கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 5,538 
 
 

யாருக்கு என்ன பிடிக்கும்கறதைக் கண்டுபிடிக்கறது இருக்கே அது பெரிய கலை!. அந்தக் காலத்துல எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க மாபிள்ளையைப் பெத்தவங்க மட்டும்தான் போவாங்க..! பார்த்துட்டு வந்த அப்பா அம்மாவுக்குப் புடிச்சிருந்தா அதை வைத்துக் குடும்பம் நடத்துறது அவன் தலை எழுத்து. இப்ப காலம் மாறீட்டது. வெகுவாகவே மாறீட்டது.

பொண்ணு பார்க்க மாப்பிள்ளை போறான். மாப்பிள்ளையும் பொண்ணும் தனியாப் பேசணும்கறா பேசீட்டு பிடிச்சிருகுங்கறா.. கல்யாணமாகி குடும்பமும் நடக்குது. காலத்துக்கு தக்கபடி மாறிக்கறது நல்லதுதான்.

அன்னக்கிளி படம் வெளியானபோது எல்லா எடத்துலயும் அது சாதிக்கலை. படத்தைத் தூக்கீட்டு, வேற படத்தை வெளியிட்டு, சில எடத்துல மறுபடியும் மீண்டும் மறு ரிலீசு பண்ணி அது சக்கைப் போடு போட்டது. ஆனால், காக்கா முட்டை படம் படு சூப்பர் டூப்பர் ஹிட்! கிளி ஆகாத சமூகத்துக்கு காக்கா ஆயிட்டுதே எப்படி?!! அப்பா அம்மா பார்த்தா அது கிளியா இருந்தாலும் விதி! தானே பேசிப் பார்த்தா காக்காவா இருந்தாலும் ஒரு ‘ கிர்ர்ருதான்!!’

இந்த பீடிகை எதுக்குன்னு கேக்கலாம். அதென்னமோ தெரியலை! ஆனந்தன் பேத்திக்கு காக்கானா அத்தனை பிரியம். தாலாட்டு பாடினாக்கூட,’ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் பாட்டுல காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்குக் கத்துக் குடுத்து யாருங்க?’ வரியை ஒன்ஸ்மோர் கேட்டுத்தான் தூங்குமாம்.

இப்படி அதுக்கு எல்லாத்துலயும் காக்கா வெறி. ஏன்னுதான் புரியலை! படம் போடறேனுட்டு முட்டை முட்டையா சுவரெல்லாம் கிறுக்கும். அந்தக் கிறுக்கல்களில் முட்டைதான் நமக்குத் தெரியும் ஆனால், அந்தக் குழந்தைக்கு காக்காதான் தெரியும். அந்த வட்ட முட்டைதான் அதுக்குக் காக்கா! காக்கா முட்டை போடறது போக , முட்டைல காக்கா போடறது குழந்தையின் கலை! . கலையை ரசிக்க கண் ஆயிரம் வேண்டும்.

ஒருநாள் குழந்தை நான் கதை சொல்றேன்னு சொல்லிச்சு!. சொல்லுன்னு சொல்லி, சொல்லச் சொல்லிக் கேட்டா…

“ஒரு காக்கா இருந்துச்சு… அது ‘டொம்முன்னு’ விழுந்துட்டுது!’ என்று சொல்ல,…

‘எங்கே?’ என்றார் அவர்.

‘கேப்புல என்று தரையைக் காட்டி கீழே!’ என்றது தன் மழலைக் குரலில்.

தொடர்ந்து,

‘அதை ‘பாப்பா தூக்கிவிட்டது!’ என்றது குழந்தை.

‘எந்த பாப்பா?’ என்று அவர் கேட்க.. தன்னைத் தொட்டுக் காட்டி தான்தான் தூக்கி விட்டு நிக்க வச்சதா சொன்னது!

கதை முடிஞ்சது..!! ‘சூப்பர் கதை’னு பாராட்டினார் ஆனந்தன்.

புரியலையா…???

பாரம்பரியமான காக்கை மாதிரி பாட்டியை ஏமாத்தி வடையை திருடலை குழந்தையின் காக்கா…! தானும் நரிகிட்ட ஏமாறலை! அது. கால மாற்றத்துக்குத் தக்கபடி, தான் தாலாட்டில் கற்றுக் கொண்ட மனித நேயத்தை நேர்மையை தன் கதைல வெளிப்படுத்தி பாரதியை வாழ்வித்தது! அது. காக்கா பிரியாணி சாப்பிடாமலேயே உன்னிக் கிருஷ்ணன் குரலை உலகுக்கு உணர்த்தியது!

கக்கா போனாக்கூட அதன் கவலை ‘நமக்கு வர்றா மாதிரி காக்காக்கும் கக்கா வருமான்னு சந்தேகம்’. பாரதி சொன்னானே ‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்!’ என்று அந்த அத்வைத பார்வை விசித்திர பார்வையாளர்கட்கு மட்டுமே வியாபிக்கின்ற ஒன்று.

சித்தன்ன வாசல் ஓவியமாய் சுவரில் வரையப்பட்ட குழந்தையின் ‘காக்கா’ முட்டைகளில் கவிஞன் பாரதியின் அத்வைதம் வாழ்கிறது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *