட்டுப் பாவாடை என்று பொருள். இந்தக் குழந்தை களுக்குத் தின்பண்டம், தையல் நூல் என்ற பொருள். 

வண்டியிலிருந்து ராமேசம் இறங்கித் திண்ணை ஏறியதும், குழந்தைகள் பிடித்துக்கொண்டார்கள். தகப்பனாருக்கு இந்த அதிசயச் ஆளுக்கு ஒரு பக்கமாகப் சுங்கச் சாவடியின் கெடுபிடி நன்றாகத் தெரியும். எனவே சுங்க வரியைச் செலுத்தும் அடக்கத்துடன் சிறு பையன் களுக்குத் தின்பண்டமும், பெண் குழந்தைகளுக்குத் தையல் நூலும் நீட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். 

கூடத்தில் யாரும் இல்லை. பெரிய கடிகாரம் மட்டும் தகரக் கடைக்காரன் தட்டுவதுபோல ஒழுங்காகச் சத்தம் செய்துகொண் டிருந்தது. 

வண்டிச் சத்தமும், குழந்தைகள் கொம்மாளமும் தெருக்கோடி வரையில் எட்டக்கூடியதான போதிலும் அவை கூடத்தைத் தாண்டிச் சமையலறைப் பக்கம் போனதாகவே தெரியவில்லை. ஏனென்றால், குழந்தைகள் வெளியே வந்தார்களே, அவருடைய மனைவி சமையல் அறையிலிருந்து தலையையாவது நீட்ட வேண்டாமா? நீட்டவில்லை. ஆனால், இதில் வியப்பொன்றும் இல்லை. தலையை நீட்டியிருந்தால்தான் வியப்பு. கணவரே இதை எதிர்பார்க்கவில்லை. நிதானமாகக்  கூடத்தைக் கடந்து சமையலறை வாசலண்டை போனார். நேரம் தாண்டி மனிதன் தூங்கினாலும், கடமையில் தவறாது செம்மேனியாகக் கிழக்கில் மலரும் வானத்துத் தாமரைபோல் மனைவி அடுப்பண்டை ஊதுகுழாயை வைத்து ஊதிக்கொண் டிருந்தாள். அவர் பேசவில்லை. மனைவி ஊதிக்கொண்டே இருந்தாள். ஈர விறகு. மஞ்ச ளாகப் புகை கிளம்பி, ஊதுகுழாயின் வழியாக ஏறிக் கொஞ்சம் வாய்க்குள்ளும் கண்ணுக்குள்ளும் போய் விட்டது.கண்களைக் கசக்கிக்கொண்டு மெதுவாக இருமி விட்டுத் திரும்பாமலே, “பாப்பா! போன வண்டி இன்னும் வரவில்லையா?” என்றாள். 

“வந்துவிட்டதே” என்றார் ராமேசம். மனைவி கொஞ்சம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். 

“சமையல் ஞாபகம். நீங்கள் வந்தது எனக்குத் தெரியவில்லை.” 

அதனால் பரவாயில்லை என்று சொல்ல அவருக்கு விருப்பம். ஆனால் வார்த்தை நெஞ்சத்தின் சிறையிலிருந்து விடு தலைப்பட்டால்தானே! அப்போதைப்போல் அவர் நெஞ்சம் என்றும் குழம்பியதில்லை. 

மௌனமாகத் தாமரை இலையில் சுற்றிய ஒரு பொட்டலத்தையும் ஒரு மடித்த கடிதத்தையும்  நீட்டினார். 

“இதென்ன பூவா?” 

“ஆமாம், வாங்கிக்கொண்டு வந்தேன்.” 

பொட்டலத்தை அவிழ்த்துப் பார்த்தாள். மருதா ணிப் பூவும், வெட்டிவேரும், மல்லிகையும், நில சம்பங்கி யும் சேர்ந்த கதம்பம். தவிர, முழு ரோஜாக்கள் தொடுத்த சரம் வேறு இருந்தது. பொட்டலம் கட்டியிருந்த பொழுதைவிட இப்போது அதிக வாசனை வீசிற்று. 

“ரொம்ப நன்றாய் இருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டே ஓர் உதிரி ரோஜாப் புஷ்பத்தை எடுத்து மோந்து பார்த்தாள். 

“இதென்ன,பன்னீர் தெளித்தாற்போல் இருக்கிறதே?” 

“ஆமாம், இது பன்னீர்க் கதம்பம்.” 

“அப்போது விலை ஜாஸ்தியாக இருக்குமே?” 

“என்ன ஜாஸ்தி. கொஞ்சந்தான் கூட விலை.” 

“அப்படிக்கூடக் காசுபோட்டு எதற்காக?” 

“சும்மாத்தான்.” 

மனைவிக்கு இது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், 

“இதென்ன கடுதாசு?” என்றாள். 

“பாரேன்” என்று தமக்குச் சம்பந்தமற்றவரைப் போல் பேசினார். 

மனைவி கடிதத்தைப் பிரித்தாள். ஊர்,தேதி ஒன்றும் காணவில்லை. ‘ருக்மிணிக்கு’ என்று ஆரம்பித்திருந்தது. அவள் மேலே படிக்கவில்லை. “ஆமாம், இதை யார் எழுதி இருக்கிறார்?” 

“அடியில் பார்த்தால் தெரிகிறது.”

“சொல்லப்படாதா?” 

“நீ பாரேன். அப்புறம் சொல்கிறேன்.” 

ருக்மிணி கடிதத்தின் அடிப்பாகத்தைப் பார்த்தாள். ‘ராமேசம்’ என்று கையெழுத்திட் டிருந்தது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

“இது யார் ராமேசம்? ருக்மிணிக்கு என்று ஆரம்பித்திருக்கிறது. யாருக்கு யார் எழுதினது என்று புரிய வில்லை. என்னிடத்தில் கொடுப்பானேன்?” 

“புரியவில்லையா? ருக்மிணி என்றால் நீதான்.”

“அப்போது அது?” 

“நான்தான்.” 

“நீங்களா? எனக்கா?” என்று திகைத்து ஒரு நிமிஷம் நின்றாள். 

ஒரு விநாடி கழிந்தது. “நான் இருப்பதும் இங்கே தான். நீங்கள் இருப்பதும் இங்கேதான். எனக்கு நீங்கள் தபால் எழுதுவானேன்? புரியவே இல்லையே” என்றாள். 

“படித்தால் தெரிகிறது.” 

மனைவி கடிதத்தை ஊன்றிப் படித்தாள். படித்து முடிந்ததும் கணவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறுபடியும் கடிதத்தைப் படித்தாள். பிறகு நிதானமாகக் கடிதத்தை மடித்துக் கையில் வைத்துக்கொண்டு கணவனை நோக்கினாள். 

“கடுதாசி புரியவில்லையே.” 

“நீதான் இரண்டு தரம் படித்தாயே.” 

“படித்தேன்.என்னவோ புதிதாக என்னிடம் கண்டு பிடித்திருக்கிறீர்களே, அதற்காகத்தான் கேட்கிறேன். இது ரொம்பப் பழசு; புதுசே அல்ல. இந்த வீட்டில் அடி எடுத்து வைத்தது முதல் பெரியவர்கள் உபதேசம் செய்ததுபோல் நடந்து வந்திருக்கிறேன். பத்து வருஷ மாக நடக்கிற பழசில் புதுசைக் கண்டீர்களே அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.” 

“கண்ணை மறைத்த திரை இப்போதுதான் கழன்றது.” 
 
“தபால், திரை, பன்னீர்க் கதம்பம்… எல்லாம் கதை மாதிரி இருக்கு.’ 

“நிஜக் கதை சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். பார்க்க மட்டும் நமக்குக் கண் இருப்பதில்லை. இப்போது எனக்குக் கண் திறந்து போச்சு.” 

“கண்ணைத் திறந்த டாக்டர் யார் என்று தெரிந்தால் நல்லது.”

“அதெல்லாம் இல்லை. நானும் தாலூக்கா ஆபீஸ் குமாஸ்தா மாத்யூசும் ஊருக்குப் போய் வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு கிளம்பினோம் அல்லவா?” 

“ஆமாம். பின்மாலை அந்த நேரத்திலே காபி போட்டுத் தந்தது எனக்கே பிடிக்கவில்லை. ராத்திரிப்பால். அதுவும் ஒரே தண்ணி,காபி எப்படித்தான் இருந்ததோ?” “மாத்யூஸ் வீட்டுக்குப் போனேன். வீடு சாத்தி இருந்தது. அரவத்தையே காணவில்லை.’ 

“ராத்திரி மூன்று மணிக்கு அரவம் கேட்குமாக்கும்!” ”உள்ளே விளக்கு மாத்திரம் எரிந்துகொண் டிருந் தது. மறந்துவிட்டேன். நீ போட்ட காபி அப்படி ஒன்றும் மோசமாக இல்லையே.” 

“நல்ல வேளை” 

“மாத்யூஸ் ! என்று இரண்டு தரம் கூப்பிட்டேன்.” 

“உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. நமக்குக் கல்யாணம் எல்லாம் பழசாகப் போச்சு. அவர்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கலாமா? போன வருஷந் தானே கல்யாணமாச்சு. அந்தப் பெண் குடித்தனம் நடத்த வந்து ஆறு மாதங்கூட ஆகவில்லை. சிறிசுகள் குடித்தனம் பண்ணுகிறார்கள். பாதி ராத்திரியில் கதவைத் தட்டிக் கூப்பிட்டால் எப்படி இருக்கும்!” 

“திருடன், தேள் என்றால்தான் சிறிசுகள் எழுந்தி ருக்க வேண்டுமாக்கும் ! கேள். மாத்யூஸ் கதவைத் திறந்தான்.”

“இப்போது கிளம்பி ரஸ்தாவுக்குப் போனால்தான் மோட்டார் பஸ் வருவதற்குச் சரியாக இருக்கும். கிளம்பு” என்றேன். 

“போவோம் இரு, ஒரு நிமிஷம்” என்று சொல்லி ஒரு பிரம்பு நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டுக் கிணற்றங்கரைப் பக்கம் போனான். 

நான் உட்கார்ந்திருந்த இடத்தில் விளக்கு இல்லை. அதற்குப் பக்கத்தில் இருந்த அறையில் பள்ளியறை விளக்குச் சிறிதாக எரிந்துகொண் டிருந்தது. சுடர் அடங்கி யிருந்த போதிலும் அந்த அறையிலுள்ள பொருள்கள் அவ்வளவும் தெரிந்தன. ஓர் ஓரத்திலே மேஜை நாற்காலி கள். மேஜைமேல் எரிந்து தீர்ந்து போன ஊதுவத்திக் கட்டைகள் நிறைந்த ஊதுவத்தி தாங்கி, வெற்றிலைத் தட்டு, சிதறிக்கிடந்த சில ரோஜா இதழ்கள். அறை நடுவில் கொசுவலையிடப்பட்ட ஒரே கட்டில். அவன் மனைவி தூங்கிக்கொண் டிருந்தாள். கொஞ்ச நேரம் ஆனதும் அவன் திரும்பி வந்து கொசுவலையைத் தள்ளினான். 

“அற்புதம்!” என்று முதலில் மெதுவாகக் கூப்பிட் டுக்கொண்டே தொட்டு எழுப்பினான். 

குளிர் காலத்தில் மூலையில் சுருண்டு கிடக்கும் நாயை எழுப்பி விட்டதுபோல் புரண்டு படுத்துக்கொண்டாள். 

“அற்புதம்!” என்று மறுபடியும் கொஞ்சம் அழுத்த மான குரலில் கூப்பிட்டான். 

அவள் எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டாள். 

“ஏன்?” 

“ஊருக்குப் போய் வாரேன். இப்போது போனால் தான் பஸ் கிடைக்கும்.” 

“எந்த ஊருக்கு ?” 

“ராத்திரி உன்னிடம் சொன்னேனே.” 

“ஆனால் இப்போது ராத்திரி இல்லையா?” 

“மாசத்தில் ஒரு தரம் இரண்டு தரம் அந்தச் சிநேகிதனைப் பார்த்துவிட்டு வந்தால்தான் நல்லது. சிநேகிதத்துக்கும் சரி, உத்தியோகத்துக்கும் சரி.” 

உட்கார்ந்திருந்தவள், வேர்க்கறையான் வெட்டிய மலர்ச்செடிபோல், துவண்டு மெத்தையிலே சாய்ந்தாள்.

“தனியே என்னை விட்டுப் போவது இன்னும் நல்லது.” 

இதைக் கேட்ட மாத்யூஸ் என் பக்கமாக முகத்தைத் திருப்பினான். 

“உஸ்! கத்தாதே. அவர் காதில் விழப்போகிறது.” 

“யார் காதில் விழுந்தால் எனக்கென்ன? மாதாகோவிலில், பொன்மலர்க் கொத்துப்போல் எரியும் மெழுகுவத்திகளின் முன்பு பாதிரியார் சொன்னதென்ன? இருவரையும் சாவு பிரிக்கும் வரையில் ஒன்று என்று சொல்லவில்லையா? நீங்களும் உறுதி கூறியதென்ன? கோட்டான் குமுறும் வேளையில் நான் ஒண்டியாக இருக்கிறேன்.” 

“பாதிரி இதையா சொன்னார். ஜலதரங்கக்கிண்ணி யில் வீறல் இருக்கக்கூடாது என்றார். கிண்ணியை நகர்த்தக் கூடாது என்று சொல்லவில்லையே. நாளைச் சாயங்காலத் துக்குள் வந்துவிடுவேன். இதுகூட. “

“ஆகட்டும்” என்று கையைத் தலைக்கு மேலாகத் தலையணையில் எறிந்தாள்; உடம்பைத் திருப்பிக்கொண்டாள். 

“எங்க ஐயாவைக் கண்டால் பிடிக்கவில்லை. காலையில் வருவதாக எழுதியிருக்கவில்லையா? அவர் வருகிறபோது நீங்கள் இருக்க வேண்டாமா?” 

“அவர் ஒரு மாச லீவில் வருகிறாரே; நாளைச் சாயங் காலம் பார்த்தால் கோபித்துக்கொள்ளமாட்டார்; முழுகிப் போகிறதுபோல உனக்குத்தான் கோபம் வருகிறது. 

“முழுகிப் போகிறதா? இஷ்டப்படி செய்யுங்கள் ” என்று போர்வையை இழுத்துப் போர்த்துக்கொண்டாள். உள்ளிருந்து விம்மும் ஓசை கேட்டது. 

மாத்யூஸ் என்ன நினைத்துக்கொண்டானோ, என்னிடம் வந்தான். 

“நீங்க வேணுமானால் இருங்கள். நான் மட்டும் போய் வாரேன்” என்று முந்திக்கொண்டேன். 

மாத்யூஸின் முகம் அவிந்த நெருப்பைப்போல் ஆகிவிட்டது. அவ்வளவுதான். 

மேலே ஒன்றும் சொல்லாமல் ராமேசம் மௌன மானான். 

“அதனால் இந்த மாதிரி எழுதுவானேன்?” என்றாள் ருக்மிணி. 

“இதையெல்லாம் பார்த்த பிறகுதான் ஓர் உண்மை யைக் கண்டுபிடித்தேன். தினம் தினம் பத்து வருஷமாக நீ வீட்டில் இருக்கிறாயே, ஒரு நாளாவது உன் இஷ்டப்படி நடந்தேனா என்ற நினைப்பு வந்தது. யோசித்துப் பார்த் தேன். புயல் காற்றுத் தன் போக்கிலேயே அட்டகாசத் துடன் போகிறதல்லவா? ஒடிந்து விழுந்த மரங்களைத் திரும்பியேனும் பார்க்கிறதா? அதே மாதிரி இருந்திருக்கி றேன் என்று விளங்கிற்று.நான் வீட்டில் பழகும் மாதிரி உன்னை ஒடிந்த மரம் திரி எவ்வளவு தடவை செய்திருக்கும்?’ 

“இப்பொழுதென்ன அதைப்பற்றி?” 

“இல்லை. சும்மாச் சொல்லு.”

“ஆரம்பத்தில் இரண்டொரு சமயம் அப்படி நினைத்திருப்பேன்.” 

“அவ்வளவு பெரிய புண்ணை வைத்துக்கொண்டு ஊமையாக இருந்திருக்கிறாயே. இந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனிதன் புயலைப்போல் நடக்கக்கூடாது” என்று தீர்மானித்தேன். 

“ஆனால் இப்போது அந்த மாதிரி நினைப்பே வருகிறதில்லை.”  

“அது இன்னும் மோசமல்லவா? உன்னையே அழித்து விட்டேன். அம்மி மிதிக்கிறதென்றால் இதுவா அர்த்தம்? அம்மியில் பொளிவு தேய்ந்து போனால் அரைப்பதில் என்ன லாபம்? அதனாலேதான் வீட்டுக்கு வந்தால் ஏதோ மில்லில் வேலை செய்வது போல் ரஸப்படாமல் இருக்கிறது. பட்டுப்போன அந்தச் செடியைத் துளிர்க்க வைத்தால்தான் இனி நல்லது.” 

“துளிர்க்க வைக்கவா கடுதாசு?” 

“அப்படி நினைத்துத்தான் எழுதியிருக்கிறேன்.”

“அதெல்லாம் இருக்கட்டும். பூமி மேலே கோடி கோடி வருஷமாக நடந்து போனாலும், பூமி ஏன் என்று கேட்கிறதா? செடி ஒன்றும் பட்டுப்போகவில்லை. பசுமை யாகப் பூக் குலுங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இதோ…” 

சின்னக் குழந்தை வாழைக்காய்ப் பஜ்ஜியைக் கவ்விக் கொண்டு சமையல் அறையில் நுழைந்தது. 

“உங்களுக்கு ஏனோ புத்தி மயங்கி இருக்கிறது. இந்தாருங்கள் கடுதாசு, இந்தாருங்கள்.” 

தயங்கும் கைகளுடன் கடிதத்தை வாங்கிக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தான்; தேய்த்து ஏற்றி வைக்கப் பட்ட குத்து விளக்கு எழிலுடன் சுடர் விட்டு எறிவது போல் அவள் முகம் ஒளி வீசிக்கொண்டிருந்தது. 

“பூவையும் கொடுத்துவிடுவாயோ ?” 

“பூவென்ன, இந்தக் கடுதாசி மாதிரியா ஆனால் ஏதுக்கு?” 

“அதுவா? பூமாதேவியைப் பூஜை செய்ய.” 

ருக்மிணி வெட்கிப் புன்சிரிப்புக்கொண்டாள். 

“உங்களுக்குக் கதை எழுதுகிற பைத்தியம் வலுத்து விட்டது. எனக்கு விளையாட இப்போது போது இல்லை” என்று அடுப்பண்டை சென்று ஊதுகுழலை எடுத்துக் கொண்டாள்.

– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *