காகத்தின் குரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 4,095 
 
 

அந்தக் குரல் ஒரு கல்நாரை கிழிப்பதுபோல் ஈரமற்று என் காதை நனைத்து நிரப்புகிறது. பல்லூழி காலப் பசியை சுமந்து வந்த இரப்பு போல் அந்தக் குரலில் ஏக்கம். குரல் வந்த திசையைத் துழாவுகிறேன். ஒரு சொட்டு கருப்பு நீர்ப்புள்ளி என்னை நோக்கி விரைந்து வருகிறது.

நொடிப்பொழுது செலவில் அது காகமாய் சிறகசைத்து வானில் விரிகிறது. அதன் கூர்த்த அலகால் வரண்ட குரலெழுப்பி என்னைக் கொத்த வந்தது. திகைத்த நான் ஓட முயற்சித்தேன். அந்த நொடிப் பொழுது காலசாம்பலும் பல காகங்களாக பல்கிப் பெருகின. இருண்ட இரவு விழுந்து நொறுங்கி பலகோடி சில்லுகாளாய் பரந்து விரிந்து காகங்களாய் உயிர் பெற்று, உருபெற்று என்னைத் துரத்துவதாய் உணர்ந்தேன்.

எங்கு பார்த்தாலும் காகத்தின் காடு. மரத்தின் இலைகளும், காய்களும் சிறகு முளைத்து காகங்களாய் பிறப்பெடுக்கின்றன. நான் எங்கே ஓடுவது? அவைகளிடமிருந்து எப்படியேனும் தப்பித்துவிட வேண்டுமென வேக வேகமாக ஓடுகிறேன். மனம் பட பட வென்று அடிபட்டக் காகம்போல் துடிக்கிறது. என் இதயத் துடிப்புக் கூட காகம்போல் கரைகிறது.

அதன் கரகரத்தக் குரல் என் செவிப் புழையெங்கும் நிரம்பி வழிகிறது. ‘ஐயோ நான் என்ன செய்வது? அத்தனைக் காகங்களின் கண்களிலும் பசி. கொலைப்பசி. அந்தப் பசியின் முதிர் நெருப்பை அலகில் ஏந்தி வருகின்றன. சிக்கினால் நான் அவைகளுக்கு விருந்தாகி விடுவேன். திக்கெட்டும் பார்வை சுழல்கிறது. இவ்வளவு காகங்கள் எங்கிருந்து வந்தன?

இதயத்தைக் கையில் பிடித்துக் கொண்டு இன்னும் வேகமாக ஓடுகிறேன். எங்கெங்கோ ஓடியோடி ஒரு குகைக்குள் ஒளிந்து கொண்டேன். துடித்துக் கொண்டிருக்கும் இதயம் ஒரு குஞ்சு காகம்போல் கரைந்தது. நான் இதயத்தை இன்னும் அழுத்திப் பிடித்தப்படி குகையைப் பார்வையிடுகிறேன். உறைந்த யாமத்தைக் குடைந்ததுபோல் குகை.

குகைமுழுக்க காக்காய்ப் பொன்னாய் மின்னின. கண்ணிமைக்கும் நேரத்தில் அவை மின்னட்டம் பூச்சிகளாய் அசைந்தன. குகை மெல்ல அசைவதைப்போல இருந்தது. சீரான என் இதயத்துடிப்பு மீண்டும் காகமாய் கரைய ஆரம்பித்தன. இதயம் கரைவதைக் கேட்டு அந்தக் குகையே கரைவதைப்போல கேட்டன. பார்வையைக் கூர்தீட்டு குகையை உற்று நோக்குகிறேன்.

பாறையாலான அந்தக் குகையே காகங்களின் பெருங்கூட்டமாய் சிறகசைத்து என்னை நோக்கி நகர்கின்றன. குகை குறுகுகின்றது. எனக்கு கைகால்கள் உணர்விழந்து விட்டன. காகங்களின் குகைக்குள் நான் எப்படியும் அகப்பட்டுக் கொள்வேனோ? அவை என்மீது விழுந்து அமுக்கி விடுமோ? நான் இதிலிருந்து தப்புவதெப்படி? ஈ மீது சரிந்த மீன் அம்பாரம் போல அந்தக் காகமலை என்மீது பொலுபொலு வென சரிந்து விழுகிறது. “கா…கா..”’வானமெங்கு முட்டி மோதி அலைமோதும் குரல்கள். ‘‘அம்மா…அம்…” தொண்டைக்குள்ளேயே காற்றாய் உயிர் நீத்தது என் குரல். மூச்சு விட முடியாமல் நான் தவிக்கிறேன்.

“என்னங்க, எந்திரிங்க மணி ஏழாவுது.” நான் திடுக்கென்று எழுந்தே. மனைவி முகத்தை உற்றுக் கவனித்தாள். என் முகம் இருளடித்ததுபோல் உறைந்து கிடப்பதை உணர்ந்திருப்பாளோ? நான் நினைத்தப்படியே கேட்டாள். ‘‘என்னங்க… ஒருமாதிரியா இருக்கிய. தலை எதாவது வலிக்கிதா?” நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். அதற்குள் காகம் கரையும் சத்தம் கேட்டது.

காகம் எப்படி சரியா ஏழு, ஏழரைக்கு வந்து விடுகிறது. அதுவும் என் பார்வைக்குத் தவம் இருப்பதை போல. வெளியே நிற்கும் என் இரு சக்கர வண்டியில் வந்து இருந்துகொண்டு நான் அதைப் பார்க்குவரை கரைகிறது. நான் எழுந்ததும் சாளரத்தின் கம்பியில் வந்து உட்கார்ந்து கொண்டது. அது அப்படி நடந்து கொள்வது எனக்குள் காலங்காலமாக படிந்திருக்கும் உயிர்த் துடிப்பை மீட்டெடுத்து மக்கிப்போன என் உணர்வுகளின் வேர்கள் தோறும் குருத்துமுனை கண்விழிக்க வைக்கிறது.

எழுந்து முகத்தை கழுவிய பின் சாளரத்தைப் பார்த்தேன். காகத்தைக் காணவில்லை. காகம் உருகி சாளரக் கம்பியா மாறி விட்டதா? அல்லது நான் கண்டது பிரமையா? ‘‘இப்பஞ் சன்னல்ல காக்கா இருந்தில்ல?’மனைவியிடம் கேட்டேன். ‘‘இல்லையே…’’ என்றாள். நான் மறுபடி அவளிடம் எதுவும் கேட்கவில்லை. ‘இந்த மனுசனுக்கு கிறுக்கிப் புடிச்சிட்டோ…?’ என்று எண்ணுபவள் போல குழம்பியைத் தந்து விட்டு ஒரு எக்காளப் புன்னகையை இதழ்களுக்குள் புதைத்தப்படி நகர்ந்தாள்.

காகத்திற்கும் எனக்குமான உறவு நான் முறுக்குக்கடையில் வேலை செய்யும்போதே ஏற்பட்டடு விட்டது. முறுவி கருத்த முறுக்கு, காராபூந்தி, சேவு இவைகளை சேகரித்து குப்பை வாளியில் போடாமல் காகிதத்தில் பொட்டலம் கட்டி ஒரு மூலையில் வைத்துக் கொள்வேன்.

மறுநாள் கடையைப் பெறுக்கி சுத்தம் செய்து குப்பையை கொட்டக் கொண்டு போகும்போது அந்தப் பொட்டலத்தை கொண்டுபோய் குப்பைத் தொட்டியில் போடாமல் சற்றுத்தள்ளி வெம்பரப்பாய் கிடக்கும் இடத்தில் போடுவேன். ஒவ்வொரு நாளும் காலையில் குப்பைக்கொட்ட வரும்போது பத்து இருபது காகங்கள் ஒருமித்தக் குரலெழுப்பி என்னை வரவேற்கும்; ஆர்ப்பரிக்கும். அந்த வேளையில் என்னுள் மகிழ்ச்சி பீறிடும்.

காகங்கள் என்னைக் கண்டால் பயப்டுவதில்லை. அவைகளுக்கு என்னை இரண்டு வருடங்களாக நன்கு அடையாளம் தெரியும். என் கையிலிருந்தும்கூட காராபூந்தி வேவுகளை அலகால் எடுத்துக்கொள்ளும் அந்த அளவிற்கு ஒரு தாய்ப்பிள்ளை உறவு. கொஞ்சக் காலத்தி அந்தக் காகங்களின் கூட்டத்தி நானும் ஒரு காகமாய் மாறிப் போனேன்.

எண்ணெய்ச் சட்டியில் வேலை செய்யும் போது அவைகளுக்காகவே சிலநேரம் மாலை முறுவ விட்டு விடுவேன். முதலாளி திட்டினாலும் ஊமைக்கொட்டான் போல பொறுத்துக் கொள்வேன். காகங்கள் இரை உண்பதை பார்க்கப் பார்க்க எனக்குள் ஒரு இன்ப உணர்வு போதை போல ஏறும்.

அலகில் இரையை அடக்கியவாறு சிறகை விரித்து தன் குஞ்சுகளுக்குக் கொண்டு செல்லும்போது எனக்கு ஊரில் உள்ள அப்பா, அம்மாவின் நினைவுகள் கண்களை நனைக்கும். ஊரைப்போல பனங்காடோ, தென்னந்தோப்போ காடுகளோ இல்லாத இந்தப் பட்டணத்தில் எங்கே தன் கூடுகளைக் கட்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

நான் மிதிவண்டியில் கடை கடையாக முறுக்கு, சேவு, அதிரசம் போன்ற தின்பண்டங்களைக் கொண்டு போடப்போகும் போதுதான் காகங்கள் மின்சார கம்பத்தில் சாலையோரத்தில் நோஞ்சான் மோன்று நிற்கும் மரங்களின் அடர்த்தியற்ற கிளைகளில் அதன் கூடுகளப் பார்த்திருக்கிறேன். காகத்தின் குரல்களில் பயணித்து என் நினைவு கிராமத்திற்குச் செல்லும்.

ஐம்பது வீடுகளுக்கும் குறைவான எனது கிராமத்தில் மூன்று புறமும் புஞ்சைக் காடுகள். ஒரு புறம் ஆண்டுக்கு இரண்டு பூ விளைசலை தரும் குளம். எங்கு பார்த்தாலும் மரங்களின் கிளைகள் வானத்தைப் பறித்துவர போட்டிப்போடும். அதன் உச்சாணிக் கொம்புகளில் காகங்கள் தங்கள் கூடுகளைக் கட்டியிருக்கும்.

கூடுகளின் பணிந்தப் பகுதியில் வானத்தைக் குட்டிக் குட்டியாய் உருட்டிப் போட்டதுபோல அதனுள் காகங்களின் முட்டைகள் கிடக்கும். அவ்வளவு உயரத்திலும் ஏறி அதன் முட்டைகளை எடுத்து களிமண்ணில் பொதிந்து கூட்டாளிகளோடு சேர்ந்து சுட்டு… “என்ன, இன்னுமா காப்பிய குடிக்கல.” கன்னத்தில் இடித்தாள் மனைவி. எனது பார்வை சாளரத்தில் படர்ந்தது. அங்கு காகத்தைக் காணவில்லை.

குளியலறைக்குள் போய் பல் துலக்கி நாக்கு வழித்து, குளிக்க கண்ணை மூடிக்கொண்டு ஒரு குவளை தண்ணிரைத் தலையில் ஊற்றினேன். ‘‘கா..’’ என்று சத்தம் கேட்டது. குளியலறை சாளரத்தின் கண்ணாடியின் இடைவெளியை பெரித்தாக்கி வெளியே எட்டிப் பார்த்தேன். பார்வையில் எதுவும் தென்படவில்லை. அவசரமாக குளித்து முடித்து விட்டு வெளியே வந்து கண்ணாடியில் முகம் பார்தேன். தாடி காடாய் வளர்ந்து கீழ்நோக்கி வழிந்தது. நான் தாடி வளர்ப்பது இதுவே முதல் முறை. குரோனா சிறையிருப்பு முகத்தில் மயிரையும், மனதில் பயத்தையும், கவலையையும் பயிரிட்டுத் தொடர்கிறது.

இப்படி பஞ்சி மாதிரி தோசையத்தான் ஊரடங்கு தொடங்கி மூன்று நாள் கழித்து காக்காவுக்குப் போட்டேன். பட்டென்று ஒரு கவ்வு கவ்வியபடி ஓடிப்போய்விட்டது. மறுநாளும் அதே நேரத்திற்கு வந்து கரைந்தது. அதை நான் உற்று நோக்கினேன். என்னைப் புரிந்து கொண்டு மறுபடியும் கரைந்தது.

அலகை விரித்து தலையை சாய்த்து என்னை நோட்டமிட்டது. அதன் கண்கள் இளகிய தார்போல மின்னியது. பிளந்த அலகுக்குள்ளும் கருப்பே நிறைந்து கிடந்தது. ஒரு இடத்தில் கூட கருப்பைத் தவிர வேறு வண்ணம் இல்லை. கழுத்து சாய்மானத்தில் மட்டும் கருப்பு குறைவாய் தென்பட்டது.

ஒரு தட்டில் கால்பங்கு தோசையை துண்டு துண்டாகப் பிய்த்து போட்டு அது உட்கார்ந்திருக்கும் செம்பருத்திச் செடியின் கீழ் கொண்டு வைத்தேன். நான் வீட்டுக்குள் வரும்வரை அதிலிருந்தே கத்தியது. வீட்டுக்குள் வந்து திருப்பிப் பார்க்கும்போது அது தோசையை கவ்வி விழுங்குவதைப் பார்த்தேன். கழுத்தை சற்று மேல்நோக்கி நிமிர்த்தி தோசையை அது விழுங்கும்போது தகிக்கும் பசி அதன் உடல் முழுக்க தெரிந்தது.

தற்காப்புக்காக ஒருமுறை பார்வையை சுழலவிட்டு தோசையை கவ்வி விழுங்கியது. பக்கத்தில் நிற்கும் தென்னை மரத்திலிருந்து சிறு குரும்பல் விழுந்தது. திடுக்கிட்ட காகம் பட்டென்று காற்றாய் எழும்பி பக்கத்திலிருந்த இரு சக்கர வண்டியில் போய் அமர்ந்து கொண்டது. மீண்டும் என்னைப் பார்த்து கரைந்தது.

நான் கவனமுடன் பார்ப்பதை உணர்ந்த காகம் கிழே குதித்து கரைந்தது. ஒரு தாய் குழந்தையைப் பார்ப்பதுபோல ஆடாமல் அசையாமல் அதை இரசித்துக் கொண்டிருந்தேன். அதன் கழுத்து அசைவிலும், கள்ளப்பார்வை தெறிப்பிலும் எனது உணர்வுகள் மண்டியிட்டுக் கிடந்தன.

ஒரு கரகரத்தைக் குரலை பரிசாகத் தந்துவிட்டு அதன் கரும்பொன் சிறகை விரித்து வானத்தில் தாவி ஏறிச்சென்றது. சிந்திக்கிடக்கும் தோசைத் துணுக்குகளை பொறுக்கி தட்டில் போட்டு வீட்டுக்கு எடுத்து வந்தேன். ‘‘என்ன புதுசா காக்காவுக்கு எர வச்ச மாதிரி இருக்கு. வேல இல்லன்ன வுடனே தெனமும் இதுல எறங்கியாச்சோ? சொசைட்டியில தொந்தரவா இருக்குன்னு யாராவது கம்ப்ளைண்டு கொடுக்கப் போறாங்க பாத்துக்கிடுங்க”’என்றாள் கையில் இருக்கும் தட்டை வாங்கியபடி.

‘‘ஒரு காக்காவுக்கு எர வைக்கதுக்காவ யாராவது எதிப்பு தெரிவிப்பாங்களாக்கும்?’’ என்று நான் சொல்லி முடிக்கும் முன் ‘‘ஏஞ்சொல்ல மாட்டாவ.? கொஞ்ச நாளைக்கு முந்தி ‘டி’ விங்குல 34 நம்பர் வீட்ல நாய் வளத்ததுக்கு சொசைட்டி எதிர்ப்பு செஞ்சது தெரியாத ஒங்களுக்கு?’’

தெரியும்தான். அதற்கு ஒரு பொதுக்கூட்டம் போட்டு சொசைட்டியில் யாரும் நாய் வளர்க்கக் கூடது என்று முடிவெடுத்தார்கள். நாயால் விளையாடும் சிறார்களுக்கு இடையூறு, எந்த இடத்திலேயும் காலை தூக்கி சிறுநீர் கழித்துவிடும். கட்டிப்போட்டு வளர்த்தாலும் வேளை கெட்ட வேளையில் குரைத்துக் கூப்பாடு போடும்.

அவிழ்த்து விட்டதும் கொண்டாட்டத்தில் சொசைட்டி முழுவது சுற்றிவரும். சின்னக் குழந்தைகளை முகர்ந்து தள்ளி விட்டு விடும். அதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொல்லை தான். ஆனால் காகத்தால் என்ன தொல்லை?

இந்தக் குடியிருப்பில் நாங்கள் வீடு வாங்கி ஆறு மாதங்களே ஆகின்றன. இதற்கு முன்பு தாராவி யில்தான் குடியிருந்தோம். அங்கும் சின்ன வீடானாலும் சொந்த வீடுதான். தெரிந்தவர்கள், நண்பர் களென்று முப்பது ஆண்டுகள் தாராவியே சொந்த ஊராய், தாய்வீடாய் வாழ்ந்தோம். மகனும், மகளும் படித்து முடித்து வேலைக்குபோய் மனநிறைவான சம்பளம் வாங்கியதும் காய் கனியாவதைப்போல வறுமை வீட்டை விட்டு நகர்ந்தது.

உடனே மகளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் படலம் ஆரம்பமாது. ஆயிரம் மாப்பிள்ளை துப்பு வந்தும் மகளுக்கு திருமணம் கைகூட வில்லை. சாதகமும் பிற பொருந்தமும் ஒத்து போனாலும் பெண் தாராவியில் இருப்பதால் மாப்பிள்ளை வீட்டார் பேச்சுவார்தைகளை முறித்துக் கொள்கிறார்கள். தாராவியில் இருந்த வீட்டை விற்று போதாதற்கு வங்கியில் கடன் பெற்று நவி மும்பை வாசியில் வீடு வாங்கினோம்.

நான் ஓட்டுநராக வேலை செய்யும் தொழிற்சாலையும் ஐரோலியில் இருப்பதால் எனக்கும் போகுவரத்திற்கு தோதாக இருந்தது. குடியிருப்பில் நாற்பது வீடுகள் இருக்கின்றன. ஒரு தொகுப்பிற்கு பத்து வீடுகள். பத்து வீடுகளும் சுற்றியிருக்க நடுவில் கொஞ்சம் மரம், செடி, கொடிகளுடன் குட்டிக் காடுபோல ஒரு பூங்கா. அவரவர் தேவைக்கு செடிகளை நட்டு வளர்த்துக் கொள்ளலாம். நான் அதில் சோற்றுக் கற்றாழை, பிரண்டை, பப்பாளி, முருங்கையும் வளர்த்து வருகிறேன். காலையில் எழுந்ததும் அங்கிருக்கும் பசுமையான செடி கொடிகளைப் பார்த்ததும் மனம் பறந்து சென்று பச்சைக்கிளியாய் அதன் கிளைகளில் தாவி மகிழும்.

கொரானா செய்திகள் அலுப்புத்தட்டியது. சேனலை அவளுக்குப் பிடித்தமான பழைய படம், பக்திப் படம் என மாற்றி வைத்துக் கொண்டாள். அவளுக்கு பக்தி படமும், பட்டி மன்றமும் மிகவும் பிடித்தவை. வீட்டில் இருக்கும் போதெல்லாம் மனைவியின் ரசனைக்கு ஒத்துப்போவேன். மனைவி எடுத்துத் தந்த காய்கறிகள், வெங்காயம், மிளகாயையும் நறுக்கிக் கொடுத்தேன்.

இந்த மாதிரி ஒத்தாசை செய்யும் போது அவள் எவ்வளவு மனநிறைவு கொள்கிறாள் என்பதப் புரிந்து, வீட்டில் இருக்கும் நாளெல்லாம் இந்த மாதிரி சின்னச் சின்ன வேலைகளைச் செய்துகொடே இருப்பேன். இதில் எனக்கும் மன நிறைவு கிட்டும்.

நண்பகல் சாப்பாடு முடிந்ததும் படுத்துக்கிடந்து படம் பார்த்து அப்படியே தூங்கிப்போனேன். நான்கு மணிக்கு காகத்தின் சத்தம் கேட்டு விழித்தேன். படுக்கையை விட்டு எழும்பாமல் சாளரத்தைப் பார்த்தேன். காகம் தெரியவில்லை. குரல் மட்டும் கேட்டது.

நான் எழுந்து வெளியே எட்டிப்பார்த்தேன். என்னைப் பார்த்ததும் உணவு கிடைக்கும் என்று நம்பிக்கைத் தோன்றியதோ என்னவோ பப்பாளியில் இருந்து பட்டென பறந்து வீட்டு வாசல் முன் வந்து உட்கார்ந்து “கா…கா..” என கரைந்தது. கிண்ணியில் சோறு கொண்டு வெளியே போனதும் காகம் பறந்துபோய் தள்ளி உட்கார்ந்தது. வீட்டுக்குள் வந்து கதவை சாத்திக்கோண்டு சாளரத்தின் வழியாகப் பார்த்தேன். காகம் ஒருமுறை சோறெடுத்து ‘கபக்’கென விழுங்கியது. மறுமுறை சோறெடுக்காமல் தள்ளி போய் அமர்ந்து என்னைப் பார்த்து கரைந்தது.

“காக்காவுக்கு என்ன கொண்டு வச்சிங்க?” படுக்கையில் புரண்டபடி மனைவி கேட்டாள். ‘‘சோறு’’ என்றேன். ‘‘கொழம்பு எதுவும் ஊத்தி வெறசி வச்சியளா’’? என்றாள். ‘‘இல்லை.’’ என்றேன் ‘‘ஏங்க வெறுஞ்சோற எப்படித் திங்கும்? அது விக்கலாச் செய்யும். கொஞ்சம் கொழம்பு ஊத்தி வெறசி வைங்க.’’ என்றாள். நமக்கு இந்த அறிவு வராமல் போய்விட்டதே என நினைக்கும்போதே வேறு சிந்தனை வந்தது.

“யம்மா அன்பரசி அந்த டப்பாவில் இருக்கும் மிச்சரை எடுத்துட்டு வாம்மா.’’ என மகள் அன்பரசியிடம் மிச்சர் டப்பாவை கேட்டேன். அவள் தந்ததை கொண்டு வைத்து விட்டு சோற்றுக் கிண்ணியை எடுத்து வந்து விட்டேன். எந்தச் சத்தமும் இன்றி மிச்சமில்லாமல் தின்று முடித்தபின் ‘நன்றி’ என்பதைப்போல் இரண்டுமுறை கரைந்து விட்டு பறந்து சென்று விட்டது.

என்னுடன் கவனித்துக் கொண்டிருந்த அன்பரசி சொன்னாள் ‘யப்பா மும்பையிலயும், நவி மும்பையிலயும் எவ்வளவு எடத்துல புறாவுக்கும், காகத்திற்கும் சப்பத்தியும், சோளமும், கோதுமையும் எத்தனை இடங்கள்ல போடுவாங்கள்ல. இந்த லாக்டவுண் நேரத்துல அந்தப் பறவைகள்லாம் இரைக்கு என்ன செய்யும்? பாவமில்ல.

அப்படி எங்கயுமே எதுவும் கிடைக்காமதான் இது இங்க வருதா? இருக்கலாம் என்ன? மார்கெட் எல்லாம் அடைச்சிட்டாங்க. கடைகள், ஹோட்டல் எல்லாமே அடைச்சிட்டாங்க. இப்பம் இதுகளுக்கும் கஷ்டந்தான் இல்லையாப்பா?’’ என்றாள். அன்புடன் அவள் தலையை வருடிக்கொடுத்தேன். காகத்தின் இன்னொரு வடிவமோ இவள்?

வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் எனக்கு ஒரு புது நட்பு கிடைத்த மகிழ்ச்சி. வாயில்லா உயிரிகளுக்கு பசியாற்றுவதில் எத்தனை இன்பம் கிடைக்கிறது. காலையிலிருந்து மாலைவரை மகிழுந்து வண்டியில் அடை பட்ட ஓட்டுநர் வாழ்க்கை. செய்வதையே செய்துகொண்டிருக்கும் இயந்திர பிழைப்பு. மனைவி, மக்கள், நண்பர்களுடனோ கூட நேரத்தையும் காலத்தியும் செலவு செய்ய முடியாத நெருக்கடி வாழ்க்கை.

இப்படி ஒரு உறவை நாம் எப்படி தக்கவைத்துக் கொள்ள முடியும். கொரானாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். முறுக்குக் கடையில் வேலையை விட்டு ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்த முப்பது ஆண்டுகளுக்குப்பின் இப்பொழுதுதான் முதன்முதலாக ஒரு காகத்திற்கு மிச்சர் வைத்திருக்கிறேன். மரத்துபோன மனிதம் துளிர்விட்டு கிளைபரப்பி தோப்பானதாய் உணர்ந்தேன். எனக்குள் ஒரு குழந்தைத்தனம் மகிழ்ச்சி மழையில் குளித்துத் திளைக்கிறது.

ஒவ்வொரு நாளும் அதற்கு விதவிதமான இரை வைப்பேன். ஒரு நேரம் காரச்செவு. இன்னொரு நேரம் மாச்சிலை ஏழெட்டுத் துண்டுகளாக உடைத்துப் போடுவேன். மறுநேரம் சப்பாத்திகளைப் பிய்த்துப் போடுவேன். எதை வைத்தாலும் சுவையறிந்தே தின்கும். நான் வைப்பதிலே அதற்கு பிடித்தமானது மிச்சர்தான். மாச்சில்லை போட்டோமென்றால் இன்றிரண்டு எடுக்கும். மற்றவைளைக் கொத்தி கீழே தள்ளிவிடும்.

அதுவும் அலகால் எடுத்து அறவே பிடிக்கவில்லை எனபதை கரைந்தும் செய்கையாலும் உணர்த்தும். மிச்சர் வைத்தால் மட்டும் சத்தம் காட்டாமல் தின்று விட்டு அலகை சுத்தம் செய்வதுபோல அப்படியும், இப்படியும் தேய்த்தபின் தன் கருஞ்சிறகை விரித்து காற்றிலேறிப் போய்விடு.

இந்த பத்து நாட்களுக்குள் எனக்கும் காகத்துக்குமான நட்பு தாய்க்கும் சேய்க்குமான உறவாய் வலுகொண்டது. என்னை அதுவும், அதை நானும் சந்திக்க ஏங்க ஆரம்பித்தோம். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை வர ஆரம்பித்தது. வீட்டில் இருக்கும் மிச்சர் தீர்ந்து போனது. ‘ஆன்லைனில்’ வரவழைத்து அதற்குப் போட்டுக்கொண்டிருந்தேன்.

நாம் எவ்வளவுதான் மிச்சரும், தோசையும், இட்லியும் போட்டாலும் அது வெளியே போய் அசைவத்தை மூக்கு முட்ட பிடித்து விட்டுதான் வருகிறதென்பதை இன்றைக்கு மதியம் மூன்று மணிக்கு “கா..கா..” என்று அழைக்கும் போதுதான் பார்த்தேன், அது காலில் ஒரு எலும்புத்துண்டைப் பிடித்திருந்ததை. இப்பொழுதுதான் என் மனைவி சொன்னதை நினைத்துப் பார்த்தேன்.

இதனால் குடியிருப்பில் இருந்து எதாவது சிக்கல் கிளம்பலாம் என்று. அது சாப்பிட்டு சிந்திப்போட்டதை எல்லாம் எடுத்து சுத்தப் படுத்தி விடுகிறேன். இந்த மாதிரி எலும்பைக் கொண்டு வந்து போட்டால் என்ன செய்வது? நமக்குத் தெரிந்தால் கூட எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். நான் ஒன்றும் சைவப் பழம் கிடையாது. தெரியாமல் வேறு யார் வீட்டு வாசலிலாவது போட்டுவிட்டால்?

மறுநாள் காலை சாப்பிட தட்டின் முன்னால் தான் அமர்ந்தேன் அதற்குள் காவலாளி வந்து ‘‘வெளியே குடியிருப்பின் செயலாளரும், தலைவரும் நிற்கிறார்கள் நீங்கள் வெளியே வரவேண்டுமாம்.’’ என்றான். நான் சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு எழும்பி வெளியே போனேன். அங்கே நான்கைந்துபேர் நின்று கொண்டிருந்தார்கள். அனைவர் முகத்திலும் முகக்கூடு. அவர்களுக்கு முன்னால் ஒரு செத்த எலி இரண்டு துண்டாகி வடக்கும் தெக்குமாக கிடக்கிறது. இரண்டு துண்டுக்கும் நடுவில் அதன் குடல் கயிறுபோல் நீண்டு கிடந்தது. அதை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

“என்ன சார் நீங்க காக்காவுக்கு இரண்டு வாரமா இரை வைக்கிறீங்களாம். அந்தக் காக்காதான் இந்த எலியை எங்கிருந்தோ எடுத்து வந்து இவங்க வீட்டு முன்னால போட்டு கொத்திக் கொண்டிருந் திருக்கிறது. இது இந்த வீட்டுக்காரங்களுக்கு தொந்தரவுதான?” என்றார்கள். பண்படங்கிய குரலில்.

அந்த வீட்டுக்கு உரியவர்கள் கொஞ்சம் பக்தி மயமானவர்கள்தான். எந்நாளும் காலை எழுந்து தலைவாசல் கழுவி கோலம் போடுவதும், இரவானால் வாசலில் விளக்கேற்றுவதும் காலையும் மாலையும் மணியடித்து, சங்கூதி பூசை செய்வதும் தவறாமல் நடக்கும் பிறவிச் செயல். குடும்பத் தலைவர் ஒருநேரமும், குடும்பத்த தலைவி ஒருநேரமும் பூசை செய்வார்கள்.

வீட்டின் ஒருபக்கச் சுவரே தெரியாத அளவுக்கு முழுக்க சாமி படங்களாக நிறைந்து கிடக்கும். முப்பத்து முக்கோடி தேவர்கள் படமும் இங்கே மாட்டியிருக்கும் போல. நான் கூட நினைப்பதுண்டு ‘பக்தி முத்தினால் பைத்தியம் என்பார்களே அது இதுதானோ’ என்று. அந்த செத்த எலிகூட அவர்கள் போட்ட மாக்கோலத்தின் மீதே அலங்கோலமாய் கிடந்தது.

நான் அமைதியாக நிற்பதைப் பார்த்து அவர்களே பேசினார்கள். ‘‘இந்த ஊரடங்கு நேரத்தி நாம் துப்புரவுத் தொழிலாளியையும் சொசைட்டிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக் கிறோம். இல்லை என்றால் கூட அவன் வந்து சுத்தம் செய்து விடுவான். இப்பம் இதை யார் எடுப்பது? என ஒருவர் மாற்றி ஒருவர் பேசினார்கள்.

இப்படி ஒரு சிக்கல் வருமென்று நான் நினைக்கவில்லை. “நான் அந்த எலியை எடுத்துப்போட செலவாகும் பணத்தைத் தந்து விடுகிறேன். நீங்கள் யாரையாவது ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். “இல்லை வேலு சார். நீங்க பணம் தர வேண்டாம். நாங்கள் அதைப் பார்த்துக் கொள்வோம். நீங்கள் இன்றையிலிருந்து காகத்திற்கு இரையெதுவும் வைக்காதீர்கள்” என்று கூறி விட்டு கலைந்து சென்று விட்டனர்.

வீட்டு வாசலிலிருந்து பார்த்தபடி நின்ற மனைவி நான் வீட்டுக்குள் நுழையவும் ‘‘நாந்தான் அண்ணைக்கே சொன்னல்லா. கேட்டாத்தானெ. இனிம காக்காவுக்கும் ஒங்களுக்குமான காதல மறந்துடுங்க.’’ என்றாள்.

வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது காகம் வந்து கரைந்தது. கவனிக்காமல் சாப்பிட்டு முடித்தேன். அது கரைந்து கொண்டே இருந்தது. மேலும் மேலும் கரைந்ததைக் கேட்டதும் என் மனமெங்கும் காகத்தின் குரலே நிறைந்து விம்மியது. மனம் தாளாமல் அதை எட்டிப் பார்த்தேன். அது உரிமையோடு கேட்பதைப் போல இருந்தது.

என் பார்வை அதன் கண்களை சந்தித்ததும் அதில் தெரிந்த இரக்கத்தை அறிந்து சாளரத்தின் கம்பியியைப் பற்றி அமர்ந்து ‘வீட்டுக்குள் வரவா’ என்று கேட்பதைப் போல இருந்தது. நான் என் மனதை கருங்கல்லாக்க முயன்று கொண்டிருந்தேன். அது கரைந்து கரைந்து பனிக்கட்டியாக உருகச் செய்தது. இந்தப் போராட்டங்கள் கொஞ்சநேரம் எங்களுக்குள் நடந்தன. என் கல்நெஞ்சை கரைக்கமுடியாமல் அது பறந்து போய்விட்டது.

மதியம் மூன்று மணிக்கு மறுபடியும் வந்து கரைந்தது. படுக்கைக்கையில் விழித்திருந்து கேட்டபடி கிடந்தேன். என் முகம் காணது தொடர்ந்து கரைந்தது. எழுந்து உள்ளறைக்குள் போய்விட்டேன். அது என்ன நினைத்ததோ தெரியவில்லை. தன் குரலை சற்று மாற்றி இரக்கம் ததும்ப ஒரு குழந்தையைப் போல அழைக்க ஆரம்பித்தது.

நான் என் இயலாமையை நினைத்து மனதுக்குள் மருண்டேன். அதன் முகத்தில் விழிக்கவே தெம்பில்லை. இந்தக் குறுகிய காலத்தில் எங்கள் உறவு ஏன் அறுபட்டது? என் குழந்தையைப் போல கரையும் அதையேன் தவிக்க விடுகிறேன். மனம் கனக்க கண்களில் நீர் கசிந்தது.

ஒருகிழமை கடந்து விட்டது. இன்னும் அந்தக் காகம் வந்து கரைந்து விட்டே செல்கிறது. நம்பிக்கையோடு வந்து கரைந்து விட்டு ஏமாற்றத்தோடு செல்கிறது. கண்களை மூடும்போதெல்லாம் அந்தக் காகத்தின் குரல் என்னைத் தூங்கவிடாமல் கல்லெறிவதைபோல உணர்கிறேன்.

நன்றி: கீற்று இணையதளம் (08.09.2020)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *