காணாமற்போன நோட்டுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 2,364 
 
 

(1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அடே, ஸுந்தரம், கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வா, கணக்கு எழுதவேணும். உன்னிடத்திலிருந்த மைக் கூட்டையும் பேனாவையுங்கூடக் கொண்டுவா”

“இதோ கொண்டுவந்து விட்டேனப்பா. பெட்டித் திறவு கோல் உங்களிடத்தி லிருக்கிறதோ?”

“என்னிடமில்லை. அலமாரியிலிருக்கும், எடுத்துக் கொண்டுவா.”

ஒரு சிறுபையன், 16 வயதிருக்கும், தனது உடம்பை வளைத்துக்கொண்டு மிகவும் சிரமத்துடன் ஒரு பெரிய கனமான பெட்டியைத் தூக்கிக்கொண்டுவந்து தன் தந்தை முன்பாகத் தரையில் வைத்துவிட்டு, அவர்கேட்ட மற்ற மைக்கூடுபேனாவையும் கொடுத்துவிட்டு, வீட்டில் ஒரு அறைக்குள் போய்வாசித்துக் கொண்டிருந்தான்.

பெரியவர், பையனுடைய தகப்பனார், பெட்டியைத் திறந்து, இரண்டு நிமிஷநோம் அதிலுள்ள கடிதம் முதலியவைகளை எல்லாம் கீழே எடுத்து வைப்பதில் செலவழித்துப் பின்பு மறுபடியும், “அடே, ஸுந்தரம், இங்கேவா,” என்றார்.

பையன் அவர் முன்னால் வந்து, “என் அப்பா; கூப்பிட்டீர்கள்?” என்றான்.

“காலையிலே பெட்டியைத் திறந்தாயா?”

“இல்லையே.”

“நிஜத்தைச் சொல்”.

“நான் எதற்காகத் திறக்கிறேன்? நீங்கள் ஒன்றும் திறக்கும்படி சொல்லவில்லையே, பெட்டியில் காசிருக்கா, பணமிருக்கா? நான் ஏன் திறக்கிறேன்?”

“அதிலே தானடா பணம் வைத்திருந்தேன் நோட்டாக மாற்றிவைத்திருந்தேன். அதை நீ எடுத்தாயா?”

“இன்றையதினம் அந்த அறைப்பக்கம் போகவேயில்லையே. காலையிலே கோவிந்தன் வீட்டிற்குப் போய் வ்யாஸம் எழுதிவிட்டு அதைக் கொண்டு வந்து இங்கு எங்கேயோ. வைத்து விட்டேன், அதைக்காணோம், இது வரையில் தேடிப் பார்த்தவண்ணமாயிருக்கிறேன். பெட்டியைத் திறந்தேனா என்கிறீர்கள்.”

“பின் அந்த உள்ளே யார்தான் போனார்?”

“அந்தப் பெண் இருக்கிற பக்ஷணத்தை யெல்லாம் தின்று விடுகிறதென்று தான், அம்மா காலை முதல்கொண்டு அந்த உள்ளைப் பூட்டி வைத்திருந்தாளே.”

“என்னடாது, வைத்திருந்த பணம் எங்கேயடா போய் விடும்?”

“எவ்வளவு பணம் வைத்திருந்தீர்கள்?”

“உன் அம்மாவைக் கூப்பிடு, ஏய் இங்கே வா.”

ஸுமார் முப்பத்தைந்து வயதுள்ள ஒர் மாது மெதுவாய் நடந்துவந்து “எதுக்குக் கூப்பிட்டீர்கள்?” என்று சொல்லிக் கொண்டு அவர் முன்னிலையில் நின்றாள்.

“நீ பெட்டியைத் திறந்தாயா?”

“நான் என்னத்திற்காகத் திறக்கிறேன்.”

“நேற்றையதினம் குப்பய்யரிடம் 500 ரூபாய் கடன் வாங்கப் போகிறேன் என்று சொன்னேனல்லவா? அதை நோட்டாகவே வாங்கிக்கொண்டு வந்து பெட்டியில் வைத்தேன். இப்பொழுது திறந்து பார்த்தால் பணத்தைக் காணோம்.”

“காலை முதல்கொண்டு இரண்டு நாழிகைக்கு முன்னால் வரையிலும் கதவு பூட்டித்தான் இருந்தது. ராஜம் கூட அந்த உள்ளே போகவில்லை.”

“பின்னே பணம் போன வழி?”

“பெட்டியில் வைத்திருந்தால் பெட்டியில் தானே இருக்கும்,” என்றான் பையன். “பெட்டியை நன்றாய்ப் பாருங்கள். நோட்டுதானே, கடிதாசோடு கலந்திருக்கும், தெரியாது.” என்று பையன் சொல்லவே தந்தையும் தனயனுமாக பெட்டியைச் சோதிக்கலானார்கள். தாயாரும் இவர்களைக் கவனித்துக் கொண்டு நின்றாள். கொஞ்சதூரத்தில் அடக்க ஒடுக்கமாய் ரொம்ப லக்ஷணமுள்ள ஒரு சிறுபெண், 13 வயதிருக்கும், நின்றுகொண்டு முன் சொன்ன மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். பெட்டியைத் தேடினது பயன்படாமல் போயிற்று.

“வேறு எங்கேயாவது வைத்தீர்களோ?” என்று கேட்டாள் பெரியவரின் மனைவி.

“வேறு எங்கேயும் வைக்கவில்லையே. குப்பய்யர், தாம் அதிகாலையில் வெளியில் போவதாயும், ஆகையால் தம்மை எழுப்ப வரவேண்டும், அப்படி வந்தால்தான் பணம் கொடுக்க முடியும், இல்லாவிட்டால் தாம் ஊருக்குப்போய் வரப் பத்து நாள் சொல்லுமென்று சொன்னார். காலையிலே போய் வாங்கிக் கொண்டு வந்தேன். நீ காவேரிக்குப் போய்விட்டாய். இந்த அறையின் கதவு பூட்டியிருந்தது. சாவிக்காகத் தேடினேன். கதவு நிலை மேலிருந்தது. திறந்து நோட்டுகளைப் பெட்டியில் வைத்துப் பூட்டி பழையபடி அறையைப் பூட்டி விட்டுத் திறவு கோலை இருந்த விடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டேன். அடே நீ ஏதாவது எடுத்தாயா? சொல்.”

“நான் ஏதற்காகப்பா, எடுக்கிறேன். எனக்கென்ன செலவு?”

“ட்ராமா, கூத்து, ஸர்க்கஸ், எதற்காகவாவது வேண்டு மென்று எடுத்துக் கொண்டாயோ? மணியகார் பிள்ளை 15 ரூபாய் எடுத்துக் கொண்டு பட்டணம் ஓடினானே, அது மாதிரி நீயும் எங்கேயாவது-“.

“நானும் என்ன சிறுபயலா, அப்படி ஓட’ வைத்திருந்தால் அந்தப் பெட்டியில்தானே இருக்கும். நான் பார்க்கிறேன்.” என்று சொல்லிக்கொண்டே பெட்டியை மறுபடியும் சோதிக்கலானான். தந்தையார் சிறுவர்களுக்குப் பொதுவாயுள்ள அயோக்யதையைப்பற்றிக் கொஞ்சம் பரஸங்கம் செய்துவிட்டு பணத்தை யிழந்ததற்காக மிகவும் துக்கப்பட்டுக்கொண்டிருந்தாா. ரூ.500 ஒரு ஏழைக் குடும்பத்துக்கு நஷ்டமாவதென்றால் அது அவர்களால் ஸகிக்கக் கூடியதல்லவே. தமது துக்கத்தை சொல்லாலும் செய்கையாலும் வெளிப்படுத்தி தமது பையன்தான் அப்பணத்தை எடுத்தொளித் திருக்கவேண்டு மென்று குற்றம் சாட்டினார். இந்த முறை பையன் பதில் சொல்லவில்லை. அவன் மிக ச்ரத்தையாய் கடிதங்களைப் புரட்டிக்கொண்டிருந்தான். தாய் பிரமித்தவளாய் நின்றுகொண்டு கணவனையும் குமாரனையும் பார்த்துக் கண்ணீர் வீட்டழுதாள். எட்டி நின்றிருந்த சிறு பெண்ணும் சிறிது அருகினில் வந்து நடப்பவைகளை கவனித்தாள்.

“என்னுடைய வ்யாஸம் அகப்பட்டது. இதெப்படி வந்த திங்கே ? நான் கூடத்திலல்லவா வைத்திருந்தேன். இதை யார் பெட்டியில் வைத்தார்.”

அவர்களெல்லாரும் சிறிது பிரமை கொண்டார்கள்.

“நீ கொண்டுவந்த கடிதம் நீதானேடா இதில் வைத்திருக்க வேண்டும்? நான் எப்படி வைத்திருக்க முடியும்? இப்பொழுது உண்மையைச் சொல்லிவிடு. நோட்டுகளை எங்கே வைத்திருக்கிறாய் ? நோட்டுகளை எடுக்கிற அவஸரத்தில் வ்யாஸத்தைப் பெட்டியில் வைத்திருக்கிறாய். நோட்டுகளைக் கொண்டுவந்து கொடுத்துவிடு.” என்றார் தகப்பனார். பையன் தனக்கொன்றுமே தெரியாதென்று சாதித்தான். தனது வ்யாஸத்தை யாரோ பெட்டியில் வைத்து விட்டார்களென்றும் குறைகூறினான். “அது நம்பத்தக்கதா யில்லையே. இதைவிட வேறே என்ன ருஜுவேண்டும், நீ எடுத்தாயென்பதற்கு.போகிறது ; உடனே தெரிந்ததே. நீ எடுத்துக்கொண்டு எங்கேயாவது கம்பி நீட்டிவிட்டால்.” என்றார் தகப்பனார். என்ன சொல்லியும் பையன் தான் எடுக்கவில்லை யென்றான். பயமுறுத்தினார்கள். வைதார்கள். செஞ்சினார்கள். அடித்தார். ஒன்றுக்கும் அவன் தான் எடுத்ததாக ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்குள் ஜனக்கூட்டம் கூடிவிட்டது. ஸங்கதி தெரிந்தவுடன் சிலர், “ஸுந்தரம் அப்படி எடுக்கப்பட்டவ னல்லவே. அவன் ரொம்ப யோக்யனாயிற்றே. அவனை விசாரிக்காமல் என் அடிக்கவேண்டும்” என்றார்கள். சிலர் “வேறென்ன ஸாக்ஷி வேண்டும். இதுதான் நன்றாய் வ்யக்தமாய்த் தெரிகிறதே. பெட்டியைத் திறந்திருக்கிறான். நோட்டுகளைக் கண்டவுடன் அதை எடுத்துக்கொண்டு பெட்டியைப் பூட்டும் அவஸரத்தில் தனது வ்யாஸமா? அதென்ன காம்போசினா? அதை வைத்து விட்டு வந்துவிட்டான். வெட்ட வெளிச்சமாய்த் தெரிகிறதே” என்றார்கள்.

ஸுந்தரம் தற்கால நாகரீகம் மிகுதியும் வாய்ந்த பையனாக விருந்தால், தான் அப்பணத்தை எடுத்தாலுஞ் சரி, எடுக்கா விட்டாலுஞ் சரி, தனது தந்தை இவ்வளவு தொந்தரை செய்ததற்கு ஒன்று, தந்தையுடன் எதிர்த்துப் போராடியிருப்பான்; அல்லது சண்டை தொடங்கின உடனே எங்கேனும் ஒடியிருப்பான். இவ்விதம் நல்ல பூசை பெற்றுக்கொண்டு அவர் சொல்லும் வசை மொழிகளைக் கேட்டுக்கொண்டிருக்கமாட்டான். ஸுந்தரத்தின் தாயும் பிள்ளையினுடைய செய்கைக்கு மிகவும் வாடி அவனுக்குச் சிலவசை மொழிகள் கூறினாள். பெற்றோர்கள் கூறிய மொழிகள் சொன்னபடி பலிதமாயிருந்தால், பையன் அன்று ஒரே நாளில் பலமுறையும் பல காரணங்களால் இறந்து மீண்டும் மீண்டும் உயிர்த்திருக்கவேண்டும். இருவரும் தன்னை நிர்ப்பந்திக்கிறதைப் பொறுக்கமாட்டாமல் வீட்டின் பல விடங்களிலும் தப்பிப்போய் எட்டி நின்றான். என்ன செய்தென்ன அவர்கள் கோபம் அடங்குவதாயில்லை. தந்தையார் “உள்ளம் கவர்ந்தெழுந்தோங்கு சினம்” அடக்க இயலாதவராய் ஒரு பெரும் தடிகொண்டு தலையில் நையப் புடைத்து ரக்திகாயம் உண்டு பண்ணி ஒரிடத்தில் உட்கார்ந்து இளைப்பாறினார்.

பையன் கொல்லைக் கூடத்தில் விழுந்து கிடக்கிறான். தந்தை வாயிற் புறத்தில் உட்கார்ந்து வாய் புதைத்துக் கண்ணீர் விடுகிறார். தாய் கூடத்தில் தூணேடு சாய்ந்து தேம்புகிறாள். 500 ரூபாய் என்பது குறைந்த தொகை யல்லவே!

அந்தச் சிறிய பெண் மாத்திரம் அடிபட்டுக் கிடக்கும் ஸுந்தரத்தினிடம் சென்று அங்கு நின்றாள். அப்பொழுது ஸுந்தாம் “அப்பா! என் ஜீவன் போகவில்லையே ! இதற்காகவா பிள்ளை பிறந்தேன். ஒன்று மறியாத எனக்கு இவ்வளவு ஏன் வரவேண்டும்? ஜகதீசா!” என்று சொல்லித் திரும்புகையில் பெண் நிற்பதைப் பார்த்து, “ராஜம், ஒரு கந்தைத்துணியும், ஜலமும் சிறிது சர்க்கரையும் கொண்டுவா, என் கண்ணே, நீயாவது எனக்குதவியாயிரு” என்று பரிதாபமாய் சொல்ல, அதற்கு முன் அவனுடன் பேசியறியாத அப்பெண், “இதோ கொண்டு வந்து விட்டேன்” என்று சொல்லிக் கண்ணீர் விட்டு வருத்தப்பட்டுக் கொண்டே உள்ளே சென்று வேண்டியவற்றைக் கொணர்ந்து அவனுடைய காயங்களை அலம்பிச்சர்க்கரை வைத்து ரத்தம் வராதபடி துணியால் கட்டி அவனுக்கு வேண்டிய சிச்ரூஷை செய்தாள். “எனக்குத் தாகமாயிருக்கிறது. கொஞ்சம் தீர்த்தம் கொண்டுவா”, என்றான் பையன். அவளும் சீக்கிரம் கொண்டுவந்து கொடுத்தாள். “எனது வேஷ்டி ஒன்றும் மேல்துண்டு ஒன்றும் கொண்டுவா”. அவைகளையும் கொண்டுவந்து கொடுக்கவே, “ராஜம், நான் போய் வருகிறேன். இந்த வீட்டில் இருக்க எனக்கு இஷ்டமில்லை. திருடன் என்று பேர் வைத்துக்கொண்டு இங்கு இருக்கலாமா? நானோ அதில் ஒரு தூசு கூட அறியேன். என் தகப்பனார்தான் என்னவோ என்பேரில் ஸந்தேகப்பட்டு விட்டார், நீ மாத்திரம் என்பேரில் ஸந்தேகம் கொள்ளாதே. நான் பொய் சொல்ல வில்லை. நான் ஒன்று மறியேன்.”

இவைகளை அவன் சொன்ன பிறகு ஒரு நிமிஷம் ஒருவரும் பேசவில்லை. பெண் பேச முயன்றாள். மறுபடி சொற்களை மனஸிற்குள் அடக்கிக் கொண்டாள். மனம் ஸமாதானம் கொள்ளவில்லை. பின்பு தைர்யம் கொண்டவளாய், “நீங்கள் எங்கு போகிறீர்கள்? நீங்கள் போய்விட்டால், எனக்கார் துணை?” என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.

“கதி இல்லாதவனுக்கு இன்ன இடம் என்றுண்டா? மனம் போன போக்கெல்லாம் போகவேண்டியதுதான். உனக்கு உன் மாமா இருக்கிறார், மாமி இருக்கிறாள்.”

“அப்படிச் சொல்லலாமா. நீங்களல்லவா எனக்குத் துணைவர். நீங்களல்லவா- “

“அதெல்லாம் ஒன்றும் சொல்லாதே. உனக்கு மாங்கல்ய பலம் ரொம்ப அதிகம். உனக்கு அத்ருஷ்ட மிருந்தால் நான் திரும்பி வருகிறேன். இல்லாவிட்டால் என்னைக்காண முடியாது. அவருக்குக் கோபம் தணிந்து நான் வரவேண்டுமென்று விரும்பினால் அப்பொழுது பார்த்துக்கொள்வோம். என்னிடத்தில் ஒரு காசும் இல்லை. 500 ரூபாய் திருடினதாக மாத்திரம் பேர். ஈசா, என்னை இப்படிக் கஷ்டப் படுத்துவாயா.”

“என்னிடம் ஒரு ரூபாயிருக்கிறது” என்று சொல்லியதைக் கொண்டு வந்து கொடுத்தாள் ராஜர். அவன் அதை வாங்கிக் கொண்டு, “நீ தான் ஆபத்துக்காலத்தில் உதவுகிறவள்” என்று சொல்லி அவளைத் தன் பக்கமணைத்து ஒரு முத்தம் கொடுத்து. விட்டுக் கொல்லைப்புறமாய்ப் போய்விட்டான். அவளும் அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தாள்.

II

முதற் பிரிவில் கூறிய ஸம்பவங்கள் நடந்து ஸுமார் இரண்டு வருஷத்துக்கு மேலாயிற்று. அதே வீட்டில் வாயிலில் ரண்டொரு பரங்கிப் பூ வாடிக்கிடந்தன. கோலங்கள் சிறுவர்களால் அழிக்கப்பட்டு அலங்கோல மடைந்திருந்தன. ஆசிரியராகிய நாம் அவ் வீட்டுக்குள் பாவனை யென்னும் உடலத்துடன் சென்ற போது மாலையில் 25 நாழிகைப் பொழுதிருக்கலாம். வீட்டிலுள்ளோர், மூவர், கூடத்திலிருந்தார்கள். அவர்களுள் ஒருவரே புருஷர். அவர் தரையில் ஓர் ஆஸனப் பலகையில் உட்கார்ந்திருந்தார். ஓர் மாது, அவர் மனைவி, சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்தாள். ஓர் பெண், 15 வயதிருக்கும், ஓர் மூலையில் ஒரு பெரிய புஸ்தகத்தை வைத்துக் கொண்டு வெறித்த நோக்குடன் உட்கார்ந்திருந்தாள். இவர்கள் யாவரென நாம் கூறவேண்டுவ தவசியமில்லை.

“அவனால் நமக்கு உண்டான கஷ்டம் இவ்வளவு அவ்வளவல்ல.” என்றார் ராமய்யர். “அவன் போனது முதற் கொண்டு கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்துகொண்டிருக்கிறது.”

“என்ன செய்கிறது. தலைவிதி” என்றாள் அவர் மனைவி.

“தலைவிதி பணத்தை எடுக்கச் சொல்லிற்றா? ஆனமட்டும் கேட்டேனே. கெஞ்சினேனே. ஒன்றுக்கும் அசையவில்லையே.”

“அதுவும் அவன் தலைவிதிதான்.”

“மணியகாரருக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்று 500 ரூபாய் கடன் வாங்கினேன். அதுவும் போயிற்று. ஐந்நூறும் ஐந்நூறும் ஆயிரமாயிற்று. அதற்கு வட்டி இருநூறு ரூபாய். அவர்கள் பணத்தைக் கொடு என்று அரித்தார்கள். என்ன செய்கிறது! நிலத்தை எல்லாம் விற்றாயிற்று. ஈட்டுக்கடன் பேரில் பணம் கொடு என்று யாரைக்கேட்டாலும் பணமில்லை என்றார்கள். போக்யம் வைக்கவும் ஸம்மதப்படவில்லை. நிலம் விற்றாயிற்று, என்ன செய்கிறது? அதுவும் நமது தலைவிதி.” என்று பெரியவர் தமது தலையில் மனம் கசிந்து அடித்துக்கொண்டார். அவர் மனைவி கண்ணீர்விட்டுத் துக்கித்தாள்.

“சோற்றுக்குத் திண்டாட்டமாய்ப் போகவே நகை யெல்லாம் விற்றோம். பாத்திரங்கள் முதலியவற்றை யெல்லாம் விற்றோம். ஆயிற்று அந்தப் பணமும். இன்றோடு தீர்ந்து விட்டது. போகிப் பண்டிகையுடன் கைப்பணம் ஆஸ்தியெல்லாம் தீர்ந்தது. வீட்டையோ தொடுவதற்கில்லை. அதன் மேலுள்ள கடனோ தினம் வளர்ந்துகொண்டிருக்கிறது எருமை மாடோ செத்துப்போய் விட்டது. நாளை ஸங்கராந்தி பொங்கலுக்கு ஸாயான் வேண்டுமே, பணத்துக்கென்ன செய்வது,” என்றிப் படியாகப் பலவிதமாக புருஷனும் பெண்சாதியும் வெகு நேரம் அங்கலாய்த்து விட்டு,

“அவனுக்கு ஆயுஸு பலம் ரொம்ப இருக்கிறது. நாளைக்கு ஸங்கராந்தி இல்லாவிட்டால் அசுபமென்றல்லவா எண்ண வேண்டும்” என்றார்.

இந்தப் பேச்சுகளை யெல்லாம் கேட்டிருந்த நமது கதாநாயகி “மாமா, அசுபம் வரவேண்டாம். என்னிடம் ஒரு ரூபாய் இருக்கிறது. அதைத் தருகிறேன். நாளையதினம் ஸங்க்ராந்தி நடக்கட்டும். அசுபமான பேச்சே வரவேண்டாம். அதைக் கேட்க என் மனம் என்னவோ போலிருக்கிறது” என்று சொல்லி உள்ளே சென்று தனது சிறிய பெட்டியிலிருந்து ஒரு ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து தனது மாமனாரிடம் கொடுத்தாள்.

ராமய்யர் அதைப் பெற்றுக் கண்ணில் ஒற்றி, “நாளைய தினம் சுபதினமாகவே இருக்கட்டும்” என்று ஸந்தோஷத்துடன் கூறினார்.

“அப்படியே யாகட்டும்” என்று அவர் மனைவியும் மொழிந்தாள்.

“சீதா போன போது, ராஜம் சிறு பெண். ‘அண்ணா, என் பெண்ணுக்கு உன்னைத் தவிர வேறு யாவரும் பந்துக்களில்லை. என் புக்ககத்தில் எல்லாரும் எனக்கு வேண்டாதவர்கள். அவர்களும் நெருங்கின பந்துவல்ல. என் பெண்ணை நீ தான் காப்பாற்றவேண்டும். நம்ம ஸுந்தரத்துக்கு அவளைக் கொடுத்துவிடு. ஒன்றுக்குள் ஒன்றாயிருக்கட்டும். நான் வேண்டிக் கொள்வது அதுதான். ஸுந்தரமும் ராஜமும் அகமுடையான் பெண்சாதி யாயிருப்பார்கள் என்று நீ வாக்குக் கொடுத்தால் நான் சந்தோஷமாய் உயிர் விடுவேன்’ என்றாள். நானும் ‘அப்படியே ஆகட்டும். ஸுந்தரத்துக்கு ராஜத்தையே கல்யாணம் செய்து வைக்கிறேன், நீ ஒன்றுக்கும் யோசிக்காதே. என் பெண்ணைப்போல் பாவிக்கிறேன். என்னகமுடையாளும் அப்படியே ஒன்றுக்குள் ஒன்று ஸம்பந்தம் செய்யவேண்டு மென்கிறாள்’ என்றேன். அதன் படியே நடந்தது. அவன் ஓடிவிட்டானே. யோக்யனென்று நினைத்தேன். பாவிப் பயல் மோசம் செய்து விட்டானே.”

“மாமா, அப்படி ஒன்றும் சொல்லாதேயுங்கள். அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாதேயுங்கள். எனக்கு வருத்தமாயிருக்கிறது. அவரைப்பற்றி ஏதாவது சொன்னால் என் மனம் ஸங்கடமடைகிறது” என்று அழுது சொல்லிக்கொண்டே அவ்விடம் விட்டு அகன்று சென்றான். பையனின் பெற்றோரும் சிறிது நேரம் துக்கித்துவிட்டு தங்கள் கார்யத்தில் கவனம் செலுத்தலானார்கள்.

அன்றிரவு ராஜத்துக்கு மிகவும் சிரமமாய் விட்டது. அவள் தன் கணவனை விட்டுப் பிரிந்தது முதல் துக்கத்திலேயே மூழ்கிக் கிடந்தாள். தன் கணவனைப் பிரிந்தது முதல் அவன் சொன்ன சொற்களை நினைந்து நினைந்து வருந்தினாள். கணவனைப் பிரிந்தால் என்ன கெடுதி என்று எண்ணிப் பார்த்துவளல்ல. ஏதோ ஒரு பீதி, இன்னதென்று இயம்ப இயலாதது அவள் மனதில் குடி கொண்டது. ஒரு வருஷம் கழித்து அவள் ருதுவாகி மனம் விசாலமடைந்ததும், அவள் பய மதிகரிக்கலாயிற்று. ருதுவாகாத விதவைகளும் பக்வமடைந்து கணவனை யிழந்தவர்களும், இன்னம் மற்ற அமங்கலிகளும், அமங்கலமானவர்கள் என்று பிறரால் தூற்றப்பட்டு சுப காரியங்களில் கலக்கப் பெறாமல் தனித்து நிற்பதை யறிய அவளுக்குக் சவலைக் கிடமாயிற்று. தன் கதியும் அவ்வாறாகுமோ என ஏங்கினாள். பிற பெண்கள் தம் கணவனுடன் உல்லாஸமாய்க் காலங்கழித்து வருவதைக் கண்டும் கேட்டும் புஸ்தகங்களில் வாசித்தும் காதல் நோயின்னதென ஒருவாறு மனதில் பாவிக்கவே அந்நோய் ஒரு புறம் சில ஸமயம் வாட்டலாயிற்று. இவ்வாறு இருவகையிலும் மனந்தளர்ந்து ஸந்தோஷம் தவிர்ந்து கவலை மேலிட்டவளாய் வருந்தினாள். தன் கணவனுடைய உண்மையான நிலைமையை அறிய இயலாதவளாய் ஏங்கலானாள். அவருடைய தந்தையும் தாயும் பல தடவைகளில் அவரைப்பற்றி தூஷிப்பது பொறுக்காமல் அவர்களிருக்குமிடம் விட்டு விலகி வேறு இடத்துக்குச் சென்று கண்ணீர்விட்டழுவாள். “‘நீ மாத்திரம் என்பேரில் ஸந்தேகப்படாதே; நான் பொய் சொல்லவில்லை’ என்றாரே. அவர் என்னிடத்தில் ஏன் பொய் சொல்லவேண்டும். ஊரைவிட்டோடும்போதும் தம்மிடம் பணம் கொஞ்சமுமில்லை என்றாரே. நான் கொடுத்த ரூபாயை அன்புடன் ஏற்றுக்கொண்டாரே. அவரா திருடக் கூடியவர்? இவர்கள் தான் என்ன முரட்டுத்தனமாய் பழி வார்த்தை சொல்லுகிறார்கள்” என்றிவ்வாறு புலம்புவாள். ஸுந்தரம் அவளிடம் விடை பெற்றுச் செல்லுங்கால் அவளுக்குக் கொடுத்துப்போன ப்ரதி யுபகாரத்தை நினைக்கும்போதெல்லாம் அவளுக்கு வருத்த முண்டாகும். அவரைத் திரும்பவும் காணும் பாக்யம் எப்பொழுது கிடைக்கும் என்றேங்குவாள்.

பெற்றோர்களும் சிறிது சிறிதாக தங்களுடைய புத்ரன் மேல் உள்ள கோபத்தை யொழித்து அவன் ஒடிவிட்டதற்காக வருத்தப்பட்டார்கள். “அவன் திரும்பி வந்துவிட்டால் போதுமே. எப்படியாவது பிச்சை எடுத்தாவது ஜீவிக்கலாமே. அவனைக் காணாமல் என்மனம் படும்பாடு இவ்வளவு அவ்வளவல்லவே”, என்று ஊரில் பலரிடத்தும் சொல்லி வருவார்கள்.

ராஜம் அன்றிரவு நித்திரையே கொள்ளவில்லை. படுக்கை கையில் புரண்டு அழுதாள். தன் விதியை நொந்தாள். ஸுந்தரத்தை நினைந்து உருகினாள். அவன் கூறிப்போன மொழிகளை எண்ணி வருந்தினாள். “நான் அத்ருஷ்டசாலியானால் இந்த 2 வருஷ காலத்துக்குள் திரும்பிவந்துவிட மாட்டாரா! அவர் சொன்ன வார்த்தைகளெல்லாம் வீண் வார்த்தைகளெனத் தோன்றுகிறது. இனிமேல் வரப்போகிறதைப்பற்றி யார் என்ன சொல்ல முடியும். அவர் சொன்னவை யெல்லாம் எனக்குத் தேறுதலாகச் சொன்ன வார்த்தைகள்” என்று எண்ணி மனங் கசிந்தாள். இப்படிப் பலவிதமாக எண்ணி தான் பூமியிலிருப்பது பாரமாதலால் தனது நல்ல நிலைமையிலேயே உயிர்விடுவது மேலானதென நிச்சயித்தாள்.

பொழுதுவிடிந்தது. ஆனால் அவளுக்கு இன்னம் விடியுங் காலம் வரவில்லை. ஆயினும் தனது மாமியுடன் படுக்கையை விட்டெழுந்தாள். அவளுடன் வீட்டு வேலைகளை கவனித்தாள். அந்தணர் அதிகாலையிலேயே ஆற்றங்கரைக்குச் சென்று விட் டார். அவர் மனைவியும் நாலு நாழிகையானதும் தனது மருமகளை ஆற்றுக்கு வரும்படி அழைத்தாள்.

“எனக்குத் தலைவலிக்கிறது. உடம்பு என்னவோ செய்கிறது. நான் வேண்டுமானால் பிறகு போய்க்கொள்ளுகிறேன். இல்லாவிட்டால் கிணற்றிலே ஸ்நானம் செய்கிறேன்.” என்றாள் ராஜம்.

மாமியாரும் ஆற்றுக்குபோய் விட்டாள். தான் மாத்திரம் தனியாயிருக்கவே அவளுக்குப் பலபல யோசனைகள் தோன்றின. அவற்றின் பயனாக அவள் ஒரு பெரிய கயிற்றை ஓர் அறையில் உயரத்திலிருந்து கட்டி, கயிற்றில் சுருக்குப்போட்டு எணிமேலேறி அந்தச் சுறுக்கை தனது கழுத்திலிட முயன்றாள். பிறகு பயங்கொண்டு கீழே இறங்கினாள். மறுபடியும் ஏறினாள்.

“ஜகதீசா, என் கணவர் பிரிந்த பிற்பாடும் நான் உயிர் வைத்திருக்கவேண்டுமா. என் எண்ணத்தை நிறைவேற்ற தைர்யம் கொடு, உன்னை நமஸ்கரிக்கிறேன். அத்ருஷ்டமிருந்தால் இத்தனை நாளாக அவர் வராமலிருப்பாரா? ஜசதீசா, என்னுயிரை வாங்கிக்கொள்ளும், அவரைக்காணாம லிருக்கவென்னால் முடியவில்லை.” என்று சொல்லிக்கொண்டே கழுத்தில் சுறுக்கிட்டு ஏணியிலிருந்து கீழே குதித்தாள்.

உடனே படீரென்று ஈகவுதிறந்தது. ” என்னைக்கண்டு உயிரோசி இரு” என்று ஒருவர் சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார். வந்ததும் பெண் இருக்கும் நிலைமையைப் பார்த்து உடனே ஏணிமேலேறி அவளைத் தூக்கி கயிற்றை வாங்கிவிட்டு கீழே இறக்கினார். அதற்குள் அவள் கண்மூடி ஸ்வாசமும் இல்லாமல் போய்விட்டது. வந்தவர் அவளைத் தம்மடிமே லிருத்தி வேண்டிய சைத்யோபசாரமெல்லாம் செய்து அவள் மூர்ச்சை போயிருந்ததால் (சுருக்குடன் அரைநிமிஷமும் இருக்கவில்லை) அவளுக்கு ஸ்மாணை உண்டாக்கினார்.

ராஜத்துக்குச் சிறிது தன்னினைவு ஏற்படவே, அவள் தனது கண்களைக் சிறந்து பார்க்க தன் கணவன் மடியில் படுத்திருப்பதை யறிந்து சரேலென்று எழுந்திருந்து ஒரு புறத்தில் நின்றாள். “ராஜம், என்னகாரியம் செய்தாய், இப்படி செய்யலாமா? உனக்கார்துணை என்றாயே, எனக்கார்துணையென்று இப்படிச் செய்தாய்” என்று சொல்லியவளை யணைத்து முத்தமிட்டார். நாம் அவர்கள் ஸம்பாஷித்தவைகளை யெல்லாம் சொல்லவேண்டியல்லை.

கால்மணி நேரத்துக்கெல்லாம் ஸுந்தரத்தின் பெற்றோர் வரவே, ஸுந்தரம் அவர்காலில் பணிந்து வணங்கினான். அவர்களும் ஆசி கூறினார்கள்.

என்றாலும் தந்தைக்கு மகன்மேல் இன்னம் ஸந்தேகமிருந்தது. அதை யப்போது தெரிவித்தால் எங்கு பையன் ஸங்கராந்தியின் ஸந்தோஷத்தைக் கெடுத்துவிடுவானோ என்றெண்ணி சும்மாயிருந்தார். எல்லாரும் அன்று ஸந்தோஷமாகவே யிருந்தார்கள். ஒரு மணி ஸுமாருக்கு ப்ராம்மணர் பூஜை யாரம்பிக்க யத்தணிக்கையில் கூடத்திலுள்ள ஒரு நீண்ட குறுகியவாயுடன் இருந்த ஒரு பிறையில் அடைத்திருந்த பழங்கந்தைகள் அவர் மேல்பட்டுவிட்டன.

“கழுதை, இங்கேவா, இந்தத் துணிகளை எடுத்துவிடு என்று எத்தனை தரம்சொல்லுகிறது? பார் என்மேல் பட்டுவிட்டது. நான் மறுபடியும் ஸ்நானம் செய்யவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே குச்சியால் கந்தைகளை வெளியில் எடுத்துத் தள்ளினார். பிறையின் உள்புறத்தில் ஏதோ வெளுப்பாயிருந்தது. அதுவும் கந்தையாயிருக்கலாமென்று எண்ணி குச்சியால் தள்ளக் கடிதங் சுருகுாயிருந்தது. “இதென்ன கடுதாசிகள், பார், ஸுந்தரம்.” என்றார் அந்தணர். அவன் எடுத்துப் பார்த்தான். உடனே ப்ரமைகொண்டு சுவரில் சாய்ந்தான்.

“அதென்னடா அது?!!”

அவன் பதில் சொல்லாமல் அவைகளை அவரிடம் கொடுத் தான். “ஏய், இதைப்பார், காணாமற்போன நோட்டுகள், பாழும்பணமே, உன்னாலல்லவோ இவ்வளவ கஷ்டங்களும் நேர்ந்தன! அப்பா! ஸுந்தரம் உன் மேலிருந்த ஸந்தேகமெல்லாம் போய்விட்டது.” என்றார். யாவரும் பார்த்து ஆச்சரியப்பாட்டார்கள்.

“இப்பொழுது தான் ஞாபகம் வருகிறது, நோட்டுகளை இந்தப் பிறையில் வைத்துவிட்டுத் தான் திறவகோலைத் தேடினேன்.

“நானும் இதில்தான் எனது வ்யாஸத்தை வைத்தேன்” என்று யோசனையாய்ச் சொன்னான் ஸபந்தாம்.

“சரிதான். நோட்டுக்குப்பதிலாக வ்யாஸத்தை எடுத்துப் பெட்டியில் வைத்துவிட்டேன்!” என்றார் ப்ராமணர்.

அன்றையதினம் எல்லாரும் பொங்கலை மெதுவாக ஸாப்பிட்டார்கள். ஸந்தோஷத்தால் விலாப்புடைக்கத் தின்றார்கள்.

இனிக் கதையை முடிப்போம். ஓடிப்போன ஸுந்தரம் கும்பகோணம் சென்று சில கனவான்களுடைய உதவியால் தன் படிப்பை விருத்திசெய்து ஒரு ராஜாங்க உத்யோகத்தில் அமர்ந்து தனது பெற்றோர் தன்னைக் காணவிரும்புவதாக தன்னூர் நண்பன் ஒருவனாலறிந்து அவர்களையும் தன தன்புக்கிடமான மனைவியையும் காண ஊருக்குவந்தான்- அவனும் அவன் மனைவியும் சந்தோஷித்து விளையாடியதை இடமதி கரிப்பதால் எழுத வில்லை. நேயர்கள் மனத்தில் பாவித்துக் கொள்வார்களாக.

முற்றிற்று.

– சிறுகதைகள், முதற் பதிப்பு: 1922, வி.நாராயணன் & கம்பெனி, மதராஸ்.
– முன்பு ‘ஜனாபிமானி’ பத்திரிகையில் வெளியானது. அதன் பத்திராதிபர் அனுமதியின் மேல் இங்கு சேர்க்கப் பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *