கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 4,505 
 
 

கல்லிற் கோதிய அந்த உருவம் முடிந்து தன்னெதிரே நின்றதைக் கண்ட கணேசாச்சாரி புன்முறுவல் செய்தான், அக்கற்சிலையின் புன் முறுவல் போல. இந்த முறுவலின் வனப்புத்தானென்ன! புதிதாய் உலகத்தைக் கண்டு ஆச்சரியமடையும் குழந்தையின் அப்பழுக்கில்லாத தூய உள்ளத்திலிருந்து எழும் மனோரம்மியமான புன்முறுவல் போன்றது. என்ன பூரணமான அமைவு, விஸ்வகர்மாவும் செய்யமுடியாத கற்சிலை! “என் உள்ளக் கோவிலில் இத்தனை காலமாகக் கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டிருந்த என் இலட்சியம் இன்றே இக் கல்லில் அமைந்தது” தன் வாழ்க்கையின் நோக்கமெல்லந் திரண்டு சிற்றுளி மூலம் திவ்வியமாயன உருப்பெற்ற அச்சிலை முன் கணேசாச்சாரி தெண்டனிட்டு அஞ்சலி செய்தான். சந்தோஷத்தினால் தன்னை மறந்து ஆனந்தக் கூத்தாடினான். இளமை முழுவதும் அவன் மனதில் தாண்டவமாடிய பல்வேறு உணர்ச்சியின் வரலாறுகள் போல அச்சித்திரசாலையெங்கும் சலவைக்கல்லிற் சமைந்த உருவங்கள் கிடந்தன. அந்தோ அந்த வாசற்கதவண்டை இரண்டு மோகினிச் சிலைகள், உயர உள்ள மரக்கட்டையில் கிருஷ்ணனை நினைந்து அழுங்கும் இராதையின் சாயல். இந்த மூலையில் காமனை எரித்த சங்கரர் நிஷ்டை. அங்கே பர்வத குமாரியின் தவக்கோலம். இவற்றையெல்லாம் தன் மனதில் கர்ப்பமாக்கிக் கையினாற் பிரசவித்த கணேசாச்சாரி தன் சித்திரசாலையில் ஒருவரும் பிரவேசிக்கக்கூடாதெனத் தடுத்துவிட்டான். எனது மனோவிலாசத்துக்கும் உள்ள அமைதிக்கும் ஏற்பட்ட இச்சிற்ப சாலையில் மற்றவர்களுக்கு என்ன வேலை! இதென்ன தாசிகள் வீடா? நாடகசாலையா? இவர்களெதற்காக இங்கே வரவேணும்? இது நூதன சாலையுமல்ல, மிருகசாலையுமல்ல. எனது மனச் சாந்திக்காக நான் செய்யும் விளையாட்டை மற்றவர்கள் பார்த்து அதிசயப்படவும் வேண்டாம். சிரிக்கவும் வேண்டாம்.

ஆனால், இது ‘ஒரு நூதனசாலை’தான். கணேசாச்சாரியின் உள்ளம் அங்கே திறந்து வைக்கப்பட்ட்ருந்தது. ஒரு கல்லில் மின்னிடை; மனதில் மின்னல் போல உதயமான ஒரு குறிப்பைக் கல்லில் உருவாக்க எண்ணி, உளியினால் உரமாக மோதுண்டு பிளவுபட்ட கற்கூட்டங்கள். கை ஒன்று, கால் ஒன்று, அதரம் ஒன்று, கண்ணிமை ஒன்று, பவளவாய் ஒன்று. இவ்வாறாக மனித அங்கங்களைக் காட்டும் சிலைகளும் தலைகளும் சம்பூர்ணமான உருவ அமைப்புடைய பல்வேறுவகைப்பட்ட உருவங்கள், போரில் வெட்டுண்டு கிடக்கும் வீரர் போலக் கல்லிற் காட்சியளித்தன. கணேசாச்சாரியாரின் ம்னோதர்ம வரலாற்றுச் சின்னங்களா? அல்லது ஆவேச மின்னலின் இடிகளா?

இந்தக் கோலாகலத்துக்கிடையே சிதைந்து கிடக்கும் வெண்முகிற்கூட்டங்களின் மத்தியில் பூர்ண சந்திரன் உதயமானது போல அவன் கல்லிற் செதுக்கிய மணிமேகலையின் உருவம் தோன்றியது. அசிரத்தை உடன் அவிழ்ந்து சொரிந்த கூந்தல், அதன் செளந்தரியத்தைப் பார்த்து மகிழ்வது போல முகக் கண்ணாடி போன்ற கையை நோக்கிக் குனித்த புருவம். இவற்றிற்கெல்லாம் அழகு முத்திரையிட்டாற்போல புராணங்களில் வரும் ஊர்வசி, திலோத்தமை ஆகிய தெய்வ அரம்பையர்க்குரிய கடவுளரும் காதலிக்கும் தெய்வ சோபையும் ஊட்டிவிட்டான் கணேசாச்சாரி.

அன்ன நடையென்பார்கள். துடியிடை என்பார்கள். கைகளின் வனப்புத்தானென்ன?

வெண்மையான தூசி படர்ந்த தனது உள்ளங்கைகளை உற்று நோக்கினான் கணேசாச்சாரி. “அநித்தியமே உருவான இந்தக் கரங்கள் தானா இந் நூதனச் சிலையை உண்டாக்கின. தெய்வங்கள்தான் மகா செளந்தர்யமுடையனவாம். அந்த அழகுப் பொக்கிஷத்தை நான் களவாடி விட்டேன். அழிவில்லாத சனாதனமான ஒரு பெரிய சிற்பத்தை ஒரு அபூர்வ சக்தியினால் சிருஷ்டி செய்துவிட்டேன்.”

இவ்வாறு எண்ணிய கணேசாச்சாரி பூரணம் பெறாது, முடிவுறாது குவிந்து கிடந்த சிற்பக் கலைகளைக் கண்டு தனது அபஜயங்களை நினைத்து வருந்தினான். திறமையற்ற கைகளே! மந்தமான என் மனமே!

அந்திமாலை. செஞ்ஞாயிறு ஒளி குறந்து கடலில் மறையவே இருள் சூழ்ந்தது. ஆனால், கணேசாச்சாரியரின் சித்திரசாலையில் நின்ற கற்சிலைகள் ஒளிவீசின. இரவினால் அவை சோபித்தன. இருட்டில் இவ்வாறு ஒளிபெற்று நூதனமாக விளங்கிய சிலைகளைக் கணேசாச்சாரி பார்த்தான். அவையெல்லாம் சலவைக் கல்லினாற் சமைந்த சிலைகளாக அவனுக்குத் தோன்றவில்லை. அவை உயிர் பெற்று மூச்சுவிட்டுக் கொண்டிருப்பன போலத் தோன்றின.

மனிதருள்ளத்திற் காதற்றீயை மூட்டிக்கொண்டு மந்தமாருதம் அந்த மாலையில் ஊதிற்று. பக்கத்தேயுள்ள கடல் மேலே சுக்கிரன் உதயமானான். கணேசாச்சாரியாரின் மனதில் பரந்த மகிழ்ச்சிக்கடலில் இன் மணிமேகலையின் கற்சிலை சுக்கிரன் போல உதயமானது. ‘எனக்கு இச்சென்மம் பலனளித்தது. ஏழேழு சந்ததிக்கும் நான் பிறந்த நவாலி என்னும் இவ்வழகிய கிராமத்துக்கும் இவ்வூருக்குமே இச்சிலையினால் உலகப் பிரசித்தி ஏற்பட்டது. என்ன? இது சிலைதானா?’ என்று எண்ணிக்கொண்டிருக்கையில் ஓங்கி ஒளிவிட்டுக் கொண்டிருந்த அந்தச் சுக்கிரச்சோபை இவ்வழகிய சிற்பசாலையிற் கதிர்விட்டு அம் மண்டபத்தைப் பிரகாசிக்கச் செய்தது. காற்றில் அசையும் மெல்லிய பாவாடைக்கூடாக அச்சிலையின் கோமளமான தொடையும், காலும், கணைக்காலும், சதங்கை அணிந்த பாதங்களும் அப்பொழுது கணேசாச்சாரியருக்கு ஒரு புதிய உணர்ச்சியை உண்டுபண்ணின. மாணிக்க மயமான மேகலையும், அவன் கையினாற் செதுக்கிய நுண்ணிடை மேல் சுருங்கிக் குவிந்து திரண்டு விளங்கிய அடிவயிறும் அதற்கு மேலே சொல்லொணா வனப்பும் கம்பீரம் உடையதாய் மாணிக்கவாசகர் கூறியதுபோன்ற “ஈரக்கிடை போகா” இளங் கொங்கை மூச்சோடு பொங்கிப் புறகிடும் சாட்சாத்காரமான சித்திர பாவமும் அவனை, அவன் உள்ளத்தே ஒளித்து மறைத்துவைக்கப்பட்ட ஓர் உணர்ச்சியின் ஆழத்தைக் கலக்கத் துவங்கின. அவ்வுணர்ச்சிகள் சப்த சமுத்திரங்களும் புயலிற் சீறியது போல் பொங்கிப் புரண்டு சுழன்று அலைந்தன. கமுகின் திரட்சி போன்ற கழுத்து இந்த உணர்ச்சிப் புயலில் சுழிகளை உண்டுபண்ணின. யெளவனத்தின் புதுமை கட்டுக்கடங்காது வெளிவந்தாற் போன்ற கைகளின் வனப்பு. செளந்தர்யமே கொடிவிட்டுப் படந்தார்ப் போன்ற காந்தள் விரல்கள். கண் என்றாள் தூங்கி விழித்துக் கொண்டால் ஆனந்தமான காட்சியொன்றைக் கண்டு திகைத்துக் கொண்டதுபோல என்று மாத்திரம் கூறமுடியாது. நீண்டவை; கரியவை; சஞ்சலம் உடையவை; சிகிரியா குகைச்சித்திரத்திற் தீட்டிய பெண்களின் பார்வைக்கு இலக்கணமானவை. இவ்வளவில் கணேசாச்சாரி விட்டுவிடவில்லை. பிரம்தேவன் உலகில் உத்தமமான ஒவ்வொரு சுந்தர வஸ்துக்களிலும் திலப் பிரமாணம் எடுத்துத் திலோத்தமை என்ற பெண்ணங்கைச் சிருட்டித்த பின் அதனழகிற் சொக்கி உன்மத்தன் ஆனானாம்.

கணேசாச்சாரி கல்லிற் செதுக்கிய சிலையின் கொண்டையழகே அதற்குப் போதுமானது. வெள்ளி வெளிச்சத்தில் கணேசாச்சாரி தன் முன் நின்ற இந்த ஜகன்மோகினியைக் கண்ணாற் பார்த்து, இதுவரை வெளிவராத ஒரு உணர்ச்சியில் ஈடுபட்டு தன்னை மறந்து போனான். கற்சிலை புன்முறுவல் பூத்துத் தலை அசைத்தது.

கணேசாச்சாரிக்கு உடலம் பதறிற்று. கையிலிருந்த உளி கீழே விழுந்தது. உரை தழுதழுத்தது. அகலிகையைக் கனவிற் கண்ட இந்திரன் போலத் தான் சிருஷ்டித்த அந்த அற்புதச் சிலை முன் உணர்ச்சி பொங்க நின்றவன் அதை வேகமுற்ற தன் கைகளால் கட்டித் தழுவிக் கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் சித்தப்பிரமை கொண்டவன் போல் ஏதேதோவெல்லாம் குழறினான். சிறிது நேரத்தில் புன்முறுவல் பூத்துத் தலையசைத்த அக்கற்சிலை திண்ணென்றிருந்தது.

அவனுக்குத் திக்பிரமை தீர்ந்தது போல, கையிலிருந்து விழுந்த உளியை எடுத்துக்கொண்டே இன்னொரு முறை சிலையைப் பார்த்தான். சிலையின் தேஜஷும், சீவகளையும் அழகுச் சோபையும் எல்லாம் அஸ்தமனமான மாதிரியே இருந்தன. பவளம் போன்ற அச்சிலையின் அதரத்தில் அம்மந்தஹாசத்தைப் பிறப்பிப்பதற்கு ஒரு சிறிய செதுக்கல் வேண்டியிருந்தது. உளியைக் கையிலெடுத்து அதரப் பாகத்தில் ஒரு சிறு பொறி போட உன்னித்தவன் சிறிது உரமாக உளியை வைத்தானோ என்னமோ, மறுகணமே ஜகன்மோகினியான அச்சிலை கல்லோடு கல்லாய் வெடித்துச் சுக்குநூறாயுடைந்து அச்சிற்பச் சாலையெங்கும் சிதறியது.

– ஈழகேசரி, 29.06.1941

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *