(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கூரை வீட்டுத் திண்ணையில் கிழவனார் இரும்புக் கையுரலில் வெற்றிலை பாக்கைப் போட்டு லொட் லொட்டென்று இடித்துக்கொண்டிருந்தார். பிந்திக் கிடைக்கப்போகும் வெற்றிலை இன்பத்தை முன்கூட்டி ரஹிப்பதுபோல் அவர் பொக்கை வாய் அசைந்துகொண்டிருந்தது.
மாட்டு மணிச் சத்தம் ஒன்று பக்கத்தில் கேட்டதும் இடிக்கும் வேலையை நிறுத்தி, இருப்பு உலக்கையை மெதுவாகத் தடவித் துடைத்துக் கீழே வைத்துவிட்டு, டது கையால் சாய்வாய்க் கண்ணை மறைத்துக்கொண்டு தெருவைப் பார்த்தார்.
பத்தடி தூரத்தில் இரண்டு எருதுகள் நின்று கொண்டிருந்தன. சந்தனப்பில்லை வர்ணம் ; ஒவ்வொன்றுக்கும் பிடிப்பிடிக் கொம்பு; நுனியில் பித்தளைக் கொப்பி மாட்டியிருந்தது. கிழவனாருக்கு அபிமான புத்திரரான சேர்வைகாரர் பக்கத்தில் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
கண்ணை மறைத்திருந்த இடது கையை எடுத்து, இரண்டு தரம் மீசையைக் கிழவனார் தடவினார். வலது கையால் திரும்பக் கண்ணை மறைத்துக்கொண்டு, கிழக் குரலை உயர்த்திச் சத்தம் போட்டார்.
“ஏலே! கவலைக்கு மாடு கண்டுபிடிச்சூட்டியாங்?”
‘ஏலே’ என்று குறிப்பிடப்பட்ட சேர்வைகாரருக்கு வயது முப்பத்தொன்பது. அவர் பிடித்துவந்த மாடு கிழவனாருக்கு அதிருப்தியாயிருக்கும் என்று நினைக்க இடமே இல்லை. ஏனென்றால் அவை நல்ல, நெஞ்சு கனமுள்ள கட்டை. எதிர்பார்த்ததற்கு விரோதமாகர் கிழவனார் உரத்துச் சத்தம் போட்டதும் சேர்வைகார ருக்குக் காதில் போட்டுக்கொண் டிருந்த திருகாணியை நெருடத் தோன்றிற்றே ஒழிய வேறொன்றும் பேசத் தோன்றவில்லை.
“ஏங்! கவலைக்கு இம்மாம் பெரிய மாடா வேணும் இன்னும் கடுக்காயாய்ப் பாக்கிறதுதானே !” என்று நையாண்டி செய்தார் கிழவனார்.
சேர்வைகாரருடன் வந்திருந்த மாட்டுத்தரகனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டது; ஆனால் அடக்கிக் கொண்டான்.
“மாட்டுக்கு என்னா?” என்றார் சேர்வைகாரர் மெதுவாக.
“மாட்டுக்கு என்னா? தெரியல்லியா? பரமசிவன் ரிஜபந்தான்.”
தரகன் அப்போதும் சும்மா இருந்தான்.
“சரி, அப்படீன்னா இப்போ என்ன செய்யணுங்கிறீங்க?” என்று சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளப் பார்த்தார் சேர்வைகாரர்.
கிழவனார் லேசுப்பட்டவரா? அவர் பங்குக்கு வாய் திறக்கவில்லை.
“கவலை அடிக்கிறதுதானே? வேலைக்குத் தோது இல்லாமெயா நான் மாடு பிடிச்சாருவேன்?” என்று சமாதானத்துக்கு அடிகோலினார் சேர்வைகாரர்.
கிழவனார் எந்த த நாளிலும் சமாதானத்துக்குப் பெயர் போனவர் அல்ல. இடித்த புளி மாதிரி உட்கார்ந்திருந்தார்.
“ஏதாவது சொல்லுங்க. மாட்டை ஒட்டிவிட்டூடறேன். இல்லாட்டீ…”
“இப்போ இவ்வளவு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசற ஆளுக்குப் புத்தி அப்பொ எங்கே போச்சு? இந்த ஊட்டுலே யாரு எஜமாண்டா? நானா நீயா? இந்த மாடு வேண்டாமின்னு நாலு நாளா அடிச்சுக் கிண்டேனே…” என்று கிழவனார் வெடித்துப் பேசினார்.
“நீங்க மாடு பிடிச்சான்னீங்களேன் னூட்டு”
“ஆமாங். மாடு பிடிச்சான்னூட்டுச் சொன்னேன். இந்த மாடு வேண்டாமின்னூட்டும் சொல்லல்லே?”
“கவலைக்கு இதே போல மாடு இந்த டில்லி எங்கேயும் கிடையாது. வேலை செய்யற தோதுக்குத் தகுந்தாப்பலே கொணாந்தேன்.”
கிழவனாருக்கு உண்மையிலே மாட்டைப்பற்றி அவ்வ ளவு ஆக்ஷேபம் இல்லை. மாட்டை முதல் முதல் சேர்வை காரரே போய்ப் பொறுக்கி வந்ததுதான் குற்றம். நாலைந்து ஜோடி மாடுகளைக் குறிப்பிட்டுவிட்டுக் கிழவனாரை எது பிடிக்கலாம் என்று கேட்டிருக்க வேண்டியது முறை. சேர்வைகாரர் முறை தவறியதன் பலன் இது! நல்ல மாட்டைவிட எஜமானத்துவம் என்னும் அதிகாரம் முக்கிய மல்லவா? அதை இழக்கக் கிழவனார் தயாராக இல்லை. அநாதையாகக் கிடந்த அக்கா பிள்ளையைக் கொணர்ந்து வளர்த்து ஆளாக்கி, வீடு விளங்க அவனுக்குப் பெண் ணெடுத்துப் பட்ட பாடெல்லாம் அடிவேரில் அரிவாள் வெட்டைப்போல் விழுந்தால் எப்படிச் சகிக்க முடியும்? கவலை அடிக்கிறானாம் கவலை! யார் அப்பன் வீட்டு நிலம்!
இந்த மாதிரியான நினைப்பிலே தத்தளித்துக் கொண்டே கிழவனார் பதில் சொன்னார்:
“இந்தா, நானும் எங்க நாளிலே கவலை அடிச்சிருக் கிறேன். எங்க ஐயா நிழல் என்மேலே பட்டதில்லே. அவர் பேச்சுக்குப் பதிலும் சொல்றதில்லே. இத்தினிக்கும் ஊசி குத்தற இடங்கூட அவர் சம்பாரிச்சுக் கொடுக்கல்லே.நீ கன்னி கெட்டமாதிரி…’
“அப்பொ மாட்டைத் திருப்பி ஒட்டிவிட்டுடட்டா?” என்று பணிந்தார் சேர்வைகாரர்.
“என்னைக் கேட்டா ஒட்டிக்கிட்டு வந்தே? எதை வேணாச் செய்!” என்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார் கிழவனார்.
மிகவும் தர்மசங்கடமான நிலைமை. சேர்வைகாரர் யோசித்தார். அன்றாவது கவலை போட்டுத் தண்ணீர் பாய்ச்சாவிட்டால் கனவில்கூட வயல் விளையும் என்று எண்ணவேண்டிய தில்லை. பயிர் காய்ந்து அவ்வளவு சருகாய்விட்டது. பிறகு வயலில் காலத்தில் பாடுபட வில்லை என்று கிழவனார் திண்ணையில் உட்கார்ந்து பாடு வார்! எது பொறுக்கக் கூடியது? வயலைக் கெடுக்கக்கூடா தென்று நினைத்து மாட்டைச் சேர்வைகாரர் வயல் பக்கம் ஒட்டிக்கொண்டு போனார்.
இரவு ஆறரை மணி இருக்கும். வயலிலிருந்து எருது களைச் சேர்வைகாரர் ஓட்டிக்கொண்டு வந்தார். தெருவிலே ஒரு மொட்டை வண்டி கிடந்தது. கிழவனார் அதில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் வெளியூர் ஆள் ஒருவன் நாற்றமடித்த சுருட்டு ஒன்றைப் பிடித்துக்கொண் டிருந் தான். வண்டியைப் பூட்ட வேண்டியதுதான் பாக்கி சேர்வைகாரர் மனைவி பெரு நடையாக ஒடி வந்துகொண் டிருந்தாள். சேர்வைகாரருக்கு விஷயம் விளங்காமல் இல்லை. இருந்தாலும் ஒதுங்கியே நின்றார்.
கிழவனாருக்கும் சேர்வைகாரர் மனைவிக்கும் எப்போதுமே நல்ல ராசி. ஏனென்றால் உலகத்தை ஆட்டி வைக்கும் வயிறு, இந்த இடத்தில் சேர்வைகாரர் மனைவியை எதிர்பார்த்துத்தான் நின்றது. ஆகவே சேர்வைகாரரைப் பற்றிக் கிழவர் எவ்வளவு முணுமுணுப்பாரோ அவ்வளவு அவர் மனைவியைப்பற்றிப் புகழ்வது வழக்கம். அவளுக்கும் கிழவனார் குணம் வீட்டுக்கு வந்த புதிதில் எளிதிலே பிடிபட்டுவிட்டது. எக்கச்சக்கமான சந்தர்ப்பங்களில் அவரை மடக்கும் தந்திரத்தையும் அவள் அறிந்து விட்டாள். மூக்கிலும் கண்ணிலும் பொக்கை வாயிலும் நெருப்புப் பொறி பறக்க, “அந்த வைக்கோலை இன்னும் ஏன் போர் போடவில்லை?” என்று அநாவசியமாகக் கிழவனார் சாட்டை வாங்கிக்கொண் டிருக்கும்போது, மிகவும் நயமாக வெல்லம் போட்டுப் பிசைந்த கம்புமா ஒரு தட்டைக் கொண்டுவந்து வைத்துவிடுவாள். தன் மனத்தை அவள் எப்படி அறிந்தாள் என்று வியந்து கொண்டே கிழவனார் கம்புமாவை அள்ளி வாயில் போட்டுக்கொள்வார். அதோடு வைக்கோல் காற்றிலே போய்விடும். ஆகையினால் அவளைக் கண்டால் வாலைக் குழைக்கும் நாய்போல் அவர் முகத்தில் அன்பும் அடக்கமும் தவழும்.
கிழவனார் மொட்டை வண்டியில் ஏறப்போவதைப் பார்த்து ஓடிவந்தாள். அவருடன் நேரே பேசவில்லை. ஆனால் சுருட்டுப் பிடித்துக்கொண் டிருந்தவனைப் பார்த்து, “ஏன் ஐயா! மாமாவை எங்கே கூட்டிப் போறே?’ என்றாள்.
”ஊருக்கு வரேன்னாரு.”
“ஏன் மாமா? ஊட்டுக்காரரோடே சண்டேன்னா உங்க ஊட்டை விட்டுப் போவானேன்?” என்று அவள் கிழவனார் பக்கம் திரும்பினாள்.
அவளைப் பார்த்ததுமே கிழவனாருக்கு நாடி தளர்ந்து விட்டது; அவள் கேள்வி காதில் பட்டதும் அவருடைய வேகம் குடத்தில் அடையும் பாம்பைப்போல ஒடுங்கிப் போயிற்று. நரைத்த மீசையைக் கீழ்ப்புறமாக இழுத்து விட்டுக்கொண்டே, “இல்லே, வண்டியை விலை பேசலா மின்னு யோசனை. எரு கிரு அடிக்கலாம். வண்டி உட்கார்ந்து ஓட்ட எப்படி இருக்குன்னு பாத்தேன்” என்று புளுகினார். அப்படிப் புளுகிக்கொண்டே வண்டியை விட்டுக் கிழவனார் கீழே இறங்கினார்.
அவர் இறங்கினாரே ஒழிய அவர் மனம் இறங்கவில்லை. தாம் ஆளாக்கிவிட்ட சேர்வைகாரருக்கு அவ்வளவு வல்லாண்மை இருக்கும்போது தாம் மட்டும் -புருவமயிர் முதற்கொண்டு நரைத்துப்போன பத்து ஏக்கர் நிலத்துக் காரர் மட்டும் – இளிச்சவாயனா? “அந்த மாட்டை மட்டும் அவன் விற்காமல் இருக்கட்டும். அந்தப் பெண்ணுக்காகக் கூடப் பார்க்கப்போவதில்லை” என்று வண்டியண்டை நின்றுகொண்டே கிழவனார் தமக்குத் தாமே பேசிக் கொண்டார்.
“வண்டிகிட்டே நிற்பானேன்? மாட்டைக் காலையிலே வித்தூட்டு மறு காரியம் பார்க்கச் சொல்றேன் – இந்தாலே அவருகூட வந்தூட்டாரு. நாளைக்கு விடியறத்துக்குள்ளார மாட்டை வித் தூடணும்,தெரியுதா?”
கிழவனார் தயங்கித் தயங்கித் திண்ணையில் வந்து உட்காரப் போனவர், ஏதோ சமாதானமாகாமல் அடுத்த வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தார்.
பக்கத்து வீட்டுக் கிழவனாருக்கு ‘லா பாயிண்டு’க் கவுண்டர் என்று பெயர். அந்தப் பக்கங்களிலே முடிச்சுப் போடுவதும் அவிழ்ப்பதுமே அவர் உத்தியோகம். இந்த உத்தியோகத்துக்குச் சம்பளமில்லையே ஒழியச் சம்பாத் தியம் உண்டு. அபூர்வமாக அடுத்த வீட்டுக் கிழவனார் தம் வீட்டுத் திண்ணைக்கு வந்ததும், ‘லா பாயிண்டு’க்கு நாக்கில் ஜலம் ஊறிற்று.
“அண்ணே, ஒரு யோசனை சொல்லு. நான் பண்ணினேனே உயிலு…”
“ஆமாங். அந்தச் சிங்கம்பட்டிச் சேர்வைகாரனுக்கு எளுத்திவச்சியே, அப்பவே எனக்கு யோசனை தான்.”
“அதை இப்பொ மாத்தணும். சட்டம் அதுக்கு என்னா சொல்லுது?”
“சட்டம் என்ன சொல்லுது? சரியாத்தான் சொல்லூது. எழுதி வச்சவனுக்கு உயிர் இருந்தால் உயில் செத்துக் கிடக்கும். எளுதிவச்சவன் செத்தால் உயில் எளுந்திருச்சூடும். அவ்வளவுதான்.”
கிழவனார் சமாதானமடைந்து சொந்த வீட்டுத் திண்ணையில் வந்து சாய்ந்துகொண்டார்.
சேர்வைகாரருக்குக் கிழவனார் குணம் தெரியாமல் இல்லை. உயிலைப்பற்றிய நினைப்பும் இல்லாமல் இல்லை.
ஆகையினால் மறுநாள் காலை தம் ஜமாக்களில் நாலு பேரை அழைத்து வந்தார். கிழவனார் திண்ணையில் வெற்றிலை இடித்துக்கொண் டிருந்தார்.
“எங்கே இருக்குது எருது?” என்று இரைந்தான் ஓர் ஆள்.
“மாட்டைப் பார்க்க வேணாம். நான் சொல்றேன். விலையைப் பேசுங்க” என்று கிழவனார் காது செவிடுபடும் படி சொன்னார் தரகுகாரர்.
“மாடு விக்கறதுன்னூட்டு எந்த மூளி சொன்னான்?” என்று சீறி விழுந்தார் கிழவனார்.
“சேர்வைகாரரு.”
“இந்த ஊட்டுலே யாரு எசமான்னு இன்னுமா உனக்குத் தெரியல்லே? தரகு வியாபாரம் செய்ய வந்தூட்டியே. அவன மாட்டை வாங்கறது? அனா மாட்டை விக்கறது? ரொம்ப மோசமாப் போச்சே!”
“நான் கண்டபடி” என்று கிழவனாருக்குத் தெரியா மல் கண்ணைச் சிமிட்டினார் தரகர்.
”மாடு விக்கறதில்லை; தெரிஞ்சுக்கிட்டீங்களா?”
“நீங்க நேத்துக் கோவிச்சுக்கிட்டீங்களேன்னுட்டு இவுங்களை அளைச்சாந்தேன். நீங்க எப்படிச் சொல்றீங் களோ அப்படி” என்று எரிகிற நெருப்பில் நெய்யை விட்டார் சேர்வைகாரர்.
“இந்த ஊட்டிலே நான்தான் எசமான்; தெரியுமா? நீ இல்லே. மாட்டை நான் விக்கறதில்லை” என்று கிழவனார் உரலில் ஓங்கி இடித்தார்.
ஏமாந்துபோனவர்களைப் போன்ற பாவனையுடன் தெருக்கோடிப் பிள்ளையார் கோயிலண்டை எல்லோரும் திரும்பிப் போய்விட்டார்கள். அப்போதுதான் சேர்வைகாரர் கையிலிருந்து தரகன் கைக்குப் பணம் மாறிற்று.
“இந்தத் தந்திரம் பண்ணாட்டி மாட்டை ஊட்டிலே கட்ட விடுவாரா கிழவனார்?” என்று தம்மையே புகழ்ந்து கொண்டார் சேர்வைகாரர்.
வீட்டுத் திண்ணையிலே வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தின்று கொண்டிருந்த கிழவனாருக்குப் பிள்ளையார் கோயிலில் நடப்பது தெரியப்போகிறதா?
“என்கிட்டே ஒம் புருசனை வாலாட்டச் சொல்லாதே, தெரியுதா?” என்று சேர்வைகாரர் மனைவியை வீறாப் போடு கிழவனார் எச்சரித்தார்.
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.