இவனுக்கு 14ஏ அறை தனித்தே விடப்பட்டிருந்தது. நாளொன்றுக்கு மருத்துவமனை சாப்பாட்டுடன் அறுபது ரூபாய் தான். இலவச அறைகளும் சானடோரியத்திற்குள் இருக்கின்றனதான் என்றாலும் அதற்கு எம்.எல்.ஏ.வின் பரிந்துரைக் கடுதாசி வேண்டும். இவன் சார்ந்த கட்சியின் தோழர்கள் அந்த பரிந்துரையை வாங்கித் தருவதாகத்தான் கூறினார்கள். என்றாலும் அவன் அதை மறுத்து விட்டான். மேலும் அந்தப் பரிந்துரையினால் 100 பேர் இருமிக் கொண்டிருக்கும் ஒரு நீளமான ஹால் தான் கிடைக்கும். இவனும் கடந்த ஒன்றரை வருடமாக அந்த டாக்டர் இந்த டாக்டர் என செலவும் செய்து பார்த்து விட்டான். ஒன்றும் பலனளிக்காமல் நாளொரு மேனியாய் இளைத்துப் போய் பலமான காற்று வீசினால் காணாமல் போய்விடும் நிலைக்கு வந்து விட்டான்.
வெச்ச ஒலையுங் காயாது, வந்த ஒறம்பரையும் போகாதுன்ற மாதிரி இந்த நோய் இவனிடம் தங்கி இவன் எலும்புகளைத் தின்ன ஆரம்பித்து விட்டது. அரசாங்க மருத்துவமனையில் ஆறு மாதம் இலவசமாக இவனுக்கு மருந்து கொடுத்தார்கள். பதினைந்து நாளைக்கு ஒருமுறை சென்று வாங்கி தினம் இரவு பதிமூன்று மாத்திரைகள் விழுங்கி விடியும் வரை வயிற்றுப் புரட்டலில் கிடந்தான். காலையில் சிவச்சிவ என சிகப்பாய் மூத்திரம் பெய்தான். காலையில் வயிற்றில் போவதும் மாலையானதுமே உள்காய்ச்சலிலும் நொந்து நூலானான்.
தன் நெருங்கிய தோழர்களிடமே நெருங்கி அதிகம் பேசப் பயப்பட்டான். எங்கே அவர்கள் முன் இருமி உருண்டையாய் காறித் துப்பும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சம். ஒதுங்கினான். இந்த வியாதி இவனுக்கு எங்கிருந்து வந்து ஒட்டிக் கொண்டதென்பதே புரியவில்லை. திருப்பூரில் வாகன இறைச்சல்களுக்கிடையே இவனும் வாகனத்தில் பயணப்பட்ட சமயத்தில் அடித்த அந்தப் புழுதிகளாலா? இல்லை சாக்னா கடையில் அவசரமாக அந்த அழுக்குத் தண்ணீரில் கண்ணாடி டம்ளர்களைக் கழுவி சரக்கை ஊற்றிக் குடித்ததாலா? இல்லை அதிகம் உண்ணாமல் டீயைக் குடித்து பீடி புகைத்ததாலா? இல்லை கொசு வருகிறதென கொசுவர்த்திச் சுருளை பற்ற வைத்து விடிய விடியக் கிடந்ததாலா? எது?
இவன் உள்ளூர் டீக்கடைகளிலேயே தனியாக ப்ளாஸ்டிக் டம்ளரில் டீயை 25 பைசா அதிகம் கொடுத்து குடித்து வீசத் துவங்கினான் . யாம் பெற்ற இந்த இன்பத்தை வையகமும் பெறுதல் கூடாதென்ற எண்ணத்தில் தன். வீட்டில் தனி டம்ளர் வைத்துக் கொண்டான். இவனாகவே மெதுவாக வீட்டினுளேயே அன்னியமானான்.
சானடோரியத்தில் இவனை விட்டுப் போக வந்த இரு நண்பர்களும் இவனது 14ஏ அறையை தென்கடைசிக்கு அருகாமையிலிருப்பதைக் கண்டறிந்து அறையை நீக்கி இவன் திருப்திக்காக. “ஜம்முன்னு பர்ஸ்ட் க்ளாஸா இருக்குது. 100 ரூபா குடுத்து அந்த டீலக்ஸ் ரூமில் தங்குறதை விட இது போதும். பாத்ரூம் இருக்கு. சரி நாங்க போய் உனக்கு ப்ளாஸ்டிக் குடம், ஒரு சொப்பு வாங்கி வந்து குடுத்துட்டு போறோம். நிறைய புக்ஸ் கொண்டாந்திருக்கே… எல்லாம் படிச்சு முடிச்சுட்டு ஒரு பெரிய நாவல் எழுது..” என்றபடி சொன்னது போல் குடம், சொப்பு வாங்கி வந்து கொடுத்து விட்டு நாளையோ நாளை மறுநாளோ வருவதாகக் கூறி விடைபெற்றுப் போனார்கள்.
இவன் அறையை நோட்டம் விட்டான். மூன்று புறமும் பெரிய ஜன்னல்கள் இருந்தன். ஒரு ஜன்னல் புறமாக இவனுக்கான கட்டில் கிடத்தப்பட்டிருந்தது. அதன் மீதிருந்த விரிப்பான் அழுக்கேறிக் கிடந்தது. கூலியாள் ஒருவன் எதுவோ முனகிக் கொண்டே உள்நுழைந்தான். அவன் கையில் புதிய விரிப்பான் இருந்தது.
“புதுசா வந்திருக்கீங்களா? எந்த ஊரு? என்ன வேலை பாக்குறீங்க?” என்றான்.
”வாய்ப்பாடி ஊர். பிரஸ்ல வேலை பாக்குறேன்” என்றான்.
“ஏற்கனவே ஒருத்தரு உங்களையாட்டம் தான் இருந்தாரு. நாமக்கல்காரரு அவரு. பிரஸ்ல தான் வேலை பார்த்ததா சொன்னாரு. பாவம்..” என்று எதுவோ சொல்ல வந்தவன் அதை விட்டு விட்டு விரிப்பானைத் தட்டி நேர்படுத்தினான்.
“பணம் குடுங்க” என்றவனுக்கு பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாய் எடுத்து நீட்டினான்.
“நாங்க 50 ரூபா வாங்குறமுங்க. எதுனா பிரச்சனைன்னா கூப்புடுங்க. கக்கூஸ் காலைல தினமும் எழுபது ரும் பக்கம் கிளீன் பண்றமுங்க. தண்ணி பின்னாடி பைப்புல வருமுங்க” என்று அவன் அடுக்கிக் கொண்டே போக இவன் 50 ரூபாயை நீட்டினான்.’
“மகராசரு, நோவு சீக்கிரம் நல்லா ஆயி ஊட்டுக்குப் போவணும்” என்று சொல்லி வெளியேறினான். ஏற்கனவே இருந்தவர் என்ன ஆனார்னு இவன் கேட்க ஆசைப்பட்டு விட்டு விட்டான்.
இவன் படுக்கை ஓரத்திலிருந்த ஜன்னல் வழியே எதிர் அறைக்காரரின் ஜன்னல் தெரிந்தது. அவர் நெஞ்சின் மீது ரேடியோ ஒன்றைப் பிடித்தபடி பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். இடையிலே இருந்த இடத்தில் தோட்டம் மாதிரி அமைத்திருந்தார்கள். நிறைய கோரைப் புற்கள் இருந்தன.
இந்த சானடோரியம் பெரும் பரப்பளவைக் கொண்டது தான். எங்கும் மரங்கள். பெரிய காடு மாதிரி இவனுக்குப்பட்டது. சேனடோரியம் போய் ஒரு மாசம் படுத்திருந்து வந்தா நோவு போன இடம் தெரியாம போயிடுமாம். அந்த காத்து அப்படி, என இவனுக்கு முன்பே கூறியிருந்தார்கள்.
இவன் அறைக்கு வரும் முன்பாக 5ஏ-வில் இருந்த தாதி ஒருத்தி இவனுக்கான கார்டு ஒன்றைக் கொடுத்து ஊசி ஒன்று போட்டு அனுப்பியிருந்தாள். ஊசி என்றாலே இவனுக்கு அலர்ஜி. டாக்டர் வந்தால் ஊசி வேண்டாம் என கூறிவிட வேண்டும். மாத்திரை போதும் என்று சொல்லி விட வேண்டும். ஊசி போட்ட இடம் வின்வின்னென கடுகடுப்பாய் வலித்தது. சிவச்சிவ என மருந்துத்தண்ணி இருந்தது சின்னக் குடுவைக்குள். தெம்பு ஊசியாம்! அதில் பத்து ஊசி பாக்கி இருக்கிறது. ஏ.கே.டி மாத்திரைகளைத் தரவில்லை இங்கே. வேறு தந்திருக்கிறார்கள்.
இவன் பின்புறக் கதவை நீக்கி வெளிவந்தான். காடு மாதிரியே தான் இருந்தது பின்புறமும். எலந்தை மரத்தடியில் மயில்கள் படுத்திருந்தன. அருகாமையில் பைப் ஒன்று நின்றிருந்தது. ஒரு குடம் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளலாமென குடத்தை எடுத்துக் கொண்டு வந்தான். மயில்கள் பழக்கப்பட்டவைகள் போல நகராமல் கிடந்தன.
இலந்தை பழங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. இதுவே ஊர் என்றிருந்தால் நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட்டுத் தின்றிருப்பார்கள். மரம் மொட்டையாகி இருந்திருக்கும். இவனுக்கு அதிலொன்றை எடுத்துச் சாப்பிடலாம் என்று தோன்றியது. காய்ச்சல் பயம் வரவே விட்டு விட்டு, நிரம்பிய குடத்தை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தான். கீழே இறக்கி வைத்ததும் மூச்சு முட்டிற்று. மூச்சை வாங்கவும் முடியாமல் விடவும் முடியாமல் சிறிது நிமிடம் சிரமப்பட்டான்.
ஒரு குடம் தண்னீரை எடுத்துவரக் கூட கையாலாகாமல் இருக்கிறோம் என நினைக்க வெட்கமாயிருந்தது. முன்பொருமுறை டிவியெஸ்சை ஸ்டார்ட் செய்ய உருட்டி ஓடி ஸ்டார்ட் ஆகாமல் திடீரென இப்படித்தான் ஆயிற்று. டிவியெஸ்சை தொப்பென கீழே போட்டு விட்டு வாயில் காற்றை ஹா ஹாவென விட்டு அமர்ந்து பத்து நிமிடம் கழித்து தான் ஆசுவாசமானது நினைவுக்கு வந்தது. அன்றிலிருந்து டிவிஎஸ்சை உருட்டியோடும் வழக்கத்தை விட்டொழித்தான். அந்த மாதிரியான சமயங்களில் செத்துவிடுவோம் என்று கூட தோன்றுகிறது. கண்களில் புகை கட்டுகிறது. மண்டைக்குள் விண் விண்னென்று இருக்கிறது. இருதயம் டப்பென்று வெடித்து விட்டால் கோமகன் இல்லை. அவனால் யாரையும் மேற்கொண்டு பார்க்க இயலாது. பத்து நிமிடம் கழித்து இரைப்பு கட்டுப்பட்டது. அறைக்குள் என்ன செய்வதெனத் தெரியவில்லை.
தாதி ஊசி போட்ட பிற்பாடு தெம்பு கூடியது போல்தான் இருக்கிறது. வெறுமனே ஃபேன் சுவிட்சை தட்டிவிட்டு படுக்கையில் சாய்ந்தான். டொர் டொர்ர்ர்ர் டொர்ர் என சப்தமிட்டு அது சுழல ஆரம்பித்தது. எவனோ ஆங்கிலேயன் கட்டி வைத்துவிட்டுப் போன கருங்கல் கட்டிடங்கள். உட்புறம் வர்ணப்பூச்சு பூசியிருந்தார்கள். சும்மா படுத்திருக்கவும் முடியவில்லை. கொண்டுவந்திருந்த சூட்கேஸிலிருந்து இவனது லுங்கி மேலங்கிகளை அலமாரியில் அடுக்கினான். படிக்க கொண்டு வந்திருந்த புத்தகங்களை அலமாரி செல்பிலேயே அடுக்கினான்.
டேபிள் மீது இவனது எக்ஸ்ரே, ப்ளட், யூரின், சளி ரிப்போர்ட்களை வைத்து விட்டு வாயிலுக்கு வந்து திண்ணயில் அமர்ந்தான். அறை எதிர்க்கே தார்ச் சாலை ஓடியது. அதற்கு மறுபுறம் மரங்கள். அநேகமாக அவைகள் அசோக மரங்களாக இருக்கலாமென யூகித்தான். தேக்கு மரங்களும் வேப்பை மரங்களும் அதிகமிருந்தன. மரங்களைப் பற்றியான அறிவு இவனுக்கு குறைவு தான். முற்றிலும் ஒரு மாற்றமான சூழ்நிலையில் தான் தள்ளப்பட்டு விட்டதை உணர்ந்தான். இந்தப்புறமாக இருந்த அறையில் ஒரு பெரியவர் இருமுவது எக்கோவாகி இவனுக்கு கேட்டது.
ஒரு வயதான அம்மாள் வாயிற்படியருகே அமர்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள். இந்தப் பக்க அறையிலிருந்தவர் ரேடியோவைத் தூக்கிக் கொண்டே வெளித் திண்ணைக்கு வந்தார். இவர் பிறக்கையிலேயே ரேடியோவைக் கட்டிக் கொண்டே பிறந்தாரோ என்னவோ! இவனைப் பார்த்தவர், “புதுசா?” என்றார். ஊர் பெயர் விசாரித்தார். இவன் கோமகன் என்றான். ‘பேரு புதுசா இருக்கே? என்ன கோமலனா?’ என்றார். ஆமாம்! என்றான் இவன்.
கத்திப் பேச முடியாத நிலையில் இவன் எழுந்து அவர் அறை வாசலுக்கு சென்றான் ‘எவ்வளவு நாளா இங்க இருக்கீங்க?’ என்று வினவியபடியே அவர் திண்ணையில் அமர்ந்தான்.
“நான் வந்து மூனு வாரம் ஆச்சு” என்றவர் ரேடியோவை அணைத்து விட்டு துக்கம் விசாரிப்பவர் போல ஆரம்பித்தார். இவனுக்கு அவர் நெஞ்சு ஓரத்தில் பஞ்சு வைத்து ப்ளாஸ்திரி ஒட்டி இருப்பது பயத்தை ஏற்படுத்தியது.
“அது என்ன?” என்றான்.
“இதுவா? இது நீர் எடுக்கறது” என்றார். இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘அப்படின்னா?’ என்று இழுத்தான்.
“உங்களுக்கு யாரு டாக்டரு?” என்றார். இவன் வேலுமணி என்றான்.
“அவரா? அவரு காசு வாங்க மாட்டாரு. குடுத்தாலும் எதுக்கு இது? அப்படின்னு கேட்பாரு. அவரு நீரெல்லாம் எடுக்கிறதில்ல. நாகேஸ்வரராவ் தான் எடுப்பாரு. நாகேஸ்வரராவ் இப்ப பொண்ணுக்கு கல்யாணமுன்னு ரெண்டு நாளா வர்றதில்லே. முதல்ல நர்ஸ் வந்து இங்கே மரத்துப் போறாப்டி ஊசி ஒன்னு போட்டு உடும். அப்புறம் டாக்டர் தான் பெருசா ஊசி மாதிரி கொண்டாந்து இங்க குத்தி சிரிஞ்சுல நீரை இழுத்து டம்ளர்ல உடுவாரு. செம வலின்னேன் டாக்டர்ட்ட. ஒருக்காத்தான் எடுத்தாரு எனக்கு. ரெண்டு நாள் ஆச்சு” என்று சொன்னவர் இருமி ஒரு சின்ன அலுமினிய டப்பா நீக்கி சளியை துப்பினார்.
“டப்பாவுல தான் சளியைத் துப்பணும். கண்ட இடத்துல துப்பக்கூடாது. உனக்கு புதுசா கூலியாள் ஒருத்தன் டப்பா கொண்டாருவான். தினமும் இதை எடுத்துட்டு மாத்தி வேற குடுத்துட்டு போவான்” முயல் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது.
“எங்க ஊரா இருந்தா வேட்டைத் தடியில இதை அடிச்சு வறுத்துடுவோம்” என்றான் இவன்.
“எங்க ஊர்ல மட்டும் உட்டுருவமா? இங்க அதெல்லாம் முடியாது. ஆமா சாப்பாடு ஆஸ்பத்திரி சாப்பாடா? வெளியவா?”
“ஆஸ்பத்திரி சாப்பாடு தான். பணம் கட்டி இருக்கேன்” என்றான்.
“எனக்கு சம்சாரம் இருந்தாள். இன்னிக்கி காலையில தான் பணம் வாங்கிட்டு வர ஊருக்கு போயிருக்கா. ஆஸ்பத்திரி சாப்பாடு நல்லா இருக்கும்னு தான் சொல்றாங்க. காலையில இட்லி மூனு பொங்கல் வருதாம். ஆறு மணிக்கி காபி வந்துடும். 3 மணிக்கு சாயந்தரமா காபி வரும். சாப்பாடு எட்டு மணி, பன்னண்டு மணி, ஆறு மணிக்கி சைக்கிள்ல கிணிங் கிணிங்குனு பெல் அடிச்சுட்டே வருவான். இன்னிக்கி பத்து ரூபா குடுத்து அவன்கிட்ட தான் சாப்பாடு வாங்கணும் நானும். சரி டாக்டர் வர்ற நேரமாச்சு. நீயி உள்ளார போயி படுத்துக்க. வெளிய இருந்தா அதுக்கு பேசுவாரு” என்றார். இவன் அவரிடம் விடைபெற்று வந்து படுக்கையில் சாய்ந்தான். மணி ஐந்து இருக்கும் போல இருந்தது.
கொஞ்சம் நேரத்தில் வடக்குப் புறமாய் இருந்த பெரியவர் அறைக்குள் தாதியின் நடமாட்டம் ஜன்னல் வழியாக தெரிந்தது. இவன் அறைக்குள் பின்னர் டாக்டர் பூனை மாதிரி நுழைந்தார். இவனது எக்ஸ்ரேவை எடுத்து வெளிச்சத்தில் பிடித்துப் பார்த்தார். பின் ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து கட்டிலில் அமர்ந்திருந்த இவன் முதுகில் வைத்துப் பார்த்தார். மூச்சு விடச் சொன்னார். கடைசியாக, ‘என்ன பண்ணுது?’ என்றார். இவன் தன் இரைப்பைச் சொன்னான். கால்வலியைச் சொன்னான். காய்ச்சலைச் சொன்னான். அட்டையில் எழுதி விட்டுச் சென்றார். பின்பாக தாதி அறைக்குள் வந்தவள் அட்டையில் டாக்டர் எழுதிப் போனவற்றை தனியே மெமோ சீட்டில் எழுதி இவன் கையில் கொடுத்து, ‘மெடிக்கலில் வாங்கி வேளைக்கு ரெண்டுன்னு சாப்பிடு’ என்றாள்.
“காத்து நல்லா வரணும். எல்லா ஜன்னலையும் நீக்கி வைக்கணும். ஊசி நாளைக்குப் போட்டுக்கலாம்” என்று சொல்லிவிட்டுப் போனாள். பின்னாலேயே ஒருவன் வந்து பச்சை முட்டை கொடுத்துப் போனான்.
”இதை காலையில வெறும் வயித்துல சாப்பிடுற மாத்திரையைப் போட்ட பின்னாடி பச்சையா ஒடச்சிக் குடுச்சுக்கோ!” என்று அவனும் சொல்லிப் போனான்.
இவன் மருந்து சீட்டை எடுத்துக் கொண்டு அதை வாங்கி வர அறைக் கதவை சாத்தி விட்டு மெடிக்கலுக்கு கிளம்பினான். ஆபீஸ் ரூமுக்கு அருகாமையில் மெடிக்கல் கடை இருந்தது. மருந்துகளை வாங்கிக் கொண்டபின் பில் போடுகையில், மிஸ்டர் கோமகன் என்று அழகாய் உச்சரித்தார். இந்த மாதிரி இனிமையாக இவன் பெயரை யாரும் உச்சரித்ததே இல்லை தான். இவன் புன்முறுவலுடன் பணத்தை நீட்டினான். “நல்லா சாப்பிடுங்க மிஸ்டர் கோமகன். டானிக்கை நேரா நேரத்துக்கு குடிங்க. சரியாயிடும்” என்று இதமாய்ச் சொன்னார். பாதி வியாதி விலகியது மாதிரி உணர்ந்தான். சில்லறை இல்லாமல் ஹால்ஸ் மிட்டாய் ஏழு கொடுத்தார். ஒன்றைக் கிழித்து வாயில் போட்டு சப்பிக் கொண்டே நடையிட்டான்
மீண்டும் தன் அறைக்கு. டீலக்ஸ் ரூம் ஐந்தாறு கண்ணில் பட்டது. அதிலும் ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள். அடுத்து பொது வார்டு நீளமாகக் கிடந்தது. நிறையப் பேர் வெளியில் வேப்பை மரத்தடியில் சீட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். இருமல் சப்தம் அந்த ஹால் முழுக்க விட்டு விட்டு ஒலித்தது. இவன் அறைக்கு வருகையில் இருட்டி விட்டிருந்தது.
இவன் அறையினுள் நுழைந்து விளக்கைப் போட்டான். வெளியே பெல் சப்தம் கிணி கிணி எனக் கேட்டது. சாப்பாட்டுக்காரர். இவன் கொண்டு வந்திருந்த இவனது தட்டையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு வந்து நீட்டினான். “நீங்க புதுசா? ஆஸ்பத்திரி சாப்பாடு தானே?” வினவியபடி குழம்பைத் தட்டில் ஊற்றி மோரை டம்ளரில் ஊற்றினார். “போதுங்க போதுங்க” என்றான் சாப்பாட்டை. “ஆமாமாம் நல்லா சாப்பிடறவங்க இங்க எதுக்கு வர்றாங்க. சரி பணம் ஐம்பது குடுங்க. எல்லாரு கிட்டயும் வாங்குறது தான்” என்றான். அவன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுக்க அவர் வாங்கிக் கொண்டார். பக்கத்து அறைக்காரர் பத்து ரூபாயை தந்துவிட்டு கொஞ்சம் சாப்பாடும் மோரும் வாங்கிக் கொண்டு போனார்.
“பசி நல்லா எடுக்குது, ஆனா சாப்பிட முடியுதா ஒன்னா?” என்றபடி பக்கத்து அறைக்காரரே இவனது அறைக்கு வந்தார். “சாப்பிடறீங்களா?” என்றார். இவன் இன்னும் லேட்டாகும், என்றான்.
“உங்களுக்கு குளிரு தெரியுதா?” என்றார்.
“காய்ச்சல் லேசா அடிக்கிற மாதிரி தான் இருக்கு” என்றான்.
“அதெல்லாம் ரெண்டு மூனு நாள்ல காச்சலை நிறுத்திருவாங்க. கவலைப்படாதீங்க. கொசு தான் இங்க நிறையா இருக்கும் பாருங்க! எங்கெங்கியோ சுத்துற காக்காவெல்லாம் இங்க இருக்குற மரத்துகள்ல தான் வந்து அடைஞ்சிடும். பத்து மணி வரைக்கும் இதுக காச்சு மூச்சூனு சத்தம் போட்டுட்டு கிடக்கும். கொசுவர்த்தி பத்த வைக்கலாம்னா உட மாட்டாங்க இங்க” என்றார்.
திருப்பூரில் இந்த இந்த கம்பெனிகளில் முன்பு வேலை பார்த்ததாய் பேசிக் கொண்டிருந்தார். இவனுக்கு அவர் பேச்சு கடுப்படித்தது. இவனாகவே, “டி.பி இருக்குதுன்னு எப்ப கண்டு பிடிச்சீங்க?” என்றான்.
“சாயந்தரமானா காய்ச்சல். கவர்மெண்ட் ஆஸ்பத்திரில மாத்திரை குடுத்தாங்க. மாத்திரை வாங்கிட்டு போறவங்க சாப்பிடாம வீசிட்டு போயிடறாங்கன்னு அவங்க முன்னாடியே 13 மாத்திரைகளை திங்கச் சொன்னாங்க. பகல்ல பெறட்டிப்போடும் அது. முடியுமா? இங்க வந்துட்டேன். வந்தப்ப 27 கிலோ இருந்தேன். இப்ப 35 இருக்கேன். பரவாயில்ல” என்றார். இவன் எடை நாற்பது. அதிலொரு திருப்தி இருந்தது இவனுக்கு.
“காலு வலிக்குமுங்களா?” என்றான். “இல்லியே” என்றார். இவனுக்கு சப்பென்றாகி விட்டது. வலி இருக்குது என்று அவர் கூறியிருந்தால் ஆதரவாய் இருந்திருக்குமென நினைத்தான்.வலிக்காக ஒரு வாரம் வரமிளகாயை அரைத்து காலில் பூசிகாயும் வரை எரிச்சலில் தவித்த கதை சொன்னான். அவர் ‘அச்சச்சோ’ என்றார். “இந்த ரூம்ல ஒருத்தர் இருந்தாராமா..” என்று இவன் ஆரம்பித்தான். அவர் தொடர்ந்தார்…
“ஆமாமா, உங்களையாட்டவே தான். கல்யாணம் ஆகி ஆறு மாசம் தான் இருக்குமாம். அவரு சம்சாரத்தோட இருந்தாரு. டிவியெஸ் வச்சிருப்பாரு. ஆள் இங்க பெட்ல இருக்கவே மாட்டாப்ல. பெருந்துறை போயிடுவாப்ல. ஒரே சுத்தட்டம் தான். ஆனா பாருங்க கடைசியா ரெண்டு நாள் ரூம்லயே கிடந்தாரு. கடசி நாளு இருமி இருமி ரத்தமா கக்குனாராமா. அவரு சம்சாமும் என்னோட சம்சாரமும் ஓடி நர்ஸை கூட்டிட்டு வர்றதுக்குள்ள செத்துப் போயிட்டாரு. பாவம். அந்தப் பொண்ணு அழுத அழுவாச்சி இன்னும் காதுல கேட்குது. போன வாரம் நல்ல மழை. அங்க பொது வார்டுல மழையப்ப குளிருல எட்டுப் பொணம் விழுந்திருச்சு. இதுல தான் வண்டில போட்டு கொண்டு போனாங்க. கடைசில தான் கெடங்கு இருக்குது. அப்புறம் சொந்தக்காரங்க யாராச்சும் வந்து எடுத்துட்டு போனாத்தான் உண்டு பொணத்தை. இல்லன்னா இவங்களே எரிச்சுடுவாங்க பொணத்தை” என்றார்.
”நல்லா டிவியெஸ் வச்சுட்டு சுத்திட்டு இருந்தவன் எப்படி செத்தான்?”
“எங்க வெளிய போனா கோட்டரு மீனு வாங்கிட்டு வந்து இங்க கூத்தடிச்சா? மாத்திரையும் சரியா திங்கறதே இல்லையாமா. சரி நான் போய் துளி சாப்டுட்டு மாத்திரை போட்டுட்டு படுத்துக்கறேன்” என்று சொல்லிப் போனார்.
இவனும் கொஞ்சம் மோரோடு சோற்றை பிசைந்து சாப்பிட்டு விட்டு மாத்திரை தின்று முடித்து பாத்ரூம் போனான். ரத்தம் அங்கே நிறைய திட்டுத் திட்டாய் அப்பியிருப்பதாய் பிரமை உண்டாயிற்று. யூரின் போய்விட்டு விரைவாய் வந்து படுக்கையில் சாய்ந்தான். க.நா.சுவின் பாரபாஸ் நாவலைப் படிக்க எத்தனித்தான். மண்டையில் ஏறவில்லை.
இதே படுக்கையில் செத்துப்போன அந்த முகம் தெரியாதவன் ஞாபகம் வந்தது. தனிமைக்கு பயந்தவனில்லை என்றாலும் சூழல் அப்படியிருந்தது. எங்கும் பேரமைதி. மின்விசிறி வேறு சப்தமெழுப்பியபடி ஓடிக் கொண்டிருந்தது. கொசுக்கள் காதைச் சுற்றி வந்து ரீங்காரமிட்டன.
“என்னெ கொல்றதுக்கு இங்க கூட்டியாந்து இருக்கியாடி?” என வடபுற அறையில் பெரியவர் குரல் கேட்டது. இவன் அறைக்கதவை நீக்கி வெளிவந்து திண்ணையில் நின்றான்.
“நான் போறேன். நாளைக்கி செவ்வாக்கிழமெ சந்தெ. போனாத்தான் நாலு ஆட்டு ஏவாரம் பாத்து சலவைத்தட்டைகளாச்சிம் நாலு பாக்கலாம்” (10 ரூபாய்) என்று தெருவில் இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
“சாவு போ தாயோளி” என அந்த அம்மாள் திண்ணையில் அமர்ந்து இவன் எதுவும் கேட்காமலேயே இவனைப் பார்த்து, “இவன் மவனுக ரெண்டு பேரும் பணம் அனுப்புறானுக தம்பி. நோவை செரி பண்ணீட்டு அப்புறமா போயி கத்தையப் புடுங்கலாம்ல? இவனெ நான் கொல்றதுக்கா இந்தப் பாங்காட்டுல கூட்டியாந்து வெச்சு லோல் படறேன்? அவனால போவ முடியாது தம்பி. கொஞ்சம் தூரம் போவான். அவட்டெ செத்துப் போயி திரும்பி வருவாம் பாரு” என அந்த அம்மாள் சொல்லி முடித்த போது பெரியவர் திண்ணைக்கு வந்து செர்ந்திருந்தார். இப்போது அவரிடம் பேச்சில்லை. பந்தக்காலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு முக்கி முக்கி இருமினார் அவர்.
உலகத்திலேயே கொடுமையான வியாதியாக இந்தக் காசநோய் இவனுக்குப் பட்டது. ஆனால் இவர்கள் மீது யாரும் பாசம் காட்டுவதில்லை. தங்களுக்கு வந்த வியாதியின் கொடுமையை உணர்ந்து கோபத்தை வேறெங்கோ எதுவெதுக்கோ காட்டுகிறார்கள், எனப் புலப்பட்டது. “சோத்தை திங்க மாட்டா கொறைக்கு காரம் சாஸ்தி, இதெல்லா கொழம்பா?” என இவன் அம்மாளைத் திட்டியது ஞாபகம் வந்தது.
ஆயிற்று! இரண்டு மூன்று நாட்களாகி விட்டது. இவனைப் பார்த்துப் போக நண்பர்கள் வந்து போயினர். அவர்கள் பழம் ஆப்பிள் என வாங்கி வந்தவைகள் அலமாரியில் எறும்புகளுக்கு தீனி ஆகிக் கொண்டிருந்தன. சாப்பாட்டு சைக்கிள் மணியோசை கேட்டதும் இவன் தட்டை எடுத்து வந்து வாங்கி உள்ளே வந்ததும் அழுகை முட்டியது. எது எதுக்கோ நினைத்ததற்கெல்லாம் அழுகை வந்தது. சோற்றை நீட்டி வாங்கும் நிலைக்காக. இப்படி அனாதரவாய் நடுக்காட்டில் கிடப்பதற்காக.
இவன் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் கி.ராஜநாராயணன் கிராமியக் கதைகள் மட்டுமே இதமளித்தன. அவைகளில் கிளிகள் குதிரைகள் பேசின். பூனைகள் சிரிக்கின்றன. அம்பை கூட காசத்தில் இருந்ததாய் யாரோ கூறியது ஞாபகம் வந்தது. இந்த மருத்துவமனையின் சிறப்பான டாக்டர் ராம்பிரசாத் தானாம். ஆனால் அவர் சென்ற வாரம் இங்கிருந்து ரிட்டயர்டு ஆகி வீட்டில் பார்க்கிறாராம். அவரைப் பார்க்க மூன்று நாட்களுக்கு முன்னாலே டோக்கன் பெற வேண்டும். நேற்றைய தினம் எக்ஸ்ரேவை பார்த்த பக்கத்து அறைக்காரர், ‘உங்களுக்கு எலும்புல ரெண்டு புண்ணு இருக்குது’ என்று பீதியைக் கிளப்பி விட்டுப் போய் விட்டார்.
இரவு கனவில் அப்பா வந்து கூப்பிட ஆரம்பித்து விட்டார். “உனக்கு நான் என்னடா கொறை வெச்சேன்? இங்க எங்கடா வந்து பொணங்களோட கெடக்கே? வா.. எங்கிட்ட வா!” என்றார். இவன் வர மாட்டேன் என்றான் அவரிடம். “எக்கேடோ கெட்டொழி. உன்னோட ஒடம்பை ஊசியால தொளச்சிப் போடுவாங்கடா! உனக்கு சாவு தான் நிம்மதி. உனக்கு சொன்னா மண்டையில ஏறுதா ஒன்னா?” என்றார். மறுத்தான்.
நோயின் தீவிரத்தில் ஈரோட்டு வீதியில் இருமி இருமி காறித் துப்பிக் கொண்டு பேருந்து நிறுத்தம் வரை எத்தனை முறை சென்றோம். இது பரவாயில்ல எனவும் ஒருகணம் தோன்றியது. சாலையில் துப்புவதற்கு பதிலாக இங்கு டப்பாவில் துப்பலாம். வந்த நான்கு நாட்களுக்குப் பிறகு சளியுடம் காலையில் ரத்தம் வருவது நின்று போயிருந்தது.
இவனைப் பார்ப்பதற்கு அம்மா அன்று கூடைப் பையோடு வந்திருந்தாள். பையிலிருந்த தின்பண்டங்களை அம்மா எடுத்து அலமாரியில் அடுக்கினாள்.
“அங்க ஊட்டுல கெடந்தப்பவே ஒன்னும் திங்க மாட்டே, ஏதாவது இப்பவாச்சும் எறங்குதா? பாரு பழம் எல்லாம் நேரம் கெடைக்குறப்ப எடுத்து முழுங்கணும். எறும்பு தின்னுட்டு வேஸ்ட்டாப் போவுது பாரு. அதார்றா பெல்லடிக்கிறது வெளிய? சோறா? இந்த வட்டல்லயா வாங்கிக்கறே? இரு நான் போயி வாங்கியாறேன்” என அம்மா பேசிக் கொண்டே சாப்பாடு வாங்கி வந்தாள்.
இவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். அம்மாவிற்கென்று இவன் இதுவரை எதுவும் செய்யவில்லை. இனிமேலும் செய்யாமலேயே செத்து விடுவோமோ என்ற பயமும் மனதில் இருந்தது. அம்மா கையோடு கொண்டு வந்திருந்த தூக்குப் போசியை எடுத்து “கறி சமைச்சு கொண்டாந்திருக்கேன். எந்திரிச்சு ரெண்டு வாயி சாப்டுட்டு உட்கார்ந்துக்கோ. தண்ணியவே கொடத்துல காணோமே.. இரு நான் போயி தண்ணி புடிச்சாறேன். பின்னாடி பைப்பு இருக்குதாமா.. ராமசாமி வந்து சொன்னான் ஊட்டுல.” பேசியபடி கொடத்தை எடுத்துக் கொண்டு சென்று தண்ணீர் பிடித்து வந்தாள்.
“நல்லா பைப்பு கிட்டயே தண்னி வாத்துக்கலாம்.. வசதி தான்” என்றாள்.
இவன் கையைக் காட்டி “ஊசி போட்டது வீங்கிருச்சும்மா. ஊசி தான் பயங்கரமா வலிக்குது” என்றான்.
“என்ன சாமி பண்ணுறது? எல்லாம் நல்லாவுற வரைக்கும் தான். உனக்காக நாங் குத்திக்க முடியுமா? சொல்லு பல்ல கடிச்சுட்டு இருந்துதான் ஆவணும்”
“இங்க நெறையா பேரு செத்துப் போயிர்றாங்கம்மா.. இந்த பெட்டுல கூட ஒருத்தன் செத்தானாமா. அப்பன் வேற ராத்திரியில வந்து என்னெ வாடாங்குறாரும்மா..”
“உங்கூட நான் இருக்கனும்னா ஊட்டுல தங்கச்சி தனியா இருப்பாளேடா. செத்துப் போனவனையெல்லாம் ஏன் நினைக்குறே? இன்னும் ஒரு வாரமாச்சும் பல்லைக் கடிச்சுட்டு இருந்துட்டு ஊட்டுக்கு வா. பாரு சனி ஞாயிறு அவளுக்கு லீவு. நாளான்னைக்கி அவளையும் கூட்டிட்டு வர்றேன்” என தட்டொன்றில் இவனுக்கு வந்த சாப்பாட்டைக் கொஞ்சம் போட்டு அதே குழம்பை ஊறிச் சாப்பிட்டுப் பார்த்தாள்.
“என்ன காரம் கொஞ்சம் கம்மி, உப்பு கொறச்சலு! முட்டகோஸ் பொறியல் வேற, வீட்டுச் சாப்பாடாட்டம் தான் இருக்குது” என்றாள்.
“சுடுகாட்டுல படுத்துட்டு இருக்காப்ல இருக்குதும்மா”
“அங்க வந்தீன்னா பசங்களோட சுத்தப் போவே நீயி. மறுபடி பீடி குடிப்பியே சாமி”
“இல்லம்மா, வெறும் மாத்திரைக, டானிக்கி மட்டும் தான். இங்க இருக்கிற மாதிரியே அங்கயும் இருந்துக்குவேன். காலைல 4 மாத்திரை. மத்தியானம் 2. ராத்திரிக்கு 3.”
“சரி நான் போயிட்டு நாளான்னிக்கி வர்றேன்” என அழ ஆரம்பித்து அழுதபடி நகர்ந்தாள். இவனுக்கு ம் உதடு பிதுங்கியது. கண்களில் நீ முட்டியது. இவன் சந்தோசமாய் ஓடிய கணங்களை நினைத்தான். இப்படியாகிப் போன வேதனை ஒருசேர அழுத்தியது. வெளிவந்து எட்டிப்பார்த்து விட்டு உள்ளே சென்று ஓவென வாய் விட்டு அழுதான் அம்மா போய் விட்ட தெம்பில். இரண்டு வராத இருமல் வந்தது. வயிற்றை எக்கி எக்கி இருமினான். கொஞ்ச நேர இருமலுக்குப் பிறகு துளி சளி வந்தது. அதை டப்பாவினுள் துப்பி விட்டு பயத்துடன் சளியைப் பார்த்தான். சளியில் ரத்தம் தென்படவில்லை.
நம்பிக்கை என்ற புள்ளி அவன் மனதில் எட்டிப் பார்த்தது. வெளி வந்து திண்ணையில் அமர்ந்து கொண்டு சாவகாசமாய் சாலையைக் கடந்து போகும் மயில் ஒன்றை பார்த்தபடி இருந்தான்.