கல்யாணமும் கலாதியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 3,187 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கல்யாண வீட்டிலன்றைக்கு ஏதாவது கலாதி கிளம்பும் போலிருக்கே!” என்றேன்.

“கலாதியில்லாமலென்ன, சுப்பர் கல்யாண வீட்டுக்கு வந்தால் நம சிவாயம் வரமாட்டாராம். சுப்பருக்கும் நமசிவாயத்துக்கும் ஏழெட்டு வரு சமாகப் பகை. சுப்பர் ஒற்றுமையாய்ப் போனாலும் நமசிவாயம் கொஞ் சம்கூட இணங்கமாட்டார்” என்றாள் என் மனுஷி.

“சின்னத்தம்பி, சுப்பருக்குச் சொல்லாவிட்டாலும், நமசிவாயத்துக் குத்தானே சொல்லுவார்”

“சேச்சே, நமசிவாயம் பணக்காரரென்றாலும், சுப்பர்தான் கிட்டின சொந்தம். பார்க்கிற மாதிரியில் இரண்டு பேருக்கும் சின்னத்தம்பி சொல்லிவிடுவார் போலிருக்கிறது”

“அப்படியானால் நமசிவாயம் வரமாட்டார். வந்தால் ஏதாவது கலாதி நடக்கும்”

“ஓமோம், அதற்காகச் சின்னதம்பி ஒருத்தருக்குச் சொல்லி, ஒருத்தருக்குச் சொல்லாமல் விடுவாரோ? அவருக்கென்ன பாரபட்சமில்லாமல் சொல்லிவிடுவார். வாறவன் வந்து, போறவன் போகட்டுமே!”

“ஓமோம், அதுதான் சரி. எங்களுக்கென்ன, கலியாண வீட்டுக்குச் சொல்லுவார்கள். கலாதி நடந்தால், தெருவில சண்டை கண்ணுக்குக் குளிர்த்திதான்!”

புதன்கிழமை கல்யாணம் என்று, சின்னத்தம்பியும் பெண்சாதியும் வந்து எங்கள் வீட்டில் சொன்னார்கள்.

“வந்த நீங்கள் வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொண்டு போங்கோவேன்” என்று என் மனுஷி சொன்னாள்.

“அதெல்லாம் வேண்டாம். இங்கே வாயிலேயிருக்கு. நாங்கள் உங்காலே எங்கும் போகவேணும். பொழுது கருகுது” என்று சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

அவர்கள் போனபிறகு அவர்கள் வெற்றிலைபாக்குப் போட இருந்தால். நமசிவாயம் அப்பருடைய கதையைக் கேட்கலாமென்றிருந்தேன். அவர்களுக்கு நேரமில்லை போகி றார்கள். இப்ப என்ன, நாளையின்றைக்குப் போய்ப் பார்த்து விடுவோம்” என்று என் மனைவி சொன்னாள். பெண்களுக்குத்தான் இந்த மூளையெல்லாம் ஓடும். ஆண்பிள்ளைகளுக் கென்ன தெரிகிறது. வெறும் வாயாகப் பேசிவிட்டுப் போகிறோம்.

சின்னத்தம்பியும் மனைவியும் எங்கள் வீட்டுக்கு வந்து சொன்னபடியால், நானும் என் மனைவியும் கட்டாயம் போகவேண்டியிருந்தது. அவர்கள் சொல்லாவிட்டால் கூட, எங்க ளுக்குப் போக ஆசைதான். “கலாதி நடக்கிற இடங்களுக்குப் போகக்கூடா” தென்று மற்றவர்களுக்குச் சொல்வோமே தவிர, அங்கே போவதற்கு நாங்கள் வெகுவாக ஆவல் கொள்கிறோம். இது மனித சுபாவம்.

கலியாண வீட்டுக்கு நாங்கள் இருவரும் கொஞ்சம் வெள்ளெனவே போனோம். என் மனைவி பெண்கள் பக்கமாகப் போனாள். நான் போய் ஆளுக்கிடையில் உட்கார்ந்தேன். யாரோ ஒருவர் வெற்றிலைத் தட்டத்தைக் கொண்டு ஓடிவந்தார். அவர் யாரென்று எனக்குத் தெரியாது. சின்னத்தம்பியின் உறவினராகத்தானிருக்க வேண்டும். ஆனால் எங்கேயோ தூரத்து மனுசனாயிருக்கவேண்டும்.

முடுக்குகளில் இருக்கும் உறவினரெல்லாம் வந்து சேருகிறார்கள். வெற்றிலைத் தட்டிலிருந்து வெற்றிலையை எடுத்து என் பக்கத்தில் வைத்து விட்டு அதில் அக்கறையில்லாதவன் போல இருந்தேன். இதுதான் நாகரிகம். வெற்றிலையின்மேல் “கண்ணாயிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளக் கூடாது.

உண்மையிலே எனக்கு வெற்றிலைமேல் கவனமில்லை. சுப்பர், நமசிவாயம் முதலியோர் வருகிறார்களா என்றுதான் கவனமாயிருந்தேன்.

கொஞ்சநேரமாயிற்று. முதலில் சுப்பர் வந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் நமசிவாயமும் வந்து சேர்ந்தார். நமசிவாயம் வந்தவுடன் ஏதாவது கலாதி நடக்குமென்று எதிர்பார்த்திருந்த எனக்குப் பெரிய ஏமாற்றமே கிடைத்தது. சுப்பர் இருந்து இடத்திற்குத் தூரத்திலேயே நமசிவாயம் உட்கார்ந்திருந்தார். நான் அவர்களிருவரையும் மாறி மாறிக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

கல்யாணச் சடங்குகளெல்லாம் நடந்தேறின. சாப்பாட்டு விசயத்தில் தான் ஏதாவது சண்டை நடக்குமென்று எதிர்பார்த்தேன். ஆனால் என்ன அதிசயம் 2 பேரும் சாப்பிடக் காத்துக் கொண்டிருந்தார்கள் போலிருந்தது.

நான் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். “கல்யாண வீடு என்னமோ கொஞ்சங்கூடச் சோபிக்காத மாதிரியிருந்தது. எங்கேதான் கல்யாணம் நடந்தாலும் ஒரு சின்னக் கலாதியும் கூடவே நடப்பது வழக்கம். ஆனால் இங்கே நான் ஒரு பெரிய கலாதியை எதிர்பார்த்துக் கொண்டு போக ஒரு சின்னச் சண்டைகூட நடக்கவில்லையென்றால்?

வீட்டுக்குப் போகுமட்டும் நான் மனைவியோடு இந்த விசயத்தைப் பற்றிப் பேசவில்லை. தெருவிலே போகும்போது ஊர் விசயங்களைப் பற்றியெல்லாம் பேசலாமா?

வீட்டுக்குப் போனவுடன் “இந்தாபார், இன்றைக்கென்ன இப்படி எதிர் பாராத விதமாய் நடந்துபோச்சு” என்றேன்.

“என்ன?” என்றாள். என் சம்சாரம். “அறியாத மாதிரிக் கேட்கிறாயே, நமசிவாயம் – சுப்பர் சங்கதிதான்!”

“நீங்கள் கலியாண வீட்டுக்கு வரவில்லையா?” என்று ஆச்சரியத்துடன் என் மனைவி கேட்டாள்.

“உன்னோடேதானே வந்தேன்”

“அப்படியானால் நமசிவாயம் – சுப்பர் சங்கதி கேட்கிறீர்களே! அவர்கள் தான் ஒற்றுமையாகப் போய்விட்டார்களே!”

“ஒற்றுமையாகவா?”

“ஓமோம்; இது தெரியாமல் கல்யாண வீட்டில் என்ன பார்த்தீர்கள்? நேற்றுச் சாயந்தரம் நமசிவாயத்தினுடைய நடுவில் பையன் கிணற்றுக்குள்ளே விழுந்துவிட்டானாம். அந்தப் பக்கமாகப் போன சுப்பர், கூக்குரலைக் கேட்டு ஓடிப்போய்க் குழந்தையைத் தூக்கினாராம். நமசிவாயம் எங்கேயோ போய்விட்டுப் பிறகுதான் வீட்டுக்கு வந்தார். அவர் வரும்போது சுப்பருடைய மடியில் குழந்தை கிடந்தது. பிறகு கேட்கவேணுமோ? எல்லாம் ஒற்றுமையாகப் போய் விட்டார்கள்”

“ஓகோ, அப்படியா?” என்று நான் ஆச்சரியப்பட்டேன். என்ன இருந்தாலும் பெண்டுக்ளுக்குக் கெட்டித்தனம் கூடத்தான். நான் “ஆண்பிள்ளை” என்று கல்யாண வீட்டுக்குப் போயும் விசயத்தை அறிய முடியவில்லை. என் மனைவி எப்படியோ அறிந்துவிட்டாளே!

– ஈழகேசரி 1941, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *