காசியில் பிடிச்சத விடணும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 10,017 
 
 

தன் அப்பா ஸ்ரீதரின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் அரவணைப்பில் இருந்த ராஜஸ்ரீ வலது கையில் நூலில் பறந்து கொண்டிருந்த ஹீலியம் பலூன் இருக்க, இடதுகை கட்டை விரலை சூப்பிக்கொண்டிருந்தாள். அவர்கள் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்தனர் அவளது அம்மா ராஜலக்ஷ்மியும் அண்ணன் பிரபுவும். பிரபுவின் வலது கையிலும் ஹீலியம் பலூன் ஒன்று பறக்க இடது கையால் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வந்தான். ராஜலக்ஷ்மி நடக்க வாகாகத் தன் புடவைக் கொசுவத்தை சிறிது தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளது அருகில் அவளது தம்பி கதிரேசன் தோளில் ஒரு பையும் கையில் ஒரு பிளாஸ்டிக் வயர் கூடையுடனும் வந்து கொண்டிருந்தான்.

கதிரேசன் கான்பூர் ஐ.ஐ.டியில் எம்.டெக் முடித்து இந்த ஆண்டு பட்டம் வாங்குகிறான். அவனுக்கும் ராஜலக்ஷ்மிக்கும் ஜெயங்கொண்டம் சொந்த ஊர். ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டபின்பு ராஜலக்ஷ்மி சென்னையில் குடும்பத்துடன் வசித்துவர, துவாக்குடி பொறியியல் பல்கலையில் பி.டெக் முடித்திருந்த கதிர் மேற்படிப்பிற்கு கான்பூர் வந்திருந்தான்.

ஸ்ரீதரின் உடன் படித்த நண்பன் ஒருவனுக்கு, டெல்லியில் குடிபெயர்ந்த பின்பு தனது முப்பதாவது வயதிலாவது திருமணத்தை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியதால் அவனது திருமணத்திற்கு வரச்சொல்லி ஸ்ரீதருக்கு அன்புக் கட்டளை போட்டிருந்தான். பிள்ளைகளுக்கு பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்திருந்தது. கதிர் படிப்பு முடித்து ஊருக்கு திரும்பி வருவதற்குள் மொழிதெரியாத இடங்களை அவன் உதவியுடன் சுற்றிப் பார்த்துவிடும் எண்ணத்திலும், அத்துடன் திருமணத்திற்கும் சென்று வந்துவிடலாம் என்ற திட்டத்துடனும் ஸ்ரீதரும் ராஜலக்ஷ்மியும் குழந்தைகளுடன் வடக்கே பயணமாகியிருந்தார்கள்.

திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, டெல்லியை சுற்றிப் பார்த்த பின்னர், ஆக்ராவில் தாஜ்மஹால், அலகாபாத் என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு வாரணாசிக்கு வந்திருந்தார்கள். காசியில் சாமி கும்பிட்ட பின்பு சென்னை திரும்புவதாகத் திட்டம். தங்கியிருந்த விடுதியில் இருந்து கோவிலுக்கு வரும் வழியில் குழந்தைகளுக்கும் பலூன் வாங்கியாகிவிட்டது. ராஜஸ்ரீக்கு ஆறு வயதாகியும் அவ்வப்பொழுது விரல் சூப்பும் பழக்கம் எட்டிப் பார்க்கும், அம்மா பெயரின் முதல் பகுதியையும் அப்பா பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து அவளுக்கு பெயர் வைத்திருந்தார்கள். அவள் விரல் சூப்புவதைக் கவனித்த ராஜலக்ஷ்மி, “ராஜிகுட்டி வாயிலிருந்து விரலை எடுடா” என்றாள்.

தரையில் கிடந்த ஏதோ ஒன்றை எடுக்கக் குனிந்த பிரபு கவனம் சிதறியதால் பலூனை தவறவிட்டு அது பறக்கவும் அழ ஆரம்பித்தான். ராஜலக்ஷ்மி உடனே ராஜிகுட்டியின் கையிலிருந்த பலூனை பிடுங்கி பிரபு கையில் கொடுக்க, இப்பொழுது ராஜி அழ ஆரம்பித்தாள். ஸ்ரீதருக்கு கோபம் வந்தது, “ஏய், உனக்கு அறிவிருக்கா? அவனை சமாதனப் படுத்தரதவிட்டுட்டு, சின்னக் குழந்தை பலூனைப் பிடுங்கறியே” என்று திட்டினான். ராஜலக்ஷ்மிக்கும் தான் சிறிதும் யோசிக்காமல் செய்த தவறு புரிந்தது. ஏன் அப்படி செய்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை. கதிர் பலூனை மீண்டும் ராஜிகுட்டி கையில் கொடுத்து, “எங்க நீயும் பிரபு மாதிரி பலூன பறக்கவிடு, யார் பலூன் வேகமா பறக்குது பாக்கலாம்,” என்றான். அவளும் பறக்கவிட, குழந்தைகள் “என் பலூன்தான் வேகமா பறக்குது, என் பலூன்தான்…” என்று கூச்சல் போட, பலூன் பறந்த கவலை திசை திரும்பியது.

ஆற்றில் ஒரு முழுக்கு போடும் எண்ணத்தில் ஆற்றை நோக்கி படியில் இறங்க ஆரம்பித்தார்கள். கதிர் சுற்றும் முற்றும் பார்த்தவாறு, “அக்கா இன்னைக்கு ரொம்பக் கூட்டமா இருக்கில்ல” என்றான். ஸ்ரீதர், “அவ முன்ன பின்ன …” என்று ஆரம்பித்தவன் ராஜலக்ஷ்மி முறைப்பதைப் பார்த்த பின்பு, அபசகுனமா பேசாதீங்க என்ற திட்டு விழும்முன், “நாங்க இப்பதானே முதன் முதலா வரோம், எங்களுக்கு என்னத் தெரியும்?” என்றான்.

கதிர், “நான் போன தடவ என் ஃபிரெண்ட்ஸ்ஸோட வந்தப்ப இவ்வளவு கூட்டம் இல்லை, இருங்க அத்தான் யாரிடமாவது இன்னைக்கு என்ன விசேஷம்னு கேட்கிறேன்” என்று சொல்லியவாறு சுற்றும் முற்றும் பார்த்தான். காலை வெய்யிலில் பள, பள என மின்னும் வழுக்கைத் தலையுடன், ஹிந்தியில் ஏதோ எழுதியிருந்த காவித்துண்டு ஒன்றை உடலில் போர்த்தியிருந்த ஒரு வயதானவர் ஆற்றில் இருந்து படியில் ஏறி வந்து கொண்டிருந்தார். அவரிடம் கதிர் கசமுச என்று ஹிந்தியில் பேச அவரும் ஹிந்தியில் பதில் சொல்லிவிட்டு படியேறலானார்.

“இன்னைக்கு நீர் ஜால ஏகாதசியாம் அக்கா, அதான் இவ்வளவு கூட்டம்” என்றான் கதிர். மேலே ஏறிக் கொண்டிருந்த பெரியவர் மீண்டும் இறங்கி வந்து கதிரின் தோளைத் தட்டி ஏதோ சொல்ல ஆரம்பித்தார். கதிரும் மிக பவ்யமாக வாயில் கை பொத்தி கேட்டுக் கொண்டான். அவன் பணிவில் மகிழ்ந்தவர் போல பெரியவர் அவனது தலையில் கைவைத்து ஆசீர்வதித்து விட்டு மீண்டும் படியேறினார்.

“என்ன மச்சான் உன்ன ஆசீர்வதிக்க மறந்து போயிட்டாரா? அதான் திரும்பி வந்தாரா? என்ன சொல்றாரு அந்தப் பரோட்டாத்தலை?” என்றான் ஸ்ரீதர் கிண்டலாக. “மரியாதை, மரியாதை” என்று ஞாபகப் படுத்தி, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள் ராஜலக்ஷ்மி.

“நான் தப்பா உச்சரிச்சிட்டேன்னு சொல்றார் அத்தான். நீர் ஜாலம், மாயா ஜாலமெல்லாம் இல்ல, அது நிர்ஜலம், தண்ணி கூட குடிக்காம விரதம் இருப்பாங்களாம், நிர்ஜல ஏகாதசி அப்படின்னு மகாபாரதக் கதை ஒன்றை சொல்லிட்டு போறாரு,” என்றான் கதிர்.

“அட , அப்படியா நமக்குத் தெரியாமலே நல்ல நாளாப் பார்த்துதான் கோவிலுக்கு வந்திருக்கோம்” என்று மகிழ்ந்தாள் ராஜலக்ஷ்மி. ஆற்றில் காவியுடை சாமியார்கள் நிறைந்திருந்த படகு ஒன்று போனது. மற்றொரு படகில் இந்திய வெயில் தாளாத மேலை நாட்டுக்காரர்கள், ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அரைக்கால் சட்டை, தொப்பி, கறுப்புக் கண்ணாடி போன்றவற்றை அணிந்து போய்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பார்தவற்றைஎல்லாம் படம் எடுத்துக் கொண்டு சென்றாள்.

“எல்லாத்தையும் படம் எடுக்குறாப்பா இந்தப் பொண்ணு, நாம தும்மினாலும் அதையும் படம் எடுப்பாளோ” என்றான் ஸ்ரீதர். அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க, ராஜிகுட்டிக்கு அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்றே புரியவில்லை. “ஏன்பா சிரிக்கிறீங்க?” என்று ஸ்ரீதரை உலுக்கினாள். அவளுக்கு விளக்கி சொல்லப் பொறுமை இல்லாத ஸ்ரீதர், “அப்பாவுக்கு தும்மல் வருது அப்படின்னு சொன்னேன்டா” என்றான். “இல்லப்பா, தப்பா சொல்றீங்க. அப்பாவுக்கு சிரிப்பு வருது,” என்று தன்னால் முயன்ற அளவு ராஜிகுட்டி அவனது தவறை சுட்டிக் காட்டவும், மீண்டும் சிரிப்பு அலை எழுந்தது.

“அத்தான், காசிக்கு வந்தா ஏதாவது பிடித்தத விட்டுடனும்னு சொல்வாங்களே, நீங்க எத விடப் போறீங்க?” என்றான் கதிர். “வேணும்னா உங்க அக்காவா இங்கயே விட்டுடலாம்னு இருக்கேன், என்ன சொல்ற மச்சான்?” என்று அவனை சீண்டினான் ஸ்ரீதர். மூக்குக் கண்ணாடியை விரலால் தள்ளி சரி செய்துகொண்டு அவனை முறைத்தான் கதிர்.

இதைக் கவனித்த ராஜலக்ஷ்மி தம்பியின் தலையில் தட்டி, “அவர் விளையாட்டுக்குதானே சொல்றார், இதுக்கு ஏண்டா உனக்கு கோபம் வருது?” என்று சிரித்தாள். ஆனால் தனக்காக தன் தம்பிக்கு வந்த கோபத்தைப் பார்த்து அவள் முகத்தில் பெருமையும் தெரிந்தது.

“இல்ல, நான் நெசமாத்தான் சொல்றேன்”, என்றான் ஸ்ரீதர். “நல்லா கவனிங்க, பிடிச்சத விடணும்னு சொல்லுவாங்க, அப்படின்னா நான் உங்களுக்கு ரொம்ப பிடிச்சவன்னு ஒத்துக்கிறீங்களா?” என்று மடக்கினாள் ராஜலக்ஷ்மி. “ஏன் மச்சான் உங்க அக்காவ வக்கீலுக்கு படிக்க வச்சிருக்கலாம்ல” என்றான் ஸ்ரீதர்.

“நான் ராஜிகுட்டியோட சண்டை போடுறத விட்டுடறேன்” என்றான் பிரபு. “நானும் பிரபு கூட இனிமே சண்டை போடுறத விட்டுடறேன்” என்றாள் ராஜிகுட்டி. “குடும்பத்தில யாருமே நடக்கிறதா பேசவே மாட்டீங்களோ? நீங்களே உங்க அம்மா அப்பாவுக்கும் எத விடலாம்னு சொல்லுங்க ” என்றான் கதிர்.

ராஜிகுட்டி சிறிது யோசனைக்குப் பின், “அம்மா என்னோட பொம்மைய எடுத்து பிரபு கிட்ட கொடுக்கறத விட்டுடனும்” என்றாள். ராஜலக்ஷ்மி குற்ற உணர்வுடன் “ஸாரிடா குட்டி, அம்மா இனிமே அப்படி செய்றத விட்டுடுவேனாம், சரியா?” என்று ராஜிகுட்டிக்கு கையில் முத்தம் கொடுத்தாள். ஸ்ரீதர் பிரபுவின் உடைகளைக் களைந்து போட்டுவிட்டு அவனை ஜட்டியுடன் நீரில் இறக்கி குளிப்பாட்டினான். குனிந்து குளிப்பாட்டும் பொழுது அவன் கழுத்தில் ஒற்றை ருத்திராட்சம் கோர்த்த தங்க சங்கிலி ஆடிக்கொண்டிருந்தது. பிரபு, “அப்பா, இனிமே நீங்க இந்த மணி கோத்த சங்கிலி போடறத விட்டுடுங்க” என்றான். “ஏண்டா?” என்றான் ஆச்சர்யத்துடன் ஸ்ரீதர். “இத சாமியார்தான் போட்டுக்குவாங்களாம், நீங்கதான் சாமியார் இல்லையே” என்றான் பிரபு. பிரபுவுடன் சேர்ந்து ஸ்ரீதரும் ஒரு முழுக்கு போட்டு விட்டு எழுந்தான்.

ஏதோ யோசனையாக இருந்த ராஜலக்ஷ்மி, “கதிர், இன்னைக்கின்னு சிறப்பு பூஜை அப்படின்னு ஏதாவது செய்றது வழக்கம்னா, நாமும் செய்யலாமே,” என்றாள். இதற்குள் குளித்து மாற்றுடைக்கு மாறியிருந்த கதிர் தன் தோள்பையில் இருந்து துண்டு, மாற்றுடை போன்றவற்றை மற்றவர்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். “சரிக்கா, நான் யாரிடமாவது விசாரிச்சிட்டு வரேன்” என்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு கதிர் படியேறினான். அவன் சிறிது தூரம் போன பின்பு, “கதிர், ஏய் தம்பி கதிர்” என்று கூவினாள் ராஜலக்ஷ்மி. “இப்ப ஏன் கூப்பாடு போடற, உனக்கு என்ன வேணும்? ராஜிகுட்டியும் நீயும் குளிச்சிட்டு மேலே வாங்க” என்று சொல்லிய ஸ்ரீதர் பிரபுவை துவட்டி விட்டு ஒரு துண்டை அவன் இடுப்பில் கட்டி விட்டு, தனக்கு மாற்றுடை அணிய ஆரம்பித்தான்.

“இல்லீங்க, அப்படியே பூஜைக்கு ஏதாவது வாங்கணும்னா கையோட வாங்கிட்டு வர சொல்லலாமேன்னுதான் அவன கூப்பிட்டேன்” என்றாள் ராஜலக்ஷ்மி. “அவனுக்கு இந்த சத்தத்தில எங்கே காதில விழப் போவுது, நானும் அவன் கூட போயிட்டு வந்துடறேன்,” என்று சொல்லியவாறு சட்டையை மாட்டி, பையில் பர்சையும் வைத்துக் கொண்டான் ஸ்ரீதர். “பிரபு, அம்மாவுக்கு கொஞ்சம் உதவி பண்றியா கண்ணா?” என்று மகனிடம் கேட்டுக் கொண்டு, அவன் முடியைக் கோதி ஈரமாக இருக்கிறதா என்ற ஒருமுறை பார்த்துவிட்டு படி ஏறினான்.

வெள்ளைக்காரர்கள் சென்ற படகு மீண்டும் திரும்பி வர, அந்த படமெடுக்கும் பெண் இவர்களைப் பார்த்துக் கையாட்டினாள். “அம்மா, கைய ஆட்டுறாங்கம்மா” என்று பிரபு பதிலுக்கு கையை ஆட்டி சிரித்தான். ராஜலக்ஷ்மி ராஜிகுட்டியின் கவுனைக் கழட்டி போட்டுவிட்டு அவளைக் குளிப்பாட்டினாள். பிறகு முகத்தை திருப்பாமல் கைகளை மட்டும் நீட்டி, “பிரபு, அந்தத் துண்டை எடுத்துக் கொடுப்பா” என்றாள். கைக்கு துண்டு வராததால், ஏதாவது பராக்கு பார்க்கிறானோ என்று எண்ணித் திரும்பி, “பிரபு” என்றாள்.

பிரபு அங்கே இல்லை. திடீரென உடல் முழுவதும் பாய்ந்த மின்சாரம் போன்ற அதிர்ச்சியில் “பிரபு, பிரபு” உரத்த குரலில் கூவியவாறு மேலே செல்லும் படிகளை நோட்டமிட்டாள், ஆற்றின் பக்கம் பார்த்தாள். எங்கும் பிரபுவைக் காணவில்லை. இவள் போட்ட கூச்சலில் பக்கத்தில் இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். “பிரபு, பிரபு” என்று கூவியவாறு கூட்டத்தை தள்ளிக் கொண்டு படியேறி ஓடியவள், பாதியில் நினைவு வந்தவளாக மீண்டும் இறங்கி வந்து ஈர உடலுடனும் ஜட்டியுடனும் படியில் நின்றுகொண்டிருந்த ராஜிகுட்டியையும் இழுத்துக் கொண்டு மேலே ஓடி, இரு புறமும் பார்த்து மீண்டும் “பிரபு, பிரபு” என்று கூவினாள். கதிரும் ஸ்ரீதரும் சிறிது தூரத்தில் பேசிக் கொண்டே திரும்பி வந்தவர்கள் இவள் போட்ட கூச்சலையும், கோலத்தையும் பார்த்து வேகமாக ஓடி வந்தார்கள்.

ஒரு வழியாக ஒரு நிமிடத்தில் காணாமல் போன பிரபுவைப் பற்றி அழுகையுடன், பதட்டத்துடன் ராஜலஷ்மி சொல்லிமுடிக்க, கதிர் படியிறங்கி ஓடி ஆற்றில் இறங்கி அங்கும் இங்கும் துழாவித் தேடினான். பிரபு ஆற்றில் விழுந்திருப்பானோ என்ற சந்தேகம் அவனுக்கு. பக்கத்தில் நின்றவர்களைக் கேட்டான். ஸ்ரீதர் தான் வந்த வழியே திரும்பி ஓடி, மகன் தன்னைத்தேடி வந்திருப்பானோ என்ற யோசனையுடன் தேடினான். இதற்குள் பித்து பிடித்தவள் போல் ராஜலக்ஷ்மி கரையில் கூட்டத்தை தள்ளிக் கொண்டு கண்ணிற்கெட்டிய தூரம் வரை இரண்டு பக்கமும் இடுப்பில் ராஜிகுட்டியுடன் “பிரபு, பிரபு” என்று பார்பவர்களுக்கு நெஞ்சைப் பிசையும்படியான வேதனை தருமளவிற்கு, தன் அடிவயிற்றில் இருந்து கூவிக்கொண்டு ஓடினாள்.

நேரம் செல்லச் செல்ல குழந்தை நீரில் விழுந்து மூழ்கிவிட்டானோ, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கூட்டம் தூக்கிச் சென்றுவிட்டதோ, இல்லை ஏதாவது வேடிக்கை பார்க்க சென்றவன் கூட்டத்தில் வழி தடுமாறி காணாமல் போய்விட்டானோ என்ற கவலை மட்டுமே மிஞ்சி நின்றது. காவல் நிலையம் சென்று கதிரின் உதவியுடன் பையனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார்கள். பர்ஸில் இருந்த குடும்ப படத்தை அடையாளத்திற்குக் கொடுத்தார்கள். அந்தப் படத்தில் இப்பொழுது மூன்றாவது வகுப்பு முடித்திருந்த பிரபு இன்னமும் சிறிய வயதில் இருந்தான். விடுதிக்கு சென்று சரியான சாப்பாடு தூக்கம் எதுவும் இன்றி நாட்களை ஓட்டினார்கள். சாப்பிட உட்கார்ந்தால் பிரபுவுக்கு பசிக்குமோ, அவனுக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமோ என்று ஒவ்வொருவர் மனதிலும் எண்ணம் ஓடியது. சாப்பாடு இறங்கவில்லை. படுத்தால் பிரபுவுக்கு குளிரினால் போர்வை இருக்கமோ என்ற எண்ணம் ஓடியது. ஆனால் யாருக்கும் வெளியில் சொல்ல தைரியம் இல்லை.

அவன் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதை மட்டும் மனம் எண்ணிப் பார்க்கக்கூட விரும்பவில்லை. வெளியில் சென்றால் கண்கள் பிரபுவைத் தேடி அலை பாய்ந்தது. ஆனால் ராஜிகுட்டிக்கு இன்னமும் பிரபு காணாமல் போன விவரம் சரியாகப் புரியவில்லை. அழுது கொண்டே இருக்கும் அம்மாவையும், கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் மாமாவையும் அப்பாவையும் தொந்தரவு செய்து பிரபு எங்கே என்று கேட்கத் தெரியவில்லை. அவ்வப்பொழுது இவளும் எங்கே காணாமல் போய்விடுவாளோ என்று ராஜலக்ஷ்மி மகளை இறுக்கிப் பிடித்துக் கொள்வாள். மூன்று வாரங்கள் ஓடியது, காவல் நிலையத்தில் உள்ளவர்கள் பையன் கிடைத்தால் சொல்கிறோம், நாங்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம், முகவரி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ, உதவவோ முடியாத நிலையில் இருந்தார்கள்.

ஊரை விட்டு வந்து ஒரு மாதமாகி விட்டதால் பழைய வாழ்கைக்கு, பிரபு இல்லாமல் ஊருக்குத் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கிளம்பும் நாள் அன்று மீண்டும் அதே படித்துறைக்கு சென்று பிரபு கிடைக்க மாட்டானா என்ற நப்பாசையில் தேடினார்கள். வானத்தில் ஒரு பலூன் தனியாகப் பறந்து சென்றது, அதைப் பார்த்தவாரே இருந்த ஸ்ரீதர் தோளில் இருந்த ராஜிகுட்டியின் விசும்பல் கேட்டு திரும்பினான். அவள் பக்கத்தில் விளையாடிய இரண்டு பையன்களைப் பார்த்தவாறு கலங்கிய, கண்ணீர் பளபளக்கும் கண்களுடன் இருந்தாள். சிறிது தூரத்தில் எப்பொழுதும் நாசூக்காக உடை உடுத்தி, நளினமாக நடந்து கொள்ளும் ராஜலக்ஷ்மி தலை கலைந்து, உடை கலைந்து சுற்றுபுறம் பற்றிய கவலை இல்லாமல் தரையில் விழுந்து தொண்டை அடைப்பது போலக் கேவி கேவி அழுது கொண்டிருந்தாள். மூக்கிலும் கண்ணிலும் நீர் கொட்ட, தொண்டை கரகரத்துப் போய் ஆற்றைப் பார்த்து கதறிக் கொண்டிருந்தாள். தன் மனதில் உள்ளது போலவே பிரபு வளர்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவள் மனதிலும் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது ஸ்ரீதருக்குப் புரிந்தது.

ஸ்ரீதர் தன்தோளில் ராஜிகுட்டியை சுமந்தபடி, அரற்றிக் கொண்டிருக்கும் மனைவியிடமும் கதிரிடமும் சென்றான். அவளை எழுப்ப முயற்சித்த பொழுது ஏக்கத்துடன் அவனைப் பார்த்த அவள் கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை. அம்மாவைப் பார்த்து ராஜிகுட்டியும் அழுததால் அவள் கண்ணீர்த்துளிகள் அவன் தோளில் விழுந்தது. அழும் மனைவி, மகள் முகத்தைப் பார்க்க பார்க்க அவனுக்கு ஏனோ யார் மீதோ ஆத்திரம் வந்தது. அப்பொழுது கோயில் மணி ஒலிக்க அது வந்த கோபுரத்தைத் திரும்பிப் பார்த்தான். கோபுரத்தில் இருந்து ஒரு பறவைக் கூட்டம் கிளம்பிப் பறந்து சென்றது. கோபுரத்தையே வெறித்துப் பார்த்தவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல தன் கழுத்தில் இருந்த ருத்திராட்ச மணி கோர்த்த சங்கிலியை வெருட்டென்று இழுத்து நீக்கி ஆற்றை நோக்கி வீசிவிட்டு, மனைவியை இழுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

– நவம்பர், 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *