களனி கங்கைக் கரையில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 1,366 
 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

களனி ஆற்றிலே ஒரு படகு சென்று கொண்டிருந்தது. படகோட் டியோ தொண்டு கிழவன். என்றாலும் படகு நிதானமாய்ப் போனது. அதிலே ஒரு கிழவி மாத்திரம் இருந்தாள். இருவரும் ஒன்றும் பேச வில்லை. படகு கரையில் ஒதுங்கி நின்றது. பக்கத்தில் ஒரு சமாதி.

இருவரும் கரையை அடைந்தார்கள். அந்தி மயங்கும் சமயம் மாலைச் சூரியனின் கிரணங்கள் சமாதியின் மேல் வீழ்ந்து கொண் டிருந்தன. சமாதியைச் சுற்றி பல்வகைப் பூஞ்செடிகள் மலர் சுமந்து நின்றன. இருவரும் மலர்களைக் கொய்து சமாதி முன் அர்ச்சித்தார்கள். தீபம் ஏற்றி, கீழே வீழ்ந்து வணங்கினார்கள். எழுந்து போனார்கள் படகை நோக்கி.

படகு மெல்ல மெல்ல அசைந்து சென்றது.

கந்தையன் இருபத்திரண்டு வயசை எட்டிக் கொண்டிருந்தான். நல்லகறுவல். எண்ணெய்க் கறுப்பென்று சொல்வார்களே,அதே நல் லெண்ணைக் கறுவல். களுத்துறை நகர சபையிலே அவன் ஒரு கூலி.

வழக்கமாய் மாலை நேரங்களிலே அவனைக் குமாரவீதியிலே காணலாம். சாலை ஓரத்திலே நிற்கும் தீபஸ் தம்பத்தண்டை நிற்பான். விளக்கேற்றிவிட்டு, அடுத்த விளக்கை நோக்கி நடப்பான். அவன் நடையிலே யௌவனம், தொங்கிக் கொண்டிருக்கும். அந்த வீதி யிலே இருப்பவர்கள் எல்லோரையும் அவனுக்குத் தெரியும். அவனை எவனுக்கும் தெரியாது. அன்றாடம் உழைத்துத் தின்னும் தொழிலாளி. அவனை யார் கவனிக்கப் போகிறார்கள்?

அப்படிச் சொல்லாதீர்கள் – இரண்டு பெரிய கரிய விழிகள் அவனை எதிர்பார்த்து நின் றன. அதோ பாருங்கள் அந்தத்தீபஸ் தம்பத்தின் கீழ் அவள் நிற்பது நன்றாய்த் தெரிகிறது – கந் தையன் வரமுன்னரே அத்தீபஸ் தம்பத்தின் விளக்கை ஏற்றிப் போடுவாள். அதில் அவளுக்கு ஒரு தனி இன்பம் …

“பொன்னி, இன்னிக்கு என்ன கொண்டாந்தாய்” என்று வாயைத் திறப்பான் கந்தையன். “இல்லை, தரமாட்டன். என்ன சொல் பார்க்கலாம்”

“ரம்புட்டான்.”

“இல்லை” என்று வெற்றிப் பார்வை பார்ப்பாள்.

“முந்திரி வத்தல்”

“இல்லை, இல்லை…”

“மாம்பழம்”

“ஆமாம்” என்று அவள் வாய்க்குள் போட்டுவிடுவாள்.

“என்ன சீனிவத்தாளைக் கிழங்கோல்லியோ?”

“பெரிய கெட்டிக்காரன்” என்று குறும்புச் சிரிப்புடன் அவனைப் பார்ப்பாள். இருவரும், கலகலவென்று சிரித்துக் கொண்டு போவார்கள்.

நிதமும் அவள் அவனுக்கு ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். கடலைச் சுண்டலோ. மாம்பழமோ வெற்றிலை பாக்கோ ஏதேனும் ஒன்று. இவைகளைத்தான் அவ ளால் கொடுக்க முடிந்தது.

இருவரும் கொட்டி அளந்து கொண்டு சாலையின் ஓரத்திலே நிற்கும் ஏனைய விளக் குகளை ஏற்றப் போவார்கள். இந்தச் சாலையிலேதான் அவர்கள் காதல் வளர்ந்தது. ஆம். இந்தப் பிரசித்த வீதியில்தான்…. குருவிகள் ஜன நெருக்கமுள்ள இடங்களில் கொஞ்சி விளை யாடுவதில்லையா? இவர்களும் இயற்கையின் குழந்தைகள் தாமே.

நாட்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அன்று மாலைப் பொழுதிலே. பொன்னி வழக்கமாய் நிற்கும் தீபஸ்தம்பத்திலே சாய்ந்தபடி நின்றாள். வெகு நேரமாகியும் கந்தையனைக் காணவில்லை. “ஒரு வேளை அந்த மனிதன் இன்று நண்பகல் சொன்னது உண்மையாக இருக்குமோ? அவன் ஏன் பொய் சொல்லப் போகிறான். ஆனால் அவர் நேற்றுத்தானே என னைக் கண்டு கொண்டு போனார். எனக்கும் சொல்லாமலா போய் விடுவார். அவருக்கு ஒடம்புக்கு ஏதேஞ் சுகமில்லாமல்… இங்ஙனம் ஆயிரம் சிந்தனைகள் அவள் மனதை அலைத்துக் கொண்டிருந்தன.

டங் டங்… டங்…

தூரத்து மணிக்கூண்டிலே மணி ஏழு அடித்தது. பொன்னியின் உடல் நடுங்கத் தொடங்கியது. அத்தருணத்தில்.

அத்தருணம் கந்தையன் ஓடோடியும் வந்தான்.

“பொன்னி, ரேலுக்கு நேரமாயிடிச்சு, ஓடணும். ஊரிலேயிருந்து கடுதாசி வந்திச்சு. அப்பா வுக்கு ஒடம்புக்குச் சொகமில்லையாம். அப்பாடா, லீவு எடுக்கப் பட்டபாடு, நான் கழனிக்கு போயிட்டு வாரேன்,”

“இப்பவே போறயா?”

“உடனே போகணும்” “என்னையும் விட்டா”?

புகைவண்டி ஸ்டேஷனில் வந்து ஊதும் சப்தம் காதைப் பிளந்து கொண்டு வந்தது.” நேர மாச்சு, பொன்னு, உன்னை மறக்கவே மாட்டேன். இரண்டு நாளிலே வந்துடுறன். என் கண்

ணல்லே,” என்று சொல்லிக்கொண்டு ஓடினான்.

பொன்னி, தினமும் அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். கந்தையன் போனவன் போனவன்தான் வரவே இல்லை.

அவன் பக்கத்தில் இருக்கும் வரைக்கும் பொன்னி மலர்ச்சி பெற்று பூரணப் பொலிவுடன் விளங்கினாள். ஆகாயத்தில் மிதந்து சென்று சந்திரனைத் துரத்திக் கொண்டிருப்பாள்.

ஆனால், இன்று கந்தையன் இல்லை – அவள் மனம் எண்ணாத தெல்லாம் எண்ணி அழுது கொண்டிருந்தது. தானே கழனிக்குப் போய் அவனைத் தேட வேண்டுமென்று மனத்திடம் கொண்டாள்.

இந்நாட்களில் பொன்னியின் தாயும் இறந்து போனாள். அவள் பாட்டி தினமும் வெயிலில் போய் ஏதாவது தொட்டாட்டு வேலை செய்து கொஞ்சப் பணத்துடன் வந்தால் தான் அவர்கள் அடுப்பில் நெருப்பெரியும். அதுவும் இல்லையென்றால் பட்டினிதான். அநாதைகளை ஆதரிப் பார் எவருமில்லை .

அந்தப் பட்டணத்திலே பிச்சைக்காரர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள் – ஆனால் தர் மம் செய்வோர் இல்லை. பிரபுக்களிடம் எல்லாம் இருந்தது. நெஞ்சில் ஈரம் மாத்திரம் இல்லை. சமூக முன்னேற்றச் சங்கங்கள் இருந்தன என்றாலும் மிருகங்களிலும் கேடாக எளிய ஜனங் கள் நடத்தப்பட்டனர். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிக்கொண்டிருந்தார்கள். இருந்தும், ஆயிரக்கணக்கான வறிய ஜனங்கள் பரமதரித்திரர்களாய் உணவின்றித் திரிந்தார்கள்.

பொன்னிக்கு கழனிக் கிராமம் எந்தத் திசையில் இருக்கிறதென்றும் தெரியாது. அது வெகுதூரத்தில் இருக்கிறதென்று அறிந்திருந்தாள். கந்தையனை எப்படியும் சந்தித்து விட வேண்டுமென்ற பேராவல் அவளுக்குத் தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. அவ னைத் தேடி ஊரார் சொன்ன திசையை நோக்கி மனம் போன போக்கிலே நடந்து சென்றாள்.

பாருங்கள், சில வேளைகளிலே ‘குருட்டு வாக்கில சில காரியங்கள் கைகூடி விடு கின்றன. அந்தத் திசை பொன்னிக்கும் அடித்தது.

அவள் கழனிக் கிராமத்தை அடைந்துவிட்டாள். அது அவளுக்கே தெரியாது. கழனி கங்கை கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டு நெடுநேரமாய் நின்றாள் – அவளுக்குப் பசி எடுத்தது – சுற்று முற்றும் பார்த்தாள். சமீபத்தில் ஒரு குடிசை யிலிருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. தாகத்துக்குத் தண்ணீராவது வாங்கிக் குடிக்கலா மென்ற எண்ணத்துடன் அந்தக் குடிலை அடைந்தாள்.

வெளியில் எவரும் தென்படவில்லை . உள் அறையிலிருந்து யாரோ இருவர் பேசும் அர வம் கேட்டது. பொன்னி உற்றுக் கேட்டாள். ஒன்று பொன்னிக்குப் பழக்கமான குரல், முன் எங்கோ கேட்ட ஆணின் குரல். மற்றது ஒரு பெண்ணின் குரல்…

“பொன்னி குடுப்பாள் வெத்திலை, சீனிவத்தாளை கடலை…” “ஊம், பொன்னியா அவள் பேரு. நன்றாவைத்தாங்கோ”

“ஆமடி… அவள் மாயக்காரி. கம்பன் வெச்சிருந்தானே. தாசி பொன்னி, அவள் மாதிரி”

“மயக்கிட்டாளே சிறுக்கி. இன்னும் எத்தனை பேரை மயக்கிட்டிருக்காளோ?….

பொன்னி இந்த சம்பாஷணையைக் கேட்டதும் அதிர்ந்து போனாள். மேலும் அங்கே நிற்கவிரும்பாமல் “ஐயோ, அடபாவி, மோசம் போனேனே!” என்று கதறிக் கொண்டு கழனித் தாயை நோக்கி ஓடினாள். யாரோ நீரில் குதித்தது போன்ற சப்தம் எழுந்தது. ஒரு கணம் கழனித்தாய் சீறி விழுந்தாள். அடுத்த கணம் அடித்த கையாலே அந்த உருவத்தை அணைத் துக் கொண்டாள். யாரோ கூக்குரலிடுவதைக் கேட்டதும் குடிசையில் கதைத்துக் கொண் டிருந்த மனிதன் வெளியில் ஓடி வந்து சுற்றிலும் பார்த்தான். சட்டென ஆற்றுக்குள் குதித்து விட்டான். அந்த உடலை, ஆற்று நீர் வெகுதூரம் இழுத்துக் கொண்டு போய்விட்டது. துரித மாய் நீந்திச் சென்று அவ்வுடலைத் தூக்கிக் கொண்டு கரையேறினான். தேகம் முழுவதும் உஷ்ணம் கொடுத்து உயிர்ப்பிக்க பிரயத்தனஞ் செய்தார்கள். ஆனால் எல்லாம் வியர்த்தமாய் போயிற்று.

கந்தையன் வீட்டில் ஒரு சிறுகும்பல் கூடியிருந்தது. ஊர்பேர் தெரியாத பெண்ணொ ருத்தி, வந்த இடத்தில் இப்படி ஆற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டாள். இதன் மர்மம் தெரியாமல் எல்லோரும் கூட்டம் கூட்டமாய் நின்று குசு குசுத்துக் கொண்டிருந்தனர். அத்த ருணம், கந்தையன் தங்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

வீட்டுக்கு முன்னால் ஜனக்கூட்டத்தைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. உள்ளே போக காலடி எடுத்து வைத்தவன், அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான். கட்டிலில் ஒரு உடல், வெள்ளைத் துணியால் மூடப்பட்டுச் கிடந்தது. அவன் மெல்லப் போய் நடுங்கும் கைகளுடன் முகத்தை மூடியிருந்த சீலையை அகற்றிப் பார்த்தான்.

அதிர்ந்து போய், “ஐயோ, பொன்னி!” என்று அதிர்ச்சியில் அலறிக் கொண்டு வீழ்ந்து விட்டான். அவன் நெஞ்சம் உறைந்து மனமும் உறைந்து போய்விட்டது. அவன் மீண்டும் எழுந்திருக்கவில்லை.

கந்தையனின் பெற்றோர் இருவருக்கும் திகைப்பிலிருந்து மீள சில நிமிஷங்கள் எடுத்தன. கந்தையனின் தந்தை ஆழ்ந்து யோசித்த போது மெல்ல மெல்ல எல்லாம் புரியத் தொடங்கியது.

நானும் என் மனைவியும் பேசிக்கொண்டிருந்ததை பொன்னி வெளியில் நின்று கேட்டிருப்பாள். நாங்கள் அவளை இகழ்ந்து ஏளனமாய்ப் பேசியதை அவள் கந்தையனும் புதுமணப் பெண்ணும் பேசியதாக தவறாக நினைத்து விட்டாள். என் குரல் சில சமயங்களில் அவன் குரல் போலவே இருக்குமென்பதை அவள் அறிய மாட்டாள். தன்னைக் கந்தையன் ஏமாற்றி விட்டான் என்ற ஆத்திரத்தால் இங்ஙனம் விபரீதமாய் நடந்து கொண்டாள்.

நாம் அவனுக்கு வேறோர் பெண்ணை ஒழுங்கு செய்து அவளையே கல்யாணம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தி வந்தோம். அவன் அதை மறுத்து பொன்னி உயிருடன் இருக்கும் வரை வேறொரு பெண்ணை மனத்தாலும் தீண்ட மாட்டேன் என்று சங்கற்பத்துடன் சொல்லி வந்ததை அவள் எப்படி அறிவாள்? அவன் தன் வேலைக்குப் போவதில்லை; வீட்டில் தங்கு வதில்லை. எங்கோ போவான். வருவான்… பித்துப் பிடித்தவன் போல இரவோ பகலோ சுற்றிக் கொண்டு திரிவான்.

காதற் பீடத்திலே இரண்டு ஜீவன்கள் பலியாகினர். பெருவெள்ளத்திலே இன்னும் இரு துளிகள்.

காதலர் இருவரும் தகனம் செய்ய்பபட்ட இடத்திலே ஒரு சமாதி எழுந்திருக்கிறது. கந்தையனின் பெற்றோர் தினமும் அச்சமாதிக்குப் போய் விளக்கேற்றி வருகிறார்கள். இச்சேவையால் அவர்கள் மனம் சாந்தி பெறுகிறது.

அந்திப் போது, இரவுடன் தழுவும் செக்கர் நேரம். சாயும் பொழுதின் அமிர்த கிரணங்கள் களனி கங்கையில் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. தூரத்திலே ஒரு படகு சமாதியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

– கலைமகள், 1939

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *