“ஏண்டீ வைஷ்ணவீ சோகமா இருக்கே…?” கேட்டாள் தோழி உரிமையுடன்.
வைஷ்ணவியின் கண்கள் கலங்கின.
“சொல்லுடீ..! பிரச்சனையைச் சொன்னாத்தானே தீர்க்கலாம்..?”.
“என் புருஷன் விக்னேஷ் கோபிச்சிக்கிட்டு எங்கேயோ போயிட்டாருடீ…?”- கண்ணீர் பெருகியது.
“கவலையை விடு..!” என்ற தோழி, அரும்பாடு பட்டு, துப்பறிந்து நேரில் சந்தித்து விக்னேஷைச் சமாதானப் படுத்தி மீண்டும் வைஷ்ணவியோடு சேர்த்து வைத்தாள்.
மறுநாள்…
விக்னேஷ் போர்டிகோ ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்தான்.
வீட்டினுள் சோகமே உருவெடுத்த நிலையில் வைஷ்ணவி.
“பிரிஞ்சி போன புருஷன்தான் திரும்பி வந்தாச்சே இப்ப என்னடீ சோகம்..?”.
“‘மீண்டும் சேரமுடியுமா’னு நேத்து கவலைப் பட்டேன்.! ஏதாவது பிரச்சனை வந்து மீண்டும் பிரியாம இருக்கணுமே’னு கவலையா இருக்குடி..!” என்றாள் வைஷ்ணவி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே.
– ஏப்ரல் 1-15 2022, கதிர்ஸ்