கல்யாண விருந்து

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,831 
 
 

“இதுதான் உன்னோட ரூம்” என்று பாலா அடையாளம் காட்டினான்.

கதவைத் திறந்ததும் நெடி குப்பென்று அடித்தது. காற்றுப் போக வசதி இல்லை.

“ஸ்டோர் ரூம் இன்-சார்ஜ்”

தலையில் கிரீடம் வைக்கப்பட்டது.

“டேய் பாலா…”

அவனது மாமா பின்னாலேயே வந்துவிட்டார்.

“என்னடா இது… முதல்லே அவருக்கு டிபன், காபி தருவியா, வந்த உடனே பொறுப்பைத் தலையில் கட்டிக்கிட்டு…”

குறுக்கிட்டேன் .

“நான்தான் விசாரித்தேன். ஸ்டோர் ரூம் எதுன்னு…”

“வாங்கோ. மூணு நாளும் இங்கேதானே நிக்கப் போறேள். மத்தியானம் தான் சாமான் வேன்ல வருது. ராஜப்பா வந்திருவார்… என்ன மெனுன்னு ஒரு தடவை பார்த்திரலாம்”

கல்யாணம் ஒரு பெரிய வீட்டிலும், வந்து இறங்கிய நாங்கள் இன்னொரு வீட்டிலுமாக ஏற்பாடு. எதிர்வீடு மாமாவினுடையதாம். டிபன் சாப்பிடும்போது சொன்னேன்.

“இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், வில்லேஜ்ல மேரேஜ் அட்டெண்ட் பண்றது.”

“எனக்கும். தலை சுத்தறது. எது வேணும்னாலும் மூணு கி.மீ. போகணும் டவுனுக்கு. எங்கப்பாவோட பெரிய பிரச்னை. நல்ல வேளை தங்கை கல்யாணம் கிராமத்துலன்னு முடிவாச்சு. எவரெஸ்ட்ல வையின்று சொல்லாம போனார்..”

“கவலைப்படாதே…”என்றேன்.

“எனக்கென்ன… நீதான் பிராமிஸ் பண்ண மாதிரி கூடவே வந்துட்டியே. கண்ணன், சக்தி எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கே வரதாச் சொன்னாங்க. அவங்களும் வந்தாச்சுன்னா உனக்கும் ஒரு சேஞ்ஜ் கிடைக்கும்.”

“ஒண்ணும் வேணாம். ஜ கேன் மானேஜ். ரெண்டு நாள் கூத்து.”

பாலா தணிந்த குரலில் சொன்னான்.

“இங்கே பாரு… சட்டுனு கேட்ட உடனே எடுத்துக் கொடுத்துராதே. ஒரு கிலோ கேட்டா முக்கா கிலோ கொடு. முழுசா மாமாவையும் நம்பிர முடியாது.”

இதுவரை தெளிவாய் இருந்தவன் இப்போதுதான் குழம்பினேன்.

“என்ன… சொல்றே?”

“பயந்துராதே. எப்படியும் போட்ட லிஸ்ட்படி தான் சாமான் வாங்கியிருக்கு. இருந்தாலும் கொஞ்சம் ‘கெத்’ தா இருந்தாத்தான் ஏமாத்தாம இருப்பாங்க. அதுக்குச் சொன்னேன்.”

கை கழுவியபோது குளிர்ந்த நீர் பட்டு உடம்பு ஜிலீரென்றது. வேன் நான்கு மணிக்குத்தான் வந்தது.

“எப்ப பட்சணம் பண்றது?” என்று யாரோ பொருமிக் கொண்டிருந்தார்கள்.

இதற்காக சுமாரான வேட்டி, சட்டை கொண்டு வந்திருந்தேன். இறங்கிய பொருட்களை எடுத்து அடுக்கவே அரைமணியானது.

“காய்கறி வருமே.. அதை எங்கே வைக்கறது?”

“ஏகப்பட்ட எடம் இருக்கு. பின்கட்டுல போடுங்கோ. நறுக்கி வைக்கிறவாளுக்கும் வசதி.”

பின்கட்டு, எடுத்துக் கட்டி, முற்றம், கேமரா ரூம், சம்படம் என்று தனி அகராதி தேவைப்படுகிற அளவு புதுப்புது வார்த்தைகள்.

“இதுதான் முந்திரி, திராட்சை.. சர்க்கரை மூட்டை அதோ மூலைல…”

எனக்குச் சூழல் புரிபடுவதற்குள் கல்யாணம் முடிந்துவிடுமென்று தோன்றியது.

ராஜப்பாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். தளர்ந்து போன உடம்பு. இடது கால் சற்று வீக்கம். பொடி மட்டை சொல்லி வைத்த மாதிரி கீழே விழுந்து கொண்டேயிருந்தது. மறுபடி எடுத்து ஒரு வசவுடன் இடுப்பில் சொருகிக் கொண்டார். மழமழவென்ற மரத்தூணில் சாய்ந்துக் கொண்டார்.எட்டடி நீளக் குழிதான் அடுப்பு. கிட்ட நெருங்கும் போதே அனலடித்தது . நிரந்தரமாய் இரண்டு பெரிய அடுக்குகளில் கலங்கலாய் வெந்நீர். ஒன்றில் காப்பி பாத்திரம் கூட மிதந்தது.

“எத்தனை பேர் சாப்பிட வருவா… கரெக்டா சொல்லிட்டா… எனக்கும் வசதி…”

“நம்ம உறவுக்காரா… அப்புறம் இவங்க ஆபீஸ்காரான்னு எப்படியும் இருநூறு பேர் தேறலாம். கிராமத்து டிக்கெட் இருக்கே. ஒரு பய அடுப்பு மூட்ட மாட்டான்” என்றார் மாமா.

“ப்ச்.. என்ன மாமா இது ” என்றான் பாலா.

“போடா… இங்கே எவனுக்கும் சொரணையே இல்லே… திட்டினாக் கூட ஈன்னு இளிச்சுன்டு நிப்பான்…”

பாலா, மாமாவைப் பற்றி அதிருப்தி தெரிவித்ததன் காரணம் புரிந்தது. மனிதருக்கு எதிலுமே சீரியஸ்னெஸ் இல்லை.

“சொல்லுங்கோ… என்ன போடலாம்?”

ராஜப்பா மெனுவைப் பற்றி விசாரிக்க பாலா சொல்லிக் கொண்டிருந்தான். நகர்ந்தேன். கொல்லைப்புறம் விளக்கு வெளிச்சம் இல்லை. நூறடி நடந்தால்தான் டாய்லட் வசதி.

“இருட்டுல எப்படி போறது…?” என்றேன் கவலையாக.

“குச்சி நட்டு டியூப்லைட் வச்சிருவான். எல்லாம் ஏற்பாடு ஆயிடுத்து…” என்றார் மாமா.

திரும்பி வந்ததும் பாலா மீண்டும் என்னை ராஜப்பாவிடம் அறிமுகப்படுத்தினான்.

“என்ன சாமான் வேணும்னாலும்… இதோ… இவர்தான்”

“பேஷா…” என்றார் சர்ரென்று பொடியை உறிஞ்சி.

மாப்பிள்ளை அழைப்பன்று இரவு முகூர்த்தப் பை போடும் நேரம் பாலா என்னுடன் இருந்தான்.சக்தி, கண்ணனின் வாழ்த்துக் தந்திகள் வந்தன. ஏதாவது சமாதானம் சொல்லிவிடுவார்கள், திரும்பிப் போனதும்.மற்ற நேரங்களில் என் சாம்ராஜ்யம் அனலடிக்கிற சமையலறையும், கால்களைக் கீழே வைக்கக் கூசுகிற அளவு ‘சொத சொத’ வென்ற தரையும், கலவையான நெடிகளும், ‘விட்டு எப்போது ஓடலாம்’ என்கிற மனோநிலையும்தான்.
ராஜப்பா கடைசிவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவேயில்லை.

“அண்ணா… சாம்பாருக்கு…”

“ஊறுகாய்க்கு இது’ போதுமா…”

“கோசுமல்லிக்கு.”

அளவுகளைச் சரிபார்க்கச் சொன்னார்கள். முறத்தோடு உப்பை அள்ளிப்போய் பாத்திரத்தில் கவிழ்ந்தார்கள். மிளகாய்ப் பொடி நெடி கமறியது.

“அய்யோ… அண்ணா.. இப்பதான் நான் உப்புப் போட்டேன்… சாம்பாருக்கு…”

இரண்டாம் தடவை போட்டுவிட்டான் தவறுதலாய். ராஜப்பா நிதானமாய்ப் பொடி உறிஞ்சிவிட்டுச் சொன்னார்.

“உருளைக் கிழங்கு இருக்காடா?”

“ஆயிடுத்து…”

“போடா மடச்சாம்பிராணி… எடுரா… இந்த சைசுக்கு… சாதத்தைக் கெட்டியாப் பிடி… போடு அதை சாம்பார்ல…”

பின்பு சாப்பிட்டவர்கள் எந்தக் குறையும் சொல்லவில்லை என்றதும் எனக்கு ஆச்சர்யம் .

“ஸாரை நன்னாக் கவனிடா. நம்ம கூட வெந்துண்டு இருக்கார்…” என்றார் நடுவில் என்னையும் கவனித்து.

”ஒண்ணும் வேண்டாம், பசியே இல்லே.. எதுவுமே பிடிக்கலே” என்றேன்.

“என்னது… நீங்கதான் சர்டிபிகேட் தரணும்… போடுரா இலையை…” என்று சகாவை அதட்டினார்.

கைநீட்டி மறுத்தேன். இலையில் வைத்த சாதம் திணறியது.

“என்ன இப்படி முழிக்கிறீங்க. கோஸ்கறி போடு..”

“வேணாம்… ஒரு அப்பளம் வைங்கோ…” என்றேன்.

என்னருகில் நகர்ந்து வந்தார். பக்கத்தில்தான் இலை போடப்பட்டு இருந்தது.

“போடுரா அப்பளத்தை… ” என்றவர் அவன் நகர்ந்து போனதும் சொன்னார்.

“உங்களுக்குத் தெரியாதது இல்லே. டவுன்ல இருக்கிறவா படிச்சவா… கொறிக்கிறது இப்ப நாகரிகம். நாங்க அந்தக் காலம். வேணும்கிறதைக் கேட்டு வாங்கி ருசிச்சுச் சாப்பிட்டாலே எங்களுக்கு நிறைஞ்சுரும். எவ்வளவு மெனு பாருங்கோ. இதையெல்லாம் விட்டுட்டு கடை அப்பளத்தைக் கேட்கிறேளே… எங்களுக்கு எப்படி சார் திருப்தி வரும்?”

சுரீலென்றது. சைகை செய்ததும் ஒவ்வொன்றாய் ஒரு கரண்டி பரிமாறப்பட்டது.

“கஷ்டப்படுத்தலே… டேஸ்ட் பாருங்கோ. போதும்…”

அசிஸ்டெண்ட் எதிரில் வந்தான்.

“அண்ணா… கரைச்சாப்ல கொண்டு வரவா…”

“ம்…” என்றார்.

மோர் சாதம் கரைத்துத் தரப்பட்டது.

“போதும்டா… எதேஷ்டம்…”

கடகடவென்று குடித்தார்.

“நீங்க போங்கோ… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா… நிம்மதி. சாயங்கால காரியம் இருக்கே… டேய்… அங்க பாரு… அடுப்புல தீயறது..” என்றார் சட்டென்று திரும்பி.

கையலம்ப எழுந்து போனபோது, இந்தக் கல்யாணத்தை மறக்க மாட்டேன் என்று தோன்றியது.

(கல்கியில் பிரசுரம்)

– ஆகஸ்ட் 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *