கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 8,586 
 
 

வண்டுகளும் ஓசை எழுப்பாத அர்த்த ஜாமத்தில், நிறைமாதக் கருவைச் சுமந்தபடி, உறங்காமல் விழித்துக் கிடந்தாள் முத்துமாயனின் மனைவி மூக்கம்மா. கருப்பசாமி கோயிலில் இருந்த மரங்கள் ஆடிக் காற்றில் சரசரத்து, ஒன்றோடொன்று உரசிக் கிளைகள் முறிந்தபோது அவளுக்கு வலி கண்டது.

தாமரைக் குளத்தின் மேட்டிலிருந்த வீட்டில் இவள் மட்டும் தனித்திருந்தாள். ஈரம் அப்பிய குளத்தங் கரையில், தவளைகள் கண்களில் பயத்தைத் தேக்கிவைத்துக் கத்தவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தன. சாரைக்காற்று செம்மண் சுவரைத் துளைத்து வீட்டுக்குள் இறங்கியது. மேல்கூரை பிய்த்துக்கொண்டு பறக்கத் தயாரானது.

பிரசவமானால் குழந்தையைத் துடைக்கக்கொள்ள ஆகுமென்று ஆத்தா கொடுத்தனுப்பிய கிழிந்த நூல் சேலையை எடுத்துப் போர்த்திக்கொண்டாள் மூக்கம்மா.

இப்போதைக்குப் போர்த்திக்கொள்வதற்கென்று அதுதான் இருந்தது. கையை அணைவாக வைத்து சிம்னி விளக்கைப் பிடித்துக்கொண்டு, கதவைத் திறந்தாள். முத்துமாயன் இன்னும் வரவில்லை.

வலி அதிகரிக்கத் தொடங்கியது. வயிற்றில் பிதுங்கிய வலி, தொண்டையை இறுக்கிப் பிடித்தது. காற்றில் அணைந்த சிம்னி விளக்கை வீட்டுக்குள் எடுத்துப் போனாள். தீப்பெட்டி தேடி, விளக்கைப் பற்றவைக்கும் நிலைமையில் அவள் இல்லை. இடுப்புக்குக் கீழே வலி பெருத்து, அவளை ஓலமிடச் செய்தது.

தசைகள் பிய்த்துக்கொண்டு வெளியே வரும் உணர்வில், மூச்சை இறுக்கிப் பிடித்துவிட்டதில், வயிற்றுக்குள் இருந்த உயிர் கீழிறங்கத் தொடங்கியது. வலி முழுவதையும் நெஞ்சுக்கூட்டில் ஏற்றி, வாய் வழியாக விட்டாள். கடக்கென்று ஒரு நொடியில் எல்லா வலியும் விலகிப்போனது. கரு உதிரம் உடலெங்கும் பிசுபிசுக்க, வெறுந் தரையில் விழுந்தது குழந்தை. நஞ்சுக் கொடியின் கனத்தைச் சுமந்திருந்த குழந்தையின் அழுகுரல், ஒரே ஸ்வரத்தில் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்த தவளைகளின் சத்தத்தையும் மீறி, சாரைக்காற்றில் கலந்து, முத்துமாயன் வரும் திசையில் எதிரொலித்து நின்றது.

முத்துமாயன் உயிர் வெறுக்க ஓடிவந்தான். என்ன செய்வதென்று அறியாமல் ஒரு நொடி திகைத்து நின்றவன், நடுங்கும் கைகளால் தொப்புள்கொடியை அறுத்தான். குழந்தையைத் தூக்கி, மூக்கம்மா போர்த்தியிருந்த நூல் சேலையை விரித்துக் கட்டிலில் போட்டான். மூக்கம்மா உதிரச் சொதசொதப்பில் அப்படியே கிடந்தாள்.

மூன்று நாளுக்குப் பின், மூக்கம்மாளைத் தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனாள் அவள் ஆத்தாள் ஒச்சாயி. தாமரைக் குளக்கரை ஓரமாக அவர்கள் நடந்து போவதையே பார்த்துக்கொண்டு இருந்தான் முத்துமாயன். தூக்கம் மறந்த கொக்கு ஒன்று, குளத்துக்கு மேலே பறந்து போனது.

தனிமையான இரவில் வீட்டை விட்டுக் கிளம்பி, வைக்கோலும் சண்டு நெல்லும் பரவிக்கிடந்த களத்துமேட்டில் கட்டிலைப் போட்டுப் படுத்தான். கண்களுக்கு எட்டும் தூரம் வரை நெல் பூத்த வெளி. அந்த நித்சலன அமைதியும், வாய் பேசா ஜீவராசிகளின் இரவுச் சத்தமும் அவனுக்குப் பெரும்பாரமாய், அவன் பால்யத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தன.

இரவு பகல் பாராது செம்புழுதி ஊரை நிரப்பியிருந்த காலத்தில் அப்பன், ஆத்தாள், அண்ணனோடு நாட்டாமங்குளத்தில் வசித்தான் முத்துமாயன். அந்த ஊரில் பஞ்சம் கடும் தொற்றுநோயாய் விரைந்து பரவி, வீடு தவறாமல் பசியாக மாறிக்கொண்டு இருந்தது. வீட்டுக்கு முன்னால் இருந்த கொடிக்காய் மரம் காய்ந்து சருகாய்த் தொங்கியது. சாமப்புல்லுகூட முளைக்காமல், காடு சாம்பல் பூத்துக்கிடந்தது. சூடான கஞ்சி குடித்த நாள்கள் அவர்களுக்கு நினைவில் இல்லை.

ஓடப்பட்டியைத் தாண்டி பாளம் பாளமாய் வெடித்துக்கிடக்கும் காட்டு வழியே தண்ணீர் தேடி அலைந்தாள் முத்துமாயனின் ஆத்தாள் சின்னத்தாய். கத்தாழைப் பழங்களைத் தின்று, வயிற்றை நிரப்ப முயன்றுகொண்டு இருந்தனர். முத்துமாயன் தின்னும்போது, பழத்தின் நடுவில் இருந்த முள் தொண்டையில் மாட்டி அறுவிக்கொண்டே இருந்தது. நாயைப் போலச் செருமி, தொண்டையில் அறுவிய முள்ளை வெளியேற்றப் பார்த்தான். அதுபசியைவிடக் கொடுமையாக இருந்தது.
பெண்களும் குழந்தைகளும் தூங்கிய பின், தூர தேசம் புறப்படுபவர்களைப் போல, வீட்டின் சனி மூலையைக் கும்பிட்டுவிட்டு, இடுப்பில் கத்தியோடு புறப்பட்டார்கள் ஆண்கள். ஊரே திருட்டின் தடம் தேடி அலைந்தது. ஆண்டிபட்டிக்குக் கிழக்கே பசுமையைத் தேடி நகர்ந்தது ஒரு கூட்டம். மழையின் சூட்சுமமும் திருட்டின் சூட்சுமமும் பிடிபடாத மக்கள் ஊரைக் காலி செய்துகொண்டு இருந்தனர்.

எதுவும் இல்லாத செம்பழுப்பு நிறப் புல்வெளியில் பசிகொண்டு இரை தேடி அலையும் மிருகத்தைப் போல, கண்களில் வெறிகொண்டு போன அப்பன் சின்னானை மிரட்சியோடு தொடர்ந்து போனார்கள் முத்துமாயனும் முத்துக்கருப்பனும். பெயர் தெரியாத ஊர் வழி அவர்கள் நீண்ட தூரம் நடந்துபோனார்கள். கேழ்வரகு, கம்பு, சோளம் இப்படி எந்தப் பயிரானாலும் இரவோடு இரவாக அறுத்துக்கொண்டு வந்தார்கள். வெகுநாளைக்குப் பின் தானியங்கள் உரல்களில் குத்தப்படும் ஓசையே குழந்தைகளின் பசியைத் தூண்டியது.

காவல் இல்லாத காட்டில் ஆளுயரத்தைத் தாண்டி வளர்ந்துகிடந்த சோளக்கதிரை அப்பனும் மகன்களும் வேகத்தில் அறுத்து, சாக்கில் திணித்தனர். களவு போகும் கதிர்களைப் பாதுகாக்கவேண்டி ஒரு பெருங்கூட்டம், ராஜபாளையத்து நாயோடு தீப்பந்தம் ஏந்தி வந்துகொண்டு இருந்தது. காதில் நாயின் குரைப்புச் சத்தமும் கண்ணில் வெளிச்சமும் தட்டுப்பட, சின்னான் தன் மகன்களை சோளக்காட்டுக்குள்ளிருந்து வெளியேற்றினான். தூரத்தில் அசைந்தோடிக்கொண்டு இருக்கும் உருவங்களைத் துரத்தியது கூட்டம். மிகப் பெரும் தூரம் ஓடி முடித்த பின்தான், திரும்பிப் பார்த்தான் சின்னான். சோளக்கதிர் மூட்டையைத் தலையில் சுமந்து வந்துகொண்டு இருந்த முத்துமாயன் பின்னால் ஓடி வரும் அரவம் கேட்கவில்லை. அவனைத் தேடிப் போகவும் முடியாமல், ஊருக்குப் போகவும் மனம் இல்லாமல் அங்கேயே ஊரை ஒட்டியிருந்த காட்டு வரப்பில் தலையைக் கவிழ்த்து உட்கார்ந்தனர் சின்னானும் முத்துக்கருப்பனும். இருட்டு இருக்கும்போதே காட்டை நோக்கிப் பெண்கள் வேலைக்கு வரத் தொடங்கினர். விடிந்த பின் சாக்கோடு ஊரைக் கடக்க முடியாது என்பதால், சாக்கில் திணித்திருந்த சோளக்கதிரைக் கிணத்தில் கொட்டினான் சின்னான். அப்பனும் மகனும் முத்துமாயனுக்காகக் கருவேலங்காட்டுக்குள் பசியோடு காத்துக்கிடந்தனர்.

பிடிபட்ட முத்துமாயனை மரத்தில் கட்டி வைத்து, வெற்றுடம்பின் மேல் காய்ச்சிய வெல்லத்தை ஊற்றினார்கள். சில நொடிகளில் எறும்புகள் பெருங்கூட்டமாக வந்து அவன் உடலை அப்பி மொய்த்தன. கண்களை நோக்கியும் எறும்புகள் ஏற, இறுக மூடிக்கொண்டான். நரக வேதனையில் கண்ணீர் தானாக வழிந்துகொண்டு இருந்தது. உடம்பெல்லாம் வீங்கிப்போய், கண் மூடிக்கிடந்த முத்துமாயனைப் பார்த்த பெண்கள் பதறிப்போய், கயிற்றை அவிழ்த்துவிட்டார்கள்.

முத்துமாயன் வந்து சேர்ந்த பின், அவனுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து பார்த்த சின்னானும் முத்துக்கருப்பனும் அவனைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். முனகியபடி பிளேக் காய்ச்சலில் கிடந்த சின்னத்தாய், அவர்களைப் பார்த்து அழக்கூடத் தெம்பில்லாதவளாய் போய்ச் சேர்ந்தாள். ஆத்தாளைப் பீடித்த காய்ச்சல் அப்பனையும் கொண்டுசென்றது. கொடுமையான பஞ்சத்துக்குப் பயந்து, ஊரைக் காலி செய்யாதவர்கள்கூட பிளேக் காய்ச்சலுக்குப் பயந்து ஊரைக் காலிசெய்தனர்.

ஊர்க்காரர்களின் தடத்தைப் பின்பற்றி, தாய்மாமன் சிவனாண்டியோடு அணைப்பட்டிக்குப் போனார்கள், அண்ணனும் தம்பியும். எங்கு பார்த்தாலும் பசுமையும் செழுமையுமாக இருந்தது அணைப்பட்டி. ஏகசாலையாகக் கிடந்த இடத்தைப் பிடித்து, ஒரு வீடு அமைத்துக்கொண்டனர். அவர்களுக்கு அங்கே உழுவதற்குச் சொந்த நிலம் இல்லாததால், மீண்டும் காடுகளில் திருட ஆரம்பித்தார்கள். திருட்டு அவர்களுள் ஒரு மந்திரம் போல் சுழல ஆரம்பித்தது. ஜெயிலும் வீடும் ஒன்றாகிப் போனது.

முத்துமாயன், முத்துக்கருப்பனை விட திருட்டில் தேறியிருந்தான். அவர்கள் காட்டை விட்டு, ஊரில் இருட்டில் திருட ஆரம்பித்தார்கள். பணக்காரக் கவுண்டர், செட்டியார் வீடுகளாகப் பார்த்து மச்சு வழியே வீட்டுக்குள் இறங்கித் திருடினார்கள். முத்துக்கருப்பன் தன் திருட்டுப் பங்கில் மாமன் மகளுக்கு ஐந்து பவுன் நகை செய்து போட்டுக் கல்யாணம் பண்ணிக்கொண்டான். முத்துமாயன் தன் திருட்டுப் பங்கில் வில்வண்டி வாங்கிக்கொண்டு பகட்டாகத் திரிந்தான். கூடலூரில் மூக்கம்மாளைத் திருமணம் செய்துகொண்டான். எல்லோரும் அவனை அணைப்பட்டியான் என்றார்கள். ஊர்க் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போனபோதுதான், முத்துமாயன் திருட்டைத் தொழிலாக வைத்திருப்பவன் என்று மூக்கமாளுக்குத் தெரிந்தது.

‘திருடனுக்குக் கட்டிக் கொடுத்துட்டியே! அதுக்குப் பதிலா பாழுங்கெணத்துல தள்ளியிருக்கலாம்’ என்று தன் அப்பனிடம் அழுது தீர்த்தாள். வீடு முழுவதும் நிறைந்து கிடந்த திருட்டுப் பொருள்களை ஒரு நாள் யாரும் அறியாத பொழுதில் கிணற்றில் கொட்டினாள்.

ஒரு தடவை திருடப் போனபோது, வெளியே காவல் இருந்தான் முத்துக்கருப்பன். வீட்டுக்குள் போன தம்பி வெகுநேரமாக ஆளையே காணவில்லையே என்று, உருவம் தெரியாதவாறு போர்வையை முழுதாகப் போர்த்தியபடி வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டுக்காரன்தான் வந்துவிட்டான் என்று நினைத்து, கையிலிருந்த கம்பால் அவன் தலையில் ஓங்கி அடித்தான் முத்துமாயன். “அடப்பாவி… நான்தான்டா!” என்று அலறி விழுந்தவனின் குரலைக் கேட்டதும், முத்துமாயனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓட வில்லை. அதற்குள், திருவிழாவுக்குப் போயிருந்த வீட்டுக்காரர்கள் திரும்பிவிட, முத்துக்கருப்பனை அங்கேயே போட்டுவிட்டு, முத்துமாயன் தப்பி ஓடிவந்துவிட்டான். பிடிபட்ட முத்துக்கருப்பனை விடிந்ததும் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க, பின்பு முத்துமாயனையும் போலீஸ் பிடித்துக்கொண்டு போனது. ஒரு மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வெளியே வந்தனர் இருவரும்.

முத்துக்கருப்பனின் பெண்டாட்டி, “இனி முத்துமாயனின் சாவகாசமும் வேணாம், திருடப் போகவும் வேணாம்’’ என்று சொல்ல, நகையை விற்று மளிகைக் கடை வைத்து உட்கார்ந்தான் முத்துக்கருப்பன்.

தன்னை யாரென்று அறியாத ஒரு ஊரில் தனித்துத் திருடப் போனான் முத்துமாயன். பெரிய மாடி வீட்டின் முற்றத்து ஓடு வழியாகச் சத்தம் எழுப்பாமல், உள்ளே இறங்கினான். அது கல்யாண வீடு. அவனின் அதிர்ஷ்டம், வீட்டில் இருந்த பெரியவர்கள் தொலைவில் வசித்த தங்கள் உறவினர்களுக்குப் பத்திரிகை வைக்கப் போயிருந்தார்கள். கல்யாணப் பெண்ணும் பாட்டியும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

முத்துமாயன் நுழைந்த அறையில், கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தாள் கல்யாணப் பெண். கட்டிலுக்கு அருகில் தரையில் பாய் விரித்துப் படுத்திருந்த பாட்டி, பூனையின் நடையைப் போன்ற சத்தத்தைக் கேட்டுக் கண் விழித்தாள். கருகரு, நெடுநெடுவென வளர்ந்திருந்த ஆளைப் பார்த்ததும், தன் பேத்திக்குக் களங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி, போய்விடும்படி கும்பிட்டு அழுதாள். அதிர்ச்சியில் விழித்துக்கொண்ட கல்யாணப் பெண், மறுபேச்சில்லாமல் அவளுடைய கல்யாண நகைகளைக் கைரேகை பதியத் தடவிப்பார்த்து அவனிடம் கொடுத்தாள். பெண்களுக்கு முன்னால் கையில் கத்தியுடன் மௌனமாக நின்றிருந்த முத்துமாயனுக்கு அவமானமாக இருந்தது. எதையும் எடுத்துக்கொள்ளாமல் திரும்பிவர நினைத்தவனின் மூளையில், பசியோடு உடம்பில் எறும்புகள் ஊறி உயிர்வலி கண்டநாள் ஞாபகத்துக்கு வர, நகைகளை அள்ளிக்கொண்டு வந்தான்.

கனவிலும் யோசித்துப் பார்க்கமுடியாத அழகில் இருந்த நகைகளைப் பார்த்ததும், மூக்கமாளுக்கு மூச்சு நின்றுவிடும் போலிருந்தது. இவை ஒரு கல்யாணப் பெண்ணின் நகைகள் என்று சொல்லிவிட்டுப் போர்த்திப் படுத்துக்கொண்டான் முத்துமாயன்.

அன்றிரவு முத்துமாயன், ஓர் அழகான இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்வதாகக் கொடுங்கனவு கண்டாள் மூக்கம்மாள். கனவின் கொடூரம் தாங்காமல், விட்டத்தில் கயிற்றைப் போட்டுத் தூக்கில் தொங்கப்போனாள். சத்தம் கேட்டு விழித்த முத்துமாயன், அவளைத் தடுத்து நிறுத்தினான். அவனின் திருட்டுக் குணம் மாறினால்தான், அணைப்பட்டி பக்கம் வருவேன் என்று அப்பன் வீட்டுக்குப் போய்விட்டாள் மூக்கம்மாள்.

மூக்கம்மாள் விட்டத்தில் தொங்கிய காட்சியும் அவள் சொன்ன கனவும் அவனுக்குக் கலக்கத்தை ஏற்படுத்த, கல்யாணப் பெண்ணின் நகையை எடுத்த தடம் தெரியாமல் திரும்பவைக்கப் போனான் முத்துமாயன். அதற்குள் எல்லாம் முடிந்திருந்தது. நகைகளைப் பறிகொடுத்த கல்யாணப் பெண், உடம்பில் ஒரு பொட்டுத் தங்கம்கூட இல்லாமல், உண்மையாகவே தூக்கில் தொங்கி இறந்துபோயிருந்தாள். மஞ்சள் பூசிய முகமும், தலை நிறையப் பூவும், பட்டுச் சேலையுமாகப் புதுப்பெண்ணைப் போல அவளை அலங்கரித்து, சுவரில் சாய்த்துவைத்திருந்தனர். ஜென்மத்துக்கும் தீராத பாவத்தைச் செய்துவிட்ட முத்துமாயனுக்கு மனம் இருண்டு, உடல் நடுங்கியது. வேட்டியில் ஒளித்துவைத்திருந்த நகைகளை, கூட்டத்தில் யாரும் அறியாமல் ஒரு மூலையில் போட்டுவிட்டு வந்தான். அதன்பிறகு, அவன் திருட்டுக் கைகள் விலங்கிட்டது போல் பூட்டிக்கொண்டன.

மூக்கம்மாளைத் தேடிக் கூடலூருக்குப் போனான். அந்த ஊரின் பெரும் பணக்காரரான கருப்பசாமியிடம் சொல்லி, அவர்கள் வயலில் காவல் காக்கும் வேலையை முத்துமாயனுக்கு வாங்கித் தந்தார் மூக்கமாளின் அப்பன் மூக்கன். திருட்டின் சூட்சுமம் அறிந்த அவனை மீறி அங்கே களவு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. களவை முற்றிலுமாக மறந்து காவல் காக்கும் வேலையைப் பார்த்தாலும், தூக்குப் போட்டு இறந்துபோன கல்யாணப் பெண்ணின் ஞாபகம் வரும்போதெல்லாம், உயிர்ச் சித்ரவதையை உணர்ந்துகொண்டே இருந்தான் முத்துமாயன்!

– 05th டிசம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *