கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 5,889 
 
 

பெண் அலங்கார தேவதையாக சுமதி எதிரில் வந்து நிற்க….தலையைத் தூக்கிப் பார்த்த வெங்கடேசுக்குப் பேரதிர்ச்சி.

அரண்டு போனான். குப்பென்று வியர்த்தது.

ஒரு சில வினாடிகளில்….

“நீ போம்மா “பெற்றவர் சொல்ல அகன்றாள்.

“அ….அம்மா.. “அழைத்தான்.

“என்ன வெங்கிட்டு..”அருகில் அமர்ந்திருந்த மணிமேகலை கேட்டாள்.

“ஒ.. ஒரு விசயம்..”அவள் காதைக் கடித்து எழுந்தான்.

மகனின் குறிப்பை உணர்ந்த இவளும் எழுந்தாள். மகன் பின் நடந்தாள்.

வெங்கடேசு வாசலுக்கு வந்து… கொஞ்சம் மறைவாய் நின்றான். அருகில் வந்த தாயிடம்….

“இந்த பொண்ணு வேணாம்…! “மெல்ல சொன்னான்.

“ஏன்…?”

“வந்து… வந்து…”

“பெண் அழகா இருக்கா. படிச்சிருக்கா. சீர்வரிசையும் நிறைய்ச் செய்யிறதாய்ச் சொல்றாங்க..”

“அது இல்லேம்மா. இது வேற விஷயம்.”

“சொல்லு …”

“அதை உன்கிட்ட சொல்ல முடியாது.”

“சொல்லக்கூடாத செய்தியா..?”

“ம்ம் …”

“பொண்ணு தப்பானவளா..?”

“இல்லே..”

“யாரையாவது காதலிக்கிறாளா, பழக்கமா…?”

“அதுவும் இல்லே..”

“நீ இவளை எங்கேயாவது….?”

”ஐயோ அம்மா !”

“பின்னே என்ன விசயம். உண்மையைச் சொல்லு..?”

வாயைத் திறந்தான்.

வெங்கடேசு அப்போது கல்லுரிப் படிப்பில் கடைசி வருடம். கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரி திறப்பு. புது மாணவ மாணவியர் சேர்ப்பு, வருகை. அவர்களை பார்த்த பழைய மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி, உற்சாகம், கலாட்டா, கும்மாளம், கொண்டாட்டம். கல்லூரி வளாகமெங்கும் இந்த கோலாகலம்

இவனிடம் மாட்டியவள் சுமதி.

தனியாய் வந்தவளை தனியாய் நின்று கை நீட்டி மடக்கினான்.

“பேரென்ன..?”

சொன்னாள்.

“ஊரு..?”

அதையும் சொன்னாள்.

“எட்ட நிக்காம இடைவெளியைக் குறை…”

விழித்தாள்.

“கிட்ட வா..”

மாணவ, மாணவியர் நடமாட்டம். அங்கங்கு கொத்துக் கொத்தாய் அவர்கள் கும்பல்கள்.

தைரியப்பட்டாள். இரண்டடி முன் வந்தாள்.

“என் பின்னால வா…”நடந்தான்.

இது எதிர்பாராதது. அதனால் கொஞ்சம் திக்,திக். தொடர்ந்தாள்.

சிறு தொலைவில் நிற்கும் தன் நண்பர்கள் கூட்டம் நோக்கி நடந்தான்.

“யாரடா இது…”கோபால்.

“புச்சு!”

“பார்த்தாலேத் தெரியுது. என்ன பிரிவு…”

“நம்ம பிரிவுதான். !”

“அப்போ கச்சேரி தொடங்கலாமா..”

“தொடங்கலாம்.”

“சிட்டு ! என்ன சைசு..”

புரியாமல் பார்த்தாள்.

“பிரா..?”

முகம் கவிழ்ந்தாள்.

“சொல்லும்மா…?”

விடமாட்டார்கள் என்பது புரிந்தது.

“க..கருப்பு..”

“கருப்புதான் உனக்குப் புடிச்ச காலரா..? “இன்னொருத்தன்.

”எனக்குப் புடிச்ச கலர்டா,,”வேறொருத்தன்.

“ஜட்டி என்ன கலர்..?”

துணுக்குற்றாள்

“அட! என்னுது கேட்கல. உன்னுது…?”

முகம் சிவந்து அழுகை காட்டியது.

“ம்ம்….”கேட்டவன் உறுமினான்.

“மச்சான் ! அந்தக் கேள்வி வேணாம். அடுத்தது..கடைசி .”

“ஓ.கே..! பச்சி! நீ ஆம்பளைங்க பத்துப் பேர் சொல்லனும். அதுல எங்கள் பேர் வந்தால் அவனுக்கு நீ முத்தம் கொடுத்துட்டு ஓடிப்போயிடனும்…”

விழித்தாள். மிரண்டாள்.

“ம்ம்ம் ஆரம்பி ? “- மிரட்டல்.

சமாளித்துத் தப்பித்துக் கொள்ளலாம் ! – துணிவு வந்தது.

“கருப்பன்”

“மச்சான் ! பட்சி விவரம் !”

“முனியன் . ஆதிகேசவன்…”

“ஆதிகேசவன்னா அர்த்தம் என்ன..?”

“தெ…தெரியாது…”

“பழைய மயிரான்….!”

“மண்ணாங்கட்டி”

“இது பேர் இல்லே..”

“இருக்கு. விடுங்கடா…”

“மதுரை, பழனி, வெங்கடேசு..!”

“ஹே..! என் பேர்..”இவன் உற்சாகத் துள்ளல் துள்ளினான்.

சுமதி இதை எதிர்பார்க்கவே இல்லை.

“நான் சிவனேன்னு நிப்பேன். கன்னத்துல முத்தம் கொடுத்துட்டு ஓடிப்போயிடலாம்”

நின்றான்.

சொன்னது செய்துவிட்டு ஆளை விட்டால் போதுமென்று ஓடி விட்டாள்.

“இதான்ம்மா நடந்தது. அதுக்கப்புறம் எங்களுக்குப் பேச்சு, வார்த்தைகள் எதுவும் கிடையாது. “முடித்தான்.

‘ வயசு, கல்லூரி, ஆர்வக் கோளாறு….’ மணிமேகலைக்குப் புரிந்தது.

இவள்தான் என் மருமகள் ! “அழுத்தம்,திருத்தமாகச் சொன்னாள்.

“அம்மா…”அலறினான்.

“என் மருமகளுக்கு முதலிலேயே அச்சாரம் கொடுத்துட்டே. அதனால் உனக்குப் பிடிக்கலைன்னாலும் இவள்தான் என் மாட்டுப்பெண். “அடித்துச் சொன்னாள்.

குரங்கு ஆப்பு பிடுங்கியக் கதை ! – விழித்தான்.

“பொண்ணு பிடிக்கலையா..?”

“பிடிச்சிருக்கு. அவள் என்னை ஏத்துக்க மாட்டாள். பிடிக்கல… சொல்வாள். வேணாம் மறுப்பாள். நாம முந்தி சொல்லி மரியாதையா எழுந்து போயிடலாம்மா..”கெஞ்சினான்.

”பார்க்கலாம் ! “அதற்கு மேல் நிற்காமல் திரும்பினாள்.

வழி இல்லாமல் வெங்கடேசு கலவரமாய் வந்து தாய் அருகில் அமர்ந்தான்.

சுமதியின் பெற்றோர்கள் இவர்களைக் கலக்கமாய்ப் பார்த்தார்கள்.

“மாப்பிள்ளை என்ன சொல்றார்..? “சுமதி அப்பா கேட்டார்.

“பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா… சம்மதம் சொல்றார்..”மணிமேகலை சொன்னாள்.

“அவளுக்குப் பிடிச்சிருக்கு. சொல்லிட்டாள். இருந்தாலும் நீங்களும் ஒரு வார்த்தைக்கு கேளுங்க.”என்றார்.

“என்னம்மா..? “மணிமேகலை அவளை பார்க்க..

“பிடிச்சிருக்கு ! “சொன்னாள்.

வெங்கடேசு தன் காதுகளை நம்பமுடியாமல் அவளைப் பார்த்தான்.

சுமதி முகத்தில் புன்னகை.!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *