கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 16,438 
 
 

ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்? நாளை அவனுக்கென்று ஒருத்தி வந்தால், அவள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், விழிக்கக் கூடாது பாருங்கள். அதற்கு முன்னதாகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்… முடிவு செய்தான் ரமேஷ். இன்று, அம்மாவிடம் கேட்டே விடுவதென்று. அதற்காகவே, இன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டிலேயே இருந்தான். அப்பா வெளியில் போகும்வரை பொறுமை காத்தான்.

“”ஏம்பா ரமேஷ்… இன்னிக்கு ஆபீஸ் போகலையா?” பார்வதியின் கேள்விக்கு பதிலே சொல்லாமல், காதிலேயே அதை வாங்காதவன் போல், தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான்.

கவுரவக் கொலை

“”நான் கேட்டுட்டேயிருக்கேன்… ஏம்ப்பா பதிலே சொல்லாம போயிட்டு இருக்கே?” என்று, அவன் பின்னால் சென்ற பார்வதி, அவனுக்கருகில் கட்டிலில் அமர்ந்து, “”என்னாச்சு ரமேஷ்… உடம்புக்கு ஏதாவது சரியில்லையா… ஏதாவது பேசேம்பா,” என்றாள், வாஞ்சையுடன்.
ஒரு வார்த்தை கூட பேசாமல், அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். துடித்துப் போனாள் பார்வதி.

தன் செல்ல மகன், ஒரு நாளும் இப்படி இருந்ததில்லையே… என்னாச்சோ? என்ற பதற்றத்துடன், “”காலையிலேர்ந்து சாப்பிடக் கூட இல்லையே… இப்படி பேசாமலேயிருந்தா என்னப்பா அர்த்தம்? ஏம்ப்பா என்னை இப்படி கொல்றே?” என்று, கெஞ்சும் குரலில் கேட்டாள் பார்வதி.
அவளது கண்கள் பனித்திருந்தன.

இப்போது, தன் தாயின் முகத்தை தீர்க்கமாகப் பார்த்த ரமேஷ் கேட்டான்.

“”ஏம்மா… ஒரு அஞ்சு நிமிஷம் நான் பேசாததுக்கே இப்படி துடிச்சுப் போறியே… இருபத்தைஞ்சு வருஷமா, பேசாமலேயே அப்பாவைக் கொன்னுக்கிட்டிருக்கியே… அவர் எப்படியெல்லாம் துடிச்சிருப்பார்? உன்னாலதான் அவர் இப்படி குடிச்சு குடிச்சு, தன்னையே அழிச்சிக்கிறார்ன்னு ஊரே சொல்லுதும்மா. அப்படி என்னதாம்மா பிரச்னை உங்களுக்குள்ள? என்ன பாவம் செஞ்சுட்டார்ன்னு, அவருக்கு இப்படி ஒரு தண்டனை…

“”இதில, உன்னோட சந்தோஷமும் தானேம்மா பாழாப் போச்சு. என்னை பொறுத்தவரைக்கும், நீ எனக்கு எந்த குறையும் வைக்கலை. நல்ல, அன்பான தாயாத்தான் நடந்திட்டிருக்கே. ஆனா, ஒரு பர்சன்ட் கூட, அப்பாவுக்கு நல்ல ஒரு மனைவியா நடந்துக்கிட்ட மாதிரி தெரியலையேமா?

“”ஏம்மா அது? எனக்கு கேட்க கூசுதும்மா… இருந்தாலும் கேட்கிறேன். ஏம்மா… உண்மையிலேயே நல்லவிதமா தாம்பத்தியம் நடத்தித்தான் என்னைப் பெத்தீங்களா?”

“இந்த கேள்வியின் உக்கிரம் தாங்காமல், என்னவிதமான அதிர்ச்சியை வெளியிடுவாளோ?’ என, தன் தாயின் முகத்தைப் பார்த்தான் ரமேஷ்.

அங்கே எந்த சலனமோ, அதிர்ச்சியோ கொஞ்சமும் இல்லை. மாறாக, ஒரு வறண்ட புன்முறுவல் இழையோடியிருந்தது பார்வதியின் முகத்தில்! அவள் சொன்ன பதிலில் தான், அவனுக்கான பேரதிர்ச்சி காத்திருந்தது.

“”நீ, ஒரு நாள் இப்படிக் கேட்பேன்னு எதிர்பார்த்தேன் ரமேஷ். சரியான நேரத்தில்தான் கேட்டிருக்கே. அவர் உன்னோட அப்பாவே கிடையாது ரமேஷ். ஆமாம்பா, நீ அவருக்குப் பிறந்தவன் இல்லை,” என்றாள் பார்வதி, நிதானமாக.

இதை கேட்டு பேரவஸ்தைக்குள்ளான ரமேஷ், மறுகேள்வி கேட்கும் முன், பார்வதியே தொடர்ந்தாள்…

“”இதை கேட்ட உடனே அதிர்ச்சியாகிட்டியா ரமேஷ். இத்தனை வருஷமா நான் நெஞ்சில் நஞ்சையும், வயித்தில் நெருப்பையும் சுமந்து உயிர்வாழ்ந்திட்டு இருக்கேன்கிறது தெரியுமாப்பா உனக்கு?

“”என்னடா நம்ம அம்மா ஒரு நடத்தை கெட்டவளான்னு நினைச்சுப் பார்க்க கூசுதில்ல உனக்கு? இல்லப்பா… இன்னிக்கும், உங்கம்மா சுத்தமான பத்தினிதாம்ப்பா. ஒருத்தனுக்குத்தான் முந்தி விரிச்சேன். இந்த மனசையும், உடம்பையும் ஒருத்தனோடத்தான் பகிர்ந்துகிட்டேன். உண்மையான காதலுக்கும், புனிதமான தாம்பத்தியத்துக்கும் சாட்சியா உருவானவன்தான்பா நீ.”

இன்னும் குழப்பமான, மனதுடன் பார்வதியின் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பின், முப்பது வருடங்கள் பின்னோக்கி, தன் ஞாபகங்களைச் செலுத்திய பார்வதி, தன் மகனுக்கு விளக்கத் துவங்கினாள்…

பேராவூரணி —

மதுரை மாவட்டத்தின், தென் மேற்கில் அமைந்த ஒரு விவசாயக் கிராமம். அந்த ஊரிலேயே பெரிய குடும்பம், ஊரின் எந்தவொரு நல்லது, கெட்டதுக்கும் முன்னே நிற்கும் குடும்பம். அவ்வூரின் பெருவாரியான நிலபுலன்கள் அவர்களுடையது தான்.

பெரியகருப்பன் என்றால், அறியாதவர் யாருமில்லை. அங்கே, அந்த குடும்பத்தின் ஒரே வாரிசு. செல்லக் கண்மணியாகப் பிறந்தவள் தான் பார்வதி!

“”விவரம் தெரிஞ்ச நாள்முதலா, என் வீட்டில் என்னோட எந்த ஆசைக்கும், மறுபேச்சே கிடையாது. உடனடியா நிறைவேத்திடுவர். நல்லா படிக்கவும் வச்சாங்க. நானும், நல்லாவே படிச்சேன். பிளஸ் 2 படிச்சு முடிச்ச உடனே, “கல்யாணம் பண்ணிக்கிறியா, மேல படிக்கப் போறியாடா?’ன்னு கேட்டார் என் அப்பா.

“”நானும், “மேலே படிக்கிறேம்ப்பா’ன்னிட்டு, மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் காலேஜ்ல போய் சேர்ந்தேன். “பொட்டப்புள்ள இன்ஜினியராகி என்னத்த பெரிசா செஞ்சிடப் போறா?’ன்னு ஊரும், உறவும் கேலி பேசினதையெல்லாம் காதில வாங்காம, “நீ படிடா செல்லம்’ன்னு எங்கப்பா சொன்னப்ப, நான் அவரை நினைச்சு ரொம்பப் பெருமைப் பட்டேன். அவர்தான் எனக்கு அப்ப ஹீரோ.

“”அங்கே எனக்கு ரெண்டு வருஷம் சீனியரான முருகேசனை பார்த்து, பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவர், நம்மூர் காலனியைச் சேர்ந்தவர் தான். காலனிக்காரராயிருந்தாலும், அவங்கப்பாவும் அந்த சமூகத்திலே பெரிய மனுஷன்தான். சொத்து, பத்துன்னு ஓரளவுக்கு இருக்கப்பட்டவங்க தான்.

“”ஸ்கூல் டைம்லயே பார்த்திருக்கேன். ரொம்ப ஒழுக்கமானவர். ஸ்கூல்ல நடக்கிற எல்லா போட்டிகள்லேயும் கலந்துகிட்டு, பரிசுகளா வாங்குவார். படிப்புலயும் நல்ல ரேங்க்தான். அப்பல்லாம், பேசிப்பழக்கம் கிடையாது. நம்மூர் ஜாதிக்கட்டுப்பாடு, ஒரு காரணம்…

“”ஆனா, மதுரையில எல்லாருமே அந்நியமா இருந்தாங்களா, நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்த உடனே, நம்ம ஊர்க்காரர்ங்கிற உ<ணர்வுதான் மேலோங்கி நின்னுச்சே தவிர, ஜாதில்லாம் பெரிசா தெரியல. அந்த உணர்வே, எங்க ரெண்டு பேரையும் நெருங்கிப் பழக வச்சது. ""நெறைய விதத்தில், அவர் எனக்கு உதவியா இருந்திருக்கார். நெறைய விஷயங்கள்ல எங்களுக்குள்ள, "வேவ்லென்த்' ஒத்துப்போனதால், எங்க நட்பும் பலமாச்சு. இப்படி சாதாரணமா பழக ஆரம்பிச்சு, நல்ல நண்பர்களா இருந்த நாங்க, அவரோட பைனல் இயர் முடியப்போகும்போதுதான், எங்களுக்குள்ளிருந்த காதலை, ரெண்டுபேருமே உணர ஆரம்பிச்சோம்,'' அதைச் சொல்லும்போதே, இப்போதும் சிறிய வெட்கப்புன்னகை மலர்ந்தது பார்வதியின் முகத்தில். ஏதோ சுவாரஸ்யமான, சினிமாக் கதை கேட்பதுபோல, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் ரமேஷ். ""அதொன்னும் இந்த காலத்து விடலப் பசங்க காதல் மாதிரி, "கண்டதும் காதல்'ங்கிற மாதிரியோ, இனக்கவர்ச்சியோ கிடையாது ரமேஷ். "தெய்வீகமான காதல்'ன்னு சொன்னா, அது சினிமாத்தனமா இருக்கும். எப்ப என் மனசுக்குள்ளிருந்த காதலை உணர ஆரம்பிச்சேனோ, அப்பவே உட்கார்ந்து நிறைய யோசிச்சேன் ரமேஷ். ""நம்மாளுங்களோட ஜாதிவெறி தெரிஞ்சது தானே... இது சரியா வருமான்னு நிறைய யோசிச்சேன். ஆனாலும், எனக்கென்ன தைரியம்ன்னா... இதுவரைக்கும் என் விருப்பத்துக்கு, எந்த தடையும் போடாத அப்பா... பக்குவமா எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பார். என் மேல உள்ள பாசத்தால சம்மதிச்சிடுவார்ங்கிற ஒரு நம்பிக்கை... ""அதோட, நல்ல பர்சனாலிட்டி, படிப்பு, அறிவு, ஓரளவு வசதின்னு எல்லா விதத்திலும், என்னோட ஒத்துப்போறதால, நடுவுல இந்த ஜாதி மட்டும் பெரிசா தெரியாதுன்னு நினைச்சேன். அந்த தைரியத்திலதான், ஒருநாள் முருகேசனை சந்திச்சு, என்னோட காதலை சொன்னேன்... ""அவரும் அதே யோசனையிலதான் இருந்திருக்கார். ஆனா, ஊர் பொல்லாப்புக்காக பயந்தார். தன்னோட குடும்பத்தப் பத்திக்கூட அவர் கவலைப்படல. எனக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு ரொம்பக் கவலைப்பட்டார். அந்த அக்கறையே, அவர் மேலான என் காதலை இன்னும் அதிகமாக்கிடுச்சு. ""வாழ்ந்தா அவரோடதாங்கற எண்ணம், மனசில ஆழமாப் பதிஞ்சு போச்சு. அவருக்கும் அப்படித்தான். என் படிப்பு முடியற வரைக்கும், ரெண்டுபேரும் பொறுமை காத்தோம். எங்கப்பா என்னோட கல்யாணப் பேச்செடுத்தப்ப தான், மெல்ல எங்களோட காதல் விஷயத்தை அவர்கிட்ட சொல்ல ஆரம்பிச்சேன்... ""அவ்வளவுதான்... உடனே பங்காளிக, மாமன் மச்சானுங்கன்னு படையைத் திரட்டி, "அந்த காலனிக்காரங்க அத்தனை பேரையும் வெட்டிச் சாச்சிப்புட்டுத்தான் மறுவேலை'ன்னு கிளம்பிட்டார் அப்பா. அப்புறம், அவர் காலை பிடிச்சு கெஞ்சி, "நான்தான் ஆசைப்பட்டேன். அவரை ஒண்ணும் செஞ்சிடாதிங்க. நீங்க சொல்றதெல்லாம் கேட்கிறேன்'னு சொல்லி, தடுத்து நிறுத்தினேன். ""உடனே அடுத்த முகூர்த்தத்திலேயே, எனக்கும், தாய்மாமனுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. நாலெழுத்து படிக்கத் தெரியாத தற்குறி, கால் காசுக்கும் வழியில்லாத ஒரு குடிகார முரடன், என் தாய்மாமன். அதுக்கு மேல என்னால, ஒரு நிமிஷம் கூட, அங்கே இருக்க முடியாத சூழ்நிலை. ""அன்னிக்கு ராத்திரியே, நானும் முருகேசனும், ஊரைவிட்டு ஓடிட்டோம். நேரா திருப்பதி போயி, கல்யாணத்தை முடிச்சிட்டு, மேற்கொண்டு என்ன செய்றதுன்னு யோசிச்சோம். ""சென்னை மாதிரி பெரிய நகரங்கள்லதான், பொதுவா ஆளைவச்சுத் தேடுவாங்க. அதனால, நாங்க ஓசூர்ல ஒரு வீடெடுத்து தங்கி, அங்கேயே ஒரு கம்பெனில தற்காலிகமாக வேலையும் தேடிக்கிட்டோம். ""ரொம்ப ரொம்பச் சந்தோஷமா, வாழ்க்கையை, ஒவ்வொரு நொடியும் அன்பால அலங்கரிச்சு அழகு பார்த்தோம். என்னை ஒரு மகாராணி மாதிரி தலையில வச்சுக் கொண்டாடினார் அவர். ஹும்... முழுசா மூணுமாசங்கூட நீடிக்கலை அந்த சந்தோஷம்! ""எப்படியோ மோப்பம் புடிச்சு, எங்க அப்பாவோட ஆளுங்க அங்க வந்திட்டாங்க. "எப்ப கல்யாணமும் பண்ணி, குடும்பமும் நடத்த ஆரம்பிச்சிட்டீங்களோ... இனிமே உங்களைப் பிரிக்கிறதில அர்த்தமேயில்லை. நீங்க ஊரைவிட்டு ஓடிவந்தப்புறம், நாங்க ரெண்டு பக்கத்து ஜாதி ஜனமும் கலந்து பேசி, ஒரு முடிவு பண்ணிட்டோம். அதனால, பயப்படாம, எங்களோட கிளம்புங்க. நம்மூர்ல போயி, ஊரறிய உங்க கல்யாணத்தை நடத்தி, கண்குளிரப் பார்க்கணும்ன்னு நாங்க ஆசைப்படறோம்...'ன்னு நம்பும்படியாப் பேசி, மூளைச்சலவை செஞ்சு, எங்களை ஊருக்கே அழைச்சிட்டுப் போயிட்டாங்க. ""நாங்களும் முழுசா நம்பி, அங்க போயிட்டோம்ப்பா. ஆனா, அங்க நடந்த கொடுமையை இப்ப நினைச்சாலும் என் இதயமே வெடிச்சு, சுக்குநூறாயிடும் ரமேஷ்,'' என்று விம்மிய பார்வதி, தன் சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ""ஊர்ல போயி இறங்கின உடனே, அவரை ஒரு முச்சந்தி விளக்கு கம்பத்தில கட்டிப்போட்டு, ஆம்பள, பொம்பளன்னு அத்தனை பேரும் செருப்பாலயும், விளக்கமாத்தாலயும் முகத்திலே அடிச்சாங்க. அதோட, "ஈன ஜாதிப் பயலுக்கு, எங்க வீட்டுப் பொண்ணு கேட்குதாடா...'ன்னு கேட்டு, நரகலைக் கலக்கி, தலைவழிய ஊத்தினாங்கப்பா,'' என்ற பார்வதி, அடக்க முடியாமல் உடைந்து அழத் தொடங்கினாள். தன் கண்களைத் துடைத்து, பார்வதியையும் தேற்றினான் ரமேஷ். ஒரு கண நேர மவுனத்திற்குப் பின், மீண்டும் தொடர்ந்தாள் பார்வதி. ""என்னையும் விட்டு வைக்கலப்பா, அந்த வெறி பிடிச்சவங்க... என் முடியை அறுத்து, தாலியை அறுத்து, சித்திரவதை செஞ்சாங்க. அவங்க வெறி, அதோட அடங்கலை. எங்க ரெண்டு பேரையும், உயிரோட எரிச்சாத்தான், களங்கப்பட்ட அவங்களோட கவுரவத்தைக் காப்பாத்த முடியும்ன்னும், இனிமே ஊர்ல யாரும் இப்படி செய்யப் பயப்படுவாங்கன்னும் சொல்லிட்டே, பெட்ரோலை ஊத்தி எரிக்கத் தயாராயிட்டாங்கப்பா... ""நாங்க ரெண்டு பேரும், ஒண்ணாச் சேர்ந்து சாகிறதுக்குக் குடுத்து வச்சிருக்கணும். உயிர்மேல எங்களுக்கு எந்த ஆசையும் இல்ல. ஆனா, எந்த பாவமும் செய்யாத, இன்னொரு உயிர், ஏன் தளிர்லயே கருகிப் போகணும்... ஆமா ரமேஷ்... அப்போ நீ, என் வயித்தில ரெண்டு மாசம்,'' என்று சொல்லி, அவன் கன்னத்தை வருடிக் கொடுத்த பார்வதி, கண்ணீருடன் தொடர்ந்தாள். ""உன்னையும், உங்கப்பாவையும் காப்பாத்தறதுக்காக, நான் எதையும் செய்யத் துணிஞ்சேன். அந்த இடத்தில், வேறென்ன செய்ய முடியும்? எங்கப்பா காலில் விழுந்து, கெஞ்சினேன். "நீங்க என்ன சொன்னாலும் சம்மதிக்கிறேன். அவரை மட்டும் உயிரோட விட்டுருங்க...'ன்னு துடிச்சேன். ""அப்பவே, அங்கேயே என் தாய்மாமனை விட்டு, என் கழுத்தில் தாலிகட்டச் சொன்னாங்க. அதுக்கு நான் சம்மதிச்சா, அவரை உயிரோட விட்டிறதாச் சொன்னாங்க. இருதலைக் கொள்ளி எறும்பாத் துடிச்சுப் போயிட்டேன். ""பெரியவங்கதான் இப்படி ரத்தவெறி பிடிச்சு அலையிறாங்க, இந்த மனுஷனுக்காவது கொஞ்சம் மனசு இறங்காதான்னு, அந்த மனுஷனுக்கு மட்டும் உண்மையைச் சொன்னேன். "மாமா... அவரோட குழந்தை என் வயித்தில வளருது. இதுக்கப்புறமும் நீ என்னைக் கல்யாணம் செய்யப் போறியா?'ன்னு கேட்டேன். ""அதுக்கு அந்த காட்டான், "எது பத்தியும் எனக்குக் கவலையில்லை, எனக்கு எங்கக்கா குடும்பத்தோட கவுரவம்தான் முக்கியம்...'ன்னு சொல்லி, அப்பவே என் கழுத்தில் தாலியைக் கட்டிட்டான். ""மறுநாள் காலை, உங்கப்பா தூக்குப்போட்டு செத்திட்டதா தகவல் வந்தது. என்னோட உணர்வுகளும், மனசும் அப்பவே செத்துப் போச்சு. அவமானம் தாங்காம, அந்த மனுஷன் போயிட்டார்ன்னு தான் முதல்ல நினைச்சேன். ""ஆனா, எனக்கு தாலிகட்டின கையோட, ராவோட ராவா, என் மாமாவும், எங்கப்பாவும், ஆளுங்களோட போயி, அவரை அடிச்சுக் கொன்னு தொங்கவிட்டுட்டு வந்திட்டாங்கன்ற செய்தி, அப்புறமாத்தான் எனக்குத் தெரிய வந்திச்சு. ""அதோட, அவரோட அப்பா அம்மாவையும் மிரட்டி, "காதல் தோல்வியால எங்க மகன் தற்கொலை செய்துக்கிட்டான்னு' அவங்க வாயாலே சொல்லவச்சு, ஊர்வாயையும் அடச்சிட்டாங்க. அவரோட உடம்ப அடக்கம் செய்த உடனே, அவங்க ரெண்டு பேரும் அரளிவிதையைத் தின்னுட்டு, அவர் போன இடத்துக்கே போயிட்டாங்க... ""அநியாயமா, ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கிட்டு, சந்தோஷத்தில் எகத்தாளமிடுறாங்க இவங்க. அதுக்கு மேலயும், உயிரோட வாழ, நான் விரும்பல தான். ஆனா, எனக்குள்ளிருந்து ஒரு வைராக்கியத்தைத் தந்தது, நீ தான் ரமேஷ்! ""அன்னிக்கு ராத்திரியே அந்த மனுஷங்கிட்ட சொல்லிட்டேன். "அக்காவோட குடும்ப கவுரவத்துக்காக, இன்னொருத்தனோட எச்சின்னு கூடப் பார்க்காம, எனக்குத் தாலிகட்டி, உன்னோட தியாகத் தன்மையை நிரூபிச்சிட்ட இல்ல... அதேபோல, நீ ஒருத்தனுக்குப் பிறந்த, உண்மையான ஆம்பளைன்னா, இந்த எச்சப் பண்டத்தை தொடாத... ஏன்னா எனக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு. அதை நான் காப்பாத்தியாகணும்...'ன்னு தீர்க்கமா சொல்லிட்டேன். ""சொல்லு ரமேஷ்... இதில என்னோட தப்பு என்னப்பா இருக்கு... எல்லா விதத்திலயும் ஒத்துப்போயும் கூட, வெறும் வரட்டுக்கவுரவம்ங்கிற பேர்ல, அநியாயமா சித்திரவதை செய்து, ஒரு குடும்பத்தையே அழிச்சாங்களே ரமேஷ்... நான் வேற என்னப்பா செய்திருக்கணும்ன்னு நீ நினைக்கிற... சொல்லுப்பா... சொல்லு,'' என்று அவனை உலுக்கினாள் பார்வதி. அப்படியே, பார்வதியின் மடியில் விழுந்து கதறியழுதான் ரமேஷ். அவனை நிமிர்த்தி அமரவைத்த பார்வதி, ""அழாதப்பா... அழறதுக்கான நேரம் இல்ல இது. இப்பத்தான் நாம வைராக்கியமா, உறுதியா நிக்கணும். அம்மா சொல்றதைக் கேளுப்பா. இப்படி ஒரு குடும்பத்தையே அழிச்சு, ஒரே மகளோட வாழ்க்கையையும் பாழாக்கி, சொந்த மச்சினனோட வாழ்வையும் கெடுத்து, என்ன கவுரவத்தை காப்பாத்திட்டதா நினைக்கிறாங்க? ""காலமும், அனுபவமும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்ன்னு நினைச்சேன். ஆனா, இதுங்க மாறவேயில்லப்பா. அவங்க அன்னிக்கு செஞ்சது கவுரவக் கொலை இல்லப்பா. உன்னை ஆயுதமா வச்சு, நான் இப்ப செய்யப் போறது தான், உண்மையான, "கவுரவக் கொலை!' ""ஆமா ரமேஷ், தன்னந்தனியா ஒரு அபலைப் பெண்ணால, இந்த வெறிபிடிச்ச மிருகக் கூட்டத்தை எதிர்த்து என்ன செஞ்சிட முடியும்... அதான் உன்னை ஆயுதமா வளர்த்தெடுத்தேன். பனிரெண்டாயிரம் வருஷம் கடுந்தவமிருந்து, இந்திரன் வஜ்ஜிராயுதம் பெற்ற மாதிரி, இருபத்தஞ்சு வருஷமா தவமிருந்து, உன்னை ஆயுதமா வளர்த்திருக்கேன் ரமேஷ். ""பயப்படாதப்பா... உன்னை கொலைகாரனாக்கி, உன் வாழ்க்கையை பாழாக்கணுங்கிறது என்னோட எண்ணமில்லை. சக மனுஷ உயிரையே துச்சமா நினைச்சுப் பலியிடற இதுங்களோட அந்தக் கொலைவெறியை, அந்த வரட்டுக் கவுரவத்தை, முரட்டுப் பிடிவாதத்தை... இதையெல்லாம் தான், நான் இப்ப கொல்லப் போறேன். கத்தியில்லாம, ரத்தமில்லாம நடக்கப்போற அகிம்சைக் கொலை.'' எதுவும் புரியாமல், பார்வதியின் முகத்தையே பார்த்தான் ரமேஷ். ""இதப் பார் ரமேஷ்... நீ யாரோட வாரிசுங்கிறது எனக்கும், இந்தக் குடிகார மனுஷனுக்கும் மட்டும்தான் தெரியும். மத்தபடி, எங்கப்பா உட்பட அத்தனை ஜாதி ஜனங்களும், உன்னை அவங்களோட ரத்தத்தில் வந்ததா நினைச்சுத்தான், கொண்டாடிட்டு இருக்கிறாங்க. ""எந்தக் கீழ் ஜாதி குடும்பத்தை வேரோடு அழிச்சிட்டதா இவங்க கவுரவப் பட்டுக்கிறாங்களோ, அந்தக் குடும்பத்தோட வாரிசுதான் நீங்கிற செய்தியை, இந்த ஊரக்கூட்டிப் பகிரங்கமா போட்டு உடைக்கப் போறேன். அதோட, எந்தச் ஜாதியில் சம்பந்தம் பண்ணினா தங்களோட, "கவுரவம்' குறைஞ்சிரும்ன்னு நினைச்சாங்களோ, அந்த ஜாதியிலேர்ந்துதான், உனக்கு பெண்ணெடுக்கப் போறேன். ""இது ரெண்டுமே நாளைக்கே நடக்கணும். அதுக்கு முன்னாடி நீ நேரா மதுரைக்குப் போ. அங்க உன்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பா, காவல் துறையில, டி.ஐ.ஜி.,யா இருக்கார். அவரைப் பார்த்து பேசு. அவர் நம்மளோட பாதுகாப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார். இதுங்க என்ன வேணாலும் செய்யத் துணிஞ்சதுங்க. இதுங்களை பழிவாங்க இதைவிட, வேறு வழி இருக்கிறதா எனக்குத் தெரியலை ரமேஷ்,'' என்று முடித்தாள் பார்வதி. தாயின் வழி நின்று, தர்மவழியில், அகிம்சா முறையில் போலிக் கவுரவத்திற்கெதிரான ஒரு யுத்தத்திற்குத் தயாரானான் அந்த இளைஞன். - ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *