காசிருந்தால் கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 7,305 
 

திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் – ஒரு அறிமுகம்: [+]

பொங்கல் விடுமுறை நாட்களானதால் வேர்கடலைச் சங்கத்தில் அதிகமாகக் கூட்டமில்லை. வெனிஸ் அறையில் பதினைந்து பேர் இருக்கலாம். வழக்கமாக வரும் சாமி நாதன், சாய் பிரபு, நெடுமாறன். அருகில் புதிதாக ஒரு வாலிபன். வழக்கம் போல் கண்ணாடிச் சுவரோரமாக அன்புமல்லி.

“என்னடா சித்து, ஏன் இப்படி சாய் வீட்டு சமையலைச் சாப்பிட்ட மாதிரி துக்கப்படுறே?” என்றான் சாம், புது வாலிபனிடம்.

“தை பிறந்தாச்சு” என்றான் சித்து.

“அதுக்கேன் இப்படி சொத்து போன மாதிரி சோகப்படறே… வருஷா வருஷம் தை பிறந்துக்கிட்டு தான் இருக்கு.. நாம வேணாம்னு சொன்னா நிக்குமா என்ன?” என்றான் சாய்.

“வருஷா வருஷம் தை பிறந்துக்கிட்டிருக்கே, அதான் வருத்தமாயிருக்கு..” என்று புலம்பினான் சித்து.

“யார்ரா இவன்..” என்றான் சாய்.

“இல்லேடா… இந்தத் தை மாசமாவது எனக்குக் கல்யாணம் ஆகும்னு நினைச்சேன்… நடக்காது போலிருக்குடா” என்று பெருமூச்சு விட்டான் சித்து.

“அதான் கலா வீட்டுல கூட சம்மதம் வாங்கிட்டியே, அப்புறம் என்னடா?” என்றான் நெடு.

“கலா இப்ப கலாட்டா பண்றாடா.. பத்து லட்சம் பணம் சேர்த்துக்கிட்டு, அப்புறம் தான் கல்யாணம்னு அடம் பிடிக்கிறாடா..”

“ஏன்?”

“என்னமோ சொந்தக் கால்ல நிக்கணும், அப்படி இப்படிங்கறா.. இப்ப என்ன வாடகை கால்லயா நிக்கறோம்..? பொண்ணுங்களே இப்படித் தான்” என்றான் சித்து.

“இந்தா, பகார்டி அடி.. எல்லாம் சரியாயிடும்… இப்படி தொங்கிட்டியேடா கண்ணா?” என்றான் நெடு, ‘ச்’ கொட்டியபடி.

“நாளைக்கே புது அக்கவுன்ட் திறந்து, மாசா மாசம் சம்பளத்துல பாதியை நாம அதுல போடணும்னு சொல்றா”

“என்னால முடியாதுடா..” என்றார்கள் நெடுவும், சாயும்.

“உங்களை இல்லடா.. எங்க ரெண்டு பேரையும் சொன்னா.. கலாவையும் என்னையும்..” என்றான் சித்து.

“சரியாத்தான் சொல்லியிருக்கா” என்ற குரல் கேட்டுத் திரும்பினார்கள். அன்புமல்லி அண்மையிலிருந்து கையசைத்தார். “நீங்க பேசிக்கிட்டிருந்தது காதிலே விழுந்தது. கல்யாணத்துக்கு முன்னாலே பணம் சேமித்து வச்சுக்கிறது நல்லது தான்” என்றார்.

“உங்களுக்கென்ன சார், சொல்லிட்டீங்க.. எந்த மடையனாவது இதுக்கு ஒத்துக்குவானா?” என்றான் சித்து.

“என் மருமகன் சிவா ஒத்துக்குவான்” என்றார் அன்பு.

“உங்க சிவா மடையனா சார்?” என்றான் சாய்.

“இல்லப்பா, படு புத்திசாலி. கல்யாணத்துக்கு முன்னாலே பணம் சேமிக்க ஒத்துக்குவான்னு சொன்னேன்”

“சார், கலா இவன் ஆளு சார், உங்க மருமகன் ஒத்துக்கிட்டா என்ன, மறுத்தா எங்களுக்கென்ன சார்?” என்றான் சாம்.

“அட இல்லப்பா” என்றபடி எழுந்து இவர்களருகில் வந்து உட்கார்ந்தார் அன்பு. “என் தங்கை பையன் சிவா.. அவன் இப்படித் தான்.. காதலிச்சு சம்மதமெல்லாம் வாங்கின பிறகும், பணம் சேர்த்த பிறகு தான் கல்யாணம் செய்துகிட்டான்”

“எவ்வளோ நாளாச்சு, பணம் சேர்க்க?” என்றான் சித்து.

“ஒரே நாள்.. அவனுக்கு நல்ல நேரம்…குறுக்கு வழி ஒண்ணு தெரிய, கப்புனு பிடிச்சிக்கிட்டு பணம் சேர்த்துட்டான்”

“என்ன சார், திருடினானா? பிக் பாகெட்டா, பேங்க் கொள்ளையா?” என்றான் சாய்.

“பயமுறுத்தினான்”

“என்ன சார் சொல்றீங்க? யாரை பயமுறுத்தினாரு உங்க மருமகன்?” என்றான் நெடு.

“அவன் வருங்கால மாமனார் மாமியாரைத் தான்.. சொல்றேன் கேளுங்க” என்றபடி பணியாளரை அழைத்து எல்லோருக்கும் சிற்றுண்டி வரவழைத்தார்.

பணியாளர் கொண்டு வைத்த முழு வெங்காய போண்டா, புளி கோங்குரா சட்டினி, குளிர்ந்த பாதாம் பால் எல்லாவற்றையும் அனைவரும் ஒரு கை பார்க்க, அன்புமல்லி சொல்லத் தொடங்கினார்.

சிவா அமெரிக்கா போன புதிது. சிகாகோ கொலம்பியா கல்லூரியில் திரைப்படப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தான். காலை வேளையில் கல்லூரியில் பாடம் முடிந்ததும், மதியம் தொழிற்பயிற்சிக்காகக் கொலம்பஸ் தெரு தாண்டி, லேக் ஷோருக்குப் போகுமுன் இருக்கும் டவின்சி கட்டிடத்தில் தினமும் நடக்கும் படப்பிடிப்பில் திரைக்கதை, ஒலி ஒளி அமைப்பு, எடிடிங், கதைப் பட்டி, வசனம், இயக்கம் என்று எதிலாவது உதவி செய்ய வேண்டும். தாமதமாகப் போனால் பாழாய்ப் போன தொழிற்பயிற்சிக் காரியதரிசியிடம் தொங்கி, ஒப்புதல் சீட்டு வாங்கிக் கொண்டு போக வேண்டும். கல்லூரியிலிருந்து டவின்சி கட்டிடம் குறைந்தது ஒரு மைலாவது இருக்கும், சைக்கிளில் தான் போவான்.

அன்றைக்குக் கல்லூரியில் பாடம் முடியவே நேரமாகிவிட்டது. அவசரமாக வெளியே வந்த போது லேசாய் மழை. போதாக் குறைக்கு அகோரப் பசி. எதிரே பர்கர் கிங்கில் ஒரு டபுள் வாபர் சேன்ட்விச் வாங்கிக் கொண்டு, சாப்பிட்டபடியே சைக்கிளில் ஏறி டவின்சி கட்டிடத்துக்குப் பறந்தான். சாப்பிட்டுக் கொண்டே பறந்ததாலோ, பறந்துகொண்டே சாப்பிட்டதாலோ வந்த வினை. பெல்போ தெருவுக்கும் மிசிகன் அவென்யுவுக்குமிடையே, வேகமாகத் திரும்பிய சிவப்பு மஸ்டேங் காரைக் கவனிக்க மறந்து மோதினான். உட்கார்ந்தபடியே எகிறிக் குதிக்கும் போட்டி ஒன்று ஒலிம்பிக்சில் இருந்தால், அன்றைக்கு அவனைப் பார்த்தவர்கள் உடனே அவனை ஒலிம்பிக்சுக்கு மூட்டை கட்டி அனுப்பியிருப்பார்கள். மஸ்டேங் சரியான நேரத்தில் அவனை மிதமாக இடித்து நின்றதால், மூன்றரை அடி எகிறி குதித்துக் கீழே விழுந்தானே தவிர, சிவாவுக்கு பலமாக அடி ஒன்றும் இல்லை. சைக்கிள் மட்டும் காயலான் கடை இரும்புப் பொட்டலமாய் மாறிவிட்டிருந்தது. அவசர அவசரமாக எழ முயற்சித்தான் சிவா.

காரிலிருந்து இறங்கி வந்தவள் கிரேக்க தேவதை வீனஸ் என்று யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருப்பான். எழுந்து கொண்டிருந்தவனைக் கை தாங்கி எழுப்பி விட்டாள். “மன்னிச்சுருங்க, நான் அவசரமா வந்துகிட்டிருந்ததாலே உங்களைக் கவனிக்கவில்லை. நான் உடனே நடன வகுப்புக்குப் போகணும். இது விபத்துக்கான நஷ்ட ஈடு.. இதில் என் முகவரியும் தொலைபேசி எண்ணும் இருக்கு.. போதாதென்றால் நாளைக்கு நாம கொலம்பியா கல்லூரியில் சந்திக்கலாம். சரியா?” என்றாள்.

அவளுடைய முகத்தையும் வாயசைவையும் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, அவள் சொன்னதை கவனிக்கவில்லை. “நாளைக்கு கொலம்பியா கல்லூரியில் நாம் கல்யாணம் செய்துக்கலாம், வரியா?” என்று கேட்டதாகத் தான் அவனுக்குத் தோன்றியது. வேகமாகத் தலையாட்டினான். அவன் கையில் ஒரு செக்கைத் திணித்து விட்டு, அவள் காரில் ஏறி மறைந்து விட்டாள்.

சைக்கிள் பொட்டலத்தை இழுத்துத் தெருவோரத்தில் போட்டுவிட்டு, காவல் துறையினருக்காகக் காத்திருந்தான். சைக்கிள் குப்பையை அள்ளக் கட்டணம் செலுத்திவிட்டு சீக்கிரம் போக வேண்டும் என்று ஏதோ நினைவாக, கையில் அவள் கொடுத்துச் சென்றிருந்த காசோலையினால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டதும் தான் அவனுக்குப் புரிந்தது, தான் செய்த தவறு. அவசரமாகக் காசோலையைப் பார்த்தான். எழுத்தெல்லாம் அழிந்து போயிருந்தது. அதிர்ச்சியினால் அவனுக்கு மூச்சு வரவில்லை. அதிர்ச்சி, எழுத்து அழிந்து போனதால் இல்லை, எண் தெளிவாகத் தெரிந்ததால். முழுசாய் மூவாயிரம் டாலர்.

இந்த சமயத்தில் என் மருமகன் சிவாவைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். சிவா சிறு வயதிலிருந்தே ‘செய்வனத் திருந்தச் செய்’ என்பதில் நம்பிக்கை உடையவன். என்ன காரியமானாலும், தான் செய்தாலும் சரி, அடுத்தவர் செய்தாலும் சரி, விவரம் புரியாமலோ விவேகமில்லாமலோ செய்தால் திருத்தி, சரியாக வரும் வரை விடமாட்டான். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.

அவன் பச்சையப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் இப்படித் தான் ஒரு முறை மோபெட் ஓட்டிக் கொண்டு போன போது அவசரம் காரணமாக ஒரு ஆட்டோ ரிக்ஷாவை இடிப்பது போல் மிக நெருக்கமாகப் போய் ஒடித்துத் திரும்ப, நிலையிழைந்த ஆட்டோ ரிக்ஷாக்காரன் சிவாவைத் திட்டினான்: லவடிகபால், சோமாறி, பேமானி, கஸ்மாலம், பொறுக்கி, கபோதி, பன்னாடை, பொறம்போக்கு என்று அஷ்டோத்திரம் ஒன்று சொல்லி முடித்தான்.

நீங்களும் நானும் என்ன செய்திருப்போம்? ஒரே ஓட்டமாக ஓடியிருப்போம். சிவா அப்படியில்லை. கல்லூரி அவசரத்தை மறந்து ஆட்டோ ரிக்ஷாக்காரனைத் துரத்தி, அடுத்த சாலை விளக்கினருகே பிடித்து நிறுத்தினான்.

சிவாவைப் பார்த்ததும், ஆட்டோ ரிக்ஷாக்காரனுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. வண்டியை ஓரம் கட்டிவிட்டு “இன்னாடா? சுளுக்கெடுக்கணுமா?” என்றான்.

“இல்லீங்க, லவடிகபால்னா என்னங்க அர்த்தம்?” என்றான் நிதானமாக சிவா.

“அர்த்தமா? யார்யா நீ, தமிழ் வாத்தியாரா?”

“அப்புறம், சோமாறி, பேமானி, கஸ்மாலம்.. இதுக்கெல்லாம் என்னங்க பொருள்?”

“ஆளை விடுயா, யோவ்”

“பொருள் தெரியாம திட்டி என்னங்க பிரயோஜனம்? நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தருக்காவது புரியவேண்டாமா? நீங்க அர்த்தம் சொல்லாம விட மாட்டேன்” என்றான் சிவா.

“வேற வேலை இல்லை, போடாங்க சோ” என்று திட்டத் தொடங்கிய ஆட்டோ ரிக்ஷாக்காரன் பாதியிலேயே நிறுத்திக் கொண்டுக் கிளம்பிப் போக, சிவா விடுவதாயில்லை. பின்னாலேயே தொடர்ந்து சென்று “அர்த்தம் சொல்லுங்க” என்று தொந்தரவு செய்ய, ஆட்டோ ரிக்ஷாக்காரன் வண்டியை நிறுத்தி “உனக்கு யாரையானும் அடிக்கணுமா சொல்லு, நான் அடிக்கிறேன்.. அர்த்தம் கேட்டு என்னைத் தொந்தரவு பண்ணாதபா.. என்னை விட்டுறு” என்று கெஞ்சினான். அதற்குப் பிறகு சிவாவைப் பார்த்தாலே ஒதுங்கிப் போய்விடுவான்.

“ஏன் சார், பணம் சேர்த்து வைக்க ஏதோ ஐடியா குடுப்பீங்கனு பார்த்தா, என்னமோ பேமானிக்கு அர்த்தம் கேட்டுத் துரத்தினான்னு சொல்றீங்களே.. வருங்கால மாமியார் ஏதாவது திட்டப் போய் அர்த்தம் கேட்டு பயமுறுத்தினாரா உங்க சிவா?” என்றான் சித்து.

“பொறுமையா கேளுங்க.. நாளைக்கு விடுமுறை தானே?” என்ற அன்பு, பணியாளரைக் கூப்பிட்டு “ரத்னம், என்னப்பா இனிப்பு இன்னைக்கு?” என்று கேட்டார்.

“நெய்யில் வறுத்த முந்திரித் தூள் காஷ்மீர் குங்குமப்பூ எல்லாம் தூக்கலா போட்டு ரவா கேசரி சார்”

“அவசியம் எல்லாருக்கும் கொண்டு வாப்பா” என்று அவனிடம் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

மறுநாள் கல்லூரி நூலகத்தில் அவளைச் சந்தித்தான் சிவா. “லெஸ்லி பேரிமோர், கொஞ்சம் நில்லேன்” என்றான்.

ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தவள் “என் பெயர் உனக்கெப்படித் தெரியும்?” என்றாள்.

அவள் கேட்டது காதில் விழாமல், திரும்பிப் பார்த்தவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். இள நீல ஜீன்ஸில் முழங்கால்சட்டையும், கருஞ்சிவப்பு உள்ளாடையை அழகாய் எடுத்துக்காட்டிய இளஞ்சிவப்பில் கையில்லாத கேமி மேல்சட்டையும் அணிந்திருந்தாள். கழுத்தில் அணிந்திருந்த சிவப்புக்கல் மாலையும், காதுகளில் மின்னிய ஒற்றை வைரத் தோடுகளும் தெரியும்படி சீராக வெட்டப்பட்டிருந்த முடியைப் பின்னுக்குத் தள்ளிய கருஞ்சிவப்பு ஹெட்பேன்ட். முகத்திலும் உதட்டிலும் மேபலீன் மாயம். ஆட்ரி ஹெபர்னின் நளினம், இங்க்ரிட் பெர்க்மனின் அழகு, டோரிஸ் டே போல் மலர்ச்சி, டெபி ரெய்னல்ட்ஸின் வசீகரம், ஜூலியா ராபர்ட்ஸ் கம்பீரம், ராகெல் வெல்சின் கவர்ச்சி… நூலகத்தின் தணிந்த விளக்குகளின் எதிரொளியில் மின்னிக் கொண்டிருந்தவளை, மனக்கண்ணால் படமெடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தான்.

“ஹேய்.. உன்னைத் தான். க்விட் ஸ்டேரிங்..என் பெயர் உனக்கெப்படித் தெரியும்?” என்றவளின் குரலில் மிதமான எரிச்சல்.

“சாரி.. உன்னைப் போல் ஒரு அழகான பெண்ணை இதுவரை நேரில் பார்த்ததில்லை” என்றவன், அவள் கொடுத்த காசோலையைச் சுட்டிக் காட்டி, அவளிடமே திருப்பினான்.

அவனுடைய வெளிப்படையான பாராட்டிலும், மன்னிப்பு கேட்ட நேர்த்தியிலும் மனம் கனிந்தவள், காசோலையைப் பார்த்துவிட்டு, “ஓ, நீயா?” என்றபடி அவனை நிதானமாகப் பார்த்தாள்.

இந்த சமயத்தில் என் மருமகன் சிவாவைப் பற்றி இன்னொன்று சொல்லியாக வேண்டும். எங்கள் குடும்பத்தில் பொதுவாகவே எல்லாரும் சில சமயம் ஆடு, கோழி, மீன் என்று சாப்பிட்டு வளர்ந்தாலும், சிவா மட்டும் ஆடு கோழி மீனுடன் நிறுத்தாமல், பருப்பு, கீரை, ரொட்டி, நெய், தயிர் என்று தினமும் சாப்பிட்டு வளர்ந்தவன். அவன் சாப்பிட உட்கார்ந்தால் நமக்கெல்லாம் பயம் வந்துவிடும், நாலைந்து பேர் சாப்பிடுகிற மாதிரி தட்டில் அடுக்கிக் கொள்வான். என்ன சாப்பிட்டாலும் அத்தனையும் செறித்து, உடல்வாகு மட்டும் ஏதோ புல் தடுக்கிக் கீழே விழாத அளவுக்கு இருந்தாலும், கோதுமை நிறம், நல்ல உயரம், கருகருவென்று சுருள் சுருளாய் முடி, தீட்சண்யமான பார்வை. ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆருக்கும் ஆனந்த் அமிதாப் பச்சனுக்கும் இடையிலான பர்சனாலிடி.

“என் பெயர் சிவா” என்றான்.

அவனை இன்னும் பார்த்துக் கொண்டிருந்தவள், கண்களை விலக்கி, “சிவா.. நேற்று நடந்த விபத்திற்கு மறுபடி சாரி.. உனக்கு அடி ஏதாவது..”

“ஒன்றுமில்லை” என்றான்.

“செக்ல எழுத்து அழிஞ்சு போயிருக்கே.. வேறே எழுதித் தரவா?” என்றாள்.

“வேண்டாம்”

“அப்ப, இது போதாதா?”

“இல்லை.. இதுவே அதிகம்னு தான் திருப்பிக் கொடுத்தேன்” என்றான்.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஆளா என்று வியந்தவள், “ஏன்?” என்றாள்.

“லெஸ்லி.. என் கிட்டே இருந்தது பழைய சைக்கிள்.. இருபது டாலருக்கு வாங்கினேன்.. புத்தம் புது சைக்கிள் வாங்கினாலும் முன்னூறு டாலருக்கு மேல் ஆகாது… மூவாயிரம் டாலர் அனாவசியம். மேலும், தவறு என்னுடையது… அப்படியே தவறை நாம இரண்டு பேரும் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும், நீ எனக்கு பத்து டாலர் கொடுத்தால் போதும்.. செக்கை நீயே வைத்துக்கொள்”

“சிவா.. எங்க அப்பாகிட்டே நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. இந்த செக் உன்னுடையது தான்”

“வேண்டாம், நான் வாங்கிக் கொள்ள மாட்டேன்”

“சரி” என்று காசோலையைப் பர்சுக்குள் வைத்தவள், புன்னகை செய்தபடி “உன்னுடைய நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. உன்னுடைய கண்ணும் மூஞ்சியும் கறுத்த சுருள் முடியும் கூடத்தான்” என்றாள். “நான் உனக்கு ஏதாவது செய்தே ஆகணும்…”

“அடுத்த முப்பது நாளைக்கு தினமும் என்னுடன் காபி சாப்பிட வாயேன்” என்றான் சிவா.

“தைரியம் தான்…” என்று சிரித்தாள்.

காபியில் தொடங்கிய நட்பு காதலில் முடிய, “நம்ம காதலைப் பத்தி எங்கப்பா அம்மாகிட்டே சொல்லலாம்னு இருக்கேன்… என்ன சொல்றே?” என்றாள் லெஸ்லி. சிவாவை வீட்டுக்கு அழைத்தாள். “கலீனாவில் வாரமுடிவை கழிக்கப் போகிறோம். சனிக்கிழமை காலையில் வந்து எங்க கூடத் தங்கியிரு. ரெண்டு நாளும் ஸ்கீ பண்ணப் போறோம், நீயும் வாயேன்? மெள்ள நம்ம காதலைப் பத்தி சொல்லி, சம்மதமும் வாங்கிக்கலாம்.”

“ஸ்கீயா? எனக்குப் பனிச்சறுக்க வராதே” என்றான் சிவா.

“பிடிச்சுத் தள்ளிவிட்டா, தானாகவே வரும்.. வா, வா” என்றாள்.

லெஸ்லியின் குடும்பத்தைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டதே? லெஸ்லியின் அப்பா அம்மா இரண்டு பேருமே பரம்பரையாகப் பணத்தில் பிறந்தவர்கள். லெஸ்லியின் அப்பா தொழிலதிபர் குடும்பம். லிங்கன்ஷைர், மோலீன், பியோரியா என்று எல்லா இடத்திலும் வித விதமான தொழிற்சாலைகள். அம்மா கலைக்குடும்பம். தியேடர் டிஸ்ட்ரிக்ட் என்று வழங்கப்படும் சிகாகோவின் கலாசார மையத்தில் இருக்கும் நிறுவனங்களில் பாதிக்கு மேல் குடும்பச் சொத்து. பணத்திமிர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பணமில்லாதவர்களைப் பார்த்தால் வேறு ஏதோ உலகத்திலிருந்து வந்தவர்கள் போல் அவர்களுக்கு வியப்பாக இருக்கும்.

பதினொரு டிகிரி பேரன்ஹைடில் பல்லெல்லாம் தந்தியடிக்க, சனிக்கிழமை காலை கலீனா வந்து சேர்ந்தபோது, சிவா களைத்திருந்தான். லெஸ்லி அவனை உள்ளே அழைத்துச் சென்று அறிமுகம் செய்யத்தொடங்கினாள், “சிவா, எங்க அப்பா எர்வின், அம்மா கேதரின்”.

சிவாவை ஒரு முறை பார்த்த கேதரின், உடனே வேலைக்காரனை அழைத்து “இந்தப் பையனை நல்லா டிரஸ் பண்ணிக் கூட்டிக்கிட்டு வா” என்றாள். லெஸ்லியிடம் “நண்பர்கள், சொந்தக்காரர்கள் எல்லாம் வந்திருக்காங்க. இப்படிப் போனா விருந்து சாப்பிட வந்தவங்க மாதிரி இருக்காது, விருந்து பறிமாற வந்தவங்க மாதிரி இருக்கும். மெக்சிகோவில் இதெல்லாம் சாதாரணமாக இருக்கலாம், இங்கே அப்படியில்லையே?” என்றாள் சர்வ சாதாரணமாக.

சிவாவுக்குக் கோபம் வந்து “நான் இந்தியா..” என்று சொல்லத் தொடங்க, லெஸ்லி அவன் கைகளையழுத்திப் “பொறுமை” என்றாள்.

உடை மாற்றிக் கொண்டு ஒல்லி மெல் கிப்சன் போல் வந்த சிவாவை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்த லெஸ்லி, அவனைப் போலவே அழகான, ஆனால் கட்டுமஸ்தான, இன்னொருவனிடம் வந்ததும் “சிவா, மீட் கேரி” என்றாள். “கேரி என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் தெரியுமோ?”

சிவாவின் கையைப் பிடித்துக் குலுக்கிய கேரி, “பலமா குலுக்கிட்டேனா? வலிக்குதா?” என்று சிரித்தான். அவன் குரல் வளையில் தளைக்கும் சுடுநீரை ஊற்ற வேண்டும் போலிருந்தது சிவாவுக்கு.

கேதரின் ஒரு பளிங்குக் கோப்பையை ஸ்பூனால் தட்டி “லெஸ்லியின் நணபரை அறிமுகம் செய்வதில் எனக்கு சந்தோஷம்.. அவர் பெயரென்ன சொன்னே..?” என்று தயங்கினாள்.

“சிவா” என்றான் சிவா.

“சாரி, உன் பெயர் எனக்குச் சுலபமாகச் சொல்ல வரவில்லை” என்றாள், பெரும்பாலான அமெரிக்கர்கள் சொல்வது போல். “காலை உணவு தயாரா இருக்கு… நாங்களும் தயாரா பசியோடு இருக்கோம்.. நீ தான் சிறப்பு விருந்தாளியா ஆரம்பித்து வையேன்?” என்று, தானே பரிமாறிக்கொள்ளும்படி தயாராக இருந்த விருந்தைச் சுட்டிக் காட்டினாள்.

“சொல்ல வராமலிருக்க, என் பெயர் என்ன யக்ஞநாராயணமூர்த்தியா, சிவா தானே?” என்று அவன் சொல்லவில்லை, லெஸ்லி ஒரு ஸ்பூனால் அவன் இடுப்பில் மறைமுகமாகக் குத்தியதால்.

சிவாவின் சாப்பாட்டுப் பழக்கத்தைப் பற்றித் தான் முன்பே சொல்லியிருக்கிறேனே. ஒரு பெரிய தட்டில் நாலு பான்கேக், வறுத்த பேகன் ஏழெட்டு, வெண்ணெய் தடவி வறுத்த உருளைக்கிழங்குத் துறுவல் கணிசம், வேகவைத்த முட்டை இரண்டு, குட்டி ப்ளூபெரி மபின் அரை டஜன், ஒரு கொத்து திராட்சை, நாலைந்து ஸ்டிராபெரி, இரண்டு சாஸெஜ் என்று அடுக்கிக்கொண்டு உட்கார்ந்த சிவா, மரியாதைக்காக எல்லோரும் உணவெடுத்துக் கொண்டு வரக் காத்திருந்தான்.

சிவாவின் தட்டைப் பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழப்போன கேதரினைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார் எர்வின். “சிவாவுக்குப் பசி போல” என்றார் நயமாக.

மற்ற எல்லோருடைய தட்டிலிருந்ததை மொத்தமாக எடுத்தால், தன் தட்டில் பாதி கூடத் தேறாது என்பதை கவனித்த சிவா, லெஸ்லியிடம் “ஏன் இப்படி எல்லாரும் பட்டினி கிடக்கீங்க?” என்றான். லெஸ்லி சுவற்றிலிருந்த இரண்டு பெரிய போஸ்டர்களைக் காட்டினாள்.

முதல் சுவரொட்டியில் “அளவோடு உண்டு வளமோடு வாழ்க” என்கிற பெரிய எழுத்துக்களின் கீழே “எஸ்ஈஎஸ்: இன்றே சேருங்கள்” என்று எழுதியிருந்தது. அதற்கும் கீழே “கேதரின் பேரிமோர், சேர் உமன், சென்ஸிபில் ஈடர்ஸ் சொஸைடி”.

இரண்டாவது போஸ்டரைக் காட்டி “இந்த வாரம் ஈட் லெஸ் வாரம் இல்லையா? அதான்” என்றாள் லெஸ்லி. சுவரொட்டியில் ‘நாநூறு கேலொரி.. நாள் முழுதும் சக்தி’ என்ற எழுத்துக்களின் கீழே பஞ்சத்தில அடிபட்ட ஒரு பெண் துக்கமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“நாங்க இந்த வாரம் முழுதும் தினம் நாநூறு கேலொரிக்கு மேல் சாப்பிட மாட்டோம், நீயும் தான்” என்ற லெஸ்லி, அவன் தட்டைப் பிடுங்கிக் கொண்டு இன்னொரு தட்டில், பாதி மபின், ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு துறுவல், அரைக்கால் முட்டை, நாலு திராட்சை, ஒரு ஸ்டிராபெரி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“இதற்கு எதுக்கு தட்டு? கையிலேயே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கலாமே” என்று ஒரே வாயில் எல்லாவற்றையும் விழுங்கிய சிவா, எதிரே கேரி அரை வாழைப்பழத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி ஐந்து நிமிடம் சாப்பிட்டதைப் பொறுமையிழந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

காலைச் சிற்றுண்டி முடித்து எல்லோரும் எழுந்து அங்கே இங்கே போனதும், எர்வினும் கேரியும் சிவா அருகே வந்தனர். கேரி, “சிவா, சாப்பாட்டைத் தவிர உனக்கு வேறென்ன தெரியும்?” என்றான். “உன் பல்லை உடைக்கத் தெரியும்” என்று சொல்ல வந்தவன், லெஸ்லியைப் பார்த்ததும் அமைதியானான்.

“கூடைப் பந்து விளையாடுவோமா – இன்டோர் பேஸ்கெட் பால்?” என்றான் கேரி. கூடைப்பந்து முடிந்து நீச்சல். அதற்குப் பின் டச்-புட்பால். மதிய சாப்பாட்டு வேளை வருமுன் சிவா மிகக் களைத்துவிட்டிருந்தான். “போய்க் குளித்து விட்டு வா, சாப்பிடலாம்” என்று அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையைக் காண்பித்துவிட்டு “சீக்கிரம் வந்துடு” என்றாள் லெஸ்லி.

கேரியையும் லெஸ்லியின் குடும்பத்தாரையும் திட்டிக் கொண்டே நிதானமாகக் குளித்துவிட்டு, அவர்கள் கொடுத்திருந்த உடையை மாற்றிக் கொண்டு கடும்பசியுடன் வந்தவன் கையில், ஒரு தட்டைக் கொடுத்தாள் லெஸ்லி. “உனக்காக நானே தயாராக எடுத்து வைத்துவிட்டேன்”.

“தட்டு சரி, சாப்பாடு எங்கே?” என்றான் சிவா.

“தட்டுல தான் இருக்கு, சரியாப் பாரு” என்ற லெஸ்லியை முறைத்தான். தட்டில் நாலு கீரையிலை, கால் ஆப்பிள், பாதி கேரட், கட்டை விரல் அளவில் ஒரு சிக்கன் துண்டு. “பொறந்த குழந்தைக்குக் கூட எங்க வீட்டுல இதை விட அதிகமா சாப்பாடு போடுவாங்க லெஸ்” என்றவனின் சோகக் குரலை அடக்கி “இன்னும் இரண்டு நாள் தானே… எனக்காகப் பொறுத்துக் கொள். மாலை அப்பா அம்மாவிடம் நம்மைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அது வரைக்கும் அவர்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ளேன்” என்றாள்.

“அது வரைக்கும் உயிரோட இருப்பேனா தெரியலையே” என்றவனைக் கட்டிப்பிடித்து “எனக்காகக் கொஞ்சம் பொறுமையாக இரேன்” என்று முத்தமிட்டாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கேரியின் பொறாமையை உணர்ந்த சிவா, வேண்டுமென்றே “லெஸ்.. இந்த சாப்பாடு அதிகம்.. சிக்கன் வேண்டாம்..டூ மெனி கேலொரீஸ்..” என்று வயிறு ராகம் பாடியதையும் பொருட்படுத்தாமல் திருப்பிக் கொடுத்து விட்டு, கேரியைப் பார்த்துக் கண் சிமிட்டினான். கூடைப்பந்தா விளையாடறே, பட்டா டேய்..கபடி விளையாடியிருந்தா காலை ஒடிச்சிருக்க மாட்டேன் இந்நேரம்?

சொன்னானே தவிர, ஒரு மணி நேரத்தில் சோர்ந்து போய்விட்டான் சிவா. மாலை சாப்பாட்டு நேரம் வந்த போது அவனால் எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. சாப்பாட்டைக் கண்ணில் காட்டமாட்டார்களா என்று தவித்துப் போனான்.

டின்னருக்குப் போகுமுன் எர்வினையும் கேதரினையும் தனியாக அழைத்து “சிவாவும் நானும் காதலிக்கிறோம். கல்யாணம் செய்து கொள்ள உங்க சம்மதம் வேணும்” என்றாள் லெஸ்லி.

கண்களை மூடிக்கொண்ட கேதரின் பார்வையில், அவர்களின் குடும்பச் சொத்தையெல்லாம் சாப்பிட்டே அழித்தான் சிவா. கண்களைத் திறந்தவள் “முடியாது. கேரி தான் உனக்குத் தகுந்த மாப்பிள்ளை” என்றாள்.

“ஆமாம், உங்கம்மா சொல்வது சரி தான். சிவா..” என்ற எர்வின், சிவாவைப் பார்த்து “தப்பா நினைக்காதே” என்று சொல்லித் தொடர்ந்தார். “சிவா குடும்பத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கேரி பரம்பரை பரம்பரையாக பழகிய குடும்பத்தில் வந்தவன். கேரி தான் உனக்குத் தகுந்த மாப்பிள்ளை”.

தன்னுடைய பெயர் அடிபடுவதை ஒட்டுக் கேட்ட கேரி உள்ளே வந்து “கூப்பிட்டீங்களா, என்னைக் கூப்பிட்ட மாதிரி இருந்ததே?” என்றான்.

லெஸ்லி சிவாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “மாம், டாட்… சிவாவைக் கல்யாணம் பண்ணிக்க உங்க அனுமதி எனக்குத் தேவையில்லை என்பது உங்களுக்கே நல்லா தெரியும். ஆனா, உங்க அனுமதியோட தான் திருமணம் செய்துக்க விருப்பம். நீங்க அனுமதி தர வரைக்கும் நானும் சிவாவும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்” என்றாள்.

‘உண்ணாவிரதமா? ஐயையோ’ என்று நினைத்த சிவா வாயைத் திறக்குமுன், கேதரின் “லெஸ்லி… நீ சிவாவைக் கல்யாணம் பண்ணிக்கிறதை நாங்க தடுக்க முடியாது. ஆனா, எங்க சொத்துல சிறு பங்கு கூட உனக்குக் கிடைக்காது” என்றாள்.

“பணம் தேவையில்லை” என்றாள் லெஸ்லி.

“நாடீவன் எ பெனி, மைன்ட் யூ” எச்சரித்தார் எர்வின்.

பொறுமையாக இருந்த சிவா, “எல்லோரும் நான் சொல்றதைக் கேளுங்க. லெஸ்லி, காசுக்காக உன்னைக் காதலிக்கவில்லை, ஆனால் கையில் காசில்லாமல் கல்யாணம் செய்துக்கறதுல அர்த்தமே இல்லை. ரெண்டு பேருமே படிச்சிக்கிட்டிருக்கோம், இன்னும் மூணு வருஷம் படிப்பு இருக்கு. எனக்காக உன் சொத்தை நீ இழக்கிறதில் எனக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை” என்றான்.

“ஹீ இஸ் ரைட்” என்றார் எர்வின் ஆச்சரியத்துடன்.

“எனக்காக இல்லாவிட்டாலும், உங்க பெண்ணுக்காகவாவது எங்களுக்குப் பணம் தர வேண்டும். உதவி செய்ய முடியாதென்றால், கடனாகவாவது கொடுக்க வேண்டும்” என்றான் சிவா.

“ஹீ இஸ் நாட் ரைட்” என்றார் எர்வின் எரிச்சலுடன்.

இதையெல்லாம் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கேரி, இது தான் சரியான சந்தர்ப்பம் என்று புரிந்து கொண்டு சிவாவைப் பார்த்துப் பேசினான். “நான் சொல்றதைக் கேளுங்க. உங்களுக்கு கல்யாணத்துக்கு சம்மதமும் வேண்டும், செலவுக்குப் பணமும் வேண்டும். எனக்கு லெஸ்லியை மணம் செய்து கொள்ள ஆசை தான், இருந்தாலும், என்னோட பரந்த மனசு, உனக்கு உதவி செய்யத் தயார். ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்”.

“என்ன?” என்றான் சிவா.

“லெட்ஸ் டூயல்” என்றான் கேரி.

“என்ன சொல்கிறாய்?” என்றான் சிவா.

“நாளைக்கு ஸ்கீ பண்றோம் இல்லையா? பனிச்சறுக்கிலே நீ வெற்றியடைந்தால் உங்க கல்யாணப் பரிசாக நூறாயிரம் டாலர் நான் தருகிறேன். நீ தோற்றால் எனக்கு ஒன்றும் தரவேண்டாம், பேசாமல் வீட்டுக்குப் போனால் போதும்” என்றான் கேரி.

“போட்டி..நல்ல ஐடியா” என்றாள் கேதரின். இதற்குள் உள்ளே வந்துவிட்டிருந்த நாலைந்து பேர், “சைடு பெட் உண்டா?” என்றனர்.

“சிவா பேரில் யாராவது சைடு பெட் கட்டினால், ஒன்றுக்கு நாலு பங்கு நான் தருகிறேன். குறைந்தது நூறு டாலர்” என்றார் எர்வின்.

சிவா பேரில் பெட் கட்ட யாருமே முன் வரவில்லை, லெஸ்லியைத் தவிர. “நான் கட்டுகிறேன், மூவாயிரம் டாலர்” என்றாள். தன் பர்சைத் திறந்து, சிவா பேரில் எழுதி அழிந்திருந்த பழைய செக்கை எடுத்துக் காட்டி, புதிதாகத் தேதி போட்டு எழுதிக் கொடுத்தாள்.

“செடில்ட்” என்றார் எர்வின், லெஸ்லியின் செக்கை வாங்கிக் கொண்டு.

‘சாப்பாடு போடாமல், சறுக்கி வேறே சாகடிக்கிறாங்களே’ என்று நினைத்த சிவா “கொஞ்சம் இருங்க.. நான் ஏதும் சொல்ல வேண்டாமா?” என்றான்.

“நீ என்னைக் காதலிக்கிறது உண்மைனா, ஒண்ணுமே சொல்லாதே” என்றாள் லெஸ்லி.

“நல்லது. அப்போ நாளைக்குச் சந்திக்கலாம்” என்றான் கேரி. “என் புத்தம் புதிய கே2 பான்டூன் ஸ்கீ, நீ பார்த்ததில்லையே சிவா?” என்று கண்ணடித்தான். “இட்ஸெ பேந்தர்…ரோ.ஓ.ஓ.ர்” என்றான்.

“டின்னர் தயார்” என்றாள் கேதரின். கூட்டம் கலையத் தொடங்கவும், சிவா லெஸ்லியை இழுத்து “லெஸ், எனக்கு பனிச்சறுக்க வராதுனு சொன்னேனே?” என்றான்.

“பிடித்துத் தள்ளி விட்டால் வரும்னு சொன்னேனே” என்றாள். “உன்னை யாரு பணமில்லாம கல்யாணமில்லைனு சொல்லச் சொன்னது? அதனால் தான்” என்று சிணுங்கியவள், நொடியில் மனம் கனிந்து அவன் கன்னத்தைத் தட்டி “நீ கண்டிப்பா ஜெயிப்பேனு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றாள். ஒரு தட்டில் இரண்டு பாஸ்டன் லெடுஸ் இலை, மூன்று கேரட் துண்டு, ஒரு கைப்பிடி அரிசி சாதம், விரல் நக சைசில் நாலைந்து வறுத்த சிக்கன் துண்டு எல்லாம் வைத்து, அவனிடம் கொடுத்தாள். “தெம்பு வேணுமே என்று அதிகமாக எடுத்துக் கொண்டு வந்தேன், அம்மா கவனிப்பதற்குள் சீக்கிரம் சாப்பிடு” என்றாள்.

“லெஸ், சொன்னாக் கேளு, என்னால ஜெயிக்க முடியாது.. நீ இது மாதிரி இன்னும் நாலு தட்டு சாப்பாடு கொண்டு வந்தால் கூட என்னால் பனிச்சறுக்கில் ஜெயிக்க முடியாது” என்றான்.

“அப்படியென்றால் என் முகத்திலேயே விழிக்காதே” என்றபடி அந்தத் தட்டையும் எடுத்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள் லெஸ்லி.

பசியுடனும் கவலையுடனும் சிவா தன் அறைக்குத் திரும்பினான். சிகாகோ கிளம்பிப் போய்விடலாமென நினைத்தான். ஒரு வாரமாக அமெரிக்காவில் சுற்றிக் கொண்டிருந்த மாமாவின் நினைவு வந்தது திடீரென்று. மாமாவுக்கு வராத ஐடியாவா? உடனே நியூயோர்கில் தங்கியிருந்த தன் மாமாவுடன் தொலைபேசினான். அதாவது, என்னுடன்.

“பாவம்டா, விட்டுரு, வாயில்லாத வஸ்துடா, தேஞ்சுடப் போகுது” என்றான் சாய், ரவா கேசரி இருந்தக் கண்ணாடிக் கிண்ணத்தை ஸ்பூனால் சுரண்டிக் கொண்டிருந்த சாமிடம்.

“அட்டகாசமா இருக்கு கேசரி… இன்னொரு ரவுண்டு சொல்வோமா?” என்றார் அன்பு.

“..க்கும். எனக்குத் தேவையான விஷயத்தைத் தவிர மிச்ச எல்லாத்தையும் சொல்லிக்கிட்டிருங்க..” என்றான் சித்து.

“ஏன் சார், நீங்க எப்ப அமெரிக்கா போனீங்க? அடையார் தாண்டிப் போயிருக்க மாட்டீங்க.. சுத்தறீங்களே?” என்றான் நெடு.

“அங்க போனதால தானேபா எனக்கு எல்லா விவரமும் தெரியும்?” என்றார் அன்பு.

“என்ன ஆச்சு சொல்லுங்க சார்.. நேரமாகுது… வெரி குட், வெரி குட்.. கொண்டாப்பா” என்று அடுத்த ரவுண்ட் கேசரியில் இறங்கினான் சாம்.

“சொல்றேன்” என்றார் அன்பு.

“எனக்கு நீங்க தான் எப்படியாவது ஒரு வழி சொல்லணும் மாமா” என்று தொலைபேசியில் எல்லாவற்றையும் சொல்லி விட்டு “உடனே ஏதாவது ஐடியா கொடுங்க, தயவுசெய்து என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்துங்க மாமா” என்று கெஞ்சினான் சிவா.

“இந்த லெஸ்லி… நீங்க நிஜமாகவே காதலிக்கிறீங்களா?” என்று கேட்டேன்.

“நாங்க ரெண்டு பேரும் செம்புலப் பெயநீர் போல, மாமா”

“அப்ப ஒரே வழி தான் இருக்கு. நீ என்ன பண்றே, இன்னிக்கு இரவு அந்த கேரியோட ரூமுக்குப் போய் அவனோட ஸ்கீயைத் திருடிக்கிட்டு கேதரின் ரூமுக்குள்ள போட்டுரு. காலையில் அவனோட ஸ்கீ இல்லாம அவன் உன்னோட போட்டிக்கு வர மாட்டான். ராத்திரி தூக்கம் வராம சுத்திக்கிட்டிருந்தப்போ, கேதரின் ஸ்கீயைத் திருடிக்கிட்டுப் போனதைப் பார்த்ததா சொல்லிடு. தூக்கத்துல நடந்துகிட்டே திருடுற வியாதினு சொல்லு. இதையெல்லாம் வெளியே சொல்லாம இருக்கணும்னா கல்யாணத்துக்கு சம்மதம் தரணும்னு மிரட்டு”

“என்ன மாமா இது? கல்யாணத்துக்கு வழி கேட்டா, கம்பி எண்ண வழி சொல்றீங்களே?”

“தைரியமா நான் சொன்னதைச் செய்டா. நல்லா நடக்கும் பார். அந்தப் பொண்ணைக் கல்யாணம் செய்துகிட்டு நல்லா இரு. எல்லாம் முடிஞ்ச பிறகு, நான் சிகாகோ வந்ததும் மறக்காம எல்லா விவரமும் சொல்லு” என்றேன்.

“சரி மாமா” என்று போனைக் கீழே வைத்த சிவா, உள்ளே வந்த லெஸ்லியைக் கவனித்தான். “யாரிடம் பேசினாய்?” என்று கேட்டவளிடம், எல்லாவற்றையும் சொன்னான்.

“ப்ரிலியன்ட்! நல்ல யோசனை” என்றாள். “நானும் துணைக்கு வரேன். ராத்திரி பத்து மணிக்கு மேலே போகலாம். கேரி தூங்கிக்கிட்டிருப்பான். நீ அந்த ஸ்கீயை எடுத்துக்கிட்டு வந்து அம்மா ரூம்ல போட்டுரு”.

“நீ என்ன செய்யப் போறே?”

“நான் துணைக்கு வரேன்னு தான் சொன்னேன்.. திருடறது எல்லாம் உன் வேலை” என்றாள்.

இரவு பத்து மணிக்கு இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். முதலில் வந்த லெஸ்லி அக்கம் பக்கம் பார்த்து விட்டு “யாருமில்லை, வா” என்றாள். “அதான் கேரியின் ரூம். அதற்கடுத்த இரண்டாவது ரூம் எங்க அம்மா ரூம். வேகமா காரியத்தை முடி. நான் இங்கேயே இருந்து யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறேன்”.

கேரியின் அறைக்குள் நுழைந்த சிவா, கதவை மூடிவிட்டு இரவு விளக்கின் ஒளியிலே சுற்று முற்றும் பார்த்தான். காற்றிலாடிய திரைக்குப் பின்னால், திறந்திருந்த ஜன்னல் கதவுகள். அருகே சுவரில் சாய்த்து நிறுத்தியிருந்த கே2 பான்டூன். காரியத்தைச் சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்று இரண்டு ஸ்கீயையும் எடுத்தவன், கால் தடுக்கிக் கீழே தடுமாறி விழுந்தான். விழுந்த வேகத்தில் ஒரு ஸ்கீ ஜன்னல் வழியாக வெளியே விழுந்தது. சத்தம் கேட்டு விழித்த கேரி, “யாரது?” என்றபடி எழுந்தான்.

சிவாவுக்கு நல்ல நேரமென்றேனே… இப்போது தொடங்கியது.

சத்தம் கேட்டு எழுந்திருக்க முயன்ற போது, சிவாவின் கையிலிருந்து தவறிப் பறந்த இரண்டாவது ஸ்கீ, கேரியின் முகத்தைத் தாக்கியது. உடனே மயங்கி விழுந்தான் கேரி.

‘வம்பாகி விட்டதே, செத்து கித்துப் போயிருந்தால் என்னாவது? ஓடிவிடலாம்’ என்று நினைத்து சிவா எழுந்த போது, கதவுக்கு வெளியே ஏதோ ஓசை கேட்டது. உள்ளே வந்து விடப் போகிறார்களே என்று பயந்து சுவரோரமாக ஒதுங்கினான்.

ஒதுங்கியவன் சுவரென்று நினைத்தது, பக்கத்து அறையை இணைத்த கதவு.

ஓசைப்படாமல் திறந்து பக்கத்து அறைக்குள் நுழைந்து கதவை மூடியவனை, இரண்டு உருவங்கள் திடுக்கிட்டுப் பார்த்தன. அரை குறை வெளிச்சத்தில் என்ன நடக்கிறது என்பது சிவாவுக்குப் புரிந்து விட்டது. நான் தான் சொன்னேனே, படு புத்திசாலி என்று. இது தான் சாதகமான நேரமென்று, குரலைச் சரி செய்து கொண்டு “வெல் வெல் வெல்.. என்ன நடக்கிறது இங்கே?” என்றான். சுவரோரமாகத் தேடி மின்விளக்கை இயக்கினான்.

எதிரே ஒரு பெரிய சாப்பாட்டு மேசையில் பத்து வகைச் சாப்பாடு. பெரிய தட்டில் எல்லாவற்றையும் அடுக்கி, சுதந்திரமாக வெட்டிக் கொண்டிருந்தனர் கேதரினும் எர்வினும். எர்வின் முகமெங்கும் பார்பெக்யூ சட்டினி. கேதரின் வாயில் பாதி சிக்கன். சிலை போல இருவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“இப்படித்தான் அளவோடு உண்டு வாழறதா? நாநூறு கேலொரியா? உங்க தட்டுல நாலாயிரம் கேலொரிக்கு மேலே இருக்கும் போலிருக்கே?” என்றான் சிவா உரக்க.

இருவரும் வாயைத் துடைத்துக் கொண்டு “ஷ்! சிவா.. தயவு செய்து விளக்கை அணை… உனக்கு என்ன வேணுமோ கேளு, கொடுத்துடறோம், ஆளைக் கூட்டாதே… பசி தாங்கலை..” என்றனர்.

“எங்க கல்யாணத்துக்கு அனுமதி?” என்றான்.

“தாராளமா” என்றார் எர்வின். “மாப்பிளே” என்றாள் கேதரின்.

“நல்லது” என்று விளக்கையணைக்கப் போனவன், நினைவுக்கு வந்தவனாக “எஸ்ஈஎஸ் ஆளுங்களுக்கு இது தெரிஞ்சு போச்சுனா என்ன ஆகும்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டான் நிருபர் பாணியில்.

“ஐயையோ… வேண்டாம்” என்றாள் கேதரின்.

“உனக்கு என்ன வேணும்?” என்றார் எர்வின்.

“உங்க சொத்துல பாதியை லெஸ்லி பேருக்கு இப்பவே எழுதிக் கொடுங்க” என்றான்.

“சரி” என்றனர். “உனக்கு ஏதாவது?” என்றார் எர்வின்.

“இருபதாயிரம் டாலர் லெஸ்லி அகவுன்ட்ல போட்டுருங்க” என்றான்.

“கண்டிப்பா” என்றாள் கேதரின். “விளக்கை அணைங்க மாப்பிளே.. யாராவது வந்துடப் போறாங்க”

“சரி, அப்படியே எனக்கும் ஒரு தட்டு எடுங்க” என்றான் சிவா, விளக்கை அணைத்தபடி.

மறுநாள். கலீனா பனிச்சறுக்கு இறக்கத்தின் உச்சியில், சிவா, எர்வின், கேதரின், லெஸ்லி, போட்டி நடுவர்கள் இருவர், மற்றும் பார்க்க வந்த நால்வர் என்று சிறு கூட்டம். காலை எட்டு மணியிலிருந்து நின்று கொண்டிருந்தனர். கேரி வரவில்லை.

பொறுமையிழந்த எர்வின் “பேட் மேனர்ஸ்” என்றபடி ஒருவரை வீட்டுக்கனுப்பினார். “கேரி ஏன் வரவில்லையென்று பார்த்து விட்டு வாங்க”. ஒரு மணி நேரம் பொறுத்துத் திரும்பி வந்தவர் “கேரி இன்னும் தூங்கிக்கிட்டிருக்காருங்க” என்றார்.

“சரி, இரண்டு பேர் இருந்தால் தான் டூயல்… இப்போ முடிவை நீங்களே தீர்மானம் பண்ணுங்க” என்றான் சிவா, நடுவர்களிடம்.

“ஹி லாஸ்டிட். சொன்னபடி கேரி உங்களுக்கு நூறாயிரம் டாலர் கொடுக்க வேண்டும்” என்றார் முதல் நடுவர். “நான் ஆமோதிக்கிறேன்” என்றார் இரண்டாம் நடுவர்.

“செடில்ட்” என்றார் எர்வின்.

“இருங்க” என்றான் சிவா. “போட்டியே போடாமல் நூறாயிரம் டாலர் வாங்குறதுக்கு என் மனசு இடம் கொடுக்கலை. பணம் வேண்டாம், நான் ஜெயிச்சேன்னு சொன்னதே போதும்”

“என்ன குணம், என்ன குணம்” என்றார் எர்வின்.

“உனக்கு வேண்டாம்னா, அது உன் இஷ்டம். நான் மூவாயிரம் டாலர் சைடு பெட் கட்டியிருக்கேன், எனக்குச் சேர வேண்டியது எங்கே?” என்றாள் லெஸ்லி. “இந்தா” என்று பனிரெண்டாயிரம் டாலருக்கு செக் எழுதி அவளிடம் கொடுத்தார் எர்வின்.

எல்லாம் சுபமாய் முடிந்து சிகாகோ வரும் வழியில், “சொத்துல பங்கு, பணம் என்று எல்லாவற்றையும் எனக்கு வாங்கிட்டியே…உனக்கு ஒன்றும் வேண்டாமா?” என்றாள் லெஸ்லி.

“நீ தான் வேணும்”

“என்ன மாயம் செய்தே? சொல்லேன்”

“எல்லாம் எங்க மாமா கொடுத்த ஐடியா தான், லெஸ்”

“வாட் எ மேன்” என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் லெஸ்லி.

“என்ன சார் இது? எனக்கு ஏதோ வழி சொல்லிக்கொடுப்பீங்கனு பார்த்தா, கதையை முடிச்சிட்டீங்களே?” என்றான் சித்து.

“உனக்கு வழி சொல்றதா நான் எங்கேப்பா சொன்னேன்? என் மருமகன் சிவாவைப் பத்திக் கேட்டீங்க, சொன்னேன்” என்றார் அன்புமல்லி.

“டேய் சித்து.. அன்பு சார் ஏதாவது சொன்னா அர்த்தம் இருக்கும்.. நாம தான் ஆழமா யோசிக்கணும்.. அந்த சிவா மாதிரி டக்குனு பிடிச்சுக்கணும்.. இந்தக் கதையில் திருப்பம் என்ன? திருட்டும் பயமுறுத்தலும் தானே?” என்றான் நெடு.

“அதாவது, கலாவை நாம கடத்திக்கிட்டுப் போய் அவங்க அப்பா அம்மாவை பயமுறுத்திப் பணம் வாங்கிடலாம்னு ஐடியா கொடுத்திருக்காரு… பிரமாதம் சார்” என்றான் சாய்.

“ஆனா என் அத்தை பையன் கஜா மாதிரி மாட்டிக்காதீங்க..அவன் கதையைச் சொன்னனோ?” என்றார் அன்பு.

“ஆளை விடுங்க சார்.. உங்க குடும்பத்துல உருப்படியா காதல் கல்யாணம்னு செய்துக்கிட்டவங்க ஒருத்தரும் இல்லையா? உங்க ஐடியா எல்லாம் கேட்டா, எனக்கு இந்தப் பிறவியிலே கல்யாணம் ஆன மாதிரி தான்” என்று எழுந்தான் சித்து.

“அவன் கிடக்கான் சார், உங்க அத்தை பையன் கதையை இன்னொரு நாள் கண்டிப்பா சொல்லுங்க” என்றபடி மற்ற மூவரும் எழுந்து, சித்துவைத் தொடர்ந்து சென்றனர்.

– 2009/06/06

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *