தேவதை என்றதும் கண்களில் ஒரு கனவு மயக்கம் வெறும் உடல் மாயையாக வரும் அழகில் ஒரு பெண் தேவதையே பழகிய சுபாவத்தில் எல்லோருக்கும் நினைவில் வரக்கூடும் இதையெல்லாம் தாண்டி என்றும் கடவுள் தரிசனமாகவே அன்பு நிறைவான மனசளவில் வாழ்க்கை சத்தியத்தின் சிறிதும் முரண்படாத ஒரு சாட்சி தேவதையாகவே உயிர்க் களையோடு வாழ்ந்து பிரகாசிக்கின்ற பூரணியைப் பற்றி உள்ளபடி அறிந்து கொள்ள புறப்பிரக்ஞையாக வருகிற பார்வை நிலைக்கப்பால் உள்ளுலகையே ஊடுருவி ஒளி காணும் மான்ஸீகமாய் வருகிற விழிப்பு நிலை ஒன்றினால் மட்டுமே அவளைத் தரிசனம் காண முடியும்
அவளை அப்படித் தரிசனம் காண்பதற்குப் புறப் பிரக்ஞையாக வருகின்ற வெறும் வரட்டு வாழ்க்கையின் நிழல்களையும் தாண்டி அக நோக்காக நீங்கள் பார்க்க வேண்டிய உலகம் அவளைப் புடம் போட்டுத் தெளிய வைத்த அவளது வாழ்க்கையென்னும் திறந்த புத்தகம் ஒன்றை மட்டும் தான் உங்கள் கண்களில் அவளின் சோகம் நிறைந்த இருண்டு போன சூனியம் கொண்டு நிலைத்த நிழலாகவே வந்து கவியும் வாழ்க்கை இருப்பின் நடுவே அவள் காட்சி நிறைவான ஒரு கடவுளின் தேவதை தான் என்பது ஒளி தீட்சண்யமான ஒரு பேரொளியாகவே உங்களை வந்து கவ்விக் கொள்ளும் அவளை நீங்கள் அப்படித் தரிசனம் காண்பதற்கே இந்தக் கதை மூலம்
அப்போது அவள் சொந்த மண்ணை விட்டுக் கிளை பிரிந்து வாழத் தொடங்கிய நேரம் மட்டக்களப்பில் அவளுடைய உயிர் தூங்கும் அந்த வாழ்க்கை யுகம் குடும்ப விருட்சம் வேரோடி விழுது கண்டு தலை நிமிர்ந்து நிற்கும் வழி தெரியாமல் அவள் பேதை இரு வழியே பிரிந்து போகும் இருள் நிலைப் பயணம் அவளுடையதாகிப் போன மனச் சுமை தாங்காமல் வாழ்வை விட்டே கரை ஒதுங்கிப் போகும் நிலைமை வந்த போதிலும் உள்ளூரச் சிறிதும் ஒளி மங்காமல் தலை நிமிர்ந்து நின்று வந்த சவால்களை எதிர் கொண்டு வெற்றி சாதித்துக் களம் கண்ட விழிப்பு நிலை கொண்ட ஒரு சத்திய தேவதையே அவள் என்பதற்கு அவளைத் தோலுரித்துக் கருவறுத்து வேடிக்கை பார்த்த அற்ப மனிதர்களே மெய்யான இருப்பு நிலை கொண்ட அவளின் துயரம் மிகுந்த வாழ்க்கையே சான்று பொருளாக வந்து கதை சொல்லும், இந்தக் கதை வழியே காட்சி முகம் காட்டி உயிர் கொண்டு நிற்கும் அவள் கணவன் ஆதவனே இக் கதைக்கான ஒரு நிஜம் மங்கி உயிர் விட்ட ஒரு கருப் பொருள், அன்பு நிறைவாக மலர்ந்து சோபிக்க வேண்டிய உயிர் வ்ழிபாடான உண்மை நிலைக்கு மாறாக அவன் தடம் பதித்துச் சென்ற அவளின் சோகமே வாழ்வான அவளின் வாழ்க்கை யுகம் இருள் குடித்து மாண்டு போனதற்கு அவனின் அன்பு வழியறியாத சித்தம் குழம்பிய நடத்தைக் கோளாறுகள் தான் காரணமென்பது ஒரு கசப்பான உண்மையாக அவளுக்குப் பிடிபட வெகு நாளாயிற்று
திருமணமான புதிதில் தனது புனிதமான பெண்மையை எதிலும் பங்கமுறாமல் கட்டிக் காத்துத் தன்னை நல்லபடி வாழ வைப்பதற்கென்றே பெரிய அளவில் அவதாரம் எடுத்து வந்த பூரண அன்பில் நிறைந்த ஒரு யோக புருஷனே அவன் என்று அவள் எவ்வளவு பெரிய கற்பனைக் கோட்டையைத் தனக்குள் கட்டி மகிழ்ந்தது மட்டுமல்ல அதில் ஒரு சிறு கர்வம் கூட அவளிடம் இருந்தது அவனை உத்தம குணங்களைக் கொண்ட ஓர் இலட்சிய புருஷனென்றே மிகவும் அதீத கற்பனை வளத்துடன் தான் போட்ட மனக் கணக்கு இவ்வளவு விரைவில் பொய்த்துப் போய் விடுமென்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்பார்க்காத நிலையிலேயே அவள் அன்பு வரண்டு போன அந்த மாறுபட்ட விபரீத சூழ்நிலைக்கு மனம் நொந்து போய் முகம் கொடுக்க நேர்ந்தது
ஆதவனுக்குக் கை நிறையக் காசு புரளாத ஒரு சாதாரண கிளார்க் வேலை தான் கல்யாணமான புதிதில் வண்ணார்பண்ணையிலுள்ள அவன் வீட்டில் சொந்தங்கள் சூழ அவள் வந்து வாழத் தொடங்கிய நேரம் அவளை ஒரு சாதாரண வேலைக்காரியாகக் கூட அவன் மட்டுமல்ல அவன் பெரிதாகத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய உறவுப் பட்டாளம் கூட மதிக்காமல் அவளைத் தோலுரித்தே கருவறுத்த சந்தர்ப்பங்களைக் கூட அவள் அவன் மீது கொண்ட காதல் மயக்கத்தினால் பொறுமை காத்து வாழ்ந்ததே அவளைப் பொறுத்த வரை ஒரு மிகப் பெரிய சாதனை தான்
எப்படித்தான் தீக்குளித்தே மனசளவில் செத்து மடிய நேர்ந்தாலும் அவள் மீண்டும் மீண்டும் சாகாவரம் பெற்று உயிர்த்து எழுந்ததெல்லாம் தனது தலையில் ஒளி மங்காமல் நின்று பிரகாசிக்கின்ற கற்பின் கிரீடத்தின் பெருமைகளை நிலை சரிந்து போகாமல் காப்பாற்றி வைப்பதொன்றையே மனம் கொண்டதன் விளைவாகவே அவளின் இந்தப் பிறர் அறியாமல் போன ஒளிப் பிரசனனமும் கூட ஒரு மறை வேதமாகவே அவளுள் நடந்தேறி வந்தது இந்த மறை வேத நாயகியை ஒரு போதும் அவன் மனதளவில் தன்னில் ஒரு பாகமாக வாழ்ந்து அறியாமல் போன வெறும் சபலங்களிலேயே சிக்கி நடை தடுமாறும் விழிப்பு நிலையே அடியோடு ஒழிந்து போன ஒரு வரட்டு ஜென்மம் தான் அவன், எனினும் அவனுடனேயே வாழ்ந்து கழிக்க வேண்டிய பாழும் தலை விதி அவளுக்கு மட்டும் தான் மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றத்தில் ஒரு சாதாரண கிளார்க் வேலை தான் ஆதவனுக்கு, அதை விடச் சில சமயங்களில் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கும் அவன் முகம் கொடுக்க நேரிடும் வருகின்ற சம்பளத்துக்குள் தான் அதுவும் அடங்கும் சிங்களம் ஓ/ல் வரை படித்துச் சித்தி பெற்றிருப்பதால் தான் மொழிபெயர்ப்பாளனாகவும் அவன் அவதாரம் எடுக்க நேர்ந்திருகிறது அவன் வேலை செய்வது என்னவோ நீதி மன்றத்தில் தான், சொந்த வாழ்க்கை மனைவி குழந்தகளைப் பொறுத்த வரை மனு தர்ம நீதியென்பதே அவன் அறிவுக்கு எட்டாத ஒரு சூனிய இருப்பு நிலையில் தான் இருந்து வருவதற்குச் சான்றுகள் தேவையில்லை பூரணியின் நிரந்தரமாகிப் போன கண்ணீர் குளித்து எழும் காட்சித் தடங்களிலிருந்தே அவனின் குரூரமாக வெளிப்படும் நிஜ ரூபத்தைக் கண்டு கொள்ளலாம் கல்யாணமான நாளிலிருந்தே அந்தச் சிலுவை மேடை தான் அவளுக்கு
எத்தனை காயங்களென்று தான் அவள் பொறுப்பாள் போயும் போயும் இப்படியொரு ரண களத்தினுள்ளா அவளுக்கு அந்த வாழ்க்கை நரகம்? நரகமென்றாலும் பொறுத்தாள வேண்டிய பாழும் தலை விதி அவளுக்கு அவனோடு மனம் விட்டுப் போய் உடல் கலந்ததன் விளைவாக அடுக்கடுக்காகப் பிள்ளைகள் வேறு முதல் இரு ஆண் குழந்தைகள் மேலும் ஒரு குழந்தை வருவதற்கான தயாரிப்பில் அவன் ஈடுபட்டதன் விளைவாக அவளுக்கு மாத விலக்கு நின்று போய் மூன்று மாதமாகிறது ஒரே வாந்தி தலைச் சுற்றலாக இருக்கிறது அதோடுதான் வீட்டுக் கடமைகளையும் அவள் பார்க்க நேர்ந்தது அவன் ஒரு துரும்பும் அசைப்பதில்லை எதற்கும் வளைந்து கொடுக்காத நெடிதுயர்ந்த ஆஜானுபாகுவான வளர்த்தி அவனுடையது ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளராமல் அவன் மந்தமாக இருப்பது கூடத் தான் கொண்டு வந்த பாவக் கணக்கின் ஒரு விபரீத விளைச்சல் தான் என்பதை எதிர் முரணாக அவன் செயல்பட்டுச் சண்டை போடும் போதெல்லாம் தனக்குள் பெரும் கவலை கொண்டு அவள் அழுது தீர்ப்பாள் அந்தக் கண்ணீர் நதியின் சுவடுகள் வற்றாத நிலையிலேயே அவளைத் தீக்குளிக்க வைத்துத் தோலுரித்துப் பார்க்க மேலும் ஒரு துயர சம்பவத்திற்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது
ஒரு சமய,ம் கல்முனையிலிருந்து அவளின் ஒன்றவிட்ட தம்பி சந்திரன் வந்திருந்தான், அவன் அங்கு டாக்டராகப் பணியாற்றுகிறான் மனம் விட்டுச் சரளமாகப் பேசக் கூடிய இனிய சுபாவம் அவனுக்கு சிறு வயதில் இருவரும் ஒன்றாகக் கூடி விளையாடி மகிழ்ந்த ஞாபகம் ஓர் உயிர் ஊற்றாக மனதில் மீண்டும் உயிர்த்தெழ தன் சோகம் மறந்து முகமெங்கும் ஒளி வியாபகமாய் தன்னை மறந்து சிரித்தபடி அவள் அவனை வரவேற்று உபசரித்து உள்ளே அழைத்துப் போய் அமர வைத்துச் சகஜமாகக் குரலை உயர்த்தி அவனைக் கேட்டாள் அப்போது கூடவே ஆதவனும் இருந்தான் அன்று ஞாயிறு விடுமுறை நாள் அவனுக்கு
“ எப்படியண்ணை இருக்கிறியள்?”
“எனக்கென்ன நல்ல வேலை நல்ல மனைவி குடும்பம் எனக்கென்ன குறை> நீ எப்படியிருகிறாயடி “ பழகின உரிமை மறவாமல் அவன் அப்படிக் கேட்ட போது வெறுமனே சிரிக்க மட்டும் தான் அவளால் முடிந்தது உள்ளதைச் சொன்னால் அவனுக்கு மனவருத்தமாக இருக்கும் அதுவும் ஆதவன் முன்னிலையில் பேசுகிற விடயமல்லவே அவள் புதைகுழிக்குள் போய்க் கொண்டிருக்கிற சோகக் கதை அப்பேர்ப்பட்ட இருள் விழுங்கும் உயிர் விட்ட தனது கதை தன்னுடனேயே முடிந்து போகட்டும் என்று அவள் மிகவும் மனவருத்தத்துடன் நினைவு கூர்ந்தாள் அவள் மெளனம் கனத்து இருப்பதைப் பார்த்து விட்டு அவன் குரலை உயர்த்திச் சொன்னான்
“ பூரணி ! உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, நான் போன மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தனான் பெரியம்மா மட்டளக்களப்புக்கு வாற ஆயத்தத்திலை இருக்கிறா “அநேகமாக வாற மாதமளவிலே அவ வருவாவென நினைக்கிறேன்” அவளுக்கு அதைக் கேட்க மிகவும் சந்தோஷமாக இருந்தது இப்ப நான் இருக்கிற நிலைமையிலை அம்மா வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவள் நம்பினாள் பேதை அதைக் கேட்டவுடன் ஆதவனுக்கு முகம் கறுத்துப் போனதை அவள் கவனிக்கத் தவறிவிட்டாள்
அந்த நல்ல செய்தியைச் சொல்லி விட்டுச் சந்திரன் போய் பல மாதங்கள் கடந்த நிலையிலும் அவன் கூறினது போல் அம்மா வந்து சேராதது அவளுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது, இடையில் என்ன நடந்ததென்று பிடிபடாமல் அவளுக்கு ஒரே யோசனையாக இருந்தது இது பற்றி ஆதவனிடம் கேட்கவும் துணிவு வரவில்லை, இது நடந்து இரு மாதங்கள் கழித்துப் பிரவச நாள் நெருங்கி வருவதால் ஊரில் அவளையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு வருவதற்காக ஆதவன் கிளம்பினான்
நீண்ட பயணம், இரு ரயில் பிடித்து வர வேண்டி இருந்தது இரவெல்லாம் நித்திரையில்லை அதோடு போகிற இடத்திலும் வாந்தி ஓங்காளித்துக் கொண்டு வருகிறது ஒரு அன்பில்லாத புருஷனோடு வாழ்ந்ததன் ஒரு கறை நிகழ்வாக இது அவளுக்கு மனதால் ஒன்றுபடமுடியாமல் போன ஊனம் விழுந்த மறை பொருளாகத் தான் அவள் என்றாலும் கூட வாழ்க்கையை விட்டு ஓடிக் கரை ஒதுங்கிப் போக முடியாத நிலையில் அவள் என்ன தான் செய்வாள் எங்கே கடவுள் என்று பிடிபட மறுத்தது
யாழ்ப்பாணம் டவுனிலிருந்து எட்டு மைல் கல் தொலைவில் இருக்கிறது அவளின் ஊரான ஏழாலை அவளை ஓர் உன்னத உயிர் வார்ப்பாகச் செதுக்கி எடுத்த தனிப் பெருமை கொண்டது அவளுடைய அந்த அழகான கிராமம் சின்ன வயதிலிருந்தே அந்த மண்ணின் சாசுவதமான தெய்விகப் பெருமைகளையே மானஸீகமாகத் தரிசித்து வாழ்ந்த பலனோ என்னவோ மனசளவில் புடம் பெற்றுத் தெளிந்த ஓர் ஆதர்ஸ தேவதை போல அவள் இருக்கிறாள் அப்பா வளர்த்த வளர்ப்பும் அப்படி
எது நடந்தாலும் எவ்வளவு தான் மனம் காயப்பட்டுத் தீக்குளிக்க நேர்ந்தாலும் எதிலும் உடைந்து சிதறிப் போகாத ஆன்மீக விழிப்பு நிலை மனோபலம் ஒன்றே அவளுடைய பிறவிப் பெருமையாக தொடர்ந்து ஒளி வீசிய வண்ணம் இருக்கிறது
வீட்டைக் கண்டதும் அவள் வெகுவாகப் புல்லரித்துப் போனாள் பங்களா போன்ற ஏழெட்டு அறைகளைக் கொண்ட பெரிய வீடு, அதைச் சுற்றி பரந்து tவிரிந்து கிடக்கிற பசுமை நிறைந்த பென்னம் பெரிய வளவு வாழ்க்கை போன பின் எல்லாம் இருந்து என்ன என்று அவளுக்கு யோசனை ஓடியது வாசலில் அப்பாவைக் காணவிலை முற்றத்தில் குளிர்ச்சியாகப் படர்ந்திருக்கும் வேப்பமர நிழலின் கீழ் அம்மாவும் தங்கை பவானியும் நிற்பது வெய்யில் வெளிசத்தில் மங்கலாகத் தெரிந்தது, அவளின் பையன்களில் மூத்தவன் குமாருக்கு எட்டு வயதாகிறது அம்மாவை மறக்காமல் நினைவு கூர்ந்தவனாய் அம்மம்மா என்று கத்திக் கூப்பிட்டபடி ஓடிப் போவதையே வேடிக்கை பார்த்தபடி அவள் பின்னால் வரும் போது முகத்தில் சந்தோஷம் மறைந்து களை இழந்த முகத்தோடு அம்மா வெறும் நிழலாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவள் பதறிப் போனாள் கண்களை இருட்டுவது போல் தோன்றியது பின் மயக்க நிலை தெளிந்து நிஜம் மறக்காத விழிப்பு நிலையில் இருந்தவாறே பார்க்கும் போது இன்னும் ஒரு நிழல் வந்து மூடுவது போல முகம் கறுத்து பவானி அவளை நோக்கி ஓடி வருவது தெரிந்தது
“நெருங்கி வரும் போது அவள் குரலில் சூடேறிக் கேட்டாள்
“என்ன அப்படிப் பாக்கிறாய் எல்லாம் உனக்கு மறந்து போச்சு அம்மாவை வர வேண்டாமெண்டு எழுதிப் போட்டு இப்ப நடிக்கிறியே”?”
“ போதும் நிறுத்தடி அம்மாவை மட்டக்களப்புக்கு வர வேண்டாமெண்டு நான் எங்கை எழுதினனான்? “
“அப்ப ஆர் இதையெல்லாம் எழுதினது?
அதற்கு அவன் அந்த ஆதவன் குரலெடுத்துக் கொஞ்சமும் மனம் கூசாமல் சொன்னான்
“ அதை எழுதியது நான் தான் “
“ ஓ நான் மறந்து போனன் உங்கடை கையெழுத்தை மட்டுமல்ல மனசையும் கூடத்தான் “
என்று சொல்லி விட்டு அவன் முகத்தில் விழிப்பதே பாவம் என நினைத்தாளோ என்னவோ பவானி வந்த சுவடு தெரியாமல் அவள் போன பிற்பாடு பூரணி மட்டும் அவன் நிழல் குடித்த பெருந்துயரத்தில் அவள் தன்னை மறந்து வாய் விட்டுக் கதறி அழுவாளென்று அவளைச் சுற்றி நின்ற அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக அதைக் கூட ஜீரணித்து உள் வாங்கியவாறு ஒன்றுமே நடந்தேறாத பாவனையில் முகத்தில் கடவுள் தரிசனமான தெய்விகக் களை கொண்டு பிரகாசிக்க அவள் மிகவும் அமைதியாக உள்ளே படியேறி வருவதைப் பார்த்து விட்டு மீண்டும் அவளைச் சினந்து ஏறிட்டுப் பார்த்தவாறே குரலில் சூடேறி பவானி கேட்பதைக் கனவில் கேட்கிற பிரமையோடு அவள் உள்ளே போக மனம் வராமல் கதவு நிலையருகே மெளனம் கனத்துப் போய் வெகு நேரமாய் நின்று கொண்டிருந்தாள் உயிர் மங்கிய இந்த மாறுபட்ட சூழ்நிலையில் வளமான வாழ்க்கையை நெறி தவறாத தெளிந்த அறிவோடு வாழும் முறையைத் தனக்கு ஒரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிக் கற்றுக் கொடுத்த அப்பாவின் முக தரிசனமே இத்தகைய கறைகளையெல்லாம் கழுவித் துடைத்து மேலெழும் ஒரு புனித இருப்பாக அப்போதைய நிலையில் அவளுக்கு மிகவும் வேண்டிய ஒன்றாக இருந்தது அதைக் கண்டு கொள்ள மறுக்கிற ஒரு சராசரி மனிதப் போக்கிலேயே சிந்தனைகள் தடம் புரள பொங்கி வரும் எரிச்சல் தாங்காமல் குரலை உயர்த்தி பவானி கேட்டாள்
“ என்னக்கா இவ்வளவும் நடந்திருக்கு அம்மா மீது அப்படி என்ன மனக் குரோதம் அத்தானுக்கு? இதைத் தட்டிக் கேட்கக் கூட உனக்குத் துப்பிலையென்றால் அம்மாவை நீ ஆழமாக நேசிப்பதாய் அடிக்கடி சொல்லிக் காட்டுவியே அதுக்கு என்ன அர்த்தம் என்று இப்ப நான் கேக்கிறன்”
அவள் அவ்வாறு கேட்பதைக் கூட மனம் நோகாமல் ஜீரணித்து உள் வாங்கியவாறே அதற்கான பதிலை அறிவு விளக்கமாகத் தயார்படுத்தும் உச்சக் கட்ட விழிப்பு நிலையில் நீண்ட நேரமாகச் சிந்தனை வெறித்து மெளனம் கனத்துப் போய் நின்று கொண்டிருந்தவள் பின் சகஜ நிலைக்கு மீண்டவளாய் கண்கள் ஒளி மின்ன உடைந்து போகாத மெல்லிய குரலில் கம்பீரமாக அவள் கூறினாள்
“நான் இப்படி இவரோடு வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடாமல் மெளனம் காத்து நிற்பதெல்லாம் எதுக்கு என்று உனக்குத் தெரியுமோ? எப்பவும் கடவுளின் மேலான தெய்வீகக் குணங்களோடு பிரகாசித்தே வாழ்ந்து காட்டுகின்ற ஒரு தேவதை மாதிரித் தான் நான் என்று சொன்னால் நீ சிரிப்பாய் இது தான் உண்மை உலகம் கவிழ்ந்து நிலை தடுமாறிச் சரிந்து போனாலும் உள்ளே ஒளி வியாகமாய் ஒருவன் அல்லது ஒருத்தி இருக்கிற நிலையில் அந்த முழுமைத் தன்மையே அவர்களைப் பாவங்களிருந்தும் துன்பங்களிலிருந்தும் தளை அறுத்து காப்பாற்றி வைக்கின்ற புனித கவசம் போன்றதே அதுவும் உனக்குச் சொன்னாலும் விளங்காது ஜீவன் முக்தி என்று நீ கேள்விப்பட்டிருக்கவும் மாட்டாய் அது என்னிடமும் நிறைஞ்சு இருப்பதே நான் ஒன்றும் பேச வராமல் இப்படியெல்லாம் இருப்பதற்கான நிஜம் என்று சொன்னால் ஒரு வேளை உனக்கு மயக்கமாக இருக்கும் இந்த மயக்கம் கலைஞ்சு பாக்கிற நிலையிலை தான் நான் ஆரென்று நீ நம்புவாய் “
எடுத்ததுக்கெல்லாம் சாட்டை தூக்கி விளாசித் தள்ளுகின்ற கணக்கில் அத்தானின் அன்பு வரண்டு போன பாலைவன வாழ்க்கையின் சவால்களையெல்லாம் எதிர் கொண்டு மனமே உடைந்து தூள் தூளாகிப் போகாமல் ஜீவன் முக்தி தத்துவம் பேசியே வாழ்வின் மிகப் பாரதூரமான கறைகளையே முகம் சுழிக்காமல் நீந்திக் கரை கடந்து போகின்ற இந்த அக்கா உண்மையில் ஒரு சாதாரண பெண்ணில்லை இவள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தரிசன தேவதை தான் என்று பவானி முழுமனதோடு இப்போது நம்பினாள் அவளருகில் நிற்பதற்கே மனம் கூசி வெட்கம் கொண்டு அவள் நிற்பது போலவும் ஒரு காட்சி நிழல் பூரணியின் கண்களை வந்து மறைத்தது.