கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 6,630 
 
 

என் பெயர் வத்சலா. இப்போது என் வயது இருபத்தியெட்டு.

நான் சென்னையில் ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் டெலிவரி ஹெட்டாக இருக்கிறேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். அடிக்கடி அமெரிக்கா போய்வருவேன். அடுத்தவர்களை மதித்து நடந்து கொள்வேன்.

ஆனால் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை துளியும் இல்லை.

ஒருவேளை அதற்கான தூண்டுதல் என்னுடைய ஸீஈஓ ரீட்டா முகர்ஜி காரணமாக இருக்கலாம். ஐம்பது வயதானாலும் அவள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எப்போதும் தனக்குப் பிடித்ததை சாதித்துக் கொள்வாள். அவளிடம் நேரடியாக வேலை செய்வதால் அவளைப் பார்த்து நான் அடிக்கடி பிரமித்துப் போயிருக்கிறேன். என்னுடைய திறமையின் மீது அவளுக்கு எப்போதும் அதீத நம்பிக்கை.

என்னுடைய உறவினர்கள், “அக்காவுக்கு கல்யாணம் ஆகிறவரைக்கும் தம்பிக்கு ஏத்த பொண்ணு தேடறது மிகவும் கஷ்டம்… நம்ம குடும்பத்தையே சந்தேகப் படுவாங்க…” என்று என் இதயத்துல ஈட்டியைப் பாய்ச்சுவாங்க. அந்த வலியை பொறுத்துக்க முடியாம பலதடவைகள் நான் அழுதிருக்கேன்.

தனிமனித சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை ஜாலம்தானோ? நம்முடைய பெரும்பாலான் உறவினர்கள் பிற்போக்கு எண்ணம் உடையவர்கள்தான் என்று எனக்குத் தோன்றும்.

நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது என் தம்பியோட கல்யாணத்துக்கு எந்த வகையில தடையா இருக்குதுன்னு சத்தம் போட்டுக் கத்தணும் போல இருக்கும். ஆனால் நான் அமைதியா இருப்பதே புத்திசாலித்தனம். அப்படித்தான் இருந்தேன்.

என் அப்பாவும் தம்பியும் என்னைப் புரிஞ்சுப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா அவர்களும் மத்த உறவினர்கள் மாதிரி என் உணர்வுகளை அலட்சியப் படுத்தினாங்க.

என் அம்மா ஒருத்திதான் என்னை எப்பவும் புரிஞ்சுப்பாங்க. அதனால என் கல்யாணத்தைப் பத்தி பேச்சு வந்தாலே அதை தவிர்க்க முயற்சி பண்ணுவாங்க. நான்தான் வீட்டுக்கு மூத்தவ என்கிறதுனால, எனக்குத்தான் முதல்ல கல்யாணம் நடக்கணும் என்பது எழுதப்படாத விதி. ஆனா நான் ரொம்ப உறுதியா கல்யாணம் பண்ணிக்காம நின்னேன்.

கல்யாணத்துல கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை நான் என் பெற்றோருக்கு கொடுக்கல. இதனால கடந்த சில வருடங்களா என் வீட்டில் எல்லோருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டதுதான் மிச்சம்.

திடீரென என் தம்பிக்கு ஒரு நல்ல இடத்துல வரன் கிடைத்து நிச்சயம் ஆயிற்று. அவனுக்கு கல்யாணம் ஆகப்போகிறதை நெனச்சு வீடு கலகலப்பானது. நாளடைவில் என் கல்யாணத்தைப் பத்தி என் பெற்றோர் கனவு கண்டதெல்லாம் முற்றிலும் வடிந்துபோனது.

ஒருநாள் என்னுடன் கல்லூரியில் படித்த ஒருவன், “நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னு எனக்குத் தெரியும். ஆனா உனக்கு சில தேவைகள் இருக்கும்னு எனக்கு நிச்சயமா தெரியும். நீ விரும்பினா அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய நான் உதவி செய்யறேன்.. வெறும் சரீர ஒத்தாசைதான். எனக்கு இம்மாதிரி சர்வீஸ் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்..ஆனா இந்த விஷயம் என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் கண்டிப்பாக தெரிந்து விடக்கூடாது” என்ற நிபந்தனை போட்டான்.

இதைக் கேட்டதும் நான் அதிர்ந்து போனேன். அவனுக்கு எப்படிப்பட்ட வக்கிரபுத்தி இருந்தால் இப்படி என்னிடம் பேசுவான்?

என் தேவைகள் என்னன்னு எனக்கே தெரியலை. அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு ஆண் தேவை என்பது மட்டும் எனக்குத் தெரியும். நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது மத்தவங்களை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கும் என்பதை என்னால பொறுத்துக்கொள்ள முடியல.

அவன் என்னை இப்படிக் கேட்பான் என்று நான் நெனச்சுக்கூட பார்க்கல. அவன் இப்படிக் கேட்டது எனக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை. ஆனா இதைப்பற்றி நெனச்சாலே ரொம்ப வருத்தமா இருக்கு. இத அவன் உதவி என்று சொன்னதை நெனச்சா சிரிப்புதான் வருது. நான் இதுக்கு மேலேயும் அவனை நண்பனா நினைக்க விரும்பல.

நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம தனியா இருக்கிறதப் பத்தி யாருக்காவது தெரிய வந்தா, என்னப் பத்தின அவங்களோட அபிப்பிராயமே மாறிப் போயிடுது. அதனால என்னுடன் காபி அருந்தவும்; மதிய அல்லது இரவு உணவு உண்ணவும் எனக்கு அழைப்புகள் நிறைய வரும்.

இதெல்லாம் எனக்கு இப்பப் பழகிப் போச்சு. மரத்தும் போச்சு. என் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன். எனக்குப் பிடிச்சதை தேர்வு செய்வேன். பிடிக்காததை நிராகரிப்பேன். தனியாகவே இருக்கனும்னு நான் எடுத்த முடிவுக்காக எப்போதுமே நான் வருத்தப்படல.

கல்யாணமே செஞ்சுக்க மாட்டேன் என்கிற என் முடிவை நான் முதல் முறை என் அம்மாகிட்ட சொன்னப்போ எனக்கு இருபத்தைந்து வயசு. நான் அப்போதான் சம்பாதிக்க ஆரம்பிச்சேன்.

என்னோட லட்சியப் பாதையில் பயணிக்கணும்; நிறைய சாதனைகள் செய்யணும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன். என் அம்மாவுக்கு என் ஆசைகள் புரிஞ்சிருந்தாலும், மத்தவங்க கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம திணறிப் போவாங்க. என்னை ஏக்கமாகப் பார்ப்பாங்க.

ஆனா, ஒரு ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை பாதுகாப்பா இருக்கும் என்ற காரணத்துக்காக என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஒரு பெண்ணிற்கான சராசரி வயதைத் தாண்டியும்கூட கல்யாணம் ஆகாம அவர்களுடனேயே இருக்கிறேன் என்ற எண்ணம் என் பெற்றோர் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது எனக்கு நல்லாவே தெரியும்.

நான் பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டேன் என்பதால் எனக்குக் கல்யாணம் பண்ணியே தீரணும் என்ற என் அப்பாவின் தீவிரத்தால, நான் அவரோட உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதினைந்து மாப்பிள்ளைகளைப் பார்த்து அவர்களை வேண்டுமென்றே நிராகரிச்சேன்.

நான் தற்பெருமை கொண்டவள்; எப்போதும் சுதந்திரமாக இருக்கணும்னு நினைப்பவள்; பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவள் என்றெல்லாம் என்னை குறை சொன்னாங்க. முட்டாள்; நாகரீகமற்றவள்; திமிர் பிடித்தவள்; பிடிவாதக்காரி என்றெல்லாம் எனக்குப் பட்டம் சூட்டி வம்படித்தார்கள். இதனால அவங்களுக்கு என்ன சந்தோஷம் என்பது எனக்குப் புரியல.

இந்த நிலையில்தான் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அதாவது ரீட்டா முகர்ஜிக்கு பிரமோஷன் கிடைத்து நிரந்தரமாக அமெரிக்கா சென்றாள். என்னை அந்த மல்டிநேஷனல் கம்பெனிக்கு இந்தியாவின் ஸீஈஓ ஆக்கினார்கள். பத்திரிகைகள் என்னைப் பாராட்டின. கூகுள் சுந்தர்பிச்சை இது என் திறமைக்கு கிடைத்த பரிசு என என்னைப் பாராட்டி மெயில் அனுப்பினார். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தனிப்பட்ட வாழ்வில் என் மனசாட்சி ரொம்பத் தெளிவாக இருந்தது. தேவைப்படின் எந்த நிலையிலும் யாருடனாவது பிஸிகல் உறவு வைத்துக் கொள்வதிலோ, அல்லது லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்வதிலோ எந்தத் தவறும் இல்லை.

இந்த உலகம் எவ்வளவோ மாறியிருக்கு.

எனக்கு எப்போ தோணுதோ அப்போ எனக்கு சுகம் தரும் செயல்களை நான் செய்வேன். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். பெண்கள் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக் கொண்டது போதும்.

எனக்கு வேண்டியதெல்லாம் நான் சுதந்திரமா இருக்கணும். கல்யாணம் என்பது என் பார்வைக்கு அடிமைத்தனமா தெரியுது. ஒரு சுதந்திரப் பறவை போல வானத்தில் சிறகடிக்கணும். எனக்குப் பிடிச்ச மாதிரி என் வாழ்க்கையை நான் இஷ்டப்படி வாழணும்…

ஆமாம். எனக்குப் புடிச்சா ஒருநாள் முழுவதும் வீட்டிலேயே இருக்கணும்; இல்லைன்னா ஒரு இரவு முழுக்க வெளியிலேயே தங்கிடனும். . கோயிலுக்கு; பூங்காவுக்கு; கிளப்புக்கு; டிஸ்கோவுக்கு; மால்களுக்கு… எங்கே வேண்டுமானாலும் நான் போவேன், வருவேன். வீட்டு வேலைகள் எல்லாத்தையும் நானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வேன், இல்லைன்னா சமைக்கக்கூட மாட்டேன். ஆப்பில் ஆர்டர் செய்வேன்.

காலையில் மாமனார் மாமியாருக்கு காபி போடணும்; புருஷனுக்கு காலை உணவு சமைக்கணும்; குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பணும்; ராத்திரி புருஷன் கூப்பிட்டா அவனோட போய்த் தாச்சுக்கணும்… இதுபோன்ற எந்த நிர்பந்தங்களும், பொறுப்பும் எனக்கு வேண்டவே வேண்டாம்.

எனக்குத் தனியா இருப்பதுதான் பிடிச்சிருக்கு. என்னோட சுதந்திரம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. இது எல்லோருக்கும் புரியும்வரை நான் இதை எத்தனை முறை வேண்டுமானாலும் உரக்கச் சொல்லுவேன். ஆமா.

குழந்தைகள், பெரிய குடும்பம் என்று எல்லாம் இருந்தும் – தனியா இருக்கா மாதிரி உணருகிற எத்தனையோ பெண்களை நான் பாத்தாச்சு. ஆனா நான் தனியா இருக்கா மாதிரி எந்தச் சூழ்நிலையிலும் உணர்ந்ததே இல்லை. எனக்குக் குடும்பமும் நண்பர்களும் இருக்காங்க; சக மனிதர்களுக்கு நான் மதிப்பும் மரியாதையும் கொடுப்பேன். இதுவே எனக்கு வேண்டிய சந்தோஷத்தைக் கொடுக்குது.

கல்யாணமாகாத பெண்ணை இந்தச் சமூகம் பாரமா பாக்குது. ஆனா நான் எப்பவுமே இந்தச் சமூகத்துக்கு பாரமில்லை. நான் உலகைச் சுற்றித் திரியறேன். எனக்கு வேண்டிய பணத்தை நான் சம்பாதிக்கிறேன். அதை எப்படி செலவு செய்யணும்னு நான்தான் முடிவு செய்வேன்.

நான் யாருன்னு என் வேலை மூலம் நிரூபிச்சிருக்கேன். என்னைப் புகழ்ந்து பல கட்டுரைகளும் எழுதப் பட்டிருக்கு. கல்யாணமாகாத பெண் என்று என்னை கேலி செச்ஞ்சவங்க எல்லாம் இப்ப என் தைரியத்தை பாராட்டிப் பேசறாங்க. சாதனையாளர் என்ற புகழ் வேறு.

என் பெற்றோர் என்னை நெனச்சு பெருமைப் படறாங்க. என் தோழிகள் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக என்னை அவங்களோட பெண்களுக்கு சுட்டிக் காட்டுறாங்க.

என் விருப்பத்தைப் பத்தி மத்தவங்க என்ன நெனச்சாங்க என்பது முக்கியமில்லை. நான் எனக்காக ஜெயிச்சேன். எல்லோரையும் என்னைத் திரும்பிப் பார்க்க வெச்சேன். நான் இப்போது ஒரு ஐகான். அது போதும் எனக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *