(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தங்கள் விளையாட்டில் தீவிரமாய் இருந்தார்கள். அக்கம் பக்கத்து வீட்டு சன்னல்களில் வண்ணவண்ண விளக்குகள் ஏற்றிவிட்டார்கள். இறுதி நோன்பை முடிப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் கலகலப்பாய் நடந்து கொண்டிருந்ததை பரபரப்பு மிகுந்த சூழ்நிலை எடுத்துக் காட்டியது.
பானு குழந்தைகளைப் பார்த்தாள். அவள் சிரமப்பட்டுத் தேடிய பொருளில் வாங்கிக் கொடுத்த விளையாட்டுப் பொம்மைகளைத் தரையில் வீசிவிட்டு புதிய பொம்மைகள்.. விலையுயர்ந்த பொம்மைகளில் அவர்களின் கவனம் முழுமையாய் ஆழ்ந்திருந்தது.
“ஜவகர்.. ஜின்னா..” குழந்தைகளை அழைத்தாள். அவர்கள் திரும்புவதாய் தெரியவில்லை. குழந்தைகளைப் பார்க்கையில் ஒருபுறம் ஆச்சரியமும் மறுபுறம் ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.
தினம்தினம் அவர்களோடு அல்லாடிக் கொண்டிருக்கும் அவளை விட அவள் வாங்கித் தந்த பொருட்களைவிட வாரம் ஒருநாள் வந்து போகும் அப்பாவும் அவர் வாங்கித் தரும் பொருட்களும் இவர்களுக்கு அவ்வளவு உயர்வாகப் போவதன் மகிமைதான் என்ன..
இந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் தங்கள் அப்பா போலவே புதியதைப் பார்த்ததும் பழசை மறக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்களோ.. இல்லை. இல்லை இந்த ஆண் பிள்ளைகளின் புத்தியே இப்படித்தான். அற்பமான புதியதைப் பார்த்ததும் அபூர்வமான பழையதை மறந்து விடுவார்கள்!”
மனம் தவிக்க மக்களின் மேல் பார்வை புதிய நினைவுகள் எங்கோ பின்நோக்கி ஓடின.
பானு பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளையான ஜமாலுக்கு மனைவியாகி அந்த அரண்மனை போன்ற வீட்டில் மருகமளாய் காலடி வைத்தபோது அந்த வீடுமட்டும் பெரிதல்ல.. மாமனார் மாமியார் அவர்களின் ஒரே வாரிசான தன் கணவரைப்போல பெரிய மனம் படைத்தவர்கள்தாம் என்பதை அவர்களின் நடவடிக்கையினால் தெரிந்து கொள்ள முடிந்தது.
கண்ணுக்கு அழகான ஜோடிப் பொருத்தம். கல்வியிலும் இணையான தகுதி. அறிவோடும் அன்போடும் இல்லறம் நடந்தது. ஐந்து ஆண்டுகள் காற்றோடு காற்றாய் கரைந்தபின் அவர்களின் வாழ்க்கையின் மிச்சமாய். வாழ்வின் அடையாளச் சின்னமாய் இரண்டு ஆண்பிள்ளை தங்கப் பதுமையாய் அந்த வீட்டில் நடை பயில ஆரம்பித்தார்கள். ஜவகர் பிறந்து ஈராண்டில் ஜின்னா பிறந்தான். முதல் பிரசவம் சுகமாக இருந்தது என்றாலும் இரண்டாவது பிரசவம் பானுவை படுக்கையில் தள்ளியது. அவள் நோயாளி என்ற முத்திரையோடு தனித்து விடப்பபட்டாள். அளவுக்கு மீறிய அனுதாபம். உடல் பலவீனத்தைக் காரணம் காட்டி நிரந்தரமான ஓய்வு என்று அவளை அந்த வீட்டினர் தனியாகக் கவனிக்கத் தொடங்கினர். குறைந்தது ஓராண்டு காலமாவது கணவன் மனைவி உறவு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனையும் பிறந்தது.
பானுவை அணுஅணுவாய்.. அங்குலம் அங்குலமாய் ரசித்து சுவைத்தவன் ஜமால். அவளது வேல்போன்ற விழிகளின் ஆழமான பார்வையில்.. அதன் வீச்சில் அவள் மடியில வீழ்ந்து கிடப்பவன். அவளின் பாளைச் சிரிப்பிலே பலமணி நேரங்கள் தன்னைமறந்து கிடந்தவன்.
புள்ளிமானாய்த் துள்ளி ஓடி வந்து அவன் தோளில் கைகளை மாலையாய்க் கோர்த்துக்கொண்டு அவளைக் குழந்தையாய்க் கொஞ்சவேண்டும். இவன் அவளை முதுகில் அம்பாரி சுமக்க வேண்டும் என்று ஆசை ஆசையாய் வீட்டுக்கு ஓடி வருவான்.
கைகொள்ளாத மல்லிகைப் பந்தை அவளது கூந்தலிலே சூட்டி அந்த மலர்கள் நோகா வண்ணம் மங்கையை ரசித்தவன். ‘பாலும் தேனும் வேண்டாமடி.. நீ என் பக்கத்தில் இருந்தால் போதுமடி’ என்று ஒரு மணித்துளி கூட அவளைப் பிரிய விருப்பமில்லாதவன் அந்த ஜமால் வெயிலில் விழுந்த தளிராகிப் போனான். உள்ளம் வாடியது. உடம்பு சுகத்தை தேடி ஏங்கியது. மனைவியின் முகத்தைப் பார்த்து பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழி இல்லாது தவித்தான்.
நண்பர்கள் அவனுக்கு எளிதான உபாயம் சொன்னார்கள். மார்க்க சட்டங்களுக்குத் தன் தந்தை கொடுத்துவரும் மரியாதையும், தன் தாயார் தன்னை வளர்த்த பொறுப்புணர்வும் அவர்கள் காட்டிய வழிக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தியது.
ஒத்திப் போட்டுவந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு திருமணத்தைச் செய்து கொள்ள விரும்பினான். தன் பெறறோர்களின் அனுமதியைக் கேட்டான்.
“உன் மனைவி ஒத்துக் கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை மகனே.. அல்லாவின் ஆணை அதுவானால் அப்படியே நடக்கட்டும்” என்றார்கள்.
படுக்கையில் சுருண்டு கிடந்த பானுவிடம் கேட்டான்.
தன் கணவனை இன்னொருத்தியோடு பாங்கு போட்டுக் கொள்ள பானு இணங்கவில்லை. அதை கொள்கையளவில் கூட அவளால் ஏற்க முடியவில்லை. தற்காலிகமான தனது உடல் நிலைக்காக இப்படியொரு நிரந்தரமான மாற்று ஏற்பாட்டைத் தன் கணவன் செய்வது எந்தவகையிலும் நியாயமானது அல்ல என்று அவள் உறுதியாகக்கூறினாள். இது அவள் தன் கணவன் மேல் வைத்திருந்த அளவு கடந்த அன்பையும் ஆசையையும் பொறாமையாகவும் வெறுப்பாகவும் மாற்றி வைத்தது. இரண்டாவது மனைவி வேண்டுமெனில் முதலில் அவன் “தலாக்” மணவிலக்கு சொல்லி விடட்டும் என்ற தனது கடுமையான நிபந்தனையை முடிவாகக் கூறிவிட்டாள்.
பானுவிடமிருந்து இவ்வளவு மோசமான பதிலை ஜமால் எதிர்பார்க்கவில்லை. எனினும் அவள்மேல் அவன் வைத்திருந்த அதிகமான பிரியமும் அன்பும் திணற வைத்தன. எவ்வளவோ சமாதானம் விளங்கங்களை சொன்னாள். பிடிவாதம் தளரவில்லை.
என்னதான் பிரியமான மனைவியாக இருந்தாலும் மார்க்கம் தனக்கு வழங்கியிருக்கும் உரிமைக்கு, அவள் இவ்வளவு பிடிவாதமாக எதிர்ப்புத் தெரிவிப்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனது ஆண்மைக்கும் தன்மானத்திற்கும் ஒரு சவாலாகக் கருதினான். அவளது நிபந்தனைப்படியே அவளுக்கு ‘தலாக்’ கொடுத்து விட்ட ஜமால் தனது அலுவலகத்தில் தன்னோடு பணிபுரிந்த ரஜிதாவை ‘நிக்காஹ் திருமணம் செய்து ஆண்டு ஒன்று ஓடிவிட்டது.
பானு படித்தவள் என்ற காரணத்தினால் வாழ்க்கையை ஓட்டுவது அவளுக்கு எவ்வித சிரமத்தையும் தரவில்லை. நல்ல வேலையில் அமர்ந்தாள். பிள்ளைகளோடு தனியாக வீடொன்றைப் பார்த்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள். இரண்டு அறைகளைக் கொண்ட அந்த வீட்டில் தன் உறவுப் பெண் ஒருத்தியை துணைக்கு வைத்துக் கொண்டாள். வாரக் கடைசி நாட்களில ஜமால் வருவான். பிள்ளைகளோட விளையாடுவான். குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் திண்பண்டங்கள பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பான். போய்விடுவான்.
அவன் பேச விரும்பினாலும் அவள் பேசமாட்டாள். “இன்றும் கோபம் போகலையா உனக்கு என்ற வார்த்தையோட போவான்.
இப்போதும் அப்படித்தான். வரப்போகும் பெருநாளுக்காக குழந்தைகளுடன் அவளுக்கும் சேர்த்து அவன் வாங்கி வந்த பொருட்களை முகத்தில் வீசியடிக்காத குறையாக அவனிடம் தூக்கிப் போட்டுவிட்டு அவன் போகும் வரை வெளியே வந்தவள் அவன் போனதும்தான் உள்ளே வந்தாள்.
மனம்பூரா விம்பி வந்து மனைக்குள் புகுந்து கொண்டது. உள்ளே போனாள். குழந்தைகளுக்கான உணவை சமைக்க ஆரம்பித்தாள். வீட்டு வாசலில் அழைப்பு மணியை யாரோ அழுத்தினார்கள். கையிலிருந்ததைப் போட்டு விட்டு விரைந்தாள். கைக்குழந்தையோடு ஷகீலா நின்றுகொண்டிருந்தாள். பள்ளிப் பருவத்து சிநேகிதிகள். கடடித்தழுவி கைக்குழந்தையை வாங்கினாள்.
“உன்னோடு அவசர புத்தியை இன்னுமா நீ விடலே. வீட்டுக்குப் போனேன். அம்மா எல்லா விபரமும் சொன்னாங்க. ஒரு படிச்ச பொண்ணு.. அதுவும் மார்க்க சட்டங்களை ஒழுங்கா படிக்கிற பொண்ணு. நீயா இப்படி நடந்துக்கிட்ட உனோட படிப்புக்கே அர்த்தமில்லாமப் போச்சேடி. கொட்டினதை அள்ளி எடுக்க முடியுமா? இந்த சின்ன வயசில இப்படி பாழடிச்சிட்டு வந்து நிற்கிறியே..”
வந்தவள் தோழியை உரிமையோடு கண்டிக்க ஆரம்பித்தாள். பானு தன் மனவேதனையை வெளியிட முடியாமல் தோழியின் மடியில் முகம் புதைத்து அழுதாள்.
“நான் அவரசப் படலேடி.. அவசரப்பட்டது அவருதான். ஆபிரேஷன் பண்ணின பொண்டாட்டி உடம்பு பூரண குணமடையற வரைக்கும் கூட பொறுமையா இருக்க அவரால முடியலியேடி..”
“அந்த விஷயத்தில் எல்லா ஆம்பிளைங்களும் அவசரக்காரவதான். ஆனா எந்த விஷயத்தில் பெண்பிள்ளை அவசரப் பட்டுக் கூடாதோ அந்த விஷயத்தில் நீ அவசப் பட்டுட்டியே..!”
“அவசரப் பட்டாலும் ஆறப்போட்டு செஞ்சாலும் அந்த விஷயத்துக்கு வேறே முடிவே இல்லியேடி”
“ஏன் இல்லே! ஒரு தாய்கிட்டே நாலு பிள்ளைங்க வளர்றபோது ஒரு புருஷன்கிட்ட ரெண்டு பெண்ணுங்க வாழ முடியாதா..’
“நீ சொல்றதெல்லாம் பேச்குக்குத்தான் நல்லா இருக்கும் ஷகீலா..! அனுபவதில் சரியா வராது. என்னோட இடத்தில நீ இருந்து அதை அனுபவிச்சாதான் உனக்கும் புரியும்டி..”
“நான் வாழ்க்கை அனுபவத்தை வெச்சுதான் சொல்றேன்..இந்தப் பிள்ளைக்குத் தகப்பன் என் புருஷன்தான். ஆனா தாய் யாரு தெரியுமா..? நான் இல்லே.. என் சக்களத்தி.. அதாவது அவரோட ரெண்டாவது மனைவி பெத்த பிள்ளைதான்டி இது..!”
பானு திகைத்துப் போனாள். உடம்புகூட குப்பென்று வியர்த்தது.
“என்னடி சொல்றெ நீ. உன்னோட புருஷனுக்கு இன்னொரு மனைவியா.. அவ பெத்த பிள்ளையா இது..?”
“ஆமாம் பானு.. உனக்கு முன்னாலேயே கல்யாணம் முடிச்சவ நான்! ஏழு வருஷமா பிள்ளை இல்லென்னு பார்க்காத வைத்தியம் இல்லே..நேராத நேர்த்திக் கடனுமில்லே! என் வீட்டுக் காரர்கிட்ட எந்தக் குறையுமில்லென்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. என்னோட கதையோ புதிரா இருந்துச்சி..
“அதுக்காக..” பதறினாள் பானு. “ஏன்டி பதர்ரே.. சின்ன வயசில நாமெல்லாம் ஆத்திலே குளிக்கப் போவோமே.. ஞாபகம் இருக்கா உனக்கு..? தண்ணியில இறங்கிற வரைக்கும் குளிர் பயம் இருக்கும். தண்ணீரில் இறங்கி உடம்பு நல்லா நனைஞ்சிட்டா குளிரும் இருக்காது. உதறலும் பயமும் வராது. அதுமாதரிதான் இதுவும்.
தானா கசந்து போறதுக்கு முன்னாடி நானே முந்திக்கிட்டேன். இறைவன் மேலே பாரத்தைப் போட்டுட்டு என் புருஷனை வம்பு பண்ணி ரெண்டாந்தாரம் நானே பெண்ணப் பார்த்து நிக்காஹ் முடிச்சிட்டேன்.
இன்பக் குளிரும் அடிக்கலே! உதறலும் எடுக்கலே! ஒரு வருஷத்துல மகராசி இந்தப் பிள்ளைப் பெத்துக் கொடுத்தா… இது ராத்திரி பகலா என்கிட்டதான் இருக்கு. இப்ப மறுபடியும மாசமா இருக்கா.. வீட்ல சந்தோஷம் நிறைஞ்சு இருக்கு. அல்லாஹ் கருணையினால் அக்கா தங்கச்சியா நாங்க அவரோட இருக்கோம்”
“அதிசயமாத்தான் இருக்கு ஷகிலா.. ஆனா உன் குறை உனக்கு இந்த முடிவை எடுக்க வச்சிருக்கு.. ஆனா என் இயலாமை தற்காலிகமானது குறைதானே.. ! அதுக்காக அவர் மறுமணம் செய்துக்கிட்டது எப்படி சரியாகும்?”
“‘அடி பயித்தியக்காரி.. என் குறைக்காக இந்த முடிவுக்கு நான் வரலேடி.. அல்லாஹ் கிருபையினாலே நானும் ஒரு பிள்ளையை நிச்சயம் பெறுவேன்கிற நம்பிக்கை எனக்கு உறுதியா இருக்கு. அவருக்கும் இருக்கு.. ஆனா அதுக்காக காலத்தை ஏன் வீணாக்கணும். புருஷன் ஒரு பெண்ணுக்கு வெறும் புருஷன் மட்டும் இல்லடி.. அவளுக்கு அவன் தலைப்பிள்ளை.. அவனுடைய ஆசாபாசங்கள அத்தனையும் புரிஞ்சு அதை மனப்பூர்வமா அனுசரிக்க விடற தாயைப் போல இருப்பவதான் உண்மையான மனைவி.
எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணுக்காக எவ்வளவோ பாரங்களைச் சுமக்கிற கணவனுக்காக சின்ன சின்ன விஷயங்களைக் கூட புரிஞ்சு நடந்துக்காம இருந்தா அது குடும்பம் இல்லே பானு. அது கண்ணுக்கு தெரியாத நரகம்..
“உன் புருஷனுக்கு வந்தவ மாதரியே என் புருஷனைக் கட்டிக்கிறவளும் இருப்பபான்னு சொல்ல முடியுமாடி..”
“முடியாதுதான். ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே உன் புருஷன் எப்படி பட்டவர்னு தெரிஞ்சா நீ அவரைக் கட்டிக்கிட்டே.. அமைஞ்சவரைக்கும் அல்லாஹ்வோட தீர்ப்புன்னு நெனைச்சி வாழறதுதான் புத்திசாலி வாழ்க்கை பானு… உயிர் வாழப்போறது ஒரு தடவைதானே.. அதுல எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆணவம் ஆத்திரமெலாம்.. ஆண் அவசரப்பட்டா ஆத்திரப்படாலாம்.. ஆண் அவசரப்பட்டா ஆத்திரப்பட்டா அதனாலே வர்ற கேடு அவனுக்கு மட்டுந்தான். ஆனா பொண்ணு பொறுமையை இழந்துட்டான்னா அது கரையைக் கடந்த நதியாய் போயிடும்”
முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் பானு.
“அழதே பானு.. நீ உன் தப்பை உணரனும்னுதான் நான் இவ்வளவு நேரம் பேசினேன். அல்லாஹ் மிகப்பெரிய கொடையாளன் மிக கருணையாளனும்கூட. உன் தப்புக்கு நீ இறைவனிடமே பாவங்களை போக்கிட உதவி கேளு!”
‘அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்வே!
எங்களைக் காக்கும் அல்லாஹ்வே!
எல்லம் வல்ல அல்லாஹ்வே!
கருணைக் கடலே ரஹ்மானே!”
நாடி அவனை “இறைத்துதி” செய்தால் நீ நினைக்காத வழியில் உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுப்பான். கவலைப்படாதே நானும் உனக்காகத் ‘துஆ’ செய்கிறேன்.
தோழி புறப்பட்டு விட்டாள். மயக்கத்திலிருந்து எழுந்தது போல் தெளிவுடன் எழுந்த பானு தோழிக்கு தேனீர் கொண்டு வந்து கொடுக்கிறாள். பின் வாசல் வரை வந்து வழியனுப்புகிறாள்.
“கவலைப்படாதே பானு.. அல்லாஹ் இடத்தில் பிரச்சனையை ஒப்படைச்சிட்டு தைரியமா இரு…”
தோழி போய் விட்டாள். வீட்டுக்குள் திரும்பியவளின் காதுகளில் அல்லாஹு அக்பர் என்று நான்கு முறை ஒலிபெருக்கியில் ‘பாங்கு ஒலி” யில் அழைப்பு வருவதை உணர்த்தினாள். இறைவனின் அழைப்பாய் ஏற்று தொழுகை முடிந்து சலாம் கொடுத்து திரும்பியவளின் கைகளில் குழந்தைகள் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறார்கள். கணவனே வந்து கட்டி அணைத்த உணர்வு நீண்ட நாட்களுக்குப்பின் உடம்பில் பரவுகிறது. குழந்தைகளை இறுக அணைத்தவளின் இரு விழிகளில் கண்ணீர் பெருகி வந்தது.
– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.