களவாடிய பொழுதுகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,512 
 
 

மரகதம், இன்று மதியம் பிள்ளைங்க ஸ்கூலிலிருந்து வந்தவுடன் வீட்டுப் பாடங்களை முடிக்கச் சொல்லு”

“”அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை, நீங்க பந்தோபஸ்து, திருவிழா டியூட்டின்னு ஏதானும் காரணம் சொல்லி பிள்ளைங்க தூங்கின பிறகு வருவீங்க” பதிலுக்கு வெடித்தாள் மரகதம்.

“காவல்துறையில் உயர் அதிகாரியா இல்லாம, கான்ஸ்டபிளா இருக்கிறதால மத்தளம்போல இரண்டு பக்கமும் இடிதான்’ என மனதுக்குள் முணங்கிக்கொண்ட முருகேசன், “”இல்லம்மா, இன்றைக்கு சீக்கிரம் போகணும்னு இரண்டு நாள் முன்னமே அனுமதி சொல்லிட்டேன். பாவம் பிள்ளைங்க ஏங்கிப் போகுது, இன்றைக்கு தமுக்கம் பொருள்காட்சி பாத்துட்டு ஓட்டல்ல சாப்பிட்டுவிட்டு அப்படியே கள்ளழகர் பூப்பல்லக்கும் பாத்துட்டு வரலாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தைங்க ஓய்வு எடுக்கும்”

களவாடிய பொழுதுகள்உடனே 7-ம் வகுப்பு படிக்கும் மலர்விழி,””அப்பா நீ, இன்னிக்கு சாயந்திரம் யூனிபாரம் போடாம எல்லாரின் அப்பாவைபோல் எங்களுக்கு அப்பாவாக மட்டும் கூட வரணும்” என்றாள்.

அவளின் கோரிக்கை நியாயமானதுதான். மரகதம் தான் குழந்தைகளைப் பள்ளிக்கு கொண்டு விடுவது, கூட்டி வருவது, பள்ளியில் பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொள்வது எல்லாமே பார்த்துக்கொள்கிறாள்.

எப்போதாவது அவர்களுடன் உடன் செல்லும் முருகேசன் யூனிபார்மில் வந்துவிட்டால், வழியில் செல்வோரிடமிருந்து குழந்தைகள் வரை ஒரே கண்டிப்புதான். அன்பிற்கு ஏங்கும் மலர்விழிக்கும், மகன் கணேசனுக்கும் போலீசாக இல்லாத அப்பாவுடன் அதிக நேரம் செலவழிக்க ஆசை. அதே சமயம் அப்பாவின் நேர்மையும், கண்டிப்பும் எல்லோராலும் புகழப்படுவதால் பெருமிதம் மலர்விழிக்கு.

குழந்தைகளும் கணவரும் சென்றபின் பம்பரமாய் இயங்கினாள் மரகதம். வேலைகளின் நடுவே பக்கத்துவீட்டு மீனாட்சி, எதிர்வீட்டு சுந்தரி, பாக்கியம் ஆகியோரையும், “”நீங்களும் மாலை குழந்தைகளுடன் வாருங்கள். எங்க வீட்டுக்காரர் துணைக்கு வருகிறார்” என்றாள் மரகதம்.

முருகேசன் போலவே ஏட்டாகவும், டிராபிக் போலீசாகவும் பணியாற்றும் அவர்களின் கணவர்களுக்கும் ஒரே நாளில் லீவு கிடைக்காது என்பதால் அவர்களும் சந்தோசமாகத் தயாரானார்கள்.

நான்கு வீட்டு குழந்தைகளும் முருகேசனுடன் பஞ்சு மிட்டாய், மிளகாய் பஜ்ஜி, பெரிய அப்பளம் எனக் குஷியாக இருக்க, மரகதத்தோடு 3 பெண்களும் வளையல், பாசி மாலை, சமையல் சாதனங்கள் என கடை கடையாய் பொறுக்கிக் கொண்டிருந்தனர்.

கால் கடுக்க சுற்றியபின் பூப்பல்லக்கு புறப்பட இன்னும் நேரமிருக்கு என வலிகளை மறந்து எல்லோரும் ஓரிடத்தில் அமர, வாங்கிய பொருள்களை அலசத் தொடங்கினர்.

எதிர்வீட்டு சுந்தரி சிறிய பொருள்களாக கடை விரிக்க, “”ஏய்! இதெல்லாம் எப்போ வாங்கின? எங்களோடு வந்தபோது காய்கறி சீவி மட்டும்தான வாங்கின” என்றாள் பாக்கியம்.

அதற்கு நமுட்டுச் சிரிப்புடன் சுந்தரி, “”நா எங்க வாங்கினேன். நீங்க வாங்கும்போது ஒவ்வொரு கடையிலும் நான் “சுட்டது’ இவை” என களவாடிய பொழுது கிடைத்த சுகத்தை கதை கதையாய்ச் சொல்ல, சிரிப்பலைகள் படர்ந்தது அங்கே.

“”எங்க வீட்டுக்காரர் கூட வந்திருந்தா இன்னும் நாலஞ்சு பொருள் காசு கொடுக்காம வாங்கியிருப்பேன்” என்றாள் சுந்தரி.

“”எங்க வீட்டுக்காரருக்கு அந்த சாமர்த்தியமெல்லாம் பத்தாது” என்று அலுத்துக் கொண்டாள் மரகதம்.

இதையெல்லாம் கவனித்தும் கவனிக்காததுபோல முருகேசன் தன் மகனுடன் சேர்ந்த சின்னக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

விருட்டென்று எழுந்த மலர்விழி, சுந்தரியிடம் சென்று, “”ஆன்ட்டி, அந்த களவாடிய பொருள்களையெல்லாம் கொண்டாங்க” என வாங்கி, “”வாங்கப்பா கடைகளில் இதுக்குரிய காசை கொடுத்துவிட்டு வருவோம்” என தந்தையின் கையைப் பிடித்து இழுத்தாள்.

பெரும்பான்மை நேரம் குழந்தைகள் தூங்கின பிறகு, வீட்டிற்கு வந்து அவர்களுடன் பேசும் நேரம் குறைவென்றாலும், தன் உணர்வில் உள்ள நேர்மை தன் மகளிடமும் இருப்பதை எண்ணி பெருமிதத்துடன் எழுந்து சென்றார் முருகேசன்.

– ஏப்ரல் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *