கலி முத்திண்ருக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 10,549 
 
 

ஹாலிலுள்ள டீவி, சோபா இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த தூசிகளை பழைய துணியை வைத்து அகற்றிக் கொண்டிருந்த கோபாலனை கைபேசி ஒலி அழைத்தது. எதிர் முனையில் அவனது பால்ய சினேகிதனும் தற்பொழுது சம்மந்தியாகும் வாய்ப்புமுள்ள சடகோபன். அந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தான் கோபாலன் துணியைத் தூர வீசிவிட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினான். அவன் வீட்டிற்குள் சிக்னல் ஒழுங்காகக் கிடைக்காது. சடகோபனிடம் “டேய்! நாங்கள் ரெடியாக இருக்கின்றோம். பையன் நேத்தியிலிருந்தே ஆபிஸ¤க்குப் போகலை. இரண்டு நாளா என் மனைவி டியூஷன் எடுத்திண்ருக்கா. ஏற்கனவே நன்றாக ச் சொல்லிக் கொடுத்தது தான். ரிவைஸ் பண்ணின்ருக்கா.நீ ஒன்னும் கவலைப் படாதே!. உம் பொண்ணு என்ன கேள்வி கேட்டாலும் டாண் டாண்ணு பதில் சொல்லி வெளுத்து வாங்கிடுவன்.நம்ம இரண்டு பேருக்கும் இன்னிக்கு ஜெயம்தான்!” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்

“ஆமாம்!. நீ ஆத்திலிருந்து புறப்பட்டாச்சா?” என்று கேட்டான்.

“இல்லை! இல்லை!” என்றான் சடகோபன்.

“ஏன்? என்னாச்சு?” என்று பதறினான் கோபாலன்.

“வேறொன்னுமில்லை. என் பெண் இன்னும் ஆபிஸிலிருந்து வரலை.”

“அவளிடம் முன்னமே சொல்லலையா?”

“சொல்லியிருந்தோம் அவளும் சரி வரேன் என்றுதான் சொல்லியிருந்தாள்.”

“இன்று காலை அவளிடம் ஞாபகப்படுத்த விட்டுப்போச்சோ?”

“சே!இன்று காலையும் என் மனைவி அவளிடம் ஞாபகப்படுத்தினதா சொன்னாளே” “அப்படின்னா! நீ ஞாபகப்ப்டுத்தலையா.?”

“நீ வேற! கொஞ்ச நாட்களா அவ முன்னாடி போய் நிற்கவே பயம். நானேங்க பேச”.

“கொஞ்ச நாட்களாகவா இல்லே கொஞ்சம் வருஷங்களாகவா ?”

“ஓய்! கிண்டல் பண்ணிக் கொண்டிருக்காதேயும் ஆக வேண்டியதைப் பாரும் “

“நான் ரெடியாத்தானே இருக்கேங்காணும் என்னைப் போய் ஆகவேண்டியதைப் பாரும் என்கிறிரே. உம்மச் சொல்லிக் குற்றமில்லை. உம்ம சகதர்மிணி, பொண்ணு முன்னாடி அப்பப்ப உம்மிடம் பயப்படுவதுமாதிரி கொஞ்சம் நடித்திருக்கலாம்.நீராவது உம்ம பாரியாளிடம் பொண்ணு முன்னாடி

“அப்பப்ப கொஞ்சம் குரலை உயர்த்தி அதிகாரம் பண்ணுவது போல் நடிப்பேன்.என் ராகத்திற்கேற்ற தாளம் போடுவது போல் பயந்த மாதிரி நடி.” வேணும்னா! வேணும்னா என்ன! கட்டாயமாக ஒவ்வொரு தடவையும் பொண்ணு போனப்புறம் எத்தனை தோப்புக் கரணம் போடச் சொல்றியோ மறுபேச்சில்லாமல் அத்தனையும் போடறேன்னு ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கலாம்.சினன வயசிலேருந்து உம்ம பொண்டாட்டிக்கிட்ட நீர் நடந்துக்றத பார்த்து பார்த்து நீர் ஒரு பிள்ளைப் பூச்சி என்று உம்ம பொண்ணு மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சுடுத்து” என்றான் கோபாலன்.

“அங்கு மட்டும் என்ன வாழறது?” என்று எனக்குத் தெரியாது – சடகோபன்.

“நிறுத்து! நான் பிள்ளையையாக்கும் பெத்து வச்சிருக்கேன். நான் அவனுக்கு எங்காத்தில் வச்சுக் கொடுத்தது ‘ப்ரேக்டிகல் டிரெயின்ங்’. அதனால் தான் உன் பொண்ணுக்கு நல்ல அடக்க ஒடுக்கமான பவ்யமான ஆம்படையான் கிடைக்கப் போறான் தெரிஞ்சுக்கோ! “

“சரி! விஷயத்துக்கு வா!”

“மேற் கொண்டு என்ன செயய வேண்டும் என்று சொல்ல வேண்டியது நீ!” .

“என் பொண் எப்ப வருவள்னு தெரியாது. வந்ததும் என் மனைவியை விட்டுப் பேசச் சொல்றேன். அதுவும் அவள் மூடு பார்த்துத் தான் பேச முடியும்”.

“யார் மூடு?” .

“என் பொண்ணோட மூடு தான்”

“பெண்ணிடம் பேசுவதற்கு மனைவியிடம் சொல்ல மனைவியின் மூடை நீர் பார்க்க வேண்டாமா?”

“அதுவும் சரிதான்” .

“நாளைக்கு வைத்துக் கொள்வோமா?” .

“டேய்! பொண்ணிடம் பேசாமல் என்ன செய்ய முடியும்.? நான் தமிழில் தானே பேசிக் கொண்டிருக்கின்றேன் உனக்கு புரியவில்லையா?”. .

“நன்னாப் புரியறது. உனக்கு தமிழிலாவது நன்னாப் பேச வரும்னு தோன்றதில்லையா பயப்படா ம உம் பொண்ணிடம் தமிழில் பேசி நாளையாவது எங்காத்துக்கு அழைச்சுண்டு வரப் பாரு!” என்றுரைத்துவிட்டு விட்டிற்குள் திரும்பினார் கோபாலன்.

இடைமறித்த கோபாலனின் மனைவி மாலதி யாரண்ட பேசின்ருந்தேள்? என்று கேட்டாள். என் ப்ரெண்ட் சடகோபன்.

“அவர்கள் எல்லாம் புறப்பட்டாச்சா?” .

“இல்லை! “

“இல்லையா?-“

“அவாத்துப் பெண் இன்னும் ஆபிஸிலிருந்து திரும்பலையாம்.”

“அப்போ அவா இன்னிக்கு வரலையா?”

“ஆமாம்! வருவது சந்தெகந்தான் “

“அச்சச்சோ! நான் பார்த்து பார்த்துப் பண்ணிய பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் வீணா?”

“ஒன்னு செய். பக்கத்தாங்களிலெல்லாம் கொடுத்து விடு “

“வேறு வினையே வேண்டாம். நான் யாரிடமும் மாப்பிள்ளைப் பார்க்க வருவதைப் பற்றி மூச்சு விடவில்லை.”இதைக் கொடுத்தால் எல்லோரும் ” இது எத்தனாமத்துப் பொண் உங்க பிள்ளையை மாப்பிள்ளை பார்க்க வரது” என்று கிண்டலடிப்பார்கள். உலகத்திலே இல்லாத புதுமையை நீங்கள்தான் புகுத்தியிருக்கின்றீர்கள் என்று அவாளண்ட சொல்ல முடியுமா என்றாள் மாலதி.

“சொல்லேன்! எல்லோரும் என்னை தீர்க்கதரிசி என்று பாராட்டுவார்கள். நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே யோசித்து என்னமா செயல்படறார்னு வாய்க்கு வாய் புகழுவா!” என்றார் கோபாலன்.

“நாளைக்காவது வருவார்களா “என்று கேளுங்களேன். நான் ப்ரிஜ்ஜில் வைத்து சமாளித்து விடுகின்றேன்.

உடனே பிள்ளை, வாசு, இடையில் புகுந்து ஒரு வேளை ப்ரிஜ்ஜில் வைத்து ருசி குறைந்து நன்னாயில்லாமல் போய்விட்டால் அதனால் கல்யாணம் குதிராமல் போய்விடப் போகின்றது என்று போலியாக பயந்து கொண்டே சொன்னான்.

அதுவும் சரிதான். நாமே ப்ரிஜ்ஜில் வைத்து தின்னு தீப்போம். உங்கள் நண்பா¢டம் நாளைக்காவது கட்டாயம் வருவார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள். வேறு பதார்த்தங்கள் பண்ணலாமென்றிருக்கின்றேன் தானியங்களை ஊறெல்லாம் வைக்கவேண்டும்.

உடனே கோபாலன்” சடகோபன் பெண்ணிடம் பேசவே பயப்படுகிறான்”

“பெருமாளே! அப்படியா!”ஆச்சரியப் பட்டாள் மாலதி.

“நாளைக்கு நம்ம பிள்ளையோட கல்யாணமாகிவிட்டால் நீங்களும் உங்க •ப்ரெண்ட் மாதிரிப் பேசப் பயப்படுவீர்களோ?” .

“என் ப்ரெண்டை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றான் சாதுரியமாக”

“அதாவது நீங்களும் ஓடி ஒளிந்து கொள்வீர்க்ள்தானே”

“அது சரி! நீ எப்படி சமாளிப்பாய்?

“எனக்கென்னபிரச்சனை? நம்மாத்து பிள்ளைதானே அங்கு போய் வாக்கப் படப் போறான்” .

இதைக் கேட்டதும் வாசு “அம்மா! அப்படிச் சொல்லாதேம்மா!” கேட்கும் போதே பயம் உண்டாகிறது என்றான் கிண்டலாக.

“போடா! அசடு! எல்லாம் போகப் போகச் சரியாயிடும்.”

“விசேஷங்களுக்கு வருவார்களே அப்ப என்ன செய்வை?” – கோபாலன்

“சடகோபனின் மனைவி பத்மாவிடம் ஒரு மாதம் டிரெயினிங்க் எடுத்துக் கொண்டால் போறது”

அடுத்த நாள் காலை சடகோபனிடமிருந்து போனில் சுபச் செய்தி வந்தது. அன்று கட்டாயமாக அவர்கள் வருவதாக சொன்னார். வாசு வேறு வழியில்லாமல் லீவை நீட்டினான்.

சாயந்திரம் சடகோபனும் அவன் மனைவி பத்மாவும் ஒரு ஆட்டோவில் கோபாலன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். கோபாலன் பொண் எங்கே ? என்று சடகோபனிடம் கேட்க அவள் ஆபிஸிலிருந்து நேராக இங்கு வந்து விடுகின்றேன் என்று கூறிவிட்டாள் என்றார் .அதோடு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தானே என்றார். அவருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவர் வாழ் நாளிலேயே இந்த அதிசயங்களையெலலாம் பார்ப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. நல்ல வேளை ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன் பிறந்ததால் தப்பித்தோம் என்று தன் முதுமையை தானே பாராட்டிக் கொண்டார் சடகோபன். டிபன் காப்பி சாப்பிட்டதில் அரை மணி கழிந்தது. அவள் வந்து கொண்டிருக்கின்றாளா என்று கேட்பமா என்றார் கோபாலன்.சடகோபன் அதெல்லாம் வேண்டாம் என்றார் பயந்து கொண்டே.பத்மா தான் போனில் பேசிவிட்டு அவள் இப்ப வந்துடுவள் என்றாள் சடகோபனிடமிருந்த டென்ஷன் வெகுவாகக் குறைந்தது.

சௌமியா ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் டீம் லீடராக வேலை பார்க்கிறாள். ரொம்பவும் திறமைசாலி கை நிறைவதற்கும் மேல் சம்பளம் நிர்வாகம் அவளின் திறமையை மதித்து அவளுக்கு உயர்ந்த ஸ்தானம் அளித்துள்ளது.அவள் பேச்சுக்கு அங்கு மறு பேச்சில்லை. மொத்தத்தில் அந்த நிர்வாகம் அவளின் “தான்” என்ற அகங்காரத்தை நிறைய எண்ணை ஊற்றி நன்னா வளர்த்து வைத்திருந்தது.

சௌமியா காரை ஓரமாக நிறுத்திவிட்டு கோபாலனின் விட்டிற்குள் ஸ்டைலாக நுழைந்தாள். அவள் ஜீன்ஸ் பேண்டும் பெரிய செக் போட்ட முழுக்கை சட்டையும். சட்டையை ‘டக்’ வேறு பண்ணியிருந்தாள்.கண்ணைவிட ரொம்பப் பெரிய கூலிங் கிளாசை தலைக்கு மேல் விட்டுக் கொண்டு அவள் நடந்து வரும் தோரணையே கவர்ச்சியாக இருந்தது. சடகோபனின் பெருமிதமான பார்வை பொண்ணை எப்படி ஆம்பிளை மாதிரி வளர்த்திருக்கேன் பார்த்தாயா? என்று சொல்வது போல் இருந்தது கோபாலனுக்கு. நீ எங்க வளர்த்த?அது உன் மனைவியைப் பார்த்து வளர்ந்திருக்கு என்று பார்வையாலே பதில் சொன்னான் கோபாலன்.

மாலதி சௌமியாவின் கையைப் பிடித்து வரவேற்று சோபாவில் அமர்த்தினாள்.
சௌமியாவிடம் டிபன் காப்பி சாப்பிடுவோமா “காப்பி சாப்பிடுவையா அல்லது பூஸ்ட் கலக்கட்டுமா.” என்றாள் “இல்லை ! இல்லை ! ஒன்றும் வேண்டாம். எனக்குப் பசியில்லை ஏற்கனவே ஆபிஸ் கேண்டினில் கொஞ்ச முன்னாடி என் •ப்ரெண்டுடன் போய் ஒரு கட்டு கட்டிட்டு வந்திருக்கின்றேன்” என்றாள்.

அதன்பின் மாலதி சௌமியாவிடம் தன் பிள்ளயின் ப்ரதாபங்களை வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தாள். அவன் CA பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணியுள்ளான். ஆல் இந்தியா ரேங்கில் 121 ஆக வந்துள்ளான். அவனுக்கு மும்பையிலுள்ள பெரிய பெரிய கம்பெனிகளிலிருந்தெல்லாம் ஆப்ர் வந்தது. நாங்கள் தான் அதெல்லாம் வேண்டாம். காலா காலத்தில் கல்யாணம் நடக்க வேண்டும். வயதாகிக் கொண்டே போகின்றது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன்னை ஒரு பெண்ணின் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் எங்கள் கடமை தீர்ந்துவிடும் என்று கூறி லோக்கலில் வேலை பார்க்கவோ அல்லது தனியாக ப்ராக்டீஸ் செய்யவோ முயற்சி செய் என்று கூறி விட்டோம். அவன் இப்போது வேலை பார்க்கும் கம்பெனியில் சம்பளம் குறைவு என்றாலும் அவன் இஷ்டத்திற்கு எப்ப வேண்டுமானாலும் போகலாம், வரலாம் லீவும் இஷ்டம் போல் எடுக்கலாம். பாரேன்! நீ வந்து அவனைப் பார்க்கப் போகிறாய் என்று கடந்த மூன்று நாட்களாக ஆபிஸ¤க்கே போக வில்லை. அவனுக்கு ஆத்துக் காரியங்கள் எல்லாம் நல்லாத்தெரியும் நல்லா சமைப்பான். ஏன்! வெயில் காலத்தில் மொட்டை மாடியில் போய் வடகக் கூழ் காய்ச்சி நன்னா வடகம் கூட இடுவன்.நன்னா படிச்சுமிருக்கான். அதிர்ந்து பேசமாட்டான். உனக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருப்பான் என்றாள்.

சௌமியா மாலதியிடம் உங்கள் பையனுடன் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என்றாள். மாலதி ஓ! ஷ்யூர்! என்று சொல்லிக் கொண்டே வாசு! என்று உள்ளே பார்த்து கூப்பிட்டாள். வாசு பாரம்பா¢ய உடையான மயில் கண் வேஷ்டியும் அங்கவஸ்திரமும் தரித்து தலையை எண்ணெய் தடவி மழுக்க வாரியிருந்தான். நெற்றியில் திருமண்ணும் இட்டுக் கொள்ள வேண்டும் என்று அவன் அம்மா சொல்லியிருந்தாள்.அப்பத்தான் அவன் ‘நல்ல அம்பி’ மாதிரி இருப்பான். இந்தக் காலத்துப் பெண்களுக்கு அடங்கி ஒடுங்கி இருப்பன் என்ற நம்பிக்கை வரும். அவர்களின் சுதந்திரத்திற்கு எந்த பங்கமும் வராது என்றும் தோன்றும் கல்யா ணத்திற்கு சம்மதிப்பார்கள் என்று சொல்லி வைத்திருந்தாள் மாலதி. ஆனால் அன்று வாசுவிற்கு திருமண் சரியாக இட்டுக் கொள்ள வராததால் சிவப்புக் கோட்டை மட்டும் நெற்றியில் போட்டுக் கொண்டு வந்து விட்டான். வந்தவன் ரொமப பவ்யமாக தலையைக் குனிந்து கொண்டு நின்றான். மாலதி வாசுவிடம் சௌமியாவை பார்த்துக்கோ! என்றவுடன் வெட்கத்தோடு ஒரக்கண்ணால் பார்த்தான். சௌமியா சிரித்துக் கொண்டே வாசுவிடம் நாமிருவரும் அடுத்த அறையில் போய் கொஞ்சம் தனியாகப் பேசுவோமா என்றாள். வாசு கோவில் மாடு மாதிரி தலையாட்ட இருவரும் அடுத்த அறைக்குள் செல்ல சௌமியா கதவைச் சாத்தினாள்.

ஆண்கள் என்று தெரிவிக்க வேட்டி அணிந்திருந்த நண்பர்களிருவரும் நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு அப்பப்ப சாவி கொடுத்த பொம்மை போல் பல்லை மட்டும் காட்டிக் கொண்டு வாய் மூடிகளாக அமர்ந்திருந்தார்கள்.உள்ளே போன சௌமியா வாசுவிடம் “இதென்ன டிரஸ். உன்னிடம் நல்ல பேண்ட் சர்ட் இல்லையா?” என்றாள்.

“இருக்கு. ஆனால் அம்மாதான் மாப்பிள்ளைப் பார்க்க வரும் பொழுது பாரம்பா¢ய ஆடை உடுத்த வேண்டும் என்று கூறியிருந்தாள்.”

“நீ என்ன அம்மாக் கோண்டா?”

வாசு மௌனித்தான்.

“நீ மீசை வச்சிண்ருக்கியா?மீசை வளரதில்லையோ?” என்றாள் கிண்டலாக.

வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு “நம்ம ஜாதிலே வழக்கமில்லாததால வச்சுக்கலை”. “அப்போ! உனக்கு வச்சுக்க ஆசைதான் உன் அம்மாப்பா ஜாதியைச் சொல்லி தடுத்ததால வச்சுக்கல அப்படித்தானே!”

“ஆமாம்! நீ வடகலையா தெங்கலையா?”

“நாங்க வடகலை” என்றான். வாசு.

“நாங்க தெங்கலை தெரியுமோ!”

“உம்” ஒற்றை வார்த்தை பதில் வாசுவுடையது.

“உங்கம்மா வடகலை ஒஸ்தின சொல்லிண்டு வடகலைலே பொண் பார்த்ததாகவும் உனக்கொன்னும் அமையாததால்தான் எங்களை அணுகியதாக எங்கப்பா சொன்னாரே நிஜந்தானா?” என்றாள் சௌமியா

“அப்படியெல்லாமொன்னுமில்லை.நாங்க ஜாதிமதமெல்லாம் பார்க்கிறதில்லை”

“ நீயா? அல்லது உன் அம்மாப்பாவா?”

“நான் பார்க்கமாட்டேன்”.

“அப்படின்னா!ஒரு கிறிஸ்தவப் பெண்ணையோ அல்லது ஒரு முகமதியப் பெண்ணையோ கூட தயங்காமல் கல்யாணம் செஞ்சுப்பதானே?”

வாசு நெருப்பில் கால் வைத்துவிட்டது போல் பதறிவிட்டான். அவன் முகத்தில் உண்டான பதற்றமான உணர்ச்சிகளைப் பார்த்து சிரித்துவிட்டாள் சௌமியா.

“நான் உன்னைமாதிரி இல்லை.எனக்கு இந்த ஜாதி மதங்களிலெல்லாம் நம்பிக்கையில்லை ஜானோ, சலீமோ எனக்கு அதுபற்றி க் கவலையில்லை.என்னைப் புரிந்து கொண்டவனாக எங்கள் நாகா¢க சமூகத்தில் வாழத் தெரிந்தவனாக அதே சமயத்தில் என் சுதந்திரத்தில் குறுக்கிடாதவனாக இருக்க வேண்டும்” என்றாள்.சௌமியா.

“உங்கள் நாகா¢க சமூகமென்றால் ?”

எங்கள் ஆபிஸில் அடிக்கடி பார்ட்டிகளெல்லாம் நடக்கும். அங்கு எல்லோரும் குடித்து கும்மாளமிடுவார்கள். அடிக்கடி சுற்றுலா செல்வார்கள். எங்கள் கம்பெனியே கூட சில சமயம் ஏற்பாடுகள் செய்யும்.அதிலெல்லாம் கலகலப்பாகக் கலந்து கொண்டு கூத்தடிக்க தெரிந்திருக்க வேண்டும். “ஆமாம்! நீ சிகரெட் பிடித்து தண்ணியெல்லாம்போடுவைதானே”என்றாள்சௌமியா.
“ஐயய்யோ! அதெல்லாம் மாட்டேன்”

“இந்த 21 வது நூற்றாண்டுல ஒரு அசட்டு அம்மாஞ்சியா வளர்ந்து நிற்கிறயே” என்றாள் சௌமியா வாசுவுக்கு கோபம் தலைக் கேறியது. காரியம் அவனால் கெட்டது என்றாகிவிடக்கூடாது என்று அடக்கிக் கொண்டான். சௌமியா தொடர்ந்து “நான் மட்டும் ஆம்பிளயா பொறந்திருந்தேன்னு வச்சுக்கோ! தண்ணி, கஞ்சா ஒன்னு விட்டு வச்சிருக்க மாட்டேன்”. என்றாள்.

“இதுகளுக்கெல்லாம் “ஜெண்டர்” வித்யாசமெல்லாம் தெரியுமா என்ன? ஆண்கள் அடித்தால் தான் போதை கொடுக்குமா பெண்கள் அடிததால் போதை தர மாட்டேனேன்று அவைகள் அடம் பிடிக்குமா என்ன?” என்றான் வாசு.

“என்ன கிண்டலா? நான் ஆம்பிளையாப் பொறந்திருந்தா உன்ன மாதிரியில்லாமா பெரிய கொடு வாள் மீசை வச்சிண்ருப்பேன். நீ என்னிடம் பேசவே பயப்படுவை அப்புறமெங்க கிண்டல் பண்ண” என்றாள்.

“நல்ல வேளை! பெரியவா செஞ்ச புண்ணியம் உங்க அம்மாப்பா தப்பிச்சா. நான் மாட்டிண்டா என்ன பாடுபடப் போறேனோ தெரியாது” என்றான் மெதுவாக.

“என்ன என்ன ! என்ன சொன்ன ! திருப்பிச் சொல்லு” என்றாள் சௌமியா.

“ஒன்னுமில்லையென்றான்”.

“மறைக்கப் பார்க்காதே காதுல நல்லா கேட்டுது. நான் என்னவோ உன்ன பிள்ளைப் பூச்சின நினச்சேன். நல்லா கிண்டலெல்லாம் பண்றயே” என்றாள். உடனே வாசு இந்த ” அன்னியன்” சினிமாவில் விக்ரம் நடிக்கிற மாதிரி split personality உள்ள நபர் மாதிரி வசனம் பேசிண்டே நடிக்கக் கூட என்னால் முடியுமென்றான்.

“எங்க செய்!” என்றாள் சௌமியா.

முதல் வாசு: “எங்க அம்மாப்பா சதா என் கல்யாணத்தைப் பற்றியே யோசிச்சுண்டு அதைப் பற்றியே பேசி என் ப்ராணன வாங்கறா தயவு செய்து என்னை கல்யாணம் பண்ணி கொள்ளேன்.

இரண்டாவது வாசு: “பார்ட்டியில குடித்து கும்மாளம் போட்டுண்டு சுற்றுலாவில் கல கலப்பாக இருப்பதுதான் வாழ்க்கைத் துணையாகத் தகுதியா. அட! கண்ணிருந்தும் கபோதியாக நிற்கிற முண்டமே! குடித்து க் கும்மாளம் போடற பசங்களெல்லாம் கண்டதையும் பார்த்து சீரழிந்து போய் தாம்பத்திய வாழ்க்கைக்கே தகுதியில்லாமல் அலைகிறார்கள் என்பது உனக்குத் தெரியல? அதனால்தான் உன்ன கபோதி! என்றேன்.

முதல் வாசு:” நான் உன்ன ப் புரிஞ்சு நடந்துப்பேன். உன் சுதந்திரத்திற்கு எந்தக் குந்தகமும் வராது என்பதற்கு உத்திரவாதம் தருகிறேன்”

இரண்டாவது வாசு: ” நாலெழுத்து படிச்சுட்டு கை நிறைய சம்பளம் வாங்கற திமிற்ல அகங்காரத்தோட மட்டு மரியாதை தெரியாம பேசற கபோதியே!கெட்டு சீரழிந்து போன பசங்களோட வெளித் தோற்றத்திலும் ஆசை வார்த்தையிலும் மயங்கிப் போற உன்ன மாதிரிப் பெண்கள் பெரிய ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் விவாகரத்துகளும் விவாகரத்து வழக்குகளும் மிக அதிகமாகிவிட்டன”

முதல் வாசு: ” நான் ஆரோக்கியமான தேகத்துடனும் மனதுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அதனால் 80 வயதிலும் இல்லற வாழ்க்கை சந்தோஷமாகவும் சுகமாகவும் இருக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள். சீரும் சிறப்புமாக பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.

சௌமியா கைதட்டி வாசுவைப் பாராட்டிக் கொண்டே ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வெளியே போவோமா? என்று சொல்ல இருவரும் அறையை விட்டு ஹாலுக்கு வந்தனர். மாலதி “இப்பொழுதாவது கொஞ்சம் சாப்பிடுகிறாயா?” என்றதும் சௌமியா தலையாட்ட அவள் தின்பண்டங்களை முடிப்பதுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. அடுத்த நாள் காலையிலிருந்து கோபாலன் சடகோபனை தொடர்ந்து போனில் துன்புறுத்திக்கொண்டிருந்தான்.

நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் சௌமியா சாப்பாடு நேரத்தில் அவள் தோழி ரேஷ்மியுடன் தனியாகப் போய் அமர்ந்தாள். சௌமியா ஏற்கனவே ரேஷ்மியிடம் சொல்லியிருந்தாள். அவளின் பெற்றோர்கள் கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துவதாகவும் ஆனால் அவள் இரண்டொரு வருஷம் தள்ளிப் போட விரும்புவதாகவும்.ரேஷ்மி வற்புறுத்துவதற்கான காரணததைக் கேட்க தான் விளையாட்டாக ஜானோ சலீமோ எனக்கு யாரைப் பிடிக்கறதோ அவனைத்தான் பண்ணிப்பேன் என்று சொன்னதிலிருந்து பயந்து போய்விட்டதுதான் காரணம் என்றாள். ரேஷ்மி சௌமியாவிடம் திட்டமிட்டபடி அந்தப் பையனைக் கலாய்த்தாயா?. கலங்கிப் போய்விட்டானா?. என்று கேட்டாள்.நடந்ததையெல்லாம் ஒன்னு விடாமல் சொன்ன சௌமியா வாசு கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்துவிட்டனஅவன் சொல்வது உண்மைதானே. நமது கம்பெனியிலேயே விழுந்து விழுந்து காதலித்த எத்தனையோ ஜோடிகள் கல்யாணமாகி சில மாதங்களிலேயே விவாகரத்தில் போய் நிற்கின்றதல்லவா. ஆரோக்கியமான மனதும் தேகமும் இல்லாமல் தாம்பத்திய வாழ்க்கை சுவைக்காது விட்டில் பூச்சிகளைப் போல் அற்ப சந்தோஷத்தில் நீண்ட வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழத்தெரியாமல் தொலைத்துக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது என்றாள் சௌமியா.

இன்னொரு பயமும் வருகின்றது. ஒரு வேளை வாசுவுக்கு அந்த ஸ்பிள்ட் பர்ஸனாலிட்டி இருக்குமோ என்ற பயம்தான் என்றாள்.

“உனக்கென்ன வந்தது?” அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள ப் போகிறவளுக்குத்தானே பிரச்சனை என்றாள் ரேஷ்மி.

“இல்லைடி!எனக்கு அவனையும் அவன் பேச்சில் உள்ள சத்தியமும் பிடித்துவிட்டது. அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமென்று தோன்றுகிறது. ஆனால் இந்தப் பிரச்சனைக்கு எப்படித் தீர்வு காண்பது” என்று தெரியவில்லை

“ கவலையை விடு !” என்றாள் ரேஷ்மி. அவளுக்கு தெரிந்த “டிடேக்டிவ் ஏஜென்சி” ஒன்று உள்ளது. ரொம்ப நன்றாகச் செய்வார்கள். காதும் காதும் வைத்த மாதிரி காரியத்தை முடிப்பார்கள். பையனைப் பற்றிய தகவல்களை மட்டும் கொடு. ஒரு வாரத்தில் உன் பிரச்ச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

சடகொபனுக்கும் கோபாலனுக்கும் ஒரு வாரம் ஒரு யுகம் போல் கழிந்தது. ரேஷ்மி வாசுவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொன்ன அன்று சாயந்திரமே சௌமியா பத்மாவிடம் தன் சம்மதத்தைச் சொல்ல சடகோபன் மூலம் கோபாலனுக்கு த் தெரிவிக்கப் பட்டது. கோபாலனுக்கும் மாலதிக்கும் பரம சந்தோஷம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்றாள் மாலதி. ஏற்கனவே போனில் பேசும் பொழுது சடகோபனும் சொல்லியாச்சு. அவாளுக்கும் இதே அபிப்ராயம்தான். பொண் மனசு மாறறதுக்கு முன் முடிக்கணும்னுட்டு. “மற்ற விஷயங்கள் ஏதாவது பேசணுமா” என்று கேட்டாள் மாலதி. “மற்ற விஷயங்கள் என்றால்?” என்று நிறுத்தினார் கோபாலன். சீர் வரிசை இத்யாதிகள் என்று தயங்கினாள் மாலதி. “சீர் வரிசை கொடுப்பது பற்றியா அல்லது வாங்குவது பற்றியா”. நீங்கள் தான் எல்லாத்தையும் புதுமாதிரியா வினோதமா செய்யணும் என்று நினைக்கின்றீர்களே. பிள்ளைக்கு கல்யாணம் பண்ண சீர் வரிசை கொடுங்கோ என்றாள்.

அந்தக் காலத்தில் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது தெரியுமா. “கன்னிகாதானம் “ என்று சொல்வார்கள். பெண்ணைப் பெற்றவர்களிடம் பொருள் கொடுத்துத் தான் கன்னியைத் தானமாகப் பெறுவார்கள். அதனால் புதுமை ஒன்றும் இல்லை என்றார் கோபாலன். இப்பொழுதெல்லாம் எல்லா செலவுகளையும் பகிர்ந்து கொள்ளும் முறை தானே நடைமுறையில் உள்ளது. நானும் சடகோபனும் பேசித் தீர்த்துக் கொள்வோம். அதுபற்றி யாரும் கவலைப் பட வேண்டாம்.

ஒரு வாரமாக தினமும் காலையிலிருந்து கோபாலனும் சடகோபனும் கல்யாண மண்டபங்களுக்கும் ஜோசியர் வீட்டுக்கும் அலைகிறார்கள். முகூர்த்த தேதியை முடிவு பண்ண முடியவில்லை. நீண்டு கொண்டே போகிறது. இரண்டு பேரும் கலங்கினார்கள். ” கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பேச்சில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பது புரிய ஆரம்பித்த்து.

ஒரு நாள் காலம்பற சௌமியாவின் ‘பாஸ்’ போனில் அவளை GM அவசரமாக அழைப்பதாக சொல்ல சௌமியா அவரறைக்குச் சென்றாள். சௌமியாவிடம் “யுஎஸ்ஸிலுள்ள நமது முக்கியமான பெரிய வாடிக்கையாளர் ஒரு நல்ல ‘ப்ராஜக்ட்’ தந்துள்ளார்.உன்னை ‘டீம் லீடராக’ அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன். உனக்கு சம்மதமா?” என்று கேட்டார். சௌமியாவுக்கு சந்தோஷம் தலை கொள்ளவில்லை. அவளின் முகத்தில் உண்டான சந்தோஷத்தை வைத்தே சம்மதத்தை அறிந்த GM, “உன் ‘ டீம்க்கு’ வேண்டிய நபர்களை நீயே தேர்வு செய்து கொள். இரண்டு வருடங்களுக்கு மேல் தங்க வேண்டியிருக்கும் ‘சக்ஸ்ஸஸ்புல்’ ஆக முடி. பிரகாசமான எதிர்காலமிருக்கிறது “என்றார்.

சௌமியா ரேஷ்மியிடம் ஓடினாள். விஷயங்களைச் சொல்லிவிட்டு நாமிருவரும் போவோம் சரியா? என்றாள். ரேஷ்மிக்கும் சந்தோஷமாக இருந்தது. ரேஷ்மி ஞாபகம் வந்தவளாக ஆமாம்! உன் கல்யாணம் வேற இருக்கிறது என்ன் செய்யப் போறே? என்றாள்.

கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதைவிட பிரகாசமான எதிர்காலம் தான் முக்கியம். வந்த சந்தர்ப்பத்தை விடப்போவதில்லை. ஒரு வாரத்தில் கிளமப வேண்டும். விஸா பார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்கிறது. முதலில் ப்ராஜக்டைப் பற்றித் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி நபர்களை தேர்வு செய்வோம் சரியா! ஓகே! என்றாள் ரேஷ்மி.

இரவு வீட்டிற்கு வந்ததும் பத்மாவிடம் விஷயங்களை ச் சொன்னாள் சௌமியா. என்னடி! இப்படிச் சொல்றே கல்யாணம் வேறு முடிவு பண்ணியிருக்கோமே என்றாள் பத்மா. எனக்கு என்னுடைய எதிர்காலம்தான் முக்கியம் என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டாள் சௌமியா. சடகோபன் உள்ளே புகுந்து வாக்குக் கொடுத்துவிட்டோமே கோபாலனிடம் எப்படிச் சொல்வது?. என்று நடுங்கிய குரலில் கேட்டார். உங்களுக்கு பயமாக இருந்தால் நான் போய்ச் சொல்லிக் கொள்கிறேன் அவ்வளவு தானே என்றாள் சௌமியா. பத்மா உடனே “இல்லை! வேண்டாம்! படபடவென்று போய்ச் சொன்னால் அவர்கள் மனது ரொம்பவும் உடைந்துவிடும். நாம் எல்லோருமாக நாளைக் காலையே போய்விட்டு வந்துவிடுவோம். நீ ஒரு இரண்டு மணி பர்மிஷன் போடு” என்றாள் சௌமியாவிடம்.

அடுத்த நாள் காலை கோபாலன் வீட்டிற்கு போய் எல்லா விபரங்களையும் சொல்லிவிட்டு சௌமியா ஆபிஸ் புறப்பட்டுப் போனாள். சடகோபனுக்கும் பத்மாவுக்கும் தான் அங்கிருந்து கிளம்ப மனசே இல்லை. சடகோபன் கோபாலனின் முகத்தைப் பார்க்கவே ரொம்பவும் கூச்சப்பட்டான் தெரிந்து கொண்ட கோபாலன் சட்கோபனிடம் நீ ஏன் வீணாக வருத்தப் படுகிறாய். ப்ராப்தம் போல் நடக்கும். எல்லாம் அவன் செயல் என்பதை புரிந்து கொள் என்றான் கோபாலன். சடகோபன் கோபாலனை தேற்றுவதற்கு பதிலாக கோபாலன் சடகோபனைத் தேற்றினான். அவர்கள் போன பின்பு மாலதி கோபாலனிடம் இப்படியாகிவிட்டதே என்று கண்ணீர் விட்டாள். கோபாலன் ஆன்மிக ஈடுபாடுகள் உள்ளவன். நிறையப் படிப்பவன். மட்டுமல்ல நன்கு சிந்திப்பவனும் கூட. அவனுக்குத் தோன்றியது. கடந்த மூன்று நான்கு தலைமுறைகளாக பெண்ணை ப் பெற்றவர்களை பிள்ளை வீட்டார் வரதட்சணை, சீர்வரிசை அது இது என்று எவ்வளவு கொடுமைப் படுத்தி “முதிர் கன்னிகைகளை” உருவாக்கினார்கள். “முதிர் கன்னிகைகள்” விட்ட கண்ணீர் வீண் போகுமா காலச் சக்கரத்தில் அப்பொழுது பையன்கள் மேல் புள்ளியிலும் பெண்கள் கீழ்ப் புள்ளியிலும் இருந்தார்கள். பிள்ளை வீட்டார் பொறுக்க முடியாத அளவிற்கு பெண் வீட்டாருக்கு கொடுமை செய்தார்கள். சக்கரம் சுழன்று பெண்கள் மேல் புள்ளிக்கும் பையன்கள் கீழ்ப் புள்ளிக்கும் வந்து விட்டார்கள். ஒவ்வொரு செயலுக்கும் அதே அளவு எதிர்மறைச் செயல் நடைபெறும் என விஞ்ஞானத்தின் கூற்று உண்மைதானே.

சிந்தித்துக் கொண்டிருந்தாலும் நெஞ்சு கனத்திருப்பது போல் தோன்ற ஆசுவாசப் படுத்திக் கொள்ள படுக்கையில் போய் விழுந்தார் கோபாலன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *