கற்றதும் கொன்றதும் பெற்றதும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 6,048 
 
 

சின்ன வயதில் என் அம்மாவை விட்டு நான் பிரிந்ததே இல்லை.

ஆனால் என் ஆறாவது வயதில் அம்மாவை விட்டுவிட்டு நான் மட்டும் பள்ளிக்கு போகவேண்டிய கட்டாயம் வந்தபோது, அம்மாவும் என்னுடன் வந்தால்தான் பள்ளிக்குச் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தேன். அம்மாவுக்கு என்மேல் கோபம்தான் வந்தது.

அம்மாவும், அப்பாவும் என்னை சமாதானப்படுத்தி தினசரி மாலை மெரீனா பீச் கூட்டிப்போய் ஐஸ்க்ரீம் வாங்கித் தருவதாக ஆசை காட்டினார்கள். ம்ஹூம்…. நான் விடாமல் அடம் பிடித்தேன்.

பொறுமை இழந்து “உன் கிளாஸ்ல எந்தப் பையனாவது அம்மாவைக் கூட்டிட்டு வரானா?” என்று அம்மா கேட்டாள்.

நிஜம்தான்… எந்தக் குழந்தையுமே அம்மாவைக் கூட்டிக்கொண்டு வராமல் தனித் தனியாகத்தான் இருந்தார்கள். நானும் சற்று மாற ஆரம்பித்தேன். ஆனால் அம்மா இல்லாத முதல் உலகமாக வகுப்பறை எனக்குக் காட்சி தந்தது. தினமும் சிலமணி நேரங்கள் இந்த உலகத்திற்குள் நான் வந்து போக வேண்டும் என்கிற நிஜம் என்னைப் பயமுறுத்தியது. ஒருவிதப் பயம் கலந்த மெளனத்துடன் பள்ளி வாழ்க்கையில் வேறு வழியில்லாமல் என்னை நிற்க வைத்துக்கொண்டேன்.

என் வகுப்பு ஆசிரியை வந்தனா மிஸ், என்னுடன் படித்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் அம்மா என்பது ஒருநாள் தெரிய வந்ததும், எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கார்த்திக்கின் அம்மாவே அவனுக்கு கிளாஸ் மிஸ் என்றால், எனக்கும் என்னுடைய அம்மாவே கிளாஸ் மிஸ்ஸாக வந்து விடலாமே என்று தீவிரமாக யோசித்தேன். இதை என் அம்மாவிடமே கேட்டேன். அம்மாவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. நான் ரொம்ப புத்திசாலித்தனமாக கேட்டுவிட்டேன் என்று சொல்லி அம்மா எனக்கு ஆசையுடன் முத்தம் தந்தாள்.

முதலில் நான் ஒழுங்காக அழாமல் பள்ளிக்குச் சென்றாலே போதும் என்றிருந்த அம்மாவுக்கு, நாளடைவில் வகுப்பில் நான்தான் முதலாவதாக வரவேண்டும் என்று மிகவும் கண்டிப்புடன் எதிர்பார்த்தார். அந்தக் கண்டிப்பும், நன்றாகப் படிக்கச்சொல்லி வற்புறுத்திய கெடுபிடிகளும், அழுத்தமும் எனக்கு படிப்பின்மேல் வெறுப்பையே ஏற்படுத்தின.

படிப்பு என்பது உத்தரவுகளாகவும், போட்டிகளாகவுமே இருந்தன. எனக்கு இம்மாதிரி அசுர வேகத்தில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படவே இல்லை.

ஒருநாள் மெரீனா பீச்சிற்கு நானும் அம்மாவும் காரில்போய் இறங்கியபோது எதிர்பாராமல் அங்கு வந்தனா மிஸ்ஸும் கார்த்திக்கும் வந்திருந்தார்கள்.

அம்மாவும், வந்தனா மிஸ்ஸும் சகஜமாகப் பேசினார்கள். நானும் கார்த்திக்கும் விதம் விதமாக குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிட்டோம். சந்தோஷமாக இருந்தது…

அம்மா வந்தனா மிஸ்ஸை எங்கள் வீட்டிற்கு தினமும் சாயந்திரம் வந்து எனக்கு ட்யூஷன் எடுக்கச்சொல்லிக் கேட்டாள். மிஸ் சற்று யோசித்து, தினமும் மாலையில் பஸ் பிடித்து வருவது சிரமம் என்றார்கள். அம்மா உடனே தினமும் எங்கள் காரை அனுப்பி வைப்பதாகச் சொன்னாள்.

மிஸ் இந்த ஏற்பாட்டிற்கு உடனே சம்மதித்து விட்டார்கள். அன்று ராத்திரியே அப்பாவிடம் இதைச்சொல்ல அவரும் சம்மதம் சொல்லிவிட்டார்.

ட்யூஷன் மறுநாளே ஆரம்பமாகிவிட்டது.

இந்த ஏற்பாடு எனக்குப் பெருமையாக இருந்தது. வகுப்பில் காட்டியிராத அன்பை வீட்டு ட்யூஷனில் வந்தனா மிஸ் என்னிடம் காட்டினார்கள். இது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. பள்ளிக்கு போகத் தொடங்கிய ஆரம்பத்தில் என் அம்மாவே எனக்கு வகுப்பு மிஸ் ஆகவும் வரவேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு, ட்யூஷனில் வந்தனா மிஸ் காட்டிய அன்பைப் பார்த்து அவர்களே எனக்கு அம்மாவாகவும் ஆகி எங்கள் வீட்டிலேயே இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். ஆனால் இதை நான் வெளியில் சொல்லவில்லை.

வந்தனா மிஸ் எனக்கு ட்யூஷன் எடுப்பதற்கு வர ஆரம்பித்ததும், வீட்டில் அம்மா எனக்கு படிப்பு விஷயத்தில் அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் இதுகாறும் நான் என்ன படிக்கிறேன் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட்டிராத என் அப்பா, என் பாடங்களின்மேல் ரொம்பவும்தான் அக்கறை காட்ட ஆரம்பித்துவிட்டார்! அடிக்கடி நான் ட்யூஷன் படித்துக் கொண்டிருக்கும் அறைப்பக்கம் வந்து எட்டிப் பார்த்தார். நான் எப்படிப் படிக்கிறேனென்று ஆர்வமாக வந்தனா மிஸ்ஸை விசாரித்தார்.

அதன்பின் ஒருநாள் வந்தனா மிஸ்ஸிடம் அவரைப் பற்றிய பர்ஸனல் விபரங்களையெல்லாம் விலாவாரியாக அன்புடன் கேட்டறிந்தார். முதலில் என் அப்பாவுடன் பேச மிஸ் ரொம்பப் பயந்தார்கள். ஆனால் அப்பா தொடர்ந்து அன்பாகப் பேசப் பேச மிஸ்ஸும் பயமில்லாமல் பேச ஆரம்பித்து, நிறைய சிரிக்கவும் செய்தார்கள்.

அப்பாவும், மிஸ்ஸும் சிரித்து அன்புடன் பேசிக்கொண்டது எனக்குப் பிடித்தது. ஆனால் என் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை.

“அவன் படித்துக் கொண்டிருக்கும்போது குறுக்கேபோய் என்ன பேச்சு?”

“அவன் எப்படிப் படிக்கிறான் என்று கேட்டேன்…”

ஆனால் மிஸ்ஸும் அப்பாவும் அடிக்கடி அதிகமாகப் பேசி சிரித்துக் கொண்டார்கள்.

அம்மாவுக்கு இது கிஞ்சித்தும் பிடிக்கவில்லை.

அன்று அப்பாவும் நானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“அங்கேபோய் அவளிடம் என்ன சிரிப்பு வேண்டி கிடக்கிறது?”

“சரி சிரிக்கவில்லை… இனிமேல் அழுகிறேன்.”

“யாரும் உங்களை அழச் சொல்லலை… அவ முன்னாடி போய் பேசிச் சிரிக்க வேண்டாம்… தெரியுதா?”

அப்பா கோபத்துடன் தட்டை அம்மாவின் முகத்தில் வீசினார். சாப்பிடாமல் எழுந்து போய்விட்டார். “சொன்னால் கோபம் மட்டும் வந்து விடுகிறது” அம்மா அழ ஆரம்பித்துவிட்டாள்.

அடுத்த நான்கு நாட்கள் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்ளவில்லை.

திடீரென அப்பா வீட்டுக்கு வரவேயில்லை. வந்தனா டீச்சரும் ஸ்கூலுக்கு வரவில்லை. கார்த்திக்கை ஹெட்மாஸ்டர் கூப்பிட்டு அனுப்பி வந்தனா மிஸ் ஏன் வரவில்லை எனக் கேட்டுத் துளைத்தார்.

என் அம்மா என்னிடம், “அப்பா அந்த மேனாமினுக்கியோட ஓடிப்போய்ட்டாருடா” என்று சொல்லி அழுதாள். அப்புறம்தான் எனக்கு விவரம் புரிந்தது.

அடுத்தவாரம் ஒருநாள் நானும் கார்த்திக்கும் ஸ்கூல் விட்டு அவன் வீட்டுக்குப் போனபோது அவனுடைய அப்பா தூக்கில் தொங்கினார். கோரமான அந்தக் காட்சியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அன்றிலிருந்து கார்த்திக் பள்ளிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.

என்னைவிட அவனுக்குத்தான் சோதனை மேல் சோதனை…

முதலில் அவன் அம்மா ஓடிப்போனது; அடுத்து அவன் அப்பா தூக்கில் தொங்கியது; கடைசியாக அவன் படிப்பு நின்றுபோனது. அவனுக்காக அப்போது என்னால் அழத்தான் முடிந்தது.

காலம் உருண்டோடியது…

அம்மாவும் நானும் ஒரு சிறிய வாடகை வீட்டில் குடிபுகுந்தோம். அம்மா தன் நகைகளை ஒவ்வொன்றாக விற்று என்னை நன்கு படிக்க வைத்தாள். தற்போது நான் ஒரு நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன். வயது முப்பது ஆகிவிட்டாலும் கசப்பான அனுபவங்களினால் திருமண ஆசையே எழவில்லை.

அன்று சென்னையின் ஒரு பிரபல ஹோட்டலில் கம்பெனி மூலமாக ஒரு மேனேஜ்மெண்ட் டிவலப்மென்ட் கோர்ஸ் அட்டண்ட் செய்து கொண்டிருந்தேன். லஞ்ச் இடைவெளியின் போது ப்ளேஸர் போட்டிருந்த ஒருவர் என்னையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தார். பிறகு என்னை நோக்கி விரைந்து வந்து, “ஆர் யூ மிஸ்டர் வினோத்குமார்?” என்றார். “ஆம்…” என்றேன்.

“டேய் வினோத், நான்தாண்டா கார்த்திக். இப்ப டெல்லியில் செட்டில் ஆகியிருக்கேன். நீ என்ன பண்ற? அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டு என்னைக் கட்டிக்கொண்டான். வளப்பமாக, வாசனையாக இருந்தான். விஸிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினான்.

லஞ்ச் சாப்பிட வந்ததாகவும், ஹில்டனில் தங்கியிருப்பதாகவும் அன்று மாலை ஆறு மணிக்கு அவனை வந்து பார்க்கும்படியும் அன்புடன் சொன்னான்.

நான் மாலை ஆறு மணிக்கு ஹில்டன் ஹோட்டலுக்குச் சென்றேன்.

யூனிபார்ம் அணிந்திருந்த ஹோட்டல் சிப்பந்தி அவன் தங்கியிருந்த சூட்டிற்கு லிப்டில் என்னை அழைத்துச்சென்றான்.

கார்த்திக் சந்தோஷத்துடன் என்னைக் கட்டியணைத்து வரவேற்றான். ப்ரிட்ஜைத் திறந்து “ஸ்காட்ச் ட்ரை பண்றியா?” என்றான். நான் வேண்டாம் என்றதும் எனக்கு ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ் எடுத்துக் கொடுத்துவிட்டு, தான் மட்டும் குடிக்க ஆரம்பித்தான்.

“நான் ஆறு வயதில் உன்னுடன் நட்பாக இருந்ததோடு சரி வினோத். அதன்பிறகு நான் யாருடனும் இதுவரை நட்புடன் பழகியதில்லை. உன் அப்பாவுடன் ஓடிப்போன என் அம்மா; தூக்கில் தொங்கிய என் அப்பா; படிப்பை நிறுத்திக்கொண்ட என் அவலநிலை என என்னுடையை அசிங்கமான பக்கங்கள் அனைத்தும் உனக்குத்தான் தெரியும். இப்ப நான் டெல்லில பெரிய ஆளு…. எத்தனை கெட்ட வழிகளில் பணம் வரமுடியுமோ அத்தனை வழிகளிலும் எனக்குப் பணம் வருகிறது வினோத்.”

“………………….”

“என் வாழ்நாளில் என்றைக்காவது உன்னைச் சந்திக்க வேண்டும் என பல வருடங்கள் ஏங்கியிருந்தேன் வினோத். அதுக்கும் காரணம் இருக்கு. ஆனா சிலவற்றை நன்றாகப் புரிந்துகொண்டேன். இந்த உலகம் நமக்காக படைக்கப்பட்டது. நமக்கு என்ன வேண்டுமோ அதை அதட்டியோ அல்லது அடித்தோ வாங்கிக்கொள்ள வேண்டும். இது தப்பு, அது ரைட்டு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. பணம் சேர்க்க நிறைய வழிகள் இருக்கின்றன.”

“இப்ப நீ என்னதான் செய்கிறாய் வினோத்?”

“பல அரசியல் வாதிகளுக்கு வலது, இடது கைகளாக இருக்கேன். இதில் ஆள்பவர்கள்; ஆண்டவர்கள்; ஆளத் துடிப்பவர்கள் எல்லோரும் அடக்கம். பதவிக்காககவும், பணத்திற்காகவும் அலையும் அவர்களுக்கு பல கெட்ட காரியங்களை முடித்துக்கொடுத்து நிறையப் பணம் வாங்கிக் கொள்கிறேன் போகப்போக என்னைப்பற்றி நீயே புரிஞ்சுப்ப… உனக்கு இனிமே எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் என்னிடம் உரிமையுடன் கேட்டு வாங்கிக்கொள். வாழ்க்கைல எதற்குமே எப்பவுமே வெட்கமோ, கூச்சமோ படாத; நாசூக்கு பார்க்காத வினோத்.”

அப்பா ஓடிப்போனதால், அம்மா தனியாகப்பட்ட கஷ்டங்கள் அத்தனையும் அவனிடம் சொன்னேன்.

“புரியுது… திருட்டு, பொய், கொலை, கொள்ளை என்று எதையும் மன்னித்துவிடலாம் வினோத், ஆனா இந்த நம்பிக்கைத்துரோகம் இருக்கே அதுக்குமட்டும் மன்னிப்பே கிடையாது. உன் அப்பனும், என் ஆத்தாளும் பண்ணியது மிகப்பெரிய ஓடுகாலித்தன நம்பிக்கைத்துரோகம். ஆமா உன்னோட அப்பன் அதே கம்பெனிலதான் இருக்கானா?”

“ஆமா…. அப்ப ஸி.இ.ஓ; இப்ப எம்.டி யா இருக்காரு கார்த்திக்.”

லேப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டு, “அப்பன் கம்பெனி பேரென்ன?” என்றான். சொன்னேன்.

அதை கூகுளில் தேடி, ஆபீஸுக்கு போன் செய்து அழகாக ஆங்கிலத்தில் பொய் சொல்லி உடனே அப்பாவின் வீட்டு முகவரியை வாங்கினான். .

“பரவாயில்லையே… உன் அப்பனும் என் ஆத்தாளும் போட்கிளப்ல குடியிருக்காங்க… கொஞ்சம் சிரமம்தான்…”

“எது சிரமம்?”

“கொஞ்சம் செக்யூரிட்டி அதிகம் உள்ள பணக்கார ஏரியா. இன்னும் ரெண்டே நாள்ல அவங்க ரெண்டுபேரையும் தூக்கிருவேன் வினோத்…”

அவன் கண்கள் சிவந்திருந்தன.

கொலைகளைப் பற்றி அலட்சியமாகப் பேசியது எனக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அன்று இரவு அவனுடன்தான் டின்னர் சாப்பிட்டேன்.

ஞாயிறு மாலை டெலிவிஷன் செய்திகளில் என் அப்பாவும், கார்த்திக்கின் அம்மாவும் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். ஏகே 47 உபயோகிக்கப்பட்டதாகச் சொன்னார்கள். வீட்டிலிருந்து பொருளோ அல்லது பணமோ கொள்ளையடிக்கப் படவில்லை என்றும் சொன்னார்கள்.

என் உடம்பு பதறியது. தான் ஆடாவிட்டாலும்… என்கிற கூற்று உண்மைதான். அம்மா அலட்டிக்கொள்ளவில்லை. நான் மட்டும் என் அப்பாவின் சடலத்தை போட்கிளப் போய்ப் பார்த்தேன். அங்கு அப்பாவின் மனேஜர் பார்த்தசாரதி என்னை அடையாளம் கண்டுகொண்டார். என் மொபைல் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டார்.

அன்று மாலையே அப்பாவை நான் எரியூட்டினேன்.

அடுத்த சில நாட்களில் பார்த்தசாரதி எனக்கு போன்பண்ணி, “வினோத்… நீதான் அப்பாவோட லீகல் வாரிசு. நாளை என்னை வந்து பார் என்றார்.

போனேன். எனக்கு தொண்ணூறு லட்சமும், 600 கம்பெனி ஷேர்களும் எலிஜிபிள் என்றார். அன்று இரவே கார்த்திக்குக்கு போன் பண்ணி நடந்தவைகள் அனைத்தையும் சொன்னேன்.

“வெரி குட். ஆல் த பெஸ்ட்… கீப் இன் டச்” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *